காதரைக் காணவில்லை

        காதர்    காணாமல்போன    சங்கதி    உறுதியாய்    தெரிந்தபிறகு எல்லோரும் மனந்திறந்து கதைத்தார்கள்.

"காதர் காணாமல் போயிருக்கத் தேவையில்லை" என்றார் முபாரக் முதலாளி. “வீட்டோடை, தானும் தன்பாடுமாய், இருந்திருக்கலாம். கண்டபடி வெளிக்கிட்டு திரிஞ்சிருக்கக் கூடாது. காணாமல்போகும் அளவுக்கு அசண்டையாய் இருந்திருக்கக் கூடாது..." முதலாளி சற்று இடைநிறுத்தி, மூக்குப்பொடி போட்டார்.

உடனே "காதர் ஒரு வாயாடி" என்று துவங்கினார் காசிம் வாத்தியார்.  “வாயிருந்தால் வங்காளம் போவதை விட்டுவிட்டு காணாமல் போவதா? வாய்த்துடுக்கு கூடாது. கண்டபடி உளறிக் கொட்டப்படாது. பேசாமல் பறையாமல் உருப்படியாய் இருந்திருக்கலாம் எல்லோ…?”

முதலாளி திரும்பவும் ஏதோ சொல்ல வாயெடுப்பது போல் தெரிந்தது. வாத்தியார் பேச்சை நிறுத்தினார். முதலாளி ஒரு கொட்டாவியுடன் வாயை மூடினார். எட்டத்தில் நகைக்கடை வியாபாரியார் வருவது தெரிந்தது. முதலாளி மறுபக்கம் முகத்தை திருப்பினார். விரைந்து வந்த வியாபாரியார் முதலாளியை ஒருதடவை நோட்டமிட்டுவிட்டு அமர்ந்தார். அடுப்பில் அமர்ந்தவர் போல் அவர் கையோடு கிளம்ப அவசரப்படுவது போல் தெரிந்தது.

“கடையைத் திறந்தபடி விட்டுட்டு வந்தனீங்களோ, யாவாரியார்?” என்று கேட்டார் வாத்தியார். முதலாளியின் நமட்டுச்சிரிப்பு  அருகில் இருந்தவருக்கு கேட்டிருக்கும்.    

“கடைகள் என்ன பள்ளிக்கூட வகுப்புகளோ, வாத்தியார், திறந்தபடி விட்டுட்டு வர?” என்று வியாபாரியார் பதில்-கேள்வி கேட்க, முதலாளி திரும்பி வாத்தியாரைப் பார்த்தார்.

“சரி, சரி, யாவாரத்துக்கு கதவு-தாழ்ப்பாள் தேவைதான். கல்விக்குத் தேவையில்லை, யாவாரியார்…! இஞ்சை இப்படி எல்லாம் நடக்கும் எண்டு எப்ப எண்டாலும் நைச்சனீங்களோ?” வியாபாரியார் பதில் சொல்லாமல், கடைக்கண்ணால் முதலாளியைப் பார்த்துவிட்டு,  தலையைச் சொறிந்தார்.

“இந்த ஊரிலை இப்படி நடக்கும் எண்டு…” வாத்தியார் திரும்பவும் அருக்கூட்டினார்.

“இல்லை, வாத்தியார், நான் நைக்கேல்லை… எண்டாலும் காதர்…” என்று துவங்கிய வியாபாரியார், ஒருநொடி நிறுத்தி, திரும்பவும் முதலாளியை கடைக்கண்ணால் பார்த்துவிட்டு, சில பதில்-கேள்விகளை எழுப்பினார்: “… வயித்தை வாயைக் கட்டி வாழேலாதோ? கஞ்சி குடிச்சு காலம் தள்ளேலாதோ? வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டாமோ? செலவுக்கேற்ற வரவுக்கு ஆசைப்படலாமோ…?”

முதலாளி திரும்பி வியாபாரியாரைப் பார்த்தார்.  முதலாளியின் பார்வை தன்மீது விழுவது தெரிந்தும்கூட அதை எதிர்கொள்ளாமல் தொடர்ந்தார் வியாபாரியார்:  “சிக்கனம் வேணும். சிக்கனம் இல்லாதவர்கள் இப்படித்தான் சிக்குப்பட நேரும்…?”

“எப்படி?” என்று கேட்டார் முதலாளி, முகத்தை திருப்பாமலேயே. அவர் முகத்தில் வெளிப்பட்ட விசனம் மற்றவர்களுக்குத் தெரிந்திருக்காது.

“இல்லை… முதலாளி… நான் பொதுப்படையா சொல்லுறன்… சிக்கன சீவியம் எண்டது பத்திரமான சீவியம் எண்டுதான் சொல்ல வாறன். நான் தனிப்பட எவரையும் மனத்தில் வைச்சு அப்படிச் சொல்லேல்லை.”

“இது பொதுக்கூட்டம் இல்லை… காதர் ஒரு பாவி. அவன் ஆடம்பரமாய் வாழேல்லை.   சிக்கனமாய்த்தான் வாழ்ந்தவன். அது எல்லாருக்கும் தெரியும்…” சற்று இடைநிறுத்திய முதலாளி வெற்றிலைப் பொட்டலத்தை விரித்தார்.

அங்கிருந்து கழன்றுசெல்லும் வகை அறியாமல் திண்டாடிய வியாபாரியாருக்கு கைகொடுப்பது போல் வந்துசேர்ந்தான் தவ்பீக். அவன் வாய்க்குள் முணுமுணுத்தபடி அமர, எல்லோரும் காதைத் தீட்டி வைத்துக்கொண்டார்கள். அவன் முணுமுணுப்பு வீணிபோல் சிந்தியது: “முதலாளி… வாத்தியார்... யாவாரியார்… நான்... சொல்லிறன்... எண்டு... ஒருத்தரும்... குறை... நைக்கக்... கூடாது… காதர்... ஒரு... படிச்ச... பேயன்... பட்டம்… பெற்ற... முட்டாள்... படிக்காத... மேதைகள்... பலர்… இருக்கிற... இந்த... ஊரிலை...  படிச்ச... பேதைகள்… சிலர்…” 

தவ்பீக்கை முறைத்துப் பார்த்தார் முதலாளி. வாத்தியார் கீழே பார்த்தார். யாவாரியார் மேலே பார்த்தார். அப்பொழுது சிலர் கூட்டமாக வந்தார்கள். தவ்பீக் மெல்ல எழுந்து அப்பால் நகர்ந்தான். “தவ்பீக்!” என்று கூப்பிட்டபடி எழுந்த வியாபாரியார், அவனிடம் பேச்சுக் கொடுக்காமலேயே, அவனைக் கடந்து சென்றார். பிறகு அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே, “நமக்கேனடா வம்பு?” என்று கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திராமல் புறப்பட்டார்.

முதலாளியும் வாத்தியாரும் புதுக்க வந்தவர்களைத் தலையசைத்து வரவேற்று அமரச் செய்தார்கள்.  “நாங்கள் புத்தளக்காரர்… காதருக்கு தூரத்துச் சொந்தம்…” என்று அவர்களுள் ஒருவர் தெரிவித்தார். 

“புத்தளத்தில் மழை பெய்யுதா?” என்று வினவினார் முதலாளி. “ஓம்” என்பது போல் அவர்கள் தலையசைத்தார்கள். முதலாளி வாத்தியாரை ஒருதடவை பார்த்துவிட்டு திரும்பவும் ஒரு கொட்டாவியுடன் வேறு சிந்தனைக்கு மாறினார். 

குறிப்பறிந்தாலும் வாத்தியாருக்கு எதுவும் கதைக்கத் தோன்றவில்லை. கைகளை விரித்து, வானத்தைப் பார்த்துவிட்டு,  குனிந்து நிலத்தைப் பார்த்தபடி இருந்தார். அப்பால் நின்ற தவ்பீக் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டான். உடனே அவனை தனது பேசுபொருளாக மாற்றினார் வாத்தியார். அவனைச் சுட்டிக்காட்டி “தவ்பீக்… பள்ளிக்கூடத்தில் காதரோடு படிச்சவன்… மேல்படிப்பு படிக்கேல்லை, காதரைப் போல… கெட்டிக்காரன்…”

“உண்மையிலை காதர் ஒரு கெட்டிக்காரன்தான்!” என்றார் ஒரு புத்தளத்துச் சொந்தக்காரர். முதலாளி மெல்ல முகத்தை திருப்பி வாத்தியாரைப் பார்த்தார். 

“காதரைப் போல தவ்பீக் மேல்படிப்பு படிக்கேல்லை எண்டு சொல்ல வந்தேன்” என்றார் வாத்தியார்.

“காதர் மூண்டு மொழிகளும் சளரமா பேசுவான்!” என்றான் வந்தவர்களுள் ஒருவன்.

“சரளமா பேசுவான்” என்று திருத்தினார் வாத்தியார். 

“ஓம், வாத்தியார், சரளமா பேசுவான்” என்று அவன் தன்னைத் திருத்திக்கொண்டான்.  

“நிசாம்… வெளிநாட்டிலை இருந்து திரும்பி வந்திருக்கிறான், வாத்தியார்!” என்றார் அவனுடன் கூடவந்தவர்களில் ஒருவர். “இவன் காதரோடை பேராதனையில் படிச்சவன். பிரான்சுக்கு வெளிக்கிடேக்கை காதரையும் கூடவரும்படி கேட்டவன். நாட்டைவிட்டு வரமாட்டேன் எண்டு சொல்லி காதர் மறுத்துப் போட்டானாம்…”     

“காதர் விட்ட முதலாவது பிழை அது” என்றார் வாத்தியார். புத்தளவாசிகள் ஒருசேர வாத்தியாரைத் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களின் பார்வையை எதிர்கொள்ளும் வகை அறியாமல் முதலாளியைப் பார்த்தார் வாத்தியார். பதிலுக்கு வாத்தியாரைக் கடுப்புடன் பார்த்துவிட்டு ஒரு புகையிலை நறுக்கை எடுத்து கொடுப்புக்குள் வைத்தார் முதலாளி.

