இலங்கையில் மீளிணக்கம்


  Image result for Motoo Noguchi

மொதூ நொகுச்சி
மீளிணக்கப் பொறிமுறைகளை நாடி இப்பொழுது இங்கு மேகொள்ளப்படும் முயற்சிகள் இலங்கை மக்கள் அனைவருக்குமானவை என்பதையும், அவர்கள் அனைவருக்கும் சரிநிகராக நலம்பயக்கும் நோக்கத்தைக் கொண்டவை என்பதையும் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
இலங்கை மக்களுள் ஒரு சாராருக்கு மட்டுமே, தமிழ் மக்கள் போன்ற ஒரு சாராருக்கு மட்டுமே, மேற்படி பொறிமுறைகள் நலம்பயக்கும் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம். அவ்வாறு புரிந்து கொள்ளப்பட வேண்டியதில்லை. இத்தகைய முயற்சிகள் முன்னொருபொழுதும் மேற்கொள்ளப்படாதவை; அத்துடன் மாறுகால நீதி, பொறுப்புக்கூறல் போன்ற சில வெளியுலகச் சொற்களை ஆசிய மக்கள் கேள்விப்படாதிருக்கலாம்; மேற்படி பொறிமுறைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு அது ஒரு காரணம். உண்மையில் இச்சொற்கள் யப்பானிய மொழியிலும் இல்லை. நாங்கள் இனிமேல்தான் அவற்றுக்கு நேர்நிகரான சொற்களைக் கண்டறிந்து, இயல்பான முறையில் அச்சொற்களை யப்பானிய மொழியில் பெயர்க்க வேண்டியுள்ளது. எனவே அச்சொற்களைப் பயன்படுத்தாமல் இம்மீளிணக்கம் பற்றி நான் புரிந்துகொண்டதை உங்களுக்கு விளக்கியுரைக்க முயல்வேன்:
20ம் நூற்றாண்டின் பிற்கூறில் இலங்கை ஒரு துயரார்ந்த வன்முறைக் காலகட்டத்துள் புகுந்தது. ஈற்றில் அக்காலகட்டம் 2009ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு ஐக்கியமும், அமைதியும், செழிப்பும் மிகுந்த ஒரு நாடாக இலங்கையை மீளவும் கட்டியெழுப்புவதில் அரசினரும், மக்களும் கவனம் செலுத்தி வந்துள்ளார்கள். போரும் வன்முறையும் நீடித்து நிகழ்ந்த காலத்தில் இன, மத பேதமின்றிப் பெருந்தொகையான மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். உண்மையில் நாடு முழுவதும் கடுந்துன்பங்களுக்கு உள்ளாகியது. எனினும் துயரார்ந்த காலகட்டம் முடிவடையவே, உங்கள் நாட்டை நீங்கள் மீண்டும் கட்டியெழுப்பி வருகிறீர்கள்.
முதற்கட்டமாக, பல விடயங்களை முதன்மை ஒழுங்கில் வரிசைப்படுத்த வேண்டியுள்ளது. அதேவேளை மேற்கொண்டும் பொருளாதாரத்தை விருத்திசெய்வதற்கு இடைவிடாது முயற்சியெடுக்க வேண்டியுள்ளது. முதலாவதாக, இன்னமும் காணாமல் போனவர்களாக உள்ளவர்களின் கதியையும், இருப்பிடத்தையும் மேலும் தாமதிக்காமல் கண்டறிய வேண்டும்; அவ்விபரத்தை அவர்களது குடும்பத்தவர்க்கு தெரியப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, கடுந்துன்பங்களுக்கு உள்ளானவர்கள் தமது கண்ணியத்தையும் நம்பிக்கையையும் மீளவும் ஈட்டிக்கொண்டு புதுவாழ்வில் இறங்கும் வண்ணம் அவர்களுக்குப் போதியளவு நிவாரணம் வழங்க வேண்டும். மூன்றாவதாக, மேற்படி கடுந்துன்பங்களுக்குப் பொறுப்பானவர்கள் சட்டப்படியும், நம்பத்தகுந்த சான்று கிடைப்பதைப் பொறுத்தும் தண்டிக்கப்பட வேண்டும். நான்காவதாக, நாடெங்கும் வாழும் சமூகங்கள் அனைத்தும் மீளவும் ஐக்கியப்பட்டுஅமைதியும் செழிப்பும் மிகுந்த ஒரு நாட்டை மீளவும் கட்டியெழுப்புவதன் ஊடாக கடந்தகால துன்ப நிகழ்வுகள் மீண்டும் நிகழவாறு தடுக்க வேண்டும். 
