மாற்று வலதுசாரித்துவம் மீள உயிர்ப்பிக்கும் மறைஞான
நாசியவாதி
மரியா மார்கரோனிஸ்
(கட்டுரையாளர்)
சாவித்திரி
தேவி ஒரு மறைஞானவதி; ஹிட்லரை நயந்த மறைஞானவதி. பூனையை நேசித்த ஆரிய தொன்மப் பிரியை. ஏறத்தாழ 25
ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த சாவித்திரி தேவி அப்புறம் மங்கிமறைய வேண்டியவராகவே
தென்பட்டார். எனினும் தீவிர வலதுசாரித்துவத்தின் எழுச்சியால் அவர் பெயரும், பிம்பமும் இணைய வாயிலாக இன்று மேன்மேலும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
2012ல் கிரேக்க (Golden Dawn) கட்சியின் இணையதளத்தை நான் சல்லடையிட்ட பொழுது, நீலப் பட்டுச்சேலை அணிந்த பெண்மணி ஒருவர்
அந்திவானொளியில் மிளிரும் ஹிட்லரின் மார்பளவுச் சிலையை உற்றுநோக்கும் படம் கண்ணில்
பட்டது. ஓர் இந்துப் பெண்மணி
போல் தோன்றும் இவர் ஓர் அப்பட்டமான இனவாதக் கட்சியின் இணையதளத்தில் ஏன்
இடம்பெறுகிறார்? கிரேக்கத்திலிருந்து
வெளிநாட்டவர்கள் அனைவரையும் வெளியேற்ற உறுதிபூண்ட ஒரு கட்சியின் இணையதளத்தில் ஏன்
இடம்பெறுகிறார்? அதற்கான விடையை
அறியும் ஆவலை என் உள்ளத்துள் ஒருபுறம் ஒதுக்கி வைத்திருந்தேன். ஐரோப்பாவிலும்
அமெரிக்காவிலும் தீவிர வலதுசாரித்துவ அரசியல்-அலையின் எழுச்சியுடன் சாவித்திரி
தேவியின் பெயர் திரும்பவும் அடிபட்டபொழுது, நான் விழித்துக் கொண்டேன்.
இந்துக் கடவுள்
விஷ்ணுவின் மறுபிறவியே ஹிட்லர் என்னும் கோட்பாட்டை விளக்கியுரைத்து அவர் எழுதிய
நூல்: The Lightning and the Sun (மின்னலும் கதிரவனும்). தேசிய சமூகவுடைமைவாதம் (National Socialism) மீண்டும் எழுச்சியுறும் என்று அதன்
மெய்விசுவாசிகளை நம்பவைக்கும் விதமாக அவர் எழுதிய இன்னொரு நூல்: Gold in the
Furnace (உலையில் உறையும்
பொன்). இன்று நவநாசிய அரங்குகளில் மேற்படி நூல்கள் பற்றிய கலந்துரையாடல்களைக் காண்பது
கடினமல்ல. Counter-Currents (எதிரோட்டம்) எனப்படும் தீவிர அமெரிக்க வலதுசாரித்துவ இணையதளத்தில்
சாவித்திரி தேவியின் வாழ்வும், பணியும் பற்றிய விரிவான ஆவணக்குவைக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரிச்சார்ட்
ஸ்பென்சர் (Richard Spencer), ஸ்டீவ் பனன் (Steve Bannon) போன்ற அமெரிக்க மாற்று வலதுசாரித்துவத்
தலைவர்களின் முயற்சியால், சாவித்திரி தேவியின்
கருத்துக்கள் பெருந்தொகையான பொதுமக்களையும் சென்றடைந்து வருகின்றன. ஸ்டீவ் பனன்
அமெரிக்க அதிபர் ரம்பின் முன்னாள் தலைமை அரசியல் தந்திரோபாயி மட்டுமல்ல, Breitbart
News தாபனத்தின் அதிபரும்
கூட. நன்றுக்கும் தீதுக்கும் இடையே ஒரு சுழற்சியில் நிகழும் மோதலே வரலாறு என்ற
கோட்பாட்டை 20ம் நூற்றாண்டின் மறைஞான நாசியவாதிகளுடன் சாவித்திரி பகிர்ந்துகொண்டார். அதை ஸ்டீவ் பனன் வேறு ஏற்றுக்கொண்டார். இருண்ட காலம் என்று இந்து
தொன்மங்கள் கூறும் கலியுகம் பற்றி Dark Metal Bands எனப்படும் இசைக் குழுமங்களும், அமெரிக்க வலதுசாரி வானொலி நிலையங்களும்
முழங்கி வருகின்றன.