காதரில் பிழைபிடிக்க வாத்தியார் எத்தனிப்பது போலவும், அது கண்டு புத்தளவாசிகள் முகஞ்சுழிப்பது போலவும் தெரிந்தது. முதலாளி கதையை மாற்றத் தெண்டித்து, “தம்பி நிசாம், பிரான்சில் இப்ப பனி கொட்டுதோ?” என்று கேட்டார்.

“ஓம், முதலாளி. இப்ப அங்கை கடுங்குளிர்காலம். நான் விடுமுறையில் வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்.” 

“தம்பிக்கு அங்கை என்ன வேலை?”

“ஆதன முகவர்” என்று சொன்னான் நிசாம். வாத்தியாரைப் பார்த்தார்  முதலாளி. 

“ஆட்கள் வீடுவளவு வாங்க, விக்க கூடமாட நிண்டு அலுவல் பாக்கிற வேலை” என்று விளக்கமளித்தார் வாத்தியார். 

“ஓம், முதலாளி! வீடுவளவு கொள்வனவு விற்பனவுத்  தரகர்” என்றான் நிசாம்.

“எட, அங்கையும் எங்கடை சனம் வீடுவளவுகளோடை வாழுதுகளோ?”

“ஓம், முதலாளி! நான்கூட ஒரு வீடு வாங்கி வைச்சிருக்கிறன்.”

“அப்படியா? நல்லது, நல்லது…!” என்று சொல்லி முகத்தை திருப்பிக்கொண்டார் முதலாளி. அவருடைய புலன் வேறெங்கோ செல்வதுபோல் தெரிந்தது.

“தம்பி நிசாம், காதருடன் அடிக்கடி கதைப்பீர்களோ?” என்று கேட்டார் வாத்தியார்.   

“ஓம், வாத்தியார்! நாங்கள் அடிக்கடி கதைப்போம். காதருடன் நான் கடைசியா கதைக்கேக்கை பதவி விலகிவிட்டதாகச் சொன்னான். அது எனக்குப் பிடிக்கேல்லை. கடுந்தொனியில் கண்டித்தேன். பதவிக்குத் திரும்பும்படி வற்புறுத்தினேன். அவன் கேக்கேல்லை. உன்னைப்போல என்னையும் குறிக்கோள் இல்லாதவன் எண்டு நைச்சியோ எண்டு கேட்டான். எண்டாலும் நீ பதவி விலகியிருக்கக் கூடாது எண்டு நான் சொன்னேன்…”

“காதர் விட்ட இரண்டாவது பிழை அது” என்றார் வாத்தியார். 

“வாத்தியார்!” என்று கத்தினான் நிசாம். அவன் கண்கள் சிவந்து, கைகள் நடுங்கின. உறவினர்கள் நிசாமை உறுக்கினார்கள். முதலாளி எழுந்து வாத்தியாரை அப்பால் கூட்டிக்கொண்டு போனார்.

அங்கே தன்னந்தனியனாய் நின்ற தவ்பீக் “புத்தளக்காரங்கள் என்னவாம், வாத்தியார்?” என்று கேட்டான். வாத்தியார்மீது கொண்ட சீற்றத்தை தவ்பீக்மீது காட்டினார் முதலாளி: “பொத்தடா வாயை, மூதேவி! என்ன கதைக்கவேணும், எப்ப கதைக்கவேணும், எப்பிடிக் கதைக்கவேணும் எண்டு உங்கள் இரண்டு பேருக்கும் தெரியாது. உங்களுக்கிடையிலை எனக்கு வித்தியாசமே தெரியேல்லை… என்னடா சொன்னனீ, படிக்காத மேதை? காதர் ஒரு படிச்ச பேதையோ?” முலாளியின் அறை  ஒன்று கன்னத்தில் விழுந்ததும் திரும்பி ஓடினான் தவ்பீக்.

அது தனக்கும் விழுந்த அறை என்று வாத்தியார் எடுத்திருக்க வேண்டும். அவர் திரும்பிவந்து நிசாமின் கைகைளைப் பற்றி தனது கண்களில் ஒற்றினார். நிசாம் உள்ளம்நெகிழ்ந்து, எழுந்துநின்று, “குறை நைக்காதையுங்கோ, வாத்தியார்!” என்று கேட்டுக்கொண்டான். “நான் ஒரு பிறத்தியான்… இஞ்சை வந்து கத்தியிருக்கக் கூடாது… நான் உணர்ச்சிவசப்பட்டிருக்கக் கூடாது. மன்னிச்சுக் கொள்ளுங்கோ, வாத்தியார்!” அப்புறம் வாத்தியாரையும் இருத்தி, தானும் அமர்ந்துகொண்டான்.  தொடர்ந்துவந்த முதலாளி, வாத்தியாரும் நிசாமும் அமைதிகாப்பது கண்டு வேறேதோ யோசனைக்குத் தாவினார்.

“விதானையார் வாறார், முதலாளி!” என்றார் வாத்தியார். எல்லாரும் எழுந்து நின்றார்கள். விதானையாருக்கு வேறோர் இருக்கை கொண்டுவந்து போடப்பட்டது. அதை அவர் கவனிக்காதவர் போல் நின்றுகொண்டே பேச்சுக் கொடுத்தார். அப்புறம் மற்றவர்கள் நிற்பதை உணர்ந்துகொண்ட விதானையார் தனது இருக்கையில் அமர்ந்து எல்லோரையும் அமரவைத்தார்.  

“என்ன, முபாரக்? வெளியூர்க்காரர்கள் வந்திருப்பதுபோல் தெரிகிறதே!” என்றார் விதானையார். 

“ஓம், விதானையார்! காதரின் தூரத்துச் சொந்தக்காரர்கள்... இப்ப கொஞ்சம் முன்னம்தான் புத்தளத்திலிருந்து வந்திருக்கினம்…” என்றார் முதலாளி. 

“அப்ப நம்மவர்கள் தான்” என்றார் விதானையார்.

“ஓம், விதானையார்! சரியாய்ச் சொன்னீர்கள். நம்மவர்கள் தான்!” என்றார் வாத்தியார். நிசாமை சுட்டிக்க்காட்டி, “தம்பியின் பேர் நிசாம், விதானையார்! கிட்டடியில்தான் பிரான்சிலிருந்து வந்தவர்…”  

“அப்படியா? பிரான்சில் எங்கை தம்பி? லா சப்பலோ?”

“ஓம், விதானையார், லா சப்பல் தான். உங்களுக்கு அந்தப் பேர் தெரிஞ்சிருக்கே!”

“ஓம், தம்பி, நிசாம்! அங்கை என்ரை மகள் குடும்பம் இருக்குது. அவள் அங்கை நடன வகுப்பு நடத்துறாள்...”

“மங்கை அக்கா!”

“மங்கையர்க்கரசி... அட, அவளை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எல்லாரும் மங்கையர்க்கரசியை மங்கை ஆக்கிப்போட்டீர்கள்!” விதானையார் குறுநகை புரிந்தார்.

“என்ரை தங்கைச்சியும் மங்கை அக்காவின் மாணவிதான், விதானையார்!” என்றான் நிசாம். 

“ஓ, ஓ, இது ஒரு குட்டி உலகம், தம்பி… நாங்கள் ஒட்டி உறவாட வேணும்... கதையோடை கதை... என்ரை மருமேன் பிள்ளைகளுடன் வரப்போறார்…”

“கிறிஸ்தி அண்ணா!” என்றான் நிசாம். 

“அட, கிறிஸ்தோபரையும் நீங்கள் சுருக்கிப் போட்டீங்களோ? அங்கை இப்ப மகளுக்கு வகுப்புகள் இருக்கு. அவள் பிறகு வந்து, எல்லாரும் ஒண்டா திரும்பிப் போவினம்… காதரும் நிசாமும் கூடப் படிச்சனீங்களோ?”

“ஓம், விதானையார். பேராதனையிலை நாங்கள் ஒண்டாப் படிச்சனாங்கள். காதர் மொழியியல் படிக்க நான் வணிகவியல் படிச்சேன். இடையிலை நான் படிப்பைக் கைவிட்டு பிரான்சுக்கு போய்விட்டேன். காதர் மேற்கொண்டும் படிச்சுக் கொண்டிருந்தான். என்னோடை வரச்சொல்லி நான் காதரைக் கேட்டது உண்மைதான். அவன் வரமறுத்ததில் நியாயம் இருக்கு, விதானையார்…!” முதலாளி கடைக்கண்ணால் வாத்தியாரைப் பார்த்தார். 

 “நான் படிப்பை இடையில் முறிச்சது பிழை எண்டது பிரான்சில் கால்வைச்சவுடன் எனக்குப் புரிஞ்சுது. உடனே காதருடன் தொடர்புகொண்டு, நீ இஞ்சை வர மறுத்தது சரியான முடிவுதானடா! உங்கேயே தொடர்ந்து படிச்சு நல்ல பதவியில் அமரடா! எண்டு கேட்டுக்கொண்டேன். அவன் சொன்னான்: ‘சரியடா, நீ மனத்தை  தளரவிடாதை. மேல்நாடுகளில் வேலைவாய்ப்புக்குப் பஞ்சம் இல்லை. உன்னைப் பற்றி எனக்குத் தெரியுமடா!. நீ பெரிய சீமானாய் திரும்பி வருவாயடா…! ” தொண்டை அடைத்து, கண்கள் கலங்க. குனிந்து விம்மினான் நிசாம். விதானையார் எழுந்து அவனை அணுகி அரவணைத்து கும்பத்தில் தடவினார். 

முதலாளி எழுந்துபோய் காதரின் அயலவர்கள் சிலரிடம் ஏதோ சொல்லிவிட்டு திரும்பிவந்தார். ஒருதடவை திரும்பிப் பார்த்து, “வாழைப்பழத்தாருக்கு ஆளனுப்பி சாப்பாட்டோடை வரச்சொல்லடா!” என்று முதலாளி அறிவுறுத்தியது எல்லோருக்கும் கேட்டது.

ஒருசில நொடிகளில் சிறுமியர் சிலர் தேநீர்-தாம்பாளங்களுடன் வந்து பணிந்தார்கள். சிறுமியரின் சொக்கில் கிள்ளினார் விதானையார். நிசாம் பருகிய பிறகுதான் விதானையார், முதலாளி, வாத்தியார் உட்பட மற்றவர்கள் எல்லோரும் தேநீர் பருகினார்கள்.  

கொஞ்சம் பொறுத்து வாழைப்பழத்தார் ஒரு மூவுருளியில் சாப்பாடு கொண்டுவந்தார்.  “என்ன மொகிதீன், எப்பிடிச் சுகம்?” என்று குசலம் விசாரித்தார் விதானையார். அவர் வாழைப்பழத்தாரை “மொகிதீன்” என்று கூப்பிட்டுக் கதைத்த பிறகுதான், அவருடைய உண்மையான பெயர் மற்றவர்களின் நினைவுக்கு மீண்டது.  

“நல்ல சுகம், விதானையார்! உங்களைப் பாத்தாலே தெரியுது, நீங்களும் நல்ல சுகமாய் இருக்கிறீங்கள் எண்டு… முதலாளி, விதானையாரும் எங்களோடை சாப்பிட்டால்தான் எனக்குச் சமிக்கும்!”   

விதானையார் சிரிப்பை அடக்கிக்கொண்டார். “ஓம், விதானையார், எங்களோடை நீங்கள் சாப்பிடவேணும்!” என்று வேண்டிக்கொண்டு எழுந்தார் முதலாளி. வாழைப்பழத்தார் ஓடிப்போய் ஒரு தண்ணீர்ச் செம்பைக் கொண்டுவந்து முதலாளியின் கையில் வைத்தார். முதலாளி அதை ஏந்தி விதானையாரிடம் நீட்டினார்.  

செம்பை வாங்கிய விதானையார் “ஓம், அதுக்கென்ன, எல்லாரும் ஒண்டா சாப்பிடுவம்… இந்தா முபாரக், காசிம், நிசாம்… எல்லாரும் செம்பைக் கைமாறுங்கோ!”

நிசாம் எழுந்து விதானையாரை விளித்து, “நல்லது, விதானையார்! சாப்பிடுவம்” என்று சொல்லி வாத்தியாரிடமிருந்து செம்பை வாங்கிக்கொண்டான்.

“சாப்பாட்டை பரிமாறு, மொகிதீன்!” என்று பணித்தார் விதானையார். “தோப்புக்குள்ளே இளவட்டங்கள் கூடியிருக்கிற மாதிரித் தெரியுதே!”

“ஓம், விதானையார்…! அவங்களுக்கும் சாப்பாடு குடுத்தனுப்பு, வாழைப்பழத்தார்!” என்று அறிவுறுத்தினார் முதலாளி.  

தென்னந்தோப்பில் பேச்சுச் சுதந்திரம் நூறு விழுக்காடு  பேணப்பட்டது. ஆள்மாறி ஒளிவுமறைவின்றிப் பேசினார்கள். சொற்கள் தங்குதடையின்றிக் கொட்டுப்பட்டன:

“…காதர் காக்கா வெறுமனே ஒரு புத்தகப்பூச்சி. விவேகம் இல்லை. கெட்டித்தனம் பத்தாது. அனுபவஞானம் கிடையாது. அவர் மெத்த நல்லவர்தான், ஆனால் படுமுட்டாள்…”

“… போகட்டும்… ஒழுங்கா முடிவெட்டி, சவரஞ்செய்து, உடுத்துப் படுத்து, அலைபேசியும் கையுமாய் காரோடித் திரிஞ்சவரோ? சும்மா, அறப்படிச்சு கூழ்ப்பானைக்குள் விழுந்ததை தவிர வேறை என்னத்தைச் சாதிச்சவர்?...”

 “… பட்டதாரியாய் ஊருக்குத் திரும்பிவந்து, மாங்காயை வைக்கலுக்குள் புதைச்சு,  பிலாக்காய்க்கு பன்னங்கட்டை ஏத்தி, வாழைக்குலைக்கு புகைப்போட்டு… முக்கனிகளையும் திண்டு தள்ளினது தான் மிச்சம்…!”

“…தனது சொந்த வளவுக் காணியின் நீள அகலம் அவருக்குத் தெரியாது. இந்த ஊரிலை இப்ப ஒரு பரப்புக் காணி என்ன விலை போகுது எண்டு கேட்டால், எனக்குச் சரிவரத் தெரியாது, தவ்பீக்கை கேட்டுச் சொல்லுறன் எண்டு சொல்லுவார்…”

“… தன் தரவழிகளோடை கூடித்திரியிறதை விட்டுட்டு வயசுகுறைஞ்ச ஆக்களோடை கூடித்திரிவார். அவங்களோடை சீட்டு விளையாடுவார். ஒருக்கால் சீட்டாட்டத்தில் இவர் வெண்டவுடன், இவர் கட்டியிருந்த கைலியை ஒரு பொடியன் பிடிச்சு இழுத்து விழுத்திவிட்டான். இவர் பிறந்த மேனியோடை நிண்டு பதறினார். அதைவிடப் பெரிய மானக்கேடு இருக்கோ…?”

“…பள்ளிக்கூடம் போகாத பலர் மாகாணமன்ற, நாடாளுமன்ற அங்கத்தவர்களாக… அமைச்சர்களாக… ஓங்குவதைச் சுட்டிக்காட்டினால், அதிலென்ன தப்பு? தமிழ் அல்லது சிங்களம் பேச, எழுத, வாசிக்கத் தெரிஞ்சால் எவரும் தேர்தலில் நிக்கலாம் எண்டுதானே சட்டம் சொல்லுது எண்டு பதில் சொல்லிவிட்டுப் போய்விடுவார். அது தன்னைச் சீண்டுவதற்காகச் சொல்லப்பட்டது எண்டது அவருக்குப் புரிவதில்லை…”

“… நாலாம் வகுப்பு படிச்ச உபயத்துல்லா ஒரு சின்னப்பொடியன். ஆனால் அவன் பெரிய காசுக்காரன். இருவத்தைஞ்சு சுமையூர்திகள் வைச்சிருக்கிறான். அவன்ரை வீட்டைப் பாருங்கோ! பளிங்குத்தகடு பதிச்ச மாளிகை! அவன்ரை வளவுக்குள்அடிவைக்க  கால் கூசும். காதர் காக்காவின் வளவுக்குள்ளே நாயும், பூனையும், கோழியும் கழிச்சுத் தள்ளியிருக்கும். அங்கையும் கால்வைக்க கூசும்தான்…!

“… தன்னுடன் கூடப்படிச்ச அப்துல் தாகிர் கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தில் விண்ணியல் பேராசிரியராகிவிட்டாரே எண்டு சொன்னால், அப்படியா? எனக்கு அப்பவே தெரியும் அவன் ஒரு விண்ணன் எண்டு சொல்லிவிட்டு, எங்கையடா தம்பி இப்ப போய் இளனி பிடுங்கிக் குடிக்கலாம்? எண்டு கேட்பார்…”

“காதர் காக்கா அப்பிடி என்னத்தைப் படிச்சுக் கிழிச்சவர்? வெறும் தமிழ் விரிவுரையாளர்… இம்மி சம்பளம் எடுத்தவர். இவற்றை ஓராண்டுச் சம்பளம் பேராசிரியர் தாகிரின் ஒரு கிழமைச் சம்பளத்தைவிடவும் குறைவு…?”

“… மாப்பிளையை விடத் தோழனுக்கு வயசு குறைவாய் இருக்கவேணும் எல்லோ? தனது ஒண்டைவிட்ட தங்கைச்சியின் கலியாண வீட்டில் இவர் தோழனுக்கு நிண்டது எவ்வளவு கேவலம்? தவ்பீக் காக்கா பின்பாட்டாலை மணமேடைக்குப் போய் இவற்றை தலைப்பாவிலை ஒரு கைலேஞ்சியைச் செருகிவிட்டார்.  அதைப் பாத்து நாங்கள் அவரை ஏளனம்பண்ணிச் சிரிச்சது அவருக்குத் தெரியாது…”  

“… ஒருக்கா தவ்பீக் காக்காவும் மச்சியும் இவரை விருந்துக்கு அழைச்சவை. அவை சமைச்சு வைச்சுக் காவல் இருந்தவை. இவர் வேறை ஏதோ பிராக்கில் அதை மறந்துபோனார். அவை வீடுதேடிப் போனவை. இவர் நித்திரையாய் கிடந்தவர். அவை இவரைத் தட்டியெழுப்பி, தாங்கள் வந்த சங்கதியைச் சொன்னவை. ஐயோ நான் சாப்பிட்டுவிட்டேனே! குறைவிளங்க வேண்டாம், நாளைக்கு வந்து சாப்பிடுறன் எண்டார்...”

“… அப்ப இண்டைக்கு நாங்கள் சமைச்ச சாப்பாட்டை நாய்க்கு வைக்கிறதோ எண்டு மச்சி கேட்டவ. இல்லை, இண்டைக்கு நாய்க்கு வைக்க வேண்டாம். நாளைக்கும் நான் வராவிட்டால், நாய்க்கு வையுங்கோ எண்டு சொன்னவர். அடுத்தநாள் நாய்க்கு வைக்கச்சொன்ன அதே சாப்பாட்டை, தானே போய்ச் சாப்பிட்டவர்…”    

“…வீடுதேடி வாறவைக்கெல்லாம் படிவங்கள் நிரப்பிக் குடுக்கவும், கடிதங்கள் எழுதிக் குடுக்கவும், ஆட்களுடன் கூடமாட கந்தோர்களுக்குப் போய் அலுவல் பாத்துக் குடுக்கவும் தெரிஞ்சால் மட்டும் போதுமா எண்டு ஆராவது கேட்டால், அந்த உதவிகளை வேறை ஆரும் செய்தால் நான் கைவிட்டுவிடுகிறேன் எண்டு சொல்லுவார்…”

“… எந்திரன், சந்திரன் எண்டு எத்தனை திறமான படங்கள் வெளிவருகுது. மெளன ராகங்கள் போல எவ்வளவு சோக்கான நாடகங்கள் போகுது. சூப்பர் சிங்கர், பிக் பாக்ஸ்,  அது இது எது… எண்டு எவ்வளவு அருமையான நிகழ்ச்சிகளை நாங்கள் சுவைச்சுப் பாக்கிறம்?  அவருக்கு அதெல்லாம் தெரியாது. அந்தச் சுவையும் தெரியாது. ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது…”

“…தானொரு பெரியாள் எண்டும் நாங்கள் எல்லாம் சின்னாக்கள் எண்டும் இவருக்கொரு நைப்பு. சும்மா தமிழைப் படிச்சுப் போட்டு… அங்கினேக்கை கொஞ்ச இங்கிலிசும் தெரியுமாக்கும்… அதை வைச்சுக் கிலுக்கித் திரிஞ்சவர். சில வெங்காயங்கள் தங்களுக்கு தெரியாததை இவரட்டை கேட்டறிஞ்சுபோட்டு இவரைத் தூக்கிப் பிடிச்சது எனக்குத் தெரியும். வெங்காயங்களைத் தவிர வேறை ஆர் இவரைத் தூக்கிப் பிடிச்சது…?

“…இவர் ஊர்த்தொண்டு எண்டு சொல்லிக்கொண்டு வீட்டைவிட்டு வெளிக்கிட்டுவிடுவார். அப்பிடி எண்டால் ஏன் கலியாணம் கட்டினவர்? ஏன் பிள்ளைப் பெத்தவர்? ஒரு மனுசன் முதலாவது தன்னைப் பாக்கவேணும். அடுத்தது தன்ரை குடும்பத்தைப் பாக்கவேணும். பிறகெல்லோ ஊரைப் பாக்கவேணும்! இவரைக் கண்டால் எங்கடை பெண்டுகள் எழும்பி நிப்பினம்…!”   

“… ஒரு சபையிலோ மேடையிலோ அளந்து பேசத்தெரியாது. மூண்டு நிமிசம் பேசச் சொன்னல், முப்பது நிமிசம் பேசுவார். முப்பது நிமிசம் பேசச் சொன்னால் மூண்டு நிமிசம் பேசுவார்… இவர் பங்குபற்றின வானொலி நிகழ்ச்சியிலிருந்து இவரை ஏன் தட்டினவங்கள் தெரியுமோ? இவர் வேறை ஆட்களின்ரை பேச்சிலும் எழுத்திலும் பிழை பிடிக்கிறதை விட்டுப்போட்டு, அந்த நிகழ்ச்சி நடத்திறவங்களின்ரை பேச்சிலும் எழுத்திலும் பிழைபிடிச்சா அவங்கள் விடுவங்களோ?

“… இவர் ஒரு புத்தகம் வெளியிட்டவர். பத்துப்பேர் மட்டில் கலந்து கொண்டவை. எட்டுப்பேர் சொந்தக்காரர்கள். ஒருவர் பிறத்தி ஆள். மற்றது இவர்! அந்தப் பிறத்தி ஆளிடம் இருவத்தைஞ்சு பிரதிகளைக் குடுத்து, வித்துத்தரச்சொல்லி மண்டாடினவர். சும்மா விடுப்புப் பாக்க வந்த அந்த ஆள் புத்தகக்கட்டை வாங்கிக்கொண்டு போய்விட்டார். அதுக்குப் பிறகு இரண்டுபேரும் வாழ்நாளிலை சந்திக்கேல்லை…”

