1904 1997
“பூனை எலியைப் பிடிக்கும்.” இதில் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது:
“பூனை எலியைப் பிடிக்கிறதா அல்லவா என்பதே முக்கியம், பூனை கறுப்பா வெள்ளையா என்பது முக்கியமல்ல!”
அந்தத் தத்துவத்தை உதிர்த்தவர்: சீனப் பெருந் தலைவர் தெங் சியாவோபிங். இது ஆர் குத்தியாயினும்
அரிசி ஆகட்டும் என்ற பழமொழி மூலம் ஏற்கெனவே தமிழுலகம் அறிந்த தத்துவமே!
புட்டி: தெங்-சியாவோபிங் 1904
ஆகஸ்ட் 22-ம் திகதி சீன தேசத்தில், சிச்சுவான் மாகாணத்தில், பைவன்சுன் கிராமத்தில் பிறந்தார். தெங்-சியாவோபிங் என்பது சீன மொழியில் “சின்னப்
புட்டி” என்று பொருள்படும். 1976-ல் தலைவர் மாஓ மறைந்த பிற்பாடு தெங் தலைமை ஏற்பதை
விரும்பியவர்கள் சின்னஞ் சிறு புட்டிகளை மரங்களில் கட்டித் தொங்கவிட்டுத் தமது விருப்பத்தை
வெளிப்படுத்தியதுண்டு. அதே வேளை 1989-ல் தியனன்மன் சதுக்கத்தில் (சொர்க்க வாயிலில்)
மாணவர்கள் கொல்லப்பட்டபொழுது கொதிப்படைந்தவர்கள் சின்னஞ் சிறு புட்டிகளைச் சிதறடித்து,
தமது கொதிப்பைப் புல்பபடுத்தியதுமுண்டு!
குள்ளம்: மாஓ சராசரிச் சீனரைவிட
உயரங் கூடியவர். தெங் உயரங் குறைந்தவர் (4’- 10”). 1957-ல் மாஸ்கோவில்
வைத்துப் பிரதமர் குருசேவ் இந்தக் குள்ளரை எள்ளி நகையாடியபொழுது மாஓ குறுக்கிட்டு,
“இந்தக் குள்ளப் பயலைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.....சியாங்கை சேக்கின்
10 இலட்சம் படையினரை முறியடித்த பயல்.....முன்னுக்கு வரக்கூடிய பயல்.....” என்று எச்சரித்தார்.
தெங்கின் மண்டையைக் குறைத்து மதிப்பிட்டவர்களுள் மாஓவின் கடைசி மனைவி சியாங் சிங் அம்மையார்
முக்கியமானவர். “தொப்பிக்கே பொருந்தாத சொத்தித் தலையர்” என்று தெங்கைப் பழித்தவர் அம்மையார்!
கல்வி: மாஓவைப் போலவே தெங்கும்
வசதி படைத்த பௌத்தக் குடும்பத்தில் உதித்தவர். ஆதலால் கல்வி பயிலும் வசதி படைத்தவர்.
1920-ல் படித்துக்கொண்டு வேலைசெய்யும் திட்டத்துடன் அவர் பிரான்சுக்குப் புறப்பட்டார்.
பாரிசு மாநகரத்து கிறெய்சோ (Creusot) எஃகு-உருக்குத் தொழிற்சாலையிலும், றெனோல் (Renault)
வாகனத் தொழிற்சாலையிலும்
அவர் வேலை செய்தார். அவரை விட அவருடைய கரி கோலியின் உயரம் அதிகம் என்று அவருடன் வேலை செய்தவர்கள் கேலி செய்ததுண்டு. 1925-ல் பாரிசில்
வைத்தே சூ என்லாயும் தெங்கும் முதன்முதல் சந்தித்துக் கொண்டார்கள். சூவும் பாரிசில்
படித்துக்கொண்டும் வேலை செய்துகொண்டும் இருந்தார். சூவின் மாடிக் கூடத்தில் தெங் சிறிது
காலம் தங்கியிருந்தார். பொதுவுடைமையாளராகிய சூவின் உறவினால் தெங்கும் பொதுவுடைமையாளரானார்.
1926-ல் தெங் பாரிசை விட்டு மாஸ்கோ சென்று, அங்கு சிறிது காலம் பயின்று, 1927-ல் சீனா திரும்பினார்.
பழக்கம்: மாஓவைப் போலவே தெங்கும்
ஒரு நீச்சல் மன்னர்,
ஒரு புகைத்தல் பிரியர். மாஓ இடைவிட்டுப் புகைப்பவர், தெங் இடைவிடாது புகைப்பவர்-முதல் வெண்சுருட்டில் அடுத்த வெண்சுருட்டை மூட்டிப்
புகைப்பவர். அத்துடன் (bridge) சீட்டாட்டம் என்றால் சீமானுக்கு
ஒரே கொண்டாட்டம். ஒரு தடவை தெங் தலைநகர் பீஜிங்கிலிருந்து 1,200 மைல் தூரத்தில் இருந்த
வேளை, அங்கு தகுந்த சீட்டாடிகள் இல்லாதபடியால், தலைநகரிலிருந்து
தனி விமானத்தில் தனது வாடிக்கையான கூட்டாளிகளை வரவழைத்துச் சீட்டாடியதுண்டு!
பதவி: 1934-ம், 35-ம் ஆண்டுகளில்
மேற்கொள்ளப்பட்ட நீண்ட பயணம் உட்பட மாஓவின் தலைமையில் நடந்தேறிய போராட்டங்கள் அனைத்திலும்
மாஓவே மெச்சும் வண்ணம் தெங் அரும் பெருஞ் சாதனைகளை நிகழ்த்தினார். 1950-ல் மாஓ இந்தக்
குள்ள மாமறவனைத் தென்மேற்குச் சீனாவில் தமது பதிலாட்சியாளராய் அமர்த்தினார். 1952-ல்
மாஓ மறுபடியும் தெங்கைத் தலைநகருக்கு வரவழைத்து, துணைப் பிரதமராக்கி,
பொருளாதார-நிருவாகப் பணிகளில் ஈடுபடுத்தினார். அதன் பெறுபேறாக ஏற்கெனவே
பொருளாதாரப் பணிகளைக் கவனித்து வந்த ஜனாதிபதி லியு சாசியுடனும், நிருவாக அலுவல்களைக் கவனித்து வந்த பிரதமர் சூ என்லாயுடனும் இணைந்து செயற்படும்
வாய்ப்பு தெங்கிற்குக் கிட்டியது. 1954-ல் மாஓ தம் உள்ளங் கவர்ந்த குள்ளரைச் சீனப்
பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் பதவிக்கு உயர்த்தினார்.
கொள்கை: 1965-ல் ஜனாதிபதி லியு
பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை முன்வைத்தார். அவை முதலாளித்துவத்துக்கு
இட்டுச்செல்லும் என்று நினைத்து வெகுண்டெழுந்த மாஓ, லியுவை “ஒரு முதலாளித்துவவாதி” என்று சாடினார்.
“முதலாளித்துவப் போக்கு புலப்படுவது அப்படி ஒன்றும் பயங்கரமான சங்கதி அல்ல” என்று லியு
பதிலடி கொடுத்தார். போதாக்குறைக்கு லியுவை ஆதரித்த தெங், “பூனை
எலியைப் பிடிக்கிறதா அல்லவா என்பதே முக்கியம், பூனை கறுப்பா வெள்ளையா
என்பது முக்கியமல்ல” (கொள்கையால் பயன் விளைகிறதா அல்லவா என்பதே முக்கியம், அது தனியுடைமைக் கொள்கையா பொதுவுடைமைக் கொள்கையா என்பது முக்கியமல்ல) என்று
தர்க்கித்தார். அதாவது மாஓ வளர்த்த பூனை அவருக்குக் குறுக்கே ஓடித் துர்க்குறி காட்டிவிட்டது!
புறவாழ்வு: தகர்த்தெறியுங்கள் தலைமையகத்தை
என்று ஆணை இட்டுவிட்டார் மாஓ. 1966-ல் மாஓ அப்படி ஆணை இட்டது முதல் 1976-ல் அவர் மாளும்
வரை நிகழ்ந்த கலாசாரப் புரட்சிக் காலப்பகுதியில் மாஓவின் உடந்தையுடன், சியாங் சிங் அம்மையார்
உள்ளடங்கிய நால்வர் குழுவினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட செங் காவலர்களின் சித்திரவதைகளுக்கு
உள்ளாகியவர்களுள் லியுவும் தெங்கும் முக்கியமானவர்கள். மாஓவுடன் நேரடியாக மோதியபடியால்
லியு சிறைசெல்ல நேர்ந்தது. ஜனாதிபதி லியு சிறைக் கைதியாகவே மடிந்தார். உருத்திராட்சப்
பூனையாகிய தெங் பதவி குறைக்கப்பட்டு, ஜியாங்சி மாகாணத்தில் ஓர்
உழவு யந்திரத் தொழிற்சாலையில் உடல் வேலைக்கு அமர்த்தப்பட்டார். பதவி குறைப்பு அவர்
உள்ளத்துள் வெப்பியாரத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும் “கலாசாரப்
புரட்சிக் காலப்பகுதியில் நால்வர் குழு என்னைக் கொல்லப் பார்த்தது, தலைவர் மாஓவே என்னைக் காத்தது” என்று தெங் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
மறுவாழ்வு: 1972-ல் பிரதமர் சூவைப்
புற்றுநோய் சூழ்ந்து கொண்டது. அவருடைய அலுவலகக் கோப்புகளை நீட்டுக்கு அடுக்கினால் அவை
மாபெருஞ் சீன மதிலையே விஞ்சிவிடும்! ஆதலால் சூவின் பளுவைக் குறைப்பதற்கு தெங்கை மீண்டும்
பீஜிங்கிற்கு வரவழைத்து,
துணைப் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு ஆணை பிறப்பித்தார் மாஓ. தெங்கை
மீண்டும் பதவியில் அமர்த்தும் தறுவாயில் மாஓ மொழிந்த சொற்கள் திட்டவட்டமானவை: “தெங்
ஒரு திறமைசாலி..... அவர் பஞ்சினுள் பொதிந்த ஊசி போன்றவர்..... கருத்துக்கள் மிகுந்தவர்.....
அவர் மடைத்தனமாக மோதுவதில்லை..... பொறுப்புணர்ச்சி மிகுந்தவர்..... அவருடைய கணிப்புகள்
முற்றுமுழுதானவை..... நடவடிக்கைகள் திட்பமானவை.....” என்று மாஓ தெங்கைப் போற்றினார்.
குற்றச்சாட்டு:
மூப்பும் பிணியும் பையப்பைய மாஓவையும் பீடிக்கவே செய்தன. மாஓவுக்கும் வெளியுலகுக்கும்
இடையே அவருடைய பெறாமகன் மாஓ யுவாங்சின், தாதி சாங் யுவெங், மெய்காவலர்
காங் செங், மொழிபெயர்ப்பாளர்கள் வாங் கைறொங், நான்சி ராங் ஆகியோர் இடம்பிடித்துக் கொண்டார்கள். “கலாசாரப் புரட்சிக் காலப்பகுதியில்
கிளர்ச்சியாளர்கள் மூட்டிய தீயை எல்லாம் பிரதமர் சூ அணைத்துவிட்டார்.....நீங்கள் ஆக்கியவற்றை
எல்லாம் அழிப்பதற்குச் சூவும் தெங்கும் திட்டம் தீட்டியுள்ளார்கள்.....தெங் வெல்லுக்கு
வெல்லு வைத்தியசாலைக்குச் சென்று சூவிடம் உத்தரவு பெற்று வருகிறார்.....தெங் உங்களிடம்
வந்து உத்தரவு பெறுவதில்லை.....பிரச்சனைக்கு மூல காரணம் தெங்.....அவர் உங்களைப் பற்றியோ
கலாசாரப் புரட்சியைப் பற்றியோ வாய் திறப்பதில்லை.....அவர் லியுவையும் சூவையும் போற்றுகிறார்.....உற்பத்தி,
உற்பத்தி என்று கத்தித் திரிகிறார்.....” என்று அவர்கள் ஆள் மாறி மாஓவிடம்
ஓதினார்கள்.
பழி: 1976 ஜனவரி 8-ம் திகதி
பிரதமர் சூ மறைந்தார். தெங் இரங்கலுரை நிகழ்த்தினார். சூவின் இறுதிச் சடங்கில் மாஓ
கலந்து கொள்ளவுமில்லை,
இரங்கல் செய்தி வெளியிடவுமில்லை. எனினும் ஏறத்தாழ 50 ஆண்டுகள் தமது பிரதமராகவும்
சாணக்கியராகவும் திகழ்ந்த அமரர் சூவை மாஓ அடிக்கடி நினைந்துருகியதுண்டு. கிங் மிங்
(சித்திரைப்) பருவத்தில், தியனன்மன் சதுக்கத்தில் அமரர் சூவை
நினைவுகூர்வதற்குத் திரண்ட இலட்சக் கணக்கான பொது மக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே
ஏற்பட்ட மோதலில் ஆயிரக் கணக்கானோர் மாண்டார்கள்;
மாண்ட பழி தெங் மீது சுமத்தப்பட்டது. அப்பொழுது மாஓவைத் தடுத்தாட்கொள்வதற்குப்
பிரதமர் சூ உயிரோடு இருக்கவில்லை. மாஓவைத் தடுத்தாட்கொள்ளும் ஆற்றல் வேறெவருக்கும்
இருந்ததில்லை. மாஓ மீண்டும் பூனைக்குச் சூடு போட்டுவிட்டு, குவா
குவோபெங்கைப் பதவியில் அமர்த்தினார்.
வழித்தோன்றல்: பிரதமர் சூ தம்மை வருத்தம்
பார்க்க வந்த சேனாதிபதி யி ஜியான்யிங்கிடம்
“தெங்கே எனது வழித்தோன்றல்” என்று வலியுறுத்தியிருந்தார்.
1976 செத்தம்பர் 9-ம் திகதி மாஓ மறைந்த பிற்பாடு சூவின் ஆசையை யீ நிறைவேற்றி வைத்தார்.
1977ல் தெங் சீனாவின் பெருந் தலைவரானார். ஆனைக்கு ஒரு காலம், பூனைக்கு ஒரு
காலம்!
தெங்கின் கருத்துக்கள் சில வருமாறு:
மாஓவின் சாதனைகள் அசாதாரணமானவை, தவறுகள் சாதாரணமானவை.
மாஓ சொன்னது சரி, செய்தது பிழை.
மாஓ ஒரு மனிதர், மாஓ ஒரு கடவுள்
அல்லர்.
மார்க்சியம் ஒரு தத்துவம், மார்க்சியம் ஒரு
மதம் அல்ல.
பொதுவுடைமை என்பது பொதுவறுமை ஆகாது.
அரசியல் ஒழிக, பொருளியல் எழுக.
சொல் மங்குக, செயல் ஓங்குக.
ஆற்றலுக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற கூலி.
உண்மையின் உரைகல் நடைமுறை.
நிகழ்விலிருந்து உண்மையை அறிக.
செல்வம் சிறப்புத் தரும்.
புதுமொழி: தெங்கின் மேற்படி கூற்றுக்களுள்
மார்க்சின் கூற்றுக்களும் மாஓவின் கூற்றுக்களும் பொதிந்துள்ளன. எனினும் தெங் தீட்டிய
மரத்தில் கூர் பார்க்கத் தவறவில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் தெங்கின் பெயர்போன
கூற்று: “பூனை எலியைப் பிடிக்கிறதா அல்லவா என்பதே முக்கியம், பூனை கறுப்பா
வெள்ளையா என்பது முக்கியமல்ல.” இதே கருத்தை வலியுறுத்துவதற்கு தெங் கையாண்ட இன்னொரு
கூற்று: “உண்மையின் உரைகல் நடைமுறை.” உண்மையில் இது தெங் மாஓவிடமும், மாஓ மார்க்சிடமும், மார்க்ஸ் பழமொழியிடமும் இரவல் பெற்ற
புதுமொழி. John Simpson தொகுத்த The
Concise Oxford
Dictionary of Proverbs நூலின்படி The proof of the
pudding is in the eating (தின்பதால் தெரியும் பணியாரத்தின்
திறம்) என்ற பழமொழி 1300-ம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. மார்க்ஸ் இலண்டனில் வைத்து
இந்தப் பழமொழியை அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. பழமொழியில் புதுமொழி கண்டவர் மார்க்ஸ்!
சந்தை: சீனா உட்பட முதலாளித்துவம்
ஓங்கிய இன்றைய உலகில் அடிக்கடி அடிபடும் சொல்-தொடர்கள்: சந்தைப் பொருளாதாரம், கட்டுப்பாடற்ற
போட்டி, சுதந்திர வர்த்தகம்.....இவை யாவும் ஒத்த சொல்-தொடர்கள்.
தமிழ் கூறு நல்லுலகைப் பொறுத்தவரை இத்தகைய சொல்-தொடர்களில் எதுவித புதுமையும் இல்லை.
கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும் என்பது தமிழ்ப் பழமொழி அல்லவா!
விமர்சனம்: குருசேவ் ஸ்டாலினைச் சாடியதிலிருந்து
பாடம் கற்ற மாஓ “நூறு பூக்கள் மலரட்டடும், நூறு நெறிகள் பிறக்கட்டும்” என்று ஆணையிட்டுக்
கருத்துச் சுதந்திரம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களினால் தமது தலைமை
ஆட்டங் காண்பது போல் தென்படவே, மாஓ பூக்களையும் கொய்து,
நெறிகளையும் நெரித்துவிட்டார். அது போலவே தெங்கும் சுவரின்றிச் சித்திரம்
வரைய இயலாது எனக் கண்டு, “குடியாட்சி மதிலுக்கு” (கருத்துச் சுதந்திரத்துக்கு)
அடிகோலினார். அப்புறம் சிறிது காலம் மதில் மேல் பூனை போல் அமர்ந்திருந்தார். ஈற்றில்
மதில் மேல் விளம்பரம் ஒட்டாதீர் என்று கட்டளை இட்டுவிட்டார்!
அதிபதி: மாஓ ஒன்றே சூரியன் என்றே சொன்னவர். மாஓ அன்றே சொன்னதை தெங் நன்றே கேட்டவர்.
எனவே மாஓ, ஜனாதிபதி லியுவையும் பாதுகாப்பு அமைச்சர் பெங் தீகுவாவையும் வெறும் வால்வெள்ளிகளாய்
உதிரச் செய்தது போலவே, தெங்கும் கட்சிச் செயலாளர் கூ யாவோபாங்கையும்
பிரதமர் சாவோ சியாங்கையும் வால்வெள்ளிகளாய் உதிரச் செய்துவிட்டார்.
பலி: 1989-ல் தியனன்மன் சதுக்கத்தில்
மாணவர்கள் குடியாட்சி உரிமைகள் நாடிக் கிளர்ந்தெழுந்தார்கள். அப்பொழுது சீனாவுக்குச் சென்றிருந்த சோவியத் ஜனாதிபதி கோபச்சேவ்
அந்த மாணவர்களுடன் தொடர்பு கொண்டதற்காக தெங் அவரைக் கோபித்திருப்பார் என்பதில் ஐயமில்லை.
கோபச்சேவ் சோவியத் பேரரசைக் குலைத்த பிற்பாடு கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடைமை அரசுகள்
நிலைகுலைந்தது கண்டு தெங் விழித்துக்கொண்டார். அப்புறம் செஞ் சீன வரலாற்றில் முதல்
தடவையாக மாணவர்கள் மீது செஞ் சேனை ஏவி விடப்பட்டது.
சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்த அறிக்கையின்படி ஏறக்குறைய 1,000 மாணவர்கள் பலியானார்கள்.
பூனை கண்ணை மூடிக்கொண்டு இரத்தம் குடித்தது!
துரோகம்: துரோகிகளின் சேவை
புரட்சிக்குத் தேவை என்றார் லெனின். துரோகிகள் இல்லை என்றால் ஒரு சில விசுவாசிகளைத்
துரோகிகளாக்க வேண்டியதுதான்! லெனின் இறக்கும் வரை பாதுகாப்பு அமைச்சராகவும் செம்படைச்
சிற்பியாகவும் திகழ்ந்த துரொஸ்கியை ஒரு துரோகி என்றார் ஸ்டாலின். “சிறந்த பொதுவுடைமையாளராய்
விளங்குவது எப்படி?” என்ற நூலை எழுதிய லியுவை ஒரு பொதுவுடைமைக் குரவர் என்று போற்றியவர் தெங்.
லியுவைத் தமது வழித்தோன்றலாகவும் ஜனாதிபதியாகவும் அமர்த்தியவர் மாஓ. அப்புறம் லியுவை
ஒரு துரோகி என்று தூற்றி, சிறையில் அடைத்து, உணவோ மருந்தோ இன்றி மடிய விட்டவர் மாஓ. கூ யாபோவாங்கைக் கட்சிச் செயலாளராகவும்,
சாவோ சியாங்கைப் பிரதமராகவும் நியமித்தவர் தெங். அப்புறம் இருவரையும்
துரோகிகள் என்று பறைசாற்றிப் பதவிநீக்கியவர் தெங். இருவரும்
பூனைக்கு மணி கட்டப் போய்ப் பூனையிடம் அகப்பட்ட எலிகள்!
மிளகாய்: கலாசாரப் புரட்சிக் காலகட்டத்தில்
சீனாவில் ஒரு விடுகதை பரவியிருந்தது: ஒரு தடவை தலைவர் மாஓ பிரதமர் சூவிடமும் சேனாதிபதி
சூ தேயிடமும், ஒரு பூனையைக் கொண்டு எப்படி மனம்விரும்பி மிளகாயைத் தின்ன வைக்க முடியும்?
என்று கேட்டார். மிளகாய்க்கு இனிப்புத் தடவி ஊட்டினால் பூனை தின்றுவிடும்
என்றார் சூ. பூனையின் வாயை ஒரு குறட்டினால் பிளந்து பிடித்துக்கொண்டு, அதன் தொண்டைக்குள் மிளகாயைத் திணித்துவிட்டால் பூனை விழுங்கிவிடும என்றார்
சூ தே. பூனை மனம்விரும்பி மிளகாயைத் தின்னவேண்டும் அல்லவா? ஆகவே
இருவரின் பதில்களும் மாஓவுக்கு நிறைவளிக்கவில்லை. உங்கள் பதில் என்ன? என்று அவர்கள் மாஓவிடம் திருப்பிக் கேட்டார்கள். ஒரு மிளகாயை முறித்துப் பூனையின்
பின்புறத்தில் உரஞ்சி விடவேண்டும். எரிவு தாங்காது பூனை உடம்பை வளைத்து அதன் பின்புறத்தை
நக்கு நக்கென்று நக்கும் - உறைப்பை நக்கிப் பழகிவிடும். அப்புறம் அது மிளகாயை மனம்விரும்பித்
தின்னத் தொடங்கிவிடும் என்றார் மாஓ!
எலி: கருத்தியலே பொருளியலைத்
தீர்மானிக்க வேண்டும் என்ற மாஓவின் சிந்தனையையே இந்த விடுகதை உணர்த்துகின்றது. லியு, தெங் உட்படச் சீனர்கள் அனைவரும் தமது
சிந்தனையை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும்படி செய்வதற்காகவே மாஓ கலாசாரப் புரட்சியை மேற்கொண்டார்.
எனினும் 1976-ல் மாஓ மாண்ட பிற்பாடு பூனை மீண்டும் எலியைப் பிடிக்கத் தொடங்கிவிட்டது
- பொருளியலே கருத்தியலைத் தீர்மானிக்கலாயிற்று. ஏற்கெனவே உறைப்புக்குப் பழக்கப்பட்ட
பூனை இப்பொழுது இடைக்கிடை மிளகாயில் ஒரு கடி கடிக்கத் தவறுவதில்லை - அதில் பூனை புதிய
சுவை கண்டுவிட்டது (தியனன்மன் படுகொலை)!
புலி: இப்பொழுது பூனை புலியாகிவிட்டது
- சீனா இன்றைய உலகின் மாபெரும் பொருளாதாரப் புலியாகிவிட்டது. மாஓ நாடிய மாபெரும் பாய்ச்சலை
சீனப்புலி பாய்ந்துவிட்டது. மாஓவின் கனவை தெங் நனவாக்கிச் சென்றுள்ளார். பூனையைக் கொண்டு
மிளகாயைப் புசிக்க வைப்பதற்குப் பதிலாக, எலியைப் புசிக்க விட்டதன் மூலமே தெங் அதனைச் சாதித்தார்.
எனினும் தமது கனவு நனவாகிய விதத்தை மாஓ ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதில் ஐயமில்லை. சீனாவில்
மீண்டும் முதலாளித்துவம் தலைதூக்கக்கூடும் என்று மாஓ தமது வாரிசாகிய குவா
குவோபெங்கிடம் தெரிவித்த ஆரூடத்தையே தெங் மெய்ப்பித்துச் சென்றார்!
சிலை: லியு சாசி போன்றவர்கள்
என்னை ஒரு புத்த விக்கிரகமாக்கிப் பூசை அறையில் பூட்டி வைக்க முற்பட்டார்கள் என்று
மாஓ கர்ச்சித்ததுண்டு. எனினும் சர்வாதிகாரத்தின் தலையாய அம்சங்களுள் ஒன்று: ஆள் வழிபாடு.
குருசேவ், தெங் இருவரும் ஆள் வழிபாட்டை அறவே வெறுத்தார்கள். குருசேவ் ஸ்டாலினைக் காரசாரமாகச்
சாடினார். தெங் மாஓவை நாசூக்காக விமர்சித்தார். தெங் மாஓவின் படங்களைச் சிறுப்பித்தார்
அல்லது அகற்றுவித்தார். தியனன்மன் சதுக்கத்தில் இன்று காணப்படும் மாஓவின் படம் அன்று
பன்மடங்கு பெரியதாய் இருந்தது. மறு புறம், தமது படங்கள் பாவிக்கப்படுவதை
தெங் அனுமதிக்கவில்லை. மாஓவின் சின்னங்களுக்குத் தம்மால் நேர்ந்த கதி, தமது சின்னங்களுக்குத் தமது வழித்தோன்றல்களால் நேர்ந்துவிடலாம் என்று தெங்
அஞ்சியிருக்கக்கூடும்.
“மக்கள் என்னை மாபெரும் ஆசான், மாபெரும் தலைவர், மாபெரும் சேனாதிபதி, மாபெரும் மீகாமன் என்று வர்ணிக்கிறார்கள்.
இவற்றுள் வெறும் ஆசான் என்ற அடைமொழி மாத்திரமே நிலைக்கும்” என்று 1970-ல் மாஓ (எட்கார் சினோவிடம்)
தெரிவித்தார். எனினும் இன்றைய சீனாவில் தோழர் மாஓ சேதுங் என்ற பிரயோகம் மாத்திரமே நிலைத்துள்ளது.
குடும்பம்: சீனா என்ற மாபெரும் குடும்பத்தைக்
கட்டியாள்வதில் ஈடுபட்ட மாஓவுக்குத் தமது சொந்தக் குடும்பத்தைக் கட்டியாள்வதற்கு வாய்ப்புக்
கிட்டவில்லை. மாஓவின் புதல்வர்களுள் ஒருவராகிய மாஓ அன்யிங் கொறியாவில் அமெரிக்கரின்
குண்டுத் தாக்குதலுக்குப் பலியான பொழுது அன்யிங்கின் உடலை என்ன செய்வது? என்று கேட்டு
வட கொறியர்கள் சீனாவுக்குச் சேதி அனுப்பினார்கள். அதற்கு மற்றச் சீன வீரர்களின் உடல்களுக்கு என்ன செய்கிறீர்களோ,
அதையே அன்யிங்கின் உடலுக்கும் செய்யுங்கள் என்று மாஓ பதில் அனுப்பினார்
- அன்யிங் வட கொறிய மண்ணில் அடக்கம் செய்யப்பட்டார்!
தெங் குடும்பத்தவர்களின் கதை வேறு. “என் தந்தை: தெங் சியாவோபிங்” என்ற நூலை எழுதிய தெங் றொங் தோழர் தெங்கின் புதல்வி.
பொது அரசியல் திணைக்களத்தில் பணி புரியும் றொங் தனது பிதாவின் தலையாய மொழிவாளராக விளங்கினார்.
பொது அரசியல் திணைக்களமே செஞ்சேனையின் ஆணைப்பீடம். அதற்கும் பல்தொழினுட்பவியல் தாபனத்துக்கும்
(Polytechnologies Inc.) இடையே தொடர்புண்டு. இத்தாபனத்தின்
அதிபர் கீ பிங். இவரே றொங்கின் கணவர், தெங்கின் மருமகன். றொங்கும் பிங்கும் கலாசாரப்
புரட்சிக் காலகட்டத்தில் நாட்டுப் புறத்துக்கு அனுப்பப்பட்ட வேளையில் ஒருவரை ஒருவர்
சந்தித்து, காதலித்து, மணம் புரிந்தவர்கள்.
தெங் ஆட்சி ஏற்றதும் மகளும் மருமகனும் அமெரிக்கா சென்று, சீனத்
தூதரகத்தில் பணியாற்றுகையில், வாசிங்டனில் வாழும் ஆயுத வியாபாரிகளுடன்
தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அப்புறம் சீனா திரும்பி ஆயுத வியாபாரத்தில் இறங்கி
விட்டார்கள். தெங்கின் இன்னொரு மகள் ஓர் ஓவியர். இன்னொருவர் ஒரு பிரதி அமைச்சர். மூத்த
மகன் பூ பெங் கலாசாரப் புரட்சிக் காலத்தில் செங் காவலர்களின் கொடுமை தாங்காது மாடியிலிருந்து
குதித்துத் தற்கொலை செய்யத் தலைப்பட்ட பொழுது கால் முறிந்தவர். சில்லுக் கதிரையில்
நடமாடும் பூ பெங் சீன அங்கவீனர் சமாசத்தின் அதிபராக விளங்குகினார். அமெரிக்காவில் பயின்ற
தெங்கின் கடைக் குட்டி சங்காயிலும் கொங்கொங்கிலும் ஆதனம் கொண்ட ஓர் அரச நிறுவனத்தின்
அதிபர்.....கலாசாரப் புரட்சிக் காலகட்டத்தில் முதலாளித்துவப் பாதையில் செல்லும் இரண்டாம்
இடத்தவர் என்று தெங் சாடப்பட்டமை நினைவு கூரத்தக்கது
(முதலாம் இடத்தவர்: ஜனாதிபதி லியு சாசி).
கணிப்பு: 1973-ல் தெங்கை மக்கள்
விடுதலைச் சேனையின் அதிபதியாக நியமித்த வேளை, அவரிடம் (ஒரு சீனப் பேரரசருக்கு நிகழ்ந்ததை மனத்தில்
வைத்து) “உனக்கு நல்ல முடிவு கிட்டாது. நீ இறந்த பிறகு உனது உடம்புக்குப்
போட்டு வெளுப்பார்கள்” என்று மாஓ தெரிவித்தார். எனக்கு ஏன்
வெளுக்க வேண்டும்? என்று ஏக்கத்துடன் கேட்டார் தெங். “ஏனென்றால் நீ சில தவறுகள் இழைத்திருக்கிறாய். நீ செய்தது 70 விழுக்காடு சரி,
30 விழுக்காடு பிழை” என்றார்
மாஓ. நிம்மதியுடன் தெங் (மாஓவின் கணிப்பின்படி) “சிறந்த மார்க்சிய-லெனினிய
வாதியாகிய ஸ்டாலின் செய்ததும் 70 விழுக்காடு சரி, 30 விழுக்காடு
பிழை அல்லவா?” என்று கேட்டார். மாஓவும் தெங்கும் வாய்விட்டுச்
சிரித்தார்கள். தாம் புரிந்தது 70 விழுக்காடு சரி, 30 விழுக்காடு
பிழை என்பது மாஓவின் சொந்தக் கணிப்பு. ஸ்டாலின் புரிந்ததும் 70 விழுக்காடு சரி,
30 விழுக்காடு பிழை என்பதும் மாஓவின் கணிப்பு. மாஓவின் இவ்விரு கணிப்புகளும்
சரியே என்பது தெங்கின் தீர்ப்பு. தனது சாதனை 50க்கு 50 என்பது தெங்கின் தாழ்மையான கருத்து.
_____________________________________________________________________
_____________________________________________________________________
மணி வேலுப்பிள்ளை 1996-09-09
No comments:
Post a Comment