சங்கீத வியாபாரம்

Image result for r.k.narayan
ஆர்.கே.நாராயண் 

        இன்றைய இசையுலகின் நிலையைப் பற்றி உரத்துப் பேசியபடியே நாங்கள் அந்த இசை மண்டபத்தை விட்டு வெளியே வந்தோம். ஏற்கெனவே அன்றைய தினம் எங்கள் வாயாடியை நாசூக்காக அப்புறப்படுத்தி விட்டோம் என்ற நினைப்பில் நடந்து கொண்டிருந்த எங்களிடம் அந்த வாயாடியே வந்து வாயைத் திறந்தான்: 'வியாபாரமயமா? இப்போ எல்லாம் சங்கீதம் அவ்வளவு தூரம் வியாபாரமயமாகி விட்டதென்றா நினைக்கிறீர்கள்? என்னுடைய அனபவத்தைக் கேளுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட படுமோசமான அனுபவம்கூட என்னுடைய அனுபவத்துக்கு ஈடாகுமென்று நான் நினைக்கவில்லை' என்ற பீடிகையுடன் அவன் சொன்ன கதை இதுதான்:
        சரவண பாகவதர் ஒரு பெரிய இசைக் கலைஞர். ஒரு தடவை எனக்கு அவருடைய தொடர்பு ஏற்பட்டது. மேதை என்றால் அவர்தான். நீங்கள் எத்தனை பேர் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்களோ எனக்குத் தெரியாது. கும்பிடத்தகுந்த மனிதர். குரல் வளம் மிகுந்தவர். தனது மூதாதையருடைய காணியில்தான் அவர் குடியிருந்தார். நீண்ட சங்கீதப் பரம்பரையில் பிறந்தவர். தனித்திருந்து பாடுவதைவிட வேறெதுவும் தனது வாழ்க்கைக்குத் தேவைப்படும் என்று அவர் என்றுமே நினைத்ததில்லை. விளம்பரம் இல்லை. வங்கிக் கணக்கேடுகள் இல்லை. ஆட்கள் முண்டியடிக்கும் இசைக் கச்சேரிகள் இல்லை. பொது மக்கள் பற்றிய நினைப்பு இல்லை. போதும் என்ற மனம். தனித்திருந்து தம்புராவை அணைப்பதில் ஒரு தனி இன்பம்.
அப்படிப்பட்ட ஆளை வெளியூர் எங்காவது கொண்டுபோய்ப் பாடுவிப்பது வெகு சிரமம். எவராவது அவர் பாடுவதைக் கேட்க விரும்பினால் அவருடைய வீட்டுக்குப் போய் விருந்தாளியாக இருக்க வேண்டியதுதான். சீமான் எப்போ பாடத் துவங்குவார், துவங்கினால் எப்போ நிறுத்துவார் என்பது தெரியாது. சனம் வளவெல்லாம் வட்டமிடும். வுpத்துவான் தம்புராவை எட்டி எடுப்பதைக் கண்டதுதான் தாமதம், சனம் எல்லாம் அவரைச் சுற்றிச் சூழ்ந்துவிடும். சில வேளை ஒரே இராகத்தை ஆலாபரணம் பண்ணி ஒரு கிழமை முழுவதும் பாடுவார். சாப்பாட்டுக்கும் நித்திரைக்கும் மாத்திரம்தான் சற்று இடைநிiறுத்துவார்.
அப்படிப்பட்ட மனிதரை அப்படியே இருக்க விட்டுவிட வேண்டும். ஆனால் வீண் பெருமை பிடித்தவர்கள் அதற்குச் சம்மதிக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவரை அவருடைய உறைவிடத்திலிருந்து கிளப்பி வந்து கெடுப்பதில் அவர்களுக்கொரு தனி இன்பம். எனது சிநேகிதன் பால்ராமும் அந்த மாதிரியான ஓர் ஆள்தான். அவன் ஒரு பிரபலமான தொழிலதிபர். வணிகக் கூடத் தலைவன். இன்னும் பற்பல பதவிகள். பொதுவாக அவன் பகட்டு வாழ்க்கைதான் நடத்தி வந்தான். அதோடு சேர்த்து அவன் மகளுடைய கலியாணமும் வந்து சேர்ந்தது. வெளியூர்த்  தொழிலதிபர் ஒருவரின் மகன்தான் மாப்பிள்ளை. கலியாணம் ஒரு மாதத்தில் நடக்க இருந்தது. பால்ராம் ஏதாவது சிறப்பாகச் செய்து-ஏன்? எல்லாவற்றையுமே சிறப்பாகச் செய்து கலியாணத்தைச் சிறப்பிக்க விரும்பினான். பகட்டுடை தரித்த மேள தாளகாரர்கள். உபசரிப்பின்போது தம்பதிகள் அமர்வதற்கு மல்லிகை மலரிழை, மினுங்கும் மணியிழை இலங்கும் மஞ்ச விமானம். அதனைச் சுற்றி விமானிகள் போல் உடுத்துப் படுத்து நிற்கும் பணிவிடையாளர்கள். போதாக் குறைக்கு உபசரிப்பின்போது சரவண பாகவதரைக் கொண்டு வந்து பாடுவிக்கும் யோசனையும் அவனுக்குப் பிறந்தது. அவருடைய சங்கீதத்தின் மீது அவனுக்கிருந்த காதலினால் அந்த யோசனை உதிக்கவில்லை. வேறெவரும் வித்துவானை வெளியே கிளப்புவதில் வெற்றி காணவில்லை என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். அதனால்தான் அவன் அவரை ஏற்படுத்த விரும்பினான். எனக்குப் பெரியவருடன் மிகுந்த சிநேகிதம் இருப்பது அவனுக்குத் தெரியும். அதனால் அவரை எப்படியாவது ஒழுங்குசெய்து தரும்படி என்னிடம் ஒரே அடியாகச் சொல்லிவிட்டான்: 'சரோஜாவின் கலியாண வீட்டில் வேறெவருமல்ல, சரவண பாகவதர் பாட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. சரோஜா அதனை வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பெருமைப்படுவாள். அவள் விரும்பினால், அவளுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுக்க அவரை ஏற்படுத்தவும் நான் தயார். அவர் வாசிக்கும் வாத்தியத்தையும் நானே வாங்கித் தருகிறேன். அது என்ன வாத்தியம்' என்று கேட்டான்.
         'அவர் வாத்தியம் வாசிப்பவரல்ல, பாட்டுப் பாடுபவர்' என்று சொன்னேன்.
         '' என்று இலேசாகவும் சற்று ஏமாற்றத்துடனும் சொல்லிவிட்டு, 'போகட்டும், அவர் சரோஜாவுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கட்டும்' என்றான். சற்று யோசித்துவிட்டு 'சரி, அதெல்லாம் பிறகு. இப்போ என்ன
விலை பேசி என்றாலும் அவரைக் கலியாண வீட்டுக்குப் பிடித்துக் கொண்டுவா' என்று என்னைப் பிடித்துக் கொண்டான். பெரியவரைக் கலியாண வீட்டுக்கு வந்து பாடத் தூண்டுவதில் சிரமப்பட நேருமே என்று பயந்த எனக்கு ஓர் அதிஷ;டம் காத்திருந்தது. எதிர்பாராத விதமாக எனது முயற்சி இலகுவில் கைகூடும் வாய்ப்புக் கிட்டியது. நான் அவரைச் சந்தித்தபோது ஓர் ஈடு சம்பந்தமாக வட்டி கண்ட வேண்டிய பிரச்சனையைச் சமாளிப்பதில் அவர் ஈடுபட்டிருந்ததைக் கண்டேன். அவருக்கு அவசரமாக ஆயிரம் ரூபா சொச்சம் தேவைப்பட்டது. பால்ராமின் வீட்டில் பாடுவதற்கு நானூறு ரூபா தரலாம் என்றும், அதன் மூலம் வட்டியில் ஒரு பகுதியைக் கட்டலாம் என்றும் சொன்னவுடன் பெரியவர் பெரிதும் மகிழ்ந்து நிம்மதி அடைந்தார்.
'உபசரிப்பு பி.ப.6 மணிக்கு. முன்னொரு போதும் பொது மேடையில் பாடாத ஸ்ரீ சரவண பாகவதரின் அரியதோர் இசைக் கச்சேரி' என்று பால்ராமின் அழைப்பு பொன் எழுத்துக்களில் பறைசாற்றியது.
மஞ்ச விமானத்துக்கு எதிரே கண்ணைப் பகட்டும்அரங்கொன்று போடப்பட்டது. பெரியவர் தம்புராவைப் பற்றியபடி அரங்கில் ஏறி அமர்ந்தார். அதை எல்லாம் உவகையுடன் அவதானித்துக் கொண்டிருந்த பால்ராம் 'அவர் வாத்தியம் ஒன்றும் வாசிப்பதில்லை என்று சொன்னாய். இங்கே ஒன்று வாசிக்கிறாரே' என்றான். தம்புரா ஊமை வாத்தியம் என்பதையும், அது இசைக்கும் வாத்தியம் அல்ல என்பதையும் சாடை மாடையாக அவனுக்கு விளங்கப்படுத்தினேன். 
மாடம் நிரம்பி வழிந்தது. பெரியவர் சனத்தைச் சற்றும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மெய்மறந்து, கண்களை இறுக மூடி, தனது குரல் பக்க வாத்தியங்களின் ஒலியோடு ஒத்துப் போகிறதா என்பதை அறிவதற்காகக் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக ஒரே தொனியை மீட்டினார். கூரைச் சலாகைகளை ஒட்டிப் பறக்கும் வண்டுகள் ரீங்காரம் செய்வது போல், மூடிய கண்களுடன் இருந்த அவருடைய வாயிலிருந்து அவர் குரல் ஓயாது, ஒழியாது ஒலித்துக் கொண்டிருந்தது. அப்புறம் கண்களைத் திறந்து சுற்றிவரப் பார்த்துவிட்டு, மூன்று சுரங்களில் சா...பா...சா... பாடினார். ஒன்று பாடக் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் பிடித்தன. பால்ராமுக்கோ எல்லாமே ஒன்றுதான். அவன் மேல்நாட்டுப் பாணியில், கம்பளித் துணியில் சீருடை உடுத்திருந்தான். சிறப்பு வாய்ந்த தனது விருந்தினர்களைப் பார்த்து முறுவலிப்பதிலும், அவர்;களுடைய கைகளைப் பிடித்துக் குலுக்குவதிலும், அவர்களை மஞ்ச விமானத்தருகே கொண்டுபோய்த் தனது மருமகனுடன் கை குலுக்குவிப்பதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தான்.  
சரவண பாகவதர் தனது ஆலாபனையை முடித்து, தோடி இராகம் போல் ஓர் இராகத்தில் ஒரு சுரத்தை ஆரம்பித்தபோது கிட்டத்தட்ட ஒன்பது மணி ஆகிவிட்டது. ஒரே ஒரு பாடலை-அன்று மாலை முழுவதும் பாடிய முதலாவது பாடலை-பாடி முடித்தபோது பத்து மணி ஆகிவிட்டது. வித்துவான்   மெச்சத்தக்க விதத