இனப்படுகொலை

இனப்படுகொலை இடம்பெற்றதை இலங்கை மறுத்துரைப்பது
இனப்படுகொலை தொடரப்போவதை அறுத்துரைப்பதாகும் 
Deirdre McConnell
தெய்தரே மைக்கொனேல் 

 "இலங்கையில் மனித உரிமைகள்" என்னும் தலைப்பில் காத்திரமான அறிக்கைகள் பலவும்  ஆண்டுக் கணக்காக வெளிவந்தும் கூட, இத்தீவின் மனித உரிமை நிலைவரம் பற்றிய உண்மையான விவரங்கள் பலருக்குத் தெரியாது.
பல்வேறு ஆய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும், மனித உரிமை அமைப்பினரும் இலங்கையில் காணப்படும் நிலைவரத்தை விபரிப்பதற்கு "இனப்படுகொலை" என்னும் சொல்லை ஓரிரு தடவைகள் அல்ல, பல தடவைகள் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தியுள்ளார்கள்.
இனப்படுகொலை ஒரு படிமுறை. அது கட்டம் கட்டமாக இடம்பெறுவது. இலங்கையில் ஒவ்வொரு தசாப்தத்திலும் அத்தகைய கட்டங்கள் இடம்பெறுவது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தும்கூட, தடுப்பு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. திட்பமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
மாறாக, இனப்படுகொலை இடம்பெறுவதாக முன்வைக்கப்படும் வாதங்களுக்கு ஆப்புவைத்து, இனப்படுகொலைக்கான பழியை தாக்குண்ட மக்கள்மீதே சுமத்துவதில் இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்று வந்துள்ளது. இப்படி ஆப்புவைத்துப் பழிசுமத்தும் படிமுறைகூட இனப்படுகொலையின் குறிகாட்டியே. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கைச் சுதந்திரக் கட்சி அரசாங்கம் இரண்டுக்கும் இது பொருந்தும்.
பாதகம் புரிவோர் அந்த உண்மையை மூடிமறைப்பதற்கென்றே தீட்டிய தந்திரோபாயம் எனப்படும் வண்ணம் அதை விடாப்பிடியாகவும் திறம்படவும் அவர்கள் மறுத்துரைத்து வந்துள்ளார்கள். இந்தக் கட்டுரையில் இலங்கையை மையப்படுத்தி இனப்படுகொலையின் பத்துக் கட்டங்களை நான் பகுத்துரைக்கப் போகின்றேன். பத்தாவது கட்டத்தை, அதாவது மறுத்துரைக்கும் கட்டத்தை ஏற்கெனவே நான் தெரிவித்துவிட்டேன்.
இனப்படுகொலைக்கு அடிகோலும் கொடூரம் இனப்படுகொலையின் முதல் மூன்று கட்டங்களிலும் புலப்படும்:
(1) மக்களை வேறுபடுத்துவது
(2) அடையாளப்படுத்துவது
(3) பாகுபாடு காட்டுவது
ஒரே நாட்டுக்கு உள்ளேயே வேறுபாடு கற்பிப்பது, அதாவது "நாங்கள்", "அவர்கள்" என்று வேறுபாடு கற்பிப்பது தவறாது நடைபெறும் ஒன்று. பெரும்பாலான நாடுகளுக்கு இது பொருந்தும்.
இனத்தையோ, இனக்குழுமத்தையோ, சமயத்தையோ, நாட்டுரிமையையோ வைத்து மக்களை வேறுபடுத்தும் அம்சங்கள் பண்பாட்டுக் குழுமங்களிடம் காணப்படுவதுண்டு. சமூகங்கள் பலவும் பன்மைத் தன்மை வாய்ந்தவை. எனினும் வெவ்வேறு குழுமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மிடையே பிரச்சனைகளின்றி வாழ்ந்து வருகிறார்கள். சகிப்புணர்வையும், புரிந்துணர்வையும் மேம்படுத்தும் கட்டமைப்புகள் அவர்களிடம் உண்டு. மக்களை அத்தகைய விழுமியங்களுக்கு அமைந்தொழுகச் செய்யும் சமுதாய, சட்டதிட்டப் பொறிமுறைகள் உண்டு. இனத்துவ, இனக்குழுமத்துவ வேறுபாடுகளைக் கடந்த உலகளாவிய நெறிகள் உண்டு.
ஒரு பொது மொழியை மேம்படுத்துவதும் பிரச்சனைகளைத் தடுத்து, சமத்துவத்தையும் உறவையும் ஊட்டிவளர்க்க உதவக்கூடும். வேற்றுமையில் ஒற்றுமையும், சமத்துவமும் நிலைநாட்டப்படுமிடத்து வெறும் வேறுபாடு மாத்திரம் பிரச்சனை ஆகிவிடாது. விறுவிறுப்பும் செழுமையும் மிகுந்த தேசிய பல்வண்மைக்கும் கூட அது வழிவகுக்கக் கூடும். இலங்கையில் அப்படி நிகழாதது ஓர் அவப்பேறாகும்.
ஐரோப்பியரால் கட்டியாளப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே தமிழர் தமது மொழி, பண்பாடு, சமயம் என்பவற்றுடன் தனித்துவ மக்களாய் வாழ்ந்து வந்தனர். (1505 முதல்) போர்த்துக்கேயரும், (1658 முதல்) ஒல்லாந்தரும் வடகீழ் அரசை தென்னிலங்கைச் சிங்கள அரசுகள் இரண்டிலுமிருந்து புறம்பான அரசாகவே கட்டியாண்டார்கள். அந்தவகையில் வேறுபாடு கற்பிக்கப்படுவதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
அடையாளப்படுத்துவது, அதாவது எந்தக் குழுமத்தின்மீது இலக்கு வைக்கப்படுகிறதோ அந்தக் குழுமத்தைச் சுட்டிக்காட்டும் தேவை தொடக்கத்தில் ஏற்படவில்லை. பெயரையோ, மொழியையோ சமயம்சார்ந்த புறத்தோற்றங்களையோ கொண்டு அவர்களை அடையாளம் காட்டினாலே போதும்! அடையாளப்படுத்துவது பற்றி மீண்டும் நான் எடுத்துரைப்பேன். ஈற்றில் வேகமாக இனப்படுகொலை நிகழ்வதற்குத் துணைநின்ற முக்கிய அம்சம் அடையாளப்படுத்துவதே. பிறகு பிரச்சனைகள் ஒரு சுழற்சியில் இடம்பெற்றதோடு சேர்த்து அடையாளப்படுத்துவது பற்றி மீண்டும் நான் எடுத்துரைப்பேன்.
தமிழருக்குப் பாகுபாடு காட்டப்படுவது பற்றிய ஆவணப்பதிவுகள் பெருவாரியாக இருக்கின்றன. ஐ. நா. இனப்பாகுபாடு ஒழிப்புக் குழுவின் அறிக்கை அவற்றுள் ஆகப்பிந்தியது.  அது 2016 ஆகஸ்ட் 26ம் திகதி வெளியிடப்பட்டது. தற்போதைய பிரச்சனைகளின் கடூரத்தை அது சுருக்கி உரைக்கிறது.
தங்குதடையின்றி இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற படிமுறையைத் தடுத்து நிறுத்தியிருக்கக்கூடிய நடவடிக்கை எது? பாகுபாடுகாட்டுவதை சட்டவிரோதமாக்கும் நடவடிக்கையே அது. மாறாக, தொடர்ச்சியாக ஆட்சிபுரியும் பெரும்பான்மை ஆதிக்க குழுமம், பாகுபாடுகாட்டும் போக்கினைத் திட்டமிட்டு மன்னித்து, சட்டபூர்வமாக்கி வந்துள்ளது.
பாகுபாடுகாட்டும் போக்கு 1940ம், 50ம் ஆண்டுகளில் தலைகாட்டியபொழுதே அதனைச் சட்டவிரோதமாக்கியிருக்க முடியும். 1948ல் மலையகத் தமிழருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டமை; தமிழரின் வாக்குவல்லமையைக் குறைக்கவென கிழக்கில் குடியேற்றம் நடத்தி மக்களின் கட்டுக்கோப்பை மாற்றியமை; 1956ல் இழிவான முறையில் தனிச்சிங்களச் சட்டம் இயற்றியமை... இவை எல்லாம் பாகுபாடுகாட்டும் போக்கினை அடிமட்டத்தில் நிலைநிறுத்திய நடவடிக்கைகள்.
ஒற்றுமைப்படுத்தும் மொழி ஒன்றைப் பயன்படுத்தி புரிந்துணர்வை மேம்படுத்துவதை விடுத்து, பெரும்பான்மைச் சமூகத்தின் சிங்கள மொழி ஏற்றிப்போற்றப்பட்டது. ஆட்சியதிகாரிகளுடன் தொடர்புகொள்ளும் அடிமட்ட நிலையில்கூட தமிழருக்கு சமத்துவம் மறுக்கப்பட்டது. பிறகு பாகுபாடுகாட்டும் சட்டங்கள் பெருவாரியாக இயற்றப்பட்டன: கல்வி உரிமைகளில் பாகுபாடு (1971); அரசியல்யாப்பில் சிறுபான்மையோரின் உரிமைகளைப் பாதுகாத்த 29ம் பிரிவு நீக்கப்பட்டது (1972); நாட்டின் ஏனைய சமயங்களை விடுத்து பெளத்த சமயத்துக்கு மாத்திரம் அரசியல்யாப்புத் தகுநிலை அளிக்கப்பட்டது (1972); இவை தமிழருக்கு எதிராகத் திட்டமிட்டு, சட்டபூர்வமாக்கப்பட்ட  பாரபட்சங்கள்; தமிழர் அவற்றுக்குப் பரிகாரம் காணும் வகையற்றிருந்தனர்.  
இவ்வாறு தமிழருக்கு எதிராக கட்டமைப்புவாரியாகவும், பற்பல முனைகளிலும் பாகுபாடுகாட்டுவதை நிலைநாட்டும் போக்கு என்றுமே நிறுத்தப்படவில்லை. சரிநிகர் உரிமைகளை ஈட்டிக்கொள்வதற்கு, தாம் 3,000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த புலத்தில் அமைதியோடும், கண்ணியத்தோடும் வாழும் உரிமையை ஈட்டிக்கொள்வதற்கு 30 ஆண்டுகளாகத் தமிழர் குடியாட்சிநெறிப்படி, நாடாளுமன்ற வழிவகைகள் ஊடாகப் பாடுபட்டனர்.
பிரதான சிங்கள அரசியற் கட்சிகள் இரண்டினுள் எது தேர்தலில் வென்றாலும், அனைவருக்கும் சரிநிகர் உரிமைகள் அளிப்பதற்கோ, அதற்கு உத்தரவாதம் அளிப்பதற்கோ அது என்றுமே நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருபுறம் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையே ஏற்றத்தாழ்வான ஆட்சியதிகாரம்; மறுபுறம் பாகுபாடுகாட்டும் சட்டங்களை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். அதாவது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களுள் போதுமானவர்களின் ஆதரவின்றி பிரச்சனையைத் தீர்க்க முடியாது.
பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஓர் அடிப்படை மாற்றம் வேண்டியிருந்தது; அதற்கு "மற்றவர்களின்" வேறுபாட்டையும், சமத்துவத்தையும் மதித்து நடக்க வேண்டியிருந்தது. ஆனால் பெரும்பான்மைச் சமூகத்துள் போதுமானவர்களிடம் அத்தகைய உலகநோக்கு கிடையாது. தமக்கு ஊட்டப்படும் தவறான தகவலையே பெரும்பான்மையோர் நம்பி வந்துள்ளார்கள். அதுவே படுமோசமான அடுத்த கட்டத்துக்கு இட்டுச்சென்றது.
(4) விலங்குநிலைக்குத் தாழ்த்தல்
இனப்படுகொலையை நோக்கி நகர்வதற்கு மறு குழுமத்தை விலங்குநிலைக்குத் தாழ்த்த வேண்டியுள்ளது. மேற்கண்டவாறு பாகுபாடுகாட்டுவதை சட்டபூர்வமாக நிலைநிறுத்தியவுடன் காழ்ப்புச் சொல்லாட்சி மேலோங்க வழிபிறக்கிறது. அதனூடாக மற்றைய குழுமத்தின் மானுடவியல்பை மறுத்துரைக்க வழிபிறக்கிறது. அந்த வகையில் 4வது கட்டம் ஒரு தீர்க்கமான கட்டமாகிறது; படுபயங்கரமான முறையில் இனப்படுகொலையை நோக்கி வழுகிச்செல்லும் கட்டமாகிறது; மறு குழுமத்தை விலங்குநிலைக்குத் தாழ்த்துவதை நோக்கி வழுகிச்செல்லும் கட்டமாகிறது.
ஓர் அவப்பேறு எனும்படியாக இலங்கையில் அது நிகழ்ந்தது; பெரும்பான்மைச் சிங்களத் தலைவர்களின் முழக்கங்கள் அதை நிகழ்த்தி வைத்தன. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிங்கள மறுமலர்ச்சிவாதி அநகாரிக தருமபாலா தமிழரை அந்நியர் என்றும், சுரண்டல் பேர்வழிகள் என்றும் குறிப்பிட்டார்.1983ல் ஜனாதிபதி ஜெயவர்த்தனா, சிங்களவரை மகிழ்விக்க தமிழரைப் பட்டினிபோடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.  ஜனாதிபதி விஜேதுங்கா தமிழரை சிங்கள மரத்தில் தங்கியிருக்கும் ஒட்டுண்ணிகள் என்று வர்ணித்தார்.  ஜனாதிபதி சந்திரிகா தமிழர் இத்தீவின் சுதேசிகள் அல்லர் என்றார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா தமிழரைக் குறித்து இனவாதக் கருத்துக்கள் பலவற்றை உதிர்த்துச் சென்றார். இலங்கை அரசுத் தலைவர்கள் தமிழருக்கு சமத்துவம் அளிக்கமறுத்து விடுத்த அனல்கக்கும் முழக்கங்களுள் இவை ஒருசில மட்டுமே. சிங்கள மக்கள் தமிழரை வெறுத்து இகழும் வண்ணம், பயங்கரக் காழ்ப்பும் வன்மமும் கொண்டு வெறுத்து ஒதுக்கும் வண்ணம் அவர்களை அரசுத் தலைவர்கள் நெறிபிறழ்த்தி வழிநடத்தி வந்துள்ளார்கள்.  
(5) கொலையேற்பாடு
(6) இருமுனைப்படுத்தல்
ஒரு குழுமம் மறு குழுமத்தை விலங்குநிலைக்குத் தாழ்த்துவதைத் தடுக்காவிட்டால், அது 5ம் கட்டமாகிய கொலையேற்பாட்டுக்கும், 6ம் கட்டமாகிய இருமுனைப்பாட்டுக்கும் இட்டுச்செல்லக் கூடும். இலங்கையில் சட்டம் இயற்றுவோரே இனப்பாகுபாட்டையும்,  விலங்குநிலைக்குத் தாழ்த்துவதையும் ஊக்குவித்ததைக் கண்டுகொண்டோம். எனவே விலங்குநிலைக்குத் தாழ்த்தும் காழ்ப்புமொழியைத் தடுக்கும்  சட்டம் எதுவும் என்றுமே இலங்கையில் இயற்றப்படாததில் வியப்பில்லை.   
கொலை, மானுடப் பிறவிகளை அச்சுறுத்துவது இயல்பும் வழமையும் ஆகும். எனினும் மறு குழுமத்தை விலங்குநிலைக்குத் தாழ்த்தினால், அந்த அச்சத்தை வெற்றிகொள்ளலாம். இலங்கையில் தமிழரை விலங்குநிலைக்குத் தாழ்த்தும் போக்கிற்கு முண்டுகொடுக்கும் கருத்தியல் ஒன்று உண்டு என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். அதை முன்மொழிந்தவர்களுள் அநகாரிக தருமபாலா ஒருவர் என்பதை ஏற்கெனவே கண்டுகொண்டோம். பெளத்தம் காக்கப் புரியும் கொலையைப் போற்றும் நோக்குடன் புனித பெளத்த நூல் என நம்பப்படும் மகாவம்சம் திரித்துரைக்கப்பட்டது.
கடந்த காலத்தில் உயர்கல்வித்துறைஞர் பலரும் அதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். இத்தீவு முற்றிலும் பெளத்த சிங்கள அரசாக விளங்க வேண்டும் என்பது சிங்கள தேசிய பேரினவாதிகளின் அடிப்படை நிலைப்பாடு. தமிழர் முழுமனிதர் இல்லை என்றபடியால் அவர்களைக் கொல்லலாம் என்று கூறுவதற்கு இந்நூல் 1930 முதல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அப்படிக் கூறுவது நகைப்புக்கிடமாகத் தோன்றக்கூடும். ஆதலால் இலங்கைக்கு வெளியே, வெளியுலக சமூகத்தில் இதற்கு எவரும் கனதி கொடாது விடக்கூடும். ஆனால் இலங்கை அரசாங்கத்தின்மீது, சிங்கள மக்கள்மீது அதிகாரபூர்வமாகவும், அதிகாரபூர்வமற்ற முறையிலும் பாரிய அரசியற் செல்வாக்கு செலுத்தும் பெளத்த குருமாரும் பெளத்த சங்கத்தவரும் படுமோசமான முறையில் இதற்கு கனதி கொடுத்து வந்துள்ளார்கள். இலங்கையில் தீயநோக்குடன் பெளத்த சமயத்துக்கு தவறான பொருள் கற்பிக்கப்படுகிறது; அதைப் புரிந்துகொள்ளாவிட்டால், அங்கு நிகழ்ந்த கொடுமைகளையும் புரிந்துகொள்ள முடியாது.
பல தசாப்தங்களாக தமிழருக்கு எதிரான வன்முறைக்கு இடைவிடாது தூபமிட்ட தலைவர்களை எவருமே தட்டிக்கேட்கவில்லை. தட்டிக்கேட்டிருந்தால், படுமோசமான வன்முறையை நோக்கிய நகர்வைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆதலால் பாதகம்புரிந்தோர் தண்டனைக்கு உட்படாதிருப்பது மேலோங்கி வந்துள்ளது; மேலோங்கி வருகிறது.
இனப்படுகொலையைத் தடுப்பதற்கு, அத்தகைய தலைவர்களின் வெளிநாட்டுப் பயணம் தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும். மாறாக, வெளிநாட்டுத் தலைநகரங்களிலும், உலகின் உயரிய பல்கலைக்கழகங்களிலும் அவர்கள் வரவேற்கப்பட்டு, கற்பிக்கப்பட்டார்கள். அங்கெல்லாம் நாம் ஏற்கெனவே கண்டுகொண்ட பொய்கள் பறைசாற்றப்பட்டன.
காழ்ப்புக் குற்றங்களும் கொடுமைகளும் உடனடியாகப் புலன்விசாரணை செய்யப்பட்டு, பாதகம்புரிவோர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் 1956ம், 58ம், 77ம், 81ம், 83ம் ஆண்டுகளில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட்டதில்லை. அவை நிகழ்ந்தது வெளிநாடுகளுக்குத் தெரியும். எனினும் அவை கண்டுகொள்ளாதிருக்கவே விரும்பின.  
மறு குழுமத்தை விலங்குநிலைக்குத் தாழ்த்துவதன் விளைவுகளே கொலையேற்பாடு என்னும் 5வது கட்டமும், இருமுனைப்படுத்தல் என்னும் 6வது கட்டமும்.  
நேரடியாகவோ மறைமுகமாகவோ கொலையேற்பாடு செய்துகொடுக்கும் வசதி படைத்தது  அரசு. எனவே இனப்படுகொலையின் 5வது கட்டமாகிய கொலையேற்பாட்டை அரசோ அதன் முகவர்களோ புரிவது வழக்கம். தமக்குப் பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராகத் தமிழர் மேற்கொண்ட வன்முறையற்ற போராட்டத்தை அடக்கியொடுக்கிய அதே ஆட்சியாளரின் உபயத்தில் 1950 முதல் இது நடந்து வந்துள்ளது.
தசாப்தங்கள் தொடரவே, கொலையேற்பாடுகள் மிகவும் ஒழுங்குமுறைப்படுத்திய ஏற்பாடுகளாயின. அவை பத்துப் பத்தாகத் தொடங்கி, பிறகு நூறு நுறாக உயர்ந்து, பிறகு ஆயிரம் ஆயிரமாக ஓங்கி, ஈற்றில் பல்லாயிரம் பல்லாயிரமாகப் பெருகின. இலங்கையில் இடம்பெற்ற கொலைகள் பற்றிய ஆவணப்பதிவுகள் பெருவாரியாக இருக்கின்றன. ஊடகங்கள் பலவும் இவ்விபரங்களை வெளியிட்டுள்ளன. மனித உரிமை அமைப்புகளும் வெளியிட்டுள்ளன.
6வது கட்டம் இருமுனைப்படுத்தல்: தீவிரவாதிகளும், அவர்களது காழ்ப்புக் குழுமத்தவர்களும் மக்களை இருமுனைப்படுத்தும் பரப்புரைகளில் ஈடுபடுவார்கள். இருமுனைப்படுத்துவதற்கு அரச ஊடகங்கள் உடந்தையாய் இருக்கின்றன.
ஏற்கெனவே நாம் சுருக்கியுரைத்தவாறு தமது சமத்துவ உரிமைகள் மறுக்கப்படவே 1977ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர் தமது சுயநிர்ணய உரிமையைக் கையாண்டு வாக்களித்தார்கள். தேர்தலின் பின்னர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழினப் பிரச்சனைக்கான தீர்வு குறித்துக் கதைக்கும் உரிமைகூட மறுக்கப்பட்டது.
அதே நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கே வடக்கு, கிழக்குவாழ் தமிழ்மக்கள் பெருவாரியாக வாக்களித்திருந்தார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது  சுயநிர்ணய உரிமை பற்றிக் கதைக்கத் துணிந்தால், அவர்களைக் கொடிய சித்திரவதைக்கு உள்ளாக்கும் விதத்தை இரு சிங்கள உறுப்பினர்கள் 1981ல் நாடாளுமன்றத்திலேயே எடுத்துரைத்தார்கள். தமது ஈவிரக்கமற்ற, இழிவுபடுத்துகின்ற, அருவருப்பான எண்ணங்களை முன்வைக்க இச்சிங்கள உறுப்பினர்கள் அஞ்சியதில்லை. 
"நாங்கள்", "அவர்கள்" என்னும் விசைப்பொறி வலிமையும் வன்மையும் வீறும் கொண்டு நீடித்து நிலைபெறும் வண்ணம், இலங்கை மக்களை இருமுனைப்படுத்தும் படிமுறை ஒப்பேற்றப்பட்ட விதத்துக்கு இன்னும் பல எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன. தமிழரைத் தமது ஆதிக்கத்துக்கும், வன்மையுடன் கூடிய அரசியலதிகாரத்துக்கும் உட்படுத்தும் இலக்கை எட்டுவதில் "நாங்கள்", "அவர்கள்" என்னும் விசைப்பொறி என்றுமே தடைப்பட்டு நின்றதில்லை.
(7) ஆயத்தப்படுத்தல்
(8) கொடுமைப்படுத்தல்
சமூகத்தை இருமுனைப்படுத்திய அரசு 7வது கட்டத்தில், அது எந்தக் குழுமத்தின்மீது குறிவைத்துள்ளதோ அந்தக் குழுமத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தும்; தென்னிலங்கைவாழ் பெரும்பான்மை மக்கள், தமது அரசு குறிவைத்த பலிக்குழுமத்தவர்கள் அனைவரையும் கண்டு நியாயமின்றி அஞ்சும் வண்ணம், அதே அரசு அவர்களை மூளைச்சலவைக்கு உள்ளாக்கும்.
சிங்கள மக்கள் அனைவரையும் மூளைச்சலவைக்கு உள்ளாக்க முடியாது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளதுஎடுத்துக்காட்டாக, திட்டமிட்ட படுகொலைகள் நிகழ்ந்தபொழுது சில சிங்களவர் தமிழருக்கு உளமிரங்கி உதவியதுண்டு. எனினும் நிலைமையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கோ, பிரச்சனைக்கான காரணங்களைக் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கோ, வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்கோ அவர்களது எண்ணிக்கை போதாது. உண்மையில் அத்தகைய சில சிங்களவர் கூட சிங்களப் பேரினவாதிகளின் காழ்ப்புக் குற்றங்களுக்கும், கொலைக்கும் இரையாகும் ஆபத்தை எதிர்கொள்ளும் துணிவு படைத்தவர்களாக விளங்கினார்கள்; விளங்குகிறார்கள். 
1950கள் முதல் 70கள் வரை தமிழர் மேற்கொண்ட அமைதி ஆர்ப்பாட்டங்களை அரசு ஆயுத வன்முறையுடன் எதிர்கொண்டது. பிறகு தமிழரை திட்டமிட்டுக் கொடுமைப்படுத்துவதற்கும் அதே ஆயுத வன்முறை பயன்படுத்தப்பட்டது.  
கொடுமைப்படுத்தும் 7வது கட்டம் முந்திய கட்டங்களின்மேல் கட்டியெழுப்பப்படுவது. அதேவேளை இது ஒரு தொடர்நகர்வு. 1981ல் 90,000 நூல்களுடனும், தமிழ்ப் பண்பாட்டு, வரலாற்றுச் சுவடிகளுடனும் கூடிய யாழ் நூலகம் இலங்கை அரசின் முகவர்களால் எரித்து தரைமட்டமாக்கப்பட்டது. யாழ் நூலகத்தை திட்டமிட்டுத் தீக்கிரையாக்கியமை, தமிழ்மக்களின் பண்பாட்டு, வரலாற்றுப் பாரம்பரியத்தை அழிப்பதன் ஊடாக அவர்களது பொது நினைவுத்தடத்தை ஒழிக்க மேற்கொண்ட முயற்சியே என்று கூறப்பட்டுள்ளது. முதுநிலை அரசாங்க அலுவலர்களும், தலைவர்களும் அதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். ஈராண்டுகள் கழித்து, 1983ல் 3,000க்கு மேற்பட்ட தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள், உயிருடன் கொளுத்தப்பட்டார்கள், வெட்டித் துண்டாடப்பட்டார்கள். கைத்தொழில் அமைச்சின் அதிகாரவரம்புக்கு உட்பட்ட இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் அதற்கு வேண்டியளவு பெற்றோல் தயாராக வைக்கப்படிருந்தது. தேர்தல் நிரல்களைக் கொண்டு தமிழ்மக்களின் வீடுகள் கண்டறியப்பட்டன. பெயர்களை வைத்தும், சிங்களம் வாசிக்கத் தெரியாததை வைத்தும் தமிழரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.
தமிழரின் அடையாளத்தை உறுதிப்படுத்தியவுடன் அவர்களின் வீடுகளுக்கு உள்ளேயும், தெருக்களிலும் வைத்து அவர்கள் கேட்டுக்கேள்வியின்றிக் கொல்லப்பட்டார்கள். அரசினால் கொண்டுநடத்தப்பட்ட வன்முறை என்ற வகையில் "இனப்படுகொலை புரியும் நோக்கம்" வெளிப்படையாகப் புலப்பட்டதாக சர்வதேய சட்டவல்லுநர் ஆணையம் அறிக்கையிட்டது. இது குறித்த ஆவணப்பதிவுகள் பெருவாரி உண்டு.
சர்வதேய சமூகம் பதில்நடவடிக்கை எடுக்க மீண்டும் தவறியது; மேற்படி கொடுமைகளை விசாரணைசெய்து பாதகம்புரிந்தோரை அடையாளங்கண்டு தண்டிக்கவும், பிரச்சனைகளின் மூலகாரணத்தைக் கண்டறியவும் ஒரு சுதந்திர சர்வதேய விசாரணைக்கு ஏற்பாடுசெய்யத் தவறியது. உள்நாட்டுப் பரிகாரம் கைகூடப் போவதில்லை எனபது தெளிவாகத் தெரிந்தும் கூட, 1983ல் தமிழர்மீது பரிவும் இரக்கமும் கொண்ட சர்வதேய சமூகம் எதுவுமே செய்யவில்லை; ஆயிரக் கணக்கான தமிழர்களைப் பயங்கர சித்திரவதைக்கும் படுகொலைக்கும் இட்டுச்செல்வதற்கு ஏதுவாக இலங்கையில் நிலைநிறுத்தப்பட்ட பாரபட்சமான சட்டங்களை நீக்கும்படியோ, தமிழரை விலங்குநிலைக்குத் தாழ்த்தும் படிமுறைகளை நிறுத்தும்படியோ தூண்டுவதற்கு சர்வதேய சமூகம் எதுவுமே செய்யவில்லை.  
சித்திரவதை, சட்டதிட்பத்துக்கு உட்படாத கைதுகள், வன்புணர்ச்சி, வலிந்து காணாமல் போக்கடிப்புகள், உரியவிசாரணையற்ற மரணதண்டனைகள் என்பன நெஞ்சுபதறும் வண்ணம் தங்குதடையின்றி நிகழ்வதற்கு 1979 முதல் இற்றைவரை நடைமுறைப்படுத்தப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் வகைசெய்கிறது. சித்திரவதைக்கு உட்படுத்தி வெளிக்கொணரப்படும் குற்றவொப்புதல்களை நீதிமன்றம் அனுமதிக்க வகைசெய்கிறது. மீறமுடியாத இம்மனித உரிமைகளை மீறிப் பாதகம்புரியும் தம்மிடம் விளக்கம் கோரப்படாது என்பது அவர்களுடைய நம்பிக்கை. அதற்கெல்லாம் கைமாறாக அவர்களுக்குப் பதவியுயர்வு அளிக்கப்படுவதுண்டு.
1996 பெப்ரவரி 11ம் திகதி திருகோணமலை-குமாரபுரத்தில் 26 தமிழர்களை (13 பெண்களை, 12 வயதுக்கு உட்பட்ட 9 சிறுவர்களை) வன்புணர்ச்சிக்கு உட்படுத்திக் கொன்றதாகவும், இன்னும் பலரைக் கடுமையாகக் காயப்படுத்தியதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த முன்னாள் தரைப்படையினர் அறுவரை 2016 யூலை 27ம் திகதி அனுராதபுர மேல்நீதிமன்ற நீதிபதி (ஒரு சிங்களவர்) விடுதலை செய்தார். இலங்கை நீதித்துறையின் பக்கச்சார்பான தீர்ப்புகள் பலவற்றுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
போர் முடிந்த பிறகு ஒரு புதிய நிலைவரம் எழுந்துள்ளது. முன்னாள் போராளிகளுக்கு நச்சூசி ஏற்றப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் நோய்வாய்ப்பட்டு, மடிந்துள்ளார்கள். இது விசாரணை செய்யப்பட வேண்டியது.
கொடுமைக்குப் பதில்நடவடிக்கை: தமிழரின் முதிய தலைமுறை பல தசாப்தங்களாக நல்ல மாற்றங்களை ஏற்படுத்தப் பாடுபட்டது. முதிய தலைமுறை மேற்கொண்ட நாடாளுமன்ற அரசியற் போராட்டம் பயனளிக்காது போனதைக் கண்ட இளைய தலைமுறை 1970களின் பிற்கூறில் கிளர்ச்சிபுரியத் தொடங்கியது. 1950, 60, 70களில் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டங்களை இலங்கை அரச படையினரும், அரசாங்க உபயத்துடன் இயங்கிய சிங்களக் காடையரும் ஈவிரக்கமின்றி அடக்கி ஒடுக்கினார்கள். பலர் கொல்லப்பட்டார்கள். முதிய தலைமுறையின் ஆதரவுடன் இளைய தலைமுறை ஆயுதம் ஏந்தி எதிர்த்துப் போராடத் தலைப்பட்டது உண்மையே.
தமிழருக்கு எதிராக அரச ஏற்பாட்டில் நிகழ்ந்த வன்முறை (குறிப்பாக 1983 ஆடி வன்முறை) இளந்தமிழரின் ஆயுதப் போராட்டத்தைப் பிறப்பித்தது. பாகுபாட்டுக்கும் கொடுமைக்கும் பரிகாரம் காண்பதற்கு கடைப்பிடித்த ஏனைய வழிவகைகள் அனைத்தும் பயன்படாது போனதன் பெறுபேறாகவே தமிழர் தமது சுயநிர்ணய உரிமையைக் கையாள்வதற்காக நியாயபூர்வமான போராட்டத்தை மேற்கொண்டார்கள் என்னும் வாதம் சர்வதேய சட்டத்துக்கமைய முன்வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை இளந்தமிழர் அதன் இரண்டாம் கட்டத்துக்கு நகர்த்தினார்கள்; சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார்கள்.
ஜெனீவா ஒப்பந்தங்களின்படி போர்ச் சட்டங்களுக்கும், வழமைகளுக்கும் அமைவாகப் போரை நடத்தவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. மாறாக, தமிழர்மீது ஓர் இனப்படுகொலைப் போரை  அது நடத்தியது. பால்மை அடிப்படையில் நிகழ்ந்த வன்முறை அதைச் சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேயவாரியாகவோ மற்றும்படியோ ஆயுதப் போராட்டம் நிகழும்பொழுது இடம்பெறும் வன்புணர்ச்சி இனக்கொலையாகக்கூடும் என்று அகியேசு (Akeyesu) என்பவருக்கு எதிரான வழக்கில் ருவாண்டாவுக்கான சர்வதேய குற்றவியல் தீர்ப்பாயம் விதித்தமை கவனிக்கத்தக்கது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளுள் திருமதி நவநீதம் பிள்ளை ஒருவர். பின்னர் மனித உரிமைகள் உயர் ஆணையாளராக விளங்கியவர் அவர். 
தமிழ்ப் பெண்கள் திட்டமிட்டு வன்புணர்ச்சிக்கு உட்படுத்திக் கொல்லப்பட்டார்கள். இனக்கொலை புரிவதற்கான போராயுதமாக வன்புணர்ச்சி கையாளப்பட்டது. தமிழ்ப் பெண்களைத் தனிப்படவும், தமிழ்மக்களை ஒட்டுமொத்தமாகவும் மானங்கெடுத்துவதற்காக, இழிவுபடுத்துவதற்காகக் கையாளப்பட்ட ஆயுதம் அது. சான்றுகளை அறவே ஒழிக்கும் நோக்குடன் தமிழ்ப் பெண்களைக் கொல்லும் விதம்கூட மாற்றப்பட்டது.
தாம் "பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் புரிவதாக இலங்கை ஆட்சியாளர் முழங்கினர். "தமக்கென ஒரு சுதந்திர தனியரசைக கவர்ந்தெடுப்பதற்காகப்" போராடிய தமிழர்களே "பயங்கரவாதிகள்" எனப்பட்டனர். வெளியுலக ஊடகங்கள் அடிமைகள்போல் இச்சொற்றொடரை திரும்பத்திரும்ப ஒப்புவித்தன. தமிழர் வடக்கு, கிழக்கில் 3,000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளதை அவை கண்டுகொள்ளவில்லை.  
அரசியல்வாதிகள், சில படையாட்கள் உட்பட ஆட்சியாளரால் வழிநடத்தப்பட்ட காடையர் குழுமங்களால் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச வன்முறை பிறகு (தரை, கடல், வான் படை அடங்கிய) முப்படைகள், உளவுப்படைகள், கூலிப்படைகள், துணைப்படைகள் என்பவற்றிடம் பாரங்கொடுக்கப்பட்டது. கடைசியாகக் குறிப்பிட்ட துணைப்படையினர் தமிழராக இருப்பது வாடிக்கை. அடக்குமுறையை எதிர்த்து, தமிழரின் விடுதலைக்காகப் போராடிய தமிழருக்கு எதிராகச் செயற்படுவதற்கென அணைத்துக்கொள்ளப்பட்ட தமிழரே அவர்கள். "பன்மைத்துவ" அரசு என்னும் போலி எண்ணத்தை ஏற்படுத்தி, சர்வதேய சமூகத்தை ஏய்க்கும் நோக்குடன், சர்வதேய செல்வாக்கு மிகுந்த அரசியற் பதவிகள் சிலவற்றுக்கு அரசாங்கம் தமிழரைத் தேர்ந்தெடுத்து அடையாள நியமனங்கள் வழங்கியது.
என்றென்றும் தமது தாயகமாக அருகருகே அமைந்திருக்கும் வடக்கு, கிழக்கில் தமது மக்களையும், தேசியத்தையும் காக்கும்பொருட்டு தாம் ஓர் இனக்கொலையரசை எதிர்த்துப் போராடுவதாகத் தமிழர் விடுதலை இயக்கம் முழங்கியது.
தமது சொந்த மண்ணில் வாழ்ந்து, உழைத்து, தமது சொந்த அலுவல்களை நடத்தும் உரிமை காக்கும் போராட்டம் அது. தமது பாதுகாப்பை ஒட்டிய  பிரச்சனைக்கு ஒரு சுதந்திர தன்னரசு மட்டுமே தீர்வாகும் என்ற உணர்வு ஏற்பட்டிருந்தது. ஓர் ஒற்றையாட்சி அரசில் தமது உரிமைகள் மதிக்கப்படும் என்பதற்கு காத்திரமான சான்று எதுவும் கிடைக்காத நிலையில், முந்திய தசாப்தங்களில் இணைப்பாட்சி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், ஏற்பட்ட உணர்வு அது.
2008ல் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்து Cambridge Review of International Affairs இதழில் எழுதிய கட்டுரையில் , தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட போர் ஓர் இனக்கொலைப் போர் என்பதை நான் முற்றுமுழுதாக ஆய்விட்டிருந்தேன். அதை அத்துணை முழுமையாக இக்கட்டுரையில் நான் ஆய்விட முடியாது.
இனப்படுகொலைக் கட்டங்களுக்கான பொறிமுறைகள் பல தசாப்தங்களாக நிலைபெற்றுள்ளன. 1983க்குப் பின்னர் தமிழ்மக்கள் தமது சுதந்திர வாழ்வுரிமையைக் காக்க (தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் போன்ற) விடுதலை இயக்கங்களுடன் அணிதிரண்டனர்.
1983ல் தமிழர்மீது சர்வதேய சமூகம் காட்டிய கரிசனை அநியாயமான முறையில் குன்றிக் குறுகியது. நாம் ஏற்கெனவே கண்டுகொண்டவாறு இனக்கொலை புரியும் எண்ணம் உண்டு என்பதற்கு தெளிவான ஆவணப்பதிவுகள் இருந்தும் கூட, அது குறித்து விசாரணை செய்யப்படவில்லை. பாதகம்புரிந்தோர் தண்டிக்கப்படவில்லை. இனக்கொலை புரியும் கட்டமைப்பில் கைவைக்கப்படவில்லை. அக்கட்டமைப்பு குலைக்கப்படவில்லை. அரசாங்கம் கெட்டித்தனமாக அதற்குத் திரையிட்டு மறைத்து வைத்தது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் கூட, மீறமுடியாத சர்வதேய மனித உரிமை ஏற்பாட்டு விதிகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும் பாதகம்புரிந்தோரை அவர்களது செயல்களுக்குப் பொறுப்பேற்க வைக்கும்படி விடுக்கபட்ட கோரிக்கை எதுவும் இலங்கை அரசாங்கத்தின் "பயங்கரவாத எதிர்ப்பு" வாதத்தால் திசைதிருப்பப்பட்டது. பாதிக்கப்பட்டோர் தமது தற்காப்புக்கான கடைசி நடவடிக்கையாக ஆயுதம் ஏந்த நேர்ந்தபொழுது, அரசாங்கம் அவர்களைப் பழிதூற்றியது. தமிழருக்கிருந்த ஒரேயொரு மாற்றுவழி, அழித்தொழிக்கப்படுவதற்கு இணங்குவதாகவே தென்பட்டது. நினைத்துப் பார்க்கமுடியாத மாற்றுவழி அது. கட்டிக்காக்க வேண்டிய உயரிய அடையாளமும், சீரிய பண்பாடும் கொண்டவர்கள் தமிழ் மக்கள்.
ஜேர்மனியில் நாசிகள் நயவஞ்சகமான முறையில் யூதரை அவர்களது மஞ்சள் உடுக்குறிளை வைத்து அடையாளம் கண்டார்கள். இலங்கையில் அப்படிச் செய்யவேண்டி இருக்கவில்லை. இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டவாறு, தமிழரை விலங்குநிலைக்குத் தாழ்த்தும் பாதகத்தைப் புரிந்தோர், தமிழரை இனங்காண்பதற்கு அடையாளம் எதையும் பயன்படுத்த வேண்டியிருக்கவில்லை. (பண்பாட்டுவாரியாக) மொழியை வைத்து தமிழரைஅடையாளம் காணமுடியும். நெற்றிப் பொட்டு அல்லது திருநீறு போன்ற சமயக்குறிகளை அல்லது தேசிய உடையை வைத்து அவர்களை அடையாளம் காணமுடியும்.
ஆயுதப் போராட்டம் ஓங்கிய பின்னர் தமிழர் ஒவ்வொருவருக்கும், தமிழரது நியாயமான சட்டபூர்வமான குறிக்கோளை ஆதரித்தோர் எவருக்கும் "புலிப் பயங்கரவாதி" என்ற முத்திரை குத்தப்பட்டது. விடுதலை இயக்கத்தின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட "புலி" என்னும் சொல், தமிழர் எவரும் சித்திரவதை செய்யப்படத்தக்கவரே, இழிவுபடுத்தப்படத்தக்கவரே என்று குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. புலி (பயங்கரவாதி) என்றால் தமிழர், தமிழர் என்றால் புலி! அடுத்தடுத்து ஆட்சிபுரிந்த சிங்கள அரசாங்கங்கள் அரசியல்நயம் கருதிக் குத்திய புலிமுத்திரையை தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நிராகரித்தார்கள்; அதை தமது பாரம்பரியத்துடன் இணைத்து, தம்மைக் கட்டிக்காக்கும் புலியின் சின்னமாகக் கொண்டு பெருமைப்பட்டார்கள். தாம் சிங்கங்களாக விளங்குவதில் சிங்களவர் பெருமைப்படுவதாக சிங்களப் பேரினவாதம் முழங்குவது இங்கு குறிப்பிடத்தக்கது.   
(9) கொன்றொழித்தல் அழித்தொழித்தல்: இனப்படுகொலையின், அதாவது அழித்தொழிப்பின் 9வது கட்டத்தில் அரச ஆதரவுடன் கூடிய குழுமங்களால் பாரிய படுகொலைகள் நிகழ்த்தப்படும். 2009ம் ஆண்டு இலங்கையில் பல்லாயிரக் கணக்கான குடிமக்கள்-70,000 முதல் 1,40,000 வரையான குடிமக்கள்-கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். மூன்று ஆண்டுகளாக உன்னிப்பாகத் திட்டமிட்டு போரின் இறுதிக் கட்டத்தில் அதை நிகழ்த்தியதாக இலங்கை வெளியுறவுச் செயலாளர் பிறகு மார்தட்டினார்.
நிகழ்த்தப்பட்ட பயங்கரத்தையிட்டு இலங்கை அரசின் இனக்கொலைஞர்கள் இம்மியும் அலட்டிக்கொள்ளவில்லை. மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயங்கள்மீது கூட திட்டமிட்டு இலக்குவைத்து தாக்கிவிட்டு, குடிமக்கள் எவரும் இறக்கவில்லை என்று வலியுறுத்தினார்கள். மூன்று தசாப்தங்களாக நீடித்த போரின்பொழுது மக்களை அடக்கியொடுக்கி, கொடுமைப்படுத்தி, மனித உரிமைவாதிகளைக் கொன்று, படுகொலைகள் புரிந்து, பொதுமயானங்களை உழுதுதள்ளியதை அடுத்து மேற்படி கொன்றொழிப்பு நிகழ்த்தப்பட்டது.
கரிசனைகொண்ட அமைப்புகள் அவற்றை விசாரணைசெய்யும்படி இடைவிடாது கோரிவந்தன. விசாரணை செய்வதற்கு வலுவற்ற ஆணையங்கள் நியமிக்கப்பட்டன. பக்கச்சார்பான விசாரணைகள் இடம்பெற்றன. பாதகம்புரிந்தோர் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டார்கள். பரிகார நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தாங்கள் தண்டிக்கப்படமாட்டோம் என்பதில் பாதகம்புரிந்தோருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. கைமாறாக, சிலருக்கு உயர்பதவிகள் அளிக்கப்பட்டன. நாட்டின் பிரதிநிதிகளாக அவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்!
(10) மறுத்துரைத்தல்
இக்கட்டுரையின் தலைப்பில் இதைக் குறிப்பிட்டோம். 2009 வைகாசி மாதம் புலிகள் தோல்வியடைந்த கையோடு இலங்கை ஆட்சியாளர் ஐ. நா. மனித உரிமை மன்றத்தில் இனப்படுகொலையை அறவே மறுத்துரைத்து எதிர்வாதம் புரிவதில் இறங்கினார்கள். மனித உரிமைகள் விடயத்தில் தாம் சாதித்தவற்றுக்கு தம்மைத் தாமே பாராட்டும் தமது சொந்த தீர்மானத்தை முன்வைத்தார்கள். 2009 மே 27ம் திகதி அது நிறைவேற்றப்பட்டது!
இனக்கொலைகள், கொடுமைகள், அழித்தொழிப்புகள் தொடர்ந்து நிகழும் என்பதை மேற்படி மறுப்புகள் மிகவும் உறுதிபடப் புலப்படுத்துகின்றன. போர் முடிந்து 7 ஆண்டுகள் கழிந்த பின்னரும் வடகீழ்த் தமிழ்ப்புலம் வேகமாக சிங்கள, பெளத்த மயமாக்கப்பட்டு வருகிறது; மேன்மேலும் படைமயமாக்கப்பட்டு வருகிறது. தமிழ்க் குடிமக்களின் நிலம் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. படையினரால் உருவாக்கப்பட்டு, நடத்தப்படும் சுற்றுலாத் தலங்களுக்காகவும் தமிழ்க் குடிமக்களின் நிலம் பறிக்கப்பட்டு வருகிறது. இது தமிழ்மக்களுக்கு எதிராகவும், அவர்களது உரிமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து நடத்தப்படும் போர்.
இனப்படுகொலை திடீரென நிகழ்வதில்லை; அதன் ஈவிரக்கமற்ற பொறிமுறைகளும், கட்டங்களும் ஒன்றன்மேலொன்று கவிந்து குவிந்துள்ளன; கொடிய, கொடூரமான, பயங்கரமான இலக்கை நோக்கி இனப்படுகொலை முன்னகர்ந்து வருகிறது; புதுக்கப் புதுக்க ஒளிவுமறைவாகவும், திரைமறைவில் வெளிவெளியாகவும் மக்களை அடக்கியொடுக்கி அழித்தொழிக்கும் வழிவகைகளைக் கண்டறிந்து இடைவிடாது முன்னகர்ந்து வருகிறது.
இனப்படுகொலை இடம்பெறும் கட்டங்களைப் புரிந்துகொண்டால் மாத்திரமே இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சர்வதேய சமூகம் இந்தப் புதிருக்கான விடையைக் கண்டறியத் தலைப்பட்ட இன்றைய ஊழியில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பது எமது நற்பேறே.
உண்மையை ஒடுக்கமுடியாது என்னும் நம்பிக்கைக்கு, பிரித்தானிய 4ம் தொலைக்காட்சி நிலையம் (Channel Four) தேர்ந்துதெளிந்து ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஓர் அறிகுறியாகும். இனப்படுகொலை மேற்கொண்டு நிகழ்வதைத் தடுக்க இயன்றளவு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதகம்புரிந்தோர் தண்டிக்கப்பட வேண்டும்.
"முதலில் உயர்மட்ட இராசதந்திரத்துக்கு வாய்ப்பளிக்காமல் படைபல நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கினால், மிகுந்த சர்வதேய கண்டனத்தையும், சர்வதேய சமூகத்தின் கரிசனையைப் புலப்படுத்தும் நடவடிக்கைகளையும் இலங்கை எதிர்நோக்கக் கூடும்; அத்தகைய நடவடிக்கைகளுள் இலங்கைக்கான உதவி இடைநிறுத்தப்படுவதும், சர்வதேய நாணய நிதியம் வழங்கும் கடன் மிகவும் உன்னிப்பாகச் சல்லடையிடப்படுவதும், போர்க்குற்ற விசாரணைகள் கைகூடுமா என்று ஆராயப்படுவதும் உள்ளடங்கும்; மற்றும் பிற நடவடிக்கைகளும் உள்ளடங்கக் கூடும்" என்று 2009ம் ஆண்டில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 2012ல் விக்கியம்பலம் (WikiLeaks) ஊடாகக் கசிந்த தகவல் அது.
மனித உரிமை உயர் ஆணையாளரின் அலுவலகம், இலங்கை நிலைவரம் தொடர்பான ஆவணப்பதிவை இடைவிடாது மேற்கொண்டு வந்துள்ளது; இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்தவும் கட்டிக்காக்கவும் முயன்று வந்துள்ளது. அது இலங்கை தொடர்பாகப் புலன்விசாரணை செய்து விடுத்த அறிக்கையில் இலங்கைமீது வலுத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது; இங்கு உண்மையில் நடந்தது என்ன என்பதை நிச்சயிப்பதற்கு, தகுந்த நீதிமன்றங்கள் ஊடாக ஒரு சுதந்திர சர்வதேய புலன்விசாரணையை அது விதந்துரைத்துள்ளது.
சுதந்திர சர்வதேய புலன்விசாரணை நடத்தி, சர்வதேய குற்றவியல் நீதிமன்றிடம் பாரங்கொடுப்பது மாத்திரமே ஒரேயொரு முன்னோக்கிய நகர்வாகும். சர்வதேய குற்றவியல் நீதிமன்ற நியதிச்சட்டத்தில் தாம் ஒப்பமிடவில்லை என்று இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் வாதத்தால் நீதிக்குத் தடங்கல் விளையக்கூடாது (சூடான் கூட அதில் ஒப்பமிடவில்லை என்பது இலங்கைக்குத் தெரியாதா, என்ன?). போர்ச் சட்டங்களுக்கும் வழமைகளுக்கும் அமையவே தமது போர் நடத்தப்பட்டது என்று இலங்கை ஆட்சியாளர் தெரிவித்துள்ளபடியால், அவர்கள் போர் நடத்திய விதத்தை சர்வதேய புலன்விசாரணைக்கு அனுமதிப்பது அவர்களுக்கே அதிக நலம் பயக்கும் அல்லவா!
Deirdre McConnell, Sri Lanka's Denial – Surest Guarantee Of Further Genocide, Colombo Telegraph, 2016-09-07 
 தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment