இந்திய இனப்பிரச்சனையா, இலங்கை இனப்பிரச்சனையா?

இஸெத் ஹுசெயின்

1987 யூலை 29ம் திகதி ராஜீவ் – ஜே.ஆர். ஒப்பமிட்ட 
இந்திய – இலங்கை ஒப்பந்தம்

எந்தப் பிரச்சனையைத் தீர்க்கவும், அந்தப் பிரச்சனையத் தீர்க்கும் வகையையே நாம் ஆராய வேண்டும்; வேறெந்தப் பிரச்சனையையும் அல்ல.  அத்துடன், அந்தப் பிரச்சனையின் பரிமாணங்கள் அனைத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் தமிழினப் பிரச்சனை ஓர் இந்தியப் பிரச்சனையா அல்லது இலங்கைப் பிரச்சனையா என்னும் வினாவை இக்கட்டுரையில் நான் எழுப்புகின்றேன். இது ஓர் இலங்கைப் பிரச்சனை என்பது வெளிப்படை. அதை மறுப்பது வக்கிரத்தனம். அதேவேளை இது ஓர் இந்தியப் பிரச்சனை என்பதை மறுப்பதும் வக்கிரத்தனம். ஏனெனில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு நேரும் கதியினால் தமிழ்நாட்டில் விளையும் தாக்கத்தை எந்த இந்திய மத்திய அரசாங்கத்தலும் புறக்கணிக்க முடியாது. இத்தகைய இலங்கைப் பிரச்சனையுள் அத்தகைய இந்தியப் பரிமாணம் பொதிந்திருக்காவிட்டால், எங்கள் இனப்பிரச்சனை ஒரு சின்னஞ்சிறிய உள்நாட்டுப் பிரச்சனையாகவே, சர்வதேய ஒலியதிர்வு  ஏதுமற்ற பிரச்சனையாகவே விளங்கியிருக்கும், அது ஒரு பிரச்சனையாக விளங்குவதே அரிது என்பதே எனது வாதம். அதாவது எங்கள் தமிழினப் பிரச்சனை ஓர் இலங்கைப் பிரச்சனை என்பதை விட, பெரிதும் ஓர் இந்தியப் பிரச்சனை என்பதே எனது வாதம்.   
அண்மையில் இலங்கை நாடாளுமன்றம் கூடி வரவுசெலவுத் திட்ட விவாதம் புரிந்தபொழுது, அங்கு (நிதி அமைச்சர் என்ற வகையில்) உரையாற்றிய ஜனாதிபதி ராஜபக்சா தெரிவித்த கூற்றுக்களே இக்கட்டுரையை எழுதத் தூண்டின.  எங்கள் இனப்பிரச்சனையுள் பொதிந்துள்ள இந்தியப் பரிமாணத்தை எமது அரசாங்கம் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அவருடைய கூற்றுக்கள் புலப்படுத்துகின்றன. அமைதியும் மீளிணக்கமும் காண்பதற்கு, தன்னுடன் ஒத்துழைக்கும்படி சம்பந்தருக்கும் விக்னேஸ்வரனுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்: "எல்லாச் சமூகங்களும் ஒன்றுபட வேண்டும்தேசிய மீளிணக்கத்துக்கு நாம் உறுதிபூண வேண்டிய தருணம் இது" என்றும் அவர் கூறினார். தமிழர் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறது; ஆனால் அரசாங்கம் அதற்கு “நம்பிக்கையூட்டவல்ல பதில்” அளிக்க வேண்டும் என்று பிறகு சம்பந்தர் அதற்கு விடையிறுத்தார். முன்னரும் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது பற்றியும்,  அதற்குப் பதிலளிக்கு முகமாக இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான யோசனைகளை கூட்டமைப்பு முன்வைத்தது பற்றியும்,  எனினும் அரசாங்கம் அதற்குப் பதிலெதுவும் அளிக்கத் தவறியது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.  நாடாளுமன்ற தெரிவுக் குழு தொடர்பான விடயங்கள் குறித்து 2012 ஜனவரி 17ம், 18ம், 19ம் திகதிகளில் கூடிப்பேசுவதற்கு நாள் குறிக்கப்பட்டதையும், எனினும் அத்தேதிகளிலோ அதற்குப் பின்னரோ சந்திப்புகள் இடம்பெறாததையும் அவர் சுட்டிக்காட்டினார். பேச்சுவார்த்தை இடம்பெறாததற்கு கூட்டமைப்பல்ல, அரசாங்கமே முழுப்பொறுப்பு ஏற்கவேண்டும் என்று அவர் குற்றஞ்சுமத்தினார்.  
