சே குவேரா ஐ. நா.வில் ஆற்றிய உரை


சே குவேரா
ஐ. நா.வில் ஆற்றிய உரை
1964-12-11
அவைத்தலைவர் அவர்களே!
சிறப்பார்ந்த பேராளர்களே!
இப்பேரவையில் கலந்துகொள்ளும் கியூபாவின் பேராளர்களாகிய நாங்கள் முதற்கண் இங்கு புதுக்க இணைந்திருக்கும் மூன்று புதிய நாடுகளை வரவேற்கும் இனிய கடமையை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இங்கு உலகப் பிரச்சனைகளை ஆராயும் பெருந்தகைகளுடன் சேர்ந்துகொண்டுள்ள சாம்பியா, மலாவி, மால்டாவாழ் மக்களுக்கு அவர்களின் பிரதிநிதிகளாக விளங்கும் ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள் ஊடாக எமது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கின்றோம். ஏகாதிபத்தியம், காலனித்துவம், நவகாலனித்துவம் என்பவற்றுக்கு எதிராகப் போராடும் அணிசேரா நாடுகளின் குழுமத்தில் அவை கையோடு சேர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இப்பேரவையின் தலைவர் (கானா அதிபர் அலெக்ஸ் குவைசன்-சகி) அவர்களுக்கும் எமது பாராட்டை நாங்கள் தெரிவிக்க விரும்புகின்றோம். அத்துணை உயர்ந்த பதவியில் அவர் ஏற்றப்பட்டமை தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அண்மைக்காலம் வரை ஏகாதிபத்தியத்தினால் கட்டியாளப்பட்ட ஆபிரிக்க மக்கள் மாபெரும் வெற்றிகளை ஈட்டிக்கொள்ளும் புதிய வரலாற்றுக் காலகட்டத்தை அவரது பதவியேற்றம் புலப்படுத்துகின்றது. இன்று பெருந்தொகையான ஆபிரிக்க மக்கள் நீதியான முறையில் தமது சுயநிர்ணய உரிமையைக் கையாண்டு இறைமைவாய்ந்த அரசுகளை அமைத்துள்ளார்கள். கட்டியாளும் முறைமைக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது. கோடிக்கணக்கான ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க மக்கள் புதியதொரு வாழ்வை எதிர்கொள்ள எழுந்து நிற்கின்றார்கள். தமது தங்குதடையற்ற சுயநிர்ணய உரிமையையும், தமது நாடுகளின் சுதந்திரமான விருத்தியையும் நாடி நிற்கின்றார்கள்.
அவைத்தலைவர் அவர்களே, உறுப்புநாடுகள் உங்களிடம் ஒப்படைத்த பணிகளை நிறைவேற்றுவதில் நீங்கள் வெற்றிவாகை சூட வாழ்த்துகின்றோம்.
மிகமுக்கிய சர்ச்சைக்குரிய சங்கதிகள் பற்றி, இந்த அரங்கினைப் பயன்படுத்துவதற்கு உகந்த முழுமையான பொறுப்புணர்வுடன், கியூபாவின் நிலைப்பாட்டை இங்கு நாங்கள் தெட்டத்தெளிவாக மனந்திறந்து எடுத்துரைக்க விரும்புகின்றோம்.
இப்பேரவை அதன் அசட்டுத்தனமான மனநிறைவை உதறித்தள்ளிவிட்டு முன்னகர்வதைக் காணவே நாங்கள் விரும்புகின்றோம். குழுக்கள் தமது பணியைத் துவக்குவதைக் காண விரும்புகின்றோம். எதிர்ப்புக் கிளம்பியவுடன் தமது பணியை அவை நிறுத்தக் கூடாது. இந்த அரங்கினை உலகின் கடுமையான பிரச்சனைகளைத் தீர்க்கும் அரங்காகக் கொள்வதை விடுத்து ஒரு பயனற்ற நாவன்மைச் சுற்றுப்போட்டியாக மாற்றவே ஏகாதிபத்தியம் விரும்புகின்றது.  அது அவ்வாறு செய்யாவாறு நாங்கள் தடுக்கவேண்டும். இது வெறுமனே ஐ. நா.வின் 19வது பேரவை என்று எதிர்காலத்தில் நினைவுகூரப்படலாகாது. அந்த இலக்கை கருத்தில்கொண்டே நாங்கள் பாடுபடவேண்டும்.
அவ்வாறு செயற்படும் உரிமையும் கடப்பாடும் எமக்கு உண்டு என்பதை நாங்கள் உணருகின்றோம். ஏனெனில், இடைவிடாது பிணக்குகளுக்கு உள்ளாகும் நாடுகளுள் ஒன்றாக கியூபா விளங்குகின்றது. சிறிய நாடுகளின் இறைமையை நிலைநிறுத்தும் நெறிகள் அன்றாடம், நொடிக்கொரு தடவை சோதனைக்கு உள்ளாக்கப்படும் நாடுகளுள் கியூபா ஒன்று. அதேவேளை மானுடத்தின் தற்கால சூழ்நிலையில் உலக மக்கள் தமது விடுதலையை ஈட்டவும், தமது சுதந்திரத்தைப் பேணவும் முடியும் என்பதை அமெரிக்க ஏகாதிபத்தியத்திலிருந்து ஒருசில அடிகளுக்கு அப்பால் அமைந்திருக்கும் உலகின் சுதந்திர அகழிகளுள் ஒன்றாகிய எமது தாயகம் அதன் நடவடிக்கைகள் மூலமாகவும், அன்றாட எடுத்துக்காட்டுகள் மூலமாகவும் உணர்த்தி வருகின்றது.  
தற்பொழுது ஒரு சமூகவுடமை முகாம் அமைந்திருப்பதும், அது அன்றாடம் வலுப்பட்டு வருவதும், அதனிடம் படைக்கலங்கள் மிகுந்துவருவதும் உண்மைதான். எனினும் ஒரு நாடு தப்பிப்பிழைப்பதற்கு அங்கு மேலதிக நிலைமைகள் ஏற்பட வேண்டியுள்ளது: உள்நாட்டில் ஒற்றுமை பேணப்பட வேண்டியுள்ளது; தனது தலைவிதியை தானே நிர்ணயிப்பதில் நம்பிக்கை வைக்க வேண்டியுள்ளது; தாய்நாட்டையும் புரட்சியையும் காக்க இறுதிவரை தளராது போராட உறுதிபூண வேண்டியுள்ளது. சிறப்பார்ந்த பேராளர்களே, அத்தகைய நிலைமைகள் கியூபாவில் கானப்படுகின்றன.  
இப்பேரவை மும்முரமான பிரச்சனைகளைக் கருத்தில்கொள்ள இருக்கின்றது. அவற்றுள் சமாதான சகவாழ்வு என்பது ஒன்று. அதற்கு நாங்கள் தனி முக்கியத்துவம் அளிக்கின்றோம். வெவ்வேறு பொருளாதார முறைமைகள் கொண்ட அரசுகளிடையே சமாதான சகவாழ்வு குறித்து எவரது உள்ளத்திலும் ஐயம் ஏற்படாவண்ணம் முதற்கண் அப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகின்றோம். உலகில் இத்துறை சார்ந்து அதிக முன்னேற்றம் ஈட்டப்பட்டுள்ளது. எனினும், சமாதான சகவாழ்வு என்பது உலகின் வல்லரசுகளுக்கு மாத்திரமே உரியது என்று உலகை நம்பவைப்பதற்கு ஏகாதிபத்தியம், குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் முயன்றுள்ளது. எமது ஜனாதிபதி கைரோவில் வைத்துக் கூறியதை, பின்னர் அணிசேரா நாடுகளின் அரசுத் தலைவர்களது இரண்டாவது மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதை, இங்கு திரும்பவும் நாங்கள் கூறுகின்றோம்:  உலக சமாதானத்தை நாங்கள் நிலைநாட்ட வேண்டும் என்றால், வலிய நாடுகளிடையே மாத்திரம் சமாதான சகவாழ்வினை மட்டுப்படுத்த முடியாது. நாடுகளின் பருப்பத்தைப் பொருட்படுத்தாமல், நாடுகளை இணைத்த பழைய வரலாற்று உறவுகளைப் பொருட்படுத்தாமல், குறித்த ஒரு கணத்தில் சில நாடுகளிடையே எழக்கூடிய பிரச்சனைகளைப் பொருட்படுத்தாமல் எல்லா அரசுகளிடயேயும் சமாதான சகவாழ்வு கைக்கொள்ளப்பட வேண்டும்.
எத்தகைய சமாதான் சகவாழ்வை நாங்கள் நாடுகின்றோமோ அத்தகைய சமாதான சகவாழ்வு தற்பொழுது மீறப்பட்டு வருகின்றது. கம்போடிய அரசு நடுநிலை பேணிய ஒரே காரணத்துக்காக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிகளுக்கு அது அடிபணியவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, தென் வியற்நாமில் இருக்கும் அமெரிக்க படைத்தளங்களிலிருந்து அதன்மீது எல்லா வகையான துரோகத்தனமான, மிருகத்தனமான தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  
பிளவுண்ட நாடாகிய இலாவோசும் கூட எல்லா வகையான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டு மக்கள் வான்வழித் தாக்குதல்களின் மூலம் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். ஜெனீவாவில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மீறப்பட்டுள்ளன. இலாவோசின் ஆள்புலத்தில் ஒரு பாகம் ஏகாதிபத்தியப் படைகளின் இடைவிடாத கோழைத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தை  எதிர்நோக்கியுள்ளது.
வியற்னாமிய குடியாட்சி அரசுக்கும், மற்றும் பிற அரசுகள் சிலவற்றுக்கும் இத்தகைய ஆக்கிரமிப்பு வரலாறுகள் தெரியும். திரும்பவும் தனது எல்லை மீறப்படுவதை வியற்னாமியக் குடியரசு கண்டுள்ளது. தனது படைக்கல நிலைகளை எதிரியின் குண்டுவீச்சு விமானங்களும் போர்-விமானங்களும் தாக்குவதை அது கண்டுள்ளது. தனது ஆள்புல நீர்நிலைகளை அமெரிக்க போர்க்கப்பல்கள் மீறுவதையும், கடற்படை நிலைகளைத் தாக்குவதையும் அது கண்டுள்ளது. இந்தக் கணத்தில் கூட வியற்னாமிய குடியரசு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. அமெரிக்க போர்மூட்டிகள் தாம் பல்லாண்டுகளாக தென்வியற்னாமிய மக்களுக்கு எதிராகத் தொடுத்துவரும் போரை வியற்னாமியக் குடியரசின் ஆள்புலத்தினுள் அப்பட்டமாக விரிவுபடுத்தக் கூடும். சோவியத் அரசும், சீன மக்கள் குடியரசும் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. உலக சமாதானத்துக்கு ஆபத்து விளையும் சூழ்நிலையை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். மேலும், இந்த ஆசியப் பிராந்தியத்தில் இலட்சக்கணக்கான மக்கள் என்றென்றும் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளார்கள். அமெரிக்க படையெடுப்பாளரின் உள்ளத்துள் எழும் சபலத்துக்கு அவர்கள் இரையாக்கப்பட்டுள்ளார்கள்.
சைப்பிரசிலும் சமாதான சகவாழ்வு மிருகத்தனமான முறையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தமது இறைமையை விறலுடனும் உறுதியுடனும் காத்துநிற்கும் நிர்பந்தத்துக்கு சைப்பிரசு மக்களையும், அரசாங்கத்தையும் துருக்கி அரசாங்கம், நேற்றோ இரண்டும் உட்படுத்தியுள்ளன.
சகவாழ்வு எப்படி அமையவேண்டும் என்பது குறித்து தனது சொந்த வடிவமைப்பை உலக பிராந்தியங்கள் அனைத்திலும் திணிக்க ஏகாதிபத்தியம் முயல்கின்றது. மெய்யான சகவாழ்வு என்ன என்பதை, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களே சமூகவுடைமை முகாமுடன் கூடி, ஏகாதிபத்தியத்துக்கு எடுத்துக்காட்ட வேண்டும். ஐ. நா. அவர்களை ஆதரிக்க கடமைப்பட்டுள்ளது.
இன்னொரு சங்கதியையும் நாங்கள் குறிப்பிட வேண்டும்: அதாவது இறைமைவாய்ந்த அரசுகளின் உறவினை மாத்திரம் குறித்து சமாதான சகவாழ்வு என்னும் கருத்தீடு செவ்வனே வரையறுக்கப்பட வேண்டும் என்பதற்கில்லை.   நாடுகளுக்கு இடையேயான சமாதான சகவாழ்வு என்பது சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும், ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையேயான சமாதான சகவாழ்வை உள்ளடக்காது என்று மார்க்சியர்களாகிய நாங்கள் வலியுறுத்தி வந்துள்ளோம். மேலும், கட்டியாள்வோரின் ஒடுக்குமுறைகள் அனைத்திலிருந்தும் முழு விடுதலை பெறும் உரிமை என்பது இப்பேரவையின் அடிப்படை நெறியுமாகும். ஆதலால்தான் போர்த்துக்கேய கினியா, அங்கோலா, மொசாம்பிக்கு எனப்படும் நாடுகளில் கட்டியாளப்படும் மக்களுடன், தமது சுதந்திரத்தைக் கோரிய குற்றத்துக்காகப் படுகொலை செய்யப்பட்டுள்ள மக்களுடன் நாங்கள் கொண்ட தோழமையை இத்தால் வெளிப்படுத்துகின்றோம்.  கைரோ பிரகடனத்துக்கிணங்க எம்மால் இயன்றவரை அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராய் இருக்கின்றோம்.
போட்டோரிக்கோ மக்களுடனும், அவர்களது மகத்தான தலைவர் பேதுரு அல்பிசு கம்போசு அவர்களுடனும் நாங்கள் கொண்ட தோழமையை இத்தால் வெளிப்படுத்துகின்றோம். பிறிதொரு வஞ்சகம் எனும்படியாக, தனது வாழ்நாளை அவர் சிறையில் கழித்தபிறகு, 72வது வயதான நிலையில், ஏறத்தாழ வாய்பேச முடியாத நிலையில், முடக்குவாதத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்! இன்னமும் விடுதலைபெறாத, ஆனாலும் அடிபணியாத இலத்தீன் அமெரிக்காவின் சின்னமாய் திகழ்பவர் அல்பிசு கம்போசு.  பல்லாண்டுச் சிறையும், சிறையில் தாங்கமுடியாத நெருக்குதல்களும், உளவதையும், தனிமையும், தனது மக்களிடமிருந்தும் குடும்பத்திடமிருந்தும் முற்றுமுழுதாகப் பிரிக்கப்பட்ட நிலையும், கைப்பற்றிய நாட்டிடமும் அவரது தாயகத்தைச் சேர்ந்த மேற்படி நாட்டின் அடிவருடிகளிடமும் குடிகொண்ட திமிரும்—எதனாலுமே அவரது திடசித்தத்தை குலைக்க முடியவில்லை. கியூபாவின் பேராளர்களாகிய நாங்கள் கியூபா மக்களின் சார்பாக எமது அமெரிக்க கண்டத்துக்கு மாண்பு சேர்க்கும் அந்த நாட்டுப்பற்றாளரை நன்றியுடன் நயந்து புகழாரம் சூட்டுகின்றோம்.
போட்டோரிக்கோவை ஓர் இரட்டைப் பண்பாட்டு மாதிரிப்புலமாக மாற்றுவதற்கு அமெரிக்கா பல்லாண்டுகளாக முயன்று வந்துள்ளது: ஆங்கிலச் சொற்களின் உருமாற்றங்களுடன் கூடிய இஸ்பானிய மொழி ஒன்று, திறந்து கொடுப்பதற்கு உகந்த கதவுப் பிணைச்சலுடன் கூடிய இஸ்பானிய மொழி ஒன்று அங்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளது—அதாவது அமெரிக்க படையினரின் முன்னிலையில் அடிபணிதல் நன்று! ஒருசில மாதங்களுக்கு முன்னர், ஆயுதம் ஏந்தாத பனாமா மக்களை அமெரிக்கப் படையினர் படுகொலை செய்தனர். மிக அண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் புரிந்த குற்றங்களுள் அது ஒன்று. அவ்வாறே கொரியாவில் தொடுக்கப்பட்டதைப் போன்ற ஏகாதிபத்தியப் போர்களில் போட்டோரிக்கோப் படையினர் பலிக்கடாக்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். தமது சொந்த உடன்பிறப்புகளைச் சுட்டுத்தள்ள அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். போட்டோரிக்கோ மக்களின் திடசித்தமும், அவர்களின் வரலாற்றுத் தலைவிதியும் இவ்வாறு தாக்குண்ட போதிலும் கூட, தமது பண்பாட்டையும், இலத்தீன் வரிவடிவத்தையும், தேசிய உணர்வுகளையும் அவர்கள் கட்டிக்காத்துள்ளார்கள். அந்த இலத்தீன் அமெரிக்க தீவில் வாழும் பாமர மக்களிடையே குடிகொண்டுள்ள தீராத விடுதலை வேட்கைக்கு அது சான்று பகர்கின்றது.
மக்களின் திடசித்தத்தை ஏளனம்செய்யும் உரிமை சமாதான சகவாழ்வு நெறியினுள் அடங்காது என்றும் நாங்கள் எச்சரிக்க விரும்புகின்றோம். பிரித்தானிய கயானா எனப்படும் நாட்டில் அப்படி நடக்கின்றது. அங்கே பிரதம மந்திரி செட்டி ஜகனின் அரசாங்கம் எல்லா வகையான நெருக்குதல்களுக்கும் சதிகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. மக்களின் திடசித்தத்தை மீறி, அமைந்தொழுகும் புதிய அரசாங்கம் ஒன்றை வடிவமைத்து, கள்ளத்தனமாக அதை ஆட்சியில் அமர்த்தி, அந்த அமெரிக்க கண்டத்து நாட்டுக்கு நலமடித்த சுதந்திரத்தை அளிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிய அவகாசம் ஈட்டுவதற்காக அதன் விடுதலை பின்போடப்பட்டுள்ளது. கயானா விடுதலை பெறுவதற்கு எத்தகைய வழிகளையும் கையாள நிர்ப்பந்திக்கப்படலாம்; எனினும் கியூபாவின் வன்மையான தார்மீக ஆதரவு கயானா மக்களுக்கே உரித்தாகும். 
தவிரவும் குவாடலூபே, மார்ட்டினீக்குத் தீவுகள் நெடுங்காலமாக சுயநிர்ணய உரிமைக்காகப் போராடியும் கூட அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதையும் நாங்கள் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இத்தகைய நிலைவரம் தொடரக் கூடாது.
தென் ஆபிரிக்காவில் நடப்பவை குறித்து உலகை மீண்டும் எச்சரிக்கும் நோக்குடனும் நாங்கள் உரையாற்ற வேண்டியுள்ளது. உலக நாடுகளின் கண்ணெதிரே மிருகத்தனமான இனவொதுக்கல் கொள்கை அங்கு கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆபிரிக்க கண்டத்தில் ஓர் இனம் இன்னோர் இனத்திலும் உயர்ந்தது என்னும் அதிகாரபூர்வமான கொள்கையைச் சகித்துக்கொள்ளும்படி அக்கண்டத்து மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.  இத்தகைய இன உயர்ச்சியின் பேரால் தண்டனைக்கு உள்ளாகும் அச்சமின்றிக் கொலைகள் புரியப்படுகின்றன.  இதை நிறுத்த ஐ. நா.வினால் ஒன்றும் செய்ய முடியாதா?
கொங்கோ நாட்டின் துயரார்ந்த நிலையை நான் கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன். அது தற்கால உலக வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த நாடு. தண்டனைக்கு உள்ளாகும் அச்சம் அறவே இல்லாமல், மிகுந்த திமிருடன் கூடிய ஏளனத்துடன் மக்களின் உரிமைகள் மீறப்படும் விதத்தை அது காட்டுகின்றது.  அதற்கான நேரடிக் காரணம் கொங்கோவின் மாபெரும் செல்வமே. ஏகாதிபத்திய நாடுகள் அதை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றன. சகவாழ்வுப் பிரச்சனை முழுவதும் மக்களின் செல்வத்தை அபகரிப்பதிலேயே வேர்கொண்டுள்ளது என்று தோழர் பிடல் காஸ்ட்றோ முதன்முதல் ஐ. நா.வுக்கு வருகைதந்து உரையாற்றியபொழுது குறிப்பிட்டார். “சூறையாடும் மனப்பான்மைக்கு முடிவுகட்டினால், போர்புரியும் மனப்பான்மைக்கும் முடிவுகட்டப்படும்” என்றார்.
எனினும் சூறையாடும் மனப்பான்மைக்கு முடிவுகட்டப்படவில்லை; மாறாக, சூறையாடும் மனப்பான்மை என்றுமிலாவாறு வலுவடைந்துள்ளது. ஆதலால்தான் லுமும்பாவைக் கொல்வதற்கு ஐ. நா.வின் பெயரைப் பயன்படுத்திய அதே ஆட்கள் இன்று வெள்ளை இனத்தைப் பாதுகாக்கும் பெயரால் ஆயிரக்கணக்கான கொங்கோ மக்களைக் கொன்று குவிக்கின்றனர். லுமும்பா   ஐ. நா. மீது வைத்த நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை எவ்வாறு நாங்கள் மறக்க முடியும்? அந்த நாட்டில் ஐ. நா. படையினர் நிலைகொண்டதைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற சதிகளையும் சூழ்ச்சிகளையும் எவ்வாறு நாங்கள் மறக்க முடியும்? அவர்களின் தயவுடன், தண்டனைக்கு உள்ளாகும் அச்சமின்றி, அந்த மகத்தான ஆபிரிக்கப் பற்றாளனை அவர்கள் கொன்றார்கள்.  சிறப்பார்ந்த பேராளர்களே, கொங்கோவில் ஐ. நா.வின் அதிகாரத்தை மீறியவர் சோம்பே என்பதை எவ்வாறு நாங்கள் மறக்க முடியும்? சரிவரச் சொல்வதாயின், நாட்டுப்பற்றுக் கொண்டல்ல, ஏகாதிபத்தியவாதிகளிடையே எழுந்த பிணக்கினைப் பயன்படுத்தியே அவர் அவ்வாறு செயற்பட்டார். பெல்ஜிய ஆதரவுடன் கதாங்கா பிரிவினையைத் துவக்கியவர் அவரே.  கொங்கோவில் ஐ. நா.வின் அலுவல்கள் எல்லாம் முடிவடைந்த பிறகு கதாங்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட அதே சோம்பே கொங்கோவுக்குத் திரும்பி, அதன் அதிபதியாகவும் எசமானாகவும் மாறியதை ஒருவர் எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? விளக்க முடியும்? ஏகாதிபத்தியவாதிகளின் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு அத்துயரச் செயலைச் செய்தது ஐ. நா.வே என்பதை எவரால் மறுக்க முடியும்?  
அதாவது: கதாங்கா பிரிவினையைத் தடுக்க திடீர் திடீரெனப் படைகள் திரட்டப்பட்டன! அன்று கதாங்கா பிரிவினையைத் துவக்கிய அதே சோம்பே இன்று அதே கொங்கோவின் ஆட்சியாளர்! அதேவேளை கொங்கோவின் செல்வம் ஏகாதிபத்தியத்தின் கைவசம்! அங்கு ஐ. நா.வுக்கு ஏற்பட்ட செலவினத்தை அங்கத்துவ நாடுகள் இறுக்க வேண்டும்! போர் வணிகர்களுக்கு அசல் வியாபாரம்! ஆதலால்தான் மேற்படி குற்றத்துக்கு ஏற்பட்ட செலவை இறுக்க மறுக்கும் சோவியத் அரசின் நியாயமான நிலைப்பாட்டை கியூபா அரசாங்கம் ஆதரிக்கின்றது.  
அது போதாது என்பது போல, உலகத்தை சீற்றத்துள் ஆழ்த்தும் வண்ணம் தற்பொழுது பழிசுமத்தப்படுகின்றது. பாதகம் புரிந்தோர் யார்? பெல்ஜிய வான்குடைப் படையினர்; பிரித்தானிய படைத்தளங்களிலிருந்து புறப்பட்டவர்கள்; அமெரிக்க விமானங்களில் கொண்டுவரப்பட்டவர்கள்; ஐரோப்பவில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய நாடு, நாகரிகமடைந்த சுறுசுறுப்பான நாடு, பெல்ஜிய இராச்சியம் எனப்படும் நாடு, ஹிட்லரது பட்டாளத்தின் படையெடுப்புக்கு உட்பட்ட நாடு கொங்கோவில் புரிந்த செயல் நேற்று நடந்தது போல் எமக்கு நினைவிருக்கிறது. சின்னஞ்சிறிய இந்த நாடு ஜேர்மானிய ஏகாதிபத்தியத்தின் கையில் படுகொலையுண்டபோது பெல்ஜிய மக்களை நேசித்த நாங்கள் மிகவும் கொதிப்படைந்தோம். ஆனால் இந்த ஏகாதிபத்தியக் காசின் மறுபக்கத்தை எங்களுள் பலர் கண்டுகொள்ளவில்லை. தமது உடலில் போதியளவு ஆரியக் குருதி பாயாத காரணத்தால் ஜேர்மனியின் காலடியில் மிதியுண்டு வருந்திய வேளையிலும் கூட தமது நாட்டின் சுதந்திரத்தைக் காத்துநின்று போராடிய பெல்ஜிய நாட்டுப்பற்றாளர்களின் புதல்வர்களே தற்பொழுது வெள்ளை இனத்தின் பேரால் ஆயிரக்கணக்கான கொங்கோ மக்களைக் கொடூரமான முறையில் கொன்று குவிக்கக்ககூடும்.
நேற்று அடிமைகளாய் கட்டியாளப்பட்ட நிலையில் எமக்குப் புலப்படாத புதிய கோலங்கள் இன்று எமது சுதந்திர விழிகளுக்குத் தென்படுகின்றன: அதாவது, “மேலை நாகரிகம்” என்பது அதன் பின்புறம் கழுதைப்புலிகளையும் குள்ளநரிகளையும் மறைத்து வைத்துக்கொண்டு முன்புறம் கண்ணைப் பகட்டும் அதன் போலிமுகத்தைக் காட்டுகின்றது. கொங்கோவில் அத்தகைய “மனிதாபிமான” பணிகளை நிறைவேற்றப் புறப்பட்டவர்களுக்கு அந்த ஒரேயொரு பெயரையே சூட்டமுடியும். ஆயுதம் ஏந்தாத மக்களை இரைகொள்ளும் விலங்கு! அதையே ஏகாதிபத்தியம் மக்களுக்குச் செய்கின்றது. அதுவே ஏகாதிபத்திய “வெள்ளையனைச்” சிறப்பிக்கின்றது!
கொங்கோவில் இழைக்கப்பட்ட குற்றத்துக்கு பழிதீர்க்க, விடுதலைபெற்ற உலக மக்கள் அனைவரும் தயாராய் இருக்க வேண்டும். ஏகாதிபத்திய கட்டமைப்பினால் கீழ்மாந்தராக மாற்றப்பட்ட அப்படையினருள் பலர் ஒருவேளை தாம் உயர்ந்த ஓர் இனத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவே போராடுவதாக உளமார நம்பக்கூடும்.  எனினும், பிறிதொரு கதிரவனால் கருமையாக்கப்பட்ட தோலும், வெவ்வேறு நிறங்களும் கொண்டவர்களே இப்பேரவையில் பெரும்பானமையோர். ஆட்களுக்கு இடையேயான வேறுபாடு என்பது அவர்களது தோலின் நிறத்தில் தங்கியிருக்கவில்லை, அது உற்பத்திச் சாதனங்களின் உடைமை முறைகளிலேயே தங்கியிருக்கிறது, உற்பத்தி சார்ந்த உறவு முறைகளிலேயே தங்கியிருக்கிறது என்பதை அவர்கள் முற்றுமுழுதாகவும் தெட்டத்தெளிவாகவும் புரிந்துகொள்ளுகின்றார்கள். எனவே கட்டியாளும் வெள்ளைச் சிறுபான்மையோரால் அடக்கி ஒடுக்கப்பட்ட தென் ரொடேசிய, தென்மேற்கு ஆபிரிக்க, பசுத்தலாந்து, பெசுனாலாந்து, சுவாசிலாந்து, பிரஞ்சு சோமாலிலாந்து, பாலஸ்தீனிய அறபு மக்களுக்கும், ஏடன் மற்றும் காப்புலங்களின் மக்களுக்கும், ஓமான் மக்களுக்கும், ஏகாதிபத்தியத்துடனும், கட்டியாள்வோருடனும் போராடும் மக்கள் அனைவருக்கும் கியூபா பேராளர்கள் தமது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்ளுகின்றார்கள்.  அவர்களுக்கு எமது ஆதரவை மீண்டும் நாங்கள் வலியுறுத்துகின்றோம். எமது சகோதர இந்தோனேசிய குடியரசு, மலேசியாவுடன் கொண்ட உறவில் எதிர்நோக்கும் பிணக்கிற்கு நீதியான தீர்வு கிட்டும் என்ற எமது நம்பிக்கையையும் இத்தால் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.  
அவைத்தலைவர் அவர்களே, இப்பேரவையின் அடிப்படை ஆய்வுப்பொருள்களுள் பொதுப்படையான ஆயுதக்களைவும், முற்றுமுழுதான ஆயுதக்களைவும் அடங்கும்.  பொதுப்படையான ஆயுதக்களைவுக்கும், முற்றுமுழுதான ஆயுதக்களைவுக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கின்றோம். அத்துடன் அனல்வலு அணுவாயுதங்களை முற்றுமுழுதாக அழிக்கும்படியும் நாங்கள் வலியுறுத்துகின்றோம். அதனைக் குறித்து மக்கள் அனைவரும் காணும் கனவை நனவாக்கும் பொருட்டு உலக நாடுகள் அனைத்தும் கலந்துகொள்ளும் மாநாடு ஒன்று கூட்டப்படுவதை நாங்கள் ஆதரிக்கின்றோம். ஆயுதப்போட்டி என்பது என்றுமே போருக்கு இட்டுச்செல்லும் என்று எமது பிரதம மந்திரி இப்பேரவையில் ஆற்றிய உரையில் எச்சரித்தார்.  உலகத்தில் புதிய அணுவாயுத வல்லரசுகள் தோன்றியுள்ளன. மோதல் ஏற்படும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. அனல்வலு அணுவாயுதங்களை முற்றுமுழுதாக அழிப்பதற்கு அத்தகைய ஒரு மாநாடு அவசியம் என்று நாங்கள் நம்புகின்றோம். அதற்கு முதற்படியாக ஆயுத பரிசோதனைகள் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட வேண்டும். அதேவேளை ஒவ்வொரு நாடும் வழமையான ஆயுதங்களை ஏந்தியும் கூட எவ்வித ஆக்கிரமிப்பிலும் ஈடுபடாமல் மற்ற நாடுகளின் தற்போதைய எல்லைகளை மதித்தொழுகும் கடப்பாட்டையும் நாங்கள் தெளிவாக நிலைநிறுத்த வேண்டும்.  
பொதுப்படையான ஆயுதக்களைவையும், முற்றுமுழுதான ஆயுதக்களைவையும்,  எல்லா அணுவாயுதக் களங்களின் அழிவையும், புதிய அனல்வலு அணுவாயுத உற்பத்தி மற்றும் அணுவாயுத பரிசோதனை எதற்கும் முற்றுமுழுதான தடையையும் நாடும் உலக மக்களின் குரலுடன் எமது குரலும் சேர்ந்து ஒலிக்கும் அதேவேளையில்  நாடுகளின் ஆள்புலத் திண்மை மதிக்கப்பட வேண்டும் என்பதையும், ஆயுதம் ஏந்திய ஏகாதிபத்தியத்தின் கை தாழ்த்தப்பட வேண்டும் என்பதையும், ஏனெனில் வழமையான ஆயுதங்களை மாத்திரம் அது பயன்படுத்தும் வேளையில் கூட ஆபத்துக் குன்றாது என்பதையும் இங்கு வலியுறுத்துவது அவசியம் என்று நாங்கள் நம்புகின்றோம். கொங்கோவில் காப்பார் யாருமற்ற, ஆயுதம் ஏந்தாத, ஆயிரக்கணக்கான குடிமக்களைக் கொன்றவர்கள் அணுக்குண்டைப் பயன்படுத்தவில்லை; வழமையான ஆயுதங்களையே பயன்படுத்தினார்கள்.  வழமையான ஆயுங்களைக் கொண்டே பெருவாரியான மக்களை ஏகாதிபத்தியம் கொன்றுள்ளது.  
அமெரிக்கா எமது சொந்த ஆள்புலத்திலும், போட்டோரிக்கோவிலும், பனாமாவிலும் மற்றும் பிற இலத்தீன் அமெரிக்க அரசுகளிலும் ஆக்கிரமித்த தளங்களில் எவ்வித கட்டுப்பாடுமின்றி வழமையான ஆயுதங்களையும், அணுவாயுதங்களையும் வைத்திருக்கும் உரிமை தனக்கு இருப்பதாக நினைக்கிறது. இப்பேரவையில் நாங்கள் நாடும் நடவடிக்கைகள் பயனளிக்க வேண்டுமாயின், அதை இங்கு குறிப்பித் தேவையில்லை என்றாலும் கூட, ஒரு சங்கதியை நாங்கள் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது: அதாவது மேற்படி தளங்களை அமெரிக்கா வைத்திருக்கும்வரை பிராந்திய அணுவாயுதக் களைவு ஒப்பந்தம் எதற்கும் எம்மால் அமைந்தொழுக முடியாது.
அண்மையில் அமெரிக்க கண்ட அரசுகளின் அமைப்பு கியூபாவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.  அதன்படி ரியோ ஒப்பந்தத்தைக் காட்டி ஒரு தாக்குதல் தொடுக்கப்படலாம். எனவே எமது பாதுகாப்புக்கு நாமே ஏற்பாடு செய்யவேண்டும் என்று எண்ணுகின்றோம்.
இதை ஓர் அவப்பேறு எனலாம். அதாவது சற்று முன்னர் நாங்கள் குறிப்பிட்ட மாநாடு அதன் இலக்குகள் அனைத்தையும் எய்துவது கடினம்; எய்தினால், அது மானுட வரலாற்றில் மிகமுக்கிய நிகழ்வாக அமையும்; எய்துவதை உறுதிப்படுத்தும் பொருட்டு சீன மக்கள் குடியரசுக்கு பிரதிநித்தித்துவம் அளிப்பது அவசியம். ஆதலால்தான் இத்தகைய மாநாட்டை நாங்கள் நடத்த வேண்டியுள்ளது. சீன மக்கள் குடியரசின் அரசாங்கமே அந்த மக்களின் ஒரே பிரதிநிதி. அமெரிக்க ஆதரவுடன் தாய்வான் மாகாணத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குழுமம் சீன மக்கள் குடியரசின் பிரதிநிதிக்குரிய இருக்கையை அபகரித்து வைத்திருக்கிறது. சீன மக்கள் குடியரசு என்று ஒன்று உண்டு என்ற உண்மையை ஒப்புக்கொள்வதும், அதற்குரிய இருக்கையை அதில் அமர்வதற்கு அருகதையுடைய அக்குடியரசுக்கே அளிப்பதும் உலக மக்களுக்கு மிகவும் எளிதாக் கைகூடும் அலுவல் அல்லவா!
ஐ. நா.வில் சீனாவின் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சனையை எந்த வகையிலும் ஒரு புதிய நாட்டை அனுமதிக்கும் விடயமாகக் கொள்ள முடியாது. சீன மக்கள் குடியரசின் சட்டப்பேறான உரிமைகளை அதற்கு மீள அளிக்கும் அலுவலாகவே அதனைக் கொள்ளவேண்டும்.
“இரண்டு சீனாக்கள்” என்னும் சதியை நாங்கள் வன்மையாய் மறுதலிக்க வேண்டும்.  தாய்வானைச் சேர்ந்த சியாங் கை-சேக் குழுமம் ஐ. நா.வில் நிலைமண்ட முடியாது.  சீன மக்களின் பிரதிநிதித்துவத்தை அபகரித்த தாய்வானை வெளியேற்றி, அவர்களின் சட்டப்பேறுவாய்ந்த பிரதிநிதியை வரவழைக்கும் அலுவலையே இங்கு நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம் என்பதை மீண்டும் நாங்கள் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.  
வருகைதந்து வாக்களிக்கும் உறுப்பினர்களுள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என்னும் நிபந்தனையைத் திணிக்கும் நோக்குடன் ஐ. நா.வில் சீனாவின் சட்டப்பேறுவாய்ந்த பிரதிநிதித்துவத்தை ஒரு ”முக்கிய பிரச்சனை”யாக முன்வைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்துவதற்கு எதிராக நாங்கள் எச்சரிக்கை விடுக்கின்றோம்.  உண்மையில் சீன மக்கள் குடியரசை ஐ. நா.வில் சேர்க்கும் விடயம் முழு உலகுக்கும் ஒரு முக்கிய விடயமே ஆயினும் ஐ. நா.வின் கட்டமைப்பை பொறுத்தவரை அது முக்கியமில்லை. ஐ. நா.வின் கட்டமைப்பை பொறுத்தவரை அது ஒரு வெறும் நடைமுறைப் பிரச்சனையாகவே அமைய வேண்டும்; அமைகையில் நீதி பாலிக்கப்படும். நீதியை ஈட்டுவது முக்கியம். அது போலவே இப்பேரவையினருக்கு பார்க்க விழிகளும், கேட்கச் செவிகளும், பேச நாக்களும், தீர்மானிக்க திட்பமான பிரமாணங்களும் உண்டு என்பதை  ஒரேயடியாக வெளிப்படுத்துவதும் முக்கியம்.
நேற்றோவில் அங்கம் வகிக்கும் நாடுகளிடையே அணுவாயுதங்களின் பெருக்கம், குறிப்பாக பேரழிவு விளைவிக்கும் இவ்வாயுதங்களை ஜேர்மனிய குடியாட்சிக் குடியரசு (மேற்கு ஜேர்மனி) வைத்திருப்பது, ஆயுதக்களைவு உடன்படிக்கை ஒன்று கைகூடும் வாய்ப்பை மேலும் அருகச்செய்யும்.   ஜேர்மனி அமைதிவழியில் மீளவும் ஒருங்கிணையும் பிரச்சனை அத்தகைய ஓர் உடன்படிக்கையுடன் பிணைந்த ஒன்றாகும். தெட்டத்தெளிவான புரிந்துணர்வு ஏற்படும்வரை, ஜேர்மனிய குடியாட்சிக் குடியரசு (கிழக்கு ஜேர்மனி), ஜேர்மனிய இணைப்பாட்சிக் குடியரசு (மேற்கு ஜேர்மனி) என இரண்டு ஜேர்மனிகள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜேர்மனிய குடியாட்சிக் குடியரசு முழு உரிமைகளுடனும் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினால் மாத்திரமே ஜேர்மானியப் பிரச்சனையைத் தீர்க்க முடியும்.
இனி நிகழ்ச்சிநிரலில் பொதுப்படையாகப் பொறிக்கப்பட்டுள்ள பொருளாதார விருத்தி மற்றும் சர்வதேய வர்த்தகம் தொடர்பான பிரச்சனைகளை நாங்கள் சுருக்கமாய் எடுத்துரைக்க வேண்டியுள்ளது. இந்த 1964ம் ஆண்டிலேயே ஜெனீவா மாநாடு நடத்தப்பட்டது. அங்கு சர்வதேய உறவுகள் தொடர்பான மேற்படி அம்சங்கள் பலவும் கருத்தில் கொள்ளப்பட்டன. எமது பேராளர்கள் விடுத்த எச்சரிக்கைகளும், ஆரூடங்களும் முற்றுமுழுதாக மெய்யாகின; பொருளாதாரவாரியாகப் பிறநாடுகளில் தங்கியிருக்கும் நாடுகள் அவப்பேறுகளுக்கு உள்ளாகின.
கியூபாவைப் பொறுத்தவரை ஒரேயொரு சங்கதியை மாத்திரமே நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்: அதாவது மேற்படி மாநாடு தெட்டத்தெளிவாக விதந்துரைத்தவற்றை ஐக்கிய அமெரிக்கா நடைமுறைப்படுத்தவில்லை.  கியூபாவுக்கு மருந்துவகைகள் விற்கப்படுவதையும் அமெரிக்க அரசாங்கம் அண்மையில் தடைசெய்தது; தடைசெய்து, கியூபா மக்களுக்கு எதிரான தனது முற்றுகையின் ஆக்கிரமிப்புத் தன்மையை மறைக்க அணிந்த மனிதாபிமான முகமூடியை அது ஒரேயடியாக அம்பலப்படுத்தியுள்ளது.
மேலும் ஒரு சங்கதியை நாங்கள் திரும்பவும் கூறுகின்றோம்: அதாவது, கட்டியாண்டோர் விட்டுச்சென்ற தழும்புகள் மக்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகின்றன; அரசியல் உறவுகளில் மாதிரமன்றி வர்த்தக உறவுகளிலும்  அவை வெளிப்படுகின்றன. வர்த்தக நியதிகளின் சீர்குலைவு எனப்படுவது மூலப் பொருட்களை உற்பத்திசெய்யும் நாடுகளுக்கும், முடிவுப் பொருட்களை உற்பத்திசெய்யும் நாடுகளுக்கும் இடையே நிகழும் ஏற்றத்தாழ்வான பரிவர்த்தனையின் விளைவேயொழிய வேறெதுவும் இல்லை. முடிவுப் பொருட்களை உற்பத்திசெய்யும் நாடுகளே சந்தைகளை தமது ஆதிக்கத்துக்கு உட்படுத்தி, பெறுமதிகளின் சரிநிகர் பரிவர்த்தனை எனப்படும் மாயையை நிலைநிறுத்துகின்றன.
பொருளாதாரவாரியாக பிறநாடுகளில் தங்கியிருக்கும் நாடுகள் முதலாளித்துவ சந்தைகளிலிருந்து தம்மை விடுவித்து, சமூகவுடைமை நாடுகளுடன் அணிதிரண்டு, சுரண்டப்படுவோருக்கும் சுரண்டுவோருக்கும் இடையே புதிய உறவுகளை நிலைநிறுத்தும்வரை, அவற்றில் திட்பமான பொருளாதார விருத்தி ஏற்படப் போவதில்லை. சில விடயங்களில் பின்னடைவு ஏற்படும்; ஏற்படும்பொழுது பலம்குன்றிய நாடுகள் ஏகாதிபத்தியவாதிகளின், கட்டியாள்வோரின் அரசியல் ஆதிக்கத்துக்கு உட்பட நேரும்.
சிறப்பார்ந்த பேராளர்களே, ஈற்றில் ஒன்றை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது: அதாவது, கரிபியப் பிராந்தியத்தில், எல்லாவற்றுக்கும் மேலாக நிக்கரகுவா கரையோரங்களில், கோஸ்டாரிக்காவில், பனாமா கால்வாய் வலயத்தில், போட்டோரிக்கோவைச் சேர்ந்த விகேஸ் தீவில், புளோரிடாவில், ஒருவேளை அமெரிக்க ஆள்புலத்துக்கு உள்ளேயே வேறு இடங்களில், ஹொன்டியூராசில் கியூபாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நகர்வுகளும், ஆயத்தங்களும் இடம்பெற்று வருகின்றன. மேற்படி இடங்களில் கூலிக்கியூபப் படைகளும், மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த கூலிப்படைகளும்  பயிற்சிபெற்று வருகின்றன. அவை மிகுந்த சமாதான நோக்கத்துடன் பயிற்சிபெற்று வருவதாகக் கொள்ள முடியாது. கோஸ்டாரிக்காவில் ஒரு பாரிய மோசடி இடம்பெற்ற பின்னர் அங்கு நாடுகடந்த கியூபர்களின் பயிற்சி முகாங்களை அழித்தொழிக்கும்படி அந்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாகக் கேள்வி.
அங்கு பயிற்சிபெற்ற கூலிப்படைகள் ஏதோ ஒரு துர்ச்செயலில் ஈடுபடுந் தறுவாயில் இருந்தார்கள். எனவே அந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு உளப்பூர்வமானதா அல்லது வெறும் சாக்குப்போக்கா என்பது எவருக்கும் தெரியாது. நெடுங் காலத்துக்கு முன்னரே அத்தகைய ஆக்கிரமிப்புத் தளங்களை நாங்கள் சாடியிருக்கின்றோம். அவை உண்டு என்ற உண்மையில் முற்றிலும் நாங்கள் புலனைச் செலுத்த வேண்டும்.  கியூபாவைத் தாக்குவதற்கு அனுமதியும், வசதியும் அளிக்கும் ஒரு நாட்டு அரசாங்கத்தின் சர்வதேயப் பொறுப்பை உலகம் எண்ணிப்பார்க்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். கரிபியப் பிராந்தியத்தினுள் வெவ்வேறு இடங்களில் கூலிப்படைகள் பயிற்சிபெறுவது, அத்தகைய அலுவல்களில் அமெரிக்க அரசாங்கம் பங்குபற்றுவது பற்றிய செய்திகள் அமெரிக்க செய்தித்தாள்களில் முற்றிலும் இயல்பான செய்திகளாக முன்வைக்கப்படுவதை நாங்கள் கவனிக்க வேண்டும்.  அதை ஆட்சேபித்து எழும் இலத்தீன் அமெரிக்க குரல் எதுவும் எமது காதில் விழவில்லை. அமெரிக்க அரசாங்கம் தனது பகடைக்காய்களை ஏளனத்துடன் நகர்த்துவதை இது புலப்படுத்துகின்றது.
கியூபாவின் சின்னங்களைப் பார்த்து, அமெரிக்கர் வெனிசுவேலாவில் காட்சிக்கு வைத்த ஆயுதங்களில் “மறுக்கமுடியாத” சான்றினைக் கண்டறிவதற்கு வேண்டிய கூரிய விழிகள் படைத்தவர்களாய் அமெரிக்க கண்டத்து அரசுகளின் அமைப்பினைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் இருந்தார்கள். எனினும் 1961 சித்திரை மாதம் பிலேயா கிரோனில் (Bay of Pigs) அமெரிக்க அதிபர் கெனடி தன்னை ஓர் ஆக்கிரமிப்பாளர் என்று அப்பட்டமாக இட்ட முழக்கம் அவர்களின் காதில் விழவில்லை. அவ்வாறே அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்கான ஆயத்தங்கள் அவர்களின் கண்ணில் படவில்லை. இலத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவற்றின் ஆளும் வர்க்கங்களைப் பொறுத்தவரை எமது புரட்சியின்மீது அவை கொண்ட வெறுப்பினால் விளைந்த குருட்டுத்தனமே இது. ஏனையவற்றில் இது பளபளக்கும் காசுக்கடவுளின் பகட்டினால் விளைந்த குருட்டுத்தனம் — இரண்டாவதே மிகுந்த கவலையும், வருத்தமும் தருவது.
பிலேயா கிரோனில் கூலிப்படைகள் தொடுத்த தாக்குதல் மற்றும் எமது தாயகத்தின்மீது படையெடுப்பதாக விடுத்த எச்சரிக்கைகள் போன்று அமெரிக்கா தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினால், எமது இன்றியமையாத, சட்டப்பேறுவாய்ந்த பாதுகாப்புக்காக சில ஆயுதங்களை நாங்கள் கியூபாவில் பொருத்தி வைத்திருக்க நேர்ந்தது. கரிபியன் நெருக்கடி எனப்படும் மாபெரும் கொந்தளிப்பின் பின்னர் சோவியத் அரசுடன் அமெரிக்கா சில கடப்பாடுகளுக்கு உடன்பட்டமை நன்கு தெரிந்ததே. அவற்றின் உச்சக்கட்டமாக சிலவகையான மேற்படி ஆயுதங்கள் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டன.
அத்துடன் ஐ. நா.வைக் கொண்டு எமது ஆள்புலத்தைச் சோதனையிடவும் அமெரிக்கா முயன்றது. அதற்கு எமது மறுப்பை இத்தால் இடித்துரைக்கின்றோம். ஏனெனில், எமது நாட்டின் எல்லைக்குள் நாங்கள் வைத்திருக்க்கூடிய ஆயுதவகைகளை அமெரிக்கரோ, உலகில் வேறெவருமோ நிர்ணயிக்கும் உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் அனைத்துக்கும் சரிநிகரான கடப்பாடுகளுடன் கூடிய பல்தரப்பு உடன்படிக்கைகளுக்கு மட்டுமே நாங்கள் அமைந்தொழுகுவோம். பிடல் காஸ்ட்றோ கூறியது போல், “நாடுகளின், விடுதலைபெற்ற மக்களின் மீயுரிமையாக, மக்கள் அனைவரதும் உரிமையாக இறைமை என்னும் கருத்தீடு நிலவும்வரை, அந்த உரிமை எங்கள் மக்களுக்கு மறுக்கப்படுவதை நாங்கள் ஏற்கமாட்டோம். இறைமை என்னும் கருத்தீடு உலகளாவிய முறையில் மக்களால் ஏற்றிப்போற்றப்படுவது; ஆதலால்  உலகளாவிய முறையில் செல்லுபடியாவது;  உலகம் இந்நெறிகளின்படி ஆளப்படும்வரை, உலகம் இக்கருத்தீடுகளின்படி ஆளப்படும்வரை, அவ்வுரிமைகளுள் எவற்றையும் எங்களுக்கு மறுக்கும் எத்தனிப்பை நாங்கள் ஏற்கமாட்டோம்; அவ்வுரிமைகளுள் எதனையும் நாங்கள் துறக்கமாட்டோம்.”
ஐ. நா. தலைமைச் செயலாளர் யூ-தான் எங்கள் நியாயங்களைப் புரிந்துகொண்டார். எனினும் புதியதொரு மீயுரிமையை, தான்தோன்றித்தனமான ஒன்றை, சட்டவிரோதமான ஒன்றை, ஒரு சிறிய நாட்டின் வான்வெளியில் அத்துமீறும் உரிமை ஒன்றை அமெரிக்கா நிலைநாட்ட முயன்றது. இவ்வாறு யூ-2 வான்கலங்களும் மற்றும் பிற உளவு விமானங்களும் தண்டனைக்கு உள்ளாகும் அச்சம் அறவே இல்லாமல் எமது வான்வெளியில் பறப்பதை நாங்கள் காண்கின்றோம். எமது வான்வெளியில் அத்துமீறுவதையும், குவாந்தானமோ வலயத்தில் அமைந்துள்ள எமது காவல்நிலையைப் படையினருக்கு அமெரிக்க கடற்படை ஆத்திரமூட்டுவதையும், வான்கலங்கள் கொண்டு சர்வதேய நீர்நிலைகளில் எமது கப்பல்களுக்கு அல்லது பிறநாட்டுக் கப்பல்களுக்கு இரைச்சல் கொடுப்பதையும், வெவ்வேறு கொடிகளுடன் பயணிக்கும் கப்பல்கள் மீதான கொள்ளையடிப்புத் தாக்குதல்களையும், எமது தீவினுள் ஒற்றர்களின், நாசகாரிகளின், ஆயுதங்களின் ஊடுருவலையும் நிறுத்தக்கோருவதற்கு வேண்டிய எல்லா எச்சரிக்கைகளையும் நாங்கள் விடுத்துள்ளோம்.       
நாங்கள் சமூகவுடைமையைக் கட்டியெழுப்ப விரும்புகின்றோம். சமாதானத்துக்காகப் பாடுபடுவோருக்கு நாங்கள் ஆதரவாளர்கள் என்று முழங்கியுள்ளோம்.  நாங்கள் மார்க்சிய-லெனினியர்கள். எனினும் எங்களைப் போலவே அணிசேரா நாடுகளும் ஏகாதிபத்தியத்துடன் போராடுவதால், எங்களை அணிசேரா நாடுகளின் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் முழங்கியுள்ளோம். நாங்கள் சமாதானத்தை நாடுகின்றோம். எங்கள் மக்களுக்கு ஒரு நல்வாழ்வை அமைத்துக் கொடுக்க விரும்புகின்றோம். ஆதலால்தான் அமெரிக்கர் ஆத்திரமூட்டி விரிக்கும் வலையில் வீழ்வதை இயன்றவரை நாங்கள் தவிர்த்து வருகின்றோம். எனினும் அவர்களை ஆள்வோரின் உளப்போக்கு எங்களுக்குத் தெரியும். அந்த சமாதானத்துக்காக எங்களை அதிக விலைசெலுத்த வைக்க விரும்புகின்றார்கள். அந்த விலை கண்ணிய வரம்புக்கு மேற்பட முடியாது என்பதே எங்கள் மறுமொழி.
கியூபாவுக்கு ஏற்றவை என்று கொள்ளும் ஆயுதங்களை அதன் ஆள்புலத்தில் வைத்திருக்கும் உரிமையை அது மீண்டும் வலியுறுத்துகின்றது. உலகில் வேறெந்த அரசும்–அது எத்துணை வலியதாயினும்–எமது மண்ணிலோ, ஆள்புல நீர்நிலைகளிலோ, வான்வெளியிலோ அத்துமீறும் உரிமையை நாங்கள் ஏற்க மறுக்கின்றோம்.
கியூபா எந்த அவையிலும் கூட்டுக் கடப்பாடுகளை ஏற்றுக்கொண்டால், எழுத்துப் பிசகாமல் அவற்றை நிறைவேற்றும். அத்தகைய சூழ்நிலை ஏற்படாதவரை வேறெந்த நாட்டையும் போலவே கியூபாவும் அதன் உரிமைகள் அனைத்தையும் நிலைநிறுத்தும். ஏகாதிபத்தியம் நெருக்குதல் கொடுத்தும் கூட, கரிபியப் பிராந்தியத்தில் பத்திரமான சமாதானம் நிலவுவதற்கு வேண்டிய ஐந்து கோரிக்கைகளை எமது பிரதம மந்திரி முன்வைத்தார்:   
1. அமெரிக்கா எமது நாட்டுக்கு எதிரான பொருளாதார முற்றுகையையும், உலகளாவிய பொருளாதார, வர்த்தக நெருக்குதல்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.
2. அமெரிக்க ஆள்புலத்திலிருந்தும், சில உடந்தை நாடுகளிலிருந்தும் மேற்கொள்ளப்படும் கருவறுப்பு வேலைகள்; வான்வழியாகவும் கடல்வழியாகவும் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஏவுதல், இறக்குதல்; கூலிப்படையெடுப்பு ஒழுங்குசெய்தல்; ஒற்றர்கள், நாசகாரிகள் ஊடுருவல் ஆகிய நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.
3. அமெரிக்காவிலும் போட்டோரிக்கோவிலும் அமைந்துள்ள தளங்களிலிருந்து மெற்கொள்ளப்படும் கடற்கொள்ளைத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
4. அமெரிக்க வான்கலங்களும் போர்க்கப்பல்களும் முறையே எமது வான்வெளியிலும் ஆள்புல நீர்நிலைகளிலும் மேற்கொள்ளும் அத்துமீறல்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.
5. அமெரிக்கா ஆக்கிரமித்துள்ள கியூப ஆள்புலமாகிய குவாந்தானமோ கடற்படைத் தளத்தை திரும்ப ஒப்படைத்து வெளியேற வேண்டும்.
மேற்படி அடிப்படைக் கோரிக்கைகளுள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. குவாந்தானமோ கடற்படைத் தளத்திலிருந்து எமது படைகளுக்கு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் இன்னமும் தொடர்கின்றன. அப்படைத்தளம் ஒரு திருடர் குகையாகவும், எமது ஆள்புலத்தினுள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு ஏவுதளமாகவும் மாறியுள்ளது. அத்தகைய ஆத்திரமூட்டல்கள் அனைத்தையும் இங்கு விரித்துரைப்பது இப்பேரவைக்கு சலிப்பூட்டுவதாய் அமையும். மார்கழி துவக்க நாட்கள் உட்பட 1964ல் மாத்திரம் 1,323 தடவைகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று சொன்னாலே போதும். எல்லைக்கோட்டை மீறல், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆள்புலத்திலிருந்து கணைகளை ஏவுதல், அமெரிக்கப் படையினர் இருபாலாரும் பிறந்த மேனியுடன் காட்சியளித்தல், இழித்துரைத்தல் போன்ற சிறிய ஆத்திரமூட்டல்களும் அந்த நிரலினுள் அடங்கும். குறுவிட்ட ஆயுதங்கள் கொண்டு சுடுதல், ஆயுதங்கள் கொண்டு எமது ஆள்புலத்தைக் குறிவைத்தல், எமது தேசியக் கொடியை இழிவுபடுத்தல் போன்ற இன்னும் கடுமையான ஆத்திரமூட்டல்களும் அதில் அடங்கும். எல்லைக்கோட்டை மீறல், கியூபாவின் எல்லைக்கு உட்பட்ட நிலைகளுக்குத் தீமூட்டுதல், துவக்குச்சூடு நடத்துதல் போன்ற மிகவும் கடுமையான ஆத்திரமூட்டல்களும் அதில் அடங்கும். இந்த ஆண்டு 78 துவக்குச்சூடுகள் நடத்தப்பட்டுள்ளன. எமது வட கரையோர எல்லைக்கு அப்பால் 3½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்க நிலையிலிருந்து நிகழ்த்தப்பட்ட 2 துவக்குச்சூடுகளினால் நேர்ந்த ஓர் இறப்பும் அதில் அடங்கும்.  இராமோன் உலோப்பஸ் பெனா என்னும் படையினர் பலியான துயரம் அது. மிகவும் பாரதூரமான இந்த ஆத்திரமூட்டல் 1964 யூலை 19ம் திகதி மாலை 7:07 மணிக்கு இடம்பெற்றது. இப்படி மீண்டும் நிகழ்ந்தால் ஆக்கிரமிப்பை முறியடிக்கும்படி எமது படையினருக்கு கட்டளையிடுவேன் என்று எமது பிரதம மந்திரி யூலை 26ம் திகதி பகிரங்கமாகத் தெரிவித்தார். அதேவேளை கியூபா படைகளின் முன்வரிசைப் படையினருக்கு எல்லைக்கோட்டிலிருந்து இன்னும் உள்நோக்கி மீளும்படியும், தமது நிலைகளை வேண்டியளவு வலுப்படுத்தி அமைக்கும்படியும் உத்தரவிடப்பட்டது. ஏறத்தாழ அன்றாடம் 4 ஆத்திரமூட்டல்கள் எனும்படியாக 340 நாட்களில் 1,323 ஆத்திரமூட்டல்கள்  இடம்பெற்றன. முழுமையான கட்டுப்பாடும் தெம்பும் கொண்ட எமது படையினரைப் போன்றவர்களால் மாத்திரமே சுயகட்டுப்பாட்டை இழக்காமல் அவ்வளவு பெருந்தொகையான பகை-நடவடிக்கைகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியும்.
அணிசேரா நாடுகளின் அரசு/அரசாங்கத் தலைவர்கள் கைரோவில் நடத்திய இரண்டாவது மாநாட்டில் 47 நாடுகள் கலந்துகொண்டு பின்வரும் இணக்கத்துக்கு வந்தனர்:
“வெளிநாடுகளில் படைத்தளங்களை வைத்திருக்கும் நாடுகள் செயலளவில் தமது சொந்த கருத்தியல், அரசியல், பொருளாதார, பண்பாட்டு எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு அந்நாடுகளுக்கு நெருக்குதல் கொடுத்து, அவற்றின் விடுதலையையும், விருத்தியையும் பின்னகர்த்துவதை கரிசனையுடன் இம்மாநாடு கருத்தில் கொண்டு, தமது ஆள்புலத்திலிருந்து வெளிநாட்டுத் தளங்களை அகற்றுவிக்க முற்படும் நாடுகளுக்கு முழு ஆதரவு தெரிவிக்கின்றது; அவற்றை உடனடியாக அகற்றும்படி வெளிநாடுகளில் படைகளையும் தளங்களையும் வைத்திருக்கும் நாடுகள் அனைத்திடமும் கேட்டுக்கொள்கின்றது; கியூப அரசாங்கத்தின், மக்களின் விருப்பத்துக்கு மாறாக, பெல்கிரேட் மாநாட்டு பிரகடனத்துக்கு மாறாக குவாந்தானமோவில் (கியூபாவில்) அமெரிக்க படைத்தளத்தை வைத்திருத்தல் கியூபாவின் இறைமையையும், ஆள்புலத் திண்மையையும் மீறுவதாய் அமைவதாக இம்மாநாடு கருதுகின்றது.”
“குவாந்தானமோ தளம் தொடர்பான பிணக்கை அமெரிக்காவுடன் சரிநிகராய் அமர்ந்து தீர்ப்பதற்குத் தயாராய் இருப்பதாக கியூப அரசாங்கம் தெரிவித்திருப்பதை இம்மாநாடு கருத்தில் கொண்டு, அமெரிக்க அரசாங்கத்திடம் அதன் தளத்தைவிட்டு நீங்குவதற்கு கியூப அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக்கொள்கின்றது.”
கைரோ மாநாடு விடுத்த வேண்டுகோளுக்கு அமெரிக்க அரசாங்கம் பதில்வினை ஆற்றவில்லை. எமது ஆள்புலத்தின் துண்டு ஒன்றை பலவந்தமாக, காலவரையறையின்றி வைத்திருக்க அது முயல்கின்றது. அங்கிருந்து மேலே விவரித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அது மேற்கொள்கின்றது.
அமெரிக்க கண்ட அரசுகளின் அமைப்பு— மக்கள் அதை அமெரிக்கா கட்டியாளும் நாடுகளின் அமைப்பு என்றும் சொல்வதுண்டு—அதிலிருந்து எங்களை விலக்கியது; கியூபாவுடன் கொண்ட சூழ்வியல் உறவுகளையும் வர்த்தக உறவுகளையும் துண்டிக்கும்படி அதன் உறுப்புநாடுகளுக்கு உத்தரவிட்டது; உத்தரவிட்ட பின்னரும் கூட எங்களை “விறல்கொண்டு” சாடியது. எந்த வேளையிலும், எந்தச் சாட்டினைக் கொண்டும், மிக அடிப்படையான சர்வதேய சட்டங்களை மீறி, ஐ. நா.வை அறவே பொருட்படுத்தாமல், எமது நாட்டின்மீது ஆக்கிரமிப்புச் செய்வதற்கு அனுமதி அளித்தது. உருகுவே, பொலிவியா, சிலி, மெக்சிக்கோ ஆகிய நாடுகள் அந்த நடவடிக்கையை எதிர்த்தன; அங்கு அங்கீகரிக்கப்பட்ட தடையாணைகளுக்கு அமைந்தொழுக மெக்சிக்கோ மறுத்தது. அதுமுதல் மெக்சிக்கோவைத் தவிர வேறு இலத்தீன் அமெரிக்க நாடுகள் எவற்றுடனும் எமக்கு உறவில்லை. ஏகாதிபத்தியத்தின் நேரடி ஆக்கிரமிப்புக்கு வேண்டிய நிலைமை ஒன்றை இது ஏற்படுத்துவதாய் அமைகின்றது!
நாங்கள் இலத்தீன் அமெரிக்காமீது கொண்ட கரிசனை என்பது எம்மை ஒருங்கிணைக்கும் பாலங்களின் அடிப்படையில் எழுவது என்பதை மீண்டும் ஒருதடவை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்: நாங்கள் பேசும் மொழி, பேணும் பண்பாடு, எமக்கிருந்த பொது எசமான்… கட்டியாளும் அமெரிக்க நுகத்திலிருந்து இலத்தீன் அமெரிக்கா விடுபடவேண்டும் என்று நாங்கள் விரும்புவதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை.  இங்கிருக்கும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுள் எவையும் கியூபாவுடன் மீண்டும் உறவுபூண முடிவெடுத்தால், உலகில் கியூபா ஒரு சுதந்திர நாடு என்ற அங்கீகாரம் எமது அரசாங்கத்துக்கு ஒரு கொடையாகும் என்பதை நோக்காமல், நாமும் சரிநிகரான தளத்தில் நின்று உறவுபூண விரும்புவோம்; விடுதலைப் போராட்ட நாட்களில் அந்த அங்கீகாரத்தை நாங்கள் குருதிசிந்தி ஈட்டிக்கொண்டோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எமது நாட்டை நாங்கள் காத்துநின்று குருதிசிந்தி அதை ஈட்டிக்கொண்டோம்.
வேறு நாடுகளின் உள் அலுவல்களில் நாங்கள் தலையிடுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கின்றோம். எனினும் தமது விடுதலைக்காகப் பாடுபடும் மக்கள்மீது நாங்கள் பரிவு கொள்கின்றோம் என்பதை எம்மால் மறுக்க முடியாது. ஐ. நா. பட்டயத்தில் விளம்பப்பட்டுள்ள முழு இறைமையையும் எய்துவதற்காக உலகில் எங்கேயாவது போராடும் மக்களுடன் நாங்கள் தோழமை பூண்டு, அவர்களுக்கு தார்மீக ஆதரவு அளிக்கின்றோம் என்பதை உலகத்துக்கு தெட்டத்தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தெரிவிக்கவேண்டிய எமது அரசாங்கத்தின், மக்களின் கடப்பாட்டை நாங்கள் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
தலையிடுவது அமெரிக்காவே! இலத்தீன் அமெரிக்காவில் அது நெடுங்காலமாகத் தலையிட்டு வந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து இந்த உண்மையை கியூபா பட்டறிந்துள்ளது. அதேவேளை வெனிசுவேலா, நிக்கரகுவா, பொதுவாக மத்திய அமெரிக்கா, மெக்சிக்கோ, ஹெயிட்டி, தொமினிக்க குடியரசு என்பனவும் இந்த உண்மையைப் பட்டறிந்துள்ளன. அண்மையில் எமது மக்களைத் தவிர பனாமாவும் நேரடி ஆக்கிரமிப்பை பட்டறிந்துள்ளது. பனாமா கால்வாய் வலயத்தில் அமெரிக்க தரைக்கடற் படையினர் அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றிச் சுட்டுத்தள்ளியுள்ளினர்.  தொமினிக்க குடியரசில் துருசிலோ இறந்ததை அடுத்து மக்களின் நியாயமான சீற்றத்தை தவிர்ப்பதற்காக அதன் கரையோரத்துள் அமெரிக்க கடற்படையணி அத்துமீறியது. கொலம்பியாவில் கைதானின் படுகொலையினால் உண்டான கிளர்ச்சியின் பெறுபேறாக அதன் தலைநகரம் தாக்கப்பட்டு, கைப்பற்றப்பட்து. படையணிகள் ஊடாக கள்ளத் தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உள்நாட்டு ஒடுக்குமுறையில் அவை பங்குபற்றுகின்றன. பல நாடுகளில் அந்த நோக்கத்துக்காகவும், ஆட்சிக் கவிழ்ப்புகளுக்காகவும் படைகளை ஒழுங்குபடுத்துகின்றன. அண்மைக் காலத்தில் இலத்தீன் அமெரிக்க கண்டத்தில் அப்படி அடிக்கடி செய்யப்பட்டதுண்டு. திட்டவட்டமாகச் சொல்வதாயின், வெனிசுவேலா, கொலம்பியா, குவாத்தமாலா ஆகிய நாடுகளில் தமது விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய மக்களை அடக்கி ஒடுக்குவதில் அமெரிக்கப் படைகள் பங்குபற்றின. அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா படையினருக்கும் காவல்துறைக்கும் புத்திமதி கூறுவது மட்டுமல்லாது, கிளர்ச்சியாளரின் பெரும்புலங்களில் குடியிருக்கும் உழவர்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கும் வான்தாக்குதல்களையும் நெறிப்படுத்தி வருகின்றன. அங்கு இயங்கும் அமெரிக்க நிறுவனங்கள் தமது அரசாங்கத்தை நேரடியாகத் தலையிடும்படி எல்லா வழிகளிலும் நெருக்குதல் கொடுத்து வருகின்றன. அமெரிக்க கண்டத்து மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஏகாதிபத்தியவாதிகள் தயாராகி வருகின்றார்கள். குற்றம்புரியும் அகிலம் ஒன்றை நிறுவி வருகின்றார்கள். சுதந்திர நிறுவனங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லி இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்கா தலையிட்டு வருகின்றது.
இப்பேரவை மிகுந்த முதிர்ச்சி அடைந்து, அமெரிக்காவில் வசிக்கும் கருப்பின மக்களின், இலத்தீன் அமெரிக்க மக்களின் உயிர்வாழ்வுக்கு அமெரிக்க அரசாங்கத்திடம் உத்தரவாதம் கேட்கும் காலம் வரும்; அவர்களுள் அநேகர் பிறப்பினாலோ, குடிபெயர்வினாலோ அமெரிக்க குடிகள் என்பது தெரிந்ததே.
தமது சொந்தப் பிள்ளைகளின் தோல்-நிறம் காரணமாக அவர்களைக் கொல்வோர், அன்றாடம் அவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவோர், கருப்பின மக்களைக் கொல்வோரைப் பாதுகாத்து அவர்களைச் சுதந்திரமாக நடமாட விடுவோர், தமது சட்டப்பேறுவாய்ந்த உரிமைகளைக் கோரும் கருப்பின மக்களைத் தண்டிப்போர்—அப்படிச் செய்வோர் எங்ஙனம் தங்களை சுதந்திரத்தின் காவலர்கள் என்று கொள்ளமுடியும்?  மேற்படி செயல்களுக்கு விளக்கம் கோரும் நிலையில் இன்று இப்பேரவை இல்லை என்பது எமக்குப் புரிகின்றது. எனினும், அமெரிக்க அரசாங்கம் ஒரு சுதந்திரப் போராளி அல்ல; அது உலக மக்களையும், தனது சொந்த மக்களுள் பெருந்தொகையானோரையும் சுரண்டி, அடக்கி ஒடுக்கும் தரப்பு என்பது தெட்டத்தெளிவாக எடுத்துரைக்கப்பட வேண்டும்.   
கியூபாவுக்கும் அமெரிக்க கண்டத்து அரசுகளின் அமைப்புக்கும் இடைப்பட்ட சங்கதியை தெளிவற்ற மொழியில் விபரித்த சில பேராளர்களுக்கு எமது பதிலை நாங்கள் தெட்டத்தெளிவாக அறுத்துரைக்கின்றோம்: அடிபணிந்து, காட்டிக்கொடுத்து, துரோகம் புரிந்த அரசாங்கங்களை இலத்தீன் அமெரிக்க மக்கள் பழிவாங்கியே தீருவர்.
சிறப்பார்ந்த பேராளர்களே, கியூபா ஒரு சுதந்திர அரசு; இறைமைவாய்ந்த அரசு; அது வேறெதனுடனும் சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்டிருக்கவில்லை; அதன் ஆள்புலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் இல்லை; அதன் கொள்கையை வெளிநாட்டு ஆளுநர் எவரும் நெறிப்படுத்தவில்லை; ஆதலால் இப்பேரவையில் எம்மால் தலைநிமிர்ந்து பேசமுடிகின்றது; “அமெரிக்க கண்டத்தின் சுதந்திர ஆள்புலம்” என்ற சொல்-தொடர் கொண்டு தீக்கை பெற்றது கியூபா; அதில் பொதிந்துள்ள நீதியை அதனால் நிரூபிக்கமுடியும்.  எமது எடுத்துக்காட்டு இக்கண்டத்தில் நலம்பயக்கும்; குவாத்தமாலாவிலும், கொலம்பியாவிலும், வெனிசுவேலாவிலும்  அது ஏற்கெனவே ஓரளவு நலம்பயப்பது தெரிகின்றது.  
மக்கள் இன்று தனித்து, ஒதுங்கி நிற்கவில்லை. எனவே சிறிய எதிரியோ பெரிய வலுவோ கிடையாது.  ஹவானாவின் இரண்டாவது பிரகடனம் கூறுவது போல்:
இலத்தீன் அமெரிக்காவில் எந்த நாடும் பலவீனமானதல்ல—காரணம்: 20 கோடி உடன்பிறப்புகள் கொண்ட குடும்பத்தில் ஒவ்வொரு நாடும் அங்கம் வகிக்கின்றது; நாங்கள் படுவது ஒரே அவலம்; உறுவது ஒரே உணர்வு; பார்ப்பது ஒரே எதிரி; காண்பது எங்கள் எதிர்கால நல்வாழ்வுக்கான ஒரே கனவு; எதிர்பார்ப்பது உலகம் முழுவதும் நேரிய ஆண்களும் பெண்களும் பூணும் தோழமை…
எங்கள் முன்னே எழும் காவியத்தை வரையப்போவது பசிகிடக்கும் பழம்பெரும் குடிமக்கள், நிலமற்ற உழவர்கள், சுரண்டப்படும் தொழிலாளிகள்; அதை வரையப்போவது வாடிவருந்தும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நிறைந்திருக்கும்  முற்போக்கான பாமர மக்கள், நேரிய-கூரிய அறிவார்ந்தவர்கள்; பாமர மக்களும் கருத்துக்களும் மேற்கொள்ளும் போராட்டங்கள்; அதை முன்னெடுத்துச் செல்லப்போவது ஏகாதிபத்தியத்தினால் துன்புறுத்தப்பட்டு,  இளிக்கப்பட்ட எங்கள் மக்கள்; இற்றைவரை கணக்கில் எடுக்கப்படாத எங்கள் மக்கள்; தமது உறக்கத்தைக் கலைத்து விழித்தெழத் துவங்கும் எங்கள் மக்கள். ஏகாதிபத்தியம் எங்களை அஞ்சி அடிபணியும் ஆட்டுமந்தையாக எண்ணியது. தற்பொழுது இந்த மந்தையைக் கண்டு, 20 கோடி இலத்தீன் அமெரிக்க மக்களைக் கொண்ட மாபெரும் மந்தையைக் கண்டு அது அஞ்சத் துவங்குகின்றது; தனக்கு சவக்குழி தோண்டுவோராகவே அவர்களை அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவம் நோக்குகின்றது…
ஆனால் அதற்குரிய வேளை—அதை மெய்ப்பிக்கும் வேளை இக்கண்டத்தின் ஒரு கரையிலிருந்து மறு கரைவரை நெருங்கிவிட்டதை அவர்கள் தெட்டத்தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றார்கள். பெயர் அறியப்படாத இந்த மக்கள்திரள், நிறம் கொண்ட மக்கள்திரள், தளர்ந்து வாயடைத்த மக்கள்திரள் அமெரிக்க கண்டம் எங்கும் ஒரே துயரமும் தெருட்சியும் கொண்டு இப்பொழுது அறைகூவுகின்றது; இந்த மக்கள்திரள் தமது சொந்த வரலாற்றினுள் இப்பொழுது உறுதிபட நுழையத் துவங்குகின்றது; தமது சொந்தக் குருதி கொண்டு தமது வரலாற்றை இப்பொழுது வரையத் துவங்குகின்றது; அதற்காக வருந்திப் பாடுபடவும் மடியவும் துவங்குகின்றது.   
அமெரிக்க கண்டத்தின் மலைகள், வயல்கள், சமதரைகள், புதர்கள், காடுகள், மாநகர ஊர்திகள், மகத்தான ஆழிக்கரைகள், ஆறுகளில் எல்லாம் உலகம் இப்பொழுது அதிரத் துவங்குகின்றது. தமது உரிமைகளுக்காக, 500 ஆண்டுகளாக எள்ளி நகையாடப்பட்ட தமது உரிமைகளை உயிரீந்து வென்றெடுக்கத் தயாராக ஆவலுடன் கைகள் நீளுகின்றன; ஆம், காலம் முழுவதற்குமான தமது வரலாற்றை வரையத் துவங்கும் முடிபுக்கு வந்துள்ள அமெரிக்க கண்டத்து வறியோரை, சுரண்டப்படுவோரை, உதறித்தள்ளப்பட்டோரை இனி வரலாறு கருத்தில் கொள்ள நேரும். தமது உரிமைகளை ஈட்டிக்கொள்வதற்காக அரசாங்க “உத்தமர்களை” நோக்கி அன்றாடம் தெருவழியே, கால்நடையாக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் அவர்கள் ஏற்கெனவே புறப்படுவது கண்கூடு.
அவர்கள் கற்களையும், தடிகளையும், கத்திகளையும் ஏந்தி ஒரு திசையில் செல்வதை ஏற்கெனவே அன்றாடம் பார்க்க முடிகின்றது; மறு திசையில் காணிகளில் நிலைகொண்டு, தமக்குரிய காணியில் கொக்கிகளை ஊன்றி, தமது உயிரை ஈந்து அதனைக் காத்துநிற்பதைப் பார்க்க முடிகின்றது. அட்டைகள், பதாகைகள், கொடிகளை ஏந்திச் செல்வதையும், அவற்றை மலைகளிலும் வெளிகளிலும் பறக்க விடுவதையும் பார்க்க முடிகின்றது. இலத்தீன் அமெரிக்காவில் சீற்றத்துடன், நீதிக்கான கோரிக்கைகளுடன், காலடியில் இட்டுநெரித்த உரிமைகளுக்கான அறைகூவல்களுடன் விளாசத் துவங்கும் அலை ஓயப்போவதில்லை. அது அன்றாடம் பெருகும் மாபெரும் அலை; எல்லா வகைகளிலும் பெரும்பான்மைகொண்ட பேரலை; செல்வம் குவிக்கும் தொழிலை ஈயும் அலை; வரலாற்றுச் சில்லை உருட்டும் அலை.
காட்டுமிராண்டித்தனத்துக்கும், நெடுந்துயிலுக்கும் உட்படுத்தபட்ட நிலையிலிருந்து அவர்கள் இப்பொழுது விழித்தெழுகின்றனர். இந்த மாபெரும் மானுடத் திரள் “பட்டது போதும்!” என்று சொல்லிப் புறப்படத் தலைப்பட்டுவிட்டது. எந்த விடுதலைக்காகப் பல தடவைகள் வீணாக மாண்டார்களோ அந்த விடுதலையை, மெய்யான விடுதலையை ஈட்டும்வரை இந்த மாபெரும் உருப்படிகளின் புறப்பாடு முடிவடையப் போவதில்லை. அதேவேளை இன்று மடிபவர்கள் பிளையா கிரோனில் கியூபர்கள் மடிந்ததுபோல் மடிவார்கள். தமது சொந்த, மெய்யான, என்றுமே விட்டுக்கொடுக்க முடியாத விடுதலைக்காக மடிவார்கள்.
சிறப்பார்ந்த பேராளர்களே, ஒரு முழுக் கண்டத்தின், இலத்தீன் அமெரிக்க கண்டத்தின் புதிய திடசித்தம் என்பது அன்றாடம் எமது மக்களால் முழங்கப்படும் அறைகூவலில் வெளிப்படுகின்றது; ஆயுதம் ஏந்திய படையெடுப்பாளரின் கையை மடக்கி முடக்குவதற்கு எமது பாமர மக்கள் எடுத்த முடிபின் மறுக்கமுடியாத கூற்றாக அது வெளிப்படுகின்றது. உலக மக்கள் அனைவரதும், குறிப்பாக சோவியத் அரசின் தலைமையில் இயங்கும் சமூகவுடைமை முகாமின் புரிந்துணர்வையும் ஆதரவையும் பெற்ற அறைகூவல் அது.
அந்த அறைகூவல் இதுவே: தாய்நாடு அல்லது இடுகாடு!
__________________________________________________________
Che Guevara: Address to the19th General Assembly of the United Nations, New York, 1964-12-11, translated by an unknown professional from Spanish to English and translated from English to Tamil by Mani Velupillai, 2020-06-15.


No comments:

Post a Comment