அம்பேத்கார்

Image result for ambedkar

இந்திய அரசியல்யாப்பு மன்றத்தில் ஆற்றிய உரை

      1949-11-25
______________________________________________________________________________
      1950 ஜனவரி 26ம் திகதி இந்தியா ஒரு சுதந்திர நாடாகும். இனி அதன் சுதந்திரத்துக்கு என்ன நடக்கும்? அதன் சுதந்திரத்தை அது பேணிக்கொள்ளுமா, அல்லது திரும்பவும் அதை இழந்துவிடுமா? அதுவே என் உள்ளத்தில் எழும் முதலாவது எண்ணம். இந்தியா என்றுமே ஒரு சுதந்திர நாடாக விளங்கவில்லை என்று நான் கூற வரவில்லை. அது முன்னர் துய்த்த சுதந்திரத்தை ஒரு தடவை இழந்தது என்றுதான் கூற வருகிறேன். அது இரண்டாவது தடவையும் அதை இழந்துவிடுமா? எதிர்காலம் குறித்து என்னை மிகவும் பதைக்க வைக்கும் எண்ணம் இதுவே.

முன்னரும் ஒரு தடவை இந்தியா அதன் சுதந்திரத்தை இழந்தது; அதன் சொந்தக் குடிமக்கள் சிலரின் வஞ்சகத்தாலும், துரோகத்தாலுமே அதன் சுதந்திரத்தை அது இழந்தது; இதுவே என்னை மிகவும் மனங்குழம்ப வைக்கிறது.

முகமது-பின்-கான் சிந்துப் புலத்தினுள் படையெடுத்து வந்தபொழுது அவரது  முகவர்களிடம் தகர் மன்னரின் சேனாபதிகள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு, தமது மன்னரின் பக்கம்நின்று போரிட மறுத்தார்கள். இந்தியாவுக்குப் படையெடுத்து வந்து, பிரிதிவிராஜுடன் போரிடும்படி முகமது கோரியை அழைத்தவர் ஜைச்சந். தானும் சோலங்கி மன்னர்களும் அதற்குத் துணைநிற்பதாக அவர் வாக்குறுதி அளித்தார். இந்துக்களின் விடுதலைக்காக சிவாஜி போரிட்டபோது ஏனைய மராட்டியப் பிரபுக்களும், இராசபுத்தானத்து மன்னர்களும் முகலாயப் பேரரசர்களின் பக்கம் நின்று போரிட்டார்கள். சீக்கிய ஆட்சியாளர்களை அழிக்கப் பிரித்தானியர் முயன்றபொழுது சீக்கிய சேனாதிபதி குலாப் சிங் வாய் திறக்காது, சீக்கிய அரசைக் காக்க உதவாது வாளாவிருந்தார். 1857ல் இந்தியாவின் பெரும்பகுதி பிரித்தானியருக்கு எதிராக சுதந்திரப் போர்ப் பிரகடனம் செய்தபொழுது சீக்கியர்கள் வாய்மூடி நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

கடந்தகாலம் மீண்டும் நிகழ்காலம் ஆகுமா? அந்த எண்ணமே என்னைப் பதைக்க வைக்கிறது. சாதிகளின் உருவிலும், சமயங்களின் உருவிலும் எங்கள் பழைய எதிரிகளை நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்; அத்துடன் எதிரெதிரான பல்வேறு அரசியல் நெறிகளுடன் கூடிய கட்சிகளையும் நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்; அதை உணரும்பொழுது என் பதைப்பு அதிகரிக்கிறது. இந்தியர்கள் தமது சமயநெறிக்கு மேலாக நாட்டை மதிப்பார்களா, அல்லது நாட்டுக்கு மேலாகச் சமயநெறியை மதிப்பார்களா? எனக்குத் தெரியாது? ஆனால் ஒன்று மட்டும் உறுதி: எங்கள் கட்சிகள் நாட்டுக்கு மேலாக சமயநெறியை மதித்தால், எங்கள் சுதந்திரம் இரண்டாவது தடவை இக்கட்டுக்கு உள்ளாகும்; என்றென்றும் அதை நாங்கள் இழக்கவும் கூடும். அவ்வாறு நேராவாறு நாங்கள் அனைவரும் உறுதிபடக் கண்காணிக்க வேண்டும். எங்கள் குருதியில் கடைசித் துளி உள்ளவரை எங்கள் சுதந்திரத்தைக் கட்டிக்காக்க நாங்கள் திடசித்தம் கொள்ள வேண்டும். 

