மொழியின் இயல்புகளுள் மொழிபெயரியல்பும் (Translatability) ஒன்று. பொதுவாக எந்த ஒரு
பொருளும் மொழிக்கு மொழி பெயரக் கூடியதே. அவ்வாறு பெயர்வதற்கு ஏதுவாகவே மொழி
அமைந்துள்ளது.
ஒரு
படைப்பு-மொழியின் வரையறைகள் பெயர்ப்பு-மொழிக்கும் பொருந்த வல்லவை:
நீ சொல்ல விரும்புவதை
எடுத்துரைப்பதற்கு ஒரேயொரு சொல்லே இருக்கிறது. அதற்கு உயிர் கொடுப்பதற்கு ஒரேயொரு
வினையே இருக்கிறது. அதனை விசேடிப்பதற்கு ஒரேயொரு பெயரடையே இருக்கிறது. அந்தச்
சொல்லை,
அந்த வினையை, அந்தப் பெயரடையை நீ தேடிப்
பிடிக்க வேண்டும். அதற்கு ஒத்த சொல்லை நீ இட்டுக்கட்டக் கூடாது. உனது
கெட்டித்தனத்தையும் கைவண்ணத்தையும் காட்டிச் சமாளிக்கக் கூடாது (A letter
from Flaubert to Maupassant).
அதேவேளை, சிந்திக்கும் விதமும் சொல்தொடரியலும்
மொழிக்கு மொழி வேறுபடுவதால், வேதாகமத்தை
எழுதியவர்களின் உளக்கருத்தை நேரிய முறையில் எடுத்துரைப்பதற்கு வசன அமைப்பை
அடிக்கடி சீரிட வேண்டியுள்ளது. இடத்துக்கிடம் சொற்கள் பொருள்படும் விதத்தை
இடைவிடாது உற்றுநோக்க வேண்டியுள்ளது (The Holy Bible, New International version, International Bible
Society, New Jersey, Preface, viii). இக்கூற்றின்படி மொழிக்கு மொழி வேறுபடும் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. சிந்திக்கும் விதம்
2. சொல்தொடரியல்
3. வசன அமைப்பு
4. இடத்துக்கிடம் சொற்களின் பொருள் வேறுபடல்
இனி, வெறும் சொற்களை விடுத்து, வசனங்களைக் கருத்தில்
கொண்டு, மறைகுறிப்பாய் விளங்கும் பொருளில் கருத்தூன்றி
மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்பே சிறக்கும். அத்தகைய மொழிபெயர்ப்புக்கு உறுதுணை
புரியும் அம்சங்களை ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னரே ஏதியன்
தோலே (Etienne Dolet 1509-1546) என்னும் பிரெஞ்சு
மொழிபெயர்ப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 1540ல் சிறந்த
மொழிபெயர்ப்பு குறித்து எழுதிய ஒரு நூலில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு 5 புத்திமதிகளை அவர் தெரிவித்துள்ளார். அவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய
நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழ்ப்படுத்தப்பட்ட மேற்படி புத்திமதிகள்
பின்வருமாறு:
1. மூலகர்த்தா
எடுத்துரைக்கும் பொருளையும், அதன் விளக்கத்தையும்
மொழிபெயர்ப்பாளர் செவ்வனே புரிந்துகொள்ள வேண்டும். அவற்றைப் புரிந்துகொள்பவரின்
மொழிபெயர்ப்பு என்றுமே மங்காது. விளங்கிய பொருளையே எளிதாகவும் முழுதாகவும்
பெயர்க்க முடியும்.
2. மொழிபெயர்ப்பவருக்கு இரு மொழிகளிலும் புலமை வேண்டும். அத்தகைய
மொழிபெயர்ப்பாளர் மொழியின் மாண்பினைக் குலைக்கவோ குறைக்கவோ போவதில்லை. ஒவ்வொரு
மொழிக்கும் சொந்தச் சிறப்புகள் (நடை, பாணி, நயம்) உள்ளன. அத்தகைய சிறப்புகள் குன்றாது மொழிபெயர்க்க வேண்டும். அவ்வாறு
மொழிபெயர்க்காதோர் இரு மொழிகளுக்கும் ஊறு விளைவித்தோர் ஆவர். அவர்கள் இரு
மொழிகளின் சிறப்புகளையும் வெளிக் கொணராதோர் ஆவர்.
3. மொழிபெயர்ப்பாளர்
சொல்லுக்குச் சொல்லாக மொழிபெயர்க்கும் முறைக்குக் கட்டுண்டிருத்தலாகாது. புலமை
குறைந்தவர்களே அல்லது போதாதவர்களே அவ்வாறு மொழிபெயர்ப்பர். ஒரு சிறந்த
மொழிபெயர்ப்பாளர் சொல்லொழுங்கினை விடுத்து, வசன ஒழுங்கிலேயே
கருத்தூன்றுவார். மூலகர்த்தாவின் எண்ணத்தை எடுத்துரைக்கும் தறுவாயில், இரு மொழிகளின் சிறப்புகளையும் வெளிக்கொணரும் அற்புதத்தை நிகழ்த்துபவரே
சிறந்த மொழிபெயர்ப்பாளர். ஆதலால் மூல வசனத்தின் தொடக்கத்தில்தான் உங்கள்
மொழிபெயர்ப்பும் தொடங்கவேண்டும் என்று கொள்வது தவறு. மூலகர்த்தாவின் எண்ணத்தை எடுத்துரைக்கும்
நோக்குடன் நீங்கள் சொல்தொடரியலைக் குலைக்க நேர்ந்தாலும் கூட, உங்களை எவரும் குறைகூறப் போவதில்லை. கட்டின்றி மொழிபெயர்ப்பதை விடுத்து,
கட்டுண்டு மொழிபெயர்ப்போரின் மடைமையை என்னால் சகிக்க முடியவில்லை.
வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல்லாக மொழிபெயர்க்க முற்படும்
மூடர்கள் இழைக்கும் தவறினால் மூலகர்த்தாவின் எண்ணம் ஈடேறப் போவதில்லை. எம்மொழியின்
செழுமையும் முழுமையும் புலனாகப் போவதில்லை. மாறாக, மொழிபெயர்த்தவரின்
அறியாமையே புலனாகும். ஆகவே கட்டுண்டு மொழிபெயர்க்கும் கேட்டினைத் தவிர்ப்பதில்
கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.
4. மொழிபெயர்ப்பாளர் பொது
வழக்கிலுள்ள சொற்களையே எடுத்தாள வேண்டும். சில மொழி பெயர்ப்பாளர்கள்
அருவருக்கத்தக்க முறையில், முட்டாள்தனமான முறையில் புதிய
சொற்களைப் புகுத்துவதுண்டு. அத்தகைய மொழிபெயர்ப்பாளர்களின் தான்தோன்றித்தனத்தை
நீங்கள் பொருட் படுத்தலாகாது. அவர்களுக்குக் கற்றோரிடை மதிப்புக் கிடையாது. ஆதலால்
நீங்கள் அவர்களைப் பின்பற்றலாகாது. அதேவேளை, பொது வழக்கில்
இல்லாத சொற்களை நீங்கள் அறவே கையாளலாகாது என்று நான் கூறவில்லை. வழக்கிலுள்ள
சொற்கள் கைகொடாவிடத்துப் புதிய சொற்களைப் புகுத்தியே ஆகவேண்டும்.
5. மொழிபெயர்ப்பு அணி
இலக்கணத்துக்கு அமைய வேண்டும். மொழியமைதி கெடா வண்ணம், உள்ளம்
உவக்கும் வண்ணம், காதில் இனிக்கும் வண்ணம் சொற்களைத் தொகுக்க
வேண்டும். அத்தகைய மொழிபெயர்ப்பே கருத்தும் கனதியும் வாய்ந்ததாய் விளங்கும் (Translation/History/Culture,
Editor: Andre Lefevere, Publisher: Routledge,
London & New York, 1992, p.27-28).
மேற்கண்ட புத்தமதிகள்
உள்ளத்தில் பதிந்த நிலையில் ஓர் ஆங்கிலக் கதையின் முதலாவது பந்தியை நாம்
வாசித்துப் பார்ப்போம்:
It is six in the morning and I sit
in my kitchen looking out at the garden, watching the sun slant obliquely past
the old lime tree and across my lawn to reveal the dense silver mesh of spiders
webs linking the grass stems. For a few seconds, as the earth turns and the sun
continues to rise, my tufty rectangle of suburban lawn flashes in my fascinated
eyes like a burnished shield - before becoming dull green grass again, my
quotidian epiphany gone for ever (William Boyd, Fascination, The New Yorker, 2002/03/04).
மேற்கண்டவாறு தொடங்கும்
கதை முழுவதையும் நாம் வாசித்துவிட்டோம் (என்று வைத்துக்கொள்வோம்). அப்புறம்
இதற்கொரு தமிழாக்கம் வெளிவருகிறது என்றும் வைத்துக்கொள்வோம். முழுமுதல் ஆங்கில
ஆக்கத்தை ஏற்கெனவே வாசித்த நாம் அப்புறம் வெளிவந்த தமிழாக்கத்தை நாடுவோமா? நாடக்கூடும். சரி, நாடுவதாகவே வைத்துக்கொள்வோம்.
எதற்காக நாடுகிறோம்? பொருளுக்காகவா? இல்லை.
பொருளை நாம் ஏற்கெனவே ஆங்கிலத்தில் அறிந்துவிட்டோம் அல்லவா! பிறகு எதற்காக அதன்
தமிழாக்கத்தை நாம் நாடுகிறோம்? மொழிக்காக!
அந்த ஆக்கத்தின் பொருள்வளத்தையும்,
அந்த ஆக்கத்தைத் தாங்கிவரும் (ஆங்கில) மொழிவளத்தையும் நாம் ஏற்கெனவே
துய்த்துவிட்டோம். அத்தகைய ஒரு மொழிவளத்தை நாம் தமிழிலும் துய்க்கத் துடிக்கிறோம்.
அதாவது ஆங்கில மொழியில் அமைந்த ஓர் ஆக்கம் தமிழில் வெளிவரும்பொழுது (ஏற்கெனவே அதனை ஆங்கிலத்தில் வாசித்த) நாம்
அதனை நாடுகிறோம் என்றால், அது, அதன்
(தமிழ்) மொழிவளத்துக்காகவே. அதேவேளை ஓர் ஆங்கில ஆக்கத்தை ஏற்கெனவே வாசிக்காத
ஒருவர் அதன் தமிழாக்கத்தை நாடுவது பொருள்வளம், மொழிவளம்
இரண்டுக்குமாகவே.
ஆகவே ஒரு தமிழாக்கத்தில்
அதன் பொருள்வளத்துக்கு நிகரான இடம் அதன் மொழிவளத்துக்கும் உண்டு. அந்த வகையில் அது
இன்னொரு வழமையான படைப்பாக அமைய வேண்டும். பொருள்வளத்தைப் பொறுத்தவரையே
மொழிபெயர்ப்பாளர் மூலகர்த்தாவுக்குக் கடமைப்பட்டவர். மொழிவளத்தைப் பொறுத்தவரை அவர்
மூலகர்த்தாவுக்குக் கடமைப்பட முடியாது. ஆகவே ஒரு மொழிபெயர்ப்பு ஓங்கவில்லை என்றால்,
அது மொழிவளத்தால் ஓங்கவில்லை என்பதே பொருள். மொழிவளத்தால் ஓங்கிய
ஒரு தமிழாக்கம் அதன் முழுமுதற் படைப்புக்கு நிகரான இடத்தைப் பெறும். பொருள்வளமும்
மொழிவளமும் சேர்ந்ததே இலக்கிய வளம். அத்தகைய தமிழாக்கமே தமிழ் இலக்கியத்தை
வளப்படுத்தும்.
ஓர் ஆக்கத்தை ஏற்கெனவே வேற்று
மொழியில் வாசித்த ஒருவர் மாத்திரமல்ல, எந்த ஒரு வாசகருமே
வெற்றுவெறிதான ஒரு மொழிபெயர்ப்பை நாடப் போவதில்லை. மூலப் பொருள்வளத்துக்கு அப்பால்,
மூல மொழிவளத்துக்கு நிகரான தமிழ்வளம் படைத்த ஒரு மொழிபெயர்ப்பையே
அவர் நாடுவார். அத்தகைய ஒரு வாசகரை நிறைவுற வைக்கும் விதமாகவே ஒரு மொழிபெயர்ப்பு
அமைய வேண்டும். மூல மொழிவளத்துக்கு நிகராக அமையாத வெறுந் தமிழாக்கம் ஒரு வீண்
உருப்படியாகவே கிடந்து மாளும்.
அதாவது (1) பொருள்வளத்தைப் பொறுத்தவரை ஒரு மொழிபெயர்ப்பினால் தமிழுக்கு ஒரு புதிய
படைப்பு கிடைக்கும் அதேவேளை, (2) மொழிவளத்தைப்
பொறுத்தவரையும் அதே மொழிபெயர்ப்பினால் தமிழுக்கு ஒரு புதிய படைப்பு கிடைக்க
வேண்டும். அதே சமயம் பொருள்வளத்தால் மாத்திரமே ஒரு மொழிபெயர்ப்பு அதன் முழுமுதற்
படைப்பை அடியொற்றி அமைய வேண்டும். மொழிவளத்தைப் பொறுத்தவரை அதில் தனித்துவம் மிளிர
வேண்டும்.
அதேவேளை மொழிபெயர்ப்பு
ஒரு விஞ்ஞானம் அல்ல என்னும் உண்மையை இங்கு நாம் வலியுறுத்த விரும்புகிறோம். எனவே
ஒரு மொழிபெயர்ப்பை எவ்வாறு ஒப்பேற்றுவது என்பதை எம்மால் தி;ட்வட்டமாக
வரையறுக்க முடியாது. மொழிபெயர்ப்பு ஒரு கலை. அதாவது மொழிபெயர்ப்பில் ஒன்றுக்கு
மேற்பட்ட உத்திகள் கைகூடும். ஆகவே ஓர் ஆக்கத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட
மொழிபெயர்ப்புகள் கைகூடல் திண்ணம். எனினும் சொல்லுக்குச் சொல், தொடருக்குத் தொடர், வசனத்துக்கு வசனம், பந்திக்குப் பந்தி, முழுமுதல் மொழியின் பாணி எவ்வாறு
அமைந்துள்ளது என்பதைக் கச்சிதமாய்க் கண்டறிந்து, அதற்கு
நிகரான ஒரு பாணியில் ஒருவர் தமது தமிழாக்கத்தை ஒப்பேற்றுவாராயின், அதன் வாயிலாகவே தமிழுக்கு ஒரு புதிய படைப்புக் கிடைக்க முடியும். அத்தகைய
ஒரு மொழிபெயர்ப்பே தமிழ் இலக்கியத்தைச் செழுமைப்படுத்தும்.
இவற்றைக் கருத்தில் கொண்டு
மேற்படி ஆங்கிலப் பந்தியை நாம் மொழிபெயர்த்துப் பார்ப்போம். இதனைப் பல்வேறு
விதங்களில் மொழிபெயர்க்கலாம். இது ஒரு விதம் மட்டுமே:
காலை ஆறு மணி. எனது சமையலறையில்
நான். எனது பார்வை வெளியே. வளவில் கொல்லை. நீள்சதுர வடிவில் கூம்பிய புல்தரை.
அந்தலையில் பழம்பெரும் எலுமிச்சை. அதற்கப்பால் சாய்ந்தெழும் சூரியன்.
புல்பூண்டுகளைத் தொடுத்து அடர்ந்து படர்ந்த சிலந்திவலை. காலை வெயிலில் ஒளிரும்
அதன் வெண்மை. உலகம் சுழல, கதிரவன் மேலெழும் அந்த ஒருசில
நொடிகளில் ஒரு கேடயம்போல் எங்கள் புல்தரை பளிச்சிடும். நான் ஒருகணம் மெய்மறப்பேன்
- மறுகணம் அது திரும்பவும், வெறும் பச்சைப் புல்லாய்
மாறிவிடும். எனது அன்றாடக் கனவும் அடியோடு கலைந்துவிடும்.
மேற்படி ஆங்கிலப் பந்தி,
தமிழாக்கம் இரண்டிலும் கையாளப்பட்ட எழுத்துக்களும் சொற்களும் கீழே
ஒப்பிடப்பட்டுள்ளன:
___________________________________________________
ஆங்கிலம் தமிழ்
___________________________________________________
எழுத்துக்கள் 375 396
___________________________________________________
சொற்கள் 86 59
___________________________________________________
ஆங்கிலத்தை விடத் தமிழில் அதிக எழுத்துக்கள் தேவைப்படும் அதேவேளை, தமிழை விட ஆங்கிலத்துக்கு அதிக சொற்கள் தேவைப்படுகின்றன. அத்துடன், சொற்களின் எண்ணிக்கையை விட எழுத்துக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இரு மொழிகளுக்கும் இடையே வேறுபாடு குறைவு. பல்வேறு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபொழுது இந்த உண்மை புலப்பட்டது. ஆங்கிலத்தை விடத் தமிழில் அதிக எழுத்துக்கள் தேவைப்படுவது நெடுங்கணக்கை ஒட்டிய விடயம் போலும். தமிழில் சொற்கள் குறைவதற்கு அதன் புணர்ச்சியே தலையாய காரணம். அந்த வகையில் ஏழே ஏழு சொற்களைக் கொண்ட குறளை மொழிபெயர்ப்பதற்கு ஏழுக்கு மேற்பட்ட ஆங்கிலச் சொற்கள் தேவைப்படும். அதேவேளை உரைநடையை விட செய்யுளில் மாற்று மொழிபெயர்ப்புக்கான வாய்ப்புகள் மேலும் அதிகம். ஓர் எடுத்துக்காட்டு:
நெருநல் உளனொருவன்
இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு (336).
நேற்று வாழ்ந்தார்,
இன்று மாண்டார்! இந்த உலக வாழ்வின் பெருமை இவ்வளவுதான்! இதற்குப்
பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு மொழிபெயர்ப்புக்கும்
தேவைப்பட்ட ஆங்கிலச் சொற்களின் எண்ணிக்கையைக் கவனிக்கவும்:
1.
Existing yesterday, to-day to nothing hurled
Such greatness owns the transitory
world (G.U.Pope - 12).
2.
“He was here yesterday”, gloats the earth
over man,
“Today he is gone” (P.S.Sundaram - 13;).
3.
This world possesses the greatness of one
Who yesterday was and to-day is
not (W.H.Drew - 14;).
4
But yesterday a man was and to-day he is not:
That is the wonder of wonders in
this world (V.V.S.Iyer - 19;).
இனி கிறீக்கிலிருந்து
ஆங்கிலத்துக்குப் பெயர்க்கப்பட்ட ஒரு செய்யுட் கூறைக் கவனிக்கவும்:
There was the girl, screaming like an
angry bird,
When it finds its nest left empty and
little ones gone.
Just like that she screamed, seeing the
body
Naked, crying and cursing the ones that
had done it. (38 words)
(Sophocles
-496-406 BC-, The Theban Plays, Antigone, Lines 425-8, Translated by:
E.F.Watling, Penguin, UK, 1974, p.137).
இதற்கு
ஒரு மாற்று ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டு. அதன் தோற்றுவாய் பற்றிய குறிப்பைத்
தொலைத்த தவறுக்கு வருந்துகிறோம்:
She wailed out loud
that sharp sound of bitterness
a bird makes when she looks in her nest.
It’s empty, it’s a widow’s bed,
and the baby chicks are gone.
And this girl,
when she saw the corpse was bare,
she cried that same way and groaned and
mourned for it.
And she prayed hard curses on the one
who did that to it. (64 words)
முதலாவது
ஆங்கில மொழிபெயர்ப்பில் இடம்பெறாத ஒரு விடயம் (it’s a widow’s bed) இரண்டாவது ஆங்கில
மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளது. ஆகவே இரண்டாவது மொழிபெயர்ப்பை நாம்
தமிழப்படுத்திப் பார்க்கலாம். கவனிக்கவும், எதற்கும்
மாற்றுத் தமிழாக்கங்கள் கைகூடும்:
குஞ்சுகள் வெளியேற
விதவையின் படுக்கையைப் போல்
கூடு வெறிச்சோட
வெதும்பி ஓலமிடும் குருவியைப் போல்
ஓலமிட்டாள் ஒரு சிறுமி.
உயிர் பிரிந்த உடலின்
உடை உரிந்து சென்றவரை
திட்டினாள்.
வெற்றுடலை நினைந்து விம்மினாள்,
நொந்து கலங்கினாள்
வெந்து புலம்பினாள். (28 சொற்கள்).
இங்கு பேசப்படும் உடலும் உயிரும் கூடும்
பறவையும் சிந்தையில் தென்படும் வேளையில்
வேறொரு குறள் உள்ளத்தை உறுத்துகிறது:
குடம்பை தனித்துஒழியப்
புட்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு (338).
முட்டைக்குள்
இருக்கும் குஞ்சு அதனை உடைத்துப் பறந்து செல்கிறது. அவ்வாறே உடலை விடுத்து உயிர் பிரிந்து
செல்கிறது. முட்டைக்கும் குஞ்சுக்கும் உள்ள உறவெல்லாம் குஞ்சு வெளியேறும்வரையே.
அத்தகைய குறுகிய உறவே உடலுக்கும் உயிருக்கும் இடையே நிலவுகிறது! இதற்கோர் ஆங்கில
மொழிபெயர்ப்பு:
Like a bird’s to the shell it leaves
Is a life’s link to its body (15 சொற்கள்).
(P.S.Sundaram, The Kural, Penguin Books, London, 1991, p.52).
_________________________________________________________________________________________
மணி வேலுப்பிள்ளை
No comments:
Post a Comment