ஜனாதிபதிக்கும் பெரும்பான்மையோருக்கும் உணர்த்தும் முயற்சி

ஹர்ஷ குணசேனா

மாற்றுச் சிந்தனை

தேர்தல் முடிவுகள் இனத்துவ வாரியாக பெரிதும் இருமுனைப்பட்டிருந்தன. அதனைக் கருத்தில் கொண்டு, “எனக்கு வாக்களியாதோர் உட்பட முழு இலங்கையருக்கும் நானே ஜனாதிபதிஎன்றார் கொதாபய ராஜபக்சா.
அதேவேளை, சிறுபான்மையோர் தமது இனத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு வாக்களிக்கவில்லை என்பது ஒரு முக்கியமான சங்கதி. மாறாக, ஒரு சிங்கள பெளத்தருக்கே அவர்கள் பெருவாரியாக வாக்களித்தார்கள். இதற்கு முந்திய ஜனாதிபதி-தேர்தலிலும் கூட அவர்கள் இவ்வாறுதான் வாக்களித்தார்கள். இந்த முறை இருமுனைப்படும் போக்கு கூர்மையடைந்தும் கூட, தொடர்ந்தும் அதே விதமாகவே அவர்கள் வாக்களித்தார்கள்
இத்தேர்தலில் பெரிதும் தேசிய பாதுகாப்பையும், இனத்துவத்தையும் மையப்படுத்தி வாக்குக் கேட்டதில் ஒரு முரண் அணி உண்டு: வரலாற்றின் இக்கால கட்டத்தில் இலங்கைக்கு தேசிய பாதுகாப்பு தேவை என்றால், இனங்களையும் சமயங்களையும் வெவ்வேறாகப் பிரிப்பதை விடுத்து, அவற்றை இசைவிக்கவல்லவோ  வேண்டும்!  ஆகவே தற்பொழுது நாட்டில் நிலவும் மனநிலை தவறானது.
குடியாட்சி என்பது பெரும்பான்மையோரின் ஆட்சியே. ஆனாலும் சிறுபான்மையோரின் தேவைகளை பெரும்பான்மையோர் நிராகரித்தால், குடியாட்சி என்பது பெரும்பான்மையோரின் சர்வாதிகாரமாய் குன்றிக்குறுகிவிடும். நெடுங்காலமாக இந்த நாடு அந்த நிலையில்தான் இருந்து வந்தது. கொஞ்சக் காலத்துக்கு முன்னர் அது அப்பழுக்கற்ற சர்வாதிகாரத்தை நோக்கி நடைபையில முயன்றது. அப்புறம் அந்த நடைபயில்வு முறியடிக்கப்பட்டது. குடியாட்சி நெறிப்படியான சுதந்திரம் நிலைநாட்டப்பட்டது. ஆனாலும் அப்பழுக்கற்ற குடியாட்சி நெறிக்கு நாடு மீளவில்லை
தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளைக் கருத்தில் கொண்டு நான் செயற்படப் போவதில்லை; ஆனாலும் அவர்களின் பொருளாதார வேட்கைகளைக் கருத்தில் கொண்டு நான் செயற்படுவது உறுதி; ஏனென்றால், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளின் விருத்திக்கு சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்”   என்றார் ஜனாதிபதி. அவ்வாறு செய்தால் அவர்களின் அரசியல் வேட்கைகள் மங்கி மறைந்துவிடும் என்று அவர் எண்ணுகிறார். அதாவது, பிரச்சனைக்கு மூலகாரணம் பொருளாதாரம் என்பதே அவரது எடுகோள். அதுவல்ல மூலகாரணம்.  
