சாக்கிரத்தீஸ்
(பொ. யு. மு. 469-399)
பெரியோர்களே, என்மீது
குற்றஞ்சுமத்தியோர் உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியிருக்கக்கூடிய தாக்கத்தை நான்
அறியேன். ஆனால் நானோ அவர்களால் ஆட்கொள்ளப்படும் நிலைக்கு உள்ளாகிப்போனேன். அத்துணை
நம்பிக்கை ஊட்டும் வாதங்களை அவர்கள் முன்வைத்தார்கள். ஆனாலும் அவர்கள் உதிர்த்த சொல்
ஒன்று கூட கொஞ்சமும் உண்மை இல்லை.
அவர்களின் தவறான கூற்றுக்களுள் குறிப்பாக ஒன்று என்னை வியக்க வைத்தது. நான்
ஒரு திறமையான பேச்சாளன் என்று பொருள்படும் வண்ணம், நான் உங்களை ஏய்க்கா வண்ணம், நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறியது என்னை வியக்க வைத்தது.
திறமையான பேச்சாளன் என்பதற்கு உண்மை உரைக்கும் பேச்சாளன் என்று அவர்கள் பொருள்
கொண்டிருக்க வேண்டும்; மற்றும்படி,
என்னிடம் பேச்சுத்திறன் அறவே கிடையாது என்பது தெரியவரும்பொழுது,
அவர்களுடைய கூற்று அடியோடு பொய்த்துவிடும் என்பது அவர்களுக்குத்
தெரிந்திருக்க வேண்டும்; ஆதலால், நான்
ஒரு திறமையான பேச்சாளன் என்று அவர்கள் சற்றும் கூசாமல் உங்களிடம் கூறியது, அவர்களின் சிறப்பியல்பான இறுமாப்பை உணர்த்துவதாகவே நான் எண்ணிக் கொண்டேன்.
திறமையான பேச்சாளன் என்பதற்கு உண்மை உரைக்கும் பேச்சாளன் என்று அவர்கள்
பொருள்கொண்டால், நான் ஒரு பேச்சாளன் என்பதை
ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் அவர்களைப் போன்ற ஒரு பேச்சாளன் அல்ல.
என்மீது குற்றஞ்சுமத்தியோர் கூறியதில் உண்மை எதுவும் இல்லை, அல்லது உண்மை
கொஞ்சமும் இல்லை என்பதே எனது வாதம். பெரியோர்களே, நான்
கூறும் முழு உண்மையையும் நீங்கள் காதில் விழுத்த வேண்டும். அதேவேளை அவர்கள்
கையாண்டது போன்ற செவ்விய சொற்களுடன், தொடர்களுடன் கூடிய
அணிமொழியில் நான் பேசமாட்டேன் என்று உங்களுக்கு உறுதிகூறுகிறேன். எனது
குறிக்கோளில் பொதிந்துள்ள நீதியில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதைவிட வேறெதையும்
எனது பேச்சில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. ஆகவே என் உள்ளத்துள் முதன்முதல்
எழும் சொற்களில் ஒரு நேர்சீரான பேச்சை நீங்கள் செவிமடுக்கப் போகிறீர்கள்.
பெரியோர்களே, என்னைப்
போல் ஒரு முதியவர் நாவன்மை படைத்த ஒரு பாடசாலைப் பையனைப் போல் செயற்கை மொழியில்
உங்களை விளித்துப் பேசுவது கொஞ்சமும் பொருந்தாது. இந்த மாநகரத்தின் வெட்ட
வெளிகளிலும், மற்ற இடங்களிலும் நான் பேசுவதை நீங்கள் பலரும்
கேட்டிருப்பீர்கள். அவ்வாறு நான் கையாண்டு பழகிய மொழியில் என் பதில்வாதத்தை நான்
முன்வைக்கக் கேட்டால், தயவுசெய்து திடுக்கிட்டுக் குறுக்கிட
வேண்டாம் என்று உங்களிடம் உளமார மன்றாடி வேண்டிக் கொள்கிறேன்.
முதலில் எனது நிலைப்பாட்டை உங்களுக்கு நான் நினைவுறுத்த விரும்புகிறேன்.
நீதிமன்ற மொழி எனக்கு அடியோடு தெரியாது. இந்த எழுபது வயதில் முதல் தடவையாக நான்
நீதிமன்றில் வெளிப்பட்டுள்ளேன். உண்மையில் நான் ஒரு பிறநாட்டவன் என்றால், என்னை ஊட்டிவளர்த்த
முறையிலும் மொழியிலும் நான் பேச முற்பட்டால், நீங்கள் என்னை
மன்னிக்கத் தலைப்படுவது இயற்கையே. ஆதலால் தற்போதைய சூழ்நிலையில் இந்த வேண்டுகோளை
உங்கள்முன் வைக்கிறேன். நான் பேசும் விதம் நன்றோ மோசமோ, அதைப்
பொருட்படுத்த வேண்டாம்; எனது வாதங்கள் செவ்விய வாதங்களா
அல்லவா என்ற வினாவில் மட்டுமே புலனைச் செலுத்தவும்; இப்படிக்
கேட்பதை மிகவும் நியாயமான ஒரு வேண்டுகோளாகவே நான் கருதுகிறேன். அதுவே யூரரின்
தலையாய கடமை. எப்படி உண்மை உரைப்பது வழக்குரைஞரின் கடமையோ, அப்படி.
யூரர் பெருமக்களே, என்மீது
சுமத்தப்பட்ட ஆகப்பழைய போலிக் குற்றச்சாட்டுகளையும், குற்றஞ்சுமத்தியோருள்
ஆகப்பழையவர்களையும் முதற்கண் கருத்தில் கொண்ட பின்னர், அடுத்தவற்றையும்
அடுத்தவர்களையும் கருத்தில் கொள்வதே தகும். நான் இப்படி வேறுபடுத்தக் காரணம்
உண்டு. ஏற்கெனவே பல ஆண்டுகளாகப் பெருந்தொகையானோர் உங்கள் காதில் விழும் வண்ணம்
என்மீது குற்றஞ்சுமத்தியுள்ளனர். அவர்களுடைய குற்றச்சாட்டுக்களில் ஒரு சொல்லும்
உண்மை இல்லை. புதுக்க என்மீது குற்றஞ்சுமத்தியுள்ள அனைட்டசும், அவரது சகபாடிகளும் பயங்கரமானவர்கள். எனினும் அவர்களை விட பழையவர்களுக்கே நான் மிகவும் அஞ்சுகிறேன். புதியவர்களை விட பழையவர்கள்
மிகவும் பயங்கரமானவர்கள்.
உங்களுள் பலர் சிறுவர்களாக இருந்தபொழுது உங்களைப் பிடித்து, உங்கள்
உள்ளத்துள் எனக்கெதிரான போலிக் குற்றச்சாட்டுகளை இட்டு நிரப்பியவர்களைக் கருதியே
அப்படிக் கூறுகிறேன். "சாக்கிரட்டீஸ் என்றொரு ஞானி இருக்கிறான்; அவன் விண்ணுலகு பற்றிய கோட்பாடுகள் கொண்டவன்; மண்ணுலகத்துக்கு
கீழ்ப்பட்ட அனைத்தையும் ஆராய்ந்தவன்; வலுவுற்ற வாதத்தை
வலுவற்ற வாதம் வெல்லும்படி செய்பவன்" என்று உங்களிடம் தெரிவித்தவர்களைக்
கருதியே அப்படிக் கூறுகிறேன்.
மேற்படி சங்கதிகளை ஆராயும் எவரும் ஒரு நாத்திகராகவே இருக்க வேண்டும் என்று
அத்தகைய வதந்திகளைக் கேட்பவர்கள் நினைப்பார்கள். ஆதலால், பெரியோர்களே,
வதந்திகள் பரப்பி என்மீது குற்றஞ்சுமத்துவோரே மிகவும்
பயங்கரமானவர்கள். உங்களுள் சிலர் சிறுவர்களாகவோ வளரிளம் பருவத்தவர்களாகவோ விளங்கிய
காலத்தில், ஏதாவது உங்கள் உள்ளத்துள் மிகவும் பதியத்தக்க
வயதில், உங்களை அவர்கள் அணுகியிருக்கிறார்கள். அப்பொழுது
எனக்காக வாதாட எவருமே இல்லை. ஆகவே அறவே எதிர்வாதமற்ற வெற்றியை அவர்கள்
ஈட்டிக்கொண்டார்கள்.
இங்கு மிகவும் விசித்திரமான சங்கதி என்னவென்றால், அவர்களுள்
ஒருவர் ஒரு நாடகாசிரியராக விளங்கினாலொழிய, அவர்களின்
பெயர்களை அறிந்து உங்களிடம் கூறுவது கூட எனக்குச் சாத்தியப்படாது. என்மீது
பொறாமைப்பட்டு, அவதூறுபடுத்த ஆசைப்பட்டு, உங்களை எனக்கெதிராக ஏவிவிட முயன்ற இவர்கள் அனைவரையும், வெறுமனே மற்றவர்கள் கூறியதைக் கேட்டு அப்படியே அடுத்தவர்களிடம் கூறிய
சிலரையும் இங்கு விசாரணைக்கு உட்படுத்துவது மிகவும் கடினம். குறுக்கு விசாரணைக்கு
அவர்களை இங்கு கொண்டுவருவது அசாத்தியம். எனக்குப் பதில்கூற எவருமே இல்லை. ஆதலால்,
எனது பதில்வாதத்தை மட்டுமே நான் நிகழ்த்த வேண்டியுள்ளது.
கண்ணுக்குப் புலப்படாத ஓர் எதிராளிக்கு எதிராகவே எனது பதில்வாதத்தை நான் நிகழ்த்த
வேண்டியுள்ளது.
என்மீது குறைகூறுவோர் இரு பிரிவினர் என்று நான் கூறுவதை ஏற்றுக்கொள்ளும்படி
உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். என்மீது குற்றஞ்சுமத்திய பழையவர்கள் என்று நான்
கூறியோர் ஒருபுறம், புதியவர்கள்
மறுபுறம். பழையவர்களின் குற்றச்சாட்டுகளுக்கே எனது பதில்வாதத்தை நான் முதலில்
முன்வைக்க வேண்டியுள்ளது என்று நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னதான்
கூறினாலும், மிகவும் நீண்ட காலத்துக்கு முன்னரே,
புதியவர்களை விட மிகவும் வன்மையான முறையில், பழையவர்கள் என்னைப் பழிதூற்றியதை நீங்கள் செவிமடுத்ததுண்டு.
மெத்த நல்லது, பெரியோர்களே,
எனது பதில்வாதத்தில் இனி நான் இறங்க வேண்டியுள்ளது. பல்லாண்டுகளாக
உங்கள் உள்ளத்துள் பதிந்துள்ள தவறான எண்ணத்தை எனக்கு கிடைத்த குறுகிய நேரத்துள்
களைவதற்கு நான் முயல வேண்டியுள்ளது. எனது பதில்வாதத்தின் பெறுபேறாக அது
களையப்படுவதையே நான் விரும்புகிறேன். பெரியோர்களே, அது
உங்களுக்கும் எனக்கும் நலம்பயக்கும் என்று எண்ணுகிறேன். எனது பதில்வாதத்தில் நான்
வெற்றியீட்ட விரும்புகிறேன். ஆனால் அது கடினம் என்று நினைக்கிறேன். எனது
முயற்சியின் தன்மையை நான் நன்கறிந்தவன். எவ்வாறாயினும், கடவுள்
விரும்பியபடி அது நிகழட்டுமே! நானோ சட்டத்துக்கு அடிபணிந்து எனது பதில்வாதத்தை
முன்வைக்க வேண்டியுள்ளது.
இனி நாங்கள் பின்னோக்கிச் சென்று, என்னை இகழ்ச்சிக்கு இட்டுச்சென்ற
குற்றச்சாட்டு என்ன, இப்பொழுது மெலிட்டசை கடுங்குற்றச்சாட்டு
வரையத் தூண்டியது என்ன என்பதைக் கருத்தில் கொள்வோம். மெத்த நல்லது, பெரியோர்களே, என்மீது குறைகூறுவோர் எனது
குணவியல்பைக் கண்டித்துக் கூறியது என்ன? அவர்களை என்மீது
சட்டப்படி குற்றஞ்சுமத்தியோராகப் பாவனைசெய்து, அவர்களுடைய
சத்தியக் கடதாசியை நான் இப்படி வாசித்துக் காட்ட வேண்டியுள்ளதாக வைத்துக்கொள்ளலாம்:
சாக்கிரட்டீஸ் மண்ணுலகின் கீழேயும், விண்ணுலகின் மேலேயும் உள்ளவற்றை ஆராய்ந்து
திரிவுபடுத்திய குற்றத்தையும், வலுவுற்ற வாதத்தை வலுவற்ற
வாதம் வெல்லும்படி செய்யும் குற்றத்தையும், தனது
எடுத்துக்காட்டைப் பின்பற்றும்படி மற்றவர்களுக்குப் போதித்த குற்றத்தையும் புரிந்தவன்...
அப்படி அமைந்த ஏதோ ஒரு குற்றச்சாட்டு அது. அரிஸ்டோபேன்ஸ் என்னைக் குறித்து
அரங்கேற்றிய நாடகத்தில் நீங்களே அதைப் பார்த்திருக்கிறீர்கள். அந்த நாடகத்தில்
சாக்கிரட்டீஸ் என்றொரு பாத்திரம் சுற்றிச் சுழன்று திரிகிறான். தான் காற்றில்
நடப்பதாக முழங்கி வருகிறான். எனக்கு அறவே தெரியாதவற்றைப் பற்றி எல்லாம் விழலளந்து
குவிக்கிறான்... அப்படிப்பட்ட சங்கதிகளில் எவருக்கும் உண்மையான பாண்டித்தியம்
இருப்பதாக வைத்துக்கொண்டால், அத்தகைய அறிவை நான் அவமதிக்கவில்லை. ஏனெனில் மெலிட்டஸ் மேற்கொண்டும்
எனக்கெதிராக வழக்குத் தொடுப்பதை நான் விரும்பவில்லை. ஆனால், பெரியோர்களே,
எனக்கு அதில் எல்லாம் நாட்டம் இல்லை. அதைவிட முக்கியமாக, உங்களுள் பெரும்பாலானோரை எனது கூற்றுக்குச் சாட்சிகளாக விளங்கும்படி நான்
வேண்டிக்கொள்கிறேன்.
என்றாவது நான் பேசுவதைக் கேட்டவர்கள் உங்களுக்குள் இருக்கிறார்கள். உங்களுள்
பெருந்தொகையானோர் கேட்டிருக்கிறீர்கள். இந்த விடயம் குறித்து உங்கள் அருகில்
இருப்பவர்களுக்கு தெளிவுபடுத்தும்படி அனைவரிடமும் வேண்டிக் கொள்கிறேன். என்றாவது
அத்தகைய சங்கதிகள் குறித்து சுருக்கமாகவோ விளக்கமாகவோ நான் கலந்துரையாட நீங்கள்
கேட்டீர்களா அல்லவா என்பதை ஒருவருக்கொருவர் கூறுங்கள். அவ்வாறே என்னைப் பற்றிப்
பரவிய பிற வதந்திகளும் நம்பத்தக்கவை அல்ல என்பதை அதன் பிறகு நீங்கள் உணர்ந்து
கொள்வீர்கள்.
இக்குற்றச்சாட்டுகள் எவற்றிலும் எதுவித உண்மையும் இல்லை. நான் ஆட்களுக்கு கற்பித்து, கட்டணம்
வசூலிக்க முயல்வதாக எவராவது கூறுவதை நீங்கள் கேட்டிருந்தால், அதிலும் கூட உண்மை இல்லை. ஆனாலும் அதில் உண்மை இருந்திருக்க வேண்டும்
என்பதே எனது ஆசை! ஏனெனில் லியோந்தினி நகரத்து கோர்ஜியாஸ் போல், சியோஸ் நகரத்து புரோடிக்கஸ் போல், எலிஸ் நகரத்து
ஹிப்பியாஸ் போல் கற்பிக்கும் தகைமை உடையவர் ஒருவர் இருக்கிறார் என்றால், அது ஒரு சிறந்த விடயம் அல்லவா! இம்மூவருள் எவரும் எந்த மாநகரத்துக்கும்
சென்று இளைஞர்களை ஈர்க்கும் வல்லமை படைத்தவர்; தத்தம்
மாநகரவாசிகளுடன் பூண்ட பயனற்ற உறவைக் கைவிட்டு தன்னுடன் இணையும்படியும், அப்படி இணையும் சலுகைக்குப் பணம் செலுத்தும்படியும், அத்தகைய பேரத்தைக் குறித்து நன்றி பாராட்டும்படியும் இளைஞர்களைத் தூண்டும்
வல்லமை படைத்தவர்.
இன்னொரு நிபுணர் பரோஸ் நகரத்தைச் சேர்ந்தவர். அவர் இந்த மாநகரத்துக்கு
வந்திருப்பதை நான் கண்டறிந்துள்ளேன். அத்தகைய பேராசான்களுக்கு மற்றவர்கள்
செலுத்திய மொத்தக் கட்டணத்தை விட அதிக கட்டணம் செலுத்திய ஒருவரை நான் சந்திக்க
நேர்ந்தது. ஹிப்பொனிக்கசின் மகன் கல்லியாஸ் தான் அவர். ஹிப்பொனிக்கசுக்கு இரண்டு
பையன்கள்.
ஹிப்போனிக்கசிடம் நான் சொன்னேன்: "உனது பையன்கள் குதிரைக் குட்டிகளாக அல்லது
மாட்டுக் கன்றுகளாக இருந்தால், அவர்களது இயற்கைப் பண்புகளைச் செம்மைப்படுத்துவதற்கு ஒரு
பயிற்றுநரைக் கண்டறிந்து பணிக்கமர்த்துவதில் எமக்குச் சிரமம் ஏற்படாது.
அப்பயிற்றுநர் ஒருவகையான குதிரை வியாபாரியாக அல்லது பண்ணையாளராக இருப்பார். ஆனால்
உனது பையன்கள் மனிதப் பிறவிகளாக இருக்கிறபடியால், யாரை அவர்களது
போதனாசிரியராக அமர்த்த எண்ணுகிறாய்? மனித, சமுதாயப் பண்புகளைச் செம்மைப்படுத்துவதில் யார் நிபுணர்? உனக்குப் புதல்வர்கள் இருக்கிறபடியால், இந்தக்
கேள்வியை நீ கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி ஒருவர்
இருக்கிறாரா, இல்லையா?"
"ஆம், இருக்கிறார்"
என்றார் அவர்.
"யார் அவர்? எந்த
ஊர்? அவர் விதிக்கும் கட்டணம் எவ்வளவு?" என்று நான் கேட்டேன்.
"பரோஸ் நகரத்து எவெனஸ், சாக்கிரட்டீஸ்! அவரது கட்டணம் ஐந்து மினா" என்றார் அவர்.
