ஜெயமோகனின் 'நூறு நாற்காலிகள்'

ஜெயமோகன் நினைவின் ந்தி

“இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழல்பவை... அறம் பற்றிய ஆதாரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுட வெற்றியைக் கொண்டாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை” (ஜெயமோகன், அறம்-முன்னுரை, வம்சி, சென்னை, 2011).

அவற்றுள் “நூறு நாற்காலிகள்” நூறு கதைகளுக்கு நிகர். அது சாதியத்தைச் சாடி, மானுடத்தை நாடும் தாக்கமான சிறுகதை. தமிழில் சாதியம் குறித்து அத்துணை கனதிவாய்ந்த வேறொரு சிறுகதையை ஜெயமோகன் எழுதியது கிடையாது. கல்நெஞ்சும் குருதிசிந்தும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ள இக்கதையின் ஓசை இலக்கிய அரங்கிற்கு அப்பால் சமூக, அரசியல், பண்பாட்டு அரங்குகளில் ஓங்கி எதிரொலிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. 

என் அயலில் உள்ள ரொறன்ரோ மாநகர நூலகக் கிளையில் மேற்படி சிறுகதைத் தொகுதியை நான் இரவல்பெற்று வாசிக்கத் தொடங்கினேன். அதன் 143ம் பக்கத்தில் தொடங்கும் இக்கதையை 153ம் பக்கம் முடியும் வரை சாதியக் கண்ணோட்டத்துள் கட்டுண்டு என்னால் வாசிக்க முடிந்தது. 153ம் பக்கத்தில் எழுப்பப்படும் வினாக்களும், இறுக்கப்படும் விடைகளும் என்னைக் கிளர்ந்தெழ வைத்தன:

“இப்போது ஓர் ஊகக் கேள்வி. நீங்கள் அதிகாரியாக இருக்கும் வட்டத்தில் நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி. ஒருபக்கம் நியாயம் இருக்கிறது. இன்னொரு பக்கம் உங்கள் சாதியினர் இருக்கிறார்கள். என்ன முடிவெடுப்பீர்கள்?”

“சார், நியாயம் என்றால் என்ன? ...வெறும் சட்டவிதிகளும் சம்பிரதாயங்களுமா நியாயத்தைத் தீர்மானிப்பது? நியாயம் என்றால் அதன் அடிப்படையில் ஒரு விழுமியம் இருந்தாக வேண்டும் அல்லவா? சமத்துவம்தான் விழுமியங்களிலேயே மகத்தானது. புனிதமானது. ஒரு நாயாடியையும் இன்னொரு மானுட உயிரையும் இருபக்கங்களில் நிறுத்தினால், சமத்துவம் என்ற தர்மத்தின் அடிப்படையில் அப்போதே நாயாடி மாபெரும் அநீதி இழைக்கப்பட்டவன் ஆகிவிடுகிறான். அவன் என்ன செய்திருந்தாலும் அது நியாயப்படுத்தப்பட்டு விடுகிறது.”

“... மிஸ்டர் தர்மபாலன், கொலை? கொலை செய்திருந்தால்?”...

“சார், கொலையே ஆனாலும் நாயாடிதான் பாதிக்கப்பட்டவன்”...

ஜெயகாந்தனும் இதையே எடுத்துரைத்தார்: “பலமானவர்களையும் பலஹீனமானவர்களையும் ஒன்றாக வைத்துக்கொண்டு சுதந்திரம் என்றால், அது சரியாக இருக்க முடியாது” (வே. சபாநாயகம், ஞானரதம் இதழ்த்தொகுப்பு, ப. 603).

மானுட சமத்துவ விழுமியம் நிலவாதவரை அல்லது நிலைநாட்டப்படாதவரை “சட்டத்தின் முன் யாவரும் சமன்” என்னும் விதி செல்லுபடியாகாது என்பதை உணர்த்தும் இவ்வினாவிடை என்னை வீறுகொள்ள வைத்தது. மேற்கொண்டு சாதியக் கண்ணோட்டத்துள் கட்டுண்டு என்னால் வாசிக்க முடியவில்லை. கதையின் பலம் அது! நான் இனத்துவத்தால் தாக்குண்டவன். இனத்துவக் கண்கொண்டே என்னால் மேற்கொண்டு வாசிக்க முடிந்தது. எனது பலவீனம் அது!

மானுட வெற்றிக்கு இட்டுச்செல்லும் சமத்துவ விழுமியத்தை எழுத்துலகில் கொண்டாடும் மேற்படி வினாவிடையை வாசித்து நான் குமுறியவேளையில், “யாவரும் கேளிர்!” என்று புலவர் கணியன் இட்ட முழக்கமும்,  அதற்கு உரை எழுதுவது போல் மண்ணுலகில் மனித உரிமைகளை நிலைநாட்டும் நோக்குடன் வெளியிடப்பட்ட அந்த மகத்தான பிரகடனமும் நினைவுக்கு வந்தன:

“இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அபிப்பிராயம் அல்லது வேறு அபிப்பிராயம், தேசியத் தோற்றுவாய் அல்லது சமூகத் தோற்றுவாய், உடைமை, பிறப்பு அல்லது வேறு தகுநிலை போன்ற வேறுபாடின்றி அனைவரும் இந்தப் பிரகடனத்தில் இயம்பப்பட்ட உரிமைகள், சுதந்திரங்கள் அனைத்துக்கும் உரித்துடையவர்கள்” (உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம், உறுப்புரை 2, ஐ.நா., 1948). ஐந்து வல்லரசுகளையும், ஆஸ்திரேலியா, கனடா, சிலி, லெபனான் ஆகிய நாடுகளையும் சேர்ந்த ஒன்பது பிரதிநிதிகள் இந்த அரிய பிரகடனத்தை வரைந்ததாகத் தெரிகிறது. சாதியம் அவர்களை உறுத்தியிருக்க நியாயமில்லை. சாதியம் ஓங்கிய தென்னாசிய நாடுகள் சாதியைச் சேர்க்கும்படி அவர்களை வேண்டியதாகவும் தெரியவில்லை.

“சமூகத் தோற்றுவாய், பிறப்பு அல்லது வேறு தகுநிலை” என்பவற்றுள் சாதி அடங்கக்கூடும். எனினும், “இனம், நிறம், பால், மொழி, மதம்” போல் சாதியும் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பதே எனது வேணவா.  

மானுட சமத்துவம் ஓங்காவாறு பாரபட்சங்களை நிலைநிறுத்தும் ஒட்டுமொத்தக் கட்டுக்கோப்பை இச்சிறுகதை திரும்பத் திரும்ப இனங்காட்டியுள்ளது:

 “எங்கும் எப்போதும் நான் வெளியே நிறுத்தப்பட்டேன்” (157).

 “என்னை நோக்கிய எல்லா சொற்களும் நீ வேறு என்பதாகவே இருந்தன” (158).

 “அவர் எடுத்த முடிவல்ல அது. அவருக்குப் பின்னால் ஒரு அமைப்பே இருக்கிறது. அதனுடன் நான் மோத முடியாது...” (159).

 “(அதிகாரம்) எப்போதும் கூட்டான ஒரு செயல்பாடுதான்... ஆகவே ஒட்டுமொத்த அதிகாரத்தின் செயல்திட்டத்துடன் சரியாக இணைந்து கொள்வதன்மூலமே தனி அதிகாரிக்கு அதிகாரம் கைவருகிறது...” (181).

“எனக்கு மேலும் எனக்கு கீழும் இருந்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் என்னை வெளியே தள்ளியது” (182).

இந்தியா, இலங்கை உட்பட உலகம் முழுவதும் உழலும் சிறுபான்மைக் குழுமங்கள் அனைத்தையும் இத்தகைய ஒட்டுமொத்தக் கட்டுக்கோப்பு பல்லாயிரம் ஆண்டுகளாய் பலிகொண்டு வந்துள்ளது. அதனால் தர்மபாலன் மட்டுமல்ல மணி வேலுப்பிள்ளையும் “பாதிக்கப்பட்டவன்தான்!” கொலையே ஆனாலும் நான்தான் “பாதிக்கப்பட்டவன்!”  ஆதலால், “நீங்கள் சொன்ன பதில் நிர்வாகக் கண்ணோட்டத்தில் மிகமிகத் தவறானது” (155) என்ற குப்தாவின் கூற்றும் எனக்குச் செல்லுபடியாகாது.   

“நூறு தலைமுறையாக ஓடியாகிவிட்டது.” (171)

“பின்னாளில் யோசித்துக்கொண்டேன், சுபாமேல் (அம்மா) கொண்ட வெறுப்பு எத்தனை ஆழம் மிக்கது என. எத்தனை நூற்றாண்டு வரலாறிருக்கும் அதற்கு!” (188).

அவ்வாறு ஆழ்ந்து, பரந்து, விரிந்த வரலாறு படைத்த சாதிகளுக்கு இடைப்பட்ட வெளிகளை பிரஜானந்த அடிகளும் தர்மபாலனும் “நூறு நாற்காலிகள்” கொண்டு நிரப்ப விழைகிறார்கள். அவர்களுடைய வேட்கை ஈடேறும் பட்சத்தில், அது முற்றிலும் மெச்சத்தக்கதாகவும், வியக்கத்தக்கதாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

நாராயணகுருவின் “தெய்வமே காத்துகொள்க, கைவிடாதிங்கு ஞங்களே” என்னும் பாடல் (காப்பனின் வாயில்) இங்கு திரும்பத் திரும்ப ஒலிக்கிறது. (தர்மபாலனின் மொழியில்) “பிரஜானந்தரின் அந்தக் குருகுலம் வெற்றியா தோல்வியா என்று என்னால் சொல்லமுடியவில்லை” (168). எனினும், பகைமையையும் துவேஷத்தையும் தவிர்த்தால், இசைவு சாத்தியம்” என்று விளம்புகிறார் ஜெயகாந்தன் (ஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள், ப.155).\
 “நூறு நாற்காலிகள்” ஊடாக வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆட்களிடையே தோழமை ஓங்கும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை. எனினும் சாதிகளை ஊடறுத்து ஓங்குந் தோழமையால் சாதிகள் மங்குவது அரிது. “குகனொடும் ஐவரானோம்”, சுக்கிரீவனுடன் அறுவரானோம், விபீடணனுடன் எழுவரானோம் என்றெல்லாம் இராமன் தோழமை கொண்டாடியதுண்டு. ஈற்றில் குகனும், சுக்கிரீவனும், விபீடணனும் தத்தம் (வேடுவ, வானர, அரக்க) குலத்துக்கே மீளுகிறார்கள். தோழமை என்னும் சொல் குலங்களின் நிலைபேற்றை உணர்த்துகிறது. வரலாற்றை ஊடறுத்து நீடிக்கும் இந்நிலைபேறு சாதிய, இனத்துவ, நிறத்துவ, மொழித்துவ, மதத்துவ, பால்மைய... குழுமங்கள் அனைத்துக்கும் பொருந்துகிறது.     

பாரதியார், பரமஹம்சர், விவேகானந்தர், காந்தி அடிகள், நாராயணகுரு முதலிய ஞானவான்கள் ஒட்டுமொத்தக் கட்டுக்கோப்பினுள் மானுட சமத்துவத்தை நாடினார்கள். ஆன்மீகத் தரப்பு, நடப்புலகத் தரப்பு என்னும் இரண்டுக்கும் இடைப்பட்ட எழுத்துலகில் முறையே  இடநடுவிலும் வலநடுவிலும் நிலைகொள்ளும் ஜெயகாந்தன், ஜெயமோகன் போன்ற சொல்லேருழவர்கள் ஒட்டுமொத்தக் கட்டுக்கோப்பினுள் மானுட சமத்துவத்தை நாடுகிறார்கள். நடப்புலகிலோ அதே கட்டுக்கோப்புக்கு உட்பட்ட சாதிய, இனத்துவக் கொடுமைகளால் தாக்குண்ட குழுமங்கள் அக்கட்டுக்கோப்புக்கு வெளியே மானுட சமத்துவத்தை நாடுவதுண்டு. ஒட்டுமொத்தக் கட்டுக்கோப்புக்கு வெளியே புத்தபிரான் நாடிய அதே மானுட சமத்துவத்தை 2,500 ஆண்டுகள் கழித்து அம்பேத்கார் நாட நேர்ந்தமை சாதியத்தின் ஆழம், அகற்சி, நீட்சி முழுவதையும் அளந்து காட்டுகிறது.   

6ம் நூற்றாண்டில் மகாநாம தேரர் எழுதிய “மகாவம்சம்” என்னும் வரலாற்றுக் காவியத்தின்படி, எல்லாளனை (ஆட்சிக்காலம் கி.மு.205-161) தோற்கடித்த துட்டகைமுனு (ஆட்சிக்காலம் கி.மு.161-137), இலட்சக் கணக்கான உயிர்கள் கொன்றொழிக்கப்பட்டதை எண்ணி வெதும்புகிறான். அவனைத் தடுத்தாட்கொள்ளும் பெளத்த மாமுனிவர்கள் (மனுதருமசாத்திர மொழியை அடியொற்றி) “மன்னவனே, கொல்லப்பட்டவர்கள் எல்லோரும் அவிசுவாசிகள். அவர்கள் விலங்குகளுக்கு மேற்பட்ட  மதிப்புக்கு அருகதை அற்றவர்கள்!” என்று அறிவுறுத்தி அவனைத் தேற்றுகிறார்கள். (கலிங்கம் கடந்து அறநெறி பூண்ட) இந்திய மாமன்னன் அசோகனுக்கு இலங்கையில் ஒரு வழித்தோன்றல் பிறக்காவாறு தடுக்கிறார்கள். எத்துணை கருச்சிதைப்பு!

இலங்கையிலும் இந்தியாவிலும் பல நூற்றாண்டுகளாக இனத்துவமும், மதத்துவமும், சாதியமும்... வரலாற்றை ஊடறுத்து, ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்து, மேலோங்கி வந்துள்ளன. இன்று அதே இலங்கையில், உலக வல்லரசுகளின் உடந்தையுடன் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டபொழுது, அங்கு கொலையுண்டவர்கள் பயங்கரவாதிகளே என்று அதே இனத்துவத்தின் வழித்தோன்றல்கள் உள்நாட்டவரையும் வெளிநாட்டவரையும் தேற்றி வருகிறார்கள். மறுபுறம், கடல்கடந்த வழித்தோன்றல்களோ, வன்னி ஒரு கலிங்கமே அல்லவே! அங்கு ஒரு போரே நிகழவில்லையே! அங்கு போர்க் குற்றங்கள் புரியப்படுவது எங்ஙனம்? மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் புரியப்படுவது எங்ஙனம்? என்று வினவி எம்மவரையும், தம்மவரையும் வேறு ஏய்த்து வருகிறார்கள். இந்தியாவிலோ வெளியுலகிலோ (கலிங்கம் கழிந்து கழுவாய் தேடிய) அசோக மாமன்னனுக்கு ஒரு வழித்தோன்றல் பிறக்காவாறு தடுத்து வருகிறார்கள். எத்துணை கருச்சிதைப்பு, மானுடக் கருச்சிதைப்பு, உலகளாவிய கருச்சிதைப்பு!

அன்று தென் ஆபிரிக்க வெள்ளை ஆட்சியாளர் தாம் கைக்கொண்ட நிறத்துவத்தை சற்று நெகிழ்த்த முற்பட்டபொழுது, “ஒரு தீமையைச் செப்பனிட முடியாது” (An evil cannot be improved) என்று ஆயர் டெஸ்மண்ட் டுட்டு அவர்களை இடித்துரைத்ததுண்டு. ஈற்றில் அங்கு நிறத்துவத் தீமை ஒழியவே செய்தது. அங்கு நிறத்துவத் தீமை ஒழிந்ததுபோல் இந்தியா, இலங்கை உள்ளடங்கிய உலகில் சாதிய, இனத்துவ, நிறத்துவ, மொழித்துவ, மதத்துவ, பால்மைய... தீமைகள் ஒழிந்தே தீரவேண்டும். அவற்றைச் செப்பனிட முடியாது. (ஹோமரின் இலியத் காவியத்தலைவன் அகிலியசின் வாய்மொழியில்) “ஆடுகளுக்கும் ஓநாய்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட முடியாது.”

கே.வி.ஷைலஜா தமது பதிப்புரையில் குறிப்பிடுவது போல், “இந்தப் புத்தகம் தமிழ் மனதை வேறு ஒரு மேம்பட்ட இடத்திற்கு இட்டுச்செல்லும் என்பதும், மனிதத்தை அசைத்துப் பார்க்கும் என்பதும், குறைந்தபட்ச நேர்மையுடனாவது வாழத்தூண்டும் என்பதும் நிஜம்.”

ஜெயமோகனின் “இந்த எளிய நூலில்” உள்ள ஏனைய கதைகளில் கருத்தூன்ற விடாது “நூறு நாற்காலிகள்” என்னை ஈர்த்து வைத்துள்ளது. அதை நான் திரும்பத் திரும்பப் படித்து வருகிறேன். படிக்குந்தோறும் “நூறு நாற்காலிகள்”  நூறு கதைகளுக்கு நிகர் என்று என் வாய் முணுமுணுத்த வண்ணம் உள்ளது.

ஜெயமோகன் தமது “கதைகளின் முடிவில்..” (385-6) எழுப்பும் 3 வினாக்களும், அவற்றுக்கு அவருடைய எளிய வாசகனகிய நான் இறுக்கும் விடைகளும்:

“(எனது) நம்பிக்கைகளில் தேய்மானம் ஏற்பட்டிருக்கிறதா?”  

இல்லவே இல்லை!

“அனுபவங்கள் அளித்த பொதுப்புத்தி என் அகத்தை மாற்றியிருக்கிறதா?”

இல்லவே இல்லை!

“(எனது) இலட்சியவாதத்தை அது களிம்புமூடச் செய்திருக்கிறதா?”

இல்லவே இல்லை!

“‘இருந்தபோதிலும்’ என்று நான் சொல்ல ஆரம்பித்து சொல்ல மகத்தான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன” (387) என்று கட்டியம் கூறி விடைபெறுகிறார் ஜெயமோகன். சாதியத்தின் தோற்றுவாய் அவற்றுள் ஒன்றாக அமைய வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் விடைபெறுகிறான் இந்த வாசகன்.   

மணி வேலுப்பிள்ளை,  2012-06-09                         தீராநதி: 2012 திசம்பர்

No comments:

Post a Comment