“… இவர் இணையத்தளம் ஒண்டு வைச்சிருந்தவர். பிறகு அதை விட்டிட்டார்.  நான் அதைப் பாத்திருக்கிறன். இவற்றை வண்டவாளங்கள் அதிலை கிடக்குது. நூற்றுச் சொச்சத் தடவைகள் அது பார்க்கப்பட்டிருக்குது. இதிலை வேடிக்கை என்னெண்டால், இவர் மட்டும்தான் அதை திரும்பத் திரும்ப பார்த்த ஒரே ஆள். அதை நூறு தடவைகள் அவரே பார்த்திருப்பார்…”   

“… இவரை ஒருக்கா ஆமி பிடிச்சுக்கொண்டு போய் பூசாவில் அடைச்சு வைச்சது தெரியுமோ? இவற்றை வயதென்ன? படிப்பென்ன? தொழிலென்ன? குடும்பமென்ன? இவர் ஏன் பிடிபட வேணும்? எங்களைப் பிடிக்காத ஆமி இவரை ஏன் பிடிக்கவேணும்?”

“அவங்களோடை இவர் ஒண்டில் செந்தமிழ் கதைச்சு செம அடி வாங்கியிருப்பார், அல்லது சிங்களம் கதைச்சு சிக்குப்பட்டிருப்பார், அல்லது இளிச்சவாய்த்தனமாய் இங்கிலீசு பேசியிருப்பார், அல்லது…”

“… கூடப் படிச்சவங்கள் பெரிய வீடுவளவுகளோடை, குழந்தை குட்டிகளோடை, சொத்து சுகங்களோடை சொகுசாய் இருக்கிறாங்கள். இவர் ஏன் சுடுதண்ணி ஊத்துப்பட்ட நாய் மாதிரி குறுக்க மறுக்க ஓடித்திரிஞ்சவர்?  வேறை வேலை எடுக்காமல் ஏன் உள்ள வேலையை விடவேணும்?  ஏன் தெருவழிய திரியவேணும்? ஏன் காணாமல் போகவேணும்…?”

அப்பொழுது சாப்பாட்டுக் கும்பாக்களுடன் வந்து புகுந்தார் வாழைப்பழத்தார். “இந்தாங்கோ, தம்பியவை, பசியாறுங்கோ! முதலாளியின் உபயம்!” என்று சொல்லிவிட்டு வெளியேறினார். அவர் பின்னே விரைந்த இளைஞர்களில் ஒருவன் “எங்கள் சார்பில் முதலாளிக்கு நன்றி சொல்லுங்கோ, வாழைப்பழத்தார்!” என்று கேட்டுக்கொண்டான்.

 அவன் திரும்பிவந்து சொன்னான்: “இதுவரை நீங்கள் சொன்னதை எல்லாம் ஒரே சொல்லில் புரட்டணியம் எண்டு சொல்லலாம். அதுக்கு மேற்கொண்டு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை.  புரட்டணியம் ஒருபுறம் இருக்கட்டும். காதர் காக்காவுக்கு மறுபுறம் எண்டு ஒண்டு இல்லையோ? நாங்கள் மெச்சும்படியாக அவர் ஒண்டும் செய்யவில்லையோ?”

ஒருவன் எழுந்துபோய் தண்ணீர் கொண்டுவந்தான். சிலர் சாப்பாடு பரிமாறத் துவங்கினார்கள். பலர் சாப்பிடத் தயாரானார்கள். “எதையாவது குறிச்சு காதர் காக்காவை மெச்சும் எண்ணம் எங்களில் எவருக்கும் இல்லையோ?” அவன் திரும்பவும் வினவினான். அவர்கள் சாப்பிடத் துவங்கினார்கள். தனது சாப்பாட்டை அவன் பார்த்தான். அதை ஈக்கள் மொய்க்கத் தருணம் பார்ப்பதுபோல் தெரிந்தது. “எனது சாப்பாடு இலையான்களுக்கு!” என்று சொல்லியபடி சீறியெழுந்தான்.

“எடேய், அப்துல், இரடா! அப்துல், இஞ்சை வாடா! எட, இரடா, மச்சான்! அப்துல், முதல்லை சாப்பிடடா! பிறகு கதைப்பமடா! எட, இரடா! எட, சாப்பிடடா! நாங்கள் கூடக்குறையக் கதைச்சிருப்பமடா, அப்துல்! குறைநைக்காமல் சாப்பிடடா! எடேய், அப்துல், எடேய்…!” சிலர் அவனைப் பிடித்து இழுத்தார்கள். அவன் அவர்களை இடறித்தள்ளினான்.

அப்துல் தோப்பை விட்டு வெளியேறுந் தறுவாயில் ஒரேயொரு பதில்-கேள்வி கேட்டான்: “காதர் காக்கா காணாமல் போனதுக்கு அவர்மீதே பழிசுமத்துவது நியாயமா?”

___________

2019-11-12

No comments:

Post a Comment