அணுவாயுதப் போர்

Image result for russell einstein manifesto
ரசல் - ஐன்ஸ்டைன் அறிக்கை
இலண்டன், 1955-07-09

மனிதகுலம் முழுவதையும் துயர்சூழும் இத்தருணம், பேரழிவு விளைவிக்கும் ஆயுதங்களின் உற்பத்தியால் எழுந்துள்ள ஆபத்துக்களைக் குறித்து அறிவியலாளர்கள் ஒன்றுகூடி ஆராய்ந்து, பின்வரும் வரைவில் பொதிந்துள்ள உணர்வலைக்கு அமைவாக ஒரு தீர்மானத்தை ஆய்விட்டு முன்வைக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகின்றோம்
மானிட வாழ்வு தொடர்வது ஐயத்துக்கு உள்ளாகியிருக்கும் இந்த வேளையில் ஒரு குறித்த நாட்டவராகவோ, கண்டத்தவராகவோ, சமயத்தவராகவோ நாங்கள் பேசவில்லை. மானிடராகவும், மனித குலத்தவராகவுமே நாங்கள் பேசுகின்றோம். முரண்பாடுகள் நிறைந்த இந்த உலகத்தில் சின்னஞ்சிறிய முரண்பாடுகள் முழுவதையும், பொதுவுடைமை வாதத்துக்கும் அதற்கெதிரான வாதத்துக்கும் இடையேயான பென்னம்பெரிய போராட்டம் விஞ்சியுள்ளது.
அரசியலுணர்வு படைத்த அனைவரிடமும் அத்தகைய பிரச்சனைகளுள் ஒன்றையோ பலவற்றையோ குறித்து வன்மையான உணர்வுகள் காணப்படுகின்றன. எனினும், உங்களால் இயலுமானால், அத்தகைய உணர்வுகளை ஒருபுறம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அரும்பெரும் வரலாறு படைத்த உயிரினத்தவராக மாத்திரம் உங்களை இனங்காணும்படி கேட்டுக்கொள்கின்றோம். அத்தகைய உயிரினம் மங்கிமறைவதை நாங்கள் எவருமே விரும்ப முடியாது.
ஒரு தரப்பை விடுத்து மறுதரப்பைக் கவரும் வண்ணம் ஒரு சொல்லையேனும் நாங்கள் உதிர்க்க போவதில்லை. ஆபத்து அனைவரையும் சரிநிகராகச் சூழ்ந்து வருகிறது. இந்த ஆபத்தை அனைவரும் புரிந்துகொண்டால்,  அனைவரும் கூடி அதனைத் தவிர்க்கலாம் என்று நம்புவதற்கு இடமுண்டு.
நாங்கள் ஒரு புதிய முறையில் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் நாங்கள் விரும்பும் தரப்பு படைபல வெற்றி ஈட்டும் வண்ணம் எத்தகைய நடவடிக்கைளையும் மேற்கொள்ளும் வாய்ப்பு இனிமேல் கிடைக்கப் போவதில்லை. எனவே நாங்கள் எங்களிடம் எழுப்பவேண்டிய கேள்வி என்ன? ஒரு குறித்த தரப்பு படைபல வெற்றி ஈட்டும் வண்ணம் எத்தகைய நடவடிக்கைளை மேற்கொள்ளலாம் என்று எங்களை நாங்கள் வினவக் கூடாது. மாறாக, அனைத்து தரப்புகளுக்கும் பேரழிவு விளைவித்தே தீரும் படைபலப் போட்டியைத் தடுப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற வினாவையே நாங்கள் எழுப்ப வேண்டியுள்ளது.
ஓர் அணுக்குண்டுப் போரினால் ஆகும் விளைவுகளைப் பொதுமக்கள் உணர்ந்து கொண்டதில்லை; அதிகாரம் செலுத்தும் பதவிகளில் அமர்ந்தோர் பலரும் கூட அதை உணர்ந்து கொண்டதில்லை. அணுக்குண்டுப் போரினால் நகரங்களே அழியும் என்று இன்னமும் பொதுமக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பழைய குண்டுகளை விடப் புதிய குண்டுகள் வலுமிகுந்தவை என்று தெரிகிறது. ஓர் அணுக்குண்டினால் இரோசிமா நகரத்தை அழிக்கலாம். அதேவேளை ஒரு நீரக அணுக்குண்டினால் இலண்டன், நியூ யார்க், மாஸ்கோ போன்ற மாபெரும் நகரங்களை அழிக்கலாம்.
ஒரு நீரக அணுக்குண்டுப் போரினால் மாபெரும் நகரங்கள் அழியும் என்பதில் ஐயமில்லை. எனினும் நாங்கள் எதிர்நோக்கவேண்டிய ஆபத்துக்களுள் அது ஒன்று மட்டுமே.  இலண்டன், நியூ யார்க், மாஸ்கோ மாநகரவாசிகள் அனைவரும் அழிக்கப்பட்டால், ஒருசில ஆண்டுகளுக்குள் உலகம் அந்த அழிவிலிருந்து மீளக்கூடும். எனினும் (பசிபிக் சமுத்திரத்து) பிக்கினி பவழத்தீவில் (அமெரிக்கா) நடத்திய அணுக்குண்டுப் பரிசோதனையின் பின்னர், அணுக்குண்டுகள் நினைத்தும் பார்த்திராத முறையில் படிப்படியாக மிகவும் அகன்று பரந்து அழிவை ஏற்படுத்த வல்லவை என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது.
இரோசிமா நகரத்தை அழித்த குண்டை விட 2,500 மடங்கு வலுமிகுந்த குண்டை இப்பொழுது உற்பத்தி செய்யலாம் என்று மிகவும் துறைபோன அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். நிலத்தை அல்லது நீரை அண்டி அத்தகைய குண்டை வெடிக்க வைத்தால், கதிரியக்கத் துகளை அது வான்வெளியில் செலுத்திவிடும். அது படிப்படியாக இறங்கி, தூசு தூசாகத் தரைமேல் படிந்து அல்லது பொழிந்து உயிர்குடிக்கும். இத்தகைய அணுக்குண்டுத் தூசியே யப்பானிய கடற்றொழிலாளர் மீதும், அவர்கள் பிடிக்கும் மீன்வகைகள் மீதும் தொற்றியது.
அவ்வாறு உயிர்கொல்லும் கதிரியக்கத் துகள் எவ்வளவு தூரம் பரவக்கூடும் என்பது எவருக்கும் தெரியாது. எனினும் நீரக அணுக்குண்டுகள் கொண்டு புரியப்படும் போரினால் மனிதகுலமே அழியக்கூடும் என்று மிகவும் துறைபோன அறிவியலாளர்கள் ஒருமனதாகத் தெரிவிக்கிறார்கள். நீரக அணுக்குண்டுகள் பலவற்றைப் பயன்படுத்தினால், உலகம் முழுவதும் உயிரினங்கள் இறக்கும்; அவற்றுள் ஒரு பகுதி உடனடியாக இறக்கும்; பெரும்பகுதி மெல்ல மெல்ல நோய்வாய்ப்பட்டு, வதைபட்டு, உருக்குலைந்து, அழிந்தொழிந்து போய்விடும் என்று அஞ்சப்படுகிறது.  
புகழ்பெற்ற அறிவியலாளர்களும், துறைபோன படைநடப்பு நெறிஞர்களும் பல தடவைகள் இது குறித்து எச்சரித்துள்ளார்கள். படுமோசமான விளைவுகள் ஏற்பட்டே தீரும் என்று அவர்களுள் எவரும் தெரிவிக்கப் போவதில்லை. அத்தகைய விளைவுகள் ஏற்படக்கூடும் என்றே அவர்கள் தெரிவிக்கிறார்கள். அவை ஏற்படமாட்டா என்று எவராலும் உறுதிபடக் கூறமுடியாது. இப்பிரச்சனை குறித்து நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் எந்தவகையிலும் அவர்களது அரசியலில் அல்லது விருப்புவெறுப்பில் தங்கியிருப்பதாக இற்றைவரை எங்களுக்குத் தென்படவில்லை. குறித்த நிபுணர்கள் தமது சொந்த அறிவாற்றலைக் கொண்டே அவ்வாறு தெரிவிக்கிறார்கள் என்பதை எங்கள் ஆராய்ச்சிகள் புலப்படுத்துகின்றன. மிகவும் தேர்ந்து தெளிந்தவர்கள் மிகவும் சோர்ந்து கவலைப்படுவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
எனவே நாங்கள் உங்களிடம் எழுப்பும் வினா, திட்டவட்டமான வினா, தவிர்க்கமுடியாத வினா இதுவே: மனிதகுலத்துக்கு நாங்கள் முடிவுகட்ட வேண்டுமா? அல்லது மனிதகுலம் போரைத் துறக்க வேண்டுமா?  போரை ஒழிப்பது மிகவும் கடினம். ஆதலால் இரண்டில் எதை நாடுவது என்ற வினாவை பொதுமக்கள் எதிர்கொள்ளப் போவதில்லை.
போரை ஒழிப்பதற்கு தேசிய இறைமையை மட்டுப்படுத்துவது சம்பந்தப்பட்டோருக்கு சுவைக்காத ஒன்று. ஒருவேளை வேறெதையும் விட மேற்படி நிலைவரத்தைப் புரிந்துகொள்வதில் அதிக தடங்கல் விளைவிப்பது “மனிதகுலம்” என்ற சொல்லே ஆகலாம். உருவும் தெளிவும் துலங்காத சொல் அது. தங்களுக்குப் புலப்படத் தவறும் மனிதகுலத்துக்கு மட்டுமல்ல, தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கூட ஆபத்து விளையும் என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்ப்பதரிது.  தாங்கள் ஒவ்வொருவரும், தங்களின் அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் வருந்தி மாளும் ஆபத்து நேரப்போவதை அவர்கள் புரிந்துகொள்ள முயல்வதரிது. ஆதலால் நவீன ஆயுதங்கள் தடைசெய்யப்பட்டால், போரை அனுமதிக்கலாம் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது.
இந்த நம்பிக்கை ஒரு மாயை. அமைதி நிலவும் காலப்பகுதியில் நீரக அணுக்குண்டைப் பயன்படுத்துவதில்லை என்று எத்தகைய உடன்பாடுகள் காணப்பட்டாலும் கூட, போர் மூண்டவுடன் அத்தகைய உடன்பாடுகள் போரிடும் தரப்புகளைக் கட்டுப்படுத்தும் என்று கொள்ளப்படுவதில்லை. ஆதலால் இரண்டு தரப்புகளுமே நீரக அணுக்குண்டுகளை உற்பத்திசெய்யத் தொடங்கும். ஒரு தரப்பு குண்டுகளை உற்பத்திசெய்ய, மறு தரப்பு உற்பத்தி செய்யாவிட்டால், உற்பத்திசெய்த தரப்பு வெற்றி பெற்றுவிடும் அல்லவா!
பொதுப்படையாகவே பேராயுதங்களைக் குறைக்கும் ஏற்பாட்டின் ஓர் அங்கமாக அணுவாயுதங்களைத் துறக்க உடன்பட்டாலும் கூட இறுதித் தீர்வு கைகூடப் போவதில்லை. எனினும் அது இரண்டு முக்கிய நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படும்: (1) கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட உடன்பாடு எதுவும் பதற்றத்தை தணிக்கப் பயன்படும் வரைக்கும் அது நலமானதே. (2) நீரக அணுவாயுதங்களை அழித்தொழிக்கும் பணியை ஒரு தரப்பு உளமார நிறைவேற்றிவிட்டது என்று மறுதரப்பு நம்பினால், பேழ் ஹார்பர் பாணியில் திடீர் தாக்குதல் நிகழக்கூடும் என்ற அச்சத்தை அது தணிக்கும். அந்த அச்சமே தற்பொழுது இரண்டு தரப்புகளையும் ஏங்கிப் படபடக்க வைக்கிறது. ஆதலால் அத்தகைய உடன்பாடு ஒரு முதற்படியாயினும், அதை நாங்கள் வரவேற்க வேண்டும். எங்களுள் பெரும்பாலோர் நடுநிலை உணர்வு படைத்தவர்கள் அல்ல. எனினும் பொதுவுடைமைவாதி, பொதுவுடைமைவிரோதி, ஆசியர், ஐரோப்பியர், அமெரிக்கர், வெள்ளையர், கருப்பர் எவருக்கும் நிறைவுதரும் வண்ணம் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட பிரச்சனைகளைத்  தீர்க்கவேண்டும் என்றால், போர் தொடுத்து அப்பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடாது என்பதை மனிதர்கள் என்ற வகையில் நாங்கள் நினைவில் பதிக்க வேண்டியுள்ளது. கிழக்கிலும் மேற்கிலும் இது புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். நாங்கள் தொடர்ந்து வளர்ந்து, அறிந்து தெளிந்து, மகிழ்ந்து வாழ விரும்பினால், வாழலாம். அதை விடுத்து, எங்கள் பிணக்குகளை எங்களால் மறக்க முடியாதபடியால், நாங்கள் மாண்டுமடிய வேண்டுமா? ஆதலால் நாங்கள் மனிதர்கள் என்ற வகையில் மனிதர்களிடம் வேண்டிக் கொள்கின்றோம்: உங்கள் மனிதகுலத்தை நினைவில் வைத்திருங்கள். மற்றெல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். உங்களால் அப்படிச் செய்ய முடிந்தால், ஒரு புதிய சுவர்க்கம் திறக்க வழி பிறக்கும்; உங்களால் அப்படிச் செய்ய முடியாவிட்டால், உலகம் முழுவதும் உயிரினங்கள் மாண்டு மடிய நேரும்.  

தீர்மானம்

பின்வரும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளும்படி இந்தப் பேரவையிடமும், அதனூடாக உலக அறிவியலாளர்களிடமும், பொதுமக்களிடமும்  நாங்கள் வேண்டிக்கொள்கின்றோம்:

"வருங்கால உலகப் போர் எதிலும் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படல் திண்ணம்; எனவே அத்தகைய ஆயுதங்களால் மானிட வாழ்வு தொடரும் படிமுறைக்கு ஆபத்து நேர்ந்தே தீரும்; அதாவது ஓர் உலகப் போர் உலக அரசாங்கங்களின் நோக்கத்துக்கு உதவப்போவதில்லை; அதை உணர்ந்துகொள்ளும்படியும், அதை வெளியரங்கமாக ஒப்புக்கொள்ளும்படியும் உலக அரசாங்கங்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்; அத்துடன் தங்களுக்கு இடையேயான பிணக்குகளை அமைதிவழியில் தீர்த்துக்கொள்ளும்படியும் அவற்றிடம் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.”   

Max Born
Perry W. Bridgman
Albert Einstein
Leopold Infeld
Frederic Joliot-Curie
Herman J. Muller
Linus Pauling
Cecil F. Powell
Joseph Rotblat
Bertrand Russell
Hideki Yukawa
           ___________________________________________________________________
The Russell-Einstein Manifesto, London, 9 July 1955, தமிழ்: மணி வேலுப்பிள்ளை




No comments:

Post a Comment