ஹொங்கொங் மக்கள் சீன ஆட்சிக்கு எதிராக மாபெரும் போராட்டத்தில் இறங்கினார்கள். ஹொங்கொங்கின் பொருளாதாரம் திட்பமானது. ஆனாலும் தமது பொருளாதார வளர்ச்சியை விட்டுக்கொடுத்து, சீன ஆதரவுடன் கூடிய திருப்பியனுப்பல் சட்டத்தை அவர்கள் எதிர்க்கத் தலைப்பட்டார்கள். பிரித்தானியாவில், ஸ்கொத்லாந்து  ஒரு சமசீரற்ற ஆட்சியதிகாரப் பகிர்வைத் துய்த்து வருகிறது. பிரித்தானியாவிலிருந்து வெளியேறுவதா இல்லையா என்பதை ஸ்கொத்லாந்தியரால் முடிவெடுக்க முடியும். ஆனாலும் கடந்த ஒப்பங்கோடலில் அவர்கள் சேர்ந்திருக்கவே முடிவுசெய்தார்கள். ஸ்பெயினில் கத்தலோனியா ஒரு செல்வந்த புலம்; அதற்குத் தனி ஆளுமன்றம் உண்டு; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 19 விழுக்காட்டை அளிக்கிறது. மத்திய அரசு தமக்குத் திருப்பித் தருவதை விட அதிக தொகையை வரிவகைகள் ஊடாக எடுத்துக்கொள்கிறது என்ற எண்ணம் கத்தலோனிய மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது
ஆகவே, நாட்டுப் பிரச்சனைக்கு பொருளாதாரத் தாழ்ச்சி காரணமாய் அமையாது போகவும் கூடும். மறுபுறம், ஜனாதிபதி எண்ணுவதற்கு மாறாக, பொருளாதாரம் வளருந்தோறும் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை அடக்கி ஒடுக்குவது மேலும் கடினமாகவும் கூடும். ஜனாதிபதி எந்த அரசியல் இயக்கத்தின் பிரதிநிதியாக விளங்குகிறாரோ அந்த அரசியல் இயக்கம் வேண்டுமென்றே சிங்கள பேரினவாதத்தை முன்னெடுக்கப் பாடுபட்டது என்பதையும், அதை அரசியல் ஆதாயத்துக்கு அவர் பயன்படுத்திக் கொண்டார் என்பதையும் அவர் சொல்வதாய் இல்லை. பண்டாரநாயக்கா முதல் இற்றைவரை எதிர்க்கட்சிகள் இவ்வாறுதான் செயற்பட்டு வந்துள்ளன. சந்திரிகா, ரணில் ஆகிய இருவர் மாத்திரமே இத்தகைய தந்திரோபாயத்தை கையாளவில்லை. அவர்களும் சொந்தக் குறைகளும் குறைபாடுகளும் கொண்டவர்களே. ஆனாலும், தேசிய இனப்பிரச்சனயை அரசியல் ஆதாயத்துக்கு அவர்கள் பயன்படுத்த முயன்றதில்லை
போரை முடித்துவைத்த தலைவர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவுக்கு நாட்டுப் பிரச்சனையை தீர்க்க ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்தது. ஓர் அவப்பேறு எனும்படியாக, அதை அவர் தவிர்த்துக்கொண்டார். 1967ல் ஆறு நாள் போரின் பொழுது இஸ்ரவேல் பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதியாக விளங்கியவர் யிற்சாக் ரபின். 1994ல் அவர் பிரதம மந்திரியாக விளங்கியபொழுது நோர்வேயின் ஆதரவுடன் கூடிய இஸ்ரவேல்-பாலஸ்தீன அமைதி உடன்படிக்கையில் அவர் ஒப்பமிட்டார். அவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற அது வழிவகுத்தது. ஆனாலும் அதன் பிறகு அந்த அமைதி உடன்பாட்டை எதிர்த்த ஒருவரால் அவர் கொல்லப்பட்டார். சாதி, சமய, இன பேதங்களை ஒழிக்க அறைகூவிய இந்திய சுதந்திர சிற்பி மகாத்மா காந்தியும், 1947ல்  இனக்கலவரம் நிகழ்ந்தபொழுது எடுத்த நிலைப்பாட்டின் விளைவாகவே கொல்லப்பட்டார். நோபல் பரிசு பெறுவதை விட உயிர்வாழ்வதே மேல் என்று எமது முன்னாள் ஜனாதிபதி எண்ணியிருக்கலாம்