உண்மையில் எவெனசுக்கு இந்தக் கலையில் பாண்டித்தியம் இருந்தால், மிதமான கட்டணம்
பெற்று அதை அவர் போதிப்பவர் என்றால், அவர் பாராட்டப்பட
வேண்டியவர் என்றே நான் எண்ணினேன். பெரியோர்களே, உண்மையில்
இத்தகைய சங்கதிகள் எனக்குத் தெரியாது. இவற்றை நான் புரிந்துகொண்டிருந்தால்,
நான் செட்டைகட்டிப் பறந்திருத்தல் திண்ணம்.
இங்கே உங்களுள் ஒருவர் குறுக்கிட்டு, "சாக்கிரட்டீஸ், நீ பார்க்கும் அலுவல் என்ன? உன்னைப் பற்றி இப்படி
எல்லாம் தவறாகக் கூறப்படுவது எங்ஙனம்? நீ சாதாரண அலுவல்களில்
மட்டும் ஈடுபட்டிருந்தால், உன்னைப் பற்றிய பேச்சும்
அரட்டையும் கிளம்பியிருக்க மாட்டா; அவை நீ வழமையை மீறி
நடந்தபடியால் கிளம்பியமை உறுதி அல்லவா? இதற்குரிய விளக்கத்தை
நாங்களே கண்டுபிடிக்கக் கூடாது என்று நீ கருதினால், நீயே
உனது விளக்கத்தை எங்களிடம் தெரிவிக்கலாமே!" என்று கேட்கக்கூடும்.
இது ஒரு நியாயமான வேண்டுகோளாகவே எனக்குப் படுகிறது. என்மீது போலிப்பழி
கிளம்பிய காரணத்தை உங்களுக்கு நான் விளக்கியுரைக்க முயல்வேன். தயவுசெய்து கவனமாகக்
கேட்கவும். நான் கருத்தூன்றிப் பேசவில்லை என்று உங்களுள் சிலர் எண்ணக்கூடும்.
எனினும் நான் முழு உண்மையையும் உங்களிடம் தெரிவிக்க உறுதியளிக்கிறேன்.
பெரியோர்களே, வேறெதனாலும்
அல்ல, ஏறத்தாழ ஒரு வகையான ஞானத்தால் தான் இப்படி ஒரு பெயரை
நான் ஈட்டிக்கொண்டேன். நான் கருதுவது எத்தகைய ஞானத்தை? அது
மனித ஞானம் என்றுதான் நினைக்கிறேன். இந்த வரையறைக்கு உட்பட்டுப்
பொருள்கொள்ளுமிடத்து, உண்மையில் எனக்கு ஞானம் இருப்பதாகவே
தென்படுகிறது.
சற்று முன்னர் நான் குறிப்பிட்ட மேதைகள் மனித ஞானத்தை விஞ்சிய ஞானம்
படைத்தவர்கள் என்று ஊகிக்க இடமுண்டு. அதற்கு வேறு விளக்கம் அளிக்கும் விதம்
எனக்குத் தெரியாது. அத்தகைய ஞானம் என்னிடம் இல்லை என்பது உறுதி. என்னிடம் உண்டு
என்று கூறுபவர் எவரும் ஒரு பொய்யர், வேண்டுமென்றே வசை கற்பிப்பவர்.
பெரியோர்களே, நான்
உங்களிடம் கூறப்போவது எனது சொந்த அபிப்பிராயம் அல்ல. எனவே நான் மட்டுமீறி
மார்தட்டுவதாகத் தென்பட்டால், தயவுசெய்து குறுக்கிட
வேண்டாம். ஐயத்துக்கு இடங்கொடாத பாண்டித்தியம் படைத்த இறையிடம் உங்களை நான்
பாரப்படுத்தப் போகிறேன். என்னிடம் எத்தகைய ஞானம் உண்டோ அத்தகைய ஞானத்துக்குச்
சாட்சியாக தெல்பிப் பதியில் உறையும் தெய்வத்தை நான் அழைக்க வேண்டியுள்ளது.
சயரபோனை உங்களுக்குத் தெரியும் அல்லவா! அவர் இளமை தொட்டு எனது நண்பர். நல்ல
குடியாட்சிவாதி. அண்மையில் சர்வாதிகாரிகளை நாடுகடத்தி, குடியாட்சியை
மீண்டும் நிலைநாட்டுவதில் அவர் உங்களுடன் சேர்ந்து தொண்டாற்றியவர். அவர்
எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் எந்த அலுவலையும் மேற்கொண்ட
கையோடு, அதை ஊக்கமுடன் நிறைவேற்றுபவர். போகட்டும்!
ஒருநாள் அவர் தெல்பித்தலத்துக்குப் போய், தெல்பிப்பதியிடம் இந்த வினாவை எழுப்பியது
உண்மை. பெரியோர்களே, ஏற்கெனவே உங்களிடம் கூறியிருக்கிறேன்,
தயவுசெய்து குறுக்கிட வேண்டாம்! என்னை விட ஞானம் மிகுந்தவர் எவரும்
உண்டா என்று அவர் வினவினார். எவருமே இல்லை என்று தெல்பிப்பூசகி விடையளித்தார்.
இன்று சயரபோன் உயிருடன் இல்லை. அவரது சகோதரன் இங்கு நீதிமன்றில் இருக்கிறார். அவர்
எனது கூற்றுக்குச் சான்று பகர்வார்.
நான் இதை உங்களிடம் தெரிவிக்கும் நோக்கத்தை தயவுசெய்து எண்ணிப் பார்க்கவும்.
எனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி முதலில் எப்படித் தொடங்கியது என்பதை
உங்களுக்கு நான் விளக்க விரும்புகிறேன். தெல்பிப் பதியின் விடையாக வெளிவந்த
இறைவாக்கை நான் கேள்விப்பட்டபொழுது, என்னையே நான் வினவினேன்: தெல்பிப்பதி
கருதுவது என்ன? ஏன் தெல்பிப்பதி தெளிவான மொழியில் பேசவில்லை?
பெரியோர்களே, நான் பெருஞானமோ, குறுஞானமோ படைத்தவன் என்று கொள்வதற்கு எனக்கு அருகதை இல்லை என்பதை நன்கு உணர்ந்து
கொண்டவன். எனவே உலகிலேயே மிகுந்த ஞானவான் நானே என்று வலியுறுத்தும் தெல்பிப்பதி
கருதுவது என்ன? தெல்பிப்பதி பொய்யுரைக்க முடியாது; பொய்யுரைத்தலாகாது.
அதையிட்டுக் கொஞ்சக்காலம் நான் திகைத்துப் போயிருந்தேன். ஈற்றில் மிகுந்த தயக்கத்துடன்
அக்கூற்றின் உண்மையை நான் இப்படி உரைத்துப்பார்க்க முற்பட்டேன்: பெரும் ஞானவான்
என்று பேரெடுத்த ஒருவரை நான் சந்திக்கச் சென்றேன். அவரிடம் அந்த இறைவாக்கைப்
பொய்ப்பிப்பதில் என்னால் வெற்றிபெற முடிந்தால், அதை எனது ஞான தெய்வத்திடம் சுட்டிக்காட்டி,
"நானே மிகுந்த ஞானவான் என்று தாங்கள் கூறினீர்களே! ஆனால் இதோ
என்னிலும் மிகுந்த ஞானவான் ஒருவர் இருக்கிறாரே!" என்று மார்தட்டலாம் அல்லவா?
சரி, அவரை
நான் தீர ஆராய்ந்து பார்த்தேன். அவர் பெயரை நான் கூறத் தேவையில்லை. ஆனால் எங்கள்
அரசியல்வாதிகளுள் அவர் ஒருவர். அவரை நான் ஆய்விட்டபொழுது, எனக்கு
இப்படி ஒரு பட்டறிவு ஏற்பட்டது. பலரது கண்களில், ஏன் அவரது
சொந்தக் கண்களில் கூட, அவர் ஒரு ஞானவானாகவே தென்பட்டவர்.
ஆனால் அவருடன் நான் உரையாடியபொழுது, உண்மையில் அவர் ஒரு
ஞானவான் அல்ல என்ற எண்ணமே என் உள்ளத்துள் பதிந்தது. தன்னை ஒரு ஞானவானாக அவர்
கருதியிருந்தார்; உண்மையில் அவர் ஒரு ஞானவான் அல்ல என்பதை
அவருக்கு உணர்த்தும் முயற்சியில் பிறகு நான் இறங்கியபொழுது, எனது
முயற்சியால் அவருக்கும், உடனிருந்த பலருக்கும்
முகங்கடுத்தது.
நான் எழுந்து நடந்தபடியே சிந்தித்துப் பார்த்தேன்: சரி, நான் அவரை விட
மிகுந்த ஞானவான் என்பது உறுதியாகத் தெரிகிறதே! எப்படி என்றால், கொட்டமடிக்கும் அளவுக்கு எங்கள் இருவருக்கும் எந்த அறிவும் கிடையாது;
ஆனாலும் தான் அறியாத எதையோ அறிந்தவர் என்று அவர் நினைக்கிறார்
போலும்; நானோ எனது அறியாமையை நன்கு உணர்ந்துகொண்டவன்;
அதாவது நான் அறியாததை அறிந்தவன் என்று நான் கொள்ளவில்லை; அந்த வகையில், அந்தக் குறுகிய வரையறைக்குள், நான் அவரை விட மிகுந்த ஞானவான் என்று படுகிறது.
அதன் பிறகு அவரைவிட மிகுந்த ஞானவான் என்று பேரெடுத்த ஒருவரை நான் சந்திக்கச்
சென்றேன். திரும்பவும் என் உள்ளத்துள் அதே எண்ணமே பதிந்தது. அங்கே கூட அவருக்கும், உடனிருந்த
பலருக்கும் முகங்கடுத்தது.
அதிலிருந்து ஒருவர் பின் ஒருவராக நான் பலரைச் சந்தித்தேன். அதேவேளை பிறர்
என்னை வெறுக்கும்படியாக நான் நடந்துகொள்கிறேனே என்பதை உணர்ந்து வேதனைக்கும், திகிலுக்கும்
உள்ளானேன். ஆனாலும் எனது சமயக் கடமையை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற உணர்வு என்னை
உந்தியது. இறைவாக்கின் பொருளை நான் கண்டறிய முயன்றபடியால், அறிவாளி
என்று பேரெடுத்தோர் அனைவருடனும் நான் உரையாட நேர்ந்தது. போனால் போகட்டும், பெரியோர்களே, நான் ஒளிவுமறைவின்றி என் உள்ளத்துள்
பதிந்ததை நேர்மையுடன் உங்களிடம் கூறிவிட வேண்டும். இறையாணைப்படி எனது புலனாய்வை
நான் மேற்கொள்ளுந்தோறும், மாபெரும் ஞானவான்கள் என்று
பேரெடுத்தோர் ஏறக்குறைய முற்றிலும் ஞானவலு குன்றியோராகவே எனக்குத் தென்பட்டார்கள்;
அவர்களைவிட அறிவில் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்டோர் நடைமுறை
நுண்மதி மிகுந்தவர்களாகத் தென்பட்டார்கள்!
இறைவாக்கின் உண்மையை ஐயந்திரிபற நிச்சயிப்பதற்கு நான் மேற்கொண்ட ஒருவகைப்
பயணமாக எனது அருமுயற்சிகளைக் கணிக்கும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதன்படி
அரசியல்வாதிகளை முடித்துக்கொண்டு நாடகக் கவிஞர்கள், இசைக் கவிஞர்கள், எஞ்சிய கவிஞர்கள் அனைவரிடமும் சென்றேன். அவர்களுடன் ஒப்பிடுமிடத்து நான்
ஓர் அறிவிலி என்பதை அம்பலப்படுத்துவதற்கு அங்கே வாய்ப்புக்
கிடைக்கும் என்று நம்பினேன். அவர்களுடைய தலைசிறந்த படைப்புகள் என்று நான்
கருதியவற்றைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு, அவர்கள்
எழுதியவற்றின் பொருளைக் குறித்து அவர்களிடம் நான் நுணுகி வினவுவது வழக்கம்.
கதையோடு கதையாக எனது சொந்த அறிவைப் பெருக்கும் நம்பிக்கையுடன் அந்த வழக்கத்தைக்
கைக்கொண்டேன்.
சரி, பெரியோர்களே,
உங்களுக்கு உண்மையைக் கூறுவதில் எனக்குத் தயக்கம் உண்டு. ஆனாலும்
அதைக் கூறத்தான் வேண்டும். கவிஞர்களை விட, பக்கத்தில் நின்றவர்களுள் எவருமே அவர்களுடைய கவிதைகளுக்குச் சிறந்த
விளக்கம் அளிக்கக்கூடியவர்களாக விளங்கினார்கள் என்றால், அது
மிகையாகாது. ஆதலால் கவிஞர்களையும் நான் கையோடு நிதானித்து விட்டேன். அவர்களைக்
கவிதை எழுத வைத்தது ஞானம் அல்ல என்று நான் நிதானித்துக்கொண்டேன்; தமது விழுமிய சேதிகளின் பொருளை இம்மியும் அறியாமல் அவற்றை உதிர்க்கும்
ஞானிகளிடமும் தீர்க்கதரிசிகளிடமும் நீங்கள் காண்பது போன்ற ஒருவகை இயல்பூக்கமே
அல்லது உள்ளுந்தலே அவர்களைக் கவிதை எழுத வைத்தது என்று நான் நிதானித்துக் கொண்டேன்;
முன்னர் நான் குறிப்பிட்டவர்களைப் போன்றவர்களே கவிஞர்களும் என்பது
எனக்குத் தெளிவாகத் தென்பட்டது. அவர்கள் கவிஞர்கள் என்ற விடயம், ஏனைய சங்கதிகள் அனைத்தையும் தாங்கள் செவ்வனே புரிந்துகொண்டவர்கள் என்று
அவர்களை எண்ண வைத்ததையும் நான் அவதானித்தேன். ஆனால் ஏனைய சங்கதிகளைப் பொறுத்தவரை
அவர்கள் முற்றிலும் அறிவிலிகள். அதலால் அத்தகையோரை ஆய்விடும் முயற்சியையும் நான்
கைவிட்டேன். அரசியல்வாதிகளை ஆய்விட்டுப் பயனடைந்த அதே உணர்வு கவிஞர்கள்
விடயத்திலும் எனக்கு ஏற்பட்டது.
நான் ஈற்றில் நாடியது தேர்ச்சிபெற்ற கைவினைஞர்களை. எனக்குத் தொழினுட்பத் தகைமைகள்
கிடையா என்பது எனக்கு நன்கு தெரியும். அவர்களோ எவரையும் ஆட்கொள்ளவல்ல அறிவு
படைத்தவர்களாக விளங்குவார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். அதில் நான் ஏமாற்றம்
அடையவில்லை. நான் புரிந்துகொள்ளாத சங்கதிகளை அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள்.
அந்த வகையில் அவர்கள் என்னைவிட மிகுந்த ஞானவான்களாகவே விளங்கினார்கள். ஆனாலும், பெரியோர்களே,
கவிஞர்களிடம் நான் அவதானித்த அதே குறைபாடு, துறைமைத்திறம்
படைத்த இந்நிபுணர்களிடமும் தென்பட்டது. தமக்குத் தொழினுட்பத் தேர்ச்சி என்னும்
வல்லமை இருப்பதால், ஏனைய விடயங்கள் அனைத்தையும், அவை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததாயினும், தாங்கள்
செவ்வனே புரிந்துகொண்டிருப்பதாக அவர்கள் வலியுறுத்தினார்கள். அது தவறு. அவர்களது
ஞானம் நம்பிக்கை ஊட்டிய போதிலும், அவர்களின் தவறு அந்த
ஞானத்தை விஞ்சியதாகவே எனக்குத் தென்பட்டது.
ஆதலால் நானே இறைவாக்கின் குழலூதியாக மாறினேன். அவர்களின் ஞானம் கொண்ட ஞானவானாக
விளங்காமல், அவர்களின்
அறியாமை கொண்ட அறிவிலியாக விளங்காமல், நான் முன்னர் எப்படி
இருந்தேனோ அப்படியே இனியும் இருப்பதா, அல்லது இனிமேல்
அவர்களைப் போல் அவ்விரு தன்மைகளும் கொண்டவனாக இருப்பதா என்று என்னையே நான்
வினவினேன். நான் முன்னர் எப்படி இருந்தேனோ அப்படி இருப்பதே சிறந்தது என்று நானே
இறைவாக்கிற்கு விடையளித்தேன்.
பெரியோர்களே, எனது
புலனாய்வுகளின் விளைவாக என்மீது பெரும்பகை கிளம்பியது. கடுங்கசப்புடன் கூடிய
பகை நிலைகொண்டது. அதன் பெறுபேறாக வன்மம் கொண்ட கதைகள் பலவும் எழுந்தன. நான் ஒரு
ஞானப் பேராசிரியர் என்ற கதை அவற்றுள் ஒன்று.
ஒருவர் ஒரு துறையில் ஞானவான் எனப்படுவதைப் பொய்ப்பிப்பதில் நான்
வெற்றிபெறுந்தோறும், அத்துறையில்
நான் அனைத்தும் அறிந்தவன் என்று உடனிருப்பவர்கள் கருதுவதால் அப்படி நேர்கிறது.
ஆனால், பெரியோர்களே, மிகவும் உறுதிபடப்
புலப்படும் உண்மை இதுவே: அதாவது மெய்ஞானமோ இறைவனின்
சொத்து; மனித ஞானமோ பெறுமதி குன்றியது அல்லது பெறுமதி அற்றது;
இதை அந்த இறைவாக்கின் ஊடாக எங்களிடம் தெரிவிப்பது இறைவனின் பாணி;
அவர் சாக்கிரட்டீஸ் என்று கூறியது ஆனானப்பட்ட என்னை அல்ல; வெறுமனே என்னை ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டு எங்கள் அனைவரிடமும் அவர்
கூறியதாகவே எனக்குத் தென்படுகிறது: "மனிதர்களே, உங்களுள்
மிகுந்த ஞானவான் என்பவன், சாக்கிரட்டீசைப் போல், உண்மையில் அற்ப ஞானவானே" என்று அவர் கூறியதாகவே எனக்குத்
தென்படுகிறது.
ஆதலால்தான் அந்த இறையாணைக்குப் பணிந்து இன்னமும் நான் ஞானவான்களைத் தேடித்திரிகிறேன்; ஞானவானாகத்
தென்படும் குடிமகன், அந்நியர் எவரதும் ஞானத்தை நான்
ஆராய்ந்து பார்க்கிறேன்; அவர் ஞானமற்றவர் என்றால், இறைவாக்கை மெய்ப்பிக்கும் வண்ணம், அவர் ஞானமற்றவர்
என்பதை அவரிடம் சுட்டிக்காட்டுகிறேன். நான் அரசியலிலோ எனது சொந்த அலுவல்களிலோ
ஈடுபட முடியாவாறு இப்பணி என்னை ஈர்த்து வைத்துள்ளது. உண்மையில் என் தெய்வப்பணி
என்னை மிகுந்த ஏழ்மைக்குள் ஆழ்த்தியுள்ளது.
