வறட்சி


Hyperleap image
 எஸ். இராசரத்தினம்
__________________________________________________________________________________________________
இடைவிடாது வேகிய வெயிலில் துஞ்சிய நிலம் நடுங்கி முனங்கியது. உருகிய எரிமலைக் குழம்பிலிருந்து எழுவது போல் நிலத்திலிருந்து வெப்பம் சுழன்று கிளம்பியது. வெந்த பாறையில் நொந்த பல்லி ஒன்று நிழலைநாடி ஒரு வெடிப்பைத் தேடி மூச்சுவாங்கி ஊர்ந்து விரைந்தது. விழுந்தும் விழாத மரநிழலில் நாய்களும் மாடுகளும் குறாவியிருந்தன. வெப்பம், விடாயிலிருந்து தம்மை மீட்கும் மழையை எதிர்பார்த்து அவை காத்திருந்தன. வெப்பமோ நாள்தோறும் மேன்மேலும் மிகுந்து, கண்ணுக்குப் புலப்படாத நெருப்புத் தகடாகி, எல்லா உயிரினங்களையும் வாட்டி வறட்டி முடக்கியது. மழையினால் மட்டுமே அந்த நெருப்புத் தகட்டைத் தணிக்க முடியும் போலிருந்தது.    
அந்த வறட்சி ஒரு மாதத்தையும் கடந்து நீடித்தது. நாள்தோறும் உழவர்கள் பதைப்புடன் வானத்தை சல்லடை போட்டனர். முகிலின் ஆவி எனத்தக்க அதன்  சருகுகள் கூட அருகிய வானமே அவர்களுக்குத் தென்பட்டது. தமக்கு இன்னல் விளையப்போகிறது என்ற எண்ணம் அவர்களின் உள்ளத்துள் நிறைந்தமை அவர்களின் துணுக்குற்ற முகத்தில் புலப்பட்டது. வயல்களில் அவர்களின் நெற்கதிர்கள் அறுவடையின்றி மெல்ல மெல்லக் கருகிவந்தன. அவை எல்லாவற்றையும் விட, வறட்சி நீடித்தால், அவர்களின் மாடுகள் கூட விடாயினால் மாண்டுவிடுமே! 
ஊர்வாசிகள் சிலர் கிணறுதோண்டும் வீண்முயற்சியில் இறங்கினார்கள். நிலத்தின் மேலேயோ கீழேயோ தண்ணீர் தென்படவில்லை. ஊரில் இரண்டு துரவுகளில் மட்டுமே தண்ணீர் தெரிந்தது. இப்பொழுது அந்தத் துரவுகளும் கூட வற்றத் துவங்கின. அவர்களின் மாடுகளுக்கு இனிமேல் தண்ணீர் கிடைக்காது என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. 
அதேவேளை இன்னும் கொஞ்சக் காலத்துக்கு மாடுகள் தண்ணீர் குடிக்கக்கூடிய வேறொரு துரவும் இருக்கத்தான் செய்தது. அது வேலுமுதலியாருக்குச் சொந்தமான துரவு. இருந்தாலும் ஊர்வாசிகள் தமது மாடுகளுக்கு  தனது துரவில் தண்ணீர் ஊட்ட அவர் மறுப்புத் தெரிவித்தார். அவருக்கு அவர்கள் கட்டணம் செலுத்த முன்வந்தார்கள்; அவரை அச்சுறுத்திப் பார்த்தார்கள். ஆனாலும் முதலியார் விடாப்பிடியாக மறுத்துவிட்டார். அவர்களின் அன்றைய அவலத்தில் ஆதாயம் சம்பாதிக்க அவர் ஒரு வாய்ப்பினைக் கண்டுகொண்டார். அதன்படி அவர்களுடைய கோரிக்கைக்கு ஒரு மாற்று யோசனையை முன்வைத்தார். அவர்களுடைய மாடுகளை வாங்கத் தயாராய் இருப்பதாகத் தெரிவித்தார். அபத்தமான முறையில் மாடுகளுக்கு மிகவும் மலிந்த விலை கேட்டார். உறுத்தலின்றி அவர் முன்வைத்த யோசனைக்கு உழவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். அப்படியென்றால், தமது செத்த மாடுகளை அவர்கள் தாராளமாக தோல்-வியாபாரிகளிடம் ஒப்படைக்கலாம் என்று அவர் சொன்னதும் நிலைமை சற்று மோசமாகியது. ஆனாலும், கொஞ்ச நேரம் நின்றுபிடித்த பிறகு காத்தாரைத் தவிர மற்ற உழவர்கள் எல்லோரும் முதலியாருக்கு விட்டுக்கொடுத்தார்கள். 
காத்தார் கிழவனுக்கு சாடையான காய்ச்சல். தனது குடிசைக்கு வெளியே ஓலைத் தாழ்வார நிழலில் போடப்பட்ட ஒரு பாயில் அவர் கிடந்தார். ஐம்பது வயது தாண்டியும் அவர் உடல்வலுவுடன் தென்பட்டார். தனது வயதுடைய பிற உழவர்களுக்கு நேர்ந்த உடல்வலுக்கேட்டிலிருந்து அவர் தப்பியதற்கு, பிறவியில் அவருக்கு வாய்த்த  ஏதோவொரு விசித்திரவலுவே காரணம். தனது சொந்த மேன்மையிலும் குன்றா வலிமையிலும் திடமான நம்பிக்கையை அவருக்கு அது ஊட்டியிருந்தது. அவது நினைவுக்கெட்டிய காலந்தொட்டு தனது தந்தையர்க்குச் சொந்தமான காணியைப் பேணிக்கொள்ளும் பணிக்கே தனது வாழ்வினை அவர் அர்ப்பணித்திருந்தார். தான் நிறைவு கொள்ளும் வண்ணம் அந்தப் பணியை ஆற்றி வந்தார். தனது தந்தையர்க்கு ஆற்றவேண்டிய கடமையை நிறைவேற்றியிருந்தார். அவர் மறைந்த பிறகு அவது புதல்வர்கள் இருவரும் அதே பணியைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள். 
மூத்தவன் இராசுவை அவர் ஏறேடுத்துப் பார்த்தார். அவன் வாட்டசாட்டமானவன். வயலில் வேலைசெய்யும் பொழுது அவன் தசைநார்கள் கடலலை போல் நெளிவதைப் பார்ப்பதே ஒரு பேரின்பம். அவன் வெகுளித்தனமானவன்; ஆனாலும் நல்லவன், பொறுமைசாலி. ஆனபடியால் அவன் மனைவி கூட தண்டனைப் பயமின்றி அவனை எள்ளி நகையாடி வந்தாள். அவனது சிந்தனைச் சுணக்கத்தை உடல்வலு ஈடுசெய்தது. அந்தவகையில் அவன் ஒரு நல்ல புதல்வனே!     
அதேவேளை சூரியர் பிரச்சனை கொடுத்தான். அவன் ஒரு நோஞ்சான். உடல்மெலிவினால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டான். நடக்கும்பொழுது எலும்புருக்கி நோயாளிபோல் குறாவினான். வாய்ப்பேச்சுக் குறைவு; விசனப்படும் போக்கு அதிகம். ஆனாலும் பெரிய வாசகன்; கதைக்கநேர்ந்த பொழுதெல்லாம் விறலுடனும் வேட்கையுடனும் கதைத்தான்; அப்பொழுது அவன் ஒரு நோஞ்சானோ என்று ஐயுறத்தோன்றும். அவனிடம் கிளர்ந்த எண்ணங்கள் உழவர்கள் பலரையும் அச்சுறுத்தின. வழிவழிவந்த அவர்களின் நம்பிக்கைகளை அவன் ஏளனம்பண்ணி, நியாயம்கூறிச் சாடினான். அவர்களால் அவனுக்குப் பதில்கூற  முடியவில்லை. அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள், நீதிநியாயங்கள் பற்றி அவன் எடுத்துரைத்தான். வேலுமுதலியார் போன்ற மனிதர்கள்மீது அவனது உள்ளத்துள் குடிகொண்ட காத்திரமான வெறுப்பை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. தம்மை அடக்கி ஒடுக்குவோருக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடும்படி அவன் கோரியது  கேட்டு அவர்கள் பெரிதும் பீதியடைந்தார்கள். 
அச்சி என்ற அவர்களது காளையை முதலியாருக்கு விற்கும் யோசனை அறிந்து சீறியெழுந்தான் சூரியர். காத்தாரும் இராசுவும் முன்வைத்த வாதங்கள் எல்லாம் அவன் சீற்றத்தைப் பெருக்கின. ஒரு திருடனுடன் பேரம் பேசுவதை விட தமது காளை சாவதையே அவன் பெரிதும் விரும்பினான். முதலியாரைத் தாக்குவேன் என்று கூட எச்சரித்தான். அந்த எச்சரிக்கையை அவன் நிறைவேற்றக் கூடாது என்பதற்காக அவனது மறுப்புக்கு தற்காலிகமாக விட்டுக்கொடுத்தார் காத்தார். 
வியர்வையால் மெழுகிய பாயில் கிடந்த காத்தார், அச்சியைப் பற்றிய பேச்சை எடுக்கும் விதம் புரியாது சூரியரைப் பார்த்தார். மகன் ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கியிருப்பது போல் தென்பட்டது. செய்வதற்கு வேறு உருப்படியான வேலை எதுவும் இல்லை என்றால், அவன் வாசிப்பில் மூழ்குவது வழக்கம். இராசு அவனருகில் குந்தியிருந்தான். அவனுக்குப் புழுக்கமாகவும் அரியண்டமாகவும் இருந்தது. மேனி புழுங்கி வியர்வை வழியும் வயிற்றை அவன் விரலினால் தடவினான். அவனது ஈரலிப்பான முதுகிலிருந்து உறிஞ்சப்பட்ட வியர்வை அவன் பின்புறம் சாய்ந்த மண்சுவரில் அடர்ந்து படர்ந்திருந்தது. உள்ளே வேலைசெய்து கொண்டிருந்த தனது மனைவியை இராசு இடைக்கிடை திரும்பிப் பார்த்தான். 
சூரியர் சடாரென தனது புத்தகத்தை மூடும்வரை அங்கே ஒரு காத்திரமான அமைதி குடிகொண்டிருந்தது. 
இந்த வெக்கைக்கு ஒரு முடிவே கிடையாதா!” 
ஓம்! ஓம்!என்று ஒத்தூதினான் இராசு. அவன் உடல் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.நெருப்பு பற்றியது போல் எனக்கு உடம்பு எரியுது. இந்த சாணிச்சுவர் கூட கொதியாவி கக்குது.  கடவுளே! இன்னும் கொஞ்ச நேரத்திலை நான் எரிஞ்சு சாம்பலாகிவிடுவேன்.” 
இந்த வெக்கையிலை எனக்கு மூச்சுத் திணறப்போகுது; ஆ! மழை பெய்து துலைச்சால்! வெள்ளம் பெருகினாலும் கூடப் பரவாயில்லை; உயிரோடு வறண்டு விடாயினால் சாவதை விட வெள்ளத்துள் தாழ்வது மேல்! அவர்கள் எல்லாரையும் பாருங்கோ! அடங்கி ஒடுங்கிய பிறவிகள்! விதிக்கு கட்டுண்ட பிறவிகள்! எல்லாரும் மட்டிகள்! மட்டிகள்!என்று கத்திய சூரியர் தனது சவுக்கத்தினால் முகத்தை துடைத்தான்.  
சூரியரின் குமுறல் கண்டு உவகையுடன் முறுவலித்தான் இராசு. தம்பி ஒரு விதமானவன். ஆனாலும் அண்ணன் அவனை நேசித்தான். உணர்ச்சி பொங்கிக் களைத்த சூரியர் அமைதியடைந்தான். அப்பொழுது அச்சி ஒடிந்து நடந்து ஒரு பனைமரத்தை அணுகுவதை அவன் கண்டான். அது விடாய் தணிக்க எதையோ நாடி அந்த மரத்தை நம்பி நக்கியபொழுது எழுந்த கரடுமுரடான சத்தம் அவன் காதில் விழுந்தது.  அச்சி பிறகு குடிசைப் பக்கம் பார்த்துவிட்டு, புல்லுத்தரையை நோக்கி மெல்லத் திரும்பியது. புலுண்டி வறண்ட புல்லை தனது காய்ந்து வீங்கிய உதடுகளால் அது கவ்வி இடுங்கியது. 
சூரியர் தலையை மெல்ல ஆட்டியபடி, “அச்சி, பாவம்! கெரியிலை விடாயினால் செத்துவிடும்என்று இரங்கி நாவைக் கொட்டினான்.  
சடாரெனத் தமையன்மீது பாய்ந்தவன், “நீ அச்சி பாவம் எண்டு அனுங்கிறதை விட்டுப்போட்டு அதுக்கு கொஞ்சத் தண்ணி குடன்! கொஞ்சத் தண்ணியாவது குடன்!” 
இராசு மறுத்துக் கதைத்தான்:அப்பிடிச் சொல்லுறது சுகம், தம்பி! ஆனால் எங்கை இருந்து தண்ணி வப்போகுது? இப்ப இருக்கிற நிலைவரத்திலை எங்களுக்கே தண்ணி பத்தாது. இனிமேல் துரவிலிருந்து இன்னும் குறைவாய்த்தான் தண்ணீர் எடுக்கநேரும் எண்டு அவங்கள் சொல்லிறாங்கள்.” ஆனாலும் இராசு தொடர்ந்து இனிக்கப் பேசினான்:நான் காலமை அச்சிக்கு கொஞ்சம் தண்ணி குடுத்தனான் தான். என்ன நடந்ததெண்டு உனக்குத் தெரியுமோ? அதுக்கு முன்னாலை ஒரு சிரட்டை நிரம்ப  தண்ணியை நீட்டினன். கடும்விடாயில் தவிச்ச அந்த பாவப்பட்ட பிறவிக்கு தண்ணியைக் கண்ட அவாவில் கெலிபிடிச்சு, ஒரு எத்தல் எத்தி, என்ரை கையிலிருந்து சிரட்டையை தட்டி விழுத்திப்போட்டுது. அந்தப் பேதை பிறகு நிலத்தை நக்கி நிறைவுகாண வேண்டியதாப் போச்சுது.  பாவம், அச்சி!”   
இராசு தனது பெரிய தலையை ஆட்டினான். அவனுக்கு அப்பால் உற்றுப் பாத்தான் சூரியர்.
காய்ச்சலால் இளைத்த காத்தார் அமைதியைக் குலைத்து ஈனக்குரலில் கேட்டார்:சூரி, அச்சியை முதலியாருக்கு விக்க நீ ஏன் விடாயாம்? அதை வைச்சிருந்து, அது சாகிறதைப் பாப்பதில் என்ன பயன்? அதை நாங்கள் அவருக்கு வித்தால், வேறை என்னதான் நேர்ந்தாலும்அது விடாய் வந்து சாகாதெல்லோ?”    
இராசு அதற்கு உடன்பட்டு தலையசைத்தான். 
அப்பா சொல்லுவது சரி, சூரி. அச்சியைச் சாகவிடுவதால் எவருக்கும் பயன் கிடைக்கப் போவதில்லை. பாவம், அச்சி! அது, தான் வருந்துவதையே எங்களுக்குச் சொல்லக்கூடிய பிறவி அல்ல.
உதடுகள் பிளந்து நடுங்க, சூரியர் அவர்கள் இருவரையும் பார்த்தான். 
நீங்கள் இரண்டு பேரும் என்ன சொல்லுகிறீர்கள்? உங்களுக்கு தன்மானம் இல்லையோ? சரி! போகட்டும்! ஒரு போக்கிரிக்கு அச்சியை வித்துப்போட்டு, நாங்கள் தோத்துவிட்டோம் எண்டதை ஒப்புக்கொள்ளுங்கோ! நாங்கள் தாண்டு தவண்டு, மீண்டும் முதலியாரிடம் போவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாய் இருக்கும்!” 
எண்டாலும் சூரி, நாங்கள் அச்சியை விக்க மறுத்தால், நாங்கள் வேறெவரையும் அல்ல, எங்களைத் தான் வருத்தப் போகிறோம். இனி, முதலியாருக்கு ஒரு காளை குறைவதால் ஒன்றும் நடவாது. அதை விஞ்சிய பணக்காரர் அவர். நாங்கள் அலட்டிக்கொள்ளாமல் அப்போதே அச்சியை வித்திருந்தால், நீ சொன்ன தன்மானத்தை காத்திருக்கலாம்…” என்றார் காத்தார்.
சூரியர் குறுக்கிட்டான். 
நான் சொல்லுவது உங்கள் இரண்டு பேருக்கும் விளங்கேல்லையோ? அப்பா, நாங்கள் முதலியார் மாதிரியான ஆட்களை எதிர்த்துநிண்டு, தாங்கள் விரும்பியபடி எல்லாத்தையும் வைச்சிருக்க முடியாது எண்டதை அவைக்கு காட்டவேண்டிய காலம் வந்துவிட்டது. ஏழைகளாகிய நாங்கள் முதலியாரின் ஆசைகளுக்கு கட்டுப்பட்ட அடிமைகளல்ல என்பதை  நாங்கள் அவருக்கு காட்டவேண்டும்.
ஆனாலும், மகனே, நீ சூனியத்தை எதிர்த்துப் போராடுகிறாய். முதலியாருக்கு எதிராக உன்னால் எந்த ஆயுதத்தை கையாள முடியும்? எல்லாத்தையும் அவர் கைவசம் வைச்சிருக்கிறார். இளமைத் துடிப்பு மட்டுமே உன் கையிருப்பு.”   
உணர்ச்சிகள் குமுறி எழவே சூரியரின் மேனி முழுவதும் நடுங்கியது:ஒரு பண்டியையாவது சாக்காட்டி அந்த இறைச்சியை என்னால் நாய்களுக்கு போடமுடியும். என்ரை கையாலை முதலியாரைச் சாக்காட்டி அந்தப்  பண்டியிடமிருந்து உலகத்தை விடுவிக்க முடியும்.”   
சூரி, சூரி, நீ புரியாமல் கதைக்கிறாய்என்று கத்தினார் காத்தார்.நொந்துபோன என்ரை அப்பாவி மகனே, ஒருபோதும் நீ அசட்டுத்தனமாய் எதுவும் செய்ய மாட்டாய் எண்டு எனக்கு வாக்குக் குடடா! நாங்கள் செய்யக்கூடிய எதனாலும் பயனில்லையடா!  தனிப்பட்ட வன்முறையினால் முதலியார் மாதிரியான ஆட்களை வழிக்கு கொண்டுவர முடியாது; அந்தளவுக்கு அவர்களின் தொகையும் பலமும் அதிகம். கடவுளால் தான் அவர்களை அழிக்க முடியும்.
சூரி குறுக்கிட முற்பட்டான். ஆனால் காத்தார் தொடந்து பேசினார்:அத்துடன் அச்சி வருந்தும் விதத்தை நீ பார்த்திருக்கிறாய். அது வாயில்லாப் பிறவி, சூரி! அதை உப்பிடி வதைக்க உனக்கு உரிமை இல்லை. அது செத்தால், அந்தப் பாவம் எங்கள் தலையில்தான் விழும்.”  
சூரி வருத்தத்துடன் முதலில் தகப்பனையும், பிறகு தமையனையும் பார்த்தான், அவன் உதடுகள் நடுங்கி ஒடுங்கின. 
சரி, அப்பா!என்று சொல்லி எழுந்த சூரிநீஙள் விரும்பியபடி செய்யுங்கோ! எப்படி எண்டாலும், அச்சி உங்கடை காளைதானே! நானே முதலியாரிட்டை அதைக் கொண்டுபோகட்டோ?”  
இராசு கொண்டுபோறது தான் நல்லதுஎன்றார் காத்தார் கனிவோடு. 
சூரி திரும்பி குடிசைக்குள் புகுந்தான். அவனுக்கு விடாய்த்தது. பானைக்குள் ஒரு பேணியை விட்டான்.  “சூரி, கவனம்! பானைக்குள் ஒரு சொட்டுத் தண்ணிதான் கிடக்கு!என்றாள் சரசுவதி. 
அவன் ஒருசில சொட்டுகளை உறிஞ்சிவிட்டு பேணியை வைத்தான். 
பிறகு தலையில் ஒரு சவுக்கத்தை சுற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். அவன் காலடி நிலம் வெந்தது. பொசுக்கும் வெயில் அவன் கண்களைத் தாக்கியது. நனைந்த கண்ணாடிக்கூடாகத் தெரிவதுபோல் தரை நடுங்கியது. புழுதி படிந்த ஒழுங்கையில் இறங்கி தனது நண்பன் நாதனின் வீட்டை நோக்கி நடந்தான்.  
இளமஞ்சள் வண்ணம் பூசிய தொடுவானுள் கதிரவன் பாய்ந்து வீழ்கையில் சூரியர் வீடுதிரும்பி நடந்தான். திணறடிக்கும் பகல்வெக்கை தணிந்தும் கூட, காய்ந்து வறண்ட உணர்வு அவனைச் சூழ்ந்துபற்றி இடர்ப்படுத்தியது. கண்ணயரவைக்கும் வண்ணம் அவனைச் சூழ்ந்த அமைதி தொலைதூரம் நீண்டு கிடந்தது..  வெறுங்காலையும்  ஆடைத்தொங்கலையும் பற்றிப்படர்ந்த புழுதி அகலும் வண்ணம் காலை மேலே எற்றி எற்றி நடந்தான். நாடுமுழுவதும்  அமைதியும், மெதுமையும் அடைந்த மாதிரி அப்பொழுது அவனுக்கு தெரிந்தது. ஒருவேளை நாளை வானத்தின் கீழ்ப்பட்ட முகில்கள்  சோர்ந்து சோம்பி தமது ஈரத்தை இனிதே பிழிந்து சொரியக்கூடும். அப்புறம் நிலத்து உயிரினங்கள் அனைத்தும் ஆறியமர்ந்து தம்மைப் படைத்தவனின் அருளை எண்ணி வியக்கக்கூடும்!  
போகட்டும்! சூரியர் நிறைவுகொள்ள அதைவிட வேறு நல்ல நியாயம் இருந்தது. தான் முதலியாருக்குச் செய்ததை எண்ணிப்பார்க்கையில் அவன் முகத்தில் ஒரு புன்னகை மின்னியது. 
நாளைக்கு, ஒருவேளை அந்தி சாயமுன்னரே, முதலியாரின் மாடுகள் எல்லாம் ஒன்றும் தப்பாமல் செத்து மரத்துவிடும். நாதன் அதற்குரிய நஞ்சை சூரியரிடம் கொடுத்திருந்தான். முதலியாரின் துரவை நஞ்சுபடுத்தப் போதிய வல்லமை அதற்கிருப்பதாக நாதன் உறுதிபடச் சொல்லியிருந்தான். ஊர்ந்துசென்று துரவுக்குள் நஞ்சை ஊற்றுவதில் ஆபத்து நேர இடமிருந்தது. காரணம், முதலியார் புத்திசாலித்தனமாக தனது துரவைக் காக்க ஒரு கங்காணியை அமர்த்தியிருந்தார். ஆனாலும் கங்காணியின் கண்ணுக்குப் படாமல் அதற்குள் நஞ்சூற்றுவதில் சூரியர் வெற்றிகண்டான். இன்னும் கொஞ்ச நேரத்தில் மாடுகள் நஞ்சுத் தண்ணீரைக் குடித்துச் செத்துவிடும்!  
முதலியார் புரிந்த குற்றத்துக்கு அவரை அவன் பழிவாங்கிவிட்டான். அவருக்கு நேரவேண்டியதே நேர்ந்துள்ளது. அவருக்காக எவரும் கவலைப்படப் போவதில்லை. மேற்படி செயலைப் புரிந்த சூரியர் பிடிபட்டாலும் கூட, ஊர்வாசிகளின் பரிவும் ஆதரவும் அவனுக்கே கிடைக்கும். ஆனாலும் தான் புரிந்த செயலை அவன் எவரிடமும் தெரிவிக்கப் போவதில்லை. அவன் அறிந்தவரை அவன் துரவுக்குள் நஞ்சூற்றியதை நாதனைத் தவிர வேறெவரும் காணவில்லை. நாதன் இரகசியம் காப்பான் என்பதால் நாதனை அவனால் நம்ப முடிந்தது. 
மெலிதாய் வாய்க்குள் “…ம்…ஒலி எழுப்பியபடி அவன் எட்டி அடியெடுத்து வைத்தான். வெற்றியுணர்வினால் அவன் கண்கள் பளபளத்தன.   
வீட்டுச் சங்கடத்தை அவன் தள்ளித் திறந்தபொழுது உள்ளேயிருந்து அழுகுரல்  வெளிவந்து காதில் விழுந்தது. சூரியர் அப்படியே நின்றான். அவனுக்கு உடம்பு விறைத்தது. தான் துரவுக்குள் நஞ்சூற்றியதைக் கண்ட யாரோ ஒருவர் தன்னைப் பிடிக்க வந்திருக்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு முதலில் எழுந்தது. கால்கள் நடுங்க காதைத் தீட்டினான். சரசுவதியின் புலம்பல் பிறவற்றை விஞ்சி ஓங்கியது. ஆண்களின் குரலும் அவன் காதில் விழுந்தது. தன் காதில் விழுவது ஒப்பாரி வைப்போரின் புலம்பல் என்பது மெல்ல மெல்ல அவனுக்குப் புரிந்தது. இதயமும் வயிறும் புண்பட்டன. அவன் வீட்டில் யாரோ இறந்திருக்க வேண்டும். அது யார் என்பது அவனுக்கு உறுதிபடத் தெரிந்தே இருந்தது. 
வீட்டினுள் பாய்ந்தவன் தகப்பனின் உடலை அணுகும்பொழுது மற்றவர்கள் ஒதுங்கி வழிவிட்டார்கள். சரசுவதி அவனைக் கட்டிப்பிடித்துப் புலம்பினாள். அவன் கண்கள் வற்றியிருந்தன. அதிர்ச்சியுடன் கண்வெட்டாமல் தகப்பனைப் பார்த்தபடி நின்றான். 
அழுது சிவந்த கண்களுடன் தம்பியை அரவணைத்தான் இராசு. 
எப்படி? என்னால் நம்பவே முடியவில்லை. நான் வெளியே போகேக்கை அப்பா நல்ல சுகமாய்த் தானே இருந்தவர்
இராசு திடீரென விம்மி அழுதான். 
எப்படி நடந்ததெண்டு சொல்லு? என்ன நடந்தது?”
சூரியர் தமையனின் கைகளைப் பற்றினான்.     
ஆ! அது ஒரு பயங்கரம், அப்பா செத்த விதம்... அவர் நிம்மதியாகச் சாகவில்லை. வேதனையில் முறுகிய அந்த முகத்தைப் பார். சாகமுதல் அவர் பயங்கர வேதனைக்கு உள்ளானார். சாகவேண்டிய விதமாக அவர் சாகவில்லை.
இராசு தங்குதடையின்றி விம்மி அழுதான். 
அப்படி நடந்திருக்க முடியாது? உண்மையாய் என்ன நடந்தது?”
அப்பாவும் நானும் உன்னைப் பற்றிக் கதைச்சுக்கொண்டிருந்தோம்இராசு விம்மி விம்மிப் பேசினான்.அப்ப அவருக்கு வேதனை இல்லை. ஆனால் அவருக்கு விடாய் எடுத்தது. அவருக்கு ஒரு பேணி-தண்ணி குடுத்தன். கையோடு அவர் வேதனையில் குளறியது காதில் விழுந்தது. கிடந்தபடி புரண்டார்முறுகினார், உதைஞ்சார்.  ஐயோ, சூரி!” 
சூரியருக்கு  முள்ளந்தண்டில் யாரோ கத்தி ஏத்துவது போலிருந்தது. விறைத்து மரத்த அலகுடன்கூடிய அந்தக் கத்தி, அவனை ஊடறுத்து வலியைப் பாய்ச்சுவது போலிருந்தது. 
தண்ணி? தண்ணி?”  என்று கரகரத்த குரலில் சூரியர் கத்தினான்.அண்ணா, உந்தத் தண்ணி உனக்கு எப்படிக் கிடைச்சுது? சொல்லு, எப்படிக் கிடைச்சுது?”
தம்பியின் பார்வையில் தெரிந்த ஆத்திரத்தைக் கண்டதும் இராசுவின் விம்மல் நின்றுவிட்டது. சூரியரின் உடல் முழுவதும் பதறுவது தமையனுக்குத் தெரிந்தது. 
குடத்துத் தண்ணிதான்.இராசுவுக்கு வாய் திக்கியது. 
ஓம், அது எனக்குத் தெரியும். எங்கையிருந்துஎங்கையிருந்து கொண்டுவந்த தண்ணி?”
முதலியாரின் துரவிலிருந்து… இஞ்சை இருந்த தண்ணீர் பத்தாது. அச்சியை நான் விக்கக் கொண்டுபோனபோது, முதலியாரிடம் கொஞ்சத் தண்ணி கேட்டன்.”  
நீ ஒரு முட்டாள்! முட்டாள்! முட்டாள்!என்று கத்தினான் சூரியர். கைகளை உய்ர்த்தி விளாசினான்.அது நஞ்சுகலந்த தண்ணி. அதுக்கு நஞ்சு கலந்தது நான்தான். என்னை விடு, என்னை விடு!” 
இராசுவின் பிடியிலிருந்து விடுபட்ட சூரியரின் முகத்தில் முரட்டுத்தனம் தெரிந்தது. 
அதிர்ந்த தமையன்சூரி! சூரி!என்று கத்தினான். சூரியோ குடத்தைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடினான். பிறகு சன்னிகொண்டு, விம்மி விம்மி தலைக்கு மேலே குடத்தை உயர்த்தி, நிலத்தில் ஓங்கி அறைந்தான். 
கறையுண்டு தடித்து விறைத்த தண்ணீர் சிதறுண்டு பரவித் தரையை வருடியது. விடாய்கொண்ட நிலம் அதை வேட்கையுடன் உறிஞ்சியது.     
__________________________________________________________________________________ 
S. Raja Ratnam, Drought, A World of Great Stories, Edited by Hiram Haydn & John Cournos, Gramercy Books, New York, 2003, p. 808-813. Translated by Mani Velupillai.   



  

  





No comments:

Post a Comment