ஜனாதிபதியின் மேற்படி கூற்று பெரிதும் ஒரு சொற்சிலம்பமாகும்; அதில் அதைவிட அதிகமாக வேறெதுவும் இல்லை. அதில் நாம் அதிகம் கருத்தூன்றுவோம் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. எனினும் அவரது பின்வரும் கூற்று வேறு விதமானது: "வேறொரு நாட்டிலிருந்து ஒரு தீர்வை எதிர்பார்ப்பதை விடுத்து, நாங்கள் பெருமைப்படும் வண்ணம், எங்கள் எடுத்துக்காட்டை மற்றவர்களிடம் முன்வைக்கும் வண்ணம் எங்கள் சொந்தத் தீர்வை நாங்களே கண்டறிய வேண்டும்" என்கிறார் ஜனாதிபதி.  “உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு” என்னும் பேர்போன தீர்வையே அவர் இங்கு குறிப்பிடுகிறார். அதை திரும்பத் திரும்ப உச்சரித்து எமக்குத் தெவிட்டிவிட்டது. அதிலும் நாம் அதிகம் கருத்தூன்ற முடியாது. எனினும் "வேறொரு நாட்டிலிருந்து ஒரு தீர்வை எதிர்பார்ப்பதை விடுத்து” என்னும் சொற்றொடரில் அவர் புதியதோர் எண்ணத்தை முன்வைப்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. இங்கு இந்தியாவையே அவர் குறிப்பிடுகிறார் என்பதில் ஐயமில்லை. இந்தியாவைக் கருத்தில் கொள்வதை அறவே தவிர்த்துவிட்டு நாங்களே ஓர் அரசியல் தீர்வைக் கண்டறிவோம் என்று யோசனை கூறுகிறார் ஜனாதிபதி.  
ஆனால், அது சாத்தியமா? எங்கள் தமிழ்மக்கள் பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வாழ்ந்து வந்தவர்கள்; தமக்கென ஒரு புறம்பான, தனித்துவமான அடையாளத்தை ஈட்டிக்கொண்டவர்கள். ஆதலால் அண்மைக் காலம் வரை தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் அவர்கள் நெருங்கிய உறவு கொண்டாடியதில்லை. இரு தரப்பினரும் ஒரே இன, மத, மொழியினர் என்பது உண்மையே. எனினும் தாங்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்றே இலங்கைத் தமிழ்மக்கள் கருதி வந்தார்கள். ஆனாலும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஏற்பட்ட அரசியல் நிர்ப்பந்தங்களினால் தமிழகத்துடன் அவர்கள் சிறந்தமுறையில் உறவுபேணத் தலைப்பட்டு, அதில் வியத்தகு வெற்றியும் பெற்றார்கள். எனினும் தனியரசு நாடும் இலங்கைத் தமிழரின் வேட்கைக்கு 1983 வரை தமிழ்நாட்டில் சற்றும் ஆதரவு கிட்டவில்லை. ராஜீவ் காந்தி கொலையுண்ட பின்னர் இரு தரப்பினருக்கும் இடையேயான உறவு சீர்குலையும் கட்டத்தை அடைந்தது. 2009 வைகாசிமாதம் தொடங்கியது எனத்தக்க  இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டுத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள்மீது கொண்டுள்ள பரிவு திட்பமானதாகவே தென்படுகிறது. அதிகாரப் பரவலாக்கம் ஊடான அரசியல் தீர்வை அவர்கள் ஆதரிப்பார்கள். அப்படிப்பட்ட தீர்வைநோக்கி இலங்கை அரசை நகர்த்தும் வண்ணம் இந்தியா நிர்ப்பந்தம் கொடுப்பதையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் எங்கள் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு இலங்கை அரசுடன் பேசிப்பறைந்து தீர்வுகாண்பதற்கு இணங்குவார்கள் என்று நம்புவதும் முயற்கொம்புக்கு ஆசைப்படுவதும் ஒன்றே என்பது தெள்ளத்தெளிவு.