கலியுகத்துக்கு
முற்றுப்புள்ளி வைக்க அமர்த்தப்பட்டவரே ஹிட்லர் என்று சாவித்திரி தேவி நம்பினார்.
யார் இந்த சாவித்திரி தேவி? அவரது கருத்துக்கள்
ஏன் இப்பொழுது உயிர்ப்பிக்கப்படுகின்றன? அவர் ஓர் ஐரோப்பியர் என்பதை அவரது பெயரும் சேலையும்
மறைக்கின்றன. 1905ல் லயன் என்ற பிரஞ்சு நகரில் பிறந்த சாவித்திரி தேவியின்
இயற்பெயர்: Maximiani Portas. தாய் ஓர் ஆங்கிலேயர், தந்தை ஒரு கிரேக்கர்; இந்திய மொழிகளைக் கற்றவர்; ஓர் அந்தணரை மணந்தவர்; நாசியத்தையும் இந்து தொன்மத்தையும்
நீட்டிநிமிர்த்திச் சேர்த்துக்கட்டியவர்; கலியுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க
அமர்த்தப்பட்டவரே ஹிட்லர் என்று நம்பியவர்; சிறு பராயம் தொட்டே சமத்துவ அமைப்புகள் அனைத்தையும்
வெறுத்தவர்; “ஓர் அழகிய
சிறுமிக்கு ஓர் அலங்கோலமான சிறுமி ஈடானவள் அல்லள்” என்று வாதித்தவர். (யூத இனப்படுகொலையை மறுக்கும் ஜேர்மானியராகிய Ernst Zundel என்பவரால் 1978ல் அனுப்பிவைக்கப்பட்ட ஓர் ஊடகருக்கு
சாவித்திரி வழங்கிய செவ்வியில் அப்படிக் கூறியிருந்தார்
1923ம் ஆண்டு
கிரேக்க தேசியவாத அலையில் அள்ளுண்டவராக அவர் ஆதென்ஸ் மாநகர் சென்றடைந்தார்.
முதலாம் உலகப் போரின் இறுதியில் துருக்கி உள்ளடங்கிய மேற்கு ஆசியாவில் கிரேக்கரின்
படைநடவடிக்கை தோல்வியடைந்து, ஆயிரக் கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்த காலம் அது. கிரேக்கத்துக்கு
இழுக்கு நேர்ந்ததற்கும், கிரேக்கத்தை
அநியாயமான முறையில் தண்டிக்கும் வண்ணம் வேர்சாய் உடன்பாட்டில் (Treaty of
Versailles) நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கும்
மேற்குலக நேயநாடுகள் மீது அவர் பழிசுமத்தினார். ‘கிரேக்கம், ஜேர்மனி இரண்டும் தாக்குண்ட நாடுகள்; தத்தம் மக்கள் அனைவரையும்
நியாயநெறிநின்று ஒரே ஆள்புலத்தவர்களாக அணிதிரட்ட அவை வேட்கை கொண்டன; தமது வேட்கையை நிறைவேற்றும் வாய்ப்பு
அவற்றுக்கு மறுக்கப்பட்டது’ என்று அவர்
கருதினார். அத்தகைய கண்ணோட்டமும், தான் விவிலிய நூலில் கற்றறிந்ததாக அவர் வலியுறுத்தும் பேருணர்ச்சியுடன்
கூடிய யூதவிரோதமும் அவர் உள்ளத்துள் ஒருங்கிணைந்தன. இளமையிலேயே தன்னை ஒரு தேசிய
சமூகவுடைமைவாதியாக (National Socialist) அவர் இனங்காட்டிய காரணம் அதுவே.
ஹிட்லர் ஜேர்மனியின்
வெற்றிவாகையர் மட்டுமல்ல; ஐரோப்பிய யூதர்களை
ஒழித்து, “ஆரிய இனத்தை” திரும்பவும் அதற்குரிய அதிகார
பீடத்தில் அமர்த்த விழைந்த Fuhrer-ம் (தலைவரும்) கூட” என்பது சாவித்திரியின் எண்ணம்.
