1890
1969
1965ல் வியற்நாம் அதிபர் ஹோ-சி-மின் சீனாவில் தங்கியிருந்தபொழுது தனக்கு ஓர் அழகிய சீனப்
பெண்ணைத் தேடித்தரும்டி தனது சீனத் தோழர்களிடம் கேட்டுக்கொண்டார். வியற்நாமில்
தன்னுடன் கூடித்திரிவதற்கு அப்படி ஒரு பெண் தேவைப்படுவதாக அவர் காரணம்
தெரிவித்தார். “ஏன்? வியற்நாமிலேயே அழகிய பெண்கள்
இருக்கிறார்களே!” என்று வியந்தார்கள் சீனத் தோழர்கள். “அங்கே என்னை எல்லோரும் ‘ஹோ
மாமா’ என்று விளிக்கிறார்களே!” என்று பதிலளித்தார் ஹோ-சி-மின்.
1922ல் பிரஞ்சு சமூகவுடைமைக் கட்சி (French Socialist Party)
உறுப்பினர் லியோ பால்டே (Leo Poldes) இவ்வாறு
குறிப்பிட்டார்: “எங்கள் வாராந்தக் கூட்டம் ஒன்றில் இந்த நலிந்து மெலிந்த ஆதிவாசி
பின்வரிசையில் அமர்ந்திருப்பதை நான் அவதானித்தேன். ஊடறுக்கும் அவன் கருவிழிகளால்
திடீரென நான் தாக்குண்டேன். வெகுளவைக்கும் வினா ஒன்றை அவன் தொடுத்தான். இப்பொழுது
அது என் நினைவில் இல்லை. தொடர்ந்து கூட்டத்துக்கு வரும்படி அவனைத் தூண்டினேன்.
அவனும் தொடர்ந்து கூட்டத்துக்கு வந்தான். வரவர அவன்மீது எனக்கு வாஞ்சை வளர்ந்தது.
அவன் அடக்கமானவன், ஆனால் கூச்சப்படுபவன் அல்ல. தீவிரமானவன்,
ஆனால் வெறியன் அல்ல. மிகவும் கெட்டிக்காரன். அனைத்தையும்
பரிகசிக்கும் அதேவேளை, தன்னையும் பரிகசிக்கும் அவன்
முரண்நகைச்சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.”
1924ல் சீனாவில் (சோவியத் தூதரக வளவில்) ஹோ குடிபுகுந்தபொழுது அங்கு
பணியாற்றிய ஓர் இரசிய மொழிபெயர்ப்பாளர் (Vera Akimova) அவரை இப்படி விவரித்தார்: “மெலிந்த தோற்றம்.
தொளொதொளொத்த உடை. பார்வையில் கலவரம். வேட்கையும் கவலையும். பிரஞ்சு, ஆங்கிலம், கந்தனீசு, இரசிய
மொழிகளில் மிகுந்த தேர்ச்சி. அனைவருடனும் நன்கு பழகும் இயல்பு. சற்று
நாசூக்காகவும், கருத்தூன்றியும் பழகும் இயல்பு...”
1945ல் சாள்ஸ் பென் என்னும் அமெரிக்க படையணிஞர் (Lieutenant Charles Fenn) எழுதிவைத்த குறிப்பு: “...ஹோவின் அடிப்படைத் தன்மைகள்:- எளிமை, தெளிவு, நிதானம், அந்தரங்கம்,
தூய்மை, சீர்மை, வெளிப்படை,
உடையிலோ வெளித்தோற்றத்திலோ பராமுகம், தன்னம்பிக்கை,
பெருந்தன்மை, உறுதிகலந்த மென்மை, விசுவாசம், தாராண்மை, நேரிய
நட்பு, எவரையும் நாடிச்சென்று உறவாடும் பண்பு, நுணுகிப் பகுத்தாராயும் உள்ளம், அவரை ஏமாற்றுவது
கடினம், வினாத்தொடுக்கத் தயாராக இருப்பவர், ஒருவரின் குணத்தை நன்கு மட்டுக்கட்ட வல்லவர், ஆர்வம்-ஆற்றல்-முயற்சி
மிகுந்தவர், மனச்சாட்சி உடையவர், ஒவ்வொரு
விவரத்திலும் அக்கறை கொண்டவர், சிந்தனைவளம், கலையழகு நாட்டம், இலக்கிய விடாய், நகைச்சுவை... அவர் குறைகள்:- சூழ்ச்சியை நெருங்கும் சாணக்கியம்; சிடுசிடுக்கவும் பிடிவாதம் பிடிக்கவும் கூடும்...”
1890ல் வியற்நாமில் ஹொவாங் துரூ (Hoang Tru) என்னும் ஊரில் பிறந்த
ஹோ இளமையிலேயே தாயை இழந்தவர். ஒரு குற்றச்சாட்டின் பேரில் சிறைசென்று
வீடுதிரும்பிய தந்தை குடிக்கு அடிமையானார். ஹோவின் உடன்பிறப்புகள் ஒவ்வொருவராக
வீட்டைவிட்டு வெளியேறினார்கள். அவரும் 18 வயதில் சைகோன் மாநகருக்குப் புறப்படுந்
தறுவாயில் தந்தையிடம் விடைபெற வந்தார். “என்னை ஏன் பார்க்க வந்தாய்? உன் தாயகத்தை இழந்தபிறகு உன் தந்தையைத் தேடுவதில் பயனில்லையே!” என்று
கர்ச்சித்தார் தந்தை. தந்தையின் கர்ச்சனை தனயனின் செவிப்பறையில் என்றென்றும்
அலைமோதியது. பிரஞ்சுக்காரர் இந்தோசீனா முழுவதையும் கட்டியாண்ட காலம் அது.
சைகோனில் முதல் தடவையாக ஐஸ்கிரீமையும், மின்னொளியையும் கண்டு
வியந்தவர் ஹோ. பிரஞ்சு தேசம் அவர் உள்ளத்தை ஈர்த்தபொழுது, அவருக்கு
ஒரு திண்டாட்டம்: சைகோனில் தனது காதலியுடன் நிலைகொள்வதா, அல்லது
பிரான்சுக்கு கப்பல் ஏறுவதா? கப்பலேற முடிவெடுத்தார் ஹோ!
பிரான்சில் கற்றுத் தேர்ந்து தெளிந்து திரும்பி வந்து போராட முடிவெடுத்தார்.
சைகோன் துறைமுகம் சென்று ஒரு பிரஞ்சுக்
கப்பலில் ஏறி, “ஏதாவது வேலை கிடைக்குமா?” என்று வினவும் துடுக்குத்தனம் ஹோவிடம் பிறக்கவே செய்தது. கப்பல்-தலைவன்
அந்த நோஞ்சானைப் பார்த்து ஐயப்பட்டான். எனினும் அந்த மதிநுட்ப முகம்கண்டு
சமையல்-தலைவனுக்கு உதவியாளாக அமர்த்திக் கொண்டான். 1911 யூன் 5ம் திகதி கப்பல்
புறப்பட்டது. கரிவாளி காவுவது, காய்கறி வெட்டுவது, பாத்திரம் கழுவுவது, சமையலறை பெருக்குவது... ஹோவின்
பணிகள். இந்தோசீனாவிலிருந்து அதே கப்பலில் பிரான்சு திரும்பும் படையினர் இருவருடன்
உறவாடி, அவ்வப்பொழுது அவர்களுக்கு மறைவாக காப்பி தயாரித்துக்
கொடுத்து, அவர்களிடம் பிரஞ்சு நூல்களை இரவல்பெற்று, அவர்களின் உதவியுடன் தனது பிரஞ்சுமொழி, இலக்கிய
அறிவைப் பெருக்கினார். “சில பிரஞ்சுக்காரர்கள் பரவாயில்லை!” என்று காதோடு காதாக
கப்பல்-தலைவனிடம் தெரிவித்தார் ஹோ.
மார்சேல் (Marseilles) துறைமுகத்தில் இறங்கியபொழுது ஹோவின்
கையில் 10 பிராங் மட்டுமே இருந்தது. மின்தொடருந்தும், “திருவாளர்”
(monsieur) என்ற விளிப்பும் அவரை வியக்க வைத்த அதேவேளை,
விலைமாதரின் கடைவிரிப்பும், போக்கிரிகளின்
நடமாட்டமும் அவரை அருவருக்க வைத்தன. “பிரஞ்சுக்காரர் எங்களை நாகரிகப்படுத்த
முன்னர் தங்கள் சொந்த மக்களை ஏன் நாகரிகப்படுத்த முயல்கிறார்கள் இல்லை?” என்று ஹோ அங்கலாய்த்ததுண்டு.
உலக மக்கள் அனைவரும் உடன்பிறப்புகள் என்று புத்தரும், கன்பூசியசும்,
யேசுநாதரும் புகட்டியதை அறிந்தவர் ஹோ. அதேவேளை அவர் ஈராண்டுகளாக
ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்கத் துறைமுகங்களை வலம்வந்த காலத்தில் பிரித்தானியர்
அயர்லாந்தியரையும், அமெரிக்கர் கருப்பினத்தவரையும்
அடக்கியாள்வதைக் கண்டு, தாராண்மை மிகுந்த மக்களாட்சி நாடுகள்
இனவாதத்தைச் சகித்துக்கொள்வதைக் கண்டு, அவை பிறநாடுகளைக்
கட்டியாள்வதைக் கண்டு மனம்கொதித்தார். உலகம் முழுவதும் அவலமும், அடக்குமுறையும் நிலவுவதைக் கண்டு விசனமடைந்தார். கோட்பாட்டுக்கும்
நடைமுறைக்கும் இடையே காணப்படும் வேறுபாட்டைக் கண்டு பதைபதைத்தார்.
1917ல் முதலாம் உலகப் போர் முடிவடையுந் தறுவாயில், அதாவது
இரசியாவில் புரட்சி மூளுந் தறுவாயில் ஹோ பாரிசில் குடியமர்ந்தார். 1919ல் உலக
வல்லரசுகள் பாரிசில் (Versailles மாளிகையில்)
கூடியபொழுது, ஹோவும் தோழர்களும் இந்தோசீனாவுக்கு தன்னாட்சி,
சம உரிமைகள், அரசியற் சுதந்திரம் கோரி
விண்ணப்பித்ததுடன் அவர் வாழ்வில் ஒரு புதிய கட்டம் எழுந்தது. விடுதலை இயக்கங்களால்
மட்டுமல்ல, உளவுப் படையினராலும் உற்றுநோக்கப்படும் போராளி
ஆனார். அயர்லாந்திய, கொரிய இயக்கங்களுடன் உறவாடிய ஹோவை
பிரஞ்சுப் புரட்சியும், இரசியப் புரட்சியும் ஆட்கொள்ளவே,
பிரஞ்சு சமூகவுடைமைக் கட்சியில் (French Socialist Party) அவர் சேர்ந்துகொண்டார்.
பிரஞ்சு சமூகவுடைமைவாதிகள் பிரஞ்சுப் பேரரசினால் கட்டியாளப்படும் நாடுகளின்
விடுதலைக்கு முதன்மை கொடுப்பதை விடுத்து, முதலாளித்துவத்துக்கும்
சமூகவுடைமைவாதத்துக்கும் இடைப்பட்ட போராட்டத்துக்கு முதன்மை கொடுப்பதைக் கண்டு
அவர் விசனமடைந்தார். பிரஞ்சு சமூகவுடைமைக் கட்சிக் கூட்டத்தில் அவர்
உரையாற்றியபொழுது குறுக்கிட்ட தோழர் ஜீன் லாங்கே (Jean Longuet) “கட்டியாளப்படும் நாட்டு மக்களுக்காக நான் குரல் கொடுத்துள்ளேனே...”
என்று தெரிவித்தார். “அமைதி, நாடாளுமன்ற உறுப்பினர்களே!”
என்று அடக்கமாகவும், நிதானமாகவும் பதிலடி கொடுத்து அவர் வாயை
அடக்கினார் ஹோ; நாடாளுமன்றச் சொல், செயலுக்கு
நிகராகாது என்பதை வலியுறுத்தும் வண்ணம்!
மார்க்சியத்தை தனக்கு விளக்கியுரைக்கும்படி ஜீன் லாங்கேயிடம் ஹோ கேட்டபொழுது, ‘மூலதனம்’ நூலை வாசிக்கச் சொன்னார் தோழர். ஓடோடிச்சென்று நூலகத்தில்
இரவல்பெற்ற ‘மூலதனம்” நூலை தனது தலையணையாகப் பயன்படுத்தியதை ஹோ
ஒப்புக்கொண்டுள்ளார். அவர் பழைமையைக் கொண்டு புதுமைக்குப் பசளையிடும் விதம்
கவனிக்கத்தக்கது: “ஆசியக் கண்டத்தவர்களை பிற்பட்டவர்கள் என்று ஐரோப்பியர்கள்
எண்ணுகிறார்கள். எனினும் தற்கால சமூகத்தை முற்றிலும் சீர்திருத்தி அமைக்க வேண்டிய
தேவையை ஆசியக் கண்டத்தவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள். சர்வதேசியம் நாடிய
கன்பூசியஸ் செல்வ சமத்துவத்தைப் புகட்டினார். சர்வதேயக் குடியரசு ஒன்றின் ஊடாகவே
உலக அமைதி ஓங்கும் என்றார். இன்மையைக் குறித்து எவரும் அஞ்சக் கூடாது; சமத்துவம் இல்லை என்பதைக் குறித்தே எவரும் அஞ்ச வேண்டும். சமத்துவத்தின்
ஊடாக எங்கள் ஏழ்மையை ஒழிக்க முடியும். கன்பூசியசின் நெறியை முன்னெடுத்துச்சென்ற
அவர்தம் மாணாக்கர் மென்சியஸ் உற்பத்தியையும், நுகர்வையும்
ஒழுங்குபடுத்துவதற்கு விரிவான திட்டத்தை வகுத்துச் சென்றார். தமது திட்டத்தில்
அவர் எதையுமே தவறவிடவில்லை: சிறார் நலம், பாதுகாப்பு,
கல்வி; பணியாற்றும் மூத்தோரின் கடப்பாடு;
ஒட்டுண்ணித்தனத்துக்கு கடும் தண்டனை; முதியோர்
ஓய்வு; அனைவரும் இன்புற்று நலம்பெற்று வாழ வாய்ப்பளித்தல்...
இதுவே கன்பூசியசின் பொருளாதாரக் கொள்கை. அரசன் எழுப்பிய வினா ஒன்றுக்கு, ‘மக்கள் நலன் முதலாவது; நாட்டு நலன் இரண்டாவது;
அரச நலன் முக்கியமில்லை’ என்று
ஒளிவுமறைவின்றி விடையளித்தார் கன்பூசியஸ்.”
வேர்சாய் (Versailles) மாநாட்டில் ஹோ முன்வைத்த இந்தோசீன
விடுதலைக் கோரிக்கை பொருட்படுத்தப்படவில்லை. பிரஞ்சுப் பேரரசினால் கட்டியாளப்படும்
நாடுகளில் அதன் அரசியற் குறிக்கோள்கள் நடைமுறைக்கு வரப்போவதில்லை என்பதை
உணர்ந்துகொணட ஹோ 1923ல் உளவுப் படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு (சீனக்
கடவுச்சீட்டுடன், வணிகர்-கோலம் பூண்டு) சோவியத் நாடு
போய்ச்சேர்ந்தார்.
லெனினைச் சந்திப்பதற்காகவும், தாயகத்தை அண்டி
நிலைகொள்வதற்காவுமே தான் சோவியத் நாடு சென்றதாக ஹோ குறிப்பிட்டுள்ளார். லெனின்
நோய்வாய்ப்பட்டிருந்தபடியால், அவரைச் சந்திக்க முடியவில்லை.
