எங்கள் ஊரின் பொற்காலம்

யாழ்ப்பாணத்தின் நட்டநடுவில் காரணப் பெயர்களைக் கொண்ட சிற்றூர்கள் பல இருக்கின்றன. நெல்லியடி, அரசடி, புளியடி, பிட்டியடி, கீரிப்பல்லி... இப்படி எத்தனையோ!
எங்கள் ஊருக்கு கட்டையடி என்று பெயர். யாழ் வீதி எங்கள் ஊரை ஊடறுத்துச் செல்கிறது. வடக்குத் தெருக்கானில் வெள்ளையன் நாட்டிய மைல்கல் ஊரின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்த மைல்கல்லை எல்லோரும் “கட்டை” என்றே குறிப்பிடுவார்கள். அப்புறம் எங்கள் ஊருக்கு கட்டையடி என்பது காரணப் பெயராகிவிட்டது.
யாழ் வீதியின் தெற்குத் தெருக்கானில் ஒரு காட்டுமரம் நிற்கிறது. ஒருவருக்கும் அந்த மரத்தின் பெயர் தெரியாது. எல்லோரும் அந்த மரத்துக்கு அஞ்சி நடுங்கினார்கள். அந்த மரத்தில் ஒரு முனி இருப்பதாகவும், அது அடிக்கடி இறங்கிவந்து ஆட்களைப் பலியெடுப்பதாகவும் எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.
உண்மையில் அந்த மரத்துக்கும் கட்டைக்கும் இடைப்பட்ட தெருவில் விபத்துக்கள் ஏற்பட்டு, ஆட்கள் இறந்திருக்கிறார்கள். அந்த விபத்துக்களினாலும், உயிரிழப்புக்களினாலும் ஊர்வாசிகள் பீதியடைந்திருக்கிறார்கள். அவற்றுக்கான காரணத்தைப் பகுத்தறியும் நிலையில் அவர்கள் எவருமே இருக்கவில்லை. ஆகவே ஒரு முனியைக் கொண்டுவந்து அந்த மரத்தில் ஏற்றிவிட்டு, அதற்குப் பயந்து செத்துக் கொண்டிருந்தார்கள். அப்புறம் ஏற்பட்ட உயிரிழப்புகள் அனைத்துக்கும் முனியின் தலையிலே பழியைப் போட்டுவிட்டார்கள்!
யாழ் வீதியின் கிழக்கே கால்மைல் தூரத்தில் தெரியும் ஆசுப்பத்திரியிலிருந்து, மேற்கே கால்மைல் தூரத்தில் தெரியும் கள்ளுக்கொட்டில் வரை பார்த்தால், எங்கள் முனிதாங்கி மரத்தை அண்டி யாழ்வீதி வளைந்து செல்வது தெரியும். படுவேகமாக வளைவை நெருங்கும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று வழிவிடுவதில் தடுமாறித் தடம்புரள்வதும் மோதுப்படுவதும் உண்டு. அங்கே ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அதுவே தலையாய காரணம். ஆயினும் முனியே தலைகளை உருட்டுவதாக எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அதற்கு “கட்டையடி முனி” என்று வேறு பெயரும் சூட்டிவிட்டார்கள். உண்மையில் விபத்து மரணங்களே கட்டையடி முனியை உருவாக்கியிருந்தன. இருந்தும் கட்டையடி முனியே விபத்து மரணங்களை நிகழ்த்துவதாக நினைத்து எல்லோரும் கலங்கிக் கொண்டிருந்தார்கள்.       
வீடுகளும் புதர்களும் பற்றைகளும் நிறைந்த ஊர் கட்டையடி. வீடுகளில் மனிதருடன் ஆடு மாடுகளும், கோழி, நாய், பூனைகளும் கூடிவாழ்ந்தன. பற்றைகளில் கீரியும், பாம்பும் போராடி வந்தன. கோழி இல்லாத வீடே கிடையாது. எல்லாம் நாட்டுக்கோழிகள். வீட்டுக்கூரைகளே காட்டுக்கோழிகளின் உறைவிடம். பகலில் பருந்தும், இரவில் மரநாயும் அவற்றின் எதிரிகள். பெட்டிகளிலும் பட்டைகளிலும் முட்டையிடும். கடகங்களிலும் தாவாரங்களிலும் அடைகிடக்கும். வீடுவளவு முழுவதும் கழித்துத்தள்ளும். நாங்கள் அவற்றை எல்லாம் மிதித்துத்தள்ளுவோம்...  
தீபாவளிக்கு ஊர்முழுவதும் கோழிச்சண்டைகள் இடம்பெறும். அவற்றில் பந்தயம் கட்டி வென்றவர்கள் மீசையை முறுக்கிக்கொண்டு திரிவார்கள். தோற்றவர்கள் மீசை வழிப்பார்கள். சின்னவன் வெட்டையில்தான் பெரிய கோழிச்சண்டை நடைபெறும். ஈற்றில் இராமையாவின் சேவலே வெற்றிபெறும். இராமையாவுக்கு ஏராளமான பட்டங்கள் உண்டு. அவற்றுள் “சேவல்கொடியோன்” என்பது ஒன்று...
அப்புறம் கோழிவளர்ப்பில் ஒரு புரட்சி ஏற்பட்டது. அந்தப் புரட்சியை நிகழ்த்தியவர் நீலப்பிள்ளை. அவர் கோழிவளர்ப்பு அதிகாரியாக எங்கள் ஊரில் குடிபுகுந்தவர். வீடு வீடாகப் போய், கோழி வளர்த்து இலாபம் சம்பாதிக்கலாம் என்ற சேதியை அவர் பரப்பி வந்தார். அது எப்படி என்பதை இன்ன நாள், இன்ன நேரம், இன்ன இடத்தில் நடக்கும் கூட்டத்தில் வைத்துச் சொல்வதாக எல்லோரிடமும் தெரிவித்தார்.
சின்னவன் வெட்டையில்தான் கூட்டம் நடந்தது. விதானையார், சுப்பு வாத்தியார், எங்களுக்குப் பாடம் சொல்லித்தரும் பொன்னு அக்கா, இராமையா உட்பட ஊர்ப் பெருங்குடி மக்கள் எல்லோரும் திரண்டுவந்து புழுதிக்குள் இருந்து நீலப்பிள்ளையின் பேச்சைக் கேட்க ஆயத்தமானார்கள்.
“நீங்கள் சொந்தத் தேவைக்காகவே நாட்டுக்கோழி வளர்த்து வருகின்றீர்கள். அவற்றுடன் புதுவகைக் கோழிகளை வளர்த்து இலாபம் சம்பாதிக்கும் விதத்தை நான் உங்களுக்கு காட்டித் தருகிறேன். வீட்டுக்கு வீடு கோழிப்பண்ணை அமைக்க வேண்டும். அங்கே புதுவகைக் கோழிகள் வளர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் கோழிமுட்டையையும், இறைச்சிக் கோழியையும் விற்றுப் பெருந்தொகைப் பணம் சம்பாதிக்கலாம். கோழிக்கழிவைப் பயிருக்குப் பசளையாகப் பாவிக்கலாம்...” என்று நீலப்பிள்ளை பேசிக்கொண்டிருந்தார். எல்லோரும் அமைதியோடும் ஆவலோடும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
நீலப்பிள்ளை ஒரு கோழியைத் தூக்கிக் காட்டி “இதுதான் புது வெள்ளைக் கோழி” என்றார். இன்னொரு கோழியைக் காட்டி “புது மண்ணிறக் கோழி” என்றார். “கோழிக்குஞ்சுகளை நாங்கள் பட்டணத்திலிருந்து தருவிக்கலாம். ஒரு குஞ்சின் விலை 50 சதம். அவற்றைப் பண்ணைகளில் வளர்ப்பதுதான் நல்லது. ஒரு பண்ணையில் குறைந்தது 100 குஞ்சுகளாவது வளர்க்கலாம். ஒரு முட்டையை 25 சதத்துக்கு விற்கலாம். முட்டை இட்டு முற்றிய கோழியை 2 ரூபாவுக்கு விற்கலாம். உங்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தை நீங்களே கணக்குப்போட்டுப் பாருங்கள்...”
நீலப்பிள்ளை பேச்சை இடைநிறுத்தி, முன்வரிசையில் இருந்த மூன்று சிறுவர்களை எழுப்பி, அந்தப் புதுவகைக் கோழிகளையும், அவை இட்ட முட்டைகளையும் கொடுத்து, அவற்றை எல்லோருக்கும் சுற்றிக் காண்பிக்கும்படி பணித்தார். கோழிகளையும் முட்டைகளையும் பார்ப்பதற்கு எல்லோரும் முண்டியடித்தார்கள். அப்புறம் நீலப்பிள்ளை கேள்விகளுக்கு மறுமொழி சொல்லத் தயாரானார்.
“கோழிப்பண்ணை போட எவ்வளவு செலவு பிடிக்கும்?”
“கிட்டத்தட்ட 100 ரூபா.”
“கோழித்தீன்?”
“பட்டணத்தில் வாங்கலாம். ஒரு பெட்டி 5 ரூபா. ஒரு பெட்டி ஒரு மாசத்துக்குப் போதும். அத்துடன் அரிசிக்குறுணி, உழுத்தங்கோது, பழஞ்சோறு எல்லாம் போடலாம்...”
“கோழிகளுக்கு நோய்நொடி வந்தால்...?”
“கோழிமருந்து விற்கிறது. வாங்கிக் கொடுக்கலாம்... நான் கோழி வைத்தியம் படித்திருக்கிறேன்...”
நீலப்பிள்ளை சொல்லிய மறுமொழிகளில் எல்லோருக்கும் திருப்தி. அப்புறம் ஊர்முழுவதும் அங்கும் இங்குமாக கோழிப்பண்ணைகள் தலைகாட்டத் தொடங்கின. ஒருசில கிழமைகளுக்குள் எல்லா வீட்டுக் கோடிகளிலும் கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டுவிட்டன. அவை எல்லாம் கம்பிவலைக் கூடுகள். நீலப்பிள்ளை வீடு வீடாகப் போய், கம்பி வலையின் ஊடாகக் கோழிக் குஞ்சுகளைப் பார்வையிட்டு வேண்டிய புத்திமதிகளைச் சொல்லி வந்தார்.
ஒருசில மாசங்களுள் குஞ்சுகள் பெருத்து, கூட்டுக்கு வெளியே போவதற்கு அடம்பிடித்தன. “இளங்கோழிகளை இடைக்கிடை கூட்டுக்கு வெளியே விட்டு, கண்ணுங் கருத்துமாய் நின்று மேயவிட்டு, மறுபடியும் கூட்டினுள் விட்டு அடைத்துவிட வேண்டும்” என்று நீலப்பிள்ளை அறிவுறுத்தியிருந்தார்.
வெகுவிரைவில் கோழிகள் முட்டை இடத் தொடங்கிவிட்டன. வாத்துமுட்டையைப் போல் பெரிய முட்டைகள். எல்லோரும் முட்டைகளும் பெட்டிகளுமாய் முண்டியடித்துக்கொண்டு, புளியடிச்சந்திக்குப் போய் ஒன்று 25 சதப்படி விற்று, கைநிறையச் சம்பாதித்தார்கள். பிட்டியடி என்ற பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களே எங்கள் முட்டைகளைக் கூடுதலாக வாங்கினார்கள். கட்டையடி என்ற எங்கள் ஊரின் பெயரை அவர்கள் “முட்டையடி”யாக மாற்றிவிட்டார்கள். அதைக் கேட்டு வெகுண்டெழுந்த விதானையார் “பிட்டியடி ஆட்களுக்கு மட்டையடி கொடுக்க வேண்டும்” என்று கர்ச்சித்தார். நீலப்பிள்ளை குறுக்கிட்டு, “கட்டையடியின் முட்டை வியாபாரத்தை மட்டையடி கெடுத்துவிடும்” என்று எச்சரிக்கவே, விதானையார் அடங்கிவிட்டார். 
முட்டை வியாபாரத்துக்கு ஈடுகொடுத்து இறைச்சிக்கோழி விற்பனையும் மேலோங்கியது. இறைச்சிக்கோழி மாத்திரமல்லாது, விறாத்துக்கோழிக்கும் கட்டையடி பெயரெடுத்துவிட்டது. கோழிக்கழிவுக்கும் நல்ல கிராக்கி ஏற்பட்டது. வீட்டுக் கொல்லைகளில் அது பசளையாகப் பாவிக்கப்பட்டது. 
இவ்வாறு கட்டையடியின் வரலாற்றில் ஒரு பொற்காலம் மலர்ந்தது. அங்கே ஓலைவீடுகள் கல்வீடுகளாய் மாறின. தட்டிகள் பிட்டிகளாகவும், கிடுகுகள் ஓடுகளாகவும், வேலிகள் மதில்களாகவும் மாறின. பெண்கள் தங்கள் அணிமணிகளைப் பெருக்கிக்கொண்டார்கள். ஆண்கள் கழுத்திலிருந்து தொப்புள்வரை தொங்கும் சங்கிலி அணியத் தொடங்கினார்கள்... இவ்வாறு நீலப்பிள்ளையின் கனவு நனவாகிவிட்டது!
அப்புறம் நீலப்பிள்ளை கனவிலும் நினையாத சங்கதி ஒன்று நடக்கத் தொடங்கியது. எங்கள் ஊரில் கோழிவளம் பெருகப் பெருக, அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து பெருந்தொகையான் கீரிகள் அடிக்கடி படையெடுத்து வரலாயின. குறிப்பாக, தெற்கேயுள்ள கீரிப்பல்லி என்ற குறிச்சியிலிருந்து ஏராளமான கீரிகள் கட்டையடிக்குள் புகுந்து ஆசைதீரக் கோழிவேட்டையாடி மகிழ்ந்தன. பாம்புகளைத் துண்டாடும் கூரிய பற்களைக் கொண்ட கீரிகள் கம்பிவலைகளை நறுக்கி, கூட்டினுள் நுழைந்து, குஞ்சுகளைக் கவ்விச் சென்றன. கீரிகளால் கட்டையடிக்கு நேர்ந்த இழப்பை மதிப்பிட முடியாது.
நீலப்பிள்ளைக்கு கீரி-முறைப்பாடுகள் வந்த வண்ணமாய் இருந்தன. தக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், கொஞ்சம் பொறுமையாய் இருக்கும்படியும், கூட்டத்தில் தீர்வு அறிவிக்கப்படும் என்றும் அவர் சொல்லி அனுப்பிக்கொண்டிருந்தார்.
வழக்கம்போல் சின்னவன் வெட்டையில் விதானையாரின் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கீரி-ஒழிப்புத் திட்டம் முன்வைக்கப்பட்டது. அதாவது பொறி வைத்துக் கீரி பிடிக்கப்படும். கோழிக்கூடுகளுக்கு இரட்டைக் கம்பிவலை பாவிக்கப்படும். மறு அறிவித்தல்வரை கோழிகள் கூட்டுக்கு வெளியே போய்வர அனுமதிக்கப்பட மாட்டா...
கீரிப்பொறியை வடிவமைக்கும் பொறுப்பு இராமையாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவன் அதற்கான தகைமை வாய்ந்தவன் என்பதில ஐயமில்லை. அவன் பள்ளிக்குப் போனது கிடையாது. ‘அணிலடி வீரன், பாம்படி மன்னன், நாயடி நாயகன், சேவல்கொடியோன்’ போன்ற பட்டங்கள் பல பெற்றவன். ஒரு தடவை தனது மாமனாரின் துவக்கினால் ஒரு பருந்தைச் சுட்டு வீழ்த்தியது அவனுடைய சாதனைகளுள் ஒன்று. அத்துடன் ஒரே உலக்கையால் ஒரே அடியில் இரண்டு மரநாய்களை மண்டையில் போட்டுக் கொன்று புகழ்கொண்டவன்...
அத்தகைய பெருமைவாய்ந்த இராமையாவின் கீரிப்பொறி பலகையும் இரட்டைக் கம்பிவலையும் கொண்டு அமைக்கப்பட்டது. அது ஒரு நீள்சதுரமான கூடு. உட்புறம் சிறியதும் பெரியதுமாக இரண்டு கூறுகளைக் கொண்டது. இரண்டு கூறுகளையும் ஒரு கம்பிவலை பிரித்துநின்றது. சிறிய கூறினுள் ஒரு கோழிக்குஞ்சு விட்டு அடைக்கப்படும். பெரிய கூறுக்கு ஒரு வாயில். அந்த வாயிலுக்கு ஒரு கதவு. கதவு மேலும் கீழுமாகவே திறந்து மூடும். கதவின் மேல்மட்டத்தில் ஓர் ஆணி. அந்த ஆணியில் ஒரு கம்பி. கதவு மேலெழுந்து வாயில் திறந்திருக்கும்படி கம்பியை மேலே இழுத்து ஒரு கோலில் பொருத்திவிட வேண்டும். கீரிப்பொறிக் கூட்டை செங்குத்தாக ஊடுருவி நிற்கும் கோல் எங்கும் பொருத்தப்படாது தட்டுப்பட்டு அரக்கப்படக்கூடியதாக நிற்கும். அதாவது திறந்திருக்கும் வாயில்வழியே பொறிக்கூட்டினுள் நுழையும் கீரி கோழிக்குஞ்சைப் பிடிக்கும் வகை அறியாது தடுமாறும்பொழுது பொறிக்கோல் தட்டுப்பட்டு அரக்குப்படும். உடனே பொறிக்கோலில் பொருத்தப்பட்டிருந்த கம்பி விலகிவிடும். கம்பி விலகியதும் கதவு மேலிருந்து கீழாக விழுந்து வாயிலை மூடிவிடும். கீரி அகப்பட்டுவிடும்...
இராமையா வடிவமைத்த முன்மாதிரிக் கீரிப்பொறியைச் செவ்வைபார்த்த நீலப்பிள்ளை, அதற்குத் தனது அங்கீகாரத்தை வழங்கினார். அப்புறம் சின்னவன் வெட்டையில் அது காட்சிக்கு வைக்கப்பட்டது. அதனை அமைப்பதற்கு வேண்டிய மூலப்பொருட்கள், அதன் வடிவமைப்பு, அது இயங்கும் விதம் குறித்து இராமையா அளித்த விளக்கங்களைக் கேட்டு எல்லோரும் மெய்சிலிர்த்தார்கள். கட்டையடியின் தொழில்நுட்பம் அக்கம் பக்கத்து ஊர்களை வியப்பில் ஆழ்த்தியது.
கீரிப்பொறியை வெள்ளோட்டம் பார்க்க ஊரே திரண்டுவிட்டது. கீரிப்பல்லிக் குறிச்சியிலிருந்து வெல்லுக்கு வெல்லு படையெடுத்து வந்த கீரிகளின் கால்தடம் பதிந்த ஓர் இடத்தில் அந்த முன்மாதிரிக் கீரிப்பொறி வைக்கப்பட்டது. அதற்குள் அநாதரவாக விடப்பட்ட வெள்ளைக் கோழிக்குஞ்சின் அவலக்குரல் ஊரெங்கும் எதிரொலித்தது. அது கீரிகளின் காதுகளுக்கும் எட்டியிருக்கும். “இன்னும் 15 நிமிடங்களுள் கீரி ஒன்று அகப்பட்டுவிடும்” என்றான் இராமையா. ஆட்களக் கண்டால் கீரிகள் கலைவு கண்டுவிடும். ஆகவே எல்லோரையும் யாழ்வீதிக்கு வடக்குப் பக்கமாகப் போய் குந்தியிருக்கும்படி இராமையா கட்டளையிட்டான். விதானையார், நீலப்பிள்ளை, சுப்பு வாத்தியார் உட்பட எல்லோரும் இராமையாவின் கட்டளைக்குக் கட்டுண்டு, வீதிகடந்து, குந்தியிருந்தார்கள். இராமையா ஓர் ஆடுகாலில் ஏறிநின்று நோட்டம் விட்டான்.
இராமையாவின் ஆரூடம் தப்பவில்லை. கோழிக்குஞ்சின் இடைவிடாத ஓலம் கீரி ஒன்று அகப்பட்டுவிட்டதைப் பறைசாற்றியது. குந்தியிருந்தவர்கள் எல்லோரும் அகப்பட்ட கீரியைக் கண்டுகளிக்கப் பாய்ந்து வந்தார்கள். “இது முன்மாதிரிக் கீரிப்பொறியில் அகப்பட்ட முதலாவது கீரி” என்று அதை எல்லோருக்கும் அறிமுகப்படுத்திய நீலப்பிள்ளை இராமையாவுக்கு “கீரிபிடி வீரன்” பட்டம் சூட்டிக் கெளரவித்தார்.
ஆட்கள் கீரிப்பொறியைச் சூழ்ந்துநின்று ஆரவாரம் செய்தார்கள். கோழிக்குஞ்சு கத்துவதை நிறுத்திவிட்டு, வெளியே வருவதற்குத் தவித்துக்கொண்டிருந்தது. இராமையா கீரிப்பொறியிலிருந்து கோழிக்குஞ்சைப் பக்குவமாய் வெளியே எடுத்து விட்டான். அது ஓலம் எழுப்பியபடி ஓடித்தப்பியது. 
கீரியோ பொறியிலிருந்து தப்பும் வகை அறியாது சுழன்றடித்துக் கொண்டிருந்தது. கம்பிவலையைப் பிரிப்பதற்காக அங்கும் இங்கும் கடித்து இடுங்கியதில் அதன் முன்வாய்ப் பற்கள் உடைந்து, மூக்கும் நாக்கும் காயப்பட்டு, கடைவாயிலிருந்து இரத்தம் பாய்ந்துகொண்டிருந்தது. எந்த மடையனாவது தன்மீது முட்டினால், அவனைக் கடித்துக் குதறிவிடுவதாக எச்சரிப்பது போல் அது ஒவ்வொருவரையும் உற்றுநோக்கிச் சீறிக்கொண்டிருந்தது.  
கீரியை என்ன செய்வது? 5 கட்டை தள்ளிப்போய் வல்லைவெளியில் அதை விரட்டிவிட்டால் புண்ணியங் கிடைக்கும் என்பது ஒரு தரப்பு வாதம். 6 கட்டை தள்ளி தொண்டமானாற்றில் விட்டுவந்த தனது வீட்டுக் கடுவன்பூனை அடுத்த நாள் காலை, வாயில் ஓர் எலியோடு, தனது வீட்டுத் தாவாரத்தில் வீற்றிருந்தது என்றார் சுப்பு வாத்தியார்! அகப்படும் கீரிகளை கட்டையடி முனிக்குப் பலிகொடுத்தால், முனி மேற்கொண்டு ஆட்களைப் பலியெடுக்காது என்பது இன்னொரு கட்சி. “முனி, பேய், பிசாசுகள் கீரிப்பலி ஏற்றதாக வேதங்களில் சொல்லப்படவில்லையே” என்று சுப்பு வாத்தியார் திரும்பவும் ஆட்சேபம் தெரிவித்தார். ஆதலால் கீரியை என்ன செய்வது என்று அவரிடமே கேட்கப்பட்டது. “தீர்த்துக்கட்டுங்கள்!” என்று உத்தரவு பிறப்பித்தார் சுப்பு வாத்தியார்.
கீரியைத் தீர்த்துக்கட்டும் பொறுப்பு இராமையாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இராமையா ஒருவனைக் கூப்பிட்டு சுத்தியல் கொண்டுவரும்படியும், இன்னொருவனைக் கூப்பிட்டு (வேலி அடைக்கப் பாவிக்கப்படும்) குத்தூசி கொண்டுவரும்படியும் பணித்தான். ஆயுதங்கள் இரண்டும் உடனடியாகக் கொண்டுவரப்பட்டன. கீரி கொல்லும் விதம், அதில் தானும் சுத்தியல்காரனும் குத்தூசிக்காரனும் வகிக்கும் பங்கு பற்றி எல்லாம் இராமையா விரிவாக விளக்கமளித்தான்.
கீரிவதையைப் பார்க்க எல்லோரும் முண்டியடித்தார்கள். இராமையா அவர்களை விலகிநிற்கச் சொல்லிவிட்டு, கீரிப்பொறியைப் பின்புறமாக அணுகி, கவடுபோட்டு நின்றான். சுத்தியல்காரனை தனக்கும் பொறிக்கும் முன்புறமாக நெருங்கி குந்தியிருக்கும்படியும், குத்தூசிக்காரனை சுத்தியல்காரனுக்குப் பின்னே குனிந்து நிற்கும்படியும் உத்தரவிட்டான். எல்லோரும் மூச்சுக்காட்டாது, கண்வெட்டாது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இராமையா மெத்த நுணுக்கமாக கீரிப்பொறியின் வாயில்கதவைச் சற்று மேலே உயர்த்தினான்... கீரியின் மனத்தில் கரவு ஏற்பட்டிருக்க வேண்டும். அது திடீரென எச்சரிக்க அடைந்து, ஆடாது, அசையாது நின்றது. அதனை ஈர்ப்பதற்காக இராமையா இன்னும் ஓர் இம்மி கதவை உயர்த்தினான். கீரி மின்னல் வேகத்தில் அந்த ஈவினுள் பாய்ந்தது. இராமையா படாரெனக் கதவை இறக்கி, கீரியை நெரித்துப் பிடித்துக்கொண்டான். கீரியின் கழுத்து கதவின்கீழ் அகப்பட்டுக்கொண்டது. தலை கதவுக்கு வெளியே, உடல் கூட்டின் உள்ளே அகப்பட்ட நிலையில் கீரி திணறிக்கொண்டிருந்தது. ஆட்கள் எல்லோரும் ஆ... ஊ... என்று கத்திக்கொண்டு பொறியைச் சூழவே, இராமையா அவர்களை அதட்டி விலகிநிற்கச் செய்தான்.
குந்தியிருந்த சுத்தியல்காரனிடம் “போடடா மண்டையிலே!” என்றான் இராமையா. அவன் சுத்தியலை ஓங்கி கீரியின் மண்டையில் மடார், மடார் என்று அடித்தான். பார்வையாளர்கள் ஆ... ஊ... என்று கத்திக்கொண்டு விலகி ஓடினார்கள். கீரியோ அந்த ஆற்றிவு படைத்த மனிதர்களின் கொடுமை தாங்காது செயலிழந்து கொண்டிருந்தது. ஆனால் அதன் வன்மம் சற்றும் குன்றவில்லை. இராமையா தலையசைத்தவுடன் குனிந்துநின்ற குத்தூசிக்காரன் கிடுகைத் துளைப்பதுபோல் கீரியின் கழுத்தைத் துளைத்தான். நைந்துபோயிருந்த கீரியின் கழுத்தில் குத்தூசி தங்குதடையின்றி ஏறியது... அப்பொழுது அந்த மூன்று பேரையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் “ஐயோ பாவம்... ஐயோ பாவம்...” என்று கத்திக்கொண்டு விலகி ஓடினார்கள்.   
கட்டையடியில் கீரிகள் கொன்றுகுவிக்கப்படும் சேதி அக்கம் பக்கம் எல்லாம் காட்டுத்தீ போல் பரவியது. பிட்டியடியில் இறைச்சிக்கடை வைத்திருக்கும் நவட்டி கட்டையடிக்கு ஓடிவந்து கொலையுண்ட கீரிகள் எல்லாவற்றையும் பொறுக்கிக்கொண்டு போனான். அவனிடம் “ஏனடா உனக்கு கீரிகள்?” என்று கேட்டார் விதானையார். “ஐயா, மருந்துக்கு, ஐயா” என்று விதானையாரைப் பார்க்காமலேயே பதில் சொன்னான் நவட்டி! அன்று முதல் நவட்டியிடம் இறைச்சி வாங்குவதை கட்டையடிவாசிகள் நிறுத்திக் விட்டார்கள்.
கட்டையடியில் கீரிகளின் கொட்டம் அடக்கப்பட்ட பிற்பாடு கோழிகளின் கை ஓங்கிவிட்டது. கட்டையடியின் பொருள்வளம் மேம்பட்டது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. நீலப்பிள்ளை கட்டையடியின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார்.
மாரி வந்தது. மழை பொழிந்தது. தாந்தோன்றித்தனமாகத் திரிந்த கோழிகள் எல்லாம் மழையில் நனைந்து நோயைத் தேடிக்கொண்டன. ஒரு கோழிக்கு வருத்தம் என்பதை இலகுவில் கண்டுபிடிக்கலாம். அது நின்ற இடத்தில் நிற்கும். ஒன்றும் தின்னாது. கண் மூடியிருக்கும். வயிறு கழியும். பூவில் கரும்புள்ளிகள் காணப்படும். இதையே எல்லோரும் “கோழி தூங்குகிறது” என்று குறிப்பிட்டார்கள். அதாவது “கோழி தூங்குகிறது” என்றால், கோழிக்கு ஏதோ நோய் பிடித்துவிட்டது என்பது கருத்து.   
தன்னிடம் கொண்டுவரப்பட்ட நோய்க்கோழிகளுக்கு நீலப்பிள்ளை ஊசிமருந்து ஏற்றினார். சில கோழிகள் குண்மடைந்தன. பல குணமடையவில்லை. குண்மைடையாதவை ஈற்றில் செத்துவிடும். ஆகவே அவை சாவதற்கு முன்னரே கறிச்சட்டிக்குள் போய்விட வேண்டும் என்று நீலப்பிள்ளை அறிவுறுத்தி வந்தார். அதனைக் கேள்விப்பட சுப்பு வாத்தியார்,
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
                                               என்ற குறளை உதிர்த்து நீலப்பிள்ளையைச் சீண்டினார். சூடுபட்ட நீலப்பிள்ளை அதுவரை சுப்பு வாத்தியாருடன் வைத்திருந்த இராசரீக உறவைத் துண்டித்துக்கொண்டார்.
காலப்போக்கில் நோய்க்கோழிகளின் எண்ணிக்கை நலமான கோழிகளின் எண்ணிக்கையை விஞ்சிவிட்டது. அதனால் முட்டைகளின் எண்ணிக்கை சரியவே, கட்டையடையின் பொருள்வளம் குன்றத் தொடங்கியது.
இதற்கிடையே இராமையா பாம்பு கடித்துச் செத்துப் போனான். இரவு நுங்கு பொறுக்கப் போனவன், அம்மன் கோயில் முகப்பில் படுத்து உறங்கிவிட்டான். அவனை உறக்கத்தில் வைத்தே பாம்பு கடித்திருக்கிறது. “இராமையா விழித்திருந்தால், பாம்புதான் செத்திருக்கும்” என்று சுப்பு வாத்தியார் செப்பியதை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். இராமையாவின் இறப்பு கட்டையடியின் பேரிழப்பாகவே கருதப்பட்டது!
கொஞ்சநாள் கழித்து அம்மன் கோயில் பின்புறத்தில் ஒரு புடையன் பாம்பு அடித்துக் கொல்லப்பட்டது. கட்டையடி முனி குடியிருக்கும் காட்டுமரத்தில் அதனைத் தூக்கிவிட்டார்கள். கிட்டத்தட்ட 8 அடி நீளம். அதுவே இராமையாவைக் கொன்ற பாம்பு என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். கீரியினம் கொடுத்த சாபத்தினால்தான் இராமையாவைப் பாம்பு கடித்துக் கொன்றிருக்கிறது என்று எல்லோரும் நம்பினார்கள். எவ்வாறாயினும் “பாம்படி மன்னனையே பாம்பு கொன்றுவிட்டதே!” என்று அங்கலாய்க்காதோர் எவருமே இல்லை.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு கட்டையடிக்கு வந்த நவட்டியையும் பாம்பு கடித்துவிட்டது. பாம்பினால் கடியுண்ட தன் கால்விரலை அவன் சீவி எறிந்துவிட்டான். அத்துடன் பாம்பையும் பிடித்து, ஒரு மிட்டாய்ப் போத்திலுக்குள் விட்டு மூடிக்கொண்டு போய்விட்டான். அது நாகபாம்பு.
கட்டையடியில் எஞ்சியிருந்த கோழிக்குஞ்சுகள் திடீர் திடீரெனக் காணாமல் போயின. அது கோழிக் கள்ளர்களின் கைவரிசை என்று எல்லோரும் நம்பினார்கள். அவர்களுக்கு நவட்டியில் ஐமிச்சம். “நவட்டி கோழியையும் கொண்டு போவான், கோழியைப் பிடிக்கும் கீரியையும் கொண்டு போவான்” என்றார் சுப்பு வாத்தியார்.
இதற்கிடையே இதுவரை தப்பியிருந்த நீலப்பிள்ளையின் சொந்தக் குஞ்சுகளுள் இருபது இருபத்தைந்தக் காணவில்லை. நாள் முழுவதும் வேவுபார்த்ததில் துப்புத் துலங்கியது. ஒரு முத்திரைப் புடையன் ஒரு துவாரத்தின் ஊடாகக் கூட்டினுள் புகுந்து, அத்தனை குஞ்சுகளையும் விழுங்கி, குடல்வீங்கி, அதே துவாரத்தின் ஊடாக வெளியே வரமுடியாது ஒதுங்கிப் பதுங்கிச் சுருண்டு கிடந்தது!
எல்லோருக்கும் பளிச்சென்று ஒரு சங்கதி புரிந்தது. கட்டையடியில் பாம்புகள் பெருகிவிட்டன! பாம்புகளைக் கட்டுப்படுத்தி வந்த கீரிகள் ஒழிக்கப்பட்டமையே அதற்கான தலையாய காரணம். அதாவது எங்கள் மக்கள் இயற்கையின் சமநிலையை, பிராணிகளின் சமநிலையைக் கெடுத்துவிட்டார்கள்! கோழிக்குஞ்சுகளைக் காப்பாற்றுபதற்காக கீரிகளை ஒழிக்கப்போய் பாம்புகளைப் பெருக்கிவிட்டார்கள்! இப்பொழுது அந்தப் பாம்புகள் ஆட்களையும் கோழிக்குஞ்சுகளையும் கோழிமுட்டைகளையும் தீர்த்துக்கட்டிக் கொண்டிருந்தன.   
சட்டப்படி விதானையாரே கட்டையடியின் ஆட்சியாளர். பாம்புகள் அவருடைய உயிரையும் ஆட்சியையும் அச்சுறுத்தி வந்தன. அதை நினைக்கும்பொழுது அவருக்கு நீலப்பிள்ளைமீதும், சுப்பு வாத்தியார்மீதும் பொல்லாத கோபம் வந்தது. விதானையார் இரண்டு பேருக்கும் எதிராக வெகுண்டெழுந்து விட்டார். கட்டையடியில் விதானையாரின் தயவில்லாமல் எந்தச் சீமானும் வாழமுடியாது. ஆகவே நீலப்பிள்ளை விழுந்தடித்துக்கொண்டு விதானையார் வீட்டுக்கு ஓடினார். சுப்பு வாத்தியார் நீலப்பிள்ளையை முந்திவிட்டார். வாத்தியார் ஏற்கெனவே விதானையாரின் காலில் விழுந்துவிட்டார். வாத்தியாரை விதானையார் காலால் இடறிவிட்டு, நீலப்பிள்ளையைக் கழுத்துப் பிடியாகப் பிடித்து வைத்துக்கொண்டு கர்ச்சித்தார். விதானையார் கர்ச்சித்ததைக் கேட்ட குடிமக்கள் அனைவரும் திரண்டுவந்து விதானையார் வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள். “விதானையார் ஐயா, வாத்தியாரையும் நீலப்பிள்ளையையும் வெளியே விடுங்கோ; நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்” என்று அவர்கள் ஆர்ப்பரித்தார்கள். வாத்தியாரும், நீலப்பிள்ளையும் கலவரமடைந்தார்கள். விதானையார் கூட சற்றுத் தடுமாறினார். விதானையார் நடவடிக்கை எடுக்காவிட்டால், வெளியே ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் இரண்டு பேரையும் தாக்குவது நிச்சயம்.
“உங்கள் இரண்டு பேரையும் பாம்பு தீண்ட முன்னதாக ஆட்கள் தீண்டப் போகிறர்கள். நீங்கள் இனிமேல் வெளியே தலைகாட்ட முடியாது” என்றார் விதானையார்.   
“நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள், விதானையார்?” என்று கேட்டர் நீலப்பிள்ளை
“நீர் உடனடியாக இடம்மாறிப் போய்விட வேண்டு” என்றார் விதானையார்.
“நான்...” என்று இழுத்தார் வாத்தியார்.  
“நீர் இப்பொழுதே படிப்பித்தலை நிற்பாட்ட வேண்டும்” என்றார் விதானையார்.

விதானையாரை மீறி ஒன்றும் செய்ய முடியாது. இரண்டுபேரும் சம்மதம் தெரிவித்தார்கள். அவர்களை வீட்டுக்குள்ளே இருக்கச் சொல்லிவிட்டு விதானையார் வெளியே போனார். அப்பொழுது வாத்தியார் நீலப்பிள்ளையைப் பார்க்காமலேயே “பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிவிட்டது” என்று முணுமுணுத்தார். உடனே நீலப்பிள்ளையும் வாத்தியாரைப் பார்க்காமலேயே “அந்தக் குரங்கையும் கீரியைப்போலத் தீர்த்துக்கட்டலாமே...!” என்று குத்தலாகச் சொன்னார். மேற்கொண்டு இருவரும் வாய் திறக்கவில்லை.
விதானையார் அடியாட்களுடன் போய் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அதட்டிக் கலைத்துவிட்டுத் திரும்பி வந்தார். நீலப்பிள்ளை விடைபெற எழுந்தார். விதானையார் அவரை இருக்கச் சொன்னார்.
“நீங்கள் இரண்டுபேரும் இங்கேயே தங்கியிருப்பது நல்லது. இராத்திரி ஆனதும் அவரவரே எழுந்து ஆளுக்கொரு அடியாளைப் பிடித்துக்கொண்டு தலைமறைவாகிவிட வேண்டும். இனிமேல் இங்கே வரவும் கூடாது. எவர் கண்ணிலும் படவும் கூடாது” என்றார் விதானையார்.
நீலப்பிள்ளை இடமாற்றம் எடுத்துக்கொண்டு கிளிநொச்சிக்குப் போய்விட்டார். வாத்தியார் தனது வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார். கட்டையடியில் கோழிப்பண்ணைகள் எல்லாம் விறகுக்காலைகளாய் மாறிவிட்டன. இப்பொழுது எவரும் வியாபாரத்துக்காக கோழி வளர்ப்பதில்லை. மீண்டும் சொந்தத் தேவைக்காகவே எல்லோரும் நாட்டுக்கோழி வளர்த்தார்கள்.
கட்டையடியில் விதானையாரின் உத்தரவுப்படி கீரிவதை தடைசெய்யப்பட்டது. பழையபடி கீரிகள் பெருகவே பாம்புகள் கடுப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பொருள்வளத்தைப் பொறுத்தவரை கட்டையடி தன்னிறைவு கண்டால் போதும், மேலதிக பொருள்வளம் தேவையில்லை என்ற கொள்கை வலுப்பெற்று வந்தது.  
கீரிகளைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று புத்திபுகட்டிய சுப்பு வாத்தியாரை எல்லோரும் “தப்பு வாத்தியார்” என்றே குறிப்பிட்டு வந்தார்கள்.
_________________________________________________________________________
மணி வேலுப்பிள்ளை, கண்ணில் தெரியுது வானம், 2001

No comments:

Post a Comment