எங்கள் தமிழினப் பிரச்சனை ஓர் இலங்கைப் பிரச்சனை என்பதைவிடப் பெரிதும் ஓர் இந்தியப் பிரச்சனை என்பதே எனது வாதம். அந்த வாதத்தின் நோக்கத்துக்காக, இலங்கைத் தமிழர்களுக்கு நேரும் கதியில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் முற்றிலும் பராமுகமாகவே இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் இலங்கைத் தமிழர்களுக்கு நேரும் கதியைக் குறித்து இந்திய மத்திய அரசும் கூட இம்மியும் அலட்டியிருக்க மாட்டாது; புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் ஆயுதங்களோ பயிற்சியோ அளித்திருக்க மாட்டாது; இந்திய ஆள்புலத்தின் எந்தப் பாகத்தையும் பின்புலமாகப் பயன்படுத்த அவர்களை அனுமதித்திருக்க மாட்டாது கரந்தடிப் போரில் பின்புலம் என்பது தீர்க்கமான பங்கு வகிக்கவல்லது அல்லவா! இயன்ற விதங்களில் எல்லாம் இக்கிளர்ச்சியை அடக்குவதில் இலங்கை அரசுக்கு இந்தியா உதவியிருக்கக்கூடும் அல்லவா! இங்கு நடப்பதை எஞ்சிய சர்வதேய சமூகம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்திருக்கும் அல்லவா!  
இலங்கைத் தமிழர்களுக்கு நேரும் கதியில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் முற்றிலும் பராமுகமாகவே இருப்பதாக வைத்துக்கொண்டால், 2009 வைகாசிமாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இந்தியாவின் பதில் என்னவாய் இருந்திருக்கும்? இந்தியாவும் எஞ்சிய சர்வதேய சமூகமும் பெரும்பாலும் இப்படித்தான் எண்ணியிருக்கும்: பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கைத் தமிழர்கள் மிகவும் அனுகூலம் அடைந்தார்கள்; அதேவேளை, அவர்கள் கடும் உழைப்பாளிகளாகவும் முயற்சி உடையவர்களாகவும் விளங்கியபடியால், அரசுத் துறையில் அளவுக்கதிகமான பதவிகளில் அமர்ந்துகொண்டார்கள்; அதனால் விளைந்த ஏற்றத்தாழ்வு 1956ம் ஆண்டின் பின்னர் நிவர்த்திக்கப்பட்டு வந்தது; எழுபதிகளின் முன்னரைவாசியில் மேற்படி ஏற்றத்தாழ்வு அளவுக்கதிகமாக நிவர்த்திக்கப்பட்டபடியால் தமிழர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்; 1977ம் ஆண்டு பதவியேற்ற அரசாங்கமோ அப்புதிய ஏற்றத்தாழ்வை நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பதை விடுத்து, அரச பயங்கரவாதத்தை மேற்கொண்டது; அது 1983ல் இனப்படுகொலையாக மாறியது; அத்தகைய சூழ்நிலையில் தமிழர் தரப்பு ஆயுதம் ஏந்தியது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே; ஒரு நீதியான போரில் அவர்கள் ஈடுபட்டதாகக் கொள்ளலாம்; எனினும் 1994ம் ஆண்டின் பின்னர் அரசியல் தீர்வுக்கான யோசனைகள் அனைத்தையும் புலிகள் நிராகரித்தார்கள்; ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்; அதன் உச்சக் கட்டத்தில் மாவிலாற்று அணைக்கட்டை மூடினார்கள்; அதனால் ஜனாதிபதி ராஜபக்சா முழு அளவில் போர்தொடுக்க வேண்டியதாயிற்று; சிங்களத் தரப்புக்கு வேறு மாற்றுவழி கிடைக்காதபடியால், அது அவர்களின் நீதியான போராக நடந்தது; 2009ல் அது வெற்றியில் முடிவடைந்தது... இந்தியாவும் எஞ்சிய சர்வதேய சமூகமும் பெரும்பாலும் அப்படித்தான் எண்ணியிருக்கும்.
தமிழ்நாடு பராமுகம் காட்டியிருந்தால், வேறெதுவுமே இந்தியத் தலையீட்டுக்கு வழிவகுத்திருக்க மாட்டாது. தமிழ்நாட்டின் பராமுகம் தொடர்ந்திருந்தால், 2009ம் ஆண்டின் பின்னர் என்ன நடந்திருக்கும்? இலங்கை அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளிலும் கடைப்பிடித்த அதே கொள்கைகளையே தொடர்ந்தும் கடைப்பிடித்திருக்கும்; இன்னும் அப்பட்டமாகவே கடைப்பிடித்திருக்கும்; இன்னும் மிருகத்தனமாகவும் கடைப்பிடித்திருக்கக் கூடும்; வட, கீழ் மாகாணங்களைப் பெரிதும் சிங்கள மாகாணங்களாக மாற்றுவதற்கான குடியேற்றப் படிமுறை துவக்கி வைக்கப்பட்டிருக்கும்; தமிழ்ப் பகுதிகளில் ஆயுதப் படைகள் இன்னும் அப்பட்டமாக்வே நிலைகொண்டிருக்கும்; தமிழ்மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதை விடுத்து, நாட்டைக் கட்டியாளும் தலையாய நோக்குடன் அடிப்படைக் கட்டமைப்பு நிகழ்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும்; மீள்குடியமர்வும் மற்றும் பிறவும் மந்தகதியில் நகர்ந்திருக்கும்...
மேற்படி காரணிகளுள் எதுவுமே இந்திய அல்லது சர்வதேய தலையீட்டுக்கு வழிவகுத்திருக்க முடியாது. உலகம் முழுவதும் சிறுபான்மை இனக்குழுமங்கள் வாழ்ந்து வருகின்றன. (விதிவிலக்காக நான்கு நாடுகளில் சில புள்ளிவிபரங்களின்படி பன்னிரண்டு நாடுகளில் சிறுபான்மை இனக்குழுமங்கள் இல்லை). அவை பெரிதும் பாரபட்சத்துக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் அது பெரிதும் சகிக்கத்தக்க பாரபட்சமாகவே காணப்படுகிறது. பெரும்பான்மை இனக்குழுமத்துக்கு சலுகையளிக்க முனையும் இன அரசின் அகநியாயத்தில் அப்பாரபட்சம் உறைந்துள்ளது என்று வாதிக்கவும் இடமுண்டு.
இலங்கை ஒரு தீவு என்னும் முக்கிய விவரத்தை உள்ளத்துள் பதிக்க வேண்டும். அதாவது எல்லைத் தரைகள் கொண்ட நாடுகளை விட, தீவுகளில் வாழும் சிறுபான்மையோரின் குடிபெயரும் வல்லமை குறைவு. ஆங்கிலேய திருச்சபையின் பேராயர் கலாநிதி ரோவான் வில்லியம்ஸ் (Archbishop of Canterbury, Dr. Rowan Williams) எழுதிய கட்டுரை ஒன்றை அண்மையில் வாசித்த பின்னரே எனக்கு இந்த எண்ணம் ஏற்பட்டது. பிரித்தானிய தீவுத்தொகுதியுள் (British Isles) ஆங்கிலேயர் ஈட்டிய வெற்றிகள் அனைத்தும் அரைகுறை வெற்றிகளே என்பது அவர் வாதம். ஏனெனில், அங்கு தோற்கடிக்கப்பட்ட வேல்சியரும் (the Welsh), பிறரும் அங்கிருந்து தப்பியோட முடியவில்லை. ஆதலால் பிரித்தானியா ஒரு தீவுத்தொகுதி என்னும் நியாயத்துக்கமைந்து ஏனைய இனக்குழுமங்களுடன் ஆங்கிலேயர் ஒத்துமேவ வேண்டியதாயிற்று. அத்தகைய ஒத்துமேவல் இங்கு தமிழருடனும் நிகழக்கூடும். தமிழ்மக்கள் அசாதாரண வல்லமை படைத்தவர்கள். பொருளாதார விருத்தியால் விளையும் நவீன இன்பங்களத் துய்த்து நிறைவுகொள்ள விழைபவர்கள் அவர்கள். அந்த நம்பிக்கையுடன் தான் இந்த அரசாங்கம் செயற்பட்டு வந்துள்ளது. அரசாங்கம் அப்படி நம்ப நியாயம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு நீண்ட காலம் எடுக்கும்.