1923 தைமாதம் லெனின் இறக்கவே, “லெனின் எங்கள் தந்தை, எங்கள் ஆசான், எங்கள் தோழர், எங்கள்
பிரதிநிதி. இனி சமூகவுடைமைக்கு வழிகாட்டி ஒளிபாய்ச்சும் விண்மீன் அவர்” என்று
எழுதிவிட்டு, இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார் ஹோ. சய 30 பாகை
குளிரில் மரத்துப்போன அவர் விரல்கள் கிழமைக் கணக்காய் அவரை வதைத்ததுண்டு.
கட்டியாளப்படும் நாடுகளில் புரட்சி ஓங்கமுன்னர் ஏகாதிபத்திய நாடுகளில் புரட்சி
ஓங்கவேண்டும் என்பது ஸ்டாலின் உட்பட பெரும்பாலான பொதுவுடைமைவாதிகளின் நிலைப்பாடாக
இருந்தது. மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேய பொதுவுடைமைக் கழக மாநாட்டில் (Comintern) தனது நிலைப்பாட்டை ஹோ முன்வைத்தார்: “ஒளிவுமறைவின்றி உரையாற்றும் என்னை
நீங்கள் மன்னிக்க வேண்டும். ஏகாதிபத்திய தாய்நாடுகளைச் சேர்ந்த தோழர்களின் உரைகளை
நான் செவிமடுத்தேன். ஒரு பாம்பை அதன் வாலில் மிதித்துக் கொல்ல அவர்கள்
விரும்புவதாகவே எனக்குப் படுகிறது; அப்படி என்னால் சொல்லாமல்
இருக்க முடியவில்லை. இன்று முதலாளித்துவப் பாம்பின் நஞ்சும் உயிர்மூச்சும்,
ஏகாதிபத்திய தாய்நாடுகளை விட, கட்டியாளப்படும்
நாடுகளிலேயே பெரிதும் தேங்கிக் கிடப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் அல்லவா!”
அவ்வாறு கட்டியாளப்படும் நாடுகளை “ஏகாதிபத்திய சங்கிலியின் மிகவும் பலவீனமான
கண்ணி” என்று லெனினும், “ஏகாதிபத்தியத்தின் மென்தடம்” என்று மாவோவும் வர்ணித்ததுண்டு. அதற்கமைய,
“தேசிய விடுதலையே சமூக விடுதலைக்கு முதற்படி” என்றார் ஹோ.
கட்டியாளப்படும் நாடுகள் விடயத்தில் ஒரு விற்பன்னர் என்னும் அங்கீகாரம்
கிடைத்ததும் “விசாரணைக்கு உள்ளாகும் பிரஞ்சுக் காலனியாதிக்கம்” (Le Proces
de la Colonisation Francaise) என்னும் நூலை பிரஞ்சு மொழியில்
எழுதினார் ஹோ. 1925ல் வெளிவந்த அந்த நூலில் இந்தோசீனாவை பிரஞ்சுப் பேரரசு கட்டியாள்வதையும்,
சுரண்டுவதையும், இந்தோசீன மக்களை
ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாக்குவதையும், பிரஞ்சுத் தாயக
ஆட்சியாளரின் சொல்லுக்கும், கட்டியாளப்படும் இந்தோசீனாவில்
அவர்களின் செயலுக்கும் இடையே காணப்படும் முரண்பாட்டையும் அவர் அம்பலப்படுத்தினார்.
சர்வதேய பொதுவுடைமைக் கழகத்தின் இசைவுடன் தனது தாயகத்தை இன்னும் அண்மித்த சீனாவை அவர்
சென்றடைந்தார். இன்று குவாங்சூ (Guangzhou) எனப்படும் கன்டன்
(Canton) நகரில் தங்கியிருந்தபொழுது தனது உலகளாவிய புரட்சிகர
நிலைப்பாட்டை, அதாவது மார்க்சியக் கோட்பாடு பற்றிய, குறிப்பாக வர்க்கப் போராட்டம் பற்றிய, வரலாற்று
எந்திரம் என்ற வகையில் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி பற்றிய தனது நிலைப்பாட்டை
அவர் தெளிவுபடுத்தினார். மார்க்ஸ் பெரிதும் ஐரோப்பாவைக் கருத்தில் கொண்டு தனது
கோட்பாட்டை முன்வைத்ததை உள்ளத்தில் இருத்தி, “மானுடம்
முழுவதும் ஐரோப்பாவினுள் அடங்கியதல்ல. கீழ்நாட்டு இனவியல் கொண்டு மார்க்சியத்தை
அதன் வரலாற்று அத்திவாரம் வரை வலுப்படுத்தி மீட்டியமைக்க வேண்டும்” என்று
எழுதினார். “எங்கள் வர்க்கப் போராட்டம் என்பது மேல்நாட்டில் நிகழ்வது போன்றதல்ல.
சர்வதேய பொதுவுடைமைக் கழகத்தின் பேரால் சுதேச மக்களிடையே தேசிய உணர்வை நாங்கள்
கிளறிவிட வேண்டும்... இன்றைய நிலையில் இந்தோசீன மக்களின் தேசிய உணர்வாற்றலை
நாங்கள் பயன்படுத்தாவிட்டால், வருங்காலத்தில் எங்களால்
எதுவுமே செய்ய முடியாது போய்விடும்.”
முதலாளித்துவத்தை ஒட்டுமொத்தமாக காலனியாதிக்கமாகவோ, கட்டியாளப்படும்
மக்களை ஒட்டுமொத்தமாக பாட்டாளிகளாகவோ அவர் இனங்காணவில்லை. “எவ்வாறு விருத்தியடைந்த
முதலாளித்துவ நாடுகளில் சமூகப் புரட்சிக்கு நெகிழ்ந்துகொடுக்கும் நிலைமை
காணப்படுகிறதோ, அவ்வாறே கட்டியாளப்படும் நாடுகளில் சமூகப்
புரட்சிக்கு நெகிழ்ந்துகொடுக்கும் நிலைமை காணப்படுகிறது. கட்டியாளப்படும்
நாடுகளில் சமூக விடுதலையே புரட்சியின் தலையாய இலக்காக இருக்க வேண்டும். தேசியமே
எமது நாட்டின் மாபெரும் மூலவளம்... உழவர்களையும் தொழிலாளிகளையும் போலவே சமூக
அடுக்கின் உச்சத்தில் நிலைகொண்ட நிர்வாகிகளும் நிலக்கிழாரும் காலனியாதிக்கத்தால்
தாக்குண்டவர்கள். ஆகவே அவர்களுக்கும் புரட்சியில் இடங்கொடுக்க வேண்டும்...
கீழ்நாட்டு மக்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களுக்கு நூறு பரப்புரைகளை விட ஒரு
முன்னுதாரணம் போதும்” என்று எழுதினார் ஹோ.
கன்பூசியஸ், பிரஞ்சு
மொழி, பிரஞ்சுப் புரட்சி, ரூசோ,
மான்டெஸ்கியூ, “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்”... எல்லாம் கற்றுத் தேர்ந்து தெளிந்தவர் ஹோ. கன்பூசியசைக்
கொண்டாடும் நிகழ்ச்சிகளை தேசிய சீன அரசாங்கம் தடைசெய்ய முடிவெடுத்ததை விமர்சித்து
ஹோ எழுதிய கட்டுரையில் ஒரு கூறு: “மன்னர்கள் கன்பூசியசைப் பூசித்தார்கள்; அவர் ஒரு புரட்சியாளர் என்பதற்காக மட்டுமல்ல; மன்னர்களின்
குறிக்கோளுக்கு அவர் உறுதிபட ஆதரவு நல்கினார் என்பதற்காகவும். அன்று கன்பூசியசின்
சிந்தனையை மன்னர்கள் பயன்படுத்தினார்கள். இன்று ஏகாதிபத்தியவாதிகள் கிறீஸ்தவத்தை
பயன்படுத்துவது போல. கன்பூசியசின் சிந்தனைக்கு அடிப்படை, மூவகைப்
பணிவொழுக்கங்கள்: (1) குடிமக்கள் மன்னரைப் பணிதல்; (2) மகன்
தந்தையைப் பணிதல்; (3) மனைவி கணவரைப் பணிதல். ஐவகை அறங்கள்:
(1) மனிதாபிமானம், (2) நீதி, (3)
இங்கிதம், (4) அறிவுடைமை, (5) வாய்மை.
இன்று கன்பூசியஸ் உயிர்வாழ்ந்து அதே விழுமியங்களைக் கைக்கொண்டால், அவர் இன்றைய சூழ்நிலைக்கு நெகிழ்ந்துகொடுத்து லெனின் வழித்தோன்றிய
செம்மலாக விளங்கக் கூடுமாயினும், இன்று அப்பெருந்தகை ஒரு
புரட்சிவிரோதியாகவே கொள்ளப்படுவார். எனினும் இந்தோசீனர்களாகிய நாங்கள் கன்பூசியசை
வாசித்து எங்களை அறிவுத்திறனை நிறைவுசெய்யும் அதேவேளை, லெனினை
வாசித்து எங்கள் புரட்சித்திறனை நிறைவு செய்வோம்.” மாவோ யார்யாரை, எத்தனை விழுக்காடு மேற்கோள் காட்டினார் என்பது பற்றிய அரிய புள்ளிவிபரம்
ஒன்று இங்கு பொருந்துகிறது:
24% = ஸ்டாலின்
22% = கன்பூசியஸ்
18% = லெனின்
13% = சீன
இலக்கியம்
12% = தாவோ-மோவோ
4% = மார்க்ஸ்-எங்கெல்ஸ்
(Dick Wilson, People's Emperor,
Hutchinson, 1979, p.291-2)
கலிலியோ, ஸ்டீவன்சன்,
டார்வின், மார்க்ஸ் ஆகியோரின் தொடர்ச்சியை
எடுத்துக்காட்டி, “புரட்சி என்பது மானுட விருத்திக்கான
எந்திரம்” என்பதை ஹோ வலியுறுத்தினார். அமெரிக்க, பிரஞ்சு,
இரசியப் புரட்சிகளின் தொடர்ச்சியை எடுத்துக்காட்டி, அவற்றுள் முதலாவது புரட்சியும் இரண்டாவது புரட்சியும் தொடக்கி வைத்ததையே
கடைசிப் புரட்சி முடித்து வைத்தது என்றார்; அதாவது கடைசிப்
புரட்சி தொழிலாளிகளையும் உழவர்களையும் அணிதிரட்டி, முதலாளித்துவ
சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்து சமத்துவ, சகோதரத்துவ
சமூகத்தை உருவாக்கி முடித்து வைத்தது என்றார்.
“புரட்சிகரப் பாதை என்பது சொற்பொருளியலுக்கு அப்பாற்பட்டது; பாட்டாளிகள், ஒன்றியம், கூட்டுறவு, சர்வதேசியம்... போன்ற அரசியற் பதங்களுக்கு அப்பாற்பட்டது அது. கருத்தியல் சார்ந்த
எண்ணங்களுடன், வரலாறு சார்ந்த எண்ணங்களுடன் ஓர் அறநெறிப்
பரிமாணமும் சேரவேண்டும். அவற்றுடன் விமர்சனமும், சுயவிமர்சனமும்
சேரவேண்டும்” என்று வற்புறுத்தினார் ஹோ.
1925ல் தேசிய சீன அதிபர் சன் யாட்-சென் (Dr. San Yat-sen) இறந்த பிறகு சியாங் கை-சேக் (Chiang
Kai-shek) பொதுவுடைமைவாதிகளை அடக்கி ஒடுக்கவே, ஹோ சீனாவை விட்டு வெளியேற நேர்ந்த்து. அப்பொழுது அவருக்கு ஏற்பட்ட
பட்டறிவு: இந்தோசீனாவில் காலனியாதிக்கமும் பொதுவுடைமைவாதமும் ஒன்றை ஒன்று
எதிர்கொள்கையில் ஏற்படும் நெருக்கடியைத் தணிப்பதற்கு தேசியப் பிரச்சனையையும்
சமூகப் பிரச்சனையையும் ஒருங்கிணைக்க வேண்டும்! எனவே “லெனினும், சன் யாற்-செனும் வகுத்த நெறிகளை வியற்நாமியப் புரட்சிக்கு வழிகாட்டும்
ஒளிவிளக்காகக் கொள்வதற்கு நான் உறுதிபூண்டுள்ளேன்” என்று முழங்கினார் ஹோ.
1929ல் தலைமறைவாக ஹாங்காங் சென்றடைந்த ஹோ, அங்கு இந்தோசீன
பொதுவுடைமைக் கட்சியை அமைத்தார். அங்கு சீனச் செவிலி ஒருவர் “பொதுவுடைமை என்றால்
என்ன?” என்று அவரிடம் வினவியபொழுது அவர் அளித்த பதில்: “இனிமேல்
எவருமே சுரண்டப்பட மாட்டார்கள். நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்போம். ஒருவருக்கு
ஒருவர் நிகராவோம். எடுத்துக்காட்டாக, நீ நீலக்
கழுத்துச்சட்டை அணிந்திருக்கிறாய். ஆங்கில தலைமைச் செவிலி சிவப்புக்
கழுத்துச்சட்டை அணிந்திருக்கிறாள். அதிகாரப் படிநிலை சார்ந்த இந்த வேறுபாட்டை
எல்லாம் பொதுவுடைமை ஒழித்துக்கட்டிவிடும். அதன் பிறகு உன் வாழ்நாளில் நீ என்றுமே
நீலக் கழுத்துச்சட்டை அணியத் தேவையில்லை.”
1931ல் ஹாங்காங்கின் ஆங்கிலேய ஆட்சியாளரால் அவர் கைதுசெய்யப்பட்டார். இந்தோசீன
பிரஞ்சு ஆட்சியாளர் அவரைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி ஆங்கிலேயரிடம் கேட்டார்கள்.
அதற்கிடையே ஹாங்காங்கின் ஆங்கில அதிகாரிகள் சிலரின் உடந்தையுடன் அவர் சீனதேசத்து
சங்காய் நகருக்கும், அங்கிருந்து
சோவியத் நாட்டு விளாடிவொஸ்டக் நகருக்கும் தப்பியோடிவிட்டார். ஆங்கில அதிகாரிகளின்
உடந்தையுடன் அவர் தப்பியோடி வந்தபடியால், அவர்மீது சோவியத்
அதிகாரிகளுக்கு ஐயம் எழுந்ததுண்டு.
ஸ்டாலின் ஆணைப்படி சோவியத் பொதுவுடைமைக் கட்சியினுள் களையெடுப்பு இடம்பெற்று வந்த
காலம் அது. ஹோவுக்கும் பிறருக்கும் நன்கு தெரிந்தவர்களான கீரோவ், சினோவியேவ், புகாரின், கவிஞர்
ஓசிப், பரோடின், தளபதி புலூச்சர்...
முதலியோர் ஒருவர் பின் ஒருவராக பெரியா (L. P. Beria)
தலைமையில் இயங்கிய இரகசிய காவல்துறைக்குப் பலியானார்கள். ஆதலால் அமைதி காப்பதைத்
தவிர ஹோவினால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. 1938ல் களையெடுப்பு முடிவடையுந்
தறுவாயில் அவர் சர்வதேய பொதுவுடைமைக் கழகத்து ஒழுக்காற்றுச் சபையின் முன்
நிறுத்தப்பட்டு, இந்தோசீனாவுக்குத் திரும்புமாறு
பணிக்கப்பட்டார். தாயகம் திரும்பும் வழியில் அவர் சீனதேசத்து யனான்
பிராந்தியத்தில் இரண்டு கிழமைகள் தங்கியிருந்தார். “நீண்ட பயணம்” முடிந்த பின்னர் மாவோவின் தலைமையகம் அமைந்திருந்த இடம் அது.