1950 ஜனவரி 26ம் திகதி இந்தியா ஒரு குடியாட்சி நாடாகும். அதாவது, மக்களால், மக்களுக்காக அமைக்கப்பட்ட மக்களின் அரசாங்கம் அன்றுமுதல் இந்தியாவில் இயங்கும். இந்தியாவின் குடியாட்சி அரசியல்யாப்புக்கு என்ன நேரும்? அதை இந்தியாவால் பேணிக்கொள்ள முடியுமா, அல்லது இந்தியா திரும்பவும் அதை இழந்துவிடுமா? மீண்டும் அதே எண்ணமே என் உள்ளத்தில் எழுகிறது: அதுவே என் உள்ளத்தில் இரண்டாவதாக எழும் எண்ணம்; முதலாவது எண்ணத்தைப் போல் இரண்டாவது எண்ணமும் என்னைப் பதைக்க வைக்கிறது. 

குடியாட்சி முறைமை 

குடியாட்சி என்றால் என்ன என்பது இந்தியாவுக்குத் தெரியாது என்று நான் கூற வரவில்லை. குடியரசுகள் இந்தியவை அணிசெய்த காலம் ஒன்று இருந்தது. முடியாட்சி நிலவிய புலங்களில் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அரசுகளே ஆட்சி புரிந்தன. என்றுமே தனியாட்சியாளர் அவற்றைக் கட்டியாளவில்லை. இந்தியாவுக்கு நாடாளுமன்றங்களோ, நாடாளுமன்ற நடைமுறையோ தெரியாது என்று நான் கூற வரவில்லை.

பெளத்த பிக்குமாரின் சங்கங்களை ஆராய்ந்து பார்த்தபொழுது, இங்கு நாடாளுமன்றங்கள் இயங்கியமை தெரியவந்தது; சங்கங்கள் என்பவை நாடாளுமன்றங்களே; அத்துடன், தற்காலத்தவர்களுக்குத் தெரிந்த நாடாளுமன்ற நடைமுறைகள் அனைத்தையும் மேற்படி சங்கங்கள் அறிந்து, கடைப்பிடித்தமையும் தெரியவந்தது. இருக்கை ஒழுங்குகள், முன்மொழிவு விதிகள், தீர்மானங்கள், குறை நிறைவெண், கொறடா, வாக்கெண்ணல், வாக்குச்சீட்டுகள், கண்டன முன்மொழிவு, ஒழுங்குறுத்தல், "நீதிகண்டது" முதலியவை தொடர்பான விதிகளை அவை கடைப்பிடித்தன. இந்நாடாளுமன்ற நடைமுறை விதிகளை புத்தபிரான் தமது சங்க அமர்வுகளில் கையாண்டார். அவரது காலத்தில் இந்த நாட்டில் இயங்கிய அரசியல் அவைகளின் விதிகளை அவர் இரவல் பெற்றிருக்க வேண்டும்.

அக்குடியாட்சி முறைமையை இந்தியா இழந்தது. அது இரண்டாவது தடவையும் அதை இழக்குமா? எனக்குத் தெரியாது. எனினும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், குடியாட்சி முறைமை நெடுங்காலமாகக் கையாளப்படாத காரணத்தால், அது ஒரு புதினமான ஒன்றாகக் கொள்ளப்படல் திண்ணம்; ஆதலால் குடியாட்சி இங்கு சர்வாதிகாரத்துக்கு இடங்கொடுக்கும் ஆபத்து உண்டு. இது புதுக்கப் பிறந்த குடியாட்சி; இது உருவில் குடியாட்சியாகவும், செயலில் சர்வாதிகாரமாகவும் விளங்கும் சாத்தியம் அதிகம். தேர்தலில் ஒரு கட்சி மாபெரும் வெற்றி ஈட்டினால், சர்வாதிகாரம் தலைதூக்கும் சாத்தியம் மிகவும் அதிகம். 

மூன்று எச்சரிக்கைகள் 

குடியாட்சியை நாங்கள் உருவிலும் செயலிலும் பேண விரும்பினால், என்ன செய்ய வேண்டும்?

(1) எனது நிதானத்துக்கு எட்டியவரை கூறுகிறேன்: எங்கள் சமுதாய, பொருளாதார இலக்குகளை எய்துவதற்கு அரசியல்யாப்பு முறைகளை நாங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். குருதிசிந்தும் புரட்சிகர முறைகளை நாங்கள் கைவிட வேண்டும் என்பது அதன் கருத்து. குடிமக்கள் பணியாமை, ஒத்துழையாமை, சத்தியாக்கிரக முறைகளை நாங்கள் கைவிட வேண்டும் என்பது அதன் கருத்து. பொருளாதார, சமுதாய இலக்குகளை எய்துவதற்கு அரசியல்யாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வழி இல்லாத காலத்தில் அரசியல்யாப்புக்கு அமையாத முறைகளைக் கடைப்பிடிப்பதில் பெருமளவு நியாயம் இருந்தது.  ஆனால் அரசியல்யாப்பு முறைகள் இருக்குமிடத்து அரசியல்யாப்புக்கு அமையாத முறைகளைக் கடைப்பிடிப்பதில் நியாயம் இருக்க முடியாது. அரசியல்யாப்புக்கு அமையாத முறைகள் களேவரத்துக்கு அடியெடுத்துக் கொடுக்கும். அவற்றை எவ்வளவு வேகமாகக் கைவிடுகிறோமோ, அவ்வளவு தூரம் எங்களுக்கு நல்லது.

(2) குடியாட்சியைப் பேணிக்கொள்வதில் நாட்டம்கொண்ட எங்கள் அனைவருக்கும் ஜோன் ஸ்டுவர்ட் மில் விடுத்த எச்சரிக்கையை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்: "எங்கள் சுதந்திர உரிமைகளை ஒரு மகானின் காலடியில் கூட நாங்கள் கொட்டிவிடக் கூடாது; எங்கள் கட்டமைப்புகளைக் கருவறுப்பதற்கு ஏதுவான அதிகாரங்களை அவருக்கு நாங்கள் கொடுக்கக் கூடாது." தமது வாழ்நாள் முழுவதும் நாட்டுக்குத் தொண்டாற்றிய மகான்களுக்கு நாங்கள் நன்றிசெய்வதில் தப்பில்லை. எனினும் நன்றியுணர்வுக்கு ஓர் எல்லையுண்டு. அயர்லாந்து நாட்டுப்பற்றாளர் டானியல்-ஓ-கொனேல் நன்கு எடுத்துரைத்தது போல், ஒருவன் தனது மானத்தை இழந்து நன்றிசெலுத்த முடியாது; ஒரு பெண் தனது கற்பை இழந்து நன்றிசெலுத்த முடியாது; ஒரு நாடு அதன் சுதந்திரத்தை இழந்து நன்றிசெலுத்த முடியாது.

வேறெந்த நாட்டையும் விட இந்தியாவுக்கே இந்த எச்சரிக்கை மிகவும் தேவைப்படுகிறது. இந்திய அரசியலில் பக்தியோ, பக்திமார்க்கமோ, வீரர்-வழிபாடோ வகிக்கும் பங்கிற்குஉலகில் வேறெந்த நாட்டு அரசியலிலும் அது வகிக்கும் பங்கு இம்மியும் நிகராகாது. சமயபக்தி ஆன்மாவின் ஈடேற்றத்துக்கு வழிவகுக்கக் கூடும். எனினும் அரசியலில் பக்தியோ, வீரர்-வழிபாடோ தாழ்ச்சிக்கும், ஈற்றில் சர்வாதிகாரத்துக்கும் இட்டுச்செல்லல் திண்ணம்.

(3) வெறும் அரசியற் குடியாட்சியுடன் நாங்கள் நிறைவடையக் கூடாது. எங்கள் அரசியற் குடியாட்சியை நாங்கள் சமுதாயக் குடியாட்சியாகவும் மாற்ற வேண்டும். சமுதாயக் குடியாட்சியாக ஓங்கும் அரசியற் குடியாட்சியே நீடிக்கவல்லது.  

சமுதாயக் குடியாட்சி 
சமுதாயக் குடியாட்சி என்பதன் பொருள் என்ன? சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நெறிகளை ஏற்று வாழ்வதே சமுதாயக் குடியாட்சி எனப்படும். இம்மூன்று நெறிகளையும் வெவ்வேறு நெறிகளாகப் பிரித்து நோக்கக் கூடாது. அவை ஒரு மும்மையாக ஒருங்கிணைபவை. அவற்றை ஒன்றிலிருந்து ஒன்று பிரிப்பது, குடியாட்சியின் நோக்கத்தையே முறியடிப்பதாகும்.