சர்வதேய கவனம் இலங்கைமீது விழுவதை நியாயப்படுத்தும் காரணி எதுவுமே இலங்கையின் இனப்பிரச்சனைக்குள் பொதிந்திருக்கவில்லை. மாறாக, இலங்கை இனப்பிரச்சனையின் புறப்பரிமாணமே, இந்தியப் பரிமாணமே மேற்படி சர்வதேய கவனத்துக்கு இட்டுச்செல்கிறது. இலங்கையில் தமிழ்மக்களுக்கு நேரும் கதியினால் தமிழ்நாட்டில் ஏற்படும் தாக்கத்திலிருந்து எழுவதே அப்பரிமாணம். அத்தாக்கம் தமிழ்நாட்டில் மாநில–மத்திய உறவு குறித்த கொந்தளிப்புக்கு இட்டுச்செல்லக் கூடும். அக்கொந்தளிப்பினால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து விளைவிக்கவல்ல பிரிவினை இயக்கங்கள் பெருகக்கூடும். ஆகவே, இலங்கையில் தமிழ் மக்களுக்கு நேரும் கதியில் இந்தியா மறந்துவிடக்கூடிய வெறும் நலன்களல்ல, இந்தியாவின் அடிப்படை நலன்களே சம்பந்தப்பட்டுள்ளன. அதாவது, எங்கள் தமிழினப் பிரச்சனையை ஓர் இலங்கைப் பிரச்சனை என்று கொள்வததைவிட, பெரிதும் ஓர் இந்தியப் பிரச்சனை என்றே கொள்ளலாம்.
அகவே நாம் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி புகுத்தப்பட்ட 13-அ ஏற்பாட்டை இயன்றவரை முழுமையாக நடைமுறப்படுத்த வேண்டும் என்பது வெளிப்படை. சுதந்திரமான, நியாயமான ஒரு தேர்தலை அடுத்து அரசாங்கம் வட மாகாண மன்றத்தை அமைத்தது சாலவும் நன்று. எனினும் அதனை அடுத்து அரசாங்கம் நடந்துகொண்ட விதம், அம்மாகாண மன்றத்தை சரிவரச் செயற்பட அனுமதிப்பதில் அரசாங்கம் கருத்தூன்றவில்லை என்பதையே உணர்த்துகிறது. அதில் கருத்தூன்றியிருப்பதை அரசாங்கம் காட்ட வேண்டும். காணி, காவல்துறை அதிகாரங்களில் ஒத்துமேவும் வாய்ப்பினை ஆராயும் அலுவலை ஓர் அவசர அலுவலாக மேற்கொள்ள வேண்டும். அரசியல் தீர்வு தோன்றும் அறிகுறி எதுவும் தென்படாமல் எமது இனப்பிரச்சனை காலவரையறையின்றி நீடித்தால், சைப்பிரஸ் தீவு மாதிரியான தீர்வொன்றைத் திணிக்க முயலும் வண்ணம் இந்தியாவை நிர்ப்பந்திக்கும் ஏதோ ஒன்று நிகழக்கூடும் என்பதை உள்ளத்துள் வைத்தே நான் இப்படிக் கூறுகிறேன். முந்திய கட்டுரைகளில் இந்த வாதத்தை நான் முன்வைத்ததுண்டு.
அது தொடர்பாக இரு விடயங்களை உள்ளத்துள் பதிக்க வேண்டும்: சர்வதேய உறவில் படைபலம், நன்னெறி இரண்டும் முக்கியமானவை. இலங்கையை விட இந்தியா பன்மடங்கு படைபலம் மிகுந்த நாடு; மென்மை வலுவும், வன்மை வலுவும் மிகுந்த நாடு. நாங்கள் புலிகளின் பீரங்கிகளை அழித்துவிட்டோமாயினும், இந்தியாவின் பீரங்கிகளை அழித்துவிடவில்லை என்பதை எம்மவர் உணர்ந்துகொள்வதாகத் தெரியவில்லை. நன்னெறியைப் பொறுத்தவரை, அமைதிவழியில் தீர்வு காண்பதைப் பொறுத்தவரை, எங்கள் அரசாங்கம் இடைவிடாது மழுப்பிவருவது கேவலமான செயலாகவே சர்வதேய நோக்கர்களுக்குத் தென்படும்.
மட்டுப்பட்டளவு அதிகாரப் பரவலாக்கத்தை அனுமதிக்கும் 13-அ ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அகோரமான எதிர்ப்புக் கிளம்பக் காரணம் என்ன? என்னால் எண்ணிப்பார்க்கக் கூடிய ஒரு காரணம்: அதிகாரத்தை அறவே தாழ்த்தி இழித்துப் பழகியவர்கள் நாங்கள்; மக்கள் அனைவரதும் நலன்கருதி ஈயப்படும் உன்னதமான பொறுப்பாக அதை நாங்கள் நோக்குவதில்லை; மாறாக, மக்களைக் கட்டியாளும் கருவியாகவே அதை நாங்கள் நோக்குகி வந்துள்ளோம்; தமிழர்கள் மக்களைக் கட்டியாள்வதை சிங்கள இனவாதிகளால் சகிக்க முடியாது! வேறொரு காரணம்: தமிழ்மக்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால், புலம்பெயர்ந்த தமிழரின் பொருளுதவியுடனும், நிபுணத்துவத்துடனும் வட மாகாண மன்றத்தை நடத்திக்காட்டி வெற்றிமுரசு கொட்டுவார்கள். தமிழ்மக்கள் ஈட்டும் அத்தகைய வெற்றி எதுவுமே சிங்கள இனவாதிகளுக்கு காழ்ப்பை உண்டாக்கியே தீரும். தற்பொழுது படைபலம், நன்னெறி இரண்டையும் பொறுத்தவரை இலங்கை பெரிதும் தாக்குண்டு நலிவுறும் நிலையிலேயே காணப்படுகிறது.
முற்றிலும் ஓர் எதிர்பாரா நிகழ்வினால் இந்தியா திடீரென இலங்கையில் தலையிடும் நிர்ப்பந்தம் ஏற்படலாம் என்பதை நாங்கள் உள்ளத்துள் பதிக்க வேண்டும். எங்கள் கண்ணுக்குப் புலப்படுவதைக் காட்டிலும் அதிகமான வேளைகளில் எதிர்பாரா நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. ஒருசில நாட்களுக்கு முன்னர் இந்திய இராசதந்திர அதிகாரி ஒருவர் தனது பணிப்பெண்ணுக்கு குறைந்த சம்பளம் கொடுத்ததாகவும், அதைப் பற்றி ஒரு விண்ணப்பப் படிவத்தில் அவர் பொய்விபரம் கொடுத்ததாகவும் கூறப்பட்டதால் இந்திய-அமெரிக்க உறவு மிகவும் பாரதூரமான பாதிப்புக்கு உள்ளாகும் என்று யார்தான் எண்ணியிருப்பார்கள்? ஆகவே எமது இனப்பிரச்சனையைத் தொடர்ந்து இழுபட விடுவது ஆபத்து.
____________________________________________________________________________
Izeth Hussain, An Indian or Sri Lankan Ethnic Problem? The Island, Colombo, 2013-12-27, 
தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment