மொழியின் முன் ஆணும் பெண்ணும் சமன்

ஆளை ஆளைப் பார்க்கிறார், ஆளை ஆளைப் பார்க்கிறார்,
                      ஆட்டத்தைப்  பார்த்திடாமல், ஆளை ஆளைப் பார்க்கிறார்,
என்பது ஒரு திரைப்படப் பாடலின் தொடக்கம். ஒரு பெண் தனது ஆட்டத்தைக் கண்டுகளிக்க வந்திருக்கும் ஆடவரின் மன நிலையை உணர்த்திப் பாடும் பாடல் அது.
            அந்தப் பாடலின் பொருள் எவ்வாறாயினும், ஆட்டத்தைப் பாராது ஆளைப் பார்க்க வேண்டிய தேவை சில சமயங்களில் சில தரப்பினருக்கு ஏற்படுவது நியாயமே. நாட்டிலுள்ள மக்களுள் எத்தனை பேர் ஆண்கள், எத்தனை பேர் பெண்கள் என்பதைப் புள்ளிவிபரத் திணைக்களம் அறிந்து வைத்திருக்கிறது. மக்களை ஆண்கள், பெண்கள் என்றோ வைத்தியர்களை ஆண் வைத்தியர்கள், பெண் வைத்தியர்கள் என்றோ பகுத்துக் காட்டவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. திட்டம் தீட்டும் துறையினருக்குத்  திட்டவட்டமான பால்வேறுபாட்டுத் தரவுகள் தேவைப்படும் என்பதை எவரும் ஒப்புக்கொள்வர்.
           வேற்று மொழியினரின் பெயர்களை வைத்துப் பால்வேறுபாட்டை அறிவதற்கு நாங்கள் சிரமப்படுவதுண்டு. ஆதலால் வேற்று மொழிகளில் அமைந்த பேர்வழிகளைப் பற்றித் தமிழில் எழுதுவோர் அவர்கள்  ஆண்களா, பெண்களா என்பதைத் தெரிவிக்க நேர்வதுண்டு. எங்கள் பெயர்களை வைத்துப் பால்வேறுபாட்டை அறிவதற்கு அவர்கள் சிரமப்படுவதுண்டு. ஆதலால் தமிழ்ப் பேர்வழிகளைப் பற்றி வேற்று மொழிகளில் எழுதுவோர், அவர்கள் ஆண்களா, பெண்களா என்பதைத் தெரிவிக்க நேர்வதுண்டு.
      ஏன்? தாய்மொழியிலும் இது நேர்வதுண்டு. ஆண், பெண் இருபாலாரும் தயா, சுபா, மணி, இராசு, இரத்தினம்...என்று பெயர்சூடுவதால் விளையும் விபரீதம் அது. அத்தகைய பெயர்களை மட்டும் வைத்து அவர்கள் ஆண்களா பெண்களா என்பதை அறுதியிட்டுரைக்க முடியாது. எனினும் அவர்களுடன் உறவாடுவோருக்கு அவர்கள் ஆண்களா, பெண்களா என்பது தெரிந்திருக்கும். அத்தகைய பெயர்கள் ஒரு வசனத்தில் இடம்பெறுமாயின், அந்த வசனத்தின் பால்படு விகுதிகளையோ, அதில் பேசப்படும் உடலுறுப்புகளையோ, அணிமணிகளையோ கொண்டு  எவருமே அவர்களை இனம்காணலாம். பின்வரும் வசனங்கள் அத்தகையவை:
            இராசு பாடினாள்.
மணியின் தாலி தாவணிக்குள் மறைந்தது.
இரத்தினம் இன்னும் சவரம் செய்யவில்லை.
அவற்றை விதிவிலக்குகளாகக் கொள்ளலாம். மற்றும்படி பொதுவாகப் பெயர்களைக் கொண்டே பால்-வேறுபாட்டை அறியலாம்:
            இளங்கீரன் ஓர் எழுத்தாளர்.
            பாலேஸ்வரி ஓர் எழுத்தாளர்.
     பொதுவாகப் பெயர்களைக் கொண்டே பால்-வேறுபாட்டை அறியலாம் என்ற உண்மை சொல்லளவில் ஏற்கப்படுவது அதிகம். செயலளவில்; பின்பற்றப்படுவது குறைவு. பின்வரும் வசனங்களைக் கவனிக்கவும்:
1.         இளங்கீரன் ஓர் எழுத்தாளன்.
2.         இளங்கீரன் ஓர் எழுத்தாளர்.
3.         பாலேஸ்வரி ஓர் எழுத்தாளர்.
4.         இளங்கீரன் ஓர் ஆண் எழுத்தாளர்.
5.         பாலேஸ்வரி ஒரு பெண் எழுத்தாளர்.
            1ஆவது வசனத்தில் -அன் விகுதி பால் காட்டியுள்ளது. அது நியாயமே. ஏனைய வசனங்களில் பால்படு சமத்துவம் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆனால் 2ஆவது வசனத்தில் உள்ள எழுத்தாளர்  1ஆவது வசனத்தில் உள்ள எழுத்தாளனையும் 3ஆவது வசனத்தில் உள்ள எழுத்தாளரையும், 4ஆவது வசனத்தில் உள்ள  ஆண் எழுத்தாளரையும் செயலிழக்கச் செய்வதுண்டு. 4ஆவது வசனம் கண்ணில் படுவதோ காதில் விழுவதோ அரிது. 5ஆவது வசனம் அடிக்கடி இடம்பெறுகிறது. அதாவது:
            2. இளங்கீரன் ஓர் எழுத்தாளர்.  
                        ஆனால்:
            5. பாலேஸ்வரி ஒரு பெண் எழுத்தாளர்!
            -அர் விகுதியின் இடத்துக்கு -அன் விகுதி உயர்த்தப்பட்டமை (-அன் விகுதியின் இடத்துக்கு -அர் விகுதி தாழ்த்தப்பட்டமை) 2ஆவது வசனத்தில் தெரிகிறது. பெண்- ஒட்டுச்சொல் -அர் விகுதிக்கு முண்டு கொடுப்பது 5ஆவது வசனத்தில் தெரிகிறது.  
            பெண்-ஒட்டுச்சொற்கள் பெரிதும் இறக்குமதிச் சரக்காகவே எங்களை வந்தடைகின்றன. இன்று தமிழில் வழங்கும் பெண்-ஒட்டுச்சொற்களுள் பெரும்பாலானவை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குள் புகுந்தவை. ஆங்கிலத்தில் பெண்குலத்தைச் சமாளிக்கும் சொல்லாட்சிக்கு woman ஒட்டுச்சொல்லாய் நின்று முண்டு கொடுத்து வருகிறது. ஆங்கிலத்தில்  woman  ஒட்டுச் சொல்லாய் நின்று பெண்மைக்கு முண்டுகொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. அது ஒரு பால்படு சமாளிப்பாகும். ஆங்கிலத்தில் இடம்பெறும் பால்படு சமாளிப்பை இறக்குமதி செய்யவேண்டிய (மொழிபெயர்க்க வேண்டிய) தேவை தமிழுக்கு இல்லை. பெண்மைக்கு முற்றிலும் நெகிழ்ந்து கொடுக்கும் தமிழுக்கு அத்தகைய நிர்ப்பந்தம் அறவே கிடையாது. தேவைப்படாத இறக்குமதியாக (குருட்டு மொழிபெயர்ப்பாக) புகுத்தப்படும் பால்படு சமாளிப்பு தமிழைப் பாழ்படுத்தி வருகிறது. ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது.
    எடுத்துக்காட்டாக spokeswoman என்பது பெண்குலத்தைச் சமாளிப்பதற்காக ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு சொல்லாட்சி. ஆங்கிலத்தில் இடம்பெறும் அந்தப் பால்படு சமாளிப்பை ஈ அடித்த பிரதிக்காரரைப் போன்று (பெண் பேச்சாளர் என்ற உருவத்தில்) தமிழுக்குள் புகுத்துவதைவிட மோசமான மடைத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. எனினும் spokeswoman பேசும் பெண் ஆகாமல், பெண் பேச்சாளர் ஆகியமை மாபெரும் முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை!
            பேச்சாளர் என்றால் ஒரு கூட்டத்தில் உரையாற்றுபவர் (speaker) அல்லது நாவலர் (orator) என்று பொருள். Spokesperson ஒரு பேச்சாளரோ நாவலரோ அல்லர். அவர் ஒரு தரப்பின் சார்பாக மொழிபவர். ஆதலால்தான் 1958ல் வெளிவந்த இலங்கை அரச சொல்தொகுதி ஒன்று அவரை மொழிவாளர் என்று குறிப்பிட்டுள்ளது. மொழிபவர் ஆணாயினும் (spokesman), பெண்ணாயினும் (spokeswoman) மொழிவாளர் (spokesperson)  பொருந்தும். அது தமிழ் இலக்கணத்துக்கும் மரபுக்கும் அமைந்த செப்பமான, நுட்பமான சொல்லாட்சி.
            கீழ்வரும் சோடியைக் கருத்தில் கொள்ளவும்:    
            1. அப்பா வந்தார், அண்ணா போனார்.       
                               ஆனால்:
            2. அம்மா வந்தாள், அக்கா போனாள்!
            புனைகதையில் (சிறுகதையில், நாவலில்) ஆண்கள் உயர்த்தப்படுவதையும், பெண்கள் தாழ்த்தப்படுவதையும் மேற்படி கூற்றுகள் இரண்டும் ஒட்டுமொத்தமாகப் புலப்படுத்துகின்றன. 
            அப்பா வந்தார், அண்ணா போனார் என்றுதான் எல்லோரும் சொல்லுகிறோம். ஆகவே அப்பா வந்தார், அண்ணா போனார் என்று நமது கதாசிரியர்கள் எழுதுவது மெத்தச் சரியே. அப்புறம், (ஈழத் தமிழில்) அம்மா  வந்தா, அக்கா போனா  என்றுதானே எல்லோரும் சொல்லுகிறோம். ஆகவே அம்மா வந்தா, அக்கா போனா என்றல்லவா அவர்கள் எழுத வேண்டும்? அம்மா வந்தாள், அக்கா போனாள்  என்ற  பேச்சுக்கே இடமில்லையே! எப்படி எழுத்துக்கு இடம் வந்தது? ஆண்களின் கையெழுத்து பெண்களின் தலையெழுத்தாகுமா? ஆகாது.
            ஆகவே அப்பா வந்தார், அண்ணா போனார் என்று எழுதும் அதே கையினால், அம்மா  வந்தார், அக்கா போனார்  என்றும் எழுத வேண்டும். அல்லது அம்மா வந்தாள், அக்கா போனாள்என்று எழுதும் அதே கையினால், அப்பா வந்தான், அண்ணா போனான் என்றும் எழுத வேண்டும். அப்பா வந்தான், அண்ணா போனான்  என்று எழுதக்கூடாது என்றால், அம்மா வந்தாள், அக்கா போனாள்  என்றும் எழுதக்கூடாது.
            முறைசார் வழக்கில் (சபையில் அல்லது புனைகதை அல்லாத ஆக்கங்களில்) அம்மா வந்தார், அக்கா போனார் என்று குறிப்பிடுகிறோம். பேச்சு வழக்கில் (ஈழத் தமிழில்) அம்மா வந்தா, அக்கா போனா என்று குறிப்பிடுகிறோம். பேச்சு வழக்கை ஒட்டி எழுதுவதாகத் தம்பட்டம் அடிப்பவர்கள் அம்மா வந்தா, அக்கா போனா என்றல்லவா எழுத வேண்டும்? பேச்சு வழக்கை ஒட்டி எழுதுவதாகக் கூறுவது வெறும் பேச்சுக்காகவா? ஒன்றில் பேச்சு வழக்கு ஓங்க வேண்டும். அல்லது தம்பட்டம் ஓயவேண்டும்.
            அம்மா வந்தாள், அக்கா போனாள்  என்று  எழுதுவதே மரபு, அந்த மரபை மாற்றுவது தப்பு என்று நமது கதாசிரியர்கள் கதையளக்கக்கூடும். அது பொதுமக்கள் மரபல்ல, ஆணாதிக்க மரபு என்பதை அவர்களுக்கு இடித்துரைப்போம். மரபின் பெயரால் அநியாயம் தொடர்வது முறையா, நியாயத்தை ஏற்று மரபு மாறுவது முறையா? மரபில் நியாயம்  உள்ளவரை அதனை நாம் நிலைநிறுத்தவே வேண்டும். மரபில் அநியாயம் பொதிந்திருந்தால் அதனை நாம் ஒழித்துக்கட்டியே தீரவேண்டும்.
            -அர், -ஆர், -கள் விகுதிகள் சமூகத்தின் பொது உடைமையாய் எழுந்தவை. அவை ஆண்களின் தனி உடைமை ஆக்கப்பட்டு விட்டன. அவை மீண்டும் சமூகத்தின் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும் - அவை ஆண், பெண் இரு பாலாருக்கும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும். அதாவது பெண் போராளி, பெண் எழுத்தாளர், பெண் வைத்தியர், பெண் வழக்குரைஞர்... போன்ற ஒட்டுச் சொற்கள் இயன்றவரை தவிர்க்கப்பட வேண்டும். அல்லது ஆண் போராளி, ஆண் எழுத்தாளர், ஆண் வைத்தியர், ஆண் வழக்குரைஞர்... போன்ற ஒட்டுச் சொற்கள் இயன்றவரை புகுத்தப்பட வேண்டும். 
            ஆண்கள் மொழிக்குள் தமது ஆதிக்கத்தை அநியாயமாகவும் அப்பட்டமாகவும் இறுமாப்புடனும் புகுத்தியுள்ளார்கள். மொழிக்குள் தாம் புகுத்திய ஆணாதிக்கத்தை ஆண்களே மனமுவந்து களைய வேண்டும். களையத் தவறினால், பெண்கள் கிளர்ந்தெழுந்து களையெடுப்பில் குதிக்க வேண்டும். அதனை விடுத்து மொழியை  நோவதுஎய்தவன்  இருக்க  அம்பை நோவது போலாகும்; என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அம்பை நோவதை விடுத்து எய்தவனை எதிர்கொள்வோம்:
      1.-அர்,  -ஆர்,  -கள்  விகுதிகள் ஆண்களை மாத்திரமன்றிப் பெண்களையும் குறிப்பவை.  ஆகவே  ஆண்களைப்  போலவே  பெண்களும்  தங்களைக் குறித்து -அர், -ஆர், -கள் விகுதிகளைத் தாராளமாகக் கையாள வேண்டும். அந்த வகையில் கவிஞர் உமா மஹேஸ்வரி, கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தி, ஆண் கவிஞர் பிரம்மராஜன் என்றெல்லாம் லதா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எழுதிவருவது வரவேற்கத்தக்கது (படைப்பாளி-வாசகர்-விமர்சகர், கணையாழி, ஜனவரி 2002, ப.59-61).
             2. -அன்,  -ஆன்  ஆகிய  ஆண்பால் விகுதிகளுக்கு எதிராக மாத்திரமே -அள்,  -ஆள்,  -ஆட்டி,  -ஆத்தி, -, -ஐ...  முதலிய பெண்பால் விகுதிகளைக் கையாள வேண்டும்:                                                                          
                         ஆசிரியன்           ஆசிரியை  
                         நண்பன்              நண்பி
                         இளைஞன்          இளைஞி         
         3. -அர், -ஆர், -கள் விகுதிகளுக்கு எதிராக (அதாவது அவற்றைக் கலப்பற்ற ஆண்பால் விகுதிகளாகக் கொண்டு, அவற்றுக்கு எதிராக) பெண்பால் விகுதிகளைக் கையாளக் கூடாது. (ஆசிரியர்நண்பர்இளைஞர்  போன்ற சொற்களைக் கலப்பற்ற ஆண்பாற் சொற்களாகவோ ஆசிரியை, நண்பி, இளைஞி போன்ற சொற்களை முறையே அவற்றின் பெண்பாற் சொற்களாகவோ எடுத்தாளக் கூடாது).
            4. -அர்,  -ஆர்,  -கள்  விகுதிகளின் இடத்தை  -அன், -ஆன்  விகுதிகள் அபகரிக்க அனுமதிக்கக் கூடாது. பொதுவாக ஆண்கள் வகிக்கும் பதவிகள் அனைத்தையும் பெண்களும் வகிக்கிறார்கள். ஆகவே என்னுடைய அக்கா ஓர் ஆசிரியை  என்று குறிப்பிடத் தேவையில்லை. என்னுடைய அக்கா ஓர் ஆசிரியர்  என்றே  குறிப்பிடலாம். குறிப்பிட வேண்டும்.
       5. எழுத்தாளர் பாலேஸ்வரி. அவ்வளவுதான். பெண் எழுத்தாளர் பாலேஸ்வரி என்பது அநாவசியம், மடைத்தனம், கூறியது கூறல். தவிர்க்கமுடியாத காரணம் இருந்தால் ஒழியப் பெண் போராளி, பெண் எழுத்தாளர், பெண் வைத்தியர், பெண் வழக்குரைஞர்... போன்ற பெண்-ஒட்டுச் சொற்களைப் பெண்கள் கையாளக் கூடாது. அத்தகைய சொல்லாட்சியை அவர்கள் அனுமதிக்கக் கூடாது. எந்த விதிக்கும் ஒரு விலக்குண்டு. அந்த வகையில் இந்த விதிக்கும் ஒரு விலக்குண்டு. எங்கேயாவது பெண் ஒட்டுச் சொல்லாய் அமைந்தே தீரவேண்டிய கட்டம் எழக்கூடும். எடுத்துக்காட்டாக ஈழ வரலாற்றில் உண்ணா நோன்பிருந்து மாண்ட முதற் பெண் தியாகி அன்னை பூபதி அவர்களே எனலாம். எந்த விதிக்கும் ஒரு விலக்குண்டு என்பது ஒப்புக்கொள்ளப்படும் அதேவேளை, அந்த விதிவிலக்கையே விதியாக விதிக்கலாகாது என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும்.
       6. பழமொழிகளைப் பொறுத்தவரை எவருக்கும் ஆக்கவுரிமை கிடையாது. ஆதலால் ஆணாதிக்கம் தொனிக்கும் பழமொழிகளை இருபாலார்க்கும் பொதுவானவையாக மீட்டியுரைக்கலாம். எடுத்துக்காட்டாக தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழியை தினை விதைத்தவர் தினை அறுப்பர், வினை விதைத்தவர் வினை அறுப்பர் என்று  மீட்டியுரைக்கலாம்.
         7. பிற இலக்கியங்களைப் போலவே தமிழ் இலக்கியத்தையும் ஆணாதிக்கம் பீடித்துள்ளது. எனினும் இலக்கியத்தில் நாம் இலகுவில் கைவைக்க முடியாது. இயற்றியவர் அதற்கு உடன்படப் போவதில்லை. இயற்றியவர் உயிருடன் இல்லாவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆக்கவுரிமை பெற்றவர் களையெடுக்கத் துணிபவர்மீது வழக்கு வைத்தல் திண்ணம்.  வள்ளுவரே  மறுபடி தோன்றி,
            காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
            மீக்கூறும் மன்னன் நிலம்  (386)
என்ற தமது  குறளை அதன் பொருளில் எதுவித மாற்றமுமின்றி,  
            காட்சிக்கு எளியர் கடுஞ்சொல்லர் அல்லரேல்
            மீக்கூறும் மன்னர் நிலம்
என்று மீட்டியுரைத்தால், யாரோ ஒரு கிழட்டு நெசவாளன் தன்னை வள்ளுவர் என்று முரசுகொட்டி ஆள்மாறாட்டம் செய்வதாகக் குற்றம்சாட்டி வழக்கு வைப்பதற்குத் தயாராய் இருக்கிறது பூம்புகார் பதிப்பகம்!
         8. கண்ணில் படும், காதில் விழும் எந்த வசனத்திலும் ஆணாதிக்கம் தென்பட்டால், அதனை இரு பாலார்க்கும் பொதுவானதாக மீட்டியுரைத்து, அதனைச் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சுட்டிக்காட்டலாம். எடுத்துக்காட்டாகத் தமிழர் தகவல், தமிழர் மத்தியில் என்பவை போலத் தமிழன் வழிகாட்டி என்பதைத் தமிழர் வழிகாட்டி என்று மீட்டியுரைக்கலாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சுட்டிக்காட்டலாம். எங்களைத் தமிழா! தமிழா! என்று விளித்து எழுதுவதை விடுத்து, தமிழரே! தமிழரே! என்று விளித்து எழுதும்படி நமது புத்திமான்களுக்கும் புத்தி புகட்டலாம்.
     தமிழில்தான் ஆணாதிக்கம் நிலைத்துள்ளது, ஆங்கிலம் உட்படப் பல்வேறு மொழிகளில் அது களையப்பட்டுவிட்டது, ஏனையவை ஆணாதிக்கத்தைக் களையவல்லவை, தமிழ் களையவல்லதல்ல என்று கருதிச் சிலர் தெம்புகுன்றக்கூடும். இவை வெறும் தப்புக் கணக்குகள். தமிழ் மொழியில் காணப்படும் ஆணாதிக்கத்தைக் காட்டிலும் கிரேக்க, ஆங்கில, அறபுமொழிகளில்  காணப்படும் ஆணாதிக்கம் பன்மடங்கு அதிகம். அந்த மொழிகளிலிருந்து ஆணாதிக்கத்தைக் களைவது மிகவும் கடினம் என்றே தெரிகிறது. ஆனால் தமிழ் மொழியில் காணப்படும் ஆணாதிக்கத்தை -அர், -ஆர், -கள் விகுதிகளைக் கொண்டே பெருமளவு களையலாம். தமிழின் நெகிழ்வைப் பெண்கள் முற்றுமுழுதாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
         ஆணாதிக்கம் சமூகத்திலிருந்து மொழியினுள் கசிந்து, மொழியிலிருந்து சமூகத்துக்கு மீள்வது. அந்த வகையில் ஆணாதிக்கம் ஒரு சமூகக் கொடுமை மட்டுமல்ல, அது ஒரு மொழிக் கொடுமையும் கூட. சட்டத்தின் முன் மட்டுமல்ல, மொழியின் முன்னும் யாவரும் சமன் என்பதைப் பெண்கள் நிலைநாட்ட வேண்டும். அதனைச் சொல்லிலும் செயலிலும் அவர்கள் காட்ட வேண்டும். தமது ஆக்கங்களில் அதனை ஊட்ட வேண்டும். நமக்கேன் வம்பு என்று பெண்கள் வாளாவிருக்கக்கூடாது.
      ஒரேயொரு கேள்வி இக்கட்டுரையைச் சரிவரப் பூர்த்திசெய்ய விடாது எமது அடிமனத்தை அரித்துக் கொண்டிருக்கிறது: தொழிலாளன், எழுத்தாளன், பேச்சாளன் போன்று -ஆளன் விகுதி கொண்ட ஆண்பாற் சொற்களின் பெண்பாற் சொற்கள் யாவை? தொழிலாளி, தொழிலாளர் இரண்டும் இரு பாலாரையும் கருதும். தனியே பெண்பாலாரை மட்டும் குறிக்கும் சொல் என்ன? தொழிலாளள் அல்லது தொழிலாட்டி அல்லது தொழிலாளினி எனலாமா? அவை பெண்பாலாரைக் குறிக்கும் என்றால், அவை ஏன் வழக்கில் இல்லை? தொழிலாளினி, எழுத்தாளினி, பேச்சாளினிஎன்று ஏற்கெனவே தாம் பாவித்ததுண்டு என்று தெரிவிக்கும்  எழுத்தாளர் திரு.அ.முத்துலிங்கம் அவர்கள், அப்படிப் பாவித்தால் என்ன என்றும் வினவுகிறார்.
___________________________________________________________________________________________
மணி வேலுப்பிள்ளை                                                                                              2004









No comments:

Post a Comment