ஷுக்ரா முனாவர்


__________________________________________________________________

ஷுக்ரா முனாவர், சிரச தொலைக்காட்சியின் இலட்சாதிபதி நிகழ்ச்சியில் 20 இலட்சம் ரூபா பரிசு பெற்றுள்ளார். அவர் சுதர்மா வித்தியாலய மாணவி.  அது காலி மாவட்டத்தில் கடுகொடை கிராமத்துப் பாடசாலை.  

தனது இணையவழிக் கல்விக்கு ஒரு மடிக்கணினியைப் பெற்றுக்கொள்வதற்காக அந்நிகழ்ச்சியில் பங்குபற்றியதாக அவர் தெரிவித்தார். 

இலங்கைப் பண்பாடு, மரபு, பாரம்பரியம், பெளத்தம் குறித்த தனது ஆழ்ந்த அறிவைப் புலப்படுத்தி பார்வையாளர்களை அவர் வியக்க வைத்தார். சமூக ஊடகங்கள் அவரைப் போற்றிப் புகழ்ந்துள்ளன. “குட்டில காவியத்தை” அவர் மீட்டியபொழுது பார்வையாளர்கள் பலரும் கண்ணீர் மல்கினர். 

இலங்கைப் பண்பாடு பற்றிய தனது பரந்துபட்ட அறிவுக்கு, தான் வாசிப்பில் கொண்ட வேட்கையே காரணம் என்றும்,  தனது தந்தையை தடமொற்றிச் செல்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இணையவழிக் கல்வியை மேற்கொள்ள வசதியற்ற தன்னைப் போன்ற மாணவர்களை எண்ணிக் கவலைப்படுவதாகவும், அவர்களுக்கு உதவ விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். பெண்களை வலுப்படுத்த வேண்டிய தேவையையும் அவர் வலியுறுத்தினார். 

மேற்படி பரிசை வென்று இன்பம் கொண்டாடி இலங்கை மக்கள் அனைவரையும் அவர்  ஒருங்கிணைத்துள்ளார். அவரது நேர்மையும், வாய்மையும், முகமலர்ச்சியுடன் கூடிய தோரணையும் அவரை நாட்டின் பேதங்களைக் கடந்து இதயங்களை கொள்ள வைத்தன. தனது கதையும், திறனும், தேர்ச்சியும், திடசித்தமும் துணைநிற்க அவர் ஒரு தேசிய சின்னமாக மாறியிருக்கிறார்.

இளவயதில் தனது வாசிப்பு பசி கொண்டு அவர் ஈட்டிய அறிவு உண்மையில் வியக்கத்தக்கது. இனபேதமின்றி எல்லாத் தரப்பு மக்களும் அவரது அறிவை உளமார மெச்சினார்கள். தனது இனிய ஆளுமையினால், நயக்கத்தக்க சிறப்புக்களால், இன்னும் முக்கியமாக, இந்த இளவயதில் தனது சூழ்நிலையைப் பரந்த கண்கொண்டு நோக்கிய விதத்தினால்  பார்வையாளர்கள் அனைவரையும் அவர் ஆட்கொண்டபடியால், அவர்கள் அவரது வெற்றியை தமது வெற்றியாகவே கொண்டாடினார்கள். 

ஷுக்ராவின் அர்ப்பணிப்பும், தளரா முயற்சியும் மெச்சப்பட வேண்டியவை என்பது உண்மையே. அதேவேளை, தனது அன்புமகள் புகழ்பெறும் தருணம் கைகூடுவதற்கு தாய் ஆற்றிய தொண்டை எவரும் மறந்துவிடக் கூடாது. வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் ஷுக்ரா புரிந்த தியாகங்களை விட அவரது தாய் புரிந்த தியாகங்கள் மிகவும் முக்கியமானவை. அத்துணை துடினமும் நல்லொழுக்கமும் வாய்ந்த ஒரு மகளை உருவாக்குவதில் இந்த அன்னை தன்னந்தனியனாக எல்லாத் தடைகளையும், தடங்கல்களையும் எதிர்கொண்டார். அந்த வகையில் ஷுக்ராவின் வெற்றி அவரது வெற்றி மட்டுமல்ல; கண்டிப்பான ஒரு தாய்க்குக் கட்டுண்ட ஒரு குடும்பத்தின் கூட்டு முயற்சியும் ஆகும்.  

எத்தனையோ இன்னல்களையும், பணமுடைகளையும் எதிர்கொண்ட அதேவேளை தனது மகளை சுதந்திர உணர்வும், பொறுப்புணர்வும், ஒழுக்கநெறியும் படைத்தவராக அவர் வளர்த்தெடுக்க நேர்ந்தது.   

தனது மகளுக்கு தந்தை எதுவும் செய்யவில்லை என்பதல்ல இதன் பொருள். தந்தை தனக்கோர் உந்துவிசை என்று ஷுக்ரா கூறியது கவனிக்கத்தக்கது. தாய் மகளுக்கு பாதுகாவலர் என்றால், மகளின் கனவுகளுக்கு வழிகாட்டி தந்தையே.   

பாரபட்சத்துக்கும், ஆணாதிக்கத்துக்கும் எதிராக இடைவிடாது  குரல் எழுப்பும் தலையாய பெண்ணியவாதிகளின் மாய்மாலங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து, சோர்வையும் சோம்பலையும் உதறித்தள்ளி, ஊக்கத்துடன் முன்னகர முற்பட்ட இந்த அன்னை வகித்த பங்கில் அது தெரிகின்றது. தனது மகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக,  வீறுகொண்ட தாயாக விளங்குவது அவருக்கு ஒன்றும் எளிதான செயல் அல்ல. அது ஓர் எளிய, இனிய செயல் அல்ல என்பது வெளிப்படை.  

கடின காலகட்டங்களில் தனது பெற்றோர், குறிப்பாக தாய் ஈந்த அன்பையும், பாசத்தையும், அரவணைப்பையும், தைரியத்தையும் ஷுக்ரா ஒப்புக்கொண்டார். தனது கண்டிப்பான தாயின் அரவணைப்பில், பெற்றோர் விதித்த வரம்பினை மீறாமல் அவர் முழு சுதந்திரம் துய்த்தார். இந்த வறிய குடும்பத்தின் முதுகெலும்பு ஷுக்ராவின் அன்னையே. நோய்வாய்ப்பட்ட கணவரை ஓம்பும் அதேவேளை தனது குடும்ப மேம்பாட்டுக்கு, குறிப்பாக தனது மகளின் கனவை நனவாக்குவதற்கு அவர் என்றுமே போராடத் தயாராக இருந்தார்.  

தனது மகளுக்கு நன்னம்பிக்கை, நன்னோக்கு, உளத்திட்பம், திடசித்தம், விடாமுயற்சி, உரன், நாட்டுப் பண்பாட்டின்மீது மதிப்பு, மரபுகளின்மீது பற்று அனைத்தையும் அவர் ஊட்டி வளர்த்தார். 

  திடசித்தம் படைத்த சுக்ரா ஒரு விளக்கினை ஏந்தி, எமது அன்புத் தாயகத்தின் மேம்பாட்டுக்காக பேதங்கள் அனைத்தையும் மறந்து ஒருங்கிணைந்து முன்னகரும்படி இலங்கையராகிய எங்கள் அனைவரிடமும் வேண்டிக் கொண்டுள்ளார்.  

______________________________________________________________________

Lakshman I. Keerthisinghe, Ceylon Today, 2021-02-02, 

translated by Mani Velupillai, 2021-02-04.

No comments:

Post a Comment