சமத்துவத்திலிருந்து சுதந்திரத்தையும், சுதந்திரத்திலிருந்து சமத்துவத்தையும் பிரிக்க முடியாது; சகோதரத்துவத்திலிருந்து சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் பிரிக்க முடியாது.  சமத்துவமற்ற சுதந்திரம், பலரைச் சிலரின் மேலாதிக்கத்துக்கு உள்ளாக்கும். சுதந்திரமற்ற சமத்துவம், தனிமனித முயற்சியைச் சாகடிக்கும். சகோதரத்துவமற்ற சுதந்திரமும் சமத்துவமும் இயல்பான போக்காகாது; அதை நடைமுறைப்படுத்த ஒரு பலவான் தேவை.

இந்திய சமுதாயத்தில் சமத்துவமோ, சகோதரத்துவமோ அறவே கிடையாது என்பதை முதற்கண் நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்திய சமுதாயம் ஏற்றத்தாழ்வான படியடுக்கு நெறியை அடிப்படையாகக் கொண்டது. அதில் சிலர் மாபெரும் செல்வம் துய்க்க, பலர் படுவறுமையில் உழல்கின்றனர்.

1950 ஜனவரி 26ம் திகதி ஒரு முரண்பட்ட வாழ்வினுள் நாங்கள் நுழையப் போகின்றோம். அரசியலில் சமத்துவமும், சமுதாயபொருளாதார வாழ்வில் ஏற்றத்தாழ்வும் கொண்டிருக்கப் போகின்றோம். அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்கிற்கு ஒரு பெறுமதி என்னும் நெறியை ஏற்றுக்கொள்ளப் போகின்றோம். சமுதாய, பொருளாதார வாழ்வில் ஒருவருக்கு ஒரு பெறுமதி என்னும் நெறியை நாங்கள் தொடர்ந்து மறுக்கப் போகின்றோம். அப்படி மறுப்பதற்கு, எங்கள் சமுதாய, பொருளாதார கட்டமைப்பே காரணம். இந்த முரண்பட்ட வாழ்வை தொடர்ந்து எவ்வளவு காலத்துக்கு நாங்கள் நடத்தப் போகின்றோம்? எங்கள் சமுதாய, பொருளாதார வாழ்வில் தொடர்ந்து எவ்வளவு காலத்துக்கு சமத்துவத்தை நாங்கள் மறுக்கப் போகின்றோம்?

தொடர்ந்தும் நீண்ட காலத்துக்கு அதை நாங்கள் மறுக்கின்றோம் என்றால், எங்கள் அரசியற் குடியாட்சிக்கே நாங்கள் ஆபத்து விளைவிக்கிறோம் என்பது கருத்து. இயன்றளவு விரைவாக இந்த முரண்பாட்டை அகற்ற வேண்டும்; அகற்றாவிட்டால், ஏற்றத்தாழ்வினால் பாதிக்கப்பட்டோர், இந்தப் பேரவை பாடுபட்டு உருவாக்கிய அரசியற் குடியாட்சியின் கட்டமைப்பை தகர்த்துவிடுவர்.

இரண்டாவதாக, சகோதரத்துவ நெறியை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சகோதரத்துவம் என்பதன் பொருள் என்ன? சகோதரத்துவம் என்பது இந்தியர்கள் அனைவரும் சகோதரர்கள் என்னும் பொது உணர்வு; இந்தியர்கள் அனைவரும் ஒரே மக்கள் என்னும் உணர்வு. சமுதாய வாழ்வுக்கு ஒருமை, திண்மை இரண்டையும் அளிக்கும் நெறி அது. அதை எய்துவது கடினம். எத்துணை கடினம்? அமெரிக்க பொதுநலவாயம் குறித்து எழுதிய ஜேம்ஸ் பிரைஸ் கூறிய கதை ஒன்றிலிருந்து அதனை உணர்ந்து கொள்ளலாம். அதை அவர் வாய்மொழியில் கூறுகிறேன்:

"சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க புரட்டஸ்தாந்திய ஆயர் தேவாலயம் அதன் மூவாண்டு மாநாட்டில் அதன் வழிபாட்டு வாசகத்தை மீட்டியமைப்பதில் ஈடுபட்டது. குறுகிய வசனத்தில் அனைவருக்கும் பொதுவான வழிபாட்டு வாசகத்தைப் புகுத்துவது நல்லது என்று அவர்கள் கருதினார்கள். நியூ இங்கிலாந்து என்னும் புலத்தைச் சேர்ந்த குரவர் ஒருவர் "ஆண்டவரே, எங்கள் தேசத்துக்கு அருள்புரிவீராக!" என்னும் வசனத்தை முன்மொழிந்தார். ஒரு மாலைப்பொழுதில், எழுத்தமானத்தில், ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த வசனம் அடுத்த நாள் மீள்நோக்கப்பட்டபொழுது, அடியார்கள் பலரும் "தேசம்" என்ற சொல் தேசிய ஒற்றுமை ஏற்றுக்கொள்ளப்படுவதை உறுதிபட உணர்த்துவதாகக் கூறி, அதற்கு மறுப்புத் தெரிவித்தார்கள். ஆதலால் அது கைவிடப்பட்டது; அதற்குப் பதிலாக, "ஆண்டவரே, இந்த ஐக்கிய அரசுகளுக்கு அருள்புரிவீராக!" என்னும் வசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அது நடந்தபொழுது ஐக்கிய அமெரிக்காவில் தேசிய ஒருமைப்பாடு குன்றியிருந்த படியால், அமெரிக்க மக்கள் தங்களை ஒரே தேசத்தவர்களாகக் கருதவில்லை. அமெரிக்க மக்களால் தங்களை ஒரே தேசத்தவர்களாகக் கருதமுடியவில்லை என்றால், இந்தியர்கள் தங்களை ஒரே தேசத்தவர்களாகக் கருதுவது எத்துணை கடினம்

மாபெரும் மருட்சி 

அரசியலுணர்வு படைத்த இந்தியர்கள் "இந்திய மக்கள்" என்னும் தொடரைக் கேட்டு விசனப்பட்ட காலம் என் நினைவில் இருக்கிறது. "இந்திய தேசம்" என்னும் தொடரையே அவர்கள் பெரிதும் விரும்பினார்கள். நாங்கள் ஒரே தேசத்தவர்கள் என்று நம்புவது, ஒரு மாபெரும் மருட்சியைப் பேணுவதாகவே எனக்குப் படுகிறது. பல்லாயிரக் கணக்கான சாதிகளால் பிளவுண்ட மக்கள் எவ்வாறு ஒரே தேசத்தவர்களாக விளங்க முடியும்? ஒரே தேசத்தவர்கள் என்பதற்கு சமுதாயவாரியாகவும், உளவியல்வாரியாகவும் கொள்ளப்படும் கருத்தின்படி நாங்கள் இன்னும் ஒரே தேசத்தவர்களாக விளங்கவில்லை என்பதை எவ்வளவு விரைவாக உணர்ந்துகொள்கிறோமோ அவ்வளவு தூரம் எங்களுக்கு நல்லது. அதை உணர்ந்துகொண்டால் மாத்திரமே ஒரே தேசத்தவர்களாக விளங்கவேண்டிய தேவையை நாங்கள் உணர்ந்துகொள்வோம்; அந்த இலக்கை எய்தும் வழிவகைகளை நாங்கள் கருத்தூன்றிச் சிந்திப்போம்.

இந்த இலக்கை எய்துவது மிகவும் கடினமாகப் போகின்றது. அமெரிக்காவை விட இந்தியாவில் மிகவும் கடினமாகப் போகின்றது. அமெரிக்காவில் சாதிப்பிரச்சனை இல்லை. இந்தியாவில் சாதிகள் உண்டு. சாதிகள் தேசியத்துக்கு மாறானவை; சமுதாய வாழ்வில் பிரிவினையைத் தோற்றுவிப்பவை; சாதிகளுக்கிடையே பொறாமையும், வெறுப்பும் விளைகின்றன. உண்மையிலேயே நாங்கள் ஒரே தேசத்தவராக மாற விரும்பினால், மேற்படி தொல்லைகளை நாங்கள் வெற்றிகொள்ள வேண்டும். ஒரே தேசத்தில்தான் சகோதரத்துவம் ஓங்கமுடியும். சகோதரத்துவமற்ற சமத்துவமும், சுதந்திரமும் வெறும் மேற்பூச்சுகளாகும்.  
நாங்கள் எதிர்நோக்கும் பணிகள் பற்றி நான் சிந்தித்தவற்றை உங்களிடம் தெரிவித்துள்ளேன். சிலருக்கு அவை மிகவும் இனிக்கத் தவறலாம். எனினும் இந்த நாட்டில் அரசியலதிகாரம் என்பது நெடுங்காலமாக ஒரு சிலரின் ஏகபோகமாக இருந்து வந்துள்ளதையும், பலர் வெறும் சுமைதாங்கும் விலங்குகளாகவும், இரையாகும் விலங்குகளாகவும் இருந்து வந்துள்ளதையும் மறுக்க முடியாது. சிலரின் ஏகபோகத்தால் பலரின் முன்னேற்றத்துக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது; அது மட்டுமல்ல; பலரின் உயிர்ச் சாறு உறிஞ்சப்படுகிறது. மிதியுண்ட வர்க்கத்தவர்கள் கட்டியாளப்பட்டு, களைத்துப் போய்விட்டார்கள்; அவர்கள் தங்களைத் தாங்களே ஆளத் துடிக்கிறார்கள்; தத்தம் இயல்திறனை எய்த வேட்கை கொண்டுள்ளார்கள்; அவர்களின் வேட்கை ஒரு வர்க்கப் போராகவோ, வர்க்கப் போராட்டமாகவோ மாற விடக்கூடாது. அது இந்தப் பேரவையைப் பிளவுபடுத்தும்; அதனால் பேரழிவு விளையும்.