எனக்கு இகழ்ச்சி ஏற்பட்டதற்கு இன்னொரு காரணம் உண்டு. செல்வந்த தந்தையரின் இளம்
புதல்வர்கள் திளைப்புவேளை மிகுந்தவர்கள். மற்றவர்களிடம் குறுக்குவினாத் தொடுக்கப்படுவதை
அவர்கள் கேட்டுத் திளைத்தார்கள். ஆதலால் அவர்கள் வேண்டுமென்றே என்னுடன்
ஒட்டிக்கொண்டார்கள். என்னைத் தமது முன்மாதிரியாகக் கொண்டு மற்றவர்களிடம் அடிக்கடி
வினாத்தொடுக்க முயன்றார்கள். தாம் எதையோ அறிந்தவர்கள் என்று எண்ணிறந்தோர்
நினைக்கிறார்கள்; ஆனால்
உண்மையில் அவர்கள் அறிவுகுன்றியவர்கள் அல்லது அறிவிலிகள் என்பதை இளைஞர்கள்
கண்டுகொள்கிறார்கள்.
ஆதலால் பாதிப்புக்கு உள்ளானோர், இளைஞர்கள் மீதல்ல, என்மீது
எரிச்சல்கொண்டு, "சாக்கிரட்டீஸ் என்றோர் அதிகப்பிரசங்கி
இருக்கிறான்; அவன் ஒரு பீடை; இளையோரின்
தலைக்குள் அவன் தவறான எண்ணங்களை இட்டு நிரப்புகிறான்" என்று
முறையிடுகிறார்கள். "சாக்கிரட்டீஸ் என்ன பண்ணுகிறான்? அப்படி
நீங்கள் முறையிடும்படி என்ன போதிக்கிறான்?" என்று
நீங்கள் திருப்பிக் கேட்டால், பதில் கூறத் தெரியாமல்,
வாயை மூடிக்கொள்வார்கள்; தமது மனக்குழப்பத்தை
ஒப்புக்கொள்ள முன்வரமாட்டார்கள்; மெய்யியலாளர் எனப்படும்
எவர்மீதும் சுமத்தப்படும் வாடிக்கையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள்; விண்ணுலகத்துக்கு மேற்பட்ட சங்கதிகளையும்,
மண்ணுலகத்துக்கு கீழ்ப்பட்ட சங்கதிகளையும் தனது மாணவர்களுக்கு அவர் புகட்டுவதாகக்
கூறுவார்கள்; கடவுளரை நம்பவேண்டாம் என்று அவர் போதிப்பதாகக்
கூறுவார்கள்; வலுவற்ற வாதம் கொண்டு வலுவுற்ற வாதத்தை அவர்
முறியடிப்பதாகக் கூறுவார்கள்.
முற்றிலும் அறிவிலிகளான அவர்களுக்கு உண்மையை ஒப்புக்கொள்வது, அதாவது தாங்கள்
அறிவாளிகளாகப் பாசாங்குசெய்த குற்றத்தை ஒப்புக்கொள்வது, மிகுந்த
அருவருப்பைக் கொடுப்பதாக எண்ணுகிறேன். தமது சொந்த மானம் காக்க அவர்கள் என்மீது
பொறாமை கொண்டதாக எண்ணுகிறேன். அவர்கள் ஆற்றல் வாய்ந்தவர்கள். ஆட்பலம்
மிகுந்தவர்கள். நெடுங்காலமாக உங்கள் காதுகளில் என்னை வன்மையாகக் கடிந்துரைத்து
வந்தவர்கள். இப்பொழுது எனக்கெதிராகப் போலி வழக்கொன்றை அவதானமாகச் சோடித்து
வைத்துள்ளார்கள்.
மெலிட்டஸ், அனைட்டஸ்,
லைக்கன் மூவரும் என்மீது வழக்குத் தொடுத்த காரணங்கள் இவையே. என்னால்
இடருற்ற கவிஞர்கள் சார்பாக மெலிட்டசும், துறைஞர்கள்-அரசியல்வாதிகள்
சார்பாக அனைட்டசும், நாவலர்கள் சார்பாக லைக்கனும் என்மீது
வழக்குத் தொடுத்துள்ளார்கள். எனவே தொடக்கத்தில் நான் கூறியது போல், உங்கள் உள்ளத்துள் ஆழமாக ஊன்றப்பட்டுள்ள தப்பெண்ணங்களை, எனக்குக் கிடைத்துள்ள குறுகிய நேரத்துள், என்னால்
களையமுடிந்தால், நான் வியப்படைந்தே ஆகவேண்டும்.
இவையே உண்மையான விபரங்கள், பெரியோர்களே! சிறிதோ, பெரிதோ எதையுமே
ஒளிவுமறைவின்றி உங்கள்முன் வைத்துள்ளேன். இப்படி நான் வெளிப்படையாகப் பேசுவதே
எனக்கு இகழ்ச்சி ஏற்படக் காரணம் என்று சற்று உறுதியாகவே நான் நம்புகிறேன். எனது
கூற்றுகள் உண்மையானவை என்பதை இது மெய்ப்பிக்கிறது. என்மீது சுமத்தப்பட்ட பழியின்
தன்மையையும், அடிப்படைகளையும் நான் சரிவர
எடுத்துரைத்துள்ளேன் என்பதை இது மெய்ப்பிக்கிறது. அவற்றை இப்பொழுதோ இனிமேலோ
நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், நான் எடுத்துரைத்தவாறே அவை
அமைந்திருக்கக் காண்பீர்கள். முதலாவது தரப்பினர் என்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு
எனது பதில்வாதம் இது. தன்னை ஓர் உயர்நெறியாளர் என்றும் நாட்டுப்பற்றாளர் என்றும் வலியுறுத்தும்
மெலிட்டசின் குற்றச்சாட்டுக்கும், அதன் பிறகு ஏனையோரின்
குற்றச்சாட்டுக்கும் எனது பதில்வாதத்தை முன்வைக்மும் முயற்சியில் இனி நான் இறங்கப்
போகிறேன்.
முதலில் அவர்களது சத்திய வாக்குமூலத்தை ஒரு புதிய வழக்குத்தொடுப்பாக எண்ணி
ஆராய்ந்து பார்ப்போம். அது இந்த மாதிரி அமைந்திருக்கிறது: சாக்கிரட்டீஸ்
இளைஞர்களின் உள்ளத்தைக் கெடுத்த குற்றவாளி; அரசினால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுளரை விடுத்து, தானே சொந்தமாகக்
கண்டுபிடித்த தேவர்களில் நம்பிக்கை கொண்ட குற்றவாளி.அத்தகைய
குற்றச்சாட்டே என்மீது சுமத்தப்பட்டுள்ளது. அதன் அம்சங்களை இனி ஒவ்வொன்றாக
ஆராய்வோம்:
நான் இளைஞர்களின் உள்ளத்தைக் கெடுத்த குற்றச்சாட்டு முதலாவது. மெலிட்டஸ் இங்கே
அற்ப ஆதாரங்களைக் கொண்டு, ஆட்களை
ஆணையிட்டழைத்து, விசாரணைக்கு உட்படுத்துகிறார். தான் என்றுமே
சற்றும் நாட்டம் கொள்ளாத சங்கதிகளில் தனக்கு கரிசனையும் ஆவலும் இருப்பதாக அவர்
மார்தட்டுகிறார். ஆதலால், பெரியோர்களே, இத்தகைய பாரதூரமான சங்கதியை ஒரு விளையாட்டாக எடுத்த குற்றத்தை மெலிட்டஸ்
புரிந்திருப்பதாக நான் கூறுகிறேன். உங்கள் உள்ளம் நிறைவுறும் வண்ணம் அதை நான்
மெய்ப்பித்துக் காட்டுகிறேன்.
இதோ பார், மெலிட்டஸ்,
இதை எனக்குச் சொல்லு: எங்கள் இளைஞர்களை இயன்றவரை நல்வழிப்படுத்த
வேண்டியது மிகமுக்கியம் என்று நீ கருதுகிறாய், அல்லவா?
மெலிட்டஸ்: ஆம்.
மெத்த நல்லது. அப்படி என்றால், இளைஞர்களை நல்வழிப்படுத்துவோர் யார் என்பதை
இப்பெரியோர்களிடம் எடுத்துக்கூறு. அதில் உனக்கு அத்துணை அக்கறை இருந்தால், அது யார் என்பது உனக்குத் தெரிய வேண்டுமே! அவர்களைக் கெடுப்பது நானே
என்பதை நீ கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறாய். அதற்காக இப்பெரியோர்கள் முன்னிலையில்
என்மீது நீ வழக்குத் தொடுத்துள்ளாய். இளைஞர்களை நல்வழிப்படுத்துவோர் யார் என்பதை,
உன் வாயைத் திறந்து இப்பெரியோர்களிடம் எடுத்துக்கூறு. .
. இதோ பார், மெலிட்டஸ், விடையளிக்க முடியாமல் நீ வாயடைத்து நிற்கிறாய். இது வெட்கக்கேடு என்று
உனக்குப் படவில்லையா? இந்த விடயத்தில் உனக்கு அக்கறை இல்லை
என்று நான் கூறியதற்கு இதுவே போதிய சான்றாகத் தென்படவில்லையா? இளைஞர்களை நல்வழிப்படுத்துவோர் யார் என்பதை எனக்குக் கூறு, நண்பனே!
மெலிட்டஸ்: சட்டங்கள்.
நான் கருதுவது அவற்றையல்ல, அருமை ஐயனே! சட்டங்களை அறிவது யாருடைய தலையாய பணி என்றுதான்
உன்னிடம் கேட்கிறேன்.
மெலிட்டஸ்: இங்கே அமர்ந்திருக்கும் பெரியோர்கள், யூரர் பெருமக்கள், சாக்கிரட்டீஸ்!
இளைஞர்களுக்கு கற்பித்து, அவர்களை நல்வழிப்படுத்தும் ஆற்றல் இவர்களுக்கு உண்டென்று நீ
கருதுகிறாயா, மெலிட்டஸ்?
மெலிட்டஸ்: உறுதியாகக் கருதிகிறேன்.
அது யூரர்கள் அனைவருக்கும் பொருந்துமா? அல்லது சிலருக்கு மட்டும் பொருந்துமா?
மெலிட்டஸ்: அனைவருக்கும்.
மிக்க நன்று! ஏராளமான தொண்டர்கள்! சரி, அப்படி என்றால், இந்த
நீதிமன்றில் இருக்கும் பார்வையாளர்கள் என்ன பாடு? அவர்களும்
இளைஞர்களை நல்வழிப்படுத்துவோரா?
மெலிட்டஸ்: ஆம், அவர்களும்
அப்படித்தான்.
மன்ற உறுப்பினர்கள் என்ன பாடு?
மெலிட்டஸ்: ஆம், மன்ற
உறுப்பினர்களும் தான்.
ஆனாலும், மெலிட்டஸ்,
அவையுறுப்பினர்கள் இளைஞர்களைக் கெடுப்பதில்லை என்று உறுதிபடக்
கூறுகிறாயா? அல்லது அவர்கள் அனைவரும் இளைஞர்களை
நல்வழிப்படுத்துவோரா?
மெலிட்டஸ்: ஆம், அவர்கள்
நல்வழிப்படுத்துவோரே.
அப்படி என்றால், என்னைத்
தவிர அதென்சு மாநகரவாசிகள் அனைவரும் இளைஞர்களை நல்வழிப்படுத்துவோராகவே
தென்படுகின்றனர். நான் மட்டுமே அவர்களைக் கெடுப்பவன். அப்படித்தானே நீ கருதுகிறாய்?
மெலிட்டஸ்: ஆம், அதை
மிகவும் வற்புறுத்திக் கூறுகிறேன்.
நீ என்னிடம் கண்டுபிடித்தது மிகவும் அவப்பேறான தன்மை என்பது உறுதி. சரி, உன்னிடம்
இன்னொரு கேள்வி கேட்கிறேன். குதிரைகளை எடுத்துக்கொள்வோம். மனிதர்கள் அனைவரும்
குதிரைகளைச் செம்மைப்படுத்துவோர் என்றும், ஒரே ஒருவரே
அவற்றைக் கெடுப்பவர் என்றும் நீ நம்புகிறாயா? அல்லது உண்மை
எதிர்மாறானதா? அதாவது, குதிரைகளைப்
பயிற்றும் ஒருவரே அல்லது ஒருசிலரே குதிரைகளைச் செம்மைப்படுத்த வல்லவரா? அல்லது குதிரைகளை வைத்திருந்து பயன்படுத்தும் பெரும்பாலானோர் அவற்றுக்குக்
கெடுதி விளைவிப்பவர்களா? குதிரைகளுக்கும் ஏனைய விலங்குகள்
அனைத்துக்கும் இது பொருந்துகிறது அல்லவா, மிலிட்டஸ்? நீயும் அனைட்டசும் மறுத்தால் என்ன, மறுக்காவிட்டால்
என்ன, இது இயல்பாகவே அனைத்துக்கும் பொருந்துகிறது அல்லவா?
இளைஞர்களைக் கெடுப்பது ஒருவர் மட்டுமே என்பதும், ஏனையோர் அனைவரும் அவர்களை
நல்வழிப்படுத்துவோர் என்பதும் அவர்களுக்கு அருளப்பட்ட தனித்துவமான பேறாகும் அன்றோ!
ஆனாலும், மெலிட்டஸ், இளைஞர்களைப் பற்றி
நீ என்றுமே அலட்டிக்கொண்டதில்லை என்பதற்கு மிகைபட்ட சான்றுண்டு. இப்பொழுது எந்த
நோக்கத்துக்காக நீ என்மீது குற்றம் சுமத்துகிறாயோ அந்த நோக்கத்தில் நீ இம்மியும் அக்கறை
கொண்டதில்லை என்பதை நீ செவ்வனே வெளிப்படுத்திவிட்டாய். அதைப் பற்றி நான் மேற்கொண்டு
கூறத் தேவையில்லை.
இதோ இன்னொரு சங்கதி, மெலிட்டஸ்!
கருத்தூன்றி எனக்கு விடை கூறு: ஒருவர் நல்ல சமூகத்திலா, கெட்ட
சமூகத்திலா வாழ்வது நல்லது? ஒரு நல்ல சகபாடியைப் போல் எனது
கேள்விக்கு விடை கூறு. இது கடினமான கேள்வி அல்லவே! கெட்டவர்கள் தம்முடன் நெருங்கி
உறவாடுவோரைக் கெடவைப்பதும், நல்லவர்கள் மற்றவர்களை நலம்பட
வைப்பதும் உண்மையா?
மெலிட்டஸ்: மிகவும் உண்மை.
தனது சகபாடிகளால் எவரும் நன்மைக்கு உள்ளாவதை விடுத்து தீமைக்கு உள்ளாக
விரும்புவாரா? என்
அன்பனே, எனக்கு விடை கூறு. நீ விடை கூறவேண்டும் என்பது
சட்டம். எவரும் தீமைக்கு உள்ளாக விரும்புவாரா?
மெலிட்டஸ்: இல்லை, இல்லை.
நான் இளைஞர்களைக் கெடுத்து, அவர்களின் குணத்தை மோசமாக்கியதாக என்மீது குற்றஞ்சுமத்தி,
என்னை இந்த நீதிமன்றில் வெளிப்படும்படி எனக்கு நீ அழைப்பாணை விடுத்துள்ளாய்.
சரி, அப்படி என்றால், நான்
வேண்டுமென்றே அவ்வாறு செய்கிறேனா, அல்லது மனமிசையாது அவ்வாறு
செய்கிறேனா?
மெலிட்டஸ்: நீ வேண்டுமென்றே அவ்வாறு செய்வதாகவே கருதுகிறேன்.
எப்படி, மெலிட்டஸ்,
எனது வயதில் எனக்குள்ள ஞானத்தை விட உனது வயதில் உனக்குள்ள ஞானம் அதிகமாக
இருக்கிறது? என்றுமே தீயவர்கள் தம்மை நெருங்கிய அயலவர்கள்
மீது தீயதாக்கத்தை விளைவிப்பவர்கள் என்பதையும், நல்லவர்கள்
நல்ல தாக்கத்தை விளைவிப்பவர்கள் என்பதையும் நீ கண்டுபிடித்துள்ளாய். எனது
கூட்டாளிகளுள் ஒருவரின் குணத்தை நான் கெடுப்பதன் மூலம் அவரால் ஒரு தீங்கிற்கு
உள்ளாகும் ஆபத்தை நான் எதிர்கொள்ளக்கூடும் என்பதைக் கூட அறவே புரிந்துகொள்ள
முடியாத அறிவிலியா நான்? அத்தகைய பாரதூரமான குற்றத்தை
வேறெதுவும் என்னை வேண்டுமென்றே செய்ய வைக்காது என்பதால் உன்னிடம் அப்படிக்
கேட்கிறேன். நான் அதை நம்பமாட்டேன், மெலிட்டஸ். வேறெவரும்
கூட அதை நம்பமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஒன்றில் நான் கெடுதி விளைவிப்பவன்
அல்ல, அல்லது மனமிசையாது கெடுதி விளைவிப்பவன். ஆதலால்,
இரண்டில் எதுவாயினும், உனது குற்றச்சாட்டு,
பொய்த்துப் போகிறது. நான் மனமிசையாது கெடுதி விளைவிப்பவன் என்று
வைத்துக்கொண்டால், அவ்வாறு மனமிசையாது புரியும்
பொல்லாங்குகளுக்கு, அவ்வாறு பொல்லாங்கு புரிந்தவரை இந்த
நீதிமன்றின்முன் வெளிப்படும்படி அழைப்பாணையிடுவதை விடுத்து, அவரைத்
தனிப்பட ஒருபுறமாகக் கூட்டிச்சென்று, கடிந்து, அறிவுறுத்தி அனுப்புவதே தகுந்த நடைமுறை. என் அறிவுக் கண்கள் திறக்கப்பட்டால்,
நான் செய்ய எண்ணாததைச் செய்யும் வழக்கத்தை நிறுத்திக்கொள்வேன்
அல்லவா? ஆனால், மெலிட்டஸ், கடந்தகாலத்தில் என்னுடன் கூடுவதை நீ திட்டமிட்டே தவிர்த்து வந்துள்ளாய்.
எனக்கு அறிவொளியூட்ட மறுத்து வந்துள்ளாய். இப்பொழுது இந்த நீதிமன்றுக்கு என்னை
இழுத்து வந்துள்ளாய். இது தண்டனை தேவைப்படுவோருக்கு ஒதுக்கப்பட்ட இடமேயொழிய,
அறிவொளி தேவைப்படுவோருக்கு ஒதுக்கப்பட்ட இடம் அல்ல.
