தனியாளாட்சி

 இலங்கையில் ஓங்கும் தனியாளாட்சியும் இலங்கையர் பட்டறிந்த வரலாறும் 



லயனல் பொபகே


எஸ். பி. ஹன்டிங்டன்


“குடியாட்சி விழுமியங்களைப் பேணுவதற்கு ஆளும் மேட்டிமைக் குழாம் உறுதிபூணாவிட்டால், அதே விழுமியங்களுக்கமைய சுமுகமான முறையில் இடம்பெறவேண்டிய ஆட்சிமாறும் படிமுறையும் பாதிக்கப்படும்” என்கிறார் எஸ். பி. ஹன்டிங்டன் என்னும் அமெரிக்க அரசறிஞர்.     


“அரசியல் தலைவர்கள் ஆட்சியதிகாரம் அற்றிருக்கும் காலத்தில் அவர்கள் குடியாட்சி விழுமியங்களை ஆதரிக்க நியாயமுண்டு. ஆனாலும் அவர்கள் குடியாட்சி விழுமியங்களைப் பேணுவதற்கு உறுதிபூண்டவர்களா என்பது அப்பொழுது தெரியவராது. மாறாக, அவர்கள் ஆட்சியதிகாரம் எய்திய பின்னரே, அவர்கள் குடியாட்சி விழுமியங்களைப் பேணுவதற்கு உறுதிபூண்டவர்களா என்பது தெரியவரும்” என்றும் அவர் எச்சரிக்கிறார். 


தனியாட்சியாளரின் குணாம்சங்கள்


தற்பொழுது பெரிய நாடுகள் பலவற்றை ஆளும் தலைவர்கள் பலரிடம் தனியாளாட்சிக்கான குணாம்சங்கள் தெரிகின்றன. அவர்கள் ஒத்த குணாம்சங்களும், குறைகளும் கொண்டவர்கள். ஏற்கெனவே தோல்வியடைந்த மற்றும்பிற தலைவர்களிடம் காணப்பட்ட அதே குணாம்சங்களே இவர்களிடமும் காணப்படுகின்றன.  அவற்றை நாம் முன்கூட்டியே கண்டுகொள்ளலாம்! 


ஏனைய தரப்புகளின் பங்களிப்பைத் தணித்து அல்லது தவிர்த்து முடிவெடுப்பவர்களே தனியாட்சியாளர்கள். தத்தம் துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் அவர்கள் கலந்துசாவுவது அரிது. ஓர் ஆள் என்ற வகையில் அல்லது ஒரு குடும்பத்தை அல்லது குலத்தை அல்லது கட்சியைச் சேர்ந்தவர் என்ற வகையில் நாட்டுக்கான முடிபுகள் அனைத்தையும் தான்தோன்றித்தனமாக எடுப்பவர் அவரே!


உலகில் அரைவாசிப்பேர் வாழும் நாடுகளில் அரசியற் சிறைவாசமும் காட்டுமிராண்டித்தனமும் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. கருத்து வேறுபாட்டை முடக்குவதற்கு பலவந்தமும் வன்முறையும் பயன்படுத்தப்படுகின்றன. கொடிய சித்திரவதை, பகிரங்க மரண தண்டனை, காணாமல் போக்கடிப்பு மூலம் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். 


எதேச்சாதிகார அரசுகள் இகழ்ச்சிக்குள்ளாகும் வேளையில், அவை மக்களை அச்சுறுத்தி மாற்றுக்கருத்தை முடக்கி வருகின்றன. மக்கள் தமக்கெதிராக அணிதிரளாவாறு தடுத்து வருகின்றன. 


ஹிட்லர் (ஜேர்மனி), முசோலினி (இத்தாலி), இடி அமின் (உகண்டா), பொல் பொட் (கம்போடியா) ஆகியோர் தனியாட்சியாளர்களுக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டுகள்! நான்கு குணாம்சங்கள் இவர்களுக்குப் பொதுவானவை:


  1. முக்கிய முடிபுகள் முழுவதையும் எடுக்கும் வல்லமை

  2. செயல்களை நிறைவேற்றுவதில் மிகுந்த கரிசனை 

  3. அடிவருடிகளை பெரிதும் எட்டத்தில் வைத்திருக்கும் வல்லமை 

  4. அடிவருடிகளுக்கு வெகுமதி அளிப்பதை விடுத்து அவர்களை அச்சுறுத்தி, தண்டித்து உந்தும் வல்லமை