கடந்தகாலத்தில் இசைந்து வாழ்ந்த இனங்கள்
இனப்பகை என்றென்றும் நிலவிய ஒன்றல்ல. வரலாறு எமக்குப் புகட்டும் பாடம் வேறு. 1915 வரை இந்த நாட்டில்  பல்லாயிரம் ஆண்டுகாளாக இனமோதல்கள் இடம்பெற்றதில்லை. அரசர்கள், இளவரசர்கள் இடையே போர்கள் மூண்டது உண்மையே. ஆனாலும் அவை ஆட்சியதிகாரம் பற்றியவையே ஒழிய இனத்துவம் பற்றியவை அல்ல. எல்லாளனின் படையில் பல சிங்களவர்கள் இருந்தார்கள். சட்டப் பிணக்குகள் எழுந்த வேளைகளில் அவன் நண்பர்க்கும் பகைவர்க்கும் சரிநிகராக நீதிபாலித்தான் என்று மகாவம்சமே புகழாரம் சூட்டுகிறது. 13ம் நூற்றாண்டில் எமது நாகரிகத்தை நாசமாக்கி, இராச்சியத்தை தென்புலம் நகர வழிவகுத்த  மாகன் ஒரு தமிழனே அல்ல. சிங்கள மன்னர்கள் சோழப் படையெடுப்புகளுக்கு எதிராக பாண்டிய மன்னர்களின் ஆதரவை நாடியதுண்டு.  
இந்த நாட்டில் சிங்களவரும் முஸ்லீங்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக இசைந்து வாழ்ந்து வந்தார்கள். சிங்கள மன்னர்களின் அரசவைகளில் பணியாற்றிய முஸ்லீங்கள் தமது ஆட்சியாளருக்கு சர்வதேய அலுவல், வணிகம் குறித்து மதியுரை நல்கி வந்தார்கள். பெளத்த மடங்களிலும் அவர்கள் பணியாற்றி வந்தார்கள். பெளத்த கோயில் வளவுகளில் பள்ளிகள் அமைக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. படையெடுத்து வந்த ஐரோப்பியரின் ஆதிக்கத்துக்கு உட்படாமல் தம்மைப் பாதுகாக்கும் வண்ணம் அவர்கள் கண்டி மாவட்டத்தில் குடியமரவும் சிங்கள மன்னர்கள் அனுமதி அளித்தார்கள்
19ம் நூற்றாண்டில் பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தோற்றத்துடன் நிலைவரம் மாறியது. அதுவரை சிங்கள பெளத்தர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்கள். சமூகத்தில் கிறீஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். வணிகம் சிங்களவர்-அல்லாதோரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஓர் அவப்பேறு எனும்படியாக, கிறீஸ்தவர்களுக்கு எதிரான முனைப்புடன் எழுந்த பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் பிறகு மற்றைய இனங்கள் மீதும் திசைதிருப்பி விடப்பட்டது. இதுவே இந்த நாட்டில் இனமோதலின் துவக்கம். மாறாக, இந்தியாவிலோ தமது முழு இனங்களையும் சமயங்களையும் ஒருங்கிணைத்து, பிரித்தானியருக்கு எதிரான சுதந்திர போராட்டத்தை அவர்களால் முன்னெடுத்துச்செல்ல முடிந்தது.  
எனவே, இங்கு நாம் இனங்காண்பது ஓர் அரசியல் இயக்கத்தையே. பண்டாரநாயக்கா முதல் இற்றைவரை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆட்சியதிகாரத்தை ஈட்டிக்கொள்வதற்காகவே அதைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள்சந்திரிகா அதை மாற்றினார். கறைபடிந்த சிங்கள மனநிலையை வெண் தாமரை (சுது நெலும்) இயக்கத்தால் பெருமளவு மாற்ற முடிந்தது. ஆதலால்தான் இந்த நாட்டின் அரசியலில் ஓர் அடிப்படை மாற்றத்தைப் புகுத்தும் வாய்ப்பு மகிந்த ராஜபக்சாவுக்கு கிடைத்தது. அதை அவர் புகுத்தத் தவறியது அவருக்கும் நாட்டுக்கும் அவப்பேறாய் போயிற்று.  
தற்பொழுது கொதாபய ராஜபக்சாவுக்கும் அத்தகைய வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஆனாலும் இது தமையனுக்கு கிடைத்தது போன்ற மகத்தான  வாய்ப்பல்ல.  காரணம்: தேர்தலில் இவர் ஈட்டிய வெற்றிக்கு சிங்கள பேரினவாத எழுச்சியும் பெருமளவு துணைநின்றுள்ளது.  1956ல் பண்டாரநாயக்கா வெற்றிபெற்ற பிறகு தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க முயன்றார். ஆனால் பெளத்த பிக்குகளின் தலைமையில் இயங்கியோரின் நெருக்குதலை அவரால் எதிர்கொள்ள முடியவில்லைஅவர் ஒரு தாராண்மை படைத்த குடியாட்சிவாதி. கொதாபய ஒரு தாராண்மை படைத்த குடியாட்சிவாதி அல்ல. ஆனானப்பட்ட பிக்குகள் கேட்டுக்கொண்டபடி அவர் ஓர் எதேச்சாதிகாரத் தலைவராகவே விளங்குகிறார்
தமிழ் மக்கள் ஈட்டிய ஒரேயொரு யாப்புவாரியான சிறப்புரிமை, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பெறுபேறாக, ஒரேயொருவரின்  எண்ணப்படி, அவரது பிரதம மந்திரியும் மூத்த அமைச்சர்களும் தமிழ்க் கட்சிகள் தவிர்ந்த ஏனைய எல்லாக் கட்சிகளும் காட்டிய எதிர்ப்புடன், ஓர் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில்ஈற்றில் இந்தியப் பிரதம மந்திரி மீதான ஓர் உடல்-தாக்குதலுடனேயே வழங்கப்பட்டது.
ஒரு புதிய அரசியல்யாப்பினை உருவாக்கும் படிமுறைக்கு மைத்திரிபால சிறிசேனாவோ, ரணில் விக்கிரமசிங்காவோ அரசியல் தலைமைத்துவம் வழங்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும் ஆதரவுடனேயே அப்படிமுறை பெருமளவு முன்னகர்ந்துள்ளது

இந்திய முன்னுதாரணம்
சிங்களவர்கள் ஓர் அரசியல் தீர்வு குறித்து அஞ்சுவதற்கு முன்வைக்கும் நியாயம் எதுவுமே செல்லாது. தமிழருக்கு ஏதாவது தன்னாட்சி கொடுத்தால், அவர்கள் தனிநாடு கேட்பார்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இது சரியல்ல. இந்திய முன்னுதாரணம் இந்த எண்ணத்தை மறுதலிக்கிறது
இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறுந் தறுவாயில், மன்னர்களிடமிருந்து மீட்கப்பெற்ற புலங்களின்படியும், அதுவரை பிரித்தானியரால் பேணப்பட்ட எல்லைகளின்படியும் தென்னிந்திய மாநிலங்களின் எல்லைகளை அது வரையறுத்திருந்தது. அப்பொழுது குறிப்பாக தனித்தமிழ் மாநிலம் கோரியும்பொதுவாக திராவிட மொழிகள் பேசிய மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு தனி மாநிலம் கோரியும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. தென்னிந்திய மாநிலங்களின் எல்லைகளை மீள வரையறுக்கும் பணியை இந்தியா 1953ல் துவங்கி 1956 வரை தொடர்ந்து மேற்கொண்டது.   
ஐதரபாத், ஆந்திர மாநிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தெலுங்கு பேசும் ஆந்திர பிரதேசம் தோற்றுவிக்கப்பட்டதுதிருவாங்கூர், கொச்சி மாநிலமும், சென்னைப் புலத்தின் மலையாள மாகாணங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு மலையாளம் பேசும் கேரள மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்பேசும் தென் மாகாணங்கள் சென்னைப் புலத்துடன் இணைக்கப்பட்டது; 1968ல் சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று மறுபெயரிடப்பட்டது. ஐதரபாத், பம்பாய் மாநிலங்களின் கன்னட மாகாணங்கள் மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. 1973ல் அதற்கு கர்நாடகா என்று மறுபெயரிடப்பட்டது
இம்மாற்றங்களையும், யாப்புவாரியான பிரிவினைத் தடைகளையும் அடுத்து தனித்தமிழ் அரசுக்கான கோரிக்கை மங்கிமறைந்தது. தத்தம் இனங்களுக்கு அவர்கள் தனித்துவ அடையாளங்களை நாடினார்களே ஒழிய, தனியரசுகளை அல்ல. அதாவது இன, மொழி வாரியாக மாகாணங்களின் எல்லைகளை வரையறுக்கும் நடைமுறையினால் தனியரசுகளுக்கான கோரிக்கைகள் வலுவிழந்துவிடும் என்பது இந்தியாவில் எண்பிக்கப்பட்டுள்ளது. இது தென்னிலங்கை மக்களின் எண்ணத்துக்கு நேரெதிர்மாறான நிலைவரமாகும்
தமிழர் தமது அரசியல் வேட்கைகளை நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டால், நாட்டின் ஆள்புலத் திண்மைக்கு எதுவித ஆபத்தும் விளையாது என்பதை பெரும்பான்மைச் சிங்களவருக்கு உணர்த்துவதே இந்த நாட்டில் கரிசனைகொண்ட மக்களும், குடியியற் சமூகமும் மேற்கொள்ளவேண்டிய பணி. அது சிங்கள சமூகத்தைக் காட்டிக்கொடுப்பதாய் அமையாது என்பதையும், அவ்வாறு செய்யாமல் வெறுமனே பொருளாதார செழிப்பை நோக்கி முன்னகர்வது ஒரு வீண்வேலை என்பதையும் ஜனாதிபதிக்கும் அவர்கள் உணர்த்த வேண்டும். ஆம், எதிர்நீச்சல் போடவேண்டும்.
_______________________________________________________________________________
Harsha Gunasena,The task of convincing the President and the majority, Daily FT, 2019-12-12
தமிழ்: மணி வேலுப்பிள்ளை



No comments:

Post a Comment