பெரியோர்களே, நான்
முன்னர் கூறியது போல், மெலிட்டஸ் இந்த விடயத்தில் என்றுமே
எத்துணை அக்கறையும் கொண்டதில்லை என்பது இப்பொழுது மிகவும் தெளிவாகியுள்ளது.
போகட்டும், மெலிட்டஸ், இளைஞர்களின்
உள்ளத்தை எந்த வகையில் நான் கெடுத்ததாக நீ வலியுறுத்துகிறாய் என்பதை எங்களிடம்
எடுத்துக்கூற வேண்டுகிறேன். அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுளரை விடுத்து புதிய
தேவர்களில் நம்பிக்கை வைக்கும்படி நான் போதிப்பதாக நீ என்மீது குற்றஞ்சுமத்துவது
உனது குற்றச்சாட்டிலிருந்து தெளிவாவது உறுதி அல்லவா! எனது போதனையே இளைஞர்களைக்
கெடுப்பதாக நீ கூறவில்லையா?
மெலிட்டஸ்: ஆம், இழையும்
வழுவாமல் அதுவே எனது வாதம்.
அப்படி என்றால், மெலிட்டஸ்,
உனது வாதத்தை எனக்கும் யூரர் பெருமக்களுக்கும் இன்னும் கொஞ்சம் தெளிவாக
விளக்கியுரைக்கும்படி நாங்கள் குறிப்பிடும் கடவுளரின்
பெயரால் உன்னிடம் வேண்டிக் கொள்கிறேன். காரணம், உனது கூற்றை
என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. குறித்த சில கடவுளரில் நம்பிக்கை வைக்கும்படி
நான் ஆட்களுக்குப் போதிக்கிறேன் என்கிறாயா? அப்படி என்றால்,
கடவுளரில் நான் கூட நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்பது அதன் உட்கிடை
அல்லவா? ஆகவே நான் ஒரு முழுநாத்திகன் அல்லவே! அந்த வகையில்
நான் ஒரு குற்றவாளி அல்லவே! அல்லது அரசினால் ஏற்றுக்கொள்ளப்படாத வேறு கடவுளரில்
நம்பிக்கை வைக்கும்படி நான் ஆட்களுக்குப் போதிக்கிறேன் என்கிறாயா? அப்படி என்றால், அவர்கள் வேறு கடவுளர்கள் என்பதே
உனது குற்றச்சாட்டின் அடிப்படையா? அல்லது எந்தக் கடவுளரிலும்
நான் நம்பிக்கை வைக்கவில்லை, அதையே மற்றவர்களுக்கும்
போதிக்கிறேன் என்று வலியுறுத்துகிறாயா?
மெலிட்டஸ்: ஆம், நீ
எந்தக் கடவுளரிலும் நம்பிக்கை வைக்கவில்லை என்கிறேன்.
நீ என்னை வியக்க வைக்கிறாய், மெலிட்டஸ். அப்படி நீ கூறுவதன் பொருள் என்ன? மனுக்குலம் முழுவதும் நம்புவது போல் சூரியனும் சந்திரனும் கடவுளர் என்று
நான் நம்பவில்லை என்று நீ கருதுகிறாயா?
மெலிட்டஸ்: யூரர் பெருமக்களே, சூரியனைக் கல் என்றும், சந்திரனை மண்
என்றும் கூறும் இவர், அவற்றைக் கடவுளர் என்று நம்பவில்லை
என்பது உறுதி.
என் அருமை மெலிட்டஸ், நீ
அனக்சகோரஸ் மீது வழக்குத் தொடுத்திருப்பதாகக் கற்பனைபண்ணியா பேசுகிறாய்? யூரர் பெருமக்களை நீ அவ்வளவு குறைவாக மதிப்பிட்டு வைத்திருக்கிறாயா?
கிளாசோமெனே நகரத்து அனக்சகோரசின் நூல்களில் அத்தகைய கோட்பாடுகள்
நிறைந்திருப்பதை அறியாத அளவுக்கு இவர்களை எழுத்தறிவற்றவர்கள் என்று நீ கருதுகிறாயா?
இளைஞர்கள் என்னிடமிருந்தே மேற்படி கருத்துக்களை
எடுத்துக்கொள்கிறார்கள் என்று கருத்தூன்றித்தான் நீ கூறுகிறாயா? இடைக்கிடை அவர்கள் கடைக்குப் போய் ஆகக்கூடியது ஒரு வெள்ளிக்காசுக்கு
அத்தகைய நூல்களை வாங்கி வாசிக்க முடியும் அல்லவா? அவை தனது
கோட்பாடுகள் என்று சாக்கிரட்டீஸ் மார்தட்டினால், குறிப்பாக
அவை மடைத்தனமான கோட்பாடுகளாகத் தென்படுவதால், அவர்கள் அவனை
எள்ளி நகையாட முடியும் அல்லவா? நேர்மையாக எனக்கு விடைகூறு,
மெலிட்டஸ்! என்னைப் பற்றி அப்படியான எண்ணமா வைத்திருக்கிறாய்?
எந்தக் கடவுளிலும் நான் நம்பிக்கை வைத்திருக்கவில்லையா?
மெலிட்டஸ்: இல்லை, இல்லவே
இல்லை, எள்ளளவும் இல்லை.
உனது பதில் எனக்கு சற்றும் நம்பிக்கை தரவில்லை, மெலிட்டஸ். ஏன், உனக்கும் கூட நம்பிக்கை தரவில்லை என்றே நான் ஊகிக்கிறேன். பெரியோர்களே,
இந்த ஆள் கடைந்தெடுத்த சுயநலப்புலி என்பதே எனது கருத்து. முற்றிலும்
தறிகெட்டு, இறுமாந்து, வன்மம் கொண்டு
என்மீது இந்த வழக்கை இவர் தொடுத்துள்ளார். எனக்கு ஏதோ ஒருவகையான நுண்மதிப்
பரிசோதனையை இவர் தயாரிப்பதாகத் தெரிகிறது. "எனது சொந்தக் கேளிக்கைக்காக
என்னுடன் நானே முரண்படுகிறேன் என்பதை, தவறேதும் இழைக்காத
சாக்கிரட்டீஸ் புரிந்துகொள்வானா? அல்லது அவனையும், எஞ்சிய எனது அவையோரையும் ஏய்ப்பதில் நான்
வெற்றிபெறுவேனா?" என்று இவர் தன்னைத் தானே வினவுவதாகத்
தெரிகிறது.
இந்தக் குற்றச்சாட்டில் இவர் சுயமுரண்பாட்டுக்கு உள்ளாவதாக எனக்கு உறுதியாகத்
தெரிகிறது. அவரது குற்றச்சாட்டு இப்படி அமைவதாகவும் கொள்ளலாம்: சாக்கிரட்டீஸ்
கடவுளரில் நம்பிக்கை வைக்காத குற்றவாளியானாலும் கூட நம்பிக்கை வைக்கும் குற்றவாளி! இது அப்பழுக்கற்ற விளையாட்டுத்தனம்.
பெரியோர்களே, இந்த
முடிபுக்கு என்னை இட்டுச்செல்லும் நியாயநெறியை என்னுடன் சேர்ந்து ஆராயும்படி
உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். மெலிட்டஸ், எனது
கேள்விகளுக்கு நீ மறுமொழிகூறித் துணைநிற்க வேண்டும். நான் தொடக்கத்தில்
வேண்டிக்கொண்டது போல், எனது வழமைப்படி நான் கலந்துரையாடலை
நடத்தினால், குறுக்கிட வேண்டாம் என்பதை நீங்கள் அனைவரும்
நினைவில் வைத்திருப்பீர்களா?
மெலிட்டஸ், மனிதப்
பிறவிகளில் நம்பிக்கை வைக்காமல் மனிதரின் செயல்களில் நம்பிக்கை வைப்பவர் எவராவது
உலகத்தில் உண்டா? பெரியோர்களே, இவரை
விடையளிக்க வையுங்கள்! இவர் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்க அனுமதிக்காதீர்கள்!
குதிரைகளில் நம்பிக்கை வைக்காமல் குதிரைகளின் செயல்களில் நம்பிக்கை வைப்பவர்
எவராவது உண்டா? அல்லது இசைஞர்களில் நம்பிக்கை வைக்காமல்
இசையலுவல்களில் நம்பிக்கை வைப்பவர் யார்? இல்லை, எவரும் இல்லை, என் அருமை நண்பரே! நீ விடையளிக்க
விரும்பாவிட்டல், உனக்காகவும் இப்பெரியோர்களுக்காகவும் நானே
விடையளிப்பேன். ஆனாலும் அடுத்த கேள்விக்கு நீயே விடையளிக்க வேண்டும்: தெய்வச்
செயல்களில் நம்பிக்கை வைக்கும் அதேவேளை தெய்வப் பிறவிகளில் நம்பிக்கை வைக்காத
எவரும் உண்டா?
மெலிட்டஸ்: இல்லை.
நீதிமன்றின் நிர்பந்தத்துக்கு உட்பட்டு நீ நேரடியாக விடையளித்தது எவ்வளவோ
நல்லது! சரி, தெய்வச்
செயல்களில் நம்பிக்கை வைக்கும்படி மற்றவர்களுக்கு நான் போதிப்பதாக நீ அடித்துக்
கூறுகிறாயா? அவை பழைய தெய்வங்களா, புதிய
தெய்வங்களா என்பதை நாங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை. உனது கூற்றின்படி எனக்கு
அவற்றில் நம்பிக்கை உண்டு என்பது தெளிவு. உண்மையில் அப்படி உனது சத்தியக்
கடதாசியில் நீ பற்றுறுதியுடன் சூளுரைத்துள்ளாய். ஆனாலும், தெய்வச்
செயல்களில் எனக்கு நம்பிக்கை உண்டென்றால், தெய்வப்
பிறவிகளிலும் எனக்கு நம்பிக்கை உண்டென்பது பெறப்படுகிறது அல்லவா? ஆம், பெறப்படுகிறது. நீ பதில் கூறாமல் அமைதி காப்பதை
உனது சம்மதமாக எடுத்துக்கொள்கிறேன். தெய்வப் பிறவிகள் ஒன்றில் கடவுளர் அல்லது
கடவுளரின் பிள்ளைகள் என்று நாங்கள் கொள்ளவில்லையா? நீ உடன்படுகிறாயா,
அல்லவா?
மெலிட்டஸ்: உறுதியாக உடன்படுகிறேன்.
அப்படி என்றால், நீ
வலியுறுத்துவது போல் தெய்வப் பிறவிகளில் எனக்கு நம்பிக்கை உண்டென்றால், இத்தெய்வப் பிறவிகள் ஏதோ ஒருவகையில் கடவுளர்கள் என்றால், உனது கேளிக்கைக்காக எனது நுண்மதியை நீ பரிசோதிக்கிறாய் என்று சற்று
முன்னர் நான் கூறியபொழுது தெரிவித்த அதே முடிபுக்கே நாங்கள் வரவேண்டியுள்ளது.
காரணம்: முதலில் கடவுளரில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும், பிறகு,
தெய்வப் பிறவிகளில் எனக்கு நம்பிக்கை உள்ளபடியால், கடவுளரில் எனக்கு நம்பிக்கை உண்டென்றும் நீ
கூறியிருக்கிறாய்!
மறுபுறம், கடவுளருக்கு
அணங்குகள் அல்லது வேறு அன்னையர் பெற்ற புறமணப் பிள்ளைகளே இத்தெய்வப் பிறவிகள்
என்று கொள்ளப்படுகின்றனர்; அவர்கள அத்தகைய தெய்வப் பிறவிகள்
என்றால், இவ்வுலகில் கடவுளரின் பிள்ளைகளில் நம்பிக்கை
வைக்கும் அதேவேளை கடவுளரில் நம்பிக்கை வைக்காதவர் யார்? குதிரைக்
குட்டிகளில் அல்லது கழுதைக் குட்டிகளில் நம்பிக்கை வைக்கும் அதேவேளை குதிரைகளில்
அல்லது கழுதைகளில் நம்பிக்கை வைக்காத வேடிக்கை போன்றதே அது.
எனது ஞானத்தைப் பரிசோதிக்க எண்ணியே, அல்லது என்மீது சுமத்துவதற்கு ஒரு மெய்யான
குற்றத்தைக் கண்டறிய முடியாமல் விரக்தியடைந்த நிலையிலேயே இந்தக் குற்றச்சாட்டை நீ
என்மீது சுமத்தியிருக்கிறாய் என்ற முடிபைத் தவிர்க்க வழியில்லை, மெலிட்டஸ், தவிர்க்க வழியில்லை. தெய்வச்
செயல்களிலும் தெய்வீகச் செயல்களிலும் நம்பிக்கை வைப்பது, தெய்வப்
பிறவிகளிலும் தெய்வீகப் பிறவிகளிலும் நம்பிக்கை வைப்பதாகாது என்று கடுகளவு
நுண்மதியுடன் உயிர்வாழும் எவரையும் கூட நம்பவைக்க உனக்கு அறவே வாய்புக் கிடைக்கப்
போவதில்லை; மறுதலையாக நம்பவைக்கவும் உனக்கு வாய்புக்
கிடைக்கப் போவதில்லை.
உண்மை இதுவே, பெரியோர்களே!
மெலிட்டசின் குற்றச்சாட்டிலிருந்து என்னை விடுவிப்பதற்கு அதிக பதில்வாதம்
தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். அது குறித்து ஏற்கெனவே நான் கூறியதே போதும்.
அத்துடன் எனது தொடக்கப் பேச்சின் ஒரு கட்டத்தில் நான் கூறியதன் உண்மை உங்களுக்கு
நன்கு தெரியும்: கடும்பகையை நான் பெருமளவு சம்பாதித்துள்ளேன். வேறெதுவும் அல்ல,
மெலிட்டசோ, அடைட்டசோ அல்ல, இந்தப் பகையே எனக்கு அழிவைக் கொணரும். பெருந்தொகையானோரின் வசையும்,
பொறாமையும் எனக்கு அழிவைக் கொணரும். பெருந்தொகையான அப்பாவிகளை
அவர்கள் அழித்துள்ளார்கள்; தொடர்ந்தும் அழிப்பார்கள் என்று
எண்ணுகிறேன்; என்னை அழிப்பதுடன் அவர்கள் நின்றுவிட வாய்ப்பில்லை.
போகட்டும்! உங்களுள் எவரும் இப்படி வினவக்கூடும்: "சாக்கிரட்டீஸ், உன்னை மரண
தண்டனை என்னும் ஆபத்துக்கு இட்டுச்செல்லும் வழியில் நடைபயின்ற உனக்கு மனச்சாட்சி
உறுத்தவில்லையா?"
அவருக்கு நான் செவ்வனே பதிலளிக்கலாம்: சற்றேனும் மானமுள்ள ஒருவர், உயிர்வாழும்
வாய்ப்புகளையும், உயிர்போகும் வாய்ப்புகளையும் எடைபோட்டுப் பார்ப்பதில்
தனது வாழ்நாளைக் கழிக்க வேண்டியவர் என்று நீ கருதினால், நீ
தவறிழைத்தவன் ஆகுவாய், நண்பனே! அவர் எந்தச் செயலைப்
புரிந்தாலும், ஒரேயொரு சங்கதியை மட்டுமே கருத்தில் கொள்ள
வேண்டும்: அவர் சரிவரச் செயற்படுகிறாரா அல்லது வழுபடச் செயற்படுகிறாரா, நல்லவராகச் செயற்படுகிறாரா அல்லது தீயவராகச் செயற்படுகிறாரா என்பதை
மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். உனது கண்களுக்கு, குறிப்பாக
(கடல் அணங்காகிய) தேற்றிசின் மகன் (அகிலீஸ்) உட்பட, துரோய்
மாநகரில் மாண்ட வீரர்கள் அனைவரும் ஈனப்பிறவிகள் போலும். அவமானத்துக்கு உள்ளாவதை
விட ஆபத்துக்கு உள்ளாவதை அகிலீஸ் துச்சமாக மதித்தான். (துரோய் இளவரசனாகிய)
எக்டரைக் கொல்ல அகிலீஸ் வெகுண்டெழுந்தபொழுது, அவனது
தாய்த்தேவதை குறுக்கிட்டு அவனை எச்சரித்தது உங்களுக்கு நினைவிருக்கும். அத்தேவதை
இப்படிச் சொல்லி எச்சரித்திருக்கும் என்று நான் கற்பனை செய்கிறேன்: "என் மகனே,
உனது தோழன் பற்றோக்கிளசைக் கொன்றதற்குப் பழிவாங்கத் தலைப்பட்டு
எக்டரை நீ கொன்றால், நீயும் மாண்டுபோவாய். எக்டரின்
தலைவிதியை அடுத்து உனது தலைவிதியும் நிர்ணயிக்கப்படும்." இந்த எச்சரிக்கை அவன்
காதில் விழுந்தும் கூட இறப்பையும், ஆபத்தையும் அவன் துச்சமாக
மதித்தான். தனது நண்பர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கத் தவறியவன் என்ற இழிவுடன்
வாழ்வதற்கே அவன் அதிகம் அஞ்சினான். "மோதுமுனைகளுடன் இங்கு தரித்துநிற்கும்
போர்க்கப்பல்களின் அருகில் மொக்கேனப்பட்டு, மண்ணுக்குப்
பாரமாய் நிற்பதை விட, அந்தப் பாதகனைப் பழிவாங்கிய கையோடு
நான் மாண்டுவிடுகிறேன்" என்று சூளுரைக்கிறான். இறப்பையும், ஆபத்தையும் அவன் எண்ணிப்பார்த்தான் என்றா நினைக்கிறீர்கள்?
உண்மை இதுவே, பெரியோர்களே!
சிறந்த நிலைப்பாடாகத் தனக்குத் தென்படுவதாலோ, தனக்கு இடப்பட்ட ஆணைகளுக்குப் பணிந்தோ ஒரு நிலைப்பாட்டை ஒருவன் எடுத்துக்கொண்டவுடன்,
மானத்துக்கு மேலாக மரணத்தை அல்லது வேறெதையும் பொருட்படுத்தாமல்,
அதே நிலைப்பாட்டில் நின்றுபிடித்து ஆபத்தை எதிர்கொள்ள அவன்
கடமைப்பட்டவன் என்றே நான் நம்புகிறேன்.
எனக்கு ஆணையிட நீங்கள் தேர்ந்தெடுத்த படையதிகாரிகள் பொதிதேயா, அம்விபொலிஸ்,
தீலியம் ஆகிய இடங்களில் என்னைக் களமிறக்கியபொழுது, வேறெவரையும் போலவே எனக்குரிய இடத்தில் இறப்பை எதிர்நோக்கி நான்
நிலைகொண்டிருந்தேன். அதன் பிறகு என்னையும் பிறரையும் ஆராய்ந்து மெய்ஞான வாழ்வில்
ஈடுபடும் கடமையில் கடவுள் என்னை அமர்த்தியதாக நான் நினைக்கிறேன், நம்புகிறேன். ஆதலால், பெரியோர்களே, இவ்விரு சூழ்நிலைகளிலும் நான் இறப்பையோ வேறெந்த ஆபத்தையோ எதிர்நோக்க அஞ்சி
நிலைபிறழ்ந்திருந்தால், எனக்கிட்ட பணியை நான்
உதறித்தள்ளியிருந்தால், நான் படுமோசமான முறையில்
முன்பின்முரணாக நடந்துகொண்டவன் ஆவேன். உண்மையில் அது
படுமோசமான முரண்பாடாகும். அப்புறம் கடவுளரில் நான் நம்பிக்கை வைக்காததற்காகவும்,
இறைவாக்கிற்குப் பணியாததற்காகவும், இறப்பை
எதிர்நோக்க அஞ்சியதற்காகவும், ஞானமற்றவனாக இருக்கும் என்னை
ஞானவான் என்று கருதியதற்காகவும் நீதிமன்றில் வெளிப்படும்படி எனக்கு மிகவும்
நீதியான முறையில் அழைப்பாணை இடமுடியும் அல்லவா?
பெரியோர்களே, ஒருவர்
இறப்புக்கு அஞ்சுவது என்பது அவர் ஞானமற்றவராக இருக்கும் அதேவேளை தன்னை இன்னொரு
வகையில் ஞானவான் என்று கருதுவதற்கு நிகராகும் என்று உங்களிடம் நான் கூற
விரும்புகிறேன். தான் அறியாததை அவர் அறிந்திருப்பதாக எண்ணுவதற்கு அது நிகராகும்
அல்லவா? உண்மையில் இறப்பு என்பது ஒருவருக்கு நேரக்கூடிய
மாபெரும் அருட்பேறு ஆகாதா என்பது எவருக்குமே தெரியாது. ஆனாலும் அது மாபெரும் கேடே
என்பதை உறுதியாக அறிந்தவர்கள் போல் மக்கள் அதற்கு அஞ்சி நடுங்குகிறார்கள்.
அறியாததை அறிந்ததாகக் கருதும் இந்த அறியாமையே பாரிய குற்றமாகக் கொள்ளப்பட வேண்டும்
என்று நான் உறுதியாகக் கூறுவேன். இதனையே, பெரியோர்களே,
ஏனைய மானுடருக்கு மேலாக நான் துய்க்கும் அனுகூலத்தின் அளவாகவும்
தன்மையாகவும் கருதுகிறேன். நான் எந்த வகையிலேனும் எனது அயலவரை விட ஞானம்
மிகுந்தவன் என்று வலியுறுத்துவேன் என்றால், அது இந்த
வகையிலேய: அதாவது இறப்பை அடுத்து நேர்வது என்ன என்பது பற்றிய மெய்யறிவு
படைத்தவனல்ல நான்; அதேவேளை நான் அத்தகைய அறிவு படைத்தவனல்ல
என்பதை உணர்ந்துகொண்டுள்ளேன். ஆனாலும் எனது மேலவர் கடவுளாயினும், மனிதராயினும், அவருக்குத் தவறிழைப்பதும், அவருக்குப் பணியமறுப்பதும் தீய, ஈனச் செயல்களாகும்.
ஆதலால், பெரியோர்களே, எனது அறிவு
எத்தகையதாயினும் ஆகட்டும்; ஆனால் நான் தீயவை என்று அறிந்த
தீயவற்றை விட, உண்மையிலேயே ஓர் அருட்பேறாக அமையக்கூடிய ஏதோ
ஒன்றுக்கு ஒருபொழுதும் நான் அதிகம் அஞ்சப்போவதில்லை, அதை
அதிகம் வெறுக்கப்போவதில்லை.
ஒன்றில் இந்த நீதிமன்றின் முன் நான் வெளிப்பட்டிருக்கவே கூடாது, அல்லது,
இங்கு நான் வெளிப்பட்டுள்ளபடியால், நான்
சாகடிக்கப்பட வேண்டும், ஏனெனில் நான் தப்பிய கையோடு உங்கள்
புதல்வர்கள் சாக்கிரட்டீசின் போதனைகளின்படி செயற்பட்டு முற்றிலும் ஒழுக்கம்
கெட்டவர்களாக மாறிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ள அனைட்டசைப் பொருட்படுத்தாமல்
என்னை நீங்கள் விடுதலை செய்வதாக வைத்துக்கொள்வோம். அதன்படி, "சாக்கிரட்டீஸ், நீ இந்த அறிவுத் தேட்டத்தில் உனது
பொழுதைக் கழிப்பதைக் கைவிடவும் வேண்டும்; மெய்யியற் போதனையை
நிறுத்தவும் வேண்டும் என்று ஒரேயொரு நிபந்தனை விதித்து நாங்கள் இந்தத் தடவை
அனைட்டசைப் புறக்கணித்து உன்னை விடுதலை செய்கிறோம். நீ தொடர்ந்தும் அதே வழியில்
செல்ல நாங்கள் உன்னை மடக்கிப்பிடிதால், நீ சாகடிக்கப்படுவாய்"
என்று நீங்கள் என்னிடம் கூறுவதாக வைத்துக்கொள்வோம்.
சரி, நான்
கூறியவாறு, அப்படிப்பட்ட நியதிகளின்படி என்னை விடுதலைசெய்ய
நீங்கள் முன்வருவதாக வைத்துக்கொண்டால், நான் இப்படி
விடையளிக்க வேண்டியுள்ளது: பெரியோர்களே, நான் மிகவும்
நன்றியுணர்வும் அர்ப்பணிப்பும் கொண்ட உங்கள் பணிவிடையாளன். ஆனாலும் உங்களைக்
காட்டிலும் கடவுளுக்கே நான் அதிகம் பணிந்தொழுகக் கடமைப்பட்டவன்.
எனது மூச்சும் வலுவும் நிலைக்கும்வரை என் மெய்யியற் போதனையை நான் நிறுத்தப்
போவதில்லை; உங்களைச்
சிந்திக்க உந்துவதை நான் நிறுத்தப் போவதில்லை; நான்
எதிர்கொள்ளும் அனைவருக்கும் உண்மையைத் துலக்குவதை நான் நிறுத்தப் போவதில்லை. எனது
வாடிக்கைப்படி இப்படி நான் தொடர்ந்து வினவப்போகிறேன்:
"என் இனிய நன்பனே, நீ
ஓர் அதென்சு மாநகரவாசி; நீ உலகிலேயே மிகவும் மகத்தான
மாநகரத்தைச் சேர்ந்தவன்; நீ ஞானத்துக்கும் வலிமைக்கும்
மிகவும் புகழ்பெற்ற மாநகரத்தைச் சேர்ந்தவன். நீ இயன்றளவு பணம் ஈட்டிக்கொள்வதில்
புலன் செலுத்துவது குறித்து வெட்கப்படவில்லையா? பெருமையும்
மானமும் ஈட்டுவதில் நாட்டம் கொள்ளாமல், உண்மையிலும்
நியாயவிளக்கத்திலும் ஆன்மீகச் செம்மையிலும் புலன் செலுத்தாமல் வாழ்வது குறித்து நீ
வெட்கப்படவில்லையா?" என்று நான் தொடர்ந்து
வினவப்போகிறேன்.
உங்களுள் எவராவது என்னுடன் பிணக்குப்பட்டால், அத்தகைய சங்கதிகளில் தமக்கு அக்கறை
இருப்பதாக மார்தட்டினால், அவரை நான் கையோடு போக விடமாட்டேன்;
அவரை விட்டு நான் புறப்படமாட்டேன். மாறாக, அவரிடம்
நான் வினாத்தொடுப்பேன்; அவரை ஆராய்வேன்; அவரைப் பரிசோதிப்பேன். அப்படி அவர் மார்தட்டியும் கூட, நன்னலத்தை நோக்கி உண்மையில் அவர் முன்னேறவில்லை என்று தென்பட்டால்,
அவர் வெறும் அற்ப விடயங்களில் புலன்செலுத்தி, மிகமிக
முக்கியமான விடயத்தைப் புறக்கணித்ததாக அவரை நான் கடிந்துகொள்வேன். இளையோரோ,
மூத்தோரோ, குடிமக்களோ, அந்நியரோ
நான் எதிர்கொள்ளும் எவரிடமும் அப்படியே நடந்துகொள்வேன். என்னுடன் நெருங்கிய
உறவுகொண்ட சககுடிமக்களே, குறிப்பாக உங்களுடன் நான் அப்படியே
நடந்துகொள்வேன். எனது கடவுள் எனக்கிட்ட ஆணை இதுவே என்று உங்களிடம் நான்
உறுதிகூறுகிறேன். நான் கடவுளுக்குப் புரியும் பணிவிடையைக் காட்டிலும் சிறந்த
நன்னலம் என்றுமே இந்த மாநகரத்துக்கு வாய்த்ததில்லை
என்பது எனது நம்பிக்கை. உங்கள் உடலையும், உடைமையையும்
விடுத்து உங்கள் ஆன்மநலத்துக்கு அதிமுதன்மை அளிக்கும்படி உங்களை, இளையோரை, மூத்தோரைத் தூண்டுவதில் எனது நேரம்
முழுவதையும் நான் கழித்து வருகிறேன். "ஆளுக்கும் அரசுக்கும் செல்வம் நன்னலம்
பயக்காது; நன்னலமே செல்வம் பயக்கும்; நன்னலம்,
மற்றெல்லா அருட்பேறுகளையும் அளிக்கும்" என்றெல்லாம் நான்
முழங்கித் திரிவேன்.
இனி, இந்தச்
செய்தியை விடுப்பதன் மூலம் நான் இளையோரின் உள்ளத்தைக் கெடுக்கிறேன் என்றால்,
இது கேடு விளைவிக்கும் செய்தியாகவே தென்படும். ஆனாலும் எனது செய்தி
இதுவல்ல, அது வேறு செய்தி என்று ஒருவர் கூறினால், அவர் விழலளக்கிறார் என்பதே கருத்து. ஆதலால், பெரியோர்களே,
நான் கூறுவது இதுவே: நீங்கள் அனைட்டஸ் கூறுவதைக் கேட்டால் என்ன,
கேட்காவிட்டால் என்ன, நீங்கள் என்னை விடுதலை
செய்தால் என்ன, செய்யாவிட்டால் என்ன, நீங்கள்
விரும்பியபடி செய்யலாம். நான் நூறு தடவைகள் இறந்தாலும் கூட எனது போக்கை
மாற்றமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா!
அமைதி, பெரியோர்களே,
அமைதி! குறுக்கீடின்றி எனது பேச்சைக் கேட்கும்படி நான்
வேண்டிக்கொண்டதை நினைவில் வைத்திருக்கவும். தவிரவும், எனது
பேச்சைக் கேட்பது உங்களுக்கு நன்மை பயக்கும் என்று நான் நம்புகிறேன்.
நான் உங்களுக்கு இன்னொரு சங்கதி சொல்லப் போகிறேன். அது ஓர் ஆட்சேபப் புயலைக்
கிளப்பக் கூடும். ஆனாலும் தயவுசெய்து பொறுமை காக்கவும். நான் எப்படிப்பட்டவன்
என்று மார்தட்டுகிறேனோ அப்படிப்பட்டவன் என்றால், அதற்காக எனக்கு நீங்கள் மரண தண்டனை
விதித்தால், என்னைவிட உங்களுக்கே நீங்கள் அதிகம் தீங்கு
புரிந்தோர் ஆகுவீர்கள் என்பதை உங்களிடம் நான் உறுதிபடக் கூறுகிறேன். மெலிட்டசோ,
அனைட்டசோ எனக்கு அறவே தீங்கெதுவும் புரிய முடியாது. அதற்கான வலு
அவர்களிடம் கிடையாது. காரணம், ஒரு மோசமானவரால் ஒரு
சிறந்தவருக்குத் தீங்கு விளைவதை, கடவுள் வகுத்த விதி
அனுமதிக்காது என்று நான் நம்புகிறேன்.
என்மீது குற்றஞ்சுமத்தியவர் எனக்கு மரண தண்டனை விதிக்கவோ, என்னை
நாடுகடத்தவோ, எனது குடியுரிமைகளைப் பறிக்கவோ வகைசெய்யக்
கூடும் என்பதில் ஐயமில்லை. அவற்றை அவரும் மற்றவர்களும் பெருங்கேடுகள் என்று
கருதக்கூடும் என்று நான் துணிந்து கூறுகிறேன். எனினும் நான் அவற்றைப்
பெருங்கேடுகள் என்று கருதவில்லை. அவை பெருங்கேடுகள் என்பதே அவரது படுமோசமான
நிலைப்பாடு; அதாவது ஓர் அப்பாவிக்கு மரண தண்டனை விதிக்க அவர்
இப்பொழுது மேற்கொள்ளும் முயற்சியை விட அது படுமோசமான நிலைப்பாடு.
இதுவரை நான் எனக்காகவே மன்றாடுகிறேன் என்று எவரும் எண்ணக்கூடும். உண்மை
எதிர்மாறானது. நான் உங்களுக்காகவே மன்றாடுகிறேன். என்னைத் தண்டிப்பதன் மூலம்
கடவுளின் கொடையைத் துர்ப்பிரயோகம் செய்வதிலிருந்து உங்களைத்
தடுத்தாட்கொள்வதற்காகவே நான் மன்றாடுகிறேன். நீங்கள் எனக்கு மரண தண்டனை விதித்தால், எனது இடத்தை
நிரப்புவதற்கு எவரையும் எளிதில் நீங்கள் கண்டறிய மாட்டீர்கள்.
ஆதலால், பெரியோர்களே,
இந்த மாநகரத்தை ஓர் உயர்குலக் குதிரையாகக் கணித்து, அதன் மாபெரும் பருப்பத்தினால் அது சோம்பித்திரிய முற்படுவதாக எண்ணி,
அதனைத் தீண்டி ஊக்குவிக்கும் ஈ எனும் வண்ணம் என்னை இந்த
மாநகரத்துக்கென்றே கடவுள் நியமித்துள்ளார் என்று கூறுவது சற்று வேடிக்கையாகத் தென்பட்டாலும் கூட, அது முற்றிலும்
உண்மையே. அத்தகைய ஓர் ஈயின் பணியை மேற்கொள்ளவே கடவுள் என்னை இந்த மாநகரத்துக்கு
நியமித்துள்ளார் என்று எனக்குத் தென்படுகிறது. நாள் முழுவதும் இங்கும், அங்கும், எங்கும் தரித்து, உங்கள்
ஒவ்வொருவரையும் எழுப்பி, தூண்டி, கடிந்துகொள்வதை
நான் நிறுத்தப் போவதில்லை. பெரியோர்களே, என்னைப் போல்
இன்னொருவரை நீங்கள் கண்டறிவது எளிதல்ல. நீங்கள் எனது புத்திமதியை ஏற்றால், என் உயிரைப் பறிக்கமாட்டீர்கள். எவ்வாறாயினும், எனக்குப்
பதிலாக உங்களைப் பராமரிக்க வேறொருவரைக் கடவுள் அனுப்பி வைத்தாலொழிய, நீங்கள் விரைவில் அருண்டெழுந்து, ஆக்கினைப்பட்டு,
அனைட்டசின் புத்திமதியை ஏற்றுக்கொண்டு, என்னை
ஒரே அடியில் தீர்த்துக்கட்டிவிட்டு, எஞ்சிய வாழ்நாள்
முழுவதும் தூங்கி வழிவீர்கள் என்றே நான் ஐயுறுகிறேன்.
கடவுளின் கொடை எனும் வண்ணம் இந்த மாநகரத்துக்கு அனுப்பி வைக்கத்தக்க ஆள்தான்
நான் என்பதை உண்மையில் நீங்கள் ஐயப்பட்டால், அதை இப்படி நோக்கி நீங்கள் ஐயந்தெளியலாம்:
நான் இத்தனை ஆண்டுகளாக எனது சொந்த அலுவல்களைப் புறக்கணித்து, எனது குடும்பம் புறக்கணிப்புக்கு உள்ளாகும் இழிவைச் சகித்துக்கொண்டு,
எப்பொழுதும் உங்களுக்காகச் செயலாற்ற வேண்டியிருப்பது, ஒரு தந்தையைப் போலவோ தமையனைப் போலவோ உங்கள் ஒவ்வொருவரையும் தனிப்படச்
சந்தித்து, உங்கள் சிந்தையை நன்னலம் நோக்கிச் செலுத்த
வேண்டியிருப்பது ஓர் இயல்பான சங்கதியாகத் தென்படுகிறதா? அதில்
நான் ஏதேனும் இன்பம் துய்த்திருந்தால், அல்லது எனது
நற்பணிக்கு கட்டணம் செலுத்தப்பட்டிருந்தால், அப்படி நான்
நடந்ததற்கு ஒரு நியாயவிளக்கம் கிடைத்திருக்கும். ஆனால், என்மீது
குற்றஞ்சுமத்தியோர் வெட்கமின்றி மற்றெல்லா வகைப்பட்ட குற்றச்சாட்டுகளையும் என்மீது
சுமத்தினாலும் கூட, நான் எப்பொழுதாவது, எவரிடமாவது கட்டணம் கேட்டதாகவோ அறவிட்டதாகவோ எச்சாட்சியம் கொண்டும்
பாசாங்குசெய்ய அவர்கள் திமிர் கொண்டதில்லை. எனது கூற்று உண்மையே என்பதை எண்பிக்க
என்னால் முன்வைக்கக்கூடிய உறுதியான சான்று எனது வறுமையே என்று நினைக்கிறேன்.
இப்படி எல்லாம் நான் சுற்றித்திரிந்து, குடிமக்களின் தனிப்பட்ட அலுவல்களில்
தலையிட்டு, அவர்களுக்குப் புத்திமதி கூறவேண்டியிருந்தும் கூட,
என்றுமே உங்கள் அவைமுன் வெளிப்பட்டு, அரச
அலுவல்களைக் கவனத்தில் கொண்டு, உங்களை விளித்துப் புத்திமதி
கூறத் துணியாதது உங்களுக்கு வினோதமாகத் தென்படலாம். அதற்கான காரணம் ஏற்கெனவே பல
தடவைகள் நீங்கள் கேட்டது தான்; அடிக்கடி நான் கூற நீங்கள்
கேட்டது தான்; தனது குற்றச்சாட்டில் அதை ஏளனம் செய்வது தகும்
என்று மெலிட்டஸ் நினைத்திருக்கிறார். அதாவது, நான் ஒரு தெய்வ
அனுபவத்துக்கு, தெய்வீக அனுபவத்துக்கு உட்பட்டுச்
செயற்படுபவன். எனது பாலியப் பராயத்தில் அது தொடங்கியது. எனக்கு ஒருவகையான குரல்
கேட்கிறது. என்றுமே நான் செய்ய எண்ணுவதை செய்யாவாறு தடுக்கும் குரலாகவே அது
எனக்குக் கேட்கிறது. என்றுமே என்னை அது தூண்டியது கிடையாது. பொது வாழ்வினுள்
புகாவாறு என்னைத் தடுப்பதும் அதுவே. அது மிகவும் நல்லதும் கூட. ஏனெனில், நான் நீண்ட காலத்துக்கு முன்னரே அரசியலில் ஈடுபட்டிருந்தால், என்னால் உங்களுக்கோ எனக்கோ எந்த நன்மையும் விளைய வாய்ப்பின்றி அப்பொழுதே
என் உயிர் போயிருக்கும் என்று கருதுகிறேன்.
உங்களுக்கு நான் உண்மையைக் கூறினால், தயவுசெய்து குறைவிளங்க வேண்டாம்.
இப்பூவுலகில் உங்களையோ வேறு குடியாட்சி அமைப்பு எதையுமோ மனச்சாட்சிக்கமைந்து
எதிர்க்கும் எவரும், தனது சொந்த அரசில் பெருந்தொகையான
பிழைகளும் சட்டவிரோதங்களும் இடம்பெறுவதை அடியோடு தடுக்கும் எவரும் உயிர்தப்புவது
அசாத்தியம். உண்மையான நீதிமான் எவரும் குறுகிய காலத்துக்காவது உயிர்தப்ப எண்ணினால்,
அரசியலை விடுத்து, தானும் தன்பாடுமாக இருக்க
வேண்டும்.
நான் கூறியதற்கு உருப்படியான சான்றுகளை முன்வைப்பேன்; வெறுங்
கோட்பாடுகளை அல்ல, உங்களால் மிகவும் புரிந்துகொள்ளக்கூடிய
விவரங்களை முன்வைப்பேன். என்றுமே நான் சாகப்பயந்து பிழைபாடான முறையில் எந்த
அதிகாரபீடத்துக்கும் அடிபணிய மாட்டேன், என் உயிர் போனாலும்
அடிபணிய மறுப்பேன் என்பதை அறிந்துகொள்ளும் வண்ணம் எனது மெய்யனுபவங்களை நான்
விவரிக்கும்பொழுது செவிமடுக்கவும். அது நீதிமன்றுகளில் நீங்கள் அடிக்கடி கேட்பது
போன்ற கதை; கேட்டுச் சலித்த கதை; ஆனால்
உண்மை:
பெரியோர்களே, நான்
ஒரு தடவை மாநகராட்சி மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டபொழுது மட்டுமே எங்கள்
மாநகரத்தில் பதவி வகித்தேன். கடல்மோதலில் உயிரிழந்தவர்களைக் காப்பாற்றத் தவறிய
பத்து சேனாபதிகளை ஒட்டுமொத்தமக விசாரணை செய்யவேண்டும் என்று நீங்கள்
முடிவுசெய்தபொழுது எங்கள் குழுமம் நிறைவேற்று பீடமாகச் செயற்பட நேர்ந்தது. அத்தகைய
விசாரணை சட்டவிரோதம் என்பதை பிறகு நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டீர்கள்.
அப்பொழுது நிறைவேற்று பீட உறுப்பினர்களுள் நான் மட்டுமே, நீங்கள்
அரசியல்யாப்புக்கு மாறாகச் செயற்படக் கூடாது என்று வலியுறுத்தி, அந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்தேன். உங்கள் தலைவர்கள் அனைவரும்
என்னைக் கைதுசெய்து கண்டிப்பதற்குத் தயாராக இருந்தும் கூட, அப்படியே
செய்யும்படி நீங்கள் அனைவரும் உரத்த குரலில் அவர்களை ஏவியும் கூட, நான் சிறைக்கோ சாவுக்கோ அஞ்சி உங்கள் தவறான முடிபை ஆதரிப்பதை விடுத்து,
சட்டத்தின் பக்கம் சாய்ந்து, நீதியின் பக்கம்
சாய்ந்து அதை எதிர்கொள்வது எனது கடமை என்று எண்ணினேன். நாங்கள் குடியாட்சிக்கு
உட்பட்டிருந்த காலத்தில்தான் அப்படி நடந்தது.
சில்லோர் குழுமம் ஆட்சியேற்ற பின்னர் கூட, முப்பது ஆணையாளர்களும் சலாமிஸ் நகரத்து லியோனுக்கு
மரணதண்டனை நிறைவேற்றுவதற்காக, என்னையும் வேறு நால்வரையும்
வட்டக் கூடத்துக்கு கூப்பிட்டு, அவரைக் கொண்டுவரும்படி
அறிவுறுத்தினார்கள். அவர்கள் அத்தகைய அறிவுறுத்துரைகளை விடுத்த பல தடவைகளுள் அது
ஒன்று என்பது உண்மையே. எத்தனை பேர்மீது பழிமுடிய முடியுமோ அத்தன பேர்மீது
பழிமுடியும் கெட்ட நோக்குடன் அவர்கள் அறிவுறுத்துரைகளை விடுத்தார்கள். அப்பொழுதும்
கூட இறப்பை நான் இம்மியும் பொருட்படுத்தவில்லை என்பதை எனது சொல்லால் அல்ல, செயலால் தெளிவுபடுத்தினேன். இறப்பை நான் இம்மியும் பொருட்படுத்தவில்லை
என்பது ஒரு வலிய கூற்றல்ல என்றால் இப்படி எடுத்துக்கொள்ளுங்கள்: அதாவது, நான் பிழையான செயல் அல்லது கெட்ட செயல் எதையும் செய்யக் கூடாது என்பதையே
பெரிதும் பொருட்படுத்தினேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். அத்துணை அதிகாரம் படைத்த
அரசாங்கத்துக்கு அஞ்சி ஒரு பிழையான செயலை நான் செய்யவில்லை. வட்டக் கூடத்தை விட்டு நாங்கள் வெளியேறிய பின்னர், மற்ற நால்வரும் சலாமிஸ்
நகரத்துக்குப் போய் லியோனைக் கைதுசெய்தார்கள். நான் வீடு திரும்பினேன். அதனை
அடுத்து அரசாங்கம் கவிழ்ந்திராவிட்டால், எனது செயலுக்காக
நான் சாகடிக்கப்பட்டிருக்கக் கூடும். பலரும் எனது கூற்றுகளுக்குச் சான்று
பகர்வார்கள்.
நான் பொதுவாழ்வில் இறங்கி, மானமுள்ள மனிதனாக இயங்கி, நேரிய
குறிக்கோளைக் கைக்கொண்டு, மனச்சாட்சிக்கு அமைந்து மற்றெல்லாவற்றுக்கும்
மேலாக அக்குறிக்கோளுக்கு முதன்மை அளித்திருந்தால், இவ்வளவு
நீண்டகாலம் வாழ்ந்திருப்பேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? இவ்வளவு
நீண்டகாலம் நான் வாழ்ந்திருக்க மாட்டேன், பெரியோர்களே!
வேறெவரும் கூட வாழ்ந்திருக்க மாட்டார்கள். என் வாழ்நாள் முழுவதும் நான் ஆற்றிய
பொதுவாழ்வுக் கடமைகள் எவற்றிலும், என்னை உறுதியுடன்
அர்ப்பணித்ததை நீங்கள் கண்டுகொள்வீர்கள். எனது சொந்த வாழ்வுக்கும் அது பொருந்தும்.
வன்ம நோக்குடைய சிலரால் எனது மாணவர்கள் எனப்படுவோர் உட்பட எவருமே நீதிக்கு ஒவ்வாத
செயலில் ஈடுபடுவதை என்றுமே நான் ஏற்றுக்கொண்டதில்லை. எவருடைய ஆசானாகவும் என்றுமே
நான் அமர்ந்ததில்லை. எனினும் இளையோரோ, மூத்தோரோ எனது உரையாடலில், எனது சொந்தப் பணியில் நான் ஈடுபடுவதைச்
செவிமடுக்க ஆவல் கொண்டால், அவர்களுக்கு வாய்ப்பளிக்க என்றுமே
நான் தயங்கியதில்லை. அவர்களுடன் கதைப்பதற்கு நான் கட்டணம் அறவிட்டதுமில்லை,
கட்டணமின்றிக் கதைக்க மறுத்ததுமில்லை. செல்வந்தரையும், வறியோரையும் சரிநிகராக நோக்கி வினாக்களுக்கு விடையளிக்க நான் தயாராக
இருக்கிறேன். அதேபோல, எவராவது நான் கூறுவதைச் செவிமடுத்து,
எனது வினாக்களுக்கு விடையளிக்க விரும்பினால், அதற்கும்
நான் தயாராக இருக்கிறேன். நான் என்றுமே எவர்க்கும் எதையும் புகட்டவுமில்லை,
புகட்ட வாக்குறுதி அளிக்கவுமில்லை. ஆதலால் இவர்களுள் எவரும் நல்ல
குடிமகனாகவோ, கெட்ட குடிமகனாகவோ மாறினால் அதற்கு என்னைப்
பொறுப்பாளி ஆக்குவது தகாது. மற்றவர்கள் அனைவருக்கும் கிடைக்காத எதையும் என்றாவது
என்னிடம் கற்றுக்கொண்டதாகவோ, அந்தரங்கமாகக் கேட்டறிந்த்தாகவோ
எவராவது வலியுறுத்தினால், அவர் உண்மை கூறவில்லை என்று
நீங்கள் மிகவும் உறுதியாக நம்பலாம்.
சிலர் என்னுடன் நெடும்பொழுது கழிப்பதில் இன்பம் துய்ப்பது எங்ஙகனம்? பெரியோர்களே,
அதற்கன காரணத்தை நானே மனந்திறந்து கூறியது உங்கள் காதில்
விழுந்திருக்கிறது. தங்களை ஞானவான்கள் என்று கருதும் அஞ்ஞானிகளை நான் ஆய்விடக்
கேட்டு அவர்கள் இன்புறுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு கேளிக்கையான அனுபவமும் கூட.
நான் கூறியவாறு இறைவாக்குகள், கனவுகள் ஊடாகவும், வேறு தெய்வ
நிர்ணய வழி எதன் ஊடாகவும் மனிதனுக்கு ஒரு கடமை உணர்த்தப்படுகிறதோ அந்த வழி
ஒவ்வொன்றின் ஊடாகவும் எனக்கு இடப்பட்ட இறையாணைக்கு அடிபணிந்து நான் ஏற்றுக்கொண்ட
கடமை அது. இது எளிதில் நிச்சயிக்கக்கூடிய மெய்யான கூற்று, பெரியோர்களே!
இளையோருள் சிலரை நான் கெடுத்துவருவது உண்மை என்றால், மற்றவர்களைக்
கெடுப்பதில் ஏற்கெனவே நான் வெற்றி பெற்றுள்ளேன் என்றால், இப்பொழுது
வளர்ந்துள்ள இம்மற்றவர்களுள் சிலர் தமது இளமைக் காலத்தில் எப்பொழுதாவது நான் தகாத
புத்திமதி கூறியதைப் பின்னர் கண்டுபிடித்திருந்தால், அவர்கள்
இப்பொழுது நிச்சயமாக முன்வந்து என்னைக் கண்டித்திருக்கவும், தண்டித்திருக்கவும்
வேண்டும் அல்லவா? அவர்கள் தாமாக அப்படிச் செய்ய
விரும்பாவிட்டாலும் கூட, அவர்களது குடும்பத்தவர்களுள் சிலர்
- அவர்களது தந்தையர், சகோதரர், சுற்றத்தார்
– தமது உறவினர்க்கு நான் இழைத்த தீங்கினை இப்பொழுது நினைந்து நடவடிக்கை எடுப்பதை
நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள் அல்லவா?
அவர்களுள் பெருந்தொகையானோர் போகடிபோக்காக இந்த நீதிமன்றத்துக்கு வந்திருப்பது
எனது கண்களுக்குத் துலக்கமாகத் தெரிகிறது. முதலாவதாக அதோ கிறித்தோ, என் வயதினர்,
நெருங்கிய அயலவர், இளைஞன் கிறித்தொபியூலசின்
தந்தை; இதோ ஈசையின்சின் தந்தை, ஸ்வீட்டஸ்
நகரத்து லைசானியாஸ்; அதோ எபியீனிசின் தந்தை, செவிசஸ் நகரத்து அந்திபோன்; இனி எங்கள் வட்டத்தைச்
சேர்ந்தவர்களின் சகோதரர்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள்; இதோ
தியொசொதைசின் மகன் நிக்கொஸ்ராட்டஸ்; அதோ தியொடொட்டசின்
சகோதரன்; அவரால் தியொடொட்டசைத் தடுக்க முடியாது; ஏனென்றால் தியொடொட்டஸ் இப்பொழுது உயிருடன் இல்லை; இதோ
டெமொடக்கசின் மகன் பரலஸ்; மறைந்த தியகேஸ் அவருடைய சகோதரன்;
அதோ அரிஸ்டனின் மகன் அடிமன்டஸ்; இதோ
அடிமன்டசின் சகோதரன் பிளேட்டோ; அதோ ஏந்தோரஸ், இதோ அவரது சகோதரன் அப்போலோதரஸ்.
இன்னும் பலரின் பெயர்களை என்னால் கூறமுடியும். அவர்களுள் சிலரை மெலிட்டஸ் தனது
பேச்சில் சாட்சிகளாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதை என்னால் மிகவும்
உறுதிபடக் கூறமுடியும். தனது பேச்சில் சாட்சிகளைக் குறிப்பிட அவர் மறந்துபோனார்
என்றால், இப்பொழுது
குறிப்பிடட்டும்! அவருக்கு நான் வழிவிடுகிறேன். இங்கு முன்னிறுத்துவதற்கு அத்தகைய
சாட்சிகள் எவரும் அவரிடம் உண்டா என்பதை அவர் கூறட்டும்! மாறாக, பெரியோர்களே, தமது பேரன்புக்குரிய உற்றார், உறவினரைக் கெடுத்த தீய மேதாவி என்று மெலிட்டசும், அனைட்டசும்
பழிதூற்றும் எனக்குத் துணைநிற்க அவர்கள் அனைவரும் தயாராக இருப்பதை நீங்கள்
காண்பீர்கள். எனது கேடுகெட்ட செல்வாக்கிற்கு மெய்யாகவே இரையானோர் எனக்குத் துணைநின்றால், அவர்களை மன்னிக்கலாம் அல்லவா?
ஆனால், அவர்களின் வயதுமுதிர்ந்த உறவினர்கள்,
என்னால் கெடுக்கப்படாதவர்கள் எனக்குத் துணைநிற்பதற்கு என்ன காரணம்
இருக்க முடியும்? மெலிட்டஸ் கூறுவது பொய், நான் கூறுவது மெய் எனும் தகுந்த நேரிய காரணத்தை விட வேறென்ன காரணம் இருக்க
முடியும்?
இதுவே, பெரியோர்களே,
நான் முன்வைக்கக்கூடிய பதில்வாதத்தின் சாரம். அத்துடன் இன்னும்
கொஞ்சம் சேர்க்கலாம். அதைக் கேட்டு உங்களுள் எவரும் தனது சொந்த வழக்கு எதையும்
நினைந்து எரிச்சலடையலாம். உங்களுள் ஒருவர் யூரர்களின் முன்னிலையில் இதைவிடக் கடுமை
குறைந்த விசாரணையை எதிர்கொள்கையில் கண்கலங்கி, அவர்களை
இயன்றவரை இரங்க வைப்பதற்காகத் தனது குழந்தைகளையும், உறவினர்கள்
- நண்பர்கள் பலரையும் நீதிமன்றில் வெளிப்படவைத்து, ஈனத்தனமாக
மன்றாடியிருக்கலாம். மாறாக நானோ, உயிராபத்தாகத்
தென்படக்கூடிய இப்பேராபத்தை எதிர்நோக்கியும் கூட அப்படி எதுவும் செய்ய எண்ணவில்லை.
உங்களுள் ஒருவர் இந்த விவரங்களைச் சிந்தித்துப்பார்த்து, தனது
சிந்திப்புகளால் எரிச்சலடைந்து, எனக்கெதிராகப்
பக்கம்சாய்ந்து, வெகுண்டெழுந்து வாக்களிக்கக் கூடும்.
உங்களுள் எவரும் அப்படிச் செய்ய முற்படுவீர்கள் என்று
நான் எதிர்பார்க்கவில்லை; ஆனாலும் அப்படிச் செய்ய
வாய்ப்புண்டு; அப்படி என்றால், அவரிடம்
நான் இப்படிக் கூறுவதில் பெரிதும் நியாயம் உண்டு: அன்புடையீர், எனக்கும் குடும்பத்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஹோமர் கூறியதுபோல்,
நான் "கருவாலி மரத்திலிருந்தோ, கரும்பாறையிலிருந்தோ"
உதிக்கவில்லை. என்னைப் பெற்றோர் மானுடப் பிறவிகள். ஆதலால், பெரியோர்களே,
எனக்கும் குடும்பத்தவர்கள் உண்டு. ஆம், மூன்று
புதல்வர்கள். ஒருவன் ஏறக்குறைய வளர்ந்துவிட்டான். மற்ற இருவரும் சிறுவர்கள்.
ஆனாலும் அவர்களை இங்கு முன்னிறுத்தி, என்னை விடுதலை
செய்யும்படி நான் மன்றாடப் போவதில்லை.
அப்படி எதையும் செய்ய நான் ஏன் எண்ணவில்லை? வக்கிரத்தனம் கொண்டல்ல, பெரியோர்களே! உங்களை அவமதிக்க எண்ணியுமல்ல. எனக்கு இறப்பை எதிர்கொள்ளும்
தீரம் உண்டா இல்லையா என்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை. எனக்கு கிடைத்த பெயர்
மெய்யாகலாம், பொய்யாகலாம். எனினும் மானுடரின் பொதுவான
போக்கிலிருந்து சாக்கிரட்டீஸ் வேறுபட்டவன் என்று கொள்ளப்படுகிறான். அந்த வகையில்
நான் இந்த வயதில் மேற்படி முறைகள் எவற்றையும் பயன்படுத்துவது எனது சொந்தப்
பெயருக்கும், உங்கள் பெயருக்கும், முழு
அரசின் பெயருக்கும் தகும் என்று எண்ணவில்லை.
உங்களுள் ஞானத்துக்கோ, தீரத்துக்கோ,
வேறு அறம் எதற்குமோ பேரெடுத்தோர் அப்படி எல்லாம் நடந்துகொள்வது
வெட்கக்கேடு. இத்தகைய சிலர் விசாரணைக்கு உள்ளாகும் வேளைகளில் தமது மேன்மையைத்
துறந்து மட்டுமீறி மன்றாடுவதை நான் அடிக்கடி அவதானித்திருக்கிறேன். உயிரிழப்பது
அவர்களுக்குப் பயங்கரமாகத் தெரிவதை இது காட்டுகிறது; அவர்களுக்கு
நீங்கள் மரண தண்டனை விதிக்காவிட்டால், அவர்கள் இறவாப்பேறு
பெற்றுவிடுவார்கள் என்பது போல!
இத்தகையோர் எங்கள் மாநகரத்தின் மானத்தைக் கெடுப்பவர்கள் என்றே நான்
கருதுகிறேன். அதென்சு மாநகரத்தின் குடிமக்கள் தம்மை ஆள்வதற்கும், மற்றும் பிற
உயர்பதவிகளை வகிப்பதற்கும் தகுதிவாய்ந்த ஆடவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
எங்கள் ஆடவர்களுள் மணிமுத்துக்கள் எனத்தக்க அவர்களை இங்கு வந்துசெல்வோர் வெறும்
பெண்டிரெனக் கருதினால், அவர்களை மன்னிக்கலாம். நீங்களோ,
பெரியோர்களே, உங்கள் மானம் கடுகளவாயினும்,
மேற்படி முறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு நீங்கள் தாழ்ந்துவிடக்
கூடாது. நாங்கள் அப்படிச் செய்வதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது. மாறாக, வாயை மூடிக்கொண்டிருக்கும் ஒருவரை விட,
எங்கள் மாநகரத்தைப் பிறர் எள்ளிநகையாடும் வண்ணம் ஈனத்தனமான
காட்சிகளை அரங்கேற்றும் எவரும் தண்டிக்கப்பட அதிக வாய்ப்புண்டு என்பதை நீங்கள்
அடித்துக்கூற வேண்டும்.
பெரியோர்களே, பாசாங்குகள்
பற்றிய சங்கதி முழுவதும் ஒருபுறம் இருக்கட்டும்! ஒருவன் யூரர்களிடம் மன்றாடுவதும்,
மன்றாடி விடுதலை பெறுவதும் தகும் என்று நான் நினைக்கவில்லை.
அவர்களிடம் அவன் விவரங்களை முன்வைத்து வாதாடி நம்பச்செய்ய வேண்டும். யூரர்கள் தயவு
காட்டுவது நீதிபாலிப்பதாகாது. தாம் துணிந்தவாறு தயவு காட்டுவதற்கு அவர்கள்
சூளுரைக்கவில்லை. எது நீதி என்பதையே அவர்கள் தீர்மானிக்க வேண்டும். நீதிநியாயப்படி,
சட்டதிட்டப்படி தீர்ப்பளிக்கவே அவர்கள் சூளுரைத்துள்ளார்கள்.
இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால், உங்களிடையே
பொய்ச்சாட்சியம் மேலோங்க நாங்களும் விடக்கூடாது, நீங்களும்
விடக்கூடாது; விட்டால் எங்கள் இரு தரப்புகளுக்கும் பழிபாவம்
விளையும்.
ஆதலால், பெரியோர்களே,
நான் மானமிழந்து, நெறிபிறழ்ந்து, எனது சமயக் கடமைதிறம்பி உங்களிடம் மன்றாடுவேன் என்று நீங்கள்
எதிர்பார்க்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, நான்
கடவுட்பற்று அற்றவன் என்று மெலிட்டசால் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டு நிற்கும்பொழுது,
நீங்கள் அதை எதிர்பார்க்கக் கூடாது. நீங்கள் பற்றுறுதியுடன் இட்ட
சூளுரையை மீறும்படி நான் உங்களிடம் கெஞ்ச முயன்றால், உங்களைத்
தூண்ட முயன்றால், சமயநெறியை அவமதிக்கும்படி நானே
உங்களுக்குப் போதிப்பதாகப் புலப்படுதல் திண்ணம். அத்தகைய பதில்வாதத்தின் ஊடாக நான்
சமய நம்பிக்கை அற்றவன் என்று என்னை நானே குறஞ்சாட்டுவதாகப் புலப்படும். ஆனால்
அதில் கொஞ்சமும் உண்மை இல்லை. பெரியோர்களே, என்மீது
குற்றஞ்சுமத்தியோரை விட எனக்கு சமயநெறியில் மிகவும் உளமார்ந்த நம்பிக்கை உண்டு.
எனக்கும் உங்களுக்கும் சிறந்த பெறுபேறு கிடைக்கும் வண்ணம் எனது பதில்வாதத்தைச்
சீர்தூக்கிப் பார்க்கும் பொறுப்பை நான் உங்களிடமும் கடவுளிடமும் விட்டுவிடுகிறேன்.
500 யூரர்களின் தீர்ப்பு
குற்றவாளி: 280 வாக்குகள்
நிரபராதி: 220 வாக்குகள்
பெரியோர்களே, இப்பெறுபேறு குறித்து, நீங்கள் என்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது குறித்து, நான் வருத்தப்படவில்லை. அதற்குப் பற்பல காரணங்கள் உண்டு. தலையாய காரணம், இது எதிர்பார்க்கப்படாத பெறுபேறு அல்ல. அதேவேளை, எனக்குச் சார்பாகவும் எதிராகவும் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையே என்னை வியக்க வைக்கிறது. எண்ணிக்கை வேறுபாடு இவ்வளவு குறுகும் என்று நான் என்றுமே நம்பியிருக்கவில்லை. வெறுமனே 30 வாக்குகள் மாறி விழுந்திருந்தால், நான் விடுதலை செய்யப்பட்டிருப்பேன் என்பது இப்பொழுது தெரிகிறது. எவ்வாறாயினும், மெலிட்டசின் குற்றச்சாட்டிலிருந்து நான் விடுவிக்கப் பட்டுள்ளதாகவே கருதுகிறேன். அது மாத்திரமன்று; அனைட்டசும், லைக்கனும் என்மீது குற்றஞ்சுமத்த முன்வந்திராவிட்டால், 1/5 வாக்குகளைப் பெறத்தவறியதற்கு தனது 1,000 வெள்ளி கட்டுப்பணத்தை மெலிட்டஸ் இழந்திருப்பார்.
சாக்கிரட்டீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது மெலிட்டசதும் மற்ற இருவரதும் கோரிக்கை. சாக்கிரட்டீசின் மாற்றுக் கோரிக்கை:
மெத்த நல்லது, பெரியோர்களே! எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று மெலிட்டஸ் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு எத்தகைய மாற்றுக் கோரிக்கையை நான் முன்வைக்க வேண்டும்? தகுந்த மாற்றுக் கோரிக்கையை நான் முன்வைக்க வேண்டும் என்பது வெளிப்படை. சரி, நான் செய்த வேலைக்கு நான் என்ன தண்டம் செலுத்த வேண்டும் அல்லது நான் என்ன தண்டனை அனுபவிக்க வேண்டும்?
நான் என்றுமே வழமையான, அமைதியான
வாழ்வு வாழ்ந்ததில்லை. எங்கள் மாநகரத்தில் பெரும்பாலோர் அக்கறை கொள்ளும்
சங்கதிகளில், பணம் சம்பாதிப்பதில், வசதியான
வீடு தேடிக்கொள்வதில், படைத்துறையில் அல்லது குடித்துறையில்
உயர்பதவி வகிப்பதில், மற்றும் பிற அலுவல்களில், அரசியல் நியமனங்களில், தலைமறைவுச் சமாசங்களில்,
கட்சி அமைப்புகளில் நான் அக்கறை கொண்டதில்லை. உயிர்வாழ்வதை விட எனது
நெறிகளிலேயே நான் மிகவும் அக்கறை கொண்டிருந்தேன். எனது நெறிகளிலேயே நான்
கண்டிப்பாக இருந்ததாக நினைத்தேன். ஆதலால் உங்களுக்கோ எனக்கோ நலம் பயக்காத நெறி
எதையும் மேற்கொள்வதை விடுத்து, உங்களுக்கு தனித்தனியாக,
அந்தரங்கமாகப் புரியக்கூடிய மாபெரும் பணி என்று நான் கருதும் பணியை
ஆற்றத் தலைப்பட்டேன். உளநலத்தையும் அறநலத்தையும் விட நடைமுறை அனுகூலங்களை அதிகம்
கருத்தில் கொள்ளாதிருக்க உங்கள் ஒவ்வொருவரையும் நான் தூண்ட முயன்றேன். பொதுவாக அரசு விடயத்தில் அல்லது வேறு விடயம் எதிலும் அனுகூலத்தை விட
நன்னலத்தை அதிகம் கருத்தில் கொள்ள உங்கள்
ஒவ்வொருவரையும் நான் தூண்ட முயன்றேன்.
இப்படி நடந்து கொண்டதால், நான் எதைப் பெறும் தகுதி உடையவன்? அதை
நானே தெரிவிக்க வேண்டும் என்றால், எனக்குத் தகுந்த கைமாறு
ஏதாவது என்று வைத்துக்கொள்ளுங்கள், பெரியோர்களே! அதைவிட அதிகமாக
வேறு எதுவுமில்லை. சரி, பொதுநலம் புரிந்த ஓர் ஏழைக்கு,
அறநெறிநிற்க உங்களை ஊக்குவித்த ஓர் ஏழைக்கு, ஓய்வில்
திளைக்க வேண்டிய ஓர் ஏழைக்குத் தகுந்த கைமாறு என்ன? அரசின்
செலவில் இலவச பராமரிப்பை விட மிகவும் தகுந்த கைமாறு வேறெதுவும் இருக்க முடியாது.
ஒலிம்பிய பந்தயத்தில் ஒரு குதிரை கொண்டு, அல்லது ஒரு சோடி
குதிரைகள் கொண்டு, அல்லது நான்கு குதிரைகள் கொண்டு ஓடி
வெற்றிவாகை சூடிய எவரையும் விட இந்த ஏழைக்கே அதைப் பெறும் தகுதி மிகவும் அதிகம்.
இவர்கள் உங்களுக்கு வெற்றியின் சாயலை அளிப்பவர்கள். நானோ உங்களுக்கு மெய்ம்மையை அளிப்பவன்.
அவர்களுக்கு பராமரிப்பு தேவையில்லை. எனக்கே அது தேவை. ஆதலால், கண்டிப்பான நீதிநெறிப்படி தகுந்த தண்டத்தை நானே முன்வைக்க வேண்டும்
என்றால், அரசின் பராமரிப்பையே நான் முன்வைக்கிறேன்.
இப்படிக் கூறும்பொழுது நான் வேண்டுமென்றே வக்கிரத்தனம் காட்டுவதாக நீங்கள் எண்ணக்கூடும்.
யூரர்களைப் பரிவுகொள்ள வைப்பதற்காக உணர்ச்சிததும்ப மன்றாடுவது பற்றி நான் ஏற்கெனவே
கருத்துரைத்த பொழுதும் இப்படிக் கூறியிருந்தேன். இது வக்கிரத்தனம் அல்ல, பெரியோர்களே!
இதுவே எனது உண்மையான நிலைப்பாடு: நான் வேண்டுமென்றே எவருக்கும் தீங்கிழைக்கவில்லை என்று
உறுதிபட நம்புகிறேன். ஆனால் நீங்கள் அதை நம்பும்படி செய்ய என்னால் முடியாது. காரணம்,
நாங்கள் கலந்துரையாடுவதற்கு கிடைத்த அவகாசம் மிகவும் குறுகியது.
பிறநாடுகளில் ஒதுக்கப்படுவது போல் மரண தண்டனைக்குரிய வழக்கு விசாரணைகளுக்கு ஒரு
நாள் அல்ல, பல நாட்களை ஒதுக்கும் வழக்கத்தை நீங்கள்
கைக்கொண்டிருந்தால், உங்களை என்னால் நம்பவைக்க
முடிந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கிடைக்கும்
குறுகிய அவகாசத்துள் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முறியடிப்பது எளிதல்ல.
நான் எவருக்கும் தீங்கிழைப்பதில்லை என்று உறுதிபட நம்புகிறேன். எனவே நான்
ஏதாவது கெடுதிக்கு உள்ளாக வேண்டியவன் என்று வலியுறுத்துவதன் ஊடாகவோ, மாற்றுத்
தண்டனையை முன்மொழிவதன் ஊடாகவோ எனக்கு நானே தீங்கிழைப்பேன் என்று கொஞ்சமும் நீங்கள்
எதிர்பார்க்க முடியாது. நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? மெலிட்டஸ்
முன்மொழியும் (மரண) தண்டனைக்கு உள்ளாக அஞ்சியா? அது நல்லதா
கெட்டதா என்பது எனக்குத் தெரியாது என்று கூறினேனே! மாற்று முன்மொழிவை இடுவதன் ஊடாக,
கெட்டது என்று எனக்கு நன்கு தெரிந்த ஏதோ ஒன்றை நான்
தேர்ந்துகொள்வேன் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? சிறைவாசம்?
எனது வாழ்நாளை நான் ஏன் சிறையில் கழிக்க வேண்டும்? அவ்வப்பொழுது அமர்த்தப்படும் சிறை அதிகாரிகளுக்கு நான் ஏன் அடிபணிய
வேண்டும்? அபராதம்? அபராதம்
செலுத்தும்வரை சிறைவாசம்? என்னைப் பொறுத்தவரை அபராதமும்
சிறையும் ஒரே தாக்கத்தையே விளைவிக்கும். காரணம், அபராதம்
செலுத்த என்னிடம் வக்கில்லை. என்னை நாடுகடத்தும்படி நான் யோசனை கூறவேண்டுமா?
அந்த யோசனையை நீங்கள் பெரிதும் ஏற்கக்கூடும்.
பெரியோர்களே, அப்படிச்
செய்வதற்கு நான் வாழ்வில் கடுங்காதல் கொண்டவனாக இருக்க வேண்டும். எனது சக
குடிமக்களாகிய நீங்கள் எனது வாதங்களையும், உரையாடல்களையும்
செவிமடுத்து உங்கள் பொறுமையின் எல்லைக்கு வந்துவிட்டீர்கள் என்பதைக் கண்டுகொள்ள
முடியாத குருடன் அல்ல நான். அவை உங்களுக்கு ஆக்கினையும் எரிச்சலும் ஊட்டியது கண்டு,
அவற்றை இப்பொழுது நீங்கள் ஒழித்துக்கட்ட முயல்கிறீர்கள். பிறநாட்டு
மக்கள் எவர்க்கும் அவற்றைச் சகித்துக்கொள்வது எளிதாகுமா? அதற்குப்
பெரிதும் சாத்தியமில்லை, பெரியோர்களே!
நான் இந்த வயதில் இந்த நாட்டைத் துறந்து, மாநகரத்துக்கு மாநகரம் பெயர்ந்து, ஒவ்வொரு தடவையும் விரட்டப்பட்டவனாக எஞ்சிய எனது வாழ்நாளைக் கழிக்க நேர்வது
எத்துணை சிறந்த வாழ்வு! எனது உரையாடலை இளையோர் இங்கு செவிமடுப்பது போல் நான்
செல்லும் இடமெல்லாம் செவிமடுப்பார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். நான் அவர்களை
அப்புறப்படுத்த முயன்றால், தமது மூத்தோரைக் கொண்டு என்னை
அவர்கள் விரட்டியடிப்பார்கள். நான் இளையோரை அப்புறப்படுத்தாவிட்டால், இளையோர் நலன்கருதி அவர்களது தந்தையரும் மற்றும் பிற உறவினரும் தாமாகவே
முன்வந்து என்னை விரட்டியடிப்பார்கள்.
"ஆனாலும், சாக்கிரட்டீஸ்,
நீ எங்களைத் துறந்த பிறகு உன் சொந்த அலுவலில் புலனைச் செலுத்தி
எஞ்சிய உன் வாழ்நாளை அமைதியாகக் கழிக்க முடியும் என்பது உறுதி அல்லவா?"
என்று எவராவது வினவக்கூடும்.
உங்களுள் சிலருக்கு மற்றெல்லாவற்றையும் விட இதைப் புரியவைப்பது மிகவும் கடினம்.
நான் "எனது சொந்த அலுவலில் புலனைச் செலுத்த முடியாது;" காரணம்,
அது கடவுள் இட்ட ஆணைக்குப் பணிய மறுப்பதாகும் என்று நான் கூறினால்,
நான் கருத்தூன்றித்தான் அப்படிக் கூறுகிறேன் என்பதை நீங்கள்
நம்பமாட்டீர்கள். மறுபுறம், நன்னலம் குறித்தும், உங்கள் காதில் விழும் வண்ணம் நான் பேசும் மற்றெல்லா விடயங்கள் குறித்தும்,
என்னையும் பிறரையும் நான் ஆராயும் விடயங்கள் குறித்தும் ஒவ்வொரு
நாளும் தவறாது ஆராய்வதே ஒரு மனிதன் செய்யக்கூடிய தலைசிறந்த செயல்; அவ்வாறு ஆராயாது வாழும் வாழ்வு ஒரு வீண் வாழ்வு என்று நான் உங்களிடம்
கூறினால், நீங்கள் இன்னும் குறைவாகவே என்னை நம்ப
முனைவீர்கள்.
உங்களை நம்பவைப்பது எளிதல்ல, பெரியோர்களே! எனினும் நிலைமை அதுவே. அதை ஏற்கெனவே நான்
வற்புறுத்திக் கூறினேன். அத்துடன், நான் தண்டிக்கப்பட
வேண்டியவன் என்று கருதும் வழக்கம் என்னிடம் இல்லை. என்னிடம் பணம் இருந்தால்,
நான் செலுத்தக்கூடிய அபராதத்தை தெரிவித்திருப்பேன். அபராதம் செலுத்துவதால் எனக்கு எதுவித தீங்கும் விளையாது. என்னிடம் பணம்
இல்லாதபடியால், அபராதத்தை என்னால் நிர்ணயிக்க முடியாது.
ஆனாலும், நீங்கள் விரும்பினால், நான்
செலுத்தக்கூடிய அபராதத்தை நீங்களே நிர்ணயிக்கலாம். என்னால் 1 மினா (65 வெள்ளி)
செலுத்த முடியும் என்று நினைக்கிறேன். ஆம், ஒரு மினா கட்டணம்
விதிக்கவும்.
ஒரு நொடி பொறுத்துக்கொள்ளுங்கள், பெரியோர்களே! இங்கே பிளேட்டோ, கிறித்தோ, கிறித்தோபியூலஸ், அப்போலோதொரஸ் கூடி, தமது பொறுப்பில் 30 மினா கட்டணம் செலுத்தும் யோசனையை முன்வைக்கும்படி கேட்கிறார்கள். மெத்த நல்லது, பெரியோர்களே, அவ்வளவு தொகை செலுத்த நான் உடன்படுகிறேன். கொடுப்பனவுப் பொறுப்பை இவர்களிடம் சுமத்தவும்.
500 யூரர்களின் தீர்ப்பு
மரண தண்டனையை
ஆதரித்து 360 வாக்குகள்
எதிர்த்து 140 வாக்குகள்
நல்லது, பெரியோர்களே,
ஒரு குறுகியகால வெற்றிக்காக சாக்கிரட்டீசை, "அந்த ஞானவானை," சாகடித்த புகழையும், எங்கள் மாநகரத்தை இகழ விரும்புவோர் சுமத்தும் பழியையும் நீங்கள் ஈட்டப்
போகிறீர்கள். நான் ஞானமற்றவன் என்றாலும் கூட, உங்களைக்
குறைகூற விரும்புவோர் என்னை ஞானவான் என்றே கூறுவார்கள். இன்னும் கொஞ்ச நேரம்
நீங்கள் தாமதித்திருந்தால், இயற்கை வழியிலேயே உங்கள் எண்ணம்
கைகூடியிருக்கும். நான் பெரிதும் வாழ்ந்து முடிந்து, மாளும்
வயது நெருங்குவதை உங்களால் காண முடிகிறதே! இதை உங்கள் எல்லோருக்கும் நான்
கூறவில்லை; எனது மரண தண்டனைக்கு வாக்களித்தவர்களுக்கே
கூறுகிறேன். அவர்களுக்கு நான் வேறொன்றையும் கூறவேண்டியுள்ளது:
பெரியோர்களே, எனது
விடுதலையை ஈட்டிக்கொள்வதற்கு வேண்டிய அனைத்தையும் சொல்வதும், செய்வதும் தகும் என்று நான் எண்ணியிருந்தால் எத்தகைய வாதங்களைக்
கையாண்டிருப்பேனோ அத்தகைய வாதங்களைக் கையாளாதபடியால் நான் குற்றத்தீர்ப்புக்கு
உள்ளானதாக நீங்கள் கருதுகிறீர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது சற்றும் உண்மை
அல்ல. வாதங்கள் அற்றநிலையில் நான் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாகவில்லை. அகந்தையும்
துடுக்கும் அற்ற நிலையிலேயே நான் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறேன்.
உங்களுக்குப் பேரின்பம் பயக்கும் வண்ணம் உங்களை விளித்து நான் உரையாற்ற மறுத்தேன்.
நான் சொல்லவும் செய்யவும் தகாதவை என்று கொள்பவை அனைத்தையும் கூறி, மற்றவர்களிடம் நீங்கள் கேட்டுப் பழகியவை அனைத்தையும் கூறி அழுது
புலம்புவதைக் கேட்க நீங்கள் ஆசைப்பட்டிருப்பீர்கள். எனினும் ஆபத்தை எதிர்நோக்கிய
காரணத்துக்காக நான் கூனிக்குறுகி மண்டியிட வேண்டும் என்று அப்பொழுது நான்
நினைக்கவுமில்லை; எனது பதில்வாதத்தை நான் முன்வைத்த விதம்
குறித்து இப்பொழுது நான் வருந்தவுமில்லை. வேறு வகையான பதில்வாதத்தின் பெறுபேறாக
வாழ்வதை விட, இத்தகைய பதில்வாதத்தின் பெறுபேறாக மாள்வதையே
நான் பெரிதும் விரும்புகிறேன்.
போர்க்களத்தைப் போலவே நீதிமன்றத்திலும் நானோ பிறரோ எந்த வழியிலும்
உயிர்தப்புவதற்காக அவரவர் சாமர்த்தியத்தைப் பயன்படுத்தக் கூடாது. போர்க்களத்தில்
உங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, உங்களைப் பின்தொடரும் எதிரிகளிடம் மண்டியிட்டு, நீங்கள் உயிர்தப்பி ஓடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது தெரிந்ததே.
நீங்கள் மனவுறுத்தலின்றி நெறிபிறழ்வோர் என்றால், எல்லா
வகையான ஆபத்துகளிலிருந்தும் உயிர்தப்பி ஓடுவதற்கு பெருமளவு உபாயங்கள் உங்களுக்கு
கிடைக்கும். உயிர்தப்பி ஓடுவது அத்துணை கடினமல்ல, பெரியோர்களே!
தவறிழைக்காமல் தப்பியோடுவதே மிகவும் கடினம். மிகவும் வேகம்கூடிய
ஓட்டம் அது! தற்போதைய ஓட்டப் பந்தயத்தில் பங்குபற்றும் இரு அணிகளுள் வேகம்குறைந்த
என் முதிய அணியை வேகம்குன்றிய அணி தாண்டிவிட்டது. என்மீது குற்றஞ்சுமத்தியோர்
விரைவாகவும் கெட்டித்தனமாகவும் ஓடவல்லவர்கள். எனினும் வேகம்கூடிய அநீதி அவர்களைத்
தாண்டிவிட்டது.
உங்களால் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதியாக இந்த நீதிமன்றத்தை விட்டு நான்
புறப்படப் போகிறேன். அவர்கள் வன்மமும் வக்கிரத்தனமும் புரிந்த குற்றவாளிகள் என்று
மெய்யுலகினால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களாகப் புறப்படப் போகிறார்கள். எனது தண்டனையை
நான் ஏற்கும் அதேவேளை தமது தண்டனையை அவர்கள் ஏற்பார்கள். அப்படி நிகழ்தல் திண்ணம்; அதில் ஐயமில்லை;
இது பெரிதும் செவ்விய பெறுபேறு என்றே கருதுகிறேன்.
இறக்குந்தறுவாயில் நிற்கும் நான், மானுடர்க்கு தீர்க்கதரிசனம் என்னும் கொடை
உடன் கைகூடும் தறுவாயில் நிற்கும் நான், எனக்கெதிராக
வாக்களித்த உங்களுக்கு, என்னைச் சாகடிக்கும் உங்களுக்குச்
சொல்வேன்: நான் இறந்தவுடன், வஞ்சம் உங்களைத் தாக்கும்; நீங்கள் என்னைக் கொல்வதை
விடவும் வேதனைமிகுந்த தண்டனையை உங்களுக்கு அளிக்கும். என்னைச் சாகடிப்பதன் ஊடாக
உங்கள் நடத்தைக்கு நீங்கள் கண்டனத்துக்கு உள்ளாகாமல் தப்பலாம் என்ற நம்பிக்கையில்
என்னைச் சாகடிக்கத் தீர்மானித்தீர்கள். அதன் பெறுபேறு எதிர்மாறாய் அமையப் போகிறது.
உங்களை இன்னும் பலர் கண்டிக்கப் போகிறார்கள். உங்களுக்குத் தெரியாமலேயே அவர்களை
இதுவரை நான் கட்டுப்படுத்தி வைத்துள்ளேன். அந்த இளைஞர்கள் உங்களுடன் மிகவும்
முரட்டுத்தனமாக நடந்துகொள்ளப் போகிறார்கள். உங்களுக்கு மிகவும் எரிச்சலூட்டப்
போகிறார்கள். ஆட்களைச் சாகடிப்பதன் ஊடாக உங்கள் தகாத வாழ்க்கைப் போக்கிற்கு எதிரான
கண்டனத்தை முடக்கலாம் என்று நீங்கள் எதிர்பார்த்தால், உங்கள்
நியாய விளக்கத்தில் ஏதோ ஒரு தவறுண்டு என்பது பெறப்படுகிறது. இவ்விதமாக நீங்கள்
தப்பிக்கொள்வது கைகூடப் போவதில்லை; அதைப் பிறர் மெச்சப்
போவதில்லை. மற்றவர்களின் வாயைப் பொத்தாமல், உங்களால்
இயன்றவரை உங்களை நல்லவர்களாக மாற்றிக்கொள்வதே மிகவும் எளிதான தலைசிறந்த வழி. இதுவே
என்னைச் சாகடிக்க வாக்களித்தவர்களுக்கு நான் விடுக்கும் இறுதிச் செய்தி.
அதிகாரிகள் தமது அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். நான் சாகவேண்டிய
இடத்துக்குப் புறப்பட இன்னும் நேரம் இருக்கிறது. ஆதலால் என்னை விடுதலைசெய்ய
வாக்களித்த உங்களுக்கும் ஒருசில சொற்களை உதிர்க்க விரும்புகிறேன்: பெரியோர்களே, வழக்கின்
பெறுபேற்றை ஏற்றுகொள்ளுங்கள்! கிடைத்த சில நொடிகளில் என்னைத் திளைக்க விடுங்கள்!
சட்டம் அனுமதிக்கும் இத்தருணத்தைப் பயன்படுத்தி நாங்கள் உரையாடி மகிழக்கூடாது
என்பதற்கு எதுவித நியாயமும் இல்லை. உங்களை என்
நண்பர்களாகவே நான் நோக்குகிறேன். எனது தற்போதைய நிலைமையைச் சரிவர
விளங்கிக்கொள்ளும்படி உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
யூரர் பெருமக்களே! நீங்கள் அப்படி விளிக்கப்பட வேண்டியவர்களே! எனக்கு
கிடைத்துள்ள பட்டறிவு வியக்கத்தக்கது. கடந்த காலத்தில் நான் செவிமடுத்துப் பழகிய
தெய்வக்குரல், என்றென்றும் என்னுடன் கூடி வலம்வந்தது.
மிகவும் அற்ப விடயங்களில் கூட நான் தவறாக வழிநடக்கத் தலைப்பட்டால், என்னை அது தடுத்தாட்கொண்டு வந்தது. இப்பொழுது எனக்கு ஏதோ நடந்துவிட்டது;
நீங்களும் அதைக் காண முடிகிறதே! அதைப்
பேரிடி என்று கருதலாம்; பெரிதும் பேரிடி என்றே
கொள்ளப்படுகிறது.
இன்று காலை வீட்டிலிருந்து நான் புறப்படுந் தறுவாயிலோ, இங்கே
நீதிமன்றில் எனக்குரிய இடத்தில் நான் அமருந் தறுவாயிலோ, எனது
உரையின் எந்தக் கட்டத்திலோ மேற்படி தெய்வக்குரல் என்னைத் தடுத்ததில்லை. வேறு
கலந்துரையாடல்களில் பெரிதும் ஒரு வசனத்தின் இடையில் அது குறுக்கிட்டதுண்டு. ஆனால்
இப்பொழுது இந்த வழக்காடலின் எந்தக் கட்டத்திலும் நான் கூறிய அல்லது செய்த எதிலுமே
அது குறுக்கிட்டதில்லை. அதற்கான நியாயவிளக்கம் என்ன என்று நான் கருதுகிறேன்?
அதை உங்களுக்கு நான் சொல்லிவிடுகிறேன்: எனக்கு நேர்ந்தது ஓர்
அருட்பேறே என்பது எனது ஊகம். நாங்கள் இறப்பை ஒரு கேடு என்று கொள்வது மிகவும் தவறு.
அப்படி நான் நினைப்பதற்குத் தகுந்த ஆதாரம் உண்டு: நான்
புரியப்போகும் செயலினால் நல்ல பெறுபேறு எதுவும் விளையாது என்பது உறுதி என்றால்,
நான் செவிமடுத்துப் பழகிய தெய்வக்குரல் என்னத் தடுத்தாட்கொள்ளத்
தவறியிருக்க முடியாது!
சாக்கிரட்டீஸ் முன்வைக்கும் வாதம்: இறப்பு ஒரு கேடல்ல
இனி, இறப்பு
என்பது உணர்வற்ற ஒன்று என்றால், அது கனவற்ற வெறும் உறக்கம்
என்றால், அது ஓர் அற்புதப்பேறாதல் வேண்டும். ஒருவர் கனவே
காணாவண்ணம் நன்கு உறங்கிய இரவைச் சுட்டிக்காட்டும்படியும், அவரது
வாழ்நாளின் ஏனைய இரவுபகல்கள் அனைத்துடனும் அதை ஒப்பிட்டுப் பார்க்கும்படியும்,
அவற்றை உரியமுறைப்படி கருத்தில் கொண்டு, அவரது
வாழ்நாளில் அவர் நலம்பட மகிழ்ந்து கழித்த இரவுபகல்கள் எத்தனை என்று கூறும்படியும்
கேட்டால், (பாரசீக) மாமன்னன் கூட அத்தகைய நாட்களை ஏனைய
நாட்களுடன் எளிதில் ஒப்பிட்டுக் கூறிவிடுவான்; குடிமகன்
எவரிடமும் கேட்கத் தேவையில்லை. இறப்பும் அது போன்றதே என்றால், அதை நான் ஓர் ஆதாயமாகவே கருதுவேன். காரணம், காலம்
முழுவதையும் வெறுமனே ஒரு தனியிரவாகக் கருதமுடியும் அல்லவா?
மறுபுறம் இறப்பு என்பது இவ்விடம் விட்டு வேறிடம் பெயர்வது என்றால், இறந்தவர்கள்
அனைவரும் அவ்விடம் வாழ்வதாக எங்களிடம் கூறப்படுவது உண்மை என்றால், அதைவிட மகத்தான அருட்பேறு வேறென்ன கிடைக்க முடியும்? எமது பெயரளவிலான நீதியின் கைக்கு அகப்படாத மறுவுலகைச் சென்றடையும் எவரும்
அவ்வுலக நீதிமன்றுகளில் தலைமை வகிப்பவர்கள் எனப்படும் மினோஸ், ரதமந்தஸ், ஏக்கஸ், திரித்தொலெமஸ்
ஆகிய மெய்நீதிபதிகளையும், மண்ணுலக வாழ்வில் நெறிநின்ற
மற்றும் பிற தேவர்களையும் கண்டுகளிப்பர். அங்ஙனமாயின் மறுவுலகப் பயணம் பலன்தராத
பயணமாவது எங்ஙகனம்?
இன்னொரு விதமாக வினவுகிறேன்: ஓவியஸ், மியுசேயஸ், எசியோட்,
ஹோமர் ஆகிய புலவர்களைச் சந்திக்க உங்களுள் ஒருவர் எவ்வளவு கட்டணம்
செலுத்துவார்? உண்மையில் அவர்களைச் சந்திக்கலாம் என்றால்,
நான் திருமபத் திரும்ப பத்து தடவைகள் இறக்கத் தயார். அங்கே
அவர்களுடன் இணைந்து பலடெஸ், தெலமனின் மகன் ஏஜாக்ஸ், அநீதியான விசாரணையின் ஊடாகச் சாகடிக்கப்பட்ட வேறு பழைய வீரர்கள்
அனைவரையும் சந்தித்து, எனது நற்பேறை அவர்களது நற்பேறுடன்
ஒப்புநோக்குவது எனக்கு அருஞ்சுவையூட்டும் அனுபவமாகும், கேளிக்கை
மிகுந்த அனுபவமாகும் என்று நினைக்கிறேன்.
அனைத்துக்கும் மேலாக, இங்குபோல்
அங்கும் மக்களின் உள்ளங்களைத் துருவி ஆராய்ந்து, அவர்களுள்
யார் உண்மையில் ஞானவான் என்பதையும், உண்மையில் தன்னை ஞானவான்
என்று வெறுமனே கருதுபவர் யார் என்பதையும் கண்டறிவதில் எனது பொழுதைக் கழிக்க
ஆசைப்படுகிறேன். துரோய் மீது போர்தொடுத்த (கிரேக்கப்) படையின் மாபெரும் தலைவன்
(மன்னன் அகமெம்னன்), ஒடிசியஸ், சிசிபஸ்,
ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் ஆகியோரிடம்
வினவுவதும், அவர்களுடன் பேசுவதும், கூடி
விவாதிப்பதும் கற்பனைக்கும் எட்டாத இன்பம் பயக்கும். அத்தகைய செயலுக்கு அங்கு
எவரும் சாகடிக்கப்படுவதில்லை என்று எண்ணுகிறேன். ஏனெனில், எங்களிடம்
கூறப்படுவது உண்மை என்றால், அவர்களது உலகு வேறுபட்ட இன்பம்
துய்ப்பதில் எங்களது உலகை விஞ்சியுள்ளது; அதைவிட அவர்கள்
எஞ்சிய காலம் முழுவதும் இறவாப்பேறு பெற்றுள்ளார்கள்.
யூரர் பெருமக்களே, நீங்களும்
இறப்பை நம்பிக்கையோடு எதிர்பார்க்க வேண்டும். உங்கள் உள்ளத்துள் இந்த உறுதியான
நம்பிக்கையை ஊட்டவேண்டும். நல்லவனுக்கு வாழ்விலோ மாள்விலோ எதுவுமே தீங்கிழைக்க
முடியாது. அவனது நற்பேறுகளைக் கடவுளர் புறக்கணிப்பதில்லை. தற்பொழுது எனக்கு
ஏற்பட்டுள்ள பட்டறிவு தன்பாட்டில் ஏற்பட்டதல்ல. நான் இறந்து, எனது பராக்குகளிலிருந்து விடுபடுவதற்கு எந்தக் காலம் நல்லதோ, அந்தக் காலம் வந்துவிட்டது என்பது எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
ஆகவேதான் எனது தெய்வக்குரல் என்னைத் தடுக்கவே இல்லை. என்மீது குற்றஞ்சுமத்தியோர்,
என்னைக் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாக்கியோர் கனிவான நோக்கத்துடன்
அப்படிச் செய்யவில்லை. என்னை ஊறுபடுத்துவதாக எண்ணியே அப்படிச் செய்தார்கள். அந்த
வகையில் அவர்கள் குற்றம் இழைத்தவர்கள் ஆகிறார்கள். ஆனாலும் கூட அவர்கள் மீது நான்
இம்மியும் மனத்தாங்கல் கொள்ளவில்லை.
எவ்வாறாயினும், எனக்கோர்
உதவிபுரிய இணங்கும்படி அவர்களிடம் நான் வேண்டிக்கொள்கிறேன். எனது புதல்வர்கள்
வளர்ந்த பிறகு, அவர்கள் நன்னலத்தை விடப் பணத்துக்கோ வேறு
எதற்குமோ முதன்மை கொடுப்பதாக நீங்கள் எண்ணினால், நான்
உங்களுக்குத் தொல்லை கொடுத்தது போல் அவர்களுக்குத் தொல்லை கொடுத்து வஞ்சம்
தீர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் நியாயமின்றிக் கொட்டமடித்தால், முக்கிய விடயங்களைப் புறக்கணித்தால், எதிலுமே
கையாலாகாதவர்களாக இருந்துகொண்டு எதிலோ கையாலானவர்கள் என்று எண்ணினால், நான் உங்களைக் கடிந்தவாறு அவர்களைக் கடியுங்கள். நீங்கள் அப்படிச்
செய்தால், உங்கள் கையினால் எனக்கும், எனது
பிள்ளைகளுக்கும் நீதி கிடைத்ததாகும்.
நாங்கள் புறப்பட்டிருக்க வேண்டிய நேரம் இது; நான் மாளவும், நீங்கள்
வாழவும் புறப்பட்டிருக்க வேண்டிய நேரம் இது. ஆனாலும் எங்களுக்குள் யாருக்கு மிகுந்த
இன்பம் கிடைக்கும் என்பது கடவுளைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.
____________________________________________________________
Socrates, as
recorded by his pupil Plato, The Last Days of Socrates
Translated
from Greek to English by Hugh Tredennick, 1954.
தமிழ்: மணி வேலுப்பிள்ளை
Against ‘Socrates’ in our, Tamils’ mind by “manis” record, translation. Thank Mani
ReplyDelete