ஷேக்ஸ்பியர்
தேவதைகள் கூடி
அடியெடுத்துக் கொடுத்த
பொன்மொழிச் சொற்கள்,
அருந்தொடர்கள் கொண்டு
உன் குணவியல்பின்
சாரத்தை வடித்து
புகழ்பாடும் கவிதைகள்
குவியுந்தோறும், என்
உள்ளத்துள் ஊறும் கவிதை
ஒடுங்கி உறைகிறது.
வல்ல கவிஞர்கள்
கவினுறு பாங்கில்
மெருகுடன் யாத்து
உன் புகழ்பாடும்
கவிதைகள் கேட்டு
"அங்கனமே ஆகுக!" என
பாமரப் பண்டாரம் போல்
வழிமொழிந்து கதறுகிறேன்.
ஒவ்வொரு கவிதையும்
உன் புகழ்பாடக் கேட்டு
"அது சரிதான், அது மெய்தான்"
என மெச்சி,
நானும் ஒரு வரி மீட்டுகிறேன்.
நான் மீட்டும் வரியோ
என் உள்ளத்துள் உறைவது;
நான்கொண்ட வாஞ்சையோ
சாலவும் பெரியது;
அதை நான் வெளியிடுவது
அரிதிலும் அரிது.
உன் புகழ்பாடும் பிறரை
நீ கொண்டாடும் வேளை
உன்னை உள்ளத்துள் துதிக்கும்
என்னையும் கொண்டாடு.
செயலில் மட்டும் வெளிப்படுவதே
என் உள்ளத்துள் உறையும் கவிதை.
Shakespeare's Sonnet: 85, தமிழ்: மணி வேலுப்பிள்ளை
No comments:
Post a Comment