அங்கே தளபதி சூ தே (General Zhu De) பதவிப்பட்டி எதுவும்
அணியாமல் நடமாடியது கண்டு, அவரை ஒரு சமையலாள் என்று தான்
எண்ணியதாக ஹோ குறிப்பிட்டுள்ளார்.
சீன-வியற்நாமிய எல்லையோரமாக பெளத்தகுரவர் கோலம்பூண்டு பயணித்த ஹோ ஓர் இழவு வீட்டைக்
கடந்துசெல்கையில் ஈமக்கிரியை செய்யும்படி அவர்கள் வேண்டிக் கொண்டார்கள். அதற்காக
அவரையும், அவருடைய உதவியாளர்களாக நடித்த தோழர்களையும்
அங்கிருந்த விகாரைக்கு அழைத்துச் சென்றார்கள். தோழர்களுக்கு உதறல் எடுத்தது. “ஒரு
தோழரிடம் பீடத்தில் ஏறி, முழந்தாள் பணிந்து, ஏட்டைப் புரட்டும்படி ஹோ கண்காட்டினார். பிறகு தானும் அவ்வாறே செய்து
மிகவும் எளிதாகவும் கருத்தூன்றியும் தனது பணியை மேற்கொண்டார். சில புரட்சிகரப்
பாடல்களை அவர் மீட்டியபோது தோழரும் அவருடன் ஒத்தூதினார். ஆண்களும் பெண்களும்
நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வழிபட்டார்கள். ஹோவும் தோழரும் பாடியபடியே பீடத்தை
வலம்வந்தார்கள். ஏனைய தோழர்கள் கொடுப்புக்குள் சிரிப்பை அடக்கியபடி
பங்குபற்றினார்கள்.”
1940ல் ஜியாப் (Vo Nguyen Giap) சீனாவில் வைத்தே
ஹோவை முதன்முதல் சந்தித்தார். ஜியாப் ஒரு மறவர் மட்டுமல்ல, பேராசிரியரும்,
சட்டவாளரும், வரலாற்றறிஞரும் கூட. தாங்கள் இருவரும்
ஒரே பிரஞ்சுக் கல்லூரியில் (Lycée
Albert-Sarraut) பயின்றவர்கள்
என்பதை நினைந்து ஹோவும் ஜியாப்பும் மகிழ்ந்தார்கள். எனினும் ஏனைய தோழர்களைப் போலவே
ஹோவை “ஹோ மாமா!” என்று விளித்தார் ஜியாப். பதிலுக்கு “பெண்ணழகனே!” என்று
விளித்தார் ஹோ. இருவருக்கும் பொதுவான அம்சங்கள்: புரட்சிக் கண்ணோட்டம், பொதுவுடைமைச் சமுதாயம், பிரஞ்சுமொழித் தேர்ச்சி,
கவித்துவம், ஆழ்ந்து பரந்து விரிந்த
வாசிப்பு...
தளபதி ஜியாப்
(“பனிக்கீழ்
எரிமலை”)
1940ல் ஹிட்லரின் படைகள் பிரான்சைக் கைப்பற்றவே, பிரஞ்சுக்காரரால்
கட்டியாளப்பட்ட இந்தோசீனாவில் பாரிய அரசியல் மாற்றங்களுக்கு வாய்ப்புண்டு என்பதைப்
புரிந்துகொண்ட ஹோ மேற்கொண்டு தாமதிக்காமல் தாயகம் திரும்ப முடிவுசெய்தார். 1941ல்,
அதாவது 30 ஆண்டுகள் கழித்து தலைமறைவாக நாடுதிரும்பிய ஹோ
சீன-வியற்நாமிய எல்லை கடந்து காக் போ (Coc Bo) குகையில் தனது
தோழர்களுடன் ஓராண்டுக்காலம் தங்கியிருந்தார். குளிரும் ஈரமும் மிகுந்த குகை.
பலகைப் படுக்கை. சோளக்கஞ்சி, ஆற்றுமீன், மூங்கில் முளை... அந்த நிலைமையை உணர்த்தும் ஹோவின் கவிதை:
காலையில்
ஆற்றோரம்
மாலையில்
குகையீரம்
சோளக்கஞ்சி, மூங்கில்முளை
ஈடாடும் கல்மேசை.
கட்சியின்
வரலாற்றை
நான்
பெயர்க்கிறேன்
புரட்சியாளரின்
வாழ்வில்
கவர்ச்சிக்குப்
பஞ்சமில்லை.
1941ல் “வியற்நாம் சுதந்திரக் கழகம்” என்று பொருள்படும் “வியற்மின்” இயக்கத்தை அமைத்த பிறகு
அவர் அடுத்தடுத்து வெளியிட்ட சில நூல்கள்:
வியற்மின்
இயக்கத்தின் பத்துக் கொள்கைகள்
சோவியத் போல்சிவிக் பொதுவுடைமக் கட்சியின் வரலாறு (ஸ்டாலின் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு)
கரந்தடிப்போர் தந்திரோபாயம்
படையினர் போதனை
1943ல் சர்வதேய பொதுவுடைமைக் கழகத்தை ஸ்டாலின் குலைத்ததை அடுத்து
இந்தோசீன பொதுவுடைமைக் கட்சிக்கு ஹோ நாடிய தன்னாதிக்கம் கிடைத்தது (எப்படி சீனப்
பொதுவுடைமைக் கட்சிக்கு மாவோ நாடிய தன்னாதிக்கம் கிடைத்ததோ அப்படி). அதேவேளை
இரண்டாம் உலகப் போரில் யப்பான் தோற்குந் தறுவாயில் பிரான்சும், (சியாங் கை சேக்கின்) தேசிய சீனாவும், அமெரிக்காவும்
இந்தோசீனாவில் நிலைகொண்டால், அதை எவ்வாறு எதிர்கொள்வது?
அதற்கு விடைகாணும் நோக்குடன் தனது பெயரை ஹோ சி-மின் (கிணற்றொளி)
என்று மாற்றிக்கொண்டு செஞ்சீனத் தலைவர்களைச் சந்தித்து நிலைமையைக்
கேட்டறிவதற்காகவும், பார்த்தறிவதற்காகவும் (மீண்டும்
தலைமறைவாக) அவர் சீனா சென்று திரும்பினார்.
1945ல் யப்பான் சரணடையுந் தறுவாயில் வியற்நாம் குடியரசைப் பிரகடனம் செய்தார் ஹோ. 1776ல் விடுக்கப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் காணப்பட்ட மூன்று வரிகள் ஹோவின் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளன: “மானுடர் அனைவரும் சரிநிகராகப் படைக்கப்பட்டவர்கள். களையவொண்ணா உரிமைகள் சிலவற்றை கடவுள் அவர்களுக்கு வழங்கியுள்ளார். அவற்றுள் வாழ்வும், சுதந்திரமும், இன்ப நாட்டமும் அடங்கும்.” 1791ல் விடுக்கப்பட்ட மானுட உரிமைகள் பற்றிய பிரஞ்சுப் புரட்சிப் பிரகடனத்தில் காணப்படும் மூன்று வரிகளும் ஹோவின் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளன: “மானுடர் அனைவரும் சுதந்திரப் பிறவிகள். அவர்கள் சரிநிகர் உரிமைகள் படைத்தவர்கள். அவர்கள் என்றென்றும் சுதந்திரம், சரிநிகர் உரிமைகள் படைத்தவர்களாக விளங்க வேண்டும்.”
சோவியத் நாடும், எதிர்கால
செஞ்சீனாவும் வியற்நாமை அங்கீகரிக்கும் என்பதில் ஹோவுக்கு இம்மியும் ஐயமில்லை.
அத்துடன் அமெரிக்காவின் ஆதரவை ஈட்டும் நோக்குடன் அமெரிக்க ஜனாதிபதி ஹரி
ரூமனுக்கும் (Harry Truman), அமெரிக்க
வெளியுறவுச் செயலாளர்களுக்கும் தொடர்ச்சியாக அவர் அனுப்பிய மடல்கள் எவையும்
பொருட்படுத்தப்படவில்லை. ஹோவின் மடல்களைப் பொருட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இரு
தசாப்தங்கள் கழித்து ஜனாதிபதி ஜோன்சனுக்கும், பிறகு ஜனாதிபதி
நிக்சனுக்கும் ஏற்பட்டதுண்டு.
1946ல் அமைந்த புதிய பிரஞ்சு அரசும் இந்தோசீனாவில் ஆதிக்கம்
செலுத்தவே முற்பட்டது. ஹோவின் தோழர்கள் பலரும் பிரஞ்சுப் படையுடன் உடனடியாக மோத
விரும்பினார்கள். அதற்கு மறுப்புத் தெரிவித்த ஹோ, உடனடி
மோதலால் பின்னடைவு நேரும் என்றும், பொறுத்திருந்து
காய்நகர்த்துவதே புத்தி என்றும் அவர்களுக்கு இடித்துரைத்துவிட்டு, “வியற்நாமிய சுதந்திரம்” என்ற தொடரைப் பயன்படுத்தாமல் பிரஞ்சுக்காரரின்
ஆதிக்கத்துக்கு நெகிழ்ந்துகொடுக்கும் உடன்படிக்கையில் ஒப்பமிட்டார் (1946-03-06).
பிரஞ்சுப் படையினர் வியற்நாமில் 5 ஆண்டுகளுக்கு நிலைகொண்டிருக்க அதில் இடம்
கொடுக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் புரிந்தார்கள் வியற்நாமிய
மக்கள்.
தலைமைத் தளபதி ஜியாப் ஹனோய் மாநகர அரங்கில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை எதிர்கொண்டு
உரையாற்றினார். 1918ல் போல்சிவிக் இரசியாவும் ஜேர்மனியும் ஒப்பமிட்ட (Brest-Litovsk) உடன்படிக்கையை எடுத்துக்காட்டி வியற்நாமிய-பிரஞ்சு உடன்படிக்கையை அவர்
நியாயப்படுத்தினார். “புறவய நிலைமைகளின்படியே அரசியல் முடிபுகள் எடுக்கப்பட
வேண்டும். சிலவேளைகளில் உறுதியாய் இருக்க வேண்டும்.
சிலவேளைகளில் நெகிழ்ந்து கொடுக்க வேண்டும்” என்றார் ஜியாப்.
அடுத்து உரையாற்றினார் ஹோ: “1945 முதல் நாங்கள் செயலளவில் சுதந்திரம் துய்த்து
வந்துள்ளோம். எனினும் எங்கள் சுதந்திரத்தை எந்த வல்லரசும் அங்கீகரிக்கவில்லை.
பிரான்சுடன் செய்துகொண்ட உடன்படிக்கை சர்வதேய அங்கீகாரத்துக்கு வழிவகுக்கும்.
மேன்மேலும் எங்கள் திண்மைக்கு அது இட்டுச்செல்லும். அது மாபெரும் சாதனை ஆகும். ஆக
15,000 பிரஞ்சுப் படையினர் மட்டுமே இங்கு 5 ஆண்டுகள்
தங்கியிருப்பார்கள்... போரிடுவதை விட, பேசித்தீர்ப்பதே
அரசியல் மதிநுட்பம். பேச்சுவார்த்தை ஊடாக, ஒருவேளை 5
ஆண்டுகளுக்குள், சுதந்திரம் ஈட்ட முடியுமானால், எதற்காக அரையிலட்சம் அல்லது ஓரிலட்சம் படையினரை நாங்கள் பலியிட வேண்டும்?
ஹோ சி மின் ஆகிய நான் என்றுமே உங்களை சுதந்திரப் பாதையில் வழிநடத்தி
வந்துள்ளேன். எங்கள் நாட்டின் விடுதலைக்காக என் வாழ்நாள் முழுவதும் நான்
போராடியுள்ளேன். எனது நாட்டை விலைபேசி விற்பதை விட இறக்கவே நான் விரும்புவேன்
என்பது உங்களுக்குத் தெரியும். சத்தியமாகச் சொல்கிறேன், உங்களை
நான் விலைபேசி விற்கவில்லை.”
எனினும் பிரஞ்சுக்காரர் இந்தோசீனாவை மீண்டும் கட்டியாள முற்படவே
1946 திசம்பர் 19ம் திகதி ஹோ, ஜியாப், (பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் நாயகம்) லீ டுக் தோ (Le Duc Tho) மூவரும் கலந்துகொண்ட அந்தரங்க கூட்டத்தில் பிரஞ்சுப் படைமீது போர்
தொடுக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
1950ல் சீனாவும், சோவியத் நாடும் வியற்நாம் குடியரசை அங்கீகரித்தன. ஹோ சீனாவுக்கும் சோவியத் நாட்டுக்கும் சென்றார்.
மாஸ்கோவில் அவர் மாவோவைச் சந்தித்தார். ஹோவை “பொதுவுடைமைக் குகைவாசி” என்று
விளித்து, இரண்டு இருக்கைகளைச் சுட்டிக்காட்டி,
“இது உழவருக்குரியது, அது
நிலக்கிழாருக்குரியது. நீ எதில் அமர்வாய்?” என்று வினவி,
சீனாவில் இடம்பெற்றது போல் வியற்நாமிலும் உழவுப் புரட்சி இடம்பெற
வேண்டும் என்பதை உணர்த்தினார் ஸ்டாலின். அதற்கு “என்னால் ஒரே சமயத்தில் இரண்டிலும்
அமர முடியுமே!” என்று பதிலளித்தார் ஹோ.
1954ல் தியன் பியன் பூ (Dien Bien Phu) போரில் தளபதி ஜியாப்பின் படை, பிரஞ்சுப் படையை முறியடித்த பிறகு ஜெனீவாவில் நடந்த அமைதி மாநாட்டில் சோவியத் வெளியுறவு அமைச்சர் மொலட்டோவ் (Vyacheslav Molotov), சீனப் பிரதமர் சூ என் லாய் (Zhou En-lai) இருவரும் கலந்துகொண்டார்கள். சூ என் லாய் ஜெனீவா மாநாட்டிலிருந்து இடைநடுவில் வெளியேறினார். இந்தோசீனாவுக்குள் அமெரிக்கா கால்வைக்கக்கூடும் என்று அஞ்சிய அவர் சீனா திரும்பி ஹோ, ஜியாப் இருவரையும் வரவழைத்து, 17வது சமாந்தரக் கோட்டை எல்லையாகக் கொண்டு வியற்நாமை வட வியற்நாம், தென் வியற்நாம் என இரண்டு போர்நிறுத்த வலயங்களாகப் பிரிப்பதற்கும், வட வியற்நாமை விடுத்து தென் வியற்நாமில் மட்டும் பிரஞ்சுப் படை தற்காலிகமாக நிலைகொள்வதற்கும், 1956ல் முழு வியற்நாமிலும் தேர்தல் நடத்தி அதை ஒரே நாடாக இணைப்பதற்கும் இணங்கும்படி வற்புறுத்தினார். வற்புறுத்தியவர் 20ம் நூற்றாண்டின் தலையாய சாணக்கியர்களுள் ஒருவரான சூ என் லாய். வேறு வழியின்றி இருவரும் இணக்கம் தெரிவித்தார்கள்.
சூ என் லாய் ஐயப்பட்டவாறு பிரஞ்சுக்காரர் அமெரிக்காவுக்கு வழிவிட்டு இந்தோசீனாவை விட்டு வெளியேறவே செய்தனர். ஜெனீவாவில ஒப்புக்கொள்ளப்பட்டபடி 1956ல் தேர்தல் நடத்த அமெரிக்கா மறுப்புத் தெரிவித்தது. சீனப் பிரதமருக்கு அமெரிக்காவின் தலையீடு மிகுந்த சீற்றத்தையும், ஏமாற்றத்தையும் அளித்தது. ஜெனீவா மாநாட்டில் கலந்துகொண்டதையும், உடன்பாட்டில் ஒப்பமிட்டதையும் எண்ணி அவர் மிகுந்த விசனமும் வருத்தமும் அடைந்தார்.
தலைமைத் தளபதி ஜியாப்பின் தந்தையும், மனைவியும் பிரஞ்சுக்காரரால்
வதைத்துக் கொல்லப்பட்டவர்கள். எனினும் அவர் பிரஞ்சுப் பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயின்றவர் என்பதாலும், பிரஞ்சுக்காரர்
அவரை என்றுமே சிறைகொண்டதில்லை என்பதாலும் அவர்மீது பிறருக்கு ஐயம் எழுந்தது. அவர்
சோவியத் தோழர்களுடன் மறைவாக உறவாடுபவர் என்ற முணுமுணுப்பு வேறு. 1960ல் மத்திய குழு, ஹோவுக்கு உவந்த ஜியாப்பை
விடுத்து, லீ துவானை (Le Duan)
முதன்மைச் செயலாளராகத் தெரிவுசெய்தது. ஜியாப் தொடர்ந்தும் பாதுகாப்பு அமைச்சராகவும், தலைமைத் தளபதியாகவும்
விளங்கினார். ஹோ சிகிச்சைக்காகவும், ஓய்வுக்காகவும் அடிக்கடி சீனா சென்றுவரவும், ஜியாப் ஹங்கேரி சென்று, அங்கு மாதக் கணக்காகத்
தங்கியிருக்கவும் நேர்ந்தது.
1968ல் லீ துவான், லீ டுக் தோ, தளபதி குயென் சி தான் (Nguyen Chi Thanh) மூவரும் கூடி தென் வியற்நாமில் நிலைகொண்ட அமெரிக்கப் படையினர் மீது
நேரடித் தாக்குதல் (தெற் தாக்குதல் = Tet Offensive) தொடுப்பதற்கு கட்சியின் மத்திய குழுவிடம்
ஒப்புதல் பெற்றார்கள். நேரடி மோதலால் நாட்டு மக்களுக்கு பேரிழப்பு நேரிடும் என்று
அஞ்சி அதற்கு மறுப்புத் தெரிவித்தார் ஹோ. “பயப்பட வேண்டாம், மாமா!
எல்லாவற்றையும் எதிர்பார்த்து நான் முன்னேற்பாடு செய்துள்ளேன்” என்று ஹோவை சமாதானப்படுத்தினார்
லீ துவான். “தெற் தாக்குதல்” தொடுப்பதற்கு இரண்டு
நாட்கள் முன்னதாக ஹங்கேரியிலிருந்து தலைமைத் தளபதி ஜியாப் திருப்பி
அழைக்கப்பட்டார். வட வியற்நாமியப் படைகளும், தென்
வியற்நாமில் நிலைகொண்ட வியற்கொங் படைகளும் தென் வியற்நாம் முழுவதும் 100 முனைகளில்
தாக்குதல் தொடுக்கும் மேற்படி திட்டத்தை ஜியாப் உள்ளூர விரும்பவில்லை. தென்
வியற்நாமியப் படை இரு அணிகளாகப் பிளவுபடும், ஒரு அணி வட
வியற்நாமிய–வியற்கொங் படையுடன் இணைந்து மறு அணியுடன் மோதி ஆட்சிக் கவிழ்ப்பில்
ஈடுபடும், தென் வியற்நாமிய மக்கள் பொங்கியெழுந்து புரட்சி
புரிவார்கள், வியற்நாம் மீண்டும் ஒரே நாடாக ஓங்கும்...
என்றெல்லாம் மத்திய குழு எதிர்பார்த்தது. ஆனாலும் போரில் அமெரிக்கர்
ஆயிரக் கணக்கிலும், வியற்நாமியர் பல்லாயிரக் கணக்கிலும்
கொல்லப்பட்டார்கள். மத்திய குழுவின் எதிர்பார்ப்பு கைகூடவில்லை.
எனினும் வியற்நாம் போரில் மேற்படி தாக்குதல் ஒரு திருப்புமுனை என்பதில்
ஐயமில்லை. ஒரு சின்னஞ்சிறு நாட்டின் படை ஒரே சமயத்தில் 100 முனைகளில் தாக்குதல்
தொடுத்ததும், அதில் ஆயிரக்
கணக்கான அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டதும், சைகோனில் உள்ள
அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதும்... அமெரிக்க தொலைக்காட்சியில் காட்டப்பட்டன. இனி
வட வியற்நாமியரை எதிர்த்துப் போரிட தனக்கு 2 இலட்சம் படையினர் தேவை என்று அமெரிக்க
தளபதி (General Westmoreland) ஜனாதிபதி ஜோன்சனிடம்
விண்ணப்பிக்கவே அமெரிக்க மக்கள் வியற்நாம் போருக்கு எதிராகக்
கிளர்ந்தெழுந்தார்கள். அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜோன்சன் வேறு
அறிவிக்க வேண்டியதாயிற்று. அந்த வகையில் தெற் தாக்குதல் வட வியற்நாமுக்கு மாபெரும்
வெற்றியை ஈட்டிக் கொடுத்தது என்பதில் ஐயமில்லை.
“நாங்கள் தென் வியற்நாமிய மக்களைக் கிளர்ந்தெழ வைக்கவே தாக்குதல் தொடுத்தோம்.
ஆனால் அமெரிக்க மக்களையே அது கிளர்ந்தெழ வைத்தது... எங்கள் போர்க்களங்களில்
நாங்கள் ஏற்படுத்திய குழப்பங்களைக் காட்டிலும், அமெரிக்க ஊடகங்கள் அங்கு ஏற்படுத்திய குழப்பங்கள் மிகவும்
அதிகம் என்பதை அறிந்து நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்” என்றார் ஜியாப். அந்த
வகையில் “வியற்நாம் போர் வியற்நாமில் நடத்தப்படவில்லை, அமெரிக்காவிலேயே
நடத்தப்பட்டது” என்று அமெரிக்க தளபதிகள் பலரும் குறைப்பட்டதில் ஓரளவு நியாயம்
இருக்கவே செய்கிறது.
1969 செப்டெம்பர் 2ம் திகதி ஜனாதிபதி ஹோ சி மின் இறந்தார். வியற்நாம் தேசிய நாள் அது!
1945ல் வியற்நாம் குடியரசை அவர் பிரகடனம்செய்த நாள் அது! ஆண்டுதோறும் தேசிய நாள்
கொண்டாட்டத்துக்கு அதனால் இடைஞ்சல் ஏற்படப்போகிறது. ஆதலால் அவர் செப்டெம்பர் 3ம்
திகதியே இறந்தாரென அதிகாரபூர்வமான இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டது. 1973ல் அமெரிக்கப் படையினர் வியற்நாமிலிருந்து பின்வாங்கத்
தொடங்கினார்கள். 1975ல் வட வியற்நாம் மின்னல்
வேகத்தில் தென் வியற்நாமைக் கைப்பற்றி முழு நாட்டையும்
ஒருங்கிணைத்தது. தென் வியற்நாமின் தலைநகரான சைகோனுக்கு ‘ஹோ சி மின் மாநகரம்’ என்று
மறுபெயரிடப்பட்டது.
1969 மே 10ம் திகதி ஹோ வரைந்த இறுதியாவணம்: “... நான் கார்ல் மார்க்சிடனும், லெனினிடமும், மற்றும்
பிற புரட்சிகர முதியோரிடமும் போய்ச்சேரும் நாளை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில்
ஒருசில வரிகளை இங்கு பொறித்துச் செல்கிறேன்... என் வாழ்நாள் முழுவதும்
தாயகத்துக்காகவும், புரட்சிக்காகவும், மக்களுக்காகவும்
நான் முழுமனதுடனும், முழுவலுவுடனும் தொண்டாற்றியுள்ளேன். இனி
இவ்வுலகிலிருந்து நான் புறப்படத்தான் வேண்டும் என்றால், தொடர்ந்தும்
மேன்மேலும் தொண்டாற்ற முடியவில்லையே என்பதைத் தவிர வேறெதையும் குறித்து நான்
வருந்தப் போவதில்லை... நான் போனபிறகு, மக்களின் நேரமும்
பணமும் வீணடிக்கப்படாவாறு, பெருமெடுப்பில் இறுதிச்சடங்கு
நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்... இறுதியாக குடிமக்கள், கட்சி
உறுப்பினர்கள், படைவீரர்கள் அனைவருக்கும், எனது மருமக்களுக்கும், இளையோருக்கும், சிறியோருக்கும் எனது எல்லையில்லா அன்பை ஈந்து செல்கின்றேன்... உலகம்
முழுவதும் உள்ள எமது தோழர்களுக்கும், நண்பர்களுக்கும்,
இளையோருக்கும், சிறியோருக்கும் எனது உளமார்ந்த
வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்... எமது கட்சி முழுவதும், மக்கள் அனைவரும் ஒத்துழைத்து, அமைதியும் மீளிணைவும்
சுதந்திரமும் மக்களாட்சியும் செழிப்பும் மிகுந்த ஒரு வியற்நாமைக் கட்டியெழுப்பி,
உலகப் புரட்சிக்கு அருந்தொண்டாற்ற வேண்டும் என்பதே எனது இறுதி ஆசை...” (Ho Chi Minh, Down with
Colonialism, Verso, London, 2007,
p. 216).
தனது உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என்று ஹோ வேறு அறிவுறுத்தியிருந்தார். அதை
அவருடைய தோழர்கள் மீறியதில் வியப்பில்லை. லெனின், மாவோ உடல்கள் போல் ஹோவின் உடலும் பேணப்பட்டது. அன்றாடம் 2,000க்கு மேற்பட்டோர் ஹோவின் சமாதிக்கு சென்று வருகிறார்கள். ஹோவின் பெயர் மட்டுமே வியற்நாமிய அரசின் இணையத்தளத்தில் காணப்படும் அதிகாரபூர்வமான
வரலாற்றுச் சுருக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதிகாரபூர்வமான “ஜனாதிபதி ஹோ சி மின்” வாழ்க்கை வரலாறு இப்படி முற்றுப்பெறுகிறது: “ஜனாதிபதி ஹோ சி மின் வியற்நாமியப் புரட்சியின் பேராசான், வியற்நாமிய தொழிலாள வர்க்கத்தினதும் முழு நாட்டினதும் வாஞ்சைக்குரிய
தலைவர், உன்னத போர்வீரர், சர்வதேய
பொதுவுடைமை இயக்கங்களதும், தேசிய விடுதலை இயக்கங்களதும்
தலைசிறந்த செயல்வீரர்.”
குருசேவை (Nikita Khrushchev) மேற்கோள் காட்டாமல் ஹோ சி மின் ஆற்றிய பணியை எடைபோடுவது கடினம்: “எனது அரசியல் வாழ்வில் பலரை நான் சந்தித்துள்ளேன். ஹோவைப் போல் வேறெவரும்
என்னை ஆட்கொள்ளவில்லை. திருத்தூதர்கள் பற்றி சமயவிசுவாசிகள் பெரிதும் பேசுவதுண்டு.
தனது வாழ்க்கைப் பாங்கினாலும், தனது சகாக்களை ஆட்கொண்ட
மாண்பினாலும் ஹொ சி மின் அத்தகைய திருத்தூதர்களுடன் செவ்வனே ஒப்பிடத்தக்கவர். அவர்
ஒரு புரட்சித் திருத்தூதர். அவர் விழிகளில் பளபளக்கும் தூய்மையையும், வாய்மையையும் என்றுமே நான் மறக்கப் போவதில்லை. அவருடைய வாய்மை, சொல்லிலும் செயலிலும் களங்கப்படுத்தவியலாத ஒரு பொதுவுடைமைவாதியின் வாய்மை.
அவருடைய தூய்மை, தனது குறிக்கோளுக்கு தன்னை முற்றிலும்
அர்ப்பணித்த ஒருவரின் தூய்மை. தனது மக்களுக்கும், அனைத்து
மக்களுக்கும் பொதுவுடைமையே சிறந்தது என்பதை உறுதிபட நம்பியவர் அவர். ஆதலால் அவரை
எவருமே மறுத்துரைக்க முடியவில்லை. வரையறையின்படி பொதுவுடைமைவாதிகள் அனைவரும்
வர்க்க சகோதரர்கள், ஆதலால் அவர்கள் என்றுமே நேர்மையும்,
வாய்மையும் காப்பவர்கள் என்று அவர் கொண்ட நம்பிக்கையிலிருந்தே அவர்
வாய்ச்சொல் ஒவ்வொன்றும் பிறக்கிறது.”
ஹோவின் சொந்தக் கணிப்பு: “நான் ஒரு சாதாரண மனிதன்.” எத்துணை தன்னடக்கம், ஒரு மாபெருந் தலைவனிடம்!
பிற்குறிப்பு : 1980களில்
வியற்நாமில் தனியார் துறையும் பங்குச் சந்தையும் புகுத்தப்பட்டதை அடுத்து அங்கு
வெளிநாட்டு முதலீடுகள் பெருகியுள்ளன. 2000ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன்
வியற்நாமுக்கு மேற்கொண்ட பயணத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு வளர்ந்து
வந்துள்ளது. 2007ல் வியற்நாம் உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organization) சேர்ந்தது.
இன்று வியற்நாமுடன் பாரிய வணிகம் புரியும் நாடு அமெரிக்காவே!
இக்கட்டுரைக்கான உசாத்துணை நூல்களுள் தலையாயது: “Ho Chi Minh.” இது 2003ல் Pierre
Brocheux என்னும் பேராசிரியர் பிரஞ்சு மொழியில் எழுதிய நூலின்
ஆங்கில மொழிபெயர்ப்பு. 2007ல் கேம்பிரிச் பல்கலைக்கழக வெளியீட்டகம் மேற்படி ஆங்கில
மொழிபெயர்ப்பை முன்வைத்தது. வியற்நாமிய அரசின் அதிகாரபூர்வமான நிலைப்பாட்டுக்கு
ஒவ்வாத சில கூறுகளை நீக்கி வியற்நாமிய மொழியில் இந்நூலை வெளிக்கொணர வியற்நாம் அரச வெளியீட்டகம்
முன்வந்தது. நூலாசிரியர் அதற்கு மறுப்புத் தெரிவித்தபடியால், அது கைகூடவில்லை. இந்நூலுக்கு William J. Duiker முன்னுரை எழுதியுள்ளார். ஏற்கெனவே அவர் எழுதிய “Ho Chi Minh” (Hyperion, New York, 2000) நூலின் கூறுகள்
சிலவற்றை நீக்குவதற்கு அவரும் மறுப்புத் தெரிவித்தபடியால், அதற்கும்
அதிகாரபூர்வமான வியற்நாமிய மொழிபெயர்ப்பு கைகூடவில்லை.
“எங்களால் உண்மைகளை எழுத முடிவதில்லை - எங்கள் வரலாற்றை எங்களால் எழுத
முடிவதில்லை. ஆதலால்தான் வெளிநாட்டவர்கள் எழுதிய எங்கள் வரலாற்று நூல்கள்
மாத்திரமே எனது வீட்டு நூலகத்தில் குவிந்து கிடக்கின்றன” என்று தளபதி ஜியாப்
விசனப்பட்டதுண்டு. ஜியாப் 2014 அக்டோபர் 4ம் திகதி, தனது 102வது வயதில், மறைந்தார். அவர் மறைவே மேற்படி கட்டுரையை எழுதத் தூண்டியது.
_________________________________________________________________________
மணி வேலுப்பிள்ளை 2014-10-11
No comments:
Post a Comment