அறிவார்ந்தோர் ஏன் சர்வாதிகாரிகளை ஆதரிக்கிறார்கள்?

ஆன் அப்பிள்போம்

_____________________


பில் கெலர்

உருண்டை நச்சொட்டி (corona virus) எமது சமூக ஒழுங்கமைப்பில் கூர்பார்க்கத் துவங்க முன்னரே எதேச்சாதிகாரம் என்னும் வேறோர் உலகளாவிய கொள்ளைநோய் உலகத்தைப் பீடித்துவிட்டது.  கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா உட்பட குடியாட்சி நாடுகளில் அது தொற்றி வந்துள்ளது. 

அதற்கு முதன்முதல் பதில்வினை ஆற்றியோருள் சில எழுத்தாளர்கள் அடங்கியிருக்கிறார்கள்.  எதேச்சாதிகாரத்தின் கீழ் நெரிபடும் குடியாட்சி எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும் என்று சில எழுத்தாளர்கள் வினவியுள்ளார்கள். உலகம் நரகக்குழியினுள் விழப்போவதாக அவர்கள் கதை புனைந்துள்ளார்கள். உலகம் ஊழியிறுதியை எட்டிவிட்டதாக வேறு எழுத்தாளர்கள் ஆய்விட்டுக் கூறியிருக்கிறார்கள்.    

பெஞ்சமின் (Benjamin Carter Hett) ஜேர்மானியக் குடியரசை (1919-1933) மீளாய்வுசெய்து வெளியிட்ட “குடியாட்சியின் மாள்வு” (The Death of Democracy) என்ற நூலில், அரசியற் கட்சிகளின் விட்டுக்கொடாமையால் ஹிட்லர் எழுச்சி அடைந்த விதம் ஆராயப்பட்டுள்ளது.  காலத்துக்கேற்ற ஓர் எச்சரிக்கையை விடுக்கும் பாடமாக இதைக் கொள்ளவேண்டும் என்ற அவர் உள்ளக்கிடக்கை இங்கு தெளிவாகத் தெரிகிறது.

ஹார்வார்ட் பல்கலைக்கழக அரசியல் அறிவியலாளர்களாகிய லெவிற்ஸ்கி (Steven Levitsky), சிப்லட் (Daniel Ziblatt) இருவரும் “குடியாட்சிகள் மாளும் விதம்” (The Death of Democracy) என்றொரு நூலை எழுதியிருக்கிறார்கள். அண்மையில் தோல்வியடைந்த குடியாட்சி நாடுகளின் பட்டியல் ஒன்றை அவர்கள் முன்வைத்துள்ளார்கள். எதேச்சாதிகாரிகளாக மாறக்கூடியோரின் அறிகுறிகளைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்துள்ளார்கள். 

திரம்பை (Donald Trump) பொறுத்தவரை இந்த எச்சரிக்கை எல்லா விதங்களிலும் பொருந்தும். மசா (Masha Gessen) என்னும் ஊடகர் “எதேச்சாதிகாரத்திலிருந்து தப்பிப்பிழைத்தல்” (Surviving Autocracy) என்ற நூலை எழுதியுள்ளார். பூட்டின் (Vladimir Putin) மீது தீட்டிய தனது கத்தியைக் கொண்டு திரம்பின் வாதத்தை கீறிப்பிளந்து ஆய்விட்டு, அதைக் குணப்படுத்துவதற்கு ஒரு தேர்தலை விடவும் அதிகம் தேவைப்படும் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். 

ஆன் அப்பிள்போம் (Anne Applebaum) எழுதிய “மங்கிமறையும் குடியாட்சி: எதேச்சாதிகாரத்தின் வசியம்” (Twilight of Democracy: The Seductive Lure of Authoritarianism) என்ற நூல் மேற்படி விவாதத்துக்கு துணைநிற்கிறது. “எதேச்சாதிகாரத்தின் வசியம்” என்பது எதேச்சாதிகாரியாய் ஓங்க விழைவோரையும், அவர்களுக்கு அமைந்தொழுகும் கும்பல்களையும் விட, கொடுங்கோலர்களை மேலோங்க வைக்கும் ஆட்சியதிகாரிகளையே பெரிதும் கருத்தில் கொண்டுள்ளது. கொடுங்கோலரின் படிமத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கவல்ல எழுத்தாளர், அறிவார்ந்தோர், சிற்றேட்டாளர், வலைப்பூவலர், சரடு திரிப்போர், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர், இணையத் துணுக்கர் ஆகியோரையே அது பெரிதும் கருத்தில் கொண்டுள்ளது.

மேற்படி இயலாளர்கள் மெய்யான விசுவாசிகளா, வெறும் நயவஞ்சக சந்தர்ப்பவாதிகளா? தாங்கள் கூறும் பொய்களையும், கண்டுபிடிக்கும் சதிகளையும்  அவர்கள் நம்புகிறார்களா? அல்லது செல்வமும் அதிகாரமும் ஈட்டப் பேராசை கொண்டவர்களா? இருமுனைப்போர் நிகழும் இவ்வுலகில் இவ்வினாக்களுக்கு அப்பிள்போம் விடையளிக்க முயன்றமை பாராட்டத்தக்கது. எனினும் அவர் தெட்டத்தெளிவான விடைகளை முன்வைக்காமை வாசகரின் உள்ளத்தை சற்று உலைய வைக்கிறது. 

அமெரிக்க ஊடகர் அப்பிள்போம் பெரிதும் போலாந்தில் வசிப்பவர். வல்லரசுப் பகைமை, ஸ்டாலின் காலத்து வதை முகாம்கள், உக்கிரேனில் உண்டாக்கப்பட்ட பஞ்சம் பற்றி எல்லாம் வியக்கத்தக்க முறையில் ஆராய்ந்து, வரலாற்று நூல்களை எழுதி, வாசகர்களை ஈர்த்து, பாராட்டுகளும் புலிற்சர் பரிசும் பெற்றவர்.  “குடியாட்சியின் மாள்வு” என்பது அவர் எழுதிய ஒரு சிறிய நூல். ஏற்கெனவே ஒரு சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரையின் விரிவாக்கம்.  பாதி சிந்தனை, பாதி நினைவுத்திரட்டு. 

அக்கட்டுரை போலவே இந்நூலும் ஒரு விருந்துடன் துவங்குகிறது. அது 1999 புத்தாண்டு பிறக்குந் தறுவாயில் அவரும், (வலதுசாரி அரசில் பிரதி வெளியுறவு அமைச்சராய் விளங்கிய) அவரது கணவரும் தமது போலாந்து நாட்டுப்புற இல்லத்தில் வைத்து அளித்த விருந்து. விருந்தாளிகள் வெவ்வேறு நாட்டவர்கள்; வெவ்வேறு அரசியல் நிலைப்பாடு கொண்டவர்கள்; வல்லரசுப் பகைமையில் பொதுவுடைமைவாதத்தை வெற்றிகொண்ட பெருமிதத்துடன் ஒருங்கிணைந்த தரப்புகள்;  குடியாட்சி, குடியாட்சிக் கட்டுப்பாடுகள் - மட்டுப்பாடுகள், சட்ட ஆட்சி, தற்கால ஐரோப்பாவுடன் ஒருங்கிணைந்த போலாந்து… என்பவற்றில் ஒருசேர நம்பிக்கை கொண்டவர்கள். 

“இப்பொழுது, ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கழிந்த பிறகு, எனது புத்தாண்டு விருந்தில் கலந்துகொண்டோருள் சிலரைக் கண்டால், அவர்கள் கண்ணில் படாமல் நான் தெருவைக் கடந்து நழுவிச் சென்றுவிடுவேன். அவர்களும் எனது வீட்டுக்குள் நுழைய மறுப்பார்கள். எப்போதாவது அங்கு வந்ததை ஒப்புக்கொள்ளவும் அவர்கள் சங்கடப்படுவார்கள்” என்று அப்பிள்போம் எழுதுகிறார். 

அவரது பழைய நண்பர்கள், வகுப்புத் தோழர்கள், கூட்டாளிகள் பலரும் குடியாட்சியில் நம்பிக்கை இழந்துள்ளார்கள். வலதுசாரி தேசிய அரசுகளாலும், இயக்கங்களாலும் அவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளார்கள். அவர்களை “குரவர்கள்” என்று அவர் குறிப்பிடுகிறார். இது ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் யூலியன் பெந்தா (Julien Benda) என்ற பிரஞ்சு மெய்யியலாளரிடம் இவர் இரவல்பெற்ற சொல். எழுதுநரும் (clerks), குருமாரும் (clerics) இரண்டறக் கலந்த தரப்பினரை - அலுவலர்களும் பரப்புரையாளரும் இரண்டறக் கலந்த தரப்பினரை - அவர் வஞ்சப்புகழ்ச்சியாக குரவர்கள் (clercs) என்று குறிப்பிட்டிருந்தார். 

எதேச்சாதிகாரிகள் ஆட்சியதிகாரம் ஈட்டுவதற்கு வழமையாக முன்வைக்கப்படும் காரணங்கள் - பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதம் பற்றிய அச்சம், குடிவரவாளரால் விளையும் நெருக்குதல்கள் - முக்கியமானவையே என்பதை அப்பிள்போம் ஒப்புக்கொள்கிறார். அதேவேளை  எதேச்சாதிகாரிகளை  குரவர்கள் ஆதரிப்பதற்கு அவை மாத்திரம் காரணங்கள் ஆகா என்கிறார். 

2015ல் போலாந்து வளம்கொழித்த நாடாக இருந்தது. அங்கு குடிவரவாளர்கள் வந்து குவியவில்லை. பயங்கரவாத ஆபத்தை அந்த நாடு எதிர்நோக்கவில்லை. எனினும் வலதுசாரி தேசியவாத சட்டம்-நீதிக் கட்சி அங்கு ஆட்சியதிகாரத்தை ஈட்டிக்கொண்டது! 

“உலகம் முழுவதும் வேறு ஏதோ ஒன்று தற்பொழுது நிகழ்ந்து வருகிறது. வெவ்வேறு குடியாட்சி நாடுகள், வெவ்வேறு பொருளாதார அமைப்புகள், வெவ்வேறு மக்கள் குழுமங்கள் மீது வேறு ஏதோ ஒன்று  தற்பொழுது தாக்கம் நிகழ்த்தி வருகிறது” என்று எழுதுகிறார் அப்பிள்போம். 

1980-களில் மாற்றுக்கருத்துடன் கூடிய போலாந்து நாட்டு தோழமை (Solidarity) தொழிற்சங்கத்துடன் அணிவகுத்துச் சென்ற சகோதரர்களாகிய ஜேசெக், ஜாரோசிலா இருவரையும் அவர் அறிமுகப்படுத்துகிறார். சோவியத் பேரரசு குலைந்த பிறகு  ஜாரோசிலா தனது தாராண்மைவாத நம்பிக்கையை முன்னெடுக்கும் வண்ணம் பெரியதோர் எதிர்த்தரப்புச் செய்தித்தாளை பதிப்பித்து வருகிறார். ஜேசெக் சட்டம்-நீதிக் கட்சியில் இணைந்து போலாந்து அரச தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளராகவும், ஒரு-கட்சி-ஆட்சி அமைய வேண்டும் என்று வாதிக்கும் தரப்பின் தலையாய கருத்தியலாளராகவும் மாறியுள்ளார்.  பொதுவுடைமை வாதத்தை எதிர்த்து நின்ற தனக்கு தகுந்த கைமாறு செய்யப்படவில்லை என்று ஜேசெக் எண்ணியிருந்ததை அப்பிள்போம் சுட்டிக்காட்டுகிறார்; இவ்வாறு கைமாறு பெறுவதற்கு உரித்துக்கோருவதில் ஒரு நச்சுத்தனம் பொதிந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். 

“விசனம்; பொறாமை; எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆட்சிமுறை அநியாயம் புரிகிறது - நாட்டுக்கு மட்டுமல்ல, எனக்கும் அநியாயம் புரிகிறது என்ற எண்ணம்…” இவையே போலாந்து தேசிய வலதுசாரித்துவக் கருத்தியல்களில் ஓங்கிய முக்கிய உணர்வுகள். ஆதலால் அவர்களது சொந்த நோக்கங்களையும், அரசியல் நோக்கங்களையும் பிரித்துப் பார்ப்பது எளிதல்ல.  

குரவர்கள் பலரும் தன்னுடன் கதைக்க மறுத்ததை அப்பிள்போம் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆதலால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட தரவுகளையும், நேரடி அறிமுகங்கள் மூலம் தேர்ந்து தெளிந்த சங்கதிகளையும் வைத்தே தனது நூலை  அவர் எழுதியுள்ளார். அதேவேளை தனக்கு கிடைத்த தரவுகளை அவர் செவ்வனே பயன்படுத்தியுள்ளார். சோவியத் வலயத்துள் வாழ்ந்து, தப்பிய அறிவார்ந்தவர்களை அவர் உறுதிபடக் கணிப்பிட்டுள்ளார். போலாந்து, அங்கேரி, பிரித்தானியா, திரம்பின் அமெரிக்கா, இஸ்பெயின், கிரேக்கம் ஆகிய நாடுகளில் வீழ்ச்சியடைந்த அறிவார்ந்தவர்களை அவர் தேடி அலைந்திருக்கிறார்.   

அறிவார்ந்தவர்களுக்கு ஏற்பட்ட அதிருப்திகளை அவர் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டுகிறார்: அமெரிக்க - சோவியத் வல்லரசுப் பகைமையில் பொதிந்திருந்த  அறநோக்கத்துக்கு மீளும் வேட்கை; திறமைசாலிகள் ஆதிக்கம் செலுத்துவதால் இவர்கள் அடைந்த ஏமாற்றம்; (பெரிதும் அங்கேரிய-அமெரிக்க யூத கோடாதிபதி ஜோர்ஜ் சொரோஸ் சம்பந்தப்பட்ட) சதிக்கோட்பாடுகள் மீது கொண்ட ஈர்ப்பு... என்பவற்றை எல்லாம் அவர் எடுத்துக் காட்டுகிறார். 

தற்காலத்தில் இடக்குமுடக்கான முறையில் நிகழ்த்தப்படும் வாதங்களையும், இணையத்தின் சாதக பாதகங்களையும் அவர் எடுத்துக் காட்டுகிறார். ஒரு வாதத்தை சேர்ந்து பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை இணையம் எமக்கு அளிக்க மறுத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். சதிக்கோட்பாடுகளைச் சல்லடையிட்டு, உணர்ச்சிவசப்படும் தரப்புகளைக் கட்டுப்படுத்துவதில் பொறுப்புணர்ச்சியுடன் ஈடுபட்டுவந்த சிறப்புவாய்ந்த ஊடகங்களை இணையம் விஞ்சிவிட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். இது ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட முறைப்பாடுதான்; எனினும் இதில் பொதிந்துள்ள உண்மையைக் குறைத்து மதிப்பிட முடியாது.

“இருமுனைப்படும் போக்கு மேலோங்கவே அரச பணியாளர்களை தமது எதிராளிகள் ‘கைப்பற்றிவிட்டார்கள்’ என்னும் வாதம் தவறாது முன்வைக்கப்படுகிறது. சட்டம்-நீதிக் கட்சி போலாந்திலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வாதாடுவோர் பிரித்தானியாவிலும்,  திரம்பு தலைமையிலான அரசு அமெரிக்காவிலும் தத்தம் அரச அதிகாரிகளையும், சூழ்வியல் துறைஞர்களையும் அவ்வாறு சாடுவது ஒன்றும் தற்செயலாக நிகழும் சங்கதி அல்ல. 

அமெரிக்காவில் தீவிர மக்களீர்வாத இயக்கங்கள் என்றென்றும் நிலைபெற்று வந்துள்ளன. கே. கே. கே எனப்படும் வலதுசார்பு வெள்ளையின மேலாதிக்க இயக்கமும்,    டபிள்யு. யூ. ஓ. எனப்படும் இடதுசார்பு இயக்கமும் அதற்கு எடுத்துக்காட்டுகள். தீவிர மக்களீர்வாதம் அமெரிக்க குடியரசுக் கட்சியில் தற்பொழுது மறுபிறவி எடுத்திருப்பது குறித்து அப்பிள்போம் வியப்புத் தெரிவித்துள்ளார்.

“ரேகனின் கட்சி, திரம்பின் கட்சியாக மாறுவதற்கு, குடியரசுக் கட்சியினர் அமெரிக்க இலட்சியத்தைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக விரக்தியுடன் கூடிய சொற்சிலம்பத்தைக் கைக்கொள்வதற்கு, அக்கட்சியின் வாக்காளர்களிடையே மட்டுமல்ல, அதன் குரவர்களிடையேயும் ஒரு முற்றுமுழுதான மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்” என்கிறார் அப்பிள்போம். 2008ல் திரம்பின் அச்சுமூலமாகிய சேரா பலின் (Sarah Palin) வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து  குடியரசுக் கட்சியிலிருந்து அப்பிள்போம் விலகியதை இங்கு குறிப்பிடல் தகும்.  

புச்சானன் (Pat Buchanan), பிராங்லின், (Franklin Graham), ஸ்டீவ் (Steve Bannon) லோரா (Laura Ingraham) ஆகியோரை அப்பிள்போம் தலையாய அமெரிக்க குரவர்களாக இனங்காட்டியுள்ளார். அவர்கள் இவருடன் கதைக்கவில்லை. ஆனால் அவர்களது உரைகளும் எழுத்துகளும் பெருவாரியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா நிலைகெட்டு அழியப்போகிறது என்னும் துன்னம்பிக்கை உணர்வு குடிகொள்வதற்கு ஏதுவாய் ரேகன் காலத்து நன்னநம்பிக்கை உணர்வு இடங்கொடுத்து அகன்ற விதம் குறித்து அப்பிள்போம் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

“தாய்நாட்டை வெறுக்கும்படி பல்கலைக்கழகங்கள் மக்களுக்குப் போதிக்கின்றன. வீரர்களை விட பாதிக்கப்பட்டோர் பெரிதும் கொண்டாடப்படுகிறார்கள். பழம்பெரும் விழுமியங்கள் உதறித்தள்ளப்பட்டுள்ளன. மெய்யான அமெரிக்காவை, பழைய அமெரிக்காவை மீட்பதற்கு என்ன விலையும் செலுத்தப்பட வேண்டும், எந்தக் குற்றமும் மன்னிக்கப்பட வேண்டும், எந்த வன்மமும் புறக்கணிக்கப்பட வேண்டும்” என்னும் நிலைப்பாடு ஓங்கியுள்ளது. 

கெட்டித்தனமும் திடசித்தமும் கொண்ட இங்கிராம் (Ingraham) போன்ற ஒருவர்  திரம்பின் கைக்கூலியாக மாறிய விதத்தை விளக்குவதற்கு அப்பிள்போம் பல பக்கங்களை ஒதுக்கியுள்ளார். அதற்கு காரணம் பதவி ஆசையா? பாதிவாழ்வில் கத்தோலிக்க சமயத்தை பற்றுறுதியுடன் தழுவிக்கொண்டமையா? அல்லது தனது சொந்த ஐயுறவுகளை அமுக்கி முழக்கமிடவா? “சொந்த அவாவையும், அரசியல் அவாவையும் பிரித்துப் பார்ப்பது பேதைமை” என்பதை திரும்பவும் அப்பிள்போம் ஒப்புக்கொள்கிறார். 

தமது பிள்ளைகளின் தலைமுறைக்கு நம்பிக்கையூட்டும் கணிப்புடன் “குடியாட்சியின் மாள்வு” என்ற தமது நூலுக்கு அவர் முடிவுரை எழுத எண்ணியிருந்தமை தெரிகிறது. ஆனால் உருண்டை நச்சொட்டி இடையில் வந்து குறுக்கிட்டுவிட்டது. ஆனபடியால் எங்கள் எல்லோரையும் போலவே அவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. மக்களீர்வாத தலைவர்கள் இந்த நச்சொட்டியை சிக்கெனப் பற்றிக்கொண்டு, தமது அவசரகால ஆட்சியதிகாரங்களுக்கு நியாயம் கற்பிக்கும் விதத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 “நோய் மீதான அச்சம் சுதந்திரத்தின் மீது அச்சத்தை தோற்றுவிக்கக் கூடும். அல்லது உருண்டை நச்சொட்டி புதியதோர் உலகளாவிய தோழமையை ஊக்குவிக்கக் கூடும்…  இரண்டுக்கும் எதிர்காலத்தில் வாய்ப்புண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.  உள்ளத்தை அது உலைய வைக்கிறது” என்று  கூறி விடைபெறுகிறார் அப்பிள்போம். 

____________________________________________________________________________________

Bill Keller, Why Intellectuals Support Dictators, The New York Times, 2020-07-19.

 தமிழ்: மணி வேலுப்பிள்ளை, 2020-07-22.





No comments:

Post a Comment