மேற்குறித்த நோக்கங்களை எய்தும் வண்ணம் மீளிணக்கப் பொறிமுறைகள் நான்கு தூண்களில் நிலைகொண்டுள்ளன: உண்மை; நீதி; இழப்பீடு; மீளநிகழாமை. நாட்டை மீண்டும் கட்டியெழுப்பி, நிலைபெற்ற பொருளாதார விருத்திக்கு அடிகோலி, அமைதியும் ஐக்கியமும் மிகுந்த நாடாக மாற்றுவதில் அவை அனைத்தும் சரிநிகரான முறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அது இன்றைய இலங்கை மக்களுக்கு மாத்திரமல்ல, உங்கள் பிள்ளைகளின் தலைமுறைக்கும் முக்கியம். நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்த  பேரிடிகளை மீண்டும் உங்கள் பிள்ளைகள் எதிர்கொள்ள வழிவகுக்கக் கூடாது.
மீளிணக்கம் என்பதை நான் அப்படித்தான் புரிந்துகொள்கிறேன். அத்துணை எளிதில் புரியும் விடயம் அது. அதுவே இலங்கை மக்கள் அனைவரதும் பொதுவான எண்ணம் என்று நான் நம்புகிறேன். அதை மிகவும் சிக்கலான அல்லது இலங்கைப் பண்பாட்டுக்குப் புறம்பான ஒன்றாக நீங்கள் கருத வேண்டியதில்லை.
மேற்கண்ட நான்கு தூண்களுள் பொறுப்புக்கூறும் பொறிமுறை அல்லது குற்றவியல் வழக்குத்தொடுப்பு என்பது அரசியல்வாரியாக எவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கும் விடயமாகக் கொள்ளப்படுகிறது. இங்கு கருத்தில் கொள்ளப்படும் நீதிப் பொறிமுறை மக்களுள் ஒரு சாராருக்கு மாத்திரமே, இன்னும் திட்டவட்டமாகக் கூறுவதாயின், தமிழ் மக்களுக்கு மாத்திரமே நன்மை பயக்கும் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதே அதற்கான தலையாய காரணம் என்று நான் கருதுகிறேன். போரின்பொழுது தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட குற்றங்களைக் குறித்து கவனம் செலுத்துவதை விடுத்து, அரச படையினரால் புரியப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை மட்டும் கருத்தில் கொண்டு வழக்குத்தொடுக்கும் அரங்கமாக  இப்பொறிமுறையை பெருந் தொகையான மக்கள், குறிப்பாக பெரும்பான்மைச் சமூகத்து மக்கள் நோக்க முற்படுவதே அதற்கான காரணம். ஆதலால் பொறுப்புக்கூறும் பொறிமுறையை ஒரு பக்கச்சார்பான கட்டமைப்பினைக் கொண்ட அரங்கமாகவும், தமது வெற்றிவீரர்களைத் தண்டிக்கும் அநியாய எண்ணத்தை உள்ளூரக் கொண்ட அரங்கமாகவும் அவர்கள் நோக்க முற்படுகிறார்கள்.
அப்படி நான் எண்ணவில்லை. ஏனெனில் மக்களின் கடுந்துன்பங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது இன, மத பேதமின்றி வழக்குத்தொடுத்து, பாதிக்கப் பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தவர்களுக்கும், அவர்களது சமூகத்தவர்களுக்கும் நீதிபாலிப்பதே இப்பொறிமுறையின் நோக்கம். குற்றம் புரிந்தவர் யார் என்பதை விடுத்து, குற்றத்தின் தீவிரத்தை முக்கியமான பிரமாணமாகக் கொண்டே வழக்குகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சட்ட ஆட்சி என்பதன் சரியான கருத்து அதுவே. இங்கு அரசியலுக்கு இடமில்லை. அதாவது இலங்கையில் வாழும் சமூகங்கள் அனைத்துக்கும் சரிநிகராக செவ்விய நன்மைபயக்கும் வண்ணம் இந்நீதிப்பொறிமுறை வடிவமைக்கப் படவும், கட்டமைக்கப்படவும், செயற்படுத்தப்படவும் வேண்டும். அதனைக் கருத்தில் கொண்டு, விடய நியாயாதிக்க நியதிகளின்படியும், கால நியாயாதிக்க நியதிகளின்படியும் நீதிப் பொறிமுறையினால் கையாளப்படவேண்டிய குற்றங்களின் சுற்றுவரம்பைக் கவனமாக நிர்ணயிக்க வேண்டியுள்ளது. நீதிப்பொறிமுறை இப்பணியில் தங்குதடையின்றித் துணைநிற்பதற்கும், முன்னின்று பங்குபற்றுவதற்கும் ஏதுவாக அவ்வாறு நிர்ணயிக்க வேண்டியது மிகவும் முக்கியம். அனைவரும் ஏற்கத்தக்கதாக நீதிபாலிப்பதற்கு அவை இன்றியமையாதவை.
நீதிப்பொறிமுறை என்பது அரச படையினர் உட்பட சில தரப்புகளைக் கூட்டுப் பொறுப்புக்கு உள்ளாக்குவதற்கான அரங்கமல்ல என்பதை அறிந்துகொள்வதும் முக்கியம். மாறாக, குற்றத்துக்குப் பொறுப்பான ஆட்களை இனங்கண்டு, சிலரைக் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாக்குவதற்குத் துணைநிற்பதற்கும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மற்றவர்களை விடுவிப்பதற்குமான நடைமுறையே இது. யார்மீதெல்லாம்  வழக்கு வைக்கப் படுகிறதோ அவர்களுக்கு தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து சட்ட நடைமுறைக்கு அமைந்து வாதாடும் உரிமை உண்டு. அவர்களது எதிர்வாதம் வெற்றி பெற்றால், அல்லது நியாயமான ஐயுறவுக்கு இடமில்லாவாறு குற்றத்தை எண்பிக்கத் தேவையான  சான்று இல்லாவிட்டால்அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.
பொறுப்புக்கூறும் பொறிமுறை பற்றிய சொல்லாடலில் சர்வதேய நீதிபதிகள் பங்கு வகிக்கும் பிரச்சனையிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நீதிபதிகள் எந்த நாட்டவர்கள் என்பது முக்கியமல்ல என்பதே எனது கருத்து. நீதிபதியாகக் கடமையாற்றுபவரை எல்லாச் சமூகங்களும் சரிநிகராக ஏற்றுக்கொள்ள முடியுமா? தமது வழக்குகளின் கதியை அவருடைய மதிக்கும் துறைமைத்திறத்துக்கும் விட்டுவிட விரும்புமா? என்பதே முக்கியம். செவ்வையும், திறனும், திறமையும் கொண்டு புலன்விசாரணை இடம்பெற வழிவகுப்பதே அதைவிட முக்கியம். அடுத்து உருப்படியான விசாரணைகள் எவையும் நடைபெறுவதற்கு அத்தகைய புலன்விசாரணைகள் இன்றியமியாதவை. மிகச்சிறந்த புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், பேராற்றல்வாய்ந்த நீதிபதிகளால் கூட அதிகம் சாதிக்க முடியாது.
கடந்தகால நிகழ்வுகளை மறந்துவிட்டு, வேதனையும் சிக்கலும் நிறைந்த குற்றவியல் வழக்குத்தொடுப்புக்கும் விசாரணைகளுக்கும் உள்ளாகாமல், வருங்காலத்தை எதிர் நோக்குவது நல்லது என்று சிலர் வாதிக்கலாம். எனினும் அத்தகைய அணுகுமுறை, தண்டனைப் பயமின்றிக் குற்றம் புரியப்படுவதற்குத் திட்பமான முறையில் துணைநிற்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிபாலிக்கத் தவறும் என்றும், அத்தகைய குற்றங்களும் துன்பங்களும் திரும்பத் திரும்ப நிகழும் ஆபத்தைக் கூட்டும் என்றும்  நான் கருதுகிறேன். இலங்கை ஒரு நிலையூன்றிய குடியாட்சி நாடு என்ற வகையில் சட்ட ஏடுகளுடன் மட்டும் நின்றுவிடாமல், நீதித்துறையின் காத்திரமான நடவடிக்கையின் ஊடாகவும் சட்ட ஆட்சிக்கு அமைந்தொழுக வேண்டும்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், சட்ட ஆட்சிக்கு அமைந்தொழுகி தனது மக்களைப் பாதுகாக்கும் அரசின் வல்லமை அதன் கீழ்க்கட்டுமானத்தில் ஓர் இன்றியமையாத கூறு என்பது தெரியவரும். சமூகக் கீழ்க்கட்டுமானத்தின் தீர்க்கமான கூறுகள் பிறவற்றுள் நீர், துப்புரவு, கல்வி, போக்குவரத்து, நிதிக் கட்டுக்கோப்புகள் உள்ளடங்கும். அவற்றைப் போலவே திறம்பட நெறிநிற்கும் நீதித்துறையும் ஒரு குடியாட்சி நாட்டின் முக்கிய கூறு. நிலைபெற்ற பொருளாதார விருத்தியையும் செழிப்பையும் நோக்கி இலங்கை எட்டி அடியெடுத்து வைப்பதற்கு சட்ட ஆட்சியை உறுதிபடவும் திடசித்தத்துடனும் கையாண்டே ஆகவேண்டும்.
இலங்கையின் நீண்டகால நட்புநாடு யப்பான். ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த போர்க்கொடுமையை அடுத்து தன்னை மீளவும் கட்டியெழுப்ப யப்பான் பாடுபாட்ட வேளையில்சர்வதேய சமூகத்துக்கு மீள்வதற்காக யப்பான் முயன்ற வேளையில், அதனை மும்முரமாக ஆதரிக்க முன்வந்த நாடுகளுள் இலங்கையும் ஒன்று. 
இலங்கை அதன் கடந்தகாலப் பேரிடிகளைக் கடந்து முன்னகர்வதற்கு இன்று திடசித்தம் பூண்டுள்ளது. ஆதலால், ஒரு யப்பானியக் குடிமகன் என்றவகையில், இங்கு முன்னொருபொழுதும் மேற்கொள்ளப்படாத முயற்சிகளில் எவ்வகையிலேனும் உங்களுக்கு துணைநிற்பதில் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். நன்றி, நண்பர்களே!
Motoo Noguchi is a Prosecutor at the Supreme Prosecutors Office of Japan; Chair of the Board of Directors, the Trust Fund for Victims, International Criminal Court; Former United Nations international Judge at the Cambodia Khmer Rouge Trials, the Supreme Court Chamber; Former Professor of UNAFEI (United Nations Asia and Far East Institute for the Prevention of Crime and Treatment of Offenders), Former Visiting Professor of the University of Tokyo; Former Counsel, Office of the General Counsel, Asian Development Bank. http://www.dailymirror.lk/ 2017-11-08 13:33:01.               ___________________________________________________________________________________________
தமிழ்: மணி வேலுப்பிள்ளை


No comments:

Post a Comment