ஆபிரகாம் லிங்கன் நன்கு எடுத்துரைத்தது போல், பிளவுண்ட வீடு நீடித்து நிலைக்க முடியாது. ஆகவே பலரும் தமது வேட்கையை எய்துவதற்கு எவ்வளவு விரைவாக இடம் கொடுக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு அது சிலருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது; சுதந்திரத்தைப் பேணுவதற்கும் நல்லது; குடியாட்சிக் கட்டமைப்பு தொடர்ந்து நிலைப்பதற்கும் நல்லது. வாழ்வுத் துறைகள் அனைத்திலும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநிறுத்தியே அவ்வாறு செய்யமுடியும். ஆதலால்தான் அவற்றை நான் பெரிதும் வலியுறுத்திப் பேசினேன்.

நான் மேற்கொண்டும் இந்த அவைக்குச் சலிப்பூட்ட விரும்பவில்லை. சுதந்திரம், இன்பம் பயப்பது என்பதில் ஐயமில்லை. ஆனாலும் இச்சுதந்திரம் எங்கள்மீது பெரும் பொறுப்புகளைச் சுமத்தியுள்ளது என்பதை நாங்கள் மறந்துவிடக் கூடாது. சுதந்திரம் பெற்றதன் மூலம், எத்தகைய தவறு நேர்ந்தாலும் அதற்குப் பிரித்தானியர்மீது பழிபோடும் வாய்ப்பை நாங்கள் இழந்துவிட்டோம். இனிமேல் எத்தகைய தவறு நேர்ந்தாலும், அதற்கு எங்களை விடுத்து வேறு எவர்மீதும் நாங்கள் பழிபோட வழியில்லை. தவறுகள் நேரும் ஆபத்து உண்டு, பேராபத்து உண்டு. காலம் விரைந்து மாறிவருகிறது.

எங்கள் மக்கள் உட்பட மக்கள் அனைவரும் புதிய கருத்து நிலைப்பாடுகளினால் இயக்கப்படுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் என்பதைக் கேட்டு அவர்கள் சலிப்படைந்து வருகிறார்கள். ஆனால் மக்களுக்கான அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அது மக்களின் அரசாங்கமா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமா என்பதில் அவர்களுக்கு அக்கறை கிடையாது. 

மக்களாலான, மக்களுக்கான, மக்களின் அரசாங்கம் என்னும் நெறிபொதிந்த அரசியல்யாப்பினை வகுக்கத் தலைப்பட்ட நாங்கள், அத்தகைய அரசியல்யாப்பினைப் பேணிக்கொள்ள விரும்பினால், எங்கள் பாதையின் குறுக்கே கிடக்கும் தீமைகளைத் தீமைகளே என்று ஏற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது; மக்களுக்கான அரசாங்கத்துக்கு மேலாக மக்களின் அரசாங்கத்தை விரும்பத் தூண்டும் அத்தகைய தீமைகளைத் தீமைகளே என்று ஏற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது; அத்தகைய தீமைகளை அகற்றும் முயற்சியில் நாங்கள் பலவீனம் காட்டக் கூடாது; அதுவே நாட்டுக்குத் தொண்டாற்றும் ஒரே வழி; அதைவிடச் சிறந்த வழி எனக்குத் தெரியாது.
                           _________________________________________________________
Ambedkar's Speech to the Constituent Assembly, India, 1949-11-25,
தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment