தேசியவாதம் பயங்கரமானது

ஜொநேதன் பவர்


"தேசியவாதம் என்றால் போர்" என்றார் முன்னாள் பிரெஞ்சு அதிபர் மித்தராண்ட் (Francois Mitterrand). அன்றைய பிரித்தானிய பிரதமர் தாட்சர் (Margaret Thatcher) அதை என்றுமே ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். தேசியவாதம் நல்லது, தேவையானது என்பது அவர் கட்சி.


"கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் மூன்றும் பின்னிப் பிணைந்ததே" பிரெஞ்சு தேசம் என்றார் சாள்ஸ் டீ கால் (Charles de Gaulle). அவர் மித்தராண்டுக்கு முன்னவர். பெரிதும் அவரைப் போலவே தாட்சரும் எண்ணினார்.


எனினும் தாட்சர் எத்தகைய தேசியவாதம் கருதிப் போரிட்டாரோ அத்தகைய தேசியவாதம் பெரிதும் எதிர்மாறான ஒரு வலு ஆகும். அது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளைப் பகைக்கும் வலுவாகும்.


கடுமையான சமூகச் சீர்குலைவின்றி பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ள முடியும் என்று தாட்சர் கருதவில்லை.


போர்க்லண்ட் (Falklands) போரில் ஆர்ஜெண்டைனா பக்கம் சாய்ந்தது அமெரிக்கா. ஆதலால் இடைநின்று இணக்கும் தரப்பாகச் செயற்படும்படி அமெரிக்காவிடம் கேட்க அவர் முற்படவில்லை.


1648ம் ஆண்டு ஒப்பமிடப்பட்ட வெஸ்ட்பேலியா (Westphalia)உடன்படிக்கையை ஐரோப்பிய தேசியவாதத்தின் தோற்றுவாயாகக் கொள்ளலாம். அதுவரை சமூகத்தின் திண்மையயும் போரையும் தீர்மானிக்கும் காரணியாக விளங்கிய மத அடையாளத்துக்கு அது தடித்த முற்றுப்புள்ளி வைத்தது. ஐரோப்பிய வல்லரசுகளுக்கு அது அடியெடுத்துக் கொடுத்தது. அமெரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அது அடிகோலியது. ஐரோப்பா முழுவதும் புரட்சிகரப் போர்களுக்கும், நெப்பொலியனின் போர்களுக்கும் அது வழிவகுத்தது. 19ம் நூற்றாண்டில் முதலாம் உலகப் போர் என்னும் பேருயிரழிவை விளைவித்த "தேச-நிர்மாணத்துக்கு" அது இட்டுச்சென்றது.


போரின் முடிவில் செய்யப்பட்ட வெர்சாய் (Versailles) உடன்படிக்கையின்படி "தேசிய சுயநிர்ணய" நெறிக்கமைய ஐரோப்பா மீள அமைக்கப்பட்டது. அது கலப்படமும் தருக்க முரண்பாடும் மிகுந்த மீளமைப்பாகும். அந்த உடன்படிக்கை மூலம் திண்ணிய தேசங்களை அமைக்க முடியவில்லை. எடுத்துக்காட்டாக போலாந்து மீள அமைக்கப்பட்ட பொழுது 20 இலட்சம் ஜேர்மானியர்கள் அதற்குள் சேர்க்கப்பட்டார்கள். இரண்டாம் உலகப் போர் மூண்டதற்கு அது ஒரு முக்கிய காரணம்.


இரண்டாம் உலகப் போரை அடுத்து ஐரோப்பிய வல்லரசுகள் தமது அந்நிய ஆதிக்கத்தை தளர்த்தவே புதிய தேசங்கள் தோன்றலாயின. அவையும் ஐரோப்பிய வல்லரசுகளைப் போலவே தேசியவாதப் போக்கினைக் கைக்கொண்டன. அதனால் கடுமையான மோதல்கள் பலவும் விளைந்துள்ளன. எடுத்துக்காட்டாக (1) இந்தியாவும் பாகிஸ்தானும்; (2) வங்காளதேசமும் பாகிஸ்தானும்; (3) ருவாண்டாவும் காங்கோவும்; (4) கம்போடியாவும் வியற்நாமும்; (5) மலேசியாவும் சிங்கப்பூரும்; (6) இஸ்ரவேலும் அரபுலகமும் மோதிக்கொண்டுள்ளன.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே, இஸ்ரவேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே மதம் ஓரளவு சம்பந்தப்பட்டுள்ளது. எனினும் இவ்விரு பிராந்தியங்களிலும் தேசியவாதத்தின் வலுவே மேலோங்கியுள்ளது.


"தேர்ந்து முன்வைத்த தொல்கதைகளும், பதர்களைந்த நினைவுகளும், கவனமாகக் கத்தரித்து வெளியிட்ட வாசகங்களும் மக்களின் ஒருமித்த திடசித்தத்துக்கு எழுச்சியூட்டி, கால அடைவில் தேசியத் திண்மையை ஊட்டி வளர்க்கின்றன. மக்கள் அவற்றில் புலனைச் செலுத்தவே, தேசியவாதம் செழித்தோங்குகிறது" என்கிறார் David Cannadine (The Undivided Past என்ற புதிய நூலில்). மக்கள் ஒரு தேசமாக விளங்கும் விடயத்தில், அவர்கள் வரலாற்றை தவறாகப் புரிந்துகொள்வதும் ஓரளவு சம்பந்தப்பட்டுள்ளது என்கிறார் Eric Hobsbawm என்ற மகத்தான வரலாற்றறிஞர். நாங்கள் இன்னும் ஒரு படி ஏறிநின்று, காலப்போக்கில் தேசிய அரசே போர் தொடுத்தது, போரே தேசிய அரசைத் தோற்றுவித்தது என்றும் வாதிக்கலாம். உலகப் போர்கள் இரண்டும் இந்தப் பாடத்தையே புகட்டுகின்றன என்பது உறுதிபடப் புலப்படுகிறது. முதலாம் உலகப் போரில் பல இலட்சக் கணக்கானோர் தேசிய விசுவாச உணர்வுடன், தேசிய அடையாள உணர்வுடன் மனமுவந்து போராடினார்கள். எனினும் முதலம் உலகப் போர் அவசியமானதே அல்லது நியாயமானதே என்று  வாதிக்கும் வரலாற்றறிஞர் எவரையும் நாங்கள் கண்டறிதல் அரிது. ஹிட்லரின் போக்கினால் இரண்டாம் உலகப் போர் தவிர்க்கவியலாத போராக மாறியதாக பெரும்பாலான வரலாற்றறிஞர்கள் வாதிக்கிறார்கள். வரலாற்றறிஞர்கள் அனைவரும் அப்படி வாதிக்கவில்லை. குறிப்பாக மகத்தான வரலாற்றறிஞராகிய AJP Taylor அப்படி வாதிக்கவில்லை. திரும்பவும் பல இலட்சக் கணக்கானோர் மனமுவந்து பொருதினார்கள். தனது நாட்டுக்காக ஒருவர் போராடி மடிவது உச்ச தேசியக் கடமையாய் ஓங்கிய காலம் அது.


உலகில் ஐரோப்பாவுடன் ஒப்பிடத்தக்க பருப்பமோ மக்கள்தொகையோ கொண்ட வேறு பிராந்தியம் எதிலும் நிகழ்ந்த போர்களை விடவும் அதிகமான போர்கள் அங்கு நிகழ்ந்துள்ளன. ஐரோப்பாவில் பைத்தியக்காரத்தனமான முறையில் தொடுக்கப்பட்ட போர்கள் மீண்டும் தொடுக்கப்படாவாறு பார்ப்பதற்கான கருவியாகவே ஐரோப்பிய ஒன்றியம் தோற்றுவிக்கப்பட்டது. எனினும் இரு உலகப் போர்களிலும் ஈடுபட்ட இரு மிகமுக்கிய நாடுகளுள் ஒன்றாகிய பிரித்தானியாவை ஐரோப்பாவிலிருந்து அப்புறப்படுத்த விழையும் சிலர் அந்த நாட்டை ஆளும் பழமைபேண் கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள். செல்வாக்கு மிகுந்த அந்த நாடாளுமன்ற அங்கத்தவர்களிடம் வினவினால், தங்களை முழுக்கமுழுக்க தாட்சரியவாதிகள் என்று அவர்கள் கூறுவார்கள் என்பதில் ஐயமில்லை. தேசியவாதத்தின் குருதிக்களரியை அவர்கள் நினைவுகூர்வதாகத் தெரியவில்லை.


ஐரோப்பிய தேசங்கள் புதியவை, பெரிதும் செயற்கையான முறையில் தோற்றுவிக்கப்பட்டவை. அவற்றின் பேரால் பல இலட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஐரோப்பிய தேசங்கள் ஏற்கெனவே தோற்றுவிக்கப்படாமல் இருந்திருந்தால், அவை இன்று தோற்றுவிக்கப்பட்டிருக்க மாட்டா. எங்கள் ஊழிக்கு அவை உகந்தவை அல்ல. தேசியவாதம் ஒரு நச்சுயிரி. அதைக் கொண்டாடக் கூடாது, கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்கள் Sylvie Goulard, Mario Monti இருவரும் (To See Further என்ற தமது புதிய நூலில்; Mario Monti தற்போதைய இத்தாலிய பிரதமர்). எஞ்சிய உலகம் முழுவதுக்கும் இது பொருந்தும். ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் இதில் போதிய நாட்டம் கொள்ளவில்லை என்று அவர்கள் வாதிக்கிறார்கள்.


ஐரோப்பிய வலய நெருக்கடியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தை மீட்டெடுப்பதற்கு இன்று தேவைப்படுவதெல்லாம் இன்னொரு நிறுவன மறுவடிவமைப்பே; மக்களாட்சிப் புரட்சியே; வருங்காலத்தை நோக்கிய துணிகரப் பாய்ச்சலே. ஐரோப்பிய ஒன்றியத்தின் மகிமை யாதெனில், அதன் 50 கோடி மக்களும் அடுத்த தேர்தலை விடுத்து அடுத்த தலைமுறை மீது புலனைச் செலுத்தும் வல்லமை தான்.


18ம் நூற்றாண்டில், அதாவது ஐக்கிய அமெரிக்காவின் தொடக்க காலத்தில், இணைப்பாட்சியியல் சார்ந்த ஆய்வறிக்கைகள் பலவும் வெளிவந்தன. அவற்றை ஆக்கியோர் இணைப்பாட்சி கோரி வாதாடினார்கள். அவர்களின் ஆய்வறிக்கைளை வாசித்தே மேற்படி நூலாசிரியர்கள் பெரிதும் தெம்பு பெற்றுள்ளார்கள். ஐரோப்பாவுக்கு மேன்மேலும் பொருளாதார, அரசியல் ஒன்றியமே தேவைப்படுகிறது; அதனிலும் குறைந்த எதுவும் அல்ல. ஐரோப்பிய ஆட்சிமன்றம் மேலும் மக்களாட்சி மன்றமாக, சுதந்திர ஆட்சிமன்றமாக, சட்டமியற்றி வரிவிதிக்கும் ஆட்சிமன்றமாக மாற வேண்டும். வாசிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க மத்திய வங்கியைப் போலவே (Federal Reserve) ஐரோப்பிய மத்திய வங்கியும் அதிக அதிகாரம் செலுத்தி, அதிக பணியாற்ற வேண்டும்.


"போக்கிரியின் கடைசிப் புகலிடம் நாட்டுப்பற்று" என்றார் Samuel Johnson.


தாட்சரியவாதிகள் உலகம் முழுவதும் வாழுகிறார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள்

________________________________________________________________

Jonathan Power, Nationalism is a dangerous thing, Daily Mirror, 2013-04-28, 

தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment