நிகால் ஜயவிக்கிரமா



இலங்கையில்

நிறைவேற்று ஜனாதிபதி என்னும் மாயை
Image result for nihal jayawickrama
கலாநிதி நிகால் ஜயவிக்கிரமா​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தற் பெறுபேறுகளின் எதிரொலியாக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊடகர்களும் கிட்டத்தட்ட ஒத்தபடி பொங்கியெழுந்து கருத்துரைத்தார்கள். அதன் மூலம் எமது நாட்டின் அரசியல்யாப்பை தாங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதை அவர்கள் மெய்ப்பித்துள்ளார்கள். குறிப்பாக ஜனாதிபதியின் அதிகாரங்களை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது வெளிப்படையாகவே புலப்படுகிறது.  எமக்கு இது ஓர் அவப்பேறாகும்.
இன்றைய ஜனாதிபதி-பதவி, 1978ல் ஜனாதிபதி ஜெயவர்த்தனா புகுத்திய அதே பதவி அல்ல. இரு பதவிகளின் அதிகாரங்களும் ஒன்றல்ல; ஒத்தவையும் அல்ல. ஜனாதிபதி ஜெயவர்த்தனா தனக்கு உரித்தாக்கிய நிறைவேற்று அதிகாரங்களுள் கிட்டத்தட்ட அனைத்தையும் 19வது திருத்தம் களைந்துவிட்டது. 1972ம் ஆண்டின் அரசியல்யாப்புக்கு அமைவான ஜனாதிபதி போன்று பெரிதும் பிரதம மந்திரியின் மதியுரைப்படி செயற்படவேண்டிய அரசியல்யாப்புவாரியான அரசுத் தலைவரே இன்றைய ஜனாதிபதி.
பிரதம மந்திரியை நியமித்தல்
ஓர் அரசுத் தலைவர் அரசியாகவோ, ஜனாதிபதியாகவோ விளங்கலாம்; பிரதம மந்திரியை நியமிப்பதே அவரது அதிமுக்கிய பணி. பிரித்தானியவில் அப்பணி மரபையொட்டி மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையில் அரசியல்யாப்பின் 43ம் உறுப்புரையின்படி "நாடாளுமன்றத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கும் வாய்ப்பு எந்த நாடாளுமன்ற உறுபினருக்கு மிகவும் அதிகம் என்று ஜனாதிபதி கருதுகின்றாரோ அந்த நாடாளுமன்ற உறுப்பினரையே அவர் பிரதம மந்திரியாக நியமிக்க வேண்டும்". அதற்கு, கையொப்பங்களுடன் கூடிய மனுவோ, நாடாளுமன்றத்தில் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்போ வேண்டியதில்லை. 1972ம் ஆண்டின் அரசியல்யாப்பிலும் கூட  இத்தகைய ஏற்பாடே இருந்தது.

பிரதம மந்திரியை அகற்றல்

"ஜனாதிபதி தன் கைப்பட எழுதி ஒப்பமிட்டு அனுப்பும் மடல் கொண்டு பிரதம மந்திரியைப் பதவிநீக்கலாம்" என்ற ஏற்பாடு 1978ம் ஆண்டின் முழுமுதல் அரசியல்யாப்பில் காணப்பட்டது. 19வது திருத்தம் அந்த ஏற்பாட்டை நீக்கியது. அதற்குப் பதிலாகப் புகுத்தப்பட்ட ஏற்பாடு வருமாறு: "நாடாளுமன்றம் (1) அரசாங்கத்தின் கொள்கைக் கூற்றினை நிராகரித்தால், (2) நிதியொதுக்கு சட்டமூலத்தை நிராகரித்தால், (3) அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை  நிறைவேற்றினால் மாத்திரமே பிரதம மந்திரியும் அமைச்சரவையும் பதவியிழக்க நேரும்."
(அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இல்லாப் பிரேரணை எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்படுவது. அது வேறு, பிரதம மந்திரி மீதான நம்பிகை இல்லாப் பிரேரணை வேறு. நாடாளுமன்ற முறைமையில் பிரதம மந்திரி மீது நம்பிகை இல்லாப் பிரேரணை என்பது தனி அங்கத்தவர் பிரேரணையாக முன்வைக்கப்படுவது. அதற்கு முதன்மை குறைவு).
அதாவது, பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டவரை ஜனாதிபதியால் பதவிநீக்க முடியாது. 1978ம் ஆண்டின் அரசியல்யாப்புக்குப் பொருள்கோடல் கட்டளைச்சட்டம் இங்கு ஏற்புடையதாவது பற்றி ஒரு சர்ச்சை எழக்கூடும். எந்த ஒரு சட்டத்திலும் பதவிநீக்கும் அதிகாரத்தை அளிப்பதற்கு, பதவியில் அமர்த்தும் அதிகாரத்தை அளித்தாலே போதும் என்று அக்கட்டளைச்சட்டத்தின் 14ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. 19வது திருத்தத்தை விவாதித்து, நிறைவேற்றும் களேவரத்தில் பொருள்கோடல் கட்டளைச்சட்டத்தை நாடாளுமன்றம் கவனிக்கத் தவறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.  இனி, 14ம் பிரிவை அரசியல்யாப்பு மீறிமேற்செல்வதாகவும் வாதிக்கலாம். எவ்வாறாயினும், பிரதம மந்திரியை ஜனாதிபதி விலக்கவேண்டும் என்றால் விலக்கலாம். எப்படி? பிரதம மந்திரி நாடாளுமன்றத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கப் பெரிதும் வாய்ப்பில்லை என்றும், மற்றொரு நாடாளுன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கப் பெரிதும் வாய்ப்புள்ளது என்றும் ஜனாதிபதி கருதினால் மாத்திரமே பிரதம மந்திரியைப் பதவி நீக்கலாம். அவ்வாறாயின் அந்த மற்றொருவர் உடனடியாகப் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட வேண்டும்.

அமைச்சர்களை நியமித்தல்

அமைச்சர்களின் எண்ணிக்கையையும், அமைச்சுக்களையும், அமைச்சர்களின் அலுவல்களையும் ஜனாதிபதியே தீர்மானிப்பார் (உறுப்புரை 43). "பிரதம மந்திரியுடன் கலந்துசாவி அப்பணியை மேற்கொள்வது அவசியம் என்று ஜனாதிபதி கருதுமிடத்து", அவர் அவ்வாறே செய்யவேண்டும். அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பாக  அரசியல்யாப்பில் உள்ள ஏற்பாடு (உறுப்புரை 46) ஜனாதிபதியைக் கட்டுப்படுத்தும். அதாவது அமைச்சர்களின் எண்ணிக்கை 30க்கு மேற்படலாகாது; அமைச்சரவையின் உறுப்பினர்களாக விளங்காத அமைச்சர்களினதும், பிரதி அமைச்சர்களினதும் மொத்த எண்ணிக்கை 40க்கு மேற்படலாகாது; "அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி ஒன்று நாடாளுமன்றத்தில் ஆகக்கூடிய இருக்கைகளைப் பெற்று தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்குமிடத்து மேற்படி எண்ணிக்கைகளை நாடாளுமன்றம் கூட்டலாம்"
கூட்டரசாங்கம் என்பது தேசிய அரசாங்கம் அல்ல. 19வது திருத்தத்தில் "தேசிய அரசாங்கம்" என்னும் பதம் இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது: "அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி ஒன்று, அங்கீகரிக்கப்பட்ட மற்றைய அரசியற் கட்சிகளுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் ஆகக்கூடிய இருக்கைகளைப் பெற்று அமைக்கும் அரசாங்கமே தேசிய அரசாங்கம்." ஆகவே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மற்றைய (அங்கீகரிக்கப்பட்ட) கட்சிகள் அனைத்தும் உள்ளடங்கியிருந்தால் மாத்திரமே அது தேசிய அரசாங்கம் ஆகும். ஒருசில கட்சிகளை மாத்திரம் கொண்டது தேசிய அரசாங்கம் அல்ல. இங்கு ஒரு சுவையான கேள்வி பிறக்கிறது: நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் (அங்கீகரிக்கப்பட்ட) கட்சிகள் அனைத்தும் தேசிய அரசாங்கம் எனப்படும் இன்றைய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது உண்மையா? இல்லை என்றால், ஜனாதிபதி 30க்கு மேற்பட்ட அமைச்சுக்களைத் தோற்றுவித்தபொழுது  அரசியல்யாப்பை மீறிச் செயற்பட்டாரா?

அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும் நியமித்தல்

கடந்த காலத்தில் அமைச்சுக்களையும், அமைச்சுக்களின் அலுவல்களையும் தீர்மானிப்பது முதுநிலை அரச அதிகாரிகளின் பொறுப்பாக இருந்து வந்தது. அமைக்கப்படவிருந்த அமைச்சுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அப்பணி மேற்கொள்ளப்பட்டது.  அப்பணியை மேற்கொள்வதில் நெகிழ்ச்சிக்கு இடம் கிடைத்ததரிது. காரணம், அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படவிருந்த அலுவல்கள் முந்தைய அதே அலுவல்களே. எ+கா: பாதுகாப்பு, வெளிநாட்டு அலுவல்கள், நிதி, நீதி, கல்வி, சுகாதாரம், கமத்தொழில், கைத்தொழில், வணிகம்…
இன்று அமைச்சுக்களையும், அமைச்சுக்களின் அலுவல்களையும் தீர்மானிப்பது ஜனாதிபதியின் பொறுப்பு. அமைச்சர்களையும், பிரதி அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரத்தில் 19வது திருத்தம் மிகமுக்கிய மாற்றத்தைப் புகுத்தியுள்ளது. "அதற்கு, பிரதம மந்திரியுடன் கலந்துசாவுவது அவசியம் என்று ஜனாதிபதி கருதுமிடத்து" அவ்வாறு கலந்துசாவி அவ்வதிகாரத்தைக் கையாளும் அதிகாரம் முந்தைய 1978ம் ஆண்டின் அரசியல்யாப்பின்படி ஜனாதிபதிக்கு இருந்தது. தற்போதைய 19வது திருத்தத்தின்படி "பிரதம மந்திரியின் மதியுரைப்படியே" ஜனாதிபதி செயற்பட வேண்டியுள்ளது. அமைச்சரவையின் கட்டுக்கோப்பைத் தீர்மானிப்பதற்கும், அதன்படி ஜனாதிபதிக்கு மதியுரை நல்குவதற்குமான அதிகாரத்தைப் பிரதம மந்திரிக்கு அளித்ததன் மூலம் முந்தைய அரசியல்யாப்பின்படி ஜனாதிபதிவசம் இருந்த ஒரு முக்கிய நிறைவேற்று அதிகாரம் தற்பொழுது அகற்றப்பட்டுள்ளது. அதாவது 1972ம் ஆண்டின் அரசியல்யாப்பின்படி பிரதம மந்திரியின் மதியுரைப்படி செயற்படும் அரசுத் தலைவராக ஜனாதிபதி விளங்கும் நிலையை 19வது திருத்தம் மீண்டும் புகுத்தியுள்ளது.

அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும் விலக்கல்

"ஜனாதிபதி தன் கைப்பட எழுதி ஒப்பமிட்டு அனுப்பும் மடல் கொண்டு" ஓர் அமைச்சரை அல்லது பிரதி அமைச்சரைப் பதவிநீக்கலாம் என்ற ஏற்பாடு 1978ம் ஆண்டின் முழுமுதல் அரசியல்யாப்பில் காணப்பட்டது. அந்த ஏற்பாட்டை 19வது திருத்தம் நீக்கிவிட்டது. அதற்குப் பதிலாக, "பிரதம மந்திரியின் மதியுரைப்படி ஜனாதிபதி தன் கைப்பட எழுதி ஒப்பமிட்டு அனுப்பும் மடல் கொண்டு" ஓர் அமைச்சரை அல்லது பிரதி அமைச்சரைப் பதவிநீக்கலாம் என்ற ஏற்பாடு புகுத்தப்பட்டுள்ளது. ஆகவே தற்பொழுது ஓர் அமைச்சரை அல்லது பிரதி அமைச்சரை விலக்கும் படிமுறையைப் பிரதம மந்திரியே தொடக்க வேண்டும்; பிரதம மந்திரியின் மதியுரைப்படியே பதவிநீக்கும் கட்டளையை ஜனாதிபதி பிறபிக்க வேண்டும். அதன் மூலம் 1972ம் ஆண்டின் அரசியல்யாப்புக்கு அமைவான நிலை மீண்டும் புகுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவையை மீட்டியமைக்கும் அதிகாரம்

"அமைச்சர்களின் அலுவல்களையும் அமைச்சரவையின் கட்டுக்கோப்பையும் ஜனாதிபதி எந்த வேளையிலும் மாற்றியமைக்கலாம்" என்று உறுப்புரை 43(3) கூறுகிறது. அவர் தாமாகவே அந்த அதிகாரத்தைக் கையாள்வார்; பிரதம மந்திரியின் மதியுரைப்படி அல்ல; பிரதம மந்திரியுடன் கலந்துசாவியும் அல்ல. 2015 சித்திரை மாதம் நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் இரவோடு இரவாக, எதிரெதிராகத் திருத்தங்களை வீசியெறிந்த களேவரத்தில் மேற்படி 1978ம் ஆண்டின் ஏற்பாட்டை நாடாளுமன்றம் கருத்தூன்றியோ கவனக்குறைவாகவோ விட்டுவைத்ததா என்பது தெரியவில்லை. பிரதம மந்திரியின் மதியுரையைப் பெற்றுக்கொள்ளாமல் ஓர் அமைச்சரை அகற்றவோ, ஒரு புதிய அமைச்சரை நியமிக்கவோ முடியாத ஜனாதிபதி எவ்வாறு தானாகவே அமைச்சரவையின் கட்டுக்கோப்பை மாறறலாம் என்பது புரியவில்லை. அமைச்சர்களுக்கு "அலுவல்களை ஒதுக்கும்" பணிக்கும் இது பொருந்தும். "பிரதம மந்திரியுடன் கலந்துசாவியே" அப்பணியை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என்கிறது உறுப்புரை 43(1). (அண்மையில் ஊடகங்கள் தெரிவித்தவாறு) ஏற்கெனவே பணியாற்றும் அமைச்சர் ஒருவருக்கு ஓர் அலுவலை ஒதுக்கிக்கொடுக்க ஜனாதிபதி மறுத்தால், சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவிதுறந்து, பிரதம மந்திரியின் மதியுரைப்படி, சர்ச்சைக்குரிய அந்த அலுவலுக்குப் பொறுப்பாக அவர் மீள நியமிக்கப்படுவதே அதற்கான தீர்வாகும் போலும்.   

நாடாளுமன்றத்தைக் குலைத்தல்  

ஒரு பொதுத்தேர்தல் நடைபெற்று ஓராண்டு கழிந்த பின்னர் எந்த வேளையிலும் நாடாளுமன்றத்தைக் குலைப்பதற்கான நிறைவேற்று அரதிகாரம் 1978ம் ஆண்டின் முழுமுதல் அரசியல்யாப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த அதிகாரத்தை 19வது திருத்தம் நீக்கியுள்ளது. இப்பொழுதெல்லாம் நாடாளுமன்றம் செயற்படும் ஐந்தாண்டுக் காலத்தில் இறுதி ஆறுமாத காலப்பகுதிக்குள் மாத்திரமே ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் குலைக்கலாம். அதற்கு முன்னர் அவர் அவ்வாறு செய்ய விரும்பினால், நாடாளுமன்றத்தின் இசைவை அவர் பெறுக்கொள்ள வேண்டும்; முழு நாடாளுமன்ற உனறுப்பினர்களினதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு குறையாதோர் ஆதரித்து வாக்களித்து நிறைவேற்றும் தீர்மானத்தின் ஊடாக அத்தகைய இசைவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தலைமை நீதியரசரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் நியமித்தல்

1978ம் ஆண்டின் முழுமுதல் அரசியல்யாப்பின்படி ஜனாதிபதி தன கைப்பட எழுதி ஆணையிட்டு தலைமை நீதியரசரையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும், உச்ச நீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகளையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகளையும் நியமிக்க வேண்டும். அந்த நிறைவேற்று அதிகாரத்தை 19வது திருத்தம் நீக்கியுள்ளது. பிரதம மந்திரி அங்கம் வகிக்கும் அரசியல்யாப்பு மன்றத்தின் அங்கீகாரத்தை முன்கூட்டியே பெற்றுக்கொண்டே அத்தகைய நியமனம் எதனையும் ஜனாதிபதி இனி வழங்கலாம்.   

முதுநிலை அரசாங்க அதிகாரிகளை நியமித்தல்

1978ம் ஆண்டின் முழுமுதல் அரசியல்யாப்பின்படி சட்டத்துறை அதிபதி, கணக்காய்வாளர் அதிபதி, முறைகேள் ஆணையாளர், நாடாளுமன்ற தலைமைச் செயலாளர், தேர்தல் ஆணையாளர் ஆகியோரை நியமிக்கும் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிவசம் இருந்தது. அந்த நிறைவேற்று அதிகாரத்தை 19வது திருத்தம் நீக்கியுள்ளது. அரசியல்யாப்பு மன்றத்தின் அங்கீகாரத்தை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளாமல் அத்தகைய நியமனம் எதனையும் ஜனாதிபதி இனிக் கொடுக்க முடியாது. இப்பொழுது தலைமைத் தேர்தல் ஆணையாளரை ஜனாதிபதி நியமிப்பதில்லை. அரசியல்யாப்பு மன்றத்தின் அங்கீகாரத்துடன் தேர்தல் ஆணையமே தலைமைத் தேர்தல் ஆணையாளரை நியமிக்கும். அதேவேளை 1978ம் ஆண்டின் அரசியல்யாப்பின்படி அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் இன்னமும் ஜனாதிபதிவசமே விட்டுவைக்கப்பட்டிருப்பது நூதனமே. இனி ஒருவர் செயலாளராக நியமிக்கப்பட்டதும் அவர் சம்பந்தப்பட அமைச்சரின் பணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைந்தவராவார்; ஜனாதிபதிக்கல்ல.
1978ம் ஆண்டின் முழுமுதல் அரசியல்யாப்பின்படி அரசாங்க்க சேவை ஆணையம், நீதி சேவை ஆணையம், இலஞ்சத்தடுப்பு ஆணையம், தேசிய காவல்துறை ஆணையம், மனித உரிமைகள் ஆணையம் உட்பட்ட சுயாதீன ஆணையங்கள் பலவற்றை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டிருந்தது. அந்த நிறைவேற்று அதிகாரத்தை 19வது திருத்தம் நீக்கியுள்ளது. இனிமேல் அரசியல்யாப்பு மன்றம் விதந்துரைத்தவாறே அத்தகைய சுயாதீன ஆணையங்களுக்கு ஜனாதிபதி உறுப்பினர்களை நியமிக்கலாம்.,  அரசியல்யாப்பு மன்றத்துக்கு ஐந்து உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிகலாம். அதேவேளை அரசியல்யாப்பு மன்றத்துக்கு பிரதம மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் விதந்துரைப்போரையும் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதிக்கு விதிவிலக்கு

1978ம் ஆண்டின் முழுமுதல் அரசியல்யாப்பின்படி ஜனாதிபதி அதிகாரபூர்வமாகவோ தனிப்பட்ட முறையிலோ ஆற்றிய அல்லது ஆற்றத்தவறிய எந்த அலுவலையும் குறித்து அவருக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் அல்லது தீர்ப்பாயத்திலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. 19வது திருத்தத்தின்படி அது முடியும். அடிப்படை உரிமை தொடர்பான உச்ச நீதிமன்ற நியாயாதிக்கத்தின் துணைகொண்டு எவருமே ஜனாதிபதி அதிகாரபூர்வமாக ஆற்றிய அல்லது ஆற்றத்தவறிய செயல்களைக் குறித்து அவரைத் தட்டிக்கேட்க 19வது திருத்தம் அனுமதி அளிக்கிறது.

ஜனாதிபதியின் எஞ்சிய நிறைவேற்று அதிகாரங்க்கள்

"எஞ்சிய நிறைவேற்று அதிகாரங்கள்" என்பவையும் ஜனாதிபதிவசம் உண்டு. அவை அரசுத் தலைவர் எவருக்கும் உரியவை. 1972ம் ஆண்டின் அரசியல்யாப்புக்கமைய வில்லியம் கோபல்லவா விளங்கியதுபோல் ஜனாதிபதியே ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும், நிறைவேற்றுதுறையின் தலைவராகவும் விளங்குவார். அவர் போர்ப் பிரகடனம் அல்லது அமைதிப் பிரகடனம் செய்யலாம். எனினும் இன்றைய உலகில் அரசுத் தலைவர் களம்புகுந்து நேர்நின்று தனது படைகளை வழிநடத்துவதில்லை. ஆதலால் அவர் போர்ப் பிரகடனம்செய்ய எடுக்கும் முடிபுக்கு பிரதம மந்திரியின் இணக்கம் மட்டுமல்ல, பல்வேறு அரச திணைக்களங்க்களின் இணக்கமும் பெறப்பட வேண்டும். அவர் தூதர் ஒருவரை நியமிக்கலாம்; அங்கீகரிக்கலாம். தூதரை ஏற்கும் அரசின் இசைவை வெளியுறவு அமைச்சு பெற்றுக்கொண்டால மாத்திரமே அவர் அப்படிச் செய்யலாம். இலண்டனில் நிலைகொண்டிருந்த இலங்கையின் பாதுகாப்புத் தூதிணைஞர் தொடர்பாக அண்மையில் ஒரு குளறுபடி நடந்தது. சம்பந்தப்பட்ட தூதிணைஞரை உடனடியாக நாடுதிரும்பும்படி வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியது. ஜனாதிபதி அந்த அறிவுறுத்தலை நிராகரித்து ஆணையிட்டதாக அறிவிக்கப்பட்டது. சூழ்வியல் உறவு பற்றிய வியன்னா ஒப்பந்தத்தை சம்பந்தப்பட்டோர் அறிந்திருக்கவில்லை என்பதை இது உணர்த்துகிறது. அந்த ஒப்பந்தத்தின்படி, தூதரக அதிகாரி எவரையும் ஏற்றுக்கொண்ட எந்த அரசும் பிறகு அவரை  ஏற்கத்தக்கவரல்ல என்று அறிவிக்கும் போதெல்லாம் அவர் தாயகம் திரும்ப வேண்டும்.
    குற்றத்தீர்ப்புக்கு உள்ளாகிய எவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கலாம்; அல்லது தண்டனையின் கடூரத்தைக் குறைக்கலாம். எனினும் அவ்வதிகாரம் நீதி அமைச்சரின் மதியுரைப்படி கையாளப்படுவதே மரபு. "ஜனாதிபதியின் சட்டவுரைஞர்" எனப்படுவோரை ஜனாதிபதி நியமிக்கலாம். அத்தகைய தனித்துவமான அதிகாரம் அரசியல்யாப்புவாரியாக  ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வேறெந்த நாட்டின் அரசியல்யாப்பிலும் இத்தகைய அதிகாரம் அளிக்கப்பட்டதில்லை. அதைக் கையாள்வதற்கு வேறெவரது மதியுரையையும் அவர் நாடவேண்டியதில்லை.

ஜனாதிபதியின் எஞ்சிய நிறைவேற்று அதிகாரங்கள்

13வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்ட சில அதிகாரங்கள் 19 வது திருத்தத்தில் திட்டமிட்டோ கவனக்குறைவாகவோ விட்டுவைக்கப்பட்டுள்ளன. இவை மாகாண நிருவாகம் தொடர்பான அதிகாரங்கள். ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஓர் ஆளுநரை ஜனாதிபதியே நியமிப்பார். மாகாண நிருவாகக் கட்டமைப்பு நிலைகுலைந்துவிட்டதாக மாகாண ஆளுநர் அறிவிக்குமிடத்து, ஆளுநரின் அதிகாரங்களை 14 நாட்களுக்கு ஜனாதிபதியே கையாளலாம். மாகாண மன்றத்தின் அதிகாரங்கள் நாடாளுமன்றத்தைச் சென்றடையும். அவ்வதிகாரங்களை அது ஜனாதிபதியிடமே கையளிக்கலாம். அவர் வேறோர் அதிகார பீடத்திடம் அவற்றைக் கையளிக்கலாம்.

1947ம் ஆண்டின் மக்கள் பாதுகாப்புக் கட்டைளச்சட்டம் என்பது நாடாளுமன்றத்தால் ஆக்கப்பட்ட சட்டமே என்று கொள்வதற்கான ஏற்பாடு கவனக்குறைவாக 19வது திருத்தத்தின் ஊடாகவும் அரசியல்யாப்பில் விட்டுவைக்கப்பட்டது போலும். அந்தக் கட்டைளச்சட்டத்தின்படி அவசரகால நிலையை அறிவிப்பதா இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார். அவசரகால ஒழுங்குவிதிகளையும் அவரே வகுப்பார். எனினும் அவசரகால நிலை பற்றிய பிரகடனத்தை எமது நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தின் மூலம் அங்கீகரித்தாலொழிய 14 நாட்களுக்குள் அது காலாவதியாகிவிடும். ஆகவே பிரதம மந்திரியின் இசைவுடன் எமது ஜனாதிபதி செயற்பட்டாலன்றி அவரது பிரகடனம் குறுகிய காலத்துள் செல்லாக்காசாகிவிடும்

முடிவுரை

        நிறைவேற்று ஜனாதிபதியாட்சி ஒன்றில் பேணப்பட வேண்டும் அல்லது ஒழிக்கப்பட வேண்டும் என்று எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் முழக்கமிடுகிறார்கள். 1978ம் ஆண்டின் அரசியல்யாப்பின்படி தாபிக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதியாட்சி தற்பொழுது நடைமுறையில் இல்லை என்பதை அவர்கள்  கவனிப்பதாகத் தெரியவில்லை. நிறைவேற்று ஜனாதிபதியாட்சியை 19வது திருத்தம் ஒட்ட நறுக்கியுள்ளது. இனிமேல் ஜனாதிபதி தாம் விரும்பியபடி அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. பிரதம மந்திரியின் மதியுரைப்படி மட்டுமே அவர் எந்த அமைச்சரையும் அகற்றலாம். தாம் விரும்பியபடி அவர் நாடாளுமன்றத்தைக் குலைக்க முடியாது. தாமே துணிந்தவாறு நீதிபதிகளையோ, முதுநிலை அதிகாரிகளையோ, சுயாதீன ஆணையங்களையோ நியமிக்க முடியாது. நிறைவேற்று ஜனாதிபதியாட்சிக்கு அடிப்படையாய் அமையும் அத்தகைய அதிகரங்கள் அனைத்தும் களையப்பட்டுவிட்டன. அவை அனைத்தையும் பொறுத்தவரை அவர் பெரிதும் அரசியல்யாப்பு வாரியான அரசுத் தலைவரே.
அந்த வகையில் இங்கு ஒரு வினா எழுகிறது: மாகாண நிருவாகம் தொடர்பாகவும, ஜனாதிபதியின் சட்டவுரைஞரது நியமனம்  தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் அற்பசொற்ப அதிகாரங்கள் இன்னும் எஞ்சியுள்ளன என்பதற்காக மிகுந்த செலவில, பிரிந்து நின்று, நாடளாவிய தேர்தல் ஒன்றை நடத்தி அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா?
        இந்தியா போன்ற நாடுகளின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நாடாளுமன்றமே அல்லது தேர்தல் குழாமே அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கக் கூடாதா? பொதுநலவாய நாடுகள் பலவற்றின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி எல்லாச் சமூகஙகளுக்கும் ஏற்புடைய, அரசியல்சாராத, மக்களை ஒருங்கிணைக்கவல்ல ஒரு சிறந்த மனிதரை இலங்கை அதன் அரசுத் தலைவராகப் பெற்றுக்கொள்ள வேண்டிய தருணம் இது அல்லவா?
________________________________________________________________________

Dr. Nihal Jayawickrama, The Illusory Executive Presidency, Colombo Telegraph, 2018-03-19, தமிழ்: மணி வேலுப்பிள்ளை


No comments:

Post a Comment