அமர்த்தியா சென்
இன்றைய உலகு தனியாளாட்சி என்னும் கொள்ளைநோயை எதிர்கொண்டுள்ளது.
இந்தியா தனியாளாட்சிக்குள் அள்ளுண்டு செல்வதை
எதிர்த்துப் போராட ஏந்த வேண்டிய மிகவலிய ஆயுதம் அகிம்சையே
_____________________________________________________________________
இந்து தேசியவாதம்
இந்து தேசியவாத அரசு சமயப் பகையை மேம்படுத்தியுள்ளது; இந்தியாவின் சமயச்சார்பற்ற மரபுகளை அது கருவறுத்துள்ளது.
மெய்யியலாளர் இமானுவேல் காந் கூறியவாறு, “ஒருவர் பகிரங்கமாக எல்லா விடயங்களிலும் தனது நியாயத்திறனைக் கையாள்வதை விட மிகவும் முக்கியமானது வேறெதுவும் இல்லை.” காந் மேலும் குறிப்பிட்டவாறு, "சமூகத்தவர் தம்மிடையே விவாதிக்கும் வாய்ப்பை தடுத்து நிறுத்தினால், அது சமூகத்துக்கு ஓர் அவப்பேறாகவே முடியும்"
ஆசிய, ஐரோப்பிய, இலத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் எதேச்சாதிகாரப் போக்குகள் முனைப்பான முறையில் ஓங்கி வருவது எம்மைத் துணுக்குற வைக்கிறது. இந்த அவப்பேறான நாடுகள் கூடித்திரண்ட கூடைக்குள் எனது தாயகமான இந்தியாவையும் சேர்க்க வேண்டியுள்ளது குறித்து நான் அச்சம் அடைகிறேன்.
சமயச்சார்பற்ற இந்திய குடியாட்சி
கட்டியாண்ட பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், பல தசாப்தங்களாக தனிமனித சுதந்திரத்துடன் கூடிய, சமயச்சார்பற்ற குடியாட்சி நாடாக விளங்கி நல்வரலாறு படைத்த நாடு இந்தியா. சுதந்திரம் காக்க உறுதிபூண்ட இந்திய மக்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்து, எதேச்சாதிகார ஆட்சியை அகற்றவும் திடசித்தம் பூண்டதுண்டு. எடுத்துக்காட்டாக “அவசரநிலை” என்ற போர்வையில் புகுத்தப்பட்ட சர்வாதிகார ஒழுங்குவிதிகளை 1977ல் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி திட்டவட்டமாக அவர்கள் நிராகரித்தார்கள். தேர்தலை அடுத்து அரசாங்கம் அவர்களுக்கு அடிபணிந்தது.
தலையெடுக்கும் எதேச்சாதிகாரம்
எனினும், குடியாட்சிமீது பலருக்கும் இருந்த ஈர்ப்பு அண்மைக் காலத்தில் தணியத் துவங்கியுள்ளது. வேறொரு வகையான சமூகத்தை மேம்படுத்தும் போக்கு இன்றைய அரசாங்கத்தில் ஓங்கியுள்ளதற்கான சான்று துலக்கமாகப் புலப்படுகின்றது. எதிர்த்தரப்புத் தலைவர்களைக் கைதுசெய்வதற்கும், சிறைவைப்பதற்கும் ஏதுவாக, அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு “கலகம்” என்று முத்திரைகுத்தி, அவற்றை வன்முறை கொண்டு அடக்க முயன்ற விபரீதங்களும் இடம்பெற்றுள்ளன. இத்தகைய அணுகுமுறையில் சர்வாதிகாரப் போக்கு பொதிந்துள்ளது. இதில் திண்ணிய சிந்தனைக் குழப்பமும் புலப்படுகிறது. ஒரு தரப்பு அரசாங்கத்துடன் கொண்ட பிணக்கினை எவரும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான அல்லது நாட்டைக் கருவறுப்பதற்கான கலகமாகக் கொள்ள வேண்டியதில்லையே! நாட்டைக் கருவறுக்கும் செயலல்லவா கலகம் என்பது!
பிரித்தானியர் கட்டியாண்ட இந்தியாவில் நான் கல்விகற்ற காலத்தில் இந்தியாவின் சுதந்திரத்துக்காக (காந்தி அடிகளாலும் மற்றும் பிற சுதந்திர சிற்பிகளாலும் உந்தப்பெற்று) அகிம்சைவழியில் போராடிய என் உறவினர்களுள் பலரை, வன்முறை எதிலும் ஈடுபடாவாறு தடுக்கும் சாக்கில், “தடுப்புக் கைது” எனப்பட்ட நடவடிக்கைக்கு அமைய, சிறையில் அடைத்திருந்தார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சிறைவாச உருவிலமைந்த மேற்படி தடுப்புக் கைது நிறுத்தப்பட்டது. ஆனாலும் பிறகு அது மீளவும் புகுத்தப்பட்டது. முதலில் காங்கிரஸ் அரசாங்கத்தால் சற்று மென்மையான சிறைவாச உருவில் அது மீளவும் புகுத்தப்பட்டது. அது கூட அடக்காத செயல்! ஆனால் இந்துத்துவ நோக்குடைய தற்போதைய பாரதிய ஜனதா ஆட்சியில் தடுப்புக் கைது என்பது மாபெரும் பங்கு வகிக்கிறது. எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளை எளிதில் கைதுசெய்து, விசாரணையின்றி, சிறையிலடைக்க அது வழிவகுக்கிறது.
சென்ற ஆண்டு புதுக்க இயற்றப்பட்ட சட்டவிரோத செயல்கள் (தடுப்புச்) சட்டத்தின்படி அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக எவரையும் ஒரு பயங்கரவாதி என விளம்ப முடியும்; பயங்கரவாதி எனப்படுபவரைக் கைதுசெய்து, விசாரணையின்றி, சிறையிலடைக்க முடியும். ஏற்கெனவே மனித உரிமை வினைஞர்கள் பலர் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
“தேசியவிரோதம்”
வெளியுலகில் ஒருவர் “தேசியவிரோதி” என்று கூறப்படும்பொழுது, அவரது சிந்தனை கண்டனத்துக்கு உள்ளாகிறது என்ற பொருளில் அதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இன்றைய இந்தியாவிலோ ஆளும் அரசாங்கத்தை அவர் கண்டித்துள்ளார் என்று மாத்திரமே அது புரிந்துகொள்ளப்படக் கூடும். தனியாளாட்சியில் “தேசிய விரோதமும்” அரசாங்க விரோதமும்” குழப்பியடிக்கப்படுவது வழக்கம். அத்தகைய முறைமீறல்களை சில வேளைகளில் நீதிமன்றுகளால் நிறுத்த முடிந்ததுண்டு. ஆனால் இந்திய நீதிமன்றுகள் சுணங்கி இயங்கி வருபவை. இந்தியாவின் பாரிய உச்ச நீதிமன்றினுள் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஆதலால் எல்லா வேளைகளிலும் அங்கு திட்பமான பரிகாரம் கிடைப்பதில்லை. மனித உரிமை காப்பதில் உலகில் மிகவும் பேர்போன சர்வதேய மன்னிப்பகமே அரசாங்கத்தின் தலையீட்டினால் இந்தியாவை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது!
தலித்துகள்
பொதுவாக எதேச்சாதிகாரம் என்பது சில வேளைகளில் நாட்டின் ஒரு தனிப்பிரிவினரை (பெரிதும் இந்தியாவைப் பொறுத்தவரை) ஒரு சாதியினரை அல்லது சமயத்தவரை கொடுமைப்படுத்துவதுடன் இரண்டறக் கலந்தது. முன்பு “தீண்டத்தகாதவர்கள்” எனப்பட்ட தாழ்ந்த சாதியினர் இன்று “தலித்துகள்” எனப்படுகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்றபோது புகுத்தப்பட்ட “பாரபட்சத்தை ஈடுசெய்யும் நடவடிக்கை” மூலம் அவர்கள் (வேலைவாய்ப்பு, கல்வித் துறைகளில்) தொடர்ந்தும் பயனடைந்து வருகின்றனர். ஆனாலும் அவர்கள் பெரிதும் கொடூரமாகவே நடத்தப்பட்டு வருகிறார்கள். தலித்துக்களை உயர்சாதி ஆண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கிக் கொல்லும் நிகழ்வுகள் பரந்துபட்டு இடம்பெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. அதையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து நெருக்குதல் கொடுத்தாலொழிய, அவற்றை அரசாங்கம் பெரிதும் புறக்கணித்து, மூடிமறைத்து விடுகிறது.
முஸ்லீங்கள்
முஸ்லீங்களின் உரிமைகளைப் பொறுத்தவரை இந்திய ஆட்சியாளர் மிகவும் கடூரமாகச் செயற்பட்டு வந்துள்ளார்கள். அவர்களது குடியுரிமைகள் சிலவற்றைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு கூட சென்றுள்ளார்கள். இந்துக்களும் முஸ்லீங்களும் பல நூற்றாண்டுகளாக இங்கு சமாதான சகவாழ்வு வாழ்ந்தவர்கள். எனினும் அண்மைக் காலத்தில் தீவிர இந்து அரசியல் அமைப்புகள், தாயக முஸ்லீங்களை ஏதோ வெளிநாட்டவர்கள் போன்று நடத்தவும், நாட்டுக்கு கேடு விளைவிப்பவர்கள் என்று குற்றஞ்சாட்டவும் முயன்றமை முனைப்பாகத் தெரிகின்றது. வேகமாய் ஓங்கிவரும் தீவிர இந்து அரசியல் வலுவினைக் கொண்டு சமயங்களிடையே ஆப்புவைக்கப்பட்டு வருகிறது. பகை மூட்டப்பட்டு வருகிறது.
இந்தியப் பண்பாடு
ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்து, உலகப்புகழ் ஈட்டிய கவிஞர் தாகூர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஓர் உரையில் (Hibbert Lectures, 1930), “நான் இந்து, இஸ்லாம், மேல்நாட்டுத் தாக்கம் ஆகிய பண்பாட்டு ஆறுகளின் முக்கூடலிலிருந்து எழுந்தவன்” என்று தம்மை அறிமுகப்படுத்தியதில் எதுவித முரண்பாடும் இல்லையே! வெவ்வேவேறு சமய நம்பிக்கைகள் கொண்டவர்களின் கூட்டுத் தயாரிப்பே இந்தியப் பண்பாடு. அது இசை, இலக்கியம், ஓவியம், கட்டுமானம் போன்ற பல்வேறு துறைகளில் காணப்படுகிறது. இந்தியாவுக்கு வெளியே பயன்படுத்தப்படுவதற்காக முதன்முதல் மொழிபெயர்க்கப்பட்டு, பரப்பப்பட்ட இந்து சிந்தனைத் திரட்டாகிய உபநிடதம் கூட ஒரு முகலாய இளவரசனின் முன்முயற்சியைப் பறைசாற்றுகிறது. (மும்தாஜின் மூத்தமகனே இளவரசன் தாரா சிக்கோ. அவன் தந்தை மாமன்னன் ஷா ஜஹான் மும்தாஜின் நினைவாகக் கட்டியதே தாஜ் மஹால்).
இந்திய அரசாங்கம் தற்போது முதன்மைப்படுத்தும் கருத்தியலே தேசிய கல்வித்துறையை நெறிப்படுத்துகிறது. வரலாற்றை அறவே மீட்டியமைக்கும் விதமாக, முஸ்லீம் மக்களின் தொண்டுகளை அடக்கி வாசிக்கும் விதமாக அல்லது முற்றிலும் புறக்கணிக்கும் விதமாக இந்தியாவில் இப்பொழுது பாடநூல்கள் எழுதப்பட்டு வருகின்றன.
பயங்கரவதிகள் என்று குற்றஞ்சாட்டப்படுவோர் காந்தி அடிகள் முழங்கிய அகிம்சை வழியில் ஆர்ப்பாட்டம் செய்ய உறுதிபூண்பது வழக்கம். இந்தியாவில் மாணவர் தலைமையில் சமயச்சார்பின்றி புதுக்க மேலோங்கும் எதிர்ப்பு அகிம்சை வழியில் அமைவது குறிப்பிடத்தக்கது. எனினும் சட்டவிரோத செயல்கள் (தடுப்புச்) சட்டத்தை ஆயுதமாய் ஏந்திய அரசாங்கத்தால் எவரையுமே ஒரு பயங்கரவாதி என்று விளம்ப முடியும்.
உமார் காலிட்
எடுத்துக்காட்டாக மேற்படி சமயச்சார்பற்ற எதிர்ப்பியக்கம் அமைதிகாத்து ஆர்ப்பாட்டம் செய்ய உறுதிபூண்டதை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முஸ்லீம் புலமையாளர் உமார் காலிட் நாவன்மையுடன் எடுத்துரைத்தார்: “அவர்கள் எங்கள்மீது தடியடி நடத்தினால், இந்திய தேசிய மூவண்ணக் கொடியை நாங்கள் உயர்த்திப் பிடிப்போம். அவர்கள் துவக்குச்சூடு நடத்தினால், அரசியல்யாப்பை ஏந்தியபடி கைகளை உயர்த்துவோம்.” அன்னார் சட்டவிரோத செயல்கள் (தடுப்புச்) சட்டத்தின்படி “பயங்கரவாதி” என்று குற்றஞ்சாட்டப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்! இந்தியாவில் மேலோங்கும் எதேச்சாதிகாரத்தை திடசித்தத்துடன் எதிர்த்துநிற்க வேண்டியுள்ளது.
இன்றைய உலகு தனியாளாட்சி என்னும் கொள்ளைநோயை எதிர்கொண்டுள்ளது. ஆதலால் இந்தியாவில் முற்றிலும் வழமைக்கு மாறாக இழைக்கப்படும் இசகுபிசகுகள் ஓரளவுக்கே வழமைக்கு மாறானவையாகத் தென்படுகின்றன!
கற்பிக்கப்படும் நியாயம்
கொடுங்கோன்மையை நிலைநிறுத்த கற்பிக்கப்படும் நியாயம் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. பிலிப்பைன்சில் போதைமருந்து கடத்தலைக் குறைக்க என்றும், அங்கேரியில் குடிவருவோரின் படையெடுப்பைத் தடுக்க என்றும், போலாந்தில் ஒரேபாற்சேர்க்கை வாழ்க்கைப் பாங்கினை ஒடுக்க என்றும், பிரேசிலில் படைபலம் கொண்டு ஊழலை ஒழிக்க என்றும் நியாயம் கற்பிக்கப்படுகின்றது. உலகில் சுதந்திரத்தின் மீது எத்தனை தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றனவோ, அத்தனை வழிவகைகள் சுதந்திரத்தைக் காப்பதற்கும் தேவைப்படுகின்றன.
மார்ட்டின் லூதர் கிங்
1963ல் மார்ட்டின் லூதர் கிங் பேர்மிங்காம் மாநகர சிறையிலிருந்து எழுதிய மடலில் “எங்கேனும் இழைக்கப்படும் அநீதி எங்கெங்கும் நீதிக்கு ஆபத்து விளைவிக்கும்” என்று குறிப்பிட்டார். அநீதிக்கு எதிரான இயக்கம் முற்றிலும் அகிம்சை வழியில் இடம்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இன்றைய இந்தியாவில் இளம் மாணவ இயக்கத் தலைவர்களும் அதையே வலியுறுத்துகிறார்கள். தனியாளாட்சி எவ்வளவு தூரம் துலக்கமாகவும் பரந்துபட்டும் புலப்படுகின்றதோ, அவ்வளவு தூரம் அதை எதிர்த்து நிற்பதற்கான நியாயங்களும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்.
_________________________________________________________________________________
Amartya Sen, London Guardian, 2020-10-26, translated by Mani Velupillai, 2020-10-28.
https://www.theguardian.com/commentisfree/2020/oct/26/india-autocracy-nonviolent-protest-resistance
No comments:
Post a Comment