உறுதியுணர்வு குன்றும் வேளைகள்


மக்களிடையே நாட்டைக் குறித்து உறுதியுணர்வு குன்றும் வேளையில் தனியாட்சியாளர்களுக்கு ஆதரவு மேலோங்கும். 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் அதை உணர்த்துகிறது. 2020ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட கரணம் அதுவே. உறுதியுணர்வு குன்றும் வேளைகளில் வல்லமையுடன் அதிகாரிகளைப் பணித்து, தெட்டத்தெளிவாக நெறிப்படுத்தும் தனியட்சியளர்களையே மக்கள் நாடுவார்கள்.  தனியாட்சியாளர் பிறரிடம் உசாவாது, துரித முடிபுகள் எடுத்து, காலக்கெடு கொடுத்து, உரிய வேளையில் அலுவலை நிறைவேற்ற வல்லவர் என்று மக்கள் நம்புகிறார்கள். 


அதிகார துர்ப்பிரயோகம்


எனினும் வல்லமை மிகுந்த ஒருவர் அல்லது குடும்பத்தவர் அல்லது குலத்தவர் தமது அதிகாரங்களை பெரிதும் துர்ப்பிரயோகம் செய்வார். மக்களிடையே காழ்ப்பையும் முரண்பாட்டையும் ஏற்படுத்துவார். அதனால் அரசுக்கும் சமூகத்துக்கும் இடையே இடைவெளி விழும். புதுமை படைக்கும் சமூகத்தின் திறனும் வல்லமையும் முடங்கும். இளைஞரும் புலமையாளரும் ஒதுக்கப்பட்ட உணர்வுடன் உளம்முறிந்து  தனியாளாட்சியை எதிர்க்கத் தலைப்படுவர். ஆட்சிமாற்றம் நாடிக் கலகம் புரிவர். 


சமூகவிரோத ஆளுமைக் கோளாறு


உலகில் உள்நாட்டுப் பகைமைகளும், முரண்பாடுகளும், மோதல்களும், போர்களும் நீடிப்பதற்கு, முன்னைய அரசுகள் தீர்க்கத் தவறிய பிரச்சனைகளே காரணம். முன்னைய அரசில் மக்களுக்கு நம்பிக்கை குன்றினால், அந்த இடைவெளியை நிரப்ப தன்னலமிகளும், கயவர்களும், அவர்களது குடும்பத்தவர்களும்  முண்டியடிப்பார்கள். 


தனியாட்சியாளர்கள் உளத்திட்பம் வாய்ந்தவர்கள அல்லர். உரிய காலத்தில் பிரச்சனைகளைப் பேசித்தீர்க்கும் முறைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்கள் மக்களை பகைமைக்கும், முரண்பாட்டுக்கும், போருக்கும் இட்டுச்செல்லுகிறார்கள். ஜெயவர்த்தனா, விஜேவீரா, பிரபாகரன் மூவருக்கும் தெரிந்த பேச்சுவார்த்தை என்ன்வெனில், வன்முறை கொண்டு எதிர்த்தரப்பை அடக்குவதே! இன்றைய உலகில் அத்தகைய தனியாட்சியாளர்கள் மேலோங்கி, சமூகத்தைக் கட்டியாள வாய்ப்புகள் மேன்மேலும் கனிந்து வருகின்றன. 


தனியாட்சியாளர்கள் அறிதிறனும், உணர்வெழுச்சியும், சிந்தனை விருத்தியும்  குன்றியவர்கள். பரிவும்,  புரிவும், அன்பும், மனச்சாட்சியும் அற்றவர்கள். ஆட்சியதிகாரம் எய்தியவுடன் பரிவு, புரிவு, அன்பு, மனச்சாட்சி எதுவுமின்றி முடிபுகளை எடுத்து பிரச்சனைகளை ஊட்டி வளர்ப்பவர்கள். அதற்கெல்லாம் அவர்களின் சமூகவிரோத ஆளுமைக் கோளாறே காரணம். 


தாய்லாந்து


தனியாட்சியாளரின் தன்மையைப் பொறுத்து ஊழல் கூடிக்குறையும். “அதிகாரம் ஊழலுக்கு இட்டுச்செல்லும். முழு அதிகாரம் முழு ஊழலுக்கு இட்டுச்செல்லும்.” பெருந்தலைவர்கள் பெரிதும் இழிந்தவர்கள். தாய்லாந்தில் பேராதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றிய படைக்குழாம் தற்பொழுது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டு வருகிறது. ஊழலை ஒழிக்கவும், வாழ்க்கைச் செலவைத் தணிக்கவும், போதைமருந்துக் கடத்தலை முறியடிக்கவும் ஆட்சியாளர் தவறியதே அதற்கான காரணம்.   


பிலிப்பைன்சு


பிலிப்பைன்சில் பலர் அநீதியான முறையில் கொல்லப்பட்டும், அரசியல் எதிரிகள் மிரட்டப்பட்டும் வருகிறார்கள். எனினும் அதிபர் துவர்த்தேயின் ஆதரவு உச்சத்தில் இருக்கிறது. பெருகிவந்த குற்றச்செயல்களை ஒழிப்பதிலும், போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதிலும், ஊழலைக் குறைப்பதிலும், கீழ்க்கட்டுமானத்தை மேற்கொள்வதிலும் அவர் வெற்றிபெற்றதாக எண்ணப்படுவதே அதற்கான காரணம். 


சீனா


சீன அதிபர் சி-யின்பிங் ஊழல்-ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சீன  மேட்டிமைக் குழாத்தின் உட்போட்டியையும், எதிர்ப்பாளர்களைக் களையெடுக்கும் அலுவலையும் மூடிமறைக்கவே அவர் மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ் சாட்டப்படுகிறது. 


சேர்பியா


சோவியத் பேரரசு குலைந்து, யூகோசிலாவியாவில் எஞ்சிய புலமாகிய சேர்பியாவின் அதிபர் சுலோபொடன் மிலோசிவிக் தனது முன்னைய பொதுவுடைமைக் கருத்தியலைக் கைவிட்டு, சேர்பிய தேசியவாதத்தை முன்னெடுத்தார். அவரது தனியாளாட்சிக்கு சேர்பிய தேசியவாதம் தேவைப்பட்டது. சேர்பிய உள்நாட்டுப் போர் 5 ஆண்டுகள் நீடித்தது. சேர்பியாமீது தடையாணைகள் விதிக்கப்பட்டன. பொருளாதாரம் நொடித்தது. குற்றச்செயல்கள் பெருகின. 


பொஸ்னியா, ஹெர்சகோவினா, குரோசியா என்பவற்றில் நிகழ்ந்த போரில் சேர்பிய படையினரும், துணைப்படையினரும் பங்குபற்றி போர்க்குற்றம் புரிந்து, கொள்ளை இலாபம் சம்பாதித்தனர். அங்கெல்லாம் பலர் விசாரிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். சேர்பியா திரும்பிய சிலர் விசாரிக்கப்பட்டார்கள். சிலர் வேறு குற்றவாளிகளால் கொல்லப்பட்டனர். பல குற்றவாளிகள் “போர்மறவர்கள்” என்று ஏற்றிப்போற்றப்பட்டார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அங்கு குற்றம் புரிவதே விதி; குற்றம் புரியாமை விதிவிலக்கு! குற்றவாளிகள் தம்மை போர்மறவர்கள் என்று விளம்பினார்கள். தமது குற்றங்களை தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எனவும், தேசிய நலன்கள் எனவும் சித்தரித்தார்கள்.  ஆட்சியாளருடன் ஊடாடி, போரைச் சாட்டி, சூறையாடிய தரப்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. 


இலங்கை


ஆணையும் பெண்ணையும் மறுதலையாக மாற்றுவதை தவிர மற்றவை அனைத்தையும் தன்னால் செய்யமுடியும் என்று ஜே. ஆர். ஜெயவர்த்தனா புளுகியதுண்டு. 1978ல் கடூரமான முறையில் கொடிய சட்டமியற்றி, அதை ஆயுதமாக ஏந்தி, நாடாளுமன்றத்தைக் கருவறுத்து, நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் அதிகாரத்துக்கும் சுங்கம் வைத்த முன்னோடி அவர். அத்தகைய நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கச் சூளுரைத்த அனைவரும் ஆட்சியதிகாரம் எய்திய பின்னர் அதையே முற்றுமுழுதாகப் பயன்படுத்திக் கொண்டனர். பயன்படுத்தியும் கூட 1978 முதல் பல்லாண்டுகளாக நிகழ்த்தப்பட்ட களேவரத்தையும் அழிவையும் மேற்படி தனியாட்சியாளர்களுள் எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை! 


