ஏபிரஹாம் லிங்கன்
எண்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் எமது தந்தையர் இக்கண்டத்தில்
ஒரு புதிய நாட்டை உருவாக்கினர். இது விடுதலையில்
கருக்கொண்ட நாடு. மனிதர்கள் அனைவரும் சரிநிகராகப் படைக்கப்பட்டவர்கள் என்ற கோட்பாட்டுக்கு
தன்னை அர்ப்பணித்த நாடு.
ஒரு மாபெரும் உள்நாட்டுப் போரில் தற்பொழுது நாம் ஈடுபட்டுளோம்.
இந்த நாடு அல்லது இதைப் போன்று விடுதலையில் கருக்கொண்டு,
உறுதிபூண்ட வேறெந்த நாடும் நீடித்து நிலைக்குமா என்பதை நாம் தேர்விட்டு வருகிறோம். இந்த உள்நாட்டுப் போர்க்களத்தில் நாம் சந்தித்துள்ளோம்.
இந்த நாடு நிலைபெறும் பொருட்டு தமது உயிரை ஈந்தவர்கள் ஒய்ந்துறங்க இப்போர்க்களத்தின் ஒரு பாகத்தை ஈவதற்கு இங்கு நாம் வந்துள்ளோம்.
இவ்வாறு நாம் செய்வது முற்றிலும் பொருந்தும்,
முற்றிலும் தகும்.
எனினும், சற்று பரந்து சிந்திக்குமிடத்து,
இந்த மண்ணை எம்மால் நேர்ந்தளிக்க முடியாது - தூய்மைப்படுத்த முடியாது
- புனிதப்படுத்த முடியாது. எமது குறைந்த அதிகாரத்தைக் கொண்டு அத்தகைய தூய்மையைப் பெருக்குவதற்கோ
குறைப்பதற்கோ பெரிதும் இடங்கொடாவாறு, இங்கு விறலுடன் போராடி
மாண்டவர்களும் மீண்டவர்களும் இந்த நிலத்தை தூய்மைப்படுத்தியுள்ளார்கள். இங்கு நாம்
சொல்வதை உலகம் பெரிதும் கவனிக்கப் போவதில்லை; நெடுங்காலம் நினைவில் கொள்ளவும் போவதில்லை.
ஆனால் இவர்கள் இங்கு செய்ததை என்றுமே உலகத்தால் மறக்க முடியாது. இங்கு பொருதியோர் எவ்வளவோ
பெருமையுடன் முன்னகர்த்தி விட்டுச்சென்ற பணியை மேற்கொள்வதற்கு, உயிர்வாழும் நாங்களே
எங்களை அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. எம்முன் எஞ்சியுள்ள மகத்தான பணிக்கு நாங்களே எங்களை
அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. இறுதிவரை மாண்புடன் போராடி மாண்டவர்கள் தங்களை முற்றிலும்
பற்றுறுதியுடன் அர்ப்பணித்த குறிக்கோளுக்கு நாங்களே எங்களை அர்ப்பணிக்க வேண்டியுள்ளது.
இங்கு மாண்டவர்கள் வீணே மாண்டிருக்க மாட்டார்கள்
என்றும் – இறையாணைக்கு உட்பட்டு இந்த நாட்டில் புதிய சுதந்திரம் பிறக்கும் என்றும்
– மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் அரசாங்கம் உலகத்திலிருந்து அழிந்துவிடாது
என்றும் இங்கு நாம் உறுதி கூறுகின்றோம்.
______________________________________________________________________________
Abraham Lincoln, Gettysburg Address, November 19, 1863, translated by Mani Velupillai.
https://www.nationalgeographic.org/encyclopedia/gettysburg-address
No comments:
Post a Comment