18ம் நூற்றாண்டில்
எழுந்த யூதவிரோத சிந்தனையாளர்களைப் போலவே சாவித்திரியும் ஆதி கிரேக்க, ஆரிய மறைஞானக் கனவுலகின் மாட்சி
அழிந்தமைக்கு யூத-கிறீஸ்தவத்தின் மீது பழிசுமத்துகிறார். கலப்புமணத்தை தடைசெய்து
தூய ஆரியர்களைக் கட்டிக்காத்தது சாதியமே என்று உறுதிபட நம்பியவராய், பழைய ஐரோப்பிய புறச்சமயத்தின் நிகழ்கால
வடிவத்தை தேடி 1930 வாக்கில் அவர் இந்தியா சென்றார். (Ku Klux Klan எனப்படும் வெள்ளையின மேலாதிக்க
இயக்கத்தின் முன்னாள் தலைவர் (David Duke) 1970ல் இந்தியா சென்றிருந்தார். சாவித்திரியின் அதே தப்புக்கணக்கை அவரும்
கொண்டிருந்தார்).
ஓர் ஐரோப்பிய
பெண்மணி தொடருந்தில், அதுவும் நான்காம்
வகுப்பில், பயணிப்பது வழமைக்கு
மாறான காட்சி அல்லவா!
ஆதலால், இந்தியாவைக்
கட்டியாண்ட பிரித்தானிய
ஆட்சியாளர்கள் அவரைக் கண்காணிப்புக்கு உட்படுத்தினார்கள். இரண்டாம் உலகப் போர்
மூளும்வரை இந்தியாவை ஆண்ட பிரித்தானியரில் அவர் கரிசனை கொண்டதரிது. எனினும் போர்
மூண்டபிறகு அவர்களிடம் பொறுக்கிய தகவல்களை அவர் யப்பானியருக்கு கடத்தினார். இந்திய
மொழிகளைக் கற்றார். ஓர் அந்தணரை மணந்தார். (தன்னைப் போலவே அவரையும் ஓர் ஆரியர்
என்று நம்பினார்). நாசியத்தையும் இந்து தொன்மத்தையும் நீட்டிநிமிர்த்திச்
சேர்த்துக்கட்டினார். அந்தச் சேர்க்கையில் ஹிட்லர் “காலத்தை மீறியவராக” மேலோங்கி, கலியுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய ஆரிய மேலாதிக்க பொற்காலத்தை
மலர்விக்க அமர்த்தப்பட்டவர் ஆகின்றார்.
காசியில்
பயிலும் அந்தணச் சிறுவர்
1930ன் பின்னர்
கொல்கத்தா இந்து ஆதீனத்தில் சாவித்திரி பணியாற்றினார். இன்று அமைதி நிலவும் தலமாக
விளங்கும் ஆதீனம் அன்று இந்து தேசியவாத இயக்க ஆதீன செயற்களமாக விளங்கியது.
பிரித்தானியரின் ஆளுகையில் இந்திய சமய சமூகங்கள் அரசியல்மயப்பட்டன. ‘இந்துக்களே ஆரியரின் உண்மையான
வாரிசுகள்; இந்தியா உள்ளூர ஓர்
இந்து தேசமே’ என்று அவை வாதித்தன.
இவ்வாறு இந்திய சமய சமூகங்கள் அரசியல்மயப்பட்டமை, இந்துத்துவ இயக்கத்தின் வளர்ச்சிக்குத் துணைநின்றது.
இந்தியா சுதந்திரம்
ஈட்ட முன்னர் சாவித்திரியைப் போலவே இந்தியர்கள் பலரும் ஹிட்லரை நயந்ததுண்டு.
ஆதீனத்தின் இயக்குநராக விளங்கிய சத்தியானந்த அடிகளும் ஹிட்லரை நயந்துவக்கும்
சாவித்திரியின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டவர். அடிகளுக்கு சாவித்திரி தொண்டாற்ற
முன்வந்தார். சாவித்திரி இந்து அடையாளத்துடன் நாசியவாத பிரசாரத்தைக் கலந்து
போதிக்க அவர் அனுமதி அளித்தார். சாவித்திரி நாடுமுழுவதும் பயணஞ்செய்து, ஆரிய விழுமியங்கள் பற்றி இந்தி, வங்க மொழிகளில் நிகழ்த்திய போதனைகளுக்கு மெருகூட்ட ஹிட்லரின் Mein Kampf (எனது போராட்டம்) நூலிலிருந்து
மேற்கோள்களை எடுத்தாண்டார்.
1945ல் ஹிட்லரின்
நாசியப் பேரரசின் வீழ்ச்சிகண்டு அதிர்ச்சியடைந்த சாவித்திரி, அதை மீண்டும் நிலைநிறுத்தப் பாடுபடும்
நோக்குடன் ஐரோப்பா திரும்பினார். அவர் இங்கிலாந்து சென்று சேர்ந்த விபரம் அவரது Long-Whiskers
and the Two-Legged Goddess (நீண்ட மீசையும் இரண்டுகால் தேவதையும்) என்ற நூலில் காணப்படுகிறது.
சாவித்திரியைப் போலவே சிறுவர்களுக்கான இந்த நீதிக்கதையின் கதாநாயகியும் ஒரு
நாசியப் பிரியரே.
நாசிய சுவஸ்திகா தோட்டுடன் சாவித்திரி தேவி
“எலியொதோரா என்ற
அக்கதாநாயகி (சாதாரண சொற்கருத்தின்படி) மனித உணர்வுகள் அற்றவள்; விலங்குகளுடன் மனிதன் நடந்துகொள்ளும்
விதத்தைக் கண்டு அவள் சின்னஞ்சிறு பராயம் தொட்டே பேரதிர்ச்சி அடைந்திருந்தாள்.
எனவே யூதர்கள் என்ற காரணத்தால் வருந்துவோர் மீது அவள் எதுவித பரிவும் கொள்ளவில்லை” என்று எழுதுகிறார் சாவித்திரி.
மனிதரை விட
விலங்குகளை அவர் அதிகம் விரும்பியமை என்றுமே அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.
ஹிட்லரைப் போலவே சாவித்திரியும் மரக்கறி உணவினர். தொலைவிலிருந்து உலகை நோக்குபவர் போலவே அவர் தென்பட்டார். மனித வாழ்வுதாழ்வுகளை விடுத்து, எவற்றை ஆழ்ந்து அமைந்த இயற்கையின்
விதங்களாக அவர் கண்டுகொண்டாரோ அவற்றில் அதிக நாட்டம் செலுத்தினார். ஐசுலாந்து
சென்று, எக்லா எரிமலை (Mount Hekla) வெடித்துக் கிளம்பும் அதேவேளை அதன்
சாரலில் இரண்டு இரவுகளைக் கழித்தார். “படைப்பின் முழுமுதல் ஓசை: ‘ஓம்’ என்பதே. இரண்டு மூன்று நொடிகளுக்கு ஒருதடவை எரிமலை ‘ஓம்! ஓம்! ஓம்!’ என்று முழங்குகிறது. உங்கள் காலடியின்
கீழ் புவி எப்பொழுதும் நடுங்கிக்கொண்டிருக்கிறது” என்று எழுதுகிறார் சாவித்திரி.
1948ல், கைப்பற்றப்பட்ட ஜேர்மனிக்குள் முயன்று
புகுந்த சாவித்திரி, அங்கு நாசியத்தை
ஆதரிக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். “நாங்கள் என்றோ ஒருநாள் எழுச்சிபெற்று மாபெரும் வெற்றி
ஈட்டுவோம்! நம்புங்கள்! காத்திருங்கள்! ஹிட்லர் வாழ்க!” என்று அவற்றில் பொறிக்கப்பட்டிருந்தது.
கைப்பற்றப்பட்ட
ஜேர்மனிக்குள் நிலைகொண்ட பிரித்தானிய ஆட்சியதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டமை, அவரை ஏற்கெனவே சிறையுண்ட நாசியத் “தோழர்களுக்கு” அருகில் கொண்டுசேர்த்த படியால், தனது கைதினைக் குறித்து தான் மகிழ்ச்சி
அடைந்ததாகப் பல ஆண்டுகள் கழித்து அவர் தெரிவித்தார். முன்னர் பெல்சன் வாயுகூடத்
தொகுதியின் (Belsen Gas Chambers) பொறுப்பதிகாரியாக விளங்கி, பின்னர் போர்க் குற்றவாளி என்று குற்றத்தீர்ப்புக்கு
உள்ளாகியிருந்த பெண்மணியுடன் சாவித்திரி நெருங்கி உறவாடினார். அப்பெண்மணியை “அழகிய தோற்றமும் இளம்பொன் கூந்தலும், ஏறத்தாழ என் வயதும் கொண்டவர்” என்று விபரிக்கிறார். சாவித்திரியின்
கணவர் இந்திய அரசாங்கத்தின் ஊடாக மேற்கொண்ட தலையீட்டினால் அவரது சிறைவாசம்
குறுக்கப்பட்டது. சாவித்திரியின் பாலுணர்வு குறித்து ஒருசில ஊகங்கள்
தெரிவிக்கப்பட்டுள்ளன. அவரும் அவரது கணவர் ஆசித் முக்கர்சியும் ஒரே சாதியினர்
அல்லர். ஆதலால் அவார்கள் மணத்துறவு பூண்டவர்கள் என்று கூறப்படுகிறது. பிரஞ்சு பாணியுடை
வடிவமைப்பாளர் Christian Dior-ன் பெறாமகளும்,
நாசிய
கொடையாளருமாகிய Francoise Dior தன்னை சாவித்திரியின் காதலி என்று
வலியுறுத்துகிறார்.
சாவித்திரி தேவியின் கூட்டாளி
முதுமையில்
சாவித்திரி இந்தியா திரும்பினார். அவருக்கு இந்தியாவே பெரிதும் தாயகமாகத்
தென்பட்டது போலும். தில்லியில், அமைதியான தெருவோர ஊர்திக்காலை ஒன்றின் மேல் அமைந்திருந்த
அடுக்குமாடியகத்தில் அவர் வசித்து வந்தார். அயலில் நடமாடிய பூனைகளுக்குத் தன்னை
அர்ப்பணித்தார். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து, மணம்புரிந்த இந்துப் பெண்கள் தமது மரபுக்கமைய அணியும்
தங்க நகைகளை அணிந்து, வெளியே சென்று
பூனைகளுக்குப் பாணும் பாலும் ஊட்டினார்.
பிறகு இங்கிலாந்து
திரும்பிய சாவித்திரி 1982ல், ஒரு கூட்டாளியின் வீட்டில், இயற்கை எய்தினார். நாசியவாத மரியாதைகள் அனைத்துடனும்
அவரது நீற்றுத் தாழி அமெரிக்க நாசியத் தலைவர் ஜோர்ஜ் லிங்கன் ராக்வெல்லின்
தாழிக்கு அருகில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுவதுண்டு.
தில்லியில் சாவித்திரி தேவி, 1980
இந்தியாவில் இன்று
சாவித்திரி தேவி பெரிதும் மறக்கப்பட்டுவிட்டார். எனினும் அவர் ஓம்பி மேம்படுத்திய
இந்து தேசியவாதம் இன்று ஓங்கி வருவது கண்டு அவரது பெறாமகனும், பழுத்த இடதுசாரி ஊடகருமாகிய சுமந்தா
பனர்ஜி கவலைப்படுகிறார்.
சாவித்திரி எழுதிய A Warning to
the Hindus (இந்துக்களுக்கு ஓர்
எச்சரிக்கை) என்ற நூல் 1939ல் வெளிவந்தது. “இந்துலகு முழுவதும்
ஒழுங்கமைப்புவாரியாக எதிர்ப்புணர்வை ஊட்டி வளர்க்கும்படி இந்துக்களுக்கு அவர்
புத்திமதி புகட்டியுள்ளார். இந்த எதிர்ப்பின் இலக்கு முஸ்லீங்களே. அவர்களால் இந்துக்களுக்கு ஆபத்து நேர
வாய்ப்புள்ளதாக அவர் கருதினார். அதே அச்சமே இன்று எதிரொலித்து வருகிறது” என்கிறர் சுமந்தா பனர்ஜி.
இந்தியப் பிரதமர்
நரேந்திர மோதியின் (ஆளும்) கட்சியின் அதிகாரபூர்வமான கருத்தியல் இந்துத்துவமே.
முஸ்லீங்களும், உலகியல்வாதிகளும்
(மதச்சார்பற்றவர்களும்) இந்து தேயத்தின் வலுவுக்கு ஆப்புவைத்துள்ளதாக அது
வலியுறுத்தி வருகிறது. கட்சியின் கொள்கைக்கு அதிகாரபூர்வமாக விளக்கம் அளிப்பவர்கள்
வன்முறையைக் கண்டித்தாலும் கூட, 1992ல் அயோத்தி பாபர் மசூதி தகர்ப்புக்கு இட்டுச்சென்ற கலவரமும், தற்பொழுது தான்தோன்றிக் குழுமங்களால்
முஸ்லீங்களுக்கும், மறுகருத்துடையோருக்கும்
எதிராக அலையலையாகத் தொடுக்கப்படும் தாக்குதல்களும் (அவ்வப்பொழுது உயிர்குடிக்கும்
தாக்குதல்களும்) வேறு கதை பேசுகின்றன.
அமெரிக்காவில்
இனவாதமும், பொதுவுடைமை-விரோதமும், உலகம் விரைவில் ஒழியப்போவது பற்றிய
கிறீஸ்தவ மூலநெறிவாத எண்ணங்களும்
ஒருசேர தீவிர வலதுசாரிகளை மாய்மால நாசியத்துடனும், இந்துமத
ஆரூடங்களுடனும் ஊடாட வழிவகுத்துள்ளன. இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் ஆளும்
பெரும்பான்மைத் தரப்பு அதன் ஆட்சியதிகாரத்தை இழக்கக்கூடும் என்ற அச்சம்
நிலவுகிறது. பெரும்பான்மைத் தரப்புக்கு ஆட்சேர்க்க அந்த அச்சம் ஒரு திட்பமான கருவி ஆகிறது.
"ஒபாமா அரசின்
அரைவாசிக் காலம் கழியுந்தறுவாயில் அமெரிக்க குடியரசுக் கட்சியை ஆதரிக்கும் இயக்கத்தில்
இணைந்து கொண்டவர்களின் உள்ளத்துள் பெரிதும் ஒரேயொரு எண்ணமே மேலோங்கியது: வெள்ளையர்கள் ஒதுக்கித்
தள்ளப்படுகிறார்கள் என்பதே அந்த எண்ணம்; தாங்கள்
பெயர்க்கப்படுவதாகவும், மானங்கெடுத்தப்படுவத்தாகவும்
அமெரிக்க வெள்ளையர்கள் அஞ்சினார்கள்; வெள்ளையர்களின் அச்சம்
தீவிர வலதுசாரிகளுக்கும், ஒழுங்கமைப்புவாரியான வெள்ளை
மேலாதிக்க குழுமங்களுக்கும் தெம்பூட்டியது” என்கிறார்
ஆராய்ச்சியாளரும், எழுத்தாளருமாகிய Chip Berlet.
இந்திய இந்து
தேசியவாதிகள், ஐரோப்பிய-அமெரிக்க
தீவிர வலதுசாரிகள் ஆகிய இரு தரப்பினரதும் வரலாற்றில் ஒரு கூறாக அமைவது சாவித்திரி ஆற்றிய பணி. அவரது பகட்டான, விசித்திரமான படைப்புக்களில் அவர்களின் தலையாய எண்ணங்கள் அனைத்தும்
இடம்பெற்றுள்ளன: மனிதர்களை “இனங்களாகப்” பிரிக்கலாம்; பிரித்து தனித்தனியாக வைக்கவேண்டும்; சில குழுமங்கள் பிற குழுமங்களை விட
மேம்பட்டவை; அவை பிறவற்றை விட
அதிக உரித்துடையவை; அக்குழுமங்கள்
ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன; அவை மீண்டும்
ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி, தொன்மப் பொற்காலத்துக்கு எங்களை மீட்டுச்செல்லும் பொழுதே நாங்கள் வாழும்
இருண்ட காலம் முடிவடையும் என்றவாறான எண்ணங்கள் பச்சையாகவும், அப்பட்டமாகவும் அவருடைய படைப்புக்களில்
இடம்பெற்றுள்ளன: ________________________________________________________________________
Maria Margaronis, Savitri Devi: The
mystical fascist being resurrected by the alt-right,
BBC Magazine, 29 October 2017, தமிழ்: மணி வேலுப்பிள்ளை
No comments:
Post a Comment