1978 முதல் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் “அக்கறை முரண்பாடு” என்ற முறைமீறலையும் பொருட்படுத்தாமல் அப்பட்டமாகவே அரசாங்கத்துடன் பேரம்பேசி வியாபாரம் புரிந்து வந்துள்ளார்கள். இலங்கையில் ஊழல் உச்சத்தை தொட்டுவிட்டதாகத் தெரிகிறது. உச்சத்தில் வீற்றிருப்பவர்கள் அரசாங்க வாளங்களைச் சூறையாடி வருகிறார்கள். 1978ல் புகுத்தப்பட்ட மாற்றங்களால் சூறை வலுப்பெற்று வந்துள்ளது. 


நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு எதுவித தீர்வையும் முன்வைகாமலேயே புதிய தரப்பு மிகுந்த பெரும்பான்மையுடன் ஆட்சியதிகாரம் எய்தியமை ஒரு முரண்புதிராகும்.  முதலில் ஆட்சியைக் கைப்பற்றுவது, பிறகு நயத்தாலோ பயத்தாலோ அதை நிலைநிறுத்துவது! இதில்தான் அவர்கள் புலனைச் செலுத்தினார்கள். நாட்டைப் பாதுகாத்தல், பெரும்பான்மைவாதத்தைக் கடைப்பிடித்தல்,, தமிழ்-முஸ்லீம் குடியேறிகள் எனப்படுவோரிடமிருந்து சிங்கள-பெளத்தரின் நலன்களைப் பாதுகாத்தல் பற்றி எல்லாம் தேர்தல் பிரசார மேடைகளில் பேசப்பட்டது. வாக்காளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் மிகுந்த திறனுடன், மிகுந்த வேகத்தில், உகந்த நடவடிக்கை மூலம் தீர்க்கும் ஆற்றல் படைத்த எல்லாம்வல்ல படையாள்மீது நம்பிக்கை வைக்கும்படி அவர்கள் ஏவப்பட்டார்கள். எனினும் பிரச்சனைக்கான தீர்வை இன்னுமே ஆட்சியாளர் முன் வைக்கவில்லை.


அரசியல்யாப்பும் சட்டமும்


1948 முதல் இயற்றப்பட்ட அரசியல்யாப்புகள் மக்களின் பங்களிப்புடன் வரையப்பட்டவை அல்ல; யாப்பையும் சட்டத்தையும் மதிக்காதவர்களால் வரையப்பட்டவை. யாப்பையும் சட்டத்தையும் வரைந்தவர்களே அவற்றை மீறிவந்துள்ளார்கள். மலையக மக்களின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டமை அதற்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு. 1953ல் வேலைநிறுத்தம் நிகழ்ந்த வேளையில் அரசின் இசைவுடன் புரியப்பட்ட கொலைகள், 50, 60, 70களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், 1983 ஆடிப்படுகொலை, 1985 முதல் இடம்பெற்ற தடுப்புக்காவல் கைதிகளின் கொலைகள், 30 ஆண்டுகளாக பிரிவினைப் போராட்டம் நிகழ்ந்த வேளையில் புரியப்பட்ட கொலைகள், 1971 முதல் அண்மைக்காலம் வரை நிகழ்த்தப்பட்ட காணாமல் போக்கடிப்புகள்...   விசாரிக்கப்பட்டதில்லை.  


அரசியல்யாப்புக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தன்வசம் வைத்துக்கொண்டார். குடும்பத்துக்கும், குலத்துக்கும், தனியாளாட்சிக்கும் சார்பானவர்களுக்கு பேறுகளும் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. குறைகாண்பவர்கள் மீது போலிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. 1948 முதல் இற்றைவரை இத்தகைய நிலைவரமே தொடர்ந்து வந்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதிகள் முற்றுமுழுதாகவே அதிகாரத்தைக் கையாண்டு வந்துள்ளார்கள். சட்டத்தையும் யாப்பையும் அவர்கள் பொருட்படுத்தியது கிடையாது. உலக வரலாறும் இதையே உணர்த்துகிறது. 


பேராசையும் அதிகாரவெறியும் கொண்ட ஆட்சியாளரையும் அடிவருடிகளையும்  காக்க இலங்கைக்கு ஒரு புதிய யாப்பு தேவையில்லை! தனியாட்களுக்கு அல்லது பிறநாடுகளுக்குப் பொருந்தும் யாப்பும் எமக்கு வேண்டியதில்லை. இலங்கையின் பன்மைச் சமூகத்துக்கு உகந்த யாப்பே எமக்குத் தேவை. இலங்கை மக்கள் அனைவரையும் கருத்தில் கொண்டு சுதந்திரமாகவும் சுமுகமாகவும் இயங்கும் அமைப்புக்களுக்கு வழிவகுக்கும் யாப்பே எமக்குத் தேவை. “மக்களாலான, மக்களுக்கான, மக்களின்” யாப்பே இலங்கைக்கு தேவை.  


விழுமியங்கள்


  1. சமத்துவம் 

  2. சுதந்திர நீதித்துறை, கணக்காய்வுத் துறை, தேர்தல் ஆணையம், காவல்துறை ஆணயம்

  3. ஏற்றத்தாழ்வு தடுப்புச் சட்டம்

  4. சகிப்புணர்வு, மதிப்புணர்வு, அரவணைப்பு

  5. ஐ. நா, மனித உரிமைப் பட்டயம்

  6. கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, ஊட்டச்சத்து

  7. சிறாருக்கும், முதியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தனிவசதிகள்

  8. பற்பல சமூகங்களுக்கும் தேர்தல் படிமுறை மூலம் பிரதிநிதித்துவம்

  9. பிரதேசங்களுக்கும், மாகாணங்களுக்கும் அதிகாரப் பரவலாக்கம்

  10. சாதி, சமய, சமூக, இன, கொள்கை வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் மனிதராய் நடத்தல்.


நடப்பு நிலைவரம்


இன்றைய உலக மக்களுள் மூன்றிலொரு விழுக்காட்டினர் அப்பழுக்கற்ற எதேச்சாதிகாரத்துக்கு உட்பட்டுக் காலந்தள்ளுவது எம்மைத் துணுக்குற வைக்கிறது. ஏற்றத்தாழ்வும், மண்கொள்ளையும், சந்தைப்பொருள் நுகர்வும், பேராசையும் ஓங்கிய சமூகத்தில் தப்பிப்பிழைப்பதற்காக தமது குடியாட்சி, நல்லாட்சி, சட்ட ஆட்சி விழுமியங்களை மக்கள் கைவிட்டு வருகிறார்கள். 


தலைவர்கள் பலரும் மீட்பர்களாய் எழுந்து, கடுங்கோலராய் ஓங்கியவர்கள். அல்லது நாட்டுப்பற்றாளர்கள் என்று மார்தட்டிக்கொண்டு மேடையில் ஏறிய படுபாவிகள். சுயபாதுகாப்பு பற்றிய அச்சம் அவர்களை இடைவிடாது பிடித்து ஆட்டுகிறது. அவர்களின் அதிகாரவெறிக்குத் தீனிபோட்டுக் கட்டாது. அவர்களது சுயமோகமும் சமூகவிரோதமும் அதையே உணர்த்துகின்றன.  


தனியாளாட்சிக்கமைய தேசிய பாதுகாப்பு எனப்படும் பீடத்தில் சுதந்திரம், மனித உரிமை, சட்ட ஆட்சி, பரிவு, புரிவு அனைத்தும் பலியிடப்படுகின்றன. ஏற்கெனவே உருவாக்கப்பட்ட குடியாட்சி வெளிகள் அடைக்கப்பட்டு அதிகாரவெறி ஓம்பப்படுகிறது. கூட்டுச் சுயநலம், கூட்டு அதிகாரவெறி எனப்படும் கிருமிகள் சமூகத்தில் தொற்றிப் பரவுகின்றன. சமூகத்தின் செலவில் தனியாட்சியாளர், அடியார்கள், குடும்பத்தவர்கள், குலத்தவர்கள் அனைவரும் அரசியற் செல்வாக்கிலும், பொருள்வளத்திலும், அரும்பெரும் பேறுகளிலும் திளைத்து வருகிறார்கள். அடிவருடிகளின் கயமையை தனியாட்சியாளர்கள் புறக்கணித்து, நியாயப்படுத்தி, பொறுத்தருளி வருகின்றனர்.


புரட்சியைத் தடுக்கும் நோக்குடன் அதிகாரத்தைப் பகிரவவோ துறக்கவோ கூட எதேச்சாதிகாரிகள் முன்வருவதுண்டு. அல்லது மக்களைப் போர்புரியத் தூண்டுவதுண்டு. தம்முடன் போட்டியிடும் மேட்டிமைக் குழாத்தை விட அதிக விலைக்கு ஆட்களை வாங்க முயல்வதுண்டு. அல்லது உட்கட்சி மோதலைக் கட்டுப்படுத்த முற்படுவதுண்டு.  


1978ல் ஜனாதிபதி ஆட்சிமுறை புகுத்தப்பட்ட பிறகு இலங்கையில் குடியாட்சிக் கட்டுக்கோப்பு குலைந்தது. நாடாளுமன்றம் அதன் மேலாதிக்கத்தை இழந்து ஜனாதிபதியின் ஊமைக்குழலாய் மாறியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிழ்விக்கும் வண்ணம், சட்டத்தையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குடியாட்சி மரபுகளையும் மீறும் வண்ணம் அவர்களுக்கு சலுகைகளும், பேறுகளும், விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டன. 


வேற்றுமையில் ஒற்றுமை காணும் நெறியிலிருந்து இலங்கை வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது. தற்போதைய அரசியல்யாப்பும் இனிவரும் அரசியல்யாப்பும் மக்களிடையே மேன்மேலும் வேற்றுமையும் நெருக்கடியும் மேலோங்க வழிவகுக்கும். ஆதனால் இலங்கையின் பன்மைச் சமூகம் சின்னாபின்னப்படும். ஆளும் மேட்டிமைக் குழாம், அடிவருடிகள் குழாம் இரண்டினதும் நலன்களும் பேறுகளும் மட்டுமே கட்டிக்காக்கப்படும். பெரும்பான்மைவாதம், எதேச்சாதிகாரம் இரண்டையும் கொண்டு ஆட்சிபீடத்தின் புகழ் நிலைநிறுத்தப்படும். ஒருமுகப்படுத்திய அதிகாரமும், மட்டுப்படுத்திய சுதந்திரமுமே ஆட்சிபீடத்தின் ஒட்டுத்தொங்கலாய் இழுபடும். 


மீட்சி


எதேச்சாதிகாரத்தின் பிடிக்கு உட்பட்ட குடியாட்சி, அதிலிருந்து கடைத்தேறுவது எங்ஙனம்? குடியாட்சி மேலோங்காவாறு தடுக்குந் தறுவாயில் எதேச்சாதிகாரிகள் இழைக்கும் தவறுகளும், அசட்டுத்தனங்களுமே சமூகத்தின் பதில்வினைக்கு வழிவகுக்கின்றன. அப்புறம் எதேச்சாதிகாரிகளின் அதிகாரம் கைநழுவிப் போய்விடும். எஞ்சிய அலுவலை தேசிய கட்டமைப்பும், சூழ்நிலையும் பார்த்துக்கொள்ளும். 


சட்ட ஆட்சி, அதிகாரப் பிரிவீடு (நாடாளுமன்றம், நீதித்துறை, நிறைவேற்று ஜனாதிபதி), பொறுப்புக்கூறல், வெளிவாய்மை என்பன மேம்படும் வண்ணம்  குடியாட்சி வெளியை அகட்ட  எம்மால் இயன்றவரை நாம் பாடுபட வேண்டும். 

_______________________________________________________________________________________

Lionel Bopage, Sri Lanka: Rising Autocracy and Historical Experiences, Groundviews, 2020-10-28, summarized in Tamil by Mani Velupillai, 2020-10-30


https://groundviews.org/2020/10/28/sri-lanka-rising-autocracy-and-historical-experiences/

No comments:

Post a Comment