போலின்


அனத்தோல் பிரான்சு
____________________________________________________________________________________
உள்ளே நுழைந்த என்னை, போலின் கைகுலுக்கி வரவேற்றாள். ஒருகணம் இருவரும் பேசவில்லை.
அவளது கழுத்தாடையும் புல்லுத்தொப்பியும் ஒரு கைநாற்காலியில் ஏனோதானோ என்று வீசப்பட்டிருந்தன. கின்னர வாத்தியத்தின்மீது திறந்தபடி கிடந்தது வழிபாட்டு நூல். அவள் சாளரத்தை நெருங்கினாள். செக்கச்சிவந்த தொடுவானத்துள் கதிரவன் தோய்வதை அவதானித்தாள். 
நான்  அளந்து கொட்டினேன்:போலின்இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாளில், இந்தக் கணத்தில் நீ பார்த்துக்கொண்டிருக்கும் அதே ஆற்றங்கரையில், அதே மலையடிவாரத்தில் நீ உதிர்த்த சொற்கள் உனக்கு நினைவிருகின்றனவா
நீ கனவில் வருவதுபோல் என்முன் தோன்றி, முன்னுணர்வுடன் கையசைத்துசாடைகாட்டி, சோதனையும் பாதகமும் பயங்கரமும் நிகழப்போகும் நாட்களை முன்கூட்டியே உணர்த்திய விதம் உனக்கு நினைவிருக்கிறதா? எனது காதலை நான் ஒப்புக்கொள்ளுந் தறுவாயில், எனது இதே உதடுகளில் அதற்கு அணைபோட்டு, நீதிக்காகவும் சுதந்திரத்துக்காகவும் வாழ்ந்து பாடுபடும்படி என்னிடம் நீ அறிவுறுத்தியிருந்தாய். உனது கையில் போதியளவு முத்தங்களையும் கண்ணீரையும் என்னால் சொரிய முடியவில்லை. அத்தகைய உனது கை காட்டிய திசையில் நான் தடுமாறாமல் பயணித்து வந்துள்ளேன். உனக்கு அமைந்தொழுகி வந்துள்ளேன். அதே குறிக்கோளுக்காக பேசியும் எழுதியும் வந்துள்ளேன். பிணக்கையும் வெறுப்பையும் தோற்றுவிக்கும் மூளைகெட்ட நோஞ்சான்களையும், போலிப்பரிவும் வன்முறையும் கொண்டு பேரணி நடத்தி மக்களை வசப்படுத்தி ஏவும்  நாவலர்களையும், ஓங்கிவரும் ஆட்சியாளருக்கு மண்டியிடும் கோழைகளையும் நான் எதிர்த்து நின்றுள்ளேன்.” 
அவள் கையினால் சாடைகாட்டி, எனது பேச்சை நிறுத்தி, செவிசாய்க்கச் சொன்னாள். தொலைவிலிருந்து கிளம்பிவந்து, குருவிகளின் இன்னிசை கவிந்த நறுமணக் கொல்லையை ஊடறுத்துப் பாய்ந்த கூச்சல்களை நாங்கள் செவிமடுத்தோம்:சாக்காட்டு! சீமானைக் கொண்டுபோய்த் தூக்கு! அவன் தலையைக் கொய்து ஈட்டியில் மாட்டு!” 
அவள் அசைவின்றி, முகம் வெளுறி, உதட்டில் விரல் வைத்தாள்.  
நான் சொன்னேன்:யாரோ ஓர் இழவுவிழுந்தவனைத் துரத்துகிறார்கள். பாரிசில் இரவுபகலாக வீட்டுக்குவீடு ஆட்களைக் கைதுசெய்கிறார்கள். அவர்கள் இங்கேயும் அடாத்தாக வரக்கூடும். என்னால் உனக்குச் சங்கடம் நேரலாம் என்ற பீதியும் என்னைப் பீடிக்கின்றது. ஆனபடியால் நான் வெளியேறத்தான் வேண்டும். இந்த அயலில் ஒருசிலருக்கே என்னைத் தெரியும். ஆனாலும் நேரம் போகப்போக நான் ஓர் ஆபத்தான விருந்தாளி ஆகக்கூடும்.” 
போகவேண்டாம்!என்று அவள் கேட்டுக்கொண்டாள். 
அமைதிபடர்ந்த மாலைக்காற்று மறுபடியும் எழுந்த கூச்சல்களால் பிளவுண்டது. காலடிகளின் மிதியோசையும் துவக்குகளின் வெடியோசையும் அவற்றுடன் கலந்து செவிப்பறையில் மோதின. கூச்சல்கள் மேலும் எங்களை நெருங்கின. பிறகு, “அந்தப் போக்கிரி தப்பியோட முடியாதபடி பாதையை மூடு!என்று கத்தும் குரல் கேட்டது.  
ஆபத்து அணுகும் அதே வீச்சில் போலினின் அமைதியும் கடுத்து வந்தது. 
நாங்கள் இரண்டாம் மாடிக்குப் போவோம்! வெயில்மறைப்புகளின் ஊடாக வெளியே நடப்பதைப் பார்க்கலாம்என்றாள். 
நாங்கள் கதவைத் திறந்ததும், தப்பியோடிவந்த ஆளை படிமேடையில் கண்டோம். அரைகுறை ஆடையுடன், அஞ்சி வெளிறிய முகத்துடன், பற்கள் நெறுநெறுக்க, முழங்கால்கள் கிடுகிடுக்க, குரல்வளை நெரியுண்ட தொனியில், “என்னைக் காப்பாற்றுங்கள்! என்னை மறைத்து வைத்திருங்கள்! அவர்கள் அங்கே நிற்கிறார்கள்; எனது சங்கடத்தை தகர்த்தெறிந்துவிட்டார்கள்; எனது கொல்லைக்குள் குவிந்துவிட்டார்கள்; இங்கே வந்துகொண்டிருக்கிறார்கள்…என்று அந்த ஆவி முணுமுணுத்தது.

அண்டை வீட்டில் குடியிருந்த முதிய சிந்தனையாளராகிய பளங்கோனியை அடையாளங்கண்டு  குசுகுசுத்தாள் உபோலின்:
எனது சமையல்காரி உங்களைக் கண்டாளா? அவள் ஒரு படுதீவிரவாதி!
நான் எவர் கண்ணிலும் படவில்லை!
கடவுள் காக்க, பளங்கோனி ஐயா!
தனது படுக்கை அறைக்குள் அவரை இட்டுச்சென்றாள். நான் இருவரையும் பின்தொடர்ந்தேன். நாங்கள் கலந்தாலோசிக்க வேண்டியிருந்தது. பளங்கோனியை பல நாட்களுக்கு, ஆகக்குறைந்தது பல மணித்தியாலங்களுக்கு, அவரைத் தேடித்திரியும் கும்பலை ஏய்த்து, அவர்களைச் சலிக்கச்செய்ய எவ்வளவு காலம் பிடிக்குமோ அவ்வளவு காலத்துக்கு அவரைப் பதுக்கிவைக்க ஒரு மறைவிடத்தை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. பாதையை நான் கண்காணிக்க வேண்டும் என்றும், நான் சாடைகாட்டியதும் அந்த அவப்பேறுபிடித்த  பிறவி வளவுக்கொல்லையின் சின்ன வாயில்வழியே தப்பியோட வேண்டும் என்றும் உடன்பாடு காணப்பட்டது.  
அஞ்சியடங்கி, அறவே மெய்முடங்கி காத்திருந்த பளங்கோனியால் நிற்கவே முடியவில்லை. 
அரசியல்யாப்புக்கு எதிராக காசரோவுடன் சேர்ந்து சதிபுரிந்ததற்காகவும், ஆகஸ்ட் 10ம் திகதி அரண்மனையைக் காக்க ஒரு குழுவை அமைத்ததற்காகவும், குருமாருக்கும் மன்னர்களுக்கும் எதிரியான தன்னை அவர்கள் வேட்டையாடுகிறார்கள் என்பதை அவர் எங்களுக்குப் புரியவைக்க முயன்றார். அவர் சுமத்திய அடாப்பழி அது. உண்மை இதுதான்: இவர்மீது லூபின் கொண்ட வெறுப்பின் வெளிப்பாடுதான் இவரை வதைக்கிறது. இதுவரை லூபின்தான் இவருடைய இறைச்சிக் கடைக்காரன். இறைச்சியை சரிவர நிறுக்கும் விதத்தைக் கற்பிக்கும் நோக்கில் அவனுக்கு பிரம்படி கொடுக்க நூறு தடவைகளாவது இவர் உன்னியதுண்டு. அன்று வெறும் இறைச்சிக்கடை வைத்திருந்த அதே லூபின்தான் இன்று அந்தக் கடைத்தொகுதி முழுவதற்கும் தலைவன்! 
லூபினைக் கண்டதாக மெய்யாக நம்பியே தனது முகத்தைக் கைகளால் பொத்தி, குரல்வளை நெரியுண்ட தொனியில், அவன் பெயரை அவர் உச்சரித்தார். அப்பொழுது படிக்கட்டில் காலடி ஓசை எழுந்தது உண்மைதான். தீரும்வரை தனது வலுவைப் பயன்படுத்தி அவரை ஒரு திரைக்குப் பின்னே தள்ளிவிட்டாள் போலின். கதவில் ஓர் அறை விழுந்தது. கதவைத் திறக்கும்படி அலறிய குரல் காதில் விழுந்தது. அது தனது சமையல்காரியின் குரல் என்பது  போலின்க்குப் புரிந்தது. தேசிய காவல்படையுடன் மாநகர அதிகாரிகள் வந்து வாயிலில் நிற்பதாகவும், அவர்கள் வளவைப் பார்வையிட வந்திருப்பதாகவும் அவள் அலறினாள்.    
அத்துடன்பளங்கோனி இந்த வீட்டுக்குள் இருப்பதாக அவர்கள் சொல்லுகிறார்கள். அது உண்மையில்லை என்பது எனக்கு நல்லாய்த் தெரியும். அப்படிப்பட்ட ஒரு போக்கிரியை ஒருபொழுதும் நீங்கள் பாதுகாத்து வைத்திருக்க மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் சொல்வதை அவர்கள் நம்புகிறார்கள் இல்லைஎன்றும் அவள் கத்தினாள். 
கதவைத் திறக்காமலேயே, “சரி, சரி, அவர்கள் மேலே வரட்டும். நிலவறைமுதல் முகட்டறைவரை வீடு முழுவதும் தேடட்டும்என்றாள் போலின். 
இந்த உரையாடலைக் கேட்டு அந்த இழவுவிழுந்த பளங்கோனி திரைக்குப் பின்னால் மயங்கி விழுந்துவிட்டார். அவர் கன்னத்தில் தண்னீர் தெளித்து, அவருக்கு மூச்சூட்ட நான் எவ்வளவோ முட்டுப்பட்டேன். அதில் நான் வெற்றிபெற்றவுடன், அந்த இளநங்கை தனது அண்டைவீட்டு முதியவரின் காதுக்குள் குசுகுசுத்தாள்:
என்னை நம்புங்கள், ஐயா! பெண்கள் கெட்டிக்காரிகள் என்பதை நினைவில் வைத்திருங்கள்!”  
பிறகு ஓர் அன்றாட வீட்டுக் கடமையில் ஈடுபட்டவள் போல் அறையின் உள்மூலையில் கிடந்த தனது கட்டிலை ஓசையின்றி இழுத்து, மெத்தை விரிப்புகளை அகற்றி, எனது உதவியுடன் சுவர்க்கரையோரமாக மூன்று மெத்தைகளை அடுக்கினாள்; கீழ்மெத்தைக்கும் மேல் மெத்தைக்கும் இடையே ஒரு போறை விழத்தக்கதாக அடுக்கினாள். 
இந்த அடுக்குகளில் அவள் ஈடுபட்டிருந்தபொழுது, படிக்கட்டுவழியே சப்பாத்துகளும், மிதியடிகளும், துவக்குக்கூடுகளும், முரட்டுக் குரல்களும் தடல்புடலாக ஓசை எழுப்பின. எங்கள் மூவருக்கும் ஒரு பயங்கரமான தருணம் அது. ஆனாலும் அந்த ஓசை படிப்படியாக ஏறி எங்கள் தலைமேல் மாடியை அடைந்தது. படுதீவிர சமையல்காரி காட்டிய வழியில் தேடுதல் அணியினர் முதலில் முகட்டறையைப் புரட்டிப்போடுவது எங்களுக்குப் புரிந்தது. உட்கூரை நெறுக்கிட்டது. எச்சரிக்கைகளும், முரட்டுச் சிரிப்புகளும், பலகைச்சுவரில் உதைக்கும் ஓசையும், துவக்குமுனையைப் பாய்ச்சும் ஓசையும் கேட்டன. நாங்கள் மீண்டும் மூச்சுவிட்டோம். ஆனாலும் ஒரு நொடியும் நாங்கள் தளரக்கூடாது. மெத்தைகளுக்கிடையே ஏற்படுத்திய போறைக்குள் நுழைவதில் பளங்கோனிக்கு நான் துணைநின்றேன். 
எங்கள் எத்தனத்தை அவதானித்த போலின் அதை ஏற்காதவள் போல் தலையசைத்தாள். ஏறுமாறாய்க் கிடந்த கட்டில் ஐயத்தைக் கிளப்பக்கூடிய கோலத்தில் கிடந்தது. 
படுக்கைக்கு மெருகூட்டி, அதை இயல்பான ஒன்றாகத் தோற்ற வைக்கும் முயற்சியில் அவள் தோல்வியடைந்தாள். 
பிறகுநான் என்பாட்டில் படுக்க வேண்டியதுதான்!என்றாள். 
மணிக்கூட்டைப் பார்த்தாள். சரியாக ஏழுமணி. அவள் வேளைக்கே படுக்கையில் விழுவது வழமைக்கு மாறாகத் தென்படும். சுகமில்லை என்று நடிக்க எண்ணுவதே வீண். படுதீவிர சமையல்காரி துப்புத் துலக்கிவிடுவாள்! 
சில நொடிகள் சிந்தித்தாள். பிறகு என் முன்னிலையில் அமைதியும், எளிமையும்வீறார்ந்த பராமுகமும் கொண்டவளாய் துகிலுரிந்து, படுக்கையில் சாய்ந்து, எனது சப்பாத்துகளையும், மேலங்கியையும், கழுத்துச் சவுக்கத்தையும் களையும்படி பணித்தாள்.  
நீங்கள் எனது காதலானாக இருப்பதையும், எங்கள் இருவரையும் அவர்கள் திகைக்க வைப்பதையும் விட வேறுவழி இல்லை. அவர்கள் வந்துசேரும்பொழுது, சிதறுண்ட உங்கள் ஆடை அணிமணிகளை ஓராறுபண்ண உங்களுக்கு நேரம் கிடைக்காத மாதிரி அவர்களுக்குத் தெரியவேண்டும். நீங்கள் தலைவிரி கோலத்துடனும், உள்ளங்கியுடனும் கதவைத் திறந்து அவர்களை உள்ளே விடவேண்டும்.” 
நாங்கள் அப்படி எல்லாம் ஏற்பாடுசெய்த பிறகு தேடுதல் அணியினர்புனிதரே! பீடையே!என்று கூப்பிட்டபடி முகட்டறையிலிருந்து இறங்கினார்கள். 
அந்தநேரம் பார்த்து அவப்பேறுபிடித்த பளங்கோனி நடுங்கி வலித்து படுக்கை முழுவதையும் ஆட்டிக் கெடுத்துவிட்டார். 
அத்துடன் வெளிமாடத்தில் பெரும்பாலும் கேட்கும்படியாக குறட்டை விடுவதுபோல் அவர் மூச்சுவிட்டார்!
போலின் முணுமுணுத்தாள்:ஏமாற்றம்! ஏமாற்றம்! ஒரு சின்ன உபாயம் செய்து நல்ல நிறைவு கொண்டேனே!  ஆனாலும் பரவாயில்லை. நாங்கள் மனந்தளரப் போவதில்லை. கடவுள் காக்க!” 
ஓங்கி ஒரு குத்து கதவில் விழுந்தது. 
யார் தட்டுவது?”  போலின் வினவினாள்.
நாட்டின் பிரதிநிதிகள்.
உங்களால் ஒரு நிமிடம் பொறுக்க முடியாதா?”
கதவைத் திறவுங்கள்! திறக்காவிட்டால் கதவை உடைத்தெறிவோம்!
சரி, கதவைத் திறவும், நண்பரே!
திடீரென, ஏதோ ஓர் அற்புதம் விளைந்ததுபோல், பளங்கோனியின் நடுக்கமும் மூச்செறவும் மடிந்துவிட்டன. 
லூபின்தான் முதலில் உள்ளே வந்தான். தனது கழுத்தாடையை அரையில் கட்டியிருந்தான். ஈட்டிகள் ஏந்திய பன்னிருவர் அவன் பின்னே வந்தார்கள். முதலில் போலின்மீதும், பிறகு என்மீதும் பார்வையை வீசிய லூபின் கூவினான்:
பீடையே! காதல் சோடி ஒன்றை நாங்கள் குழப்பவதுபோல்  தெரிகிறதே!. எங்களை மன்னிக்க வேண்டும், அழகு நங்கையே!”  
பிறகு தன்னுடன் வந்தவர்களை திரும்பிப் பார்த்து, “எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது கீழ்க்குடி மக்களுக்கு மட்டுமே தெரிகிறதுஎன்று சொன்னான். ஆனாலும், அறையினுள் அவன் எதிர்கொண்ட கோலம் அவனை மகிழ்வித்தது என்பதில் ஐயமில்லை. அவனது கோட்பாடுகளுக்கு மாறான மகிழ்ச்சி அது.  
அவன் கட்டிலில் அமர்ந்து, அந்த மேற்குடி அழகியின் நாடியை உயர்த்தி, “இது இரவும் பகலும் பாராயணங்களை முணுமுணுப்பதற்கு படைக்கப்பட்ட வாயல்ல. அதற்காகப் படைக்கப்பட்டிருந்தால், ஏமாற்றம்! ஏமாற்றம்! ஆனாலும் குடியரசுக்குப் பிறகே மற்றவை எல்லாம்! அந்த துரோகி பளங்கோனியை நாங்கள் தேடி வந்திருக்கிறோம். அவன் இங்குதான் இருக்கிறான். எனக்கு உறுதியாய்த் தெரியும். அவன் எனக்கு வேண்டும். கழுத்தறுக்கும் எந்திரத்தில் அவனைக் கிடத்துவிப்பேன். அதன்மூலம் எனக்குப் பெரும்பேறு கிடைக்கும்என்றான்.
அப்போ, தேடிப்பார்க்க வேண்டியது தானே!என்றாள் போலின்.
அவர்கள் கதிரை மேசைகளின் கீழேயும், அலுமாரிகளின் உள்ளேயும் பார்த்தார்கள். கட்டிலின் கீழே ஈட்டிகளைப் பாய்ச்சினார்கள். துவக்குமுனைகளால் தலையணைகளைத் துளைத்தார்கள். 
லூபின் காதைச் சொறிந்துகொண்டு கடைக்கண்ணால் என்னை நோட்டமிட்டான். என்மீது அவன் கேள்விக்கணை தொடுக்கப்போகிறான் என்று பீதியடைந்த போலின் என்னிடம் சொன்னாள்:
அன்பரே, இந்த வீடு எவ்வளவு நன்றாக எனக்குத் தெரியுமோ அவ்வளவு நன்றாக உங்களுக்கும் தெரியும். சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு போய் நண்பர் லூபினுக்கு எல்லாவற்றையும் சுற்றிக்காட்டுங்கள். இப்படிப்பட்ட நாட்டுப்பற்றாளர்களுக்கு வழிகாட்டுவதில் நீங்கள் இன்பம் காண்பீர்கள் என்பது எனக்கு உறுதியாய்த் தெரியும்.”   
அவர்களை நான் நிலவறைக்கு இட்டுச்சென்றேன். அங்கு கிடந்த விறகுக் கும்பியை அவர்கள் புரட்டிப் போட்டார்கள். புட்டி புட்டியாக திராட்சைமது குடித்தார்கள். அதன் பிறகு லூபின் தனது துவக்குச் சோங்கினால் மதுநிறைந்த பீப்பாய்களை இடித்தெறிந்தான். நிலவறையில் மதுவெள்ளம் பெருகவே, எல்லோரையும் புறப்படும்படி சாடை காட்டினான். சங்கடம்வரை அவர்களைக் கொண்டுசென்றேன். அவர்களுடைய குதிகளில் படும்படியாக சங்கடத்தை அடித்துச் சாத்திவிட்டு, ஆபத்து கழிந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக போலினிடம் ஓடினேன். 
அதைக் கேட்டதும் அவள் கட்டிலுக்கும் சுவருக்கும் இடையே தலைகுனிந்து, “பளங்கோனி ஐயா! பளங்கோனி ஐயா!என்று கூப்பிட்டாள். 
பதிலுக்கு ஓர் ஈனப்பெருமூச்சு வெளிவந்தது. 
கடவுள் காக்க! பளங்கோனி ஐயா! அச்சத்தின் உச்சத்துக்கு என்னைக் கொண்டுபோய்விட்டீர்களே! செத்துப்போனீர்களோ என்று அஞ்ச வைத்துவிட்டீர்களே!என்று அலறினாள் போலின்.  
பிறகு என்னை திரும்பிப் பார்த்து, “என் அப்பாவி நண்பரே, நீங்கள் அவ்வப்பொழுது என்னைக் காதலிப்பதாக முழங்கி மகிழ்ந்து வந்தீர்கள். இனிமேல் என்றுமே அப்படிச் சொல்லமாட்டீர்கள்!என்று சொன்னாள். 
____________________________________________________________________________________
Anatole France, Madame de Luzy, translated from French to English by Frederic Chapman and from English to Tamil by Mani Velupillai, 2020-01-26.
____________________________________________________________________________________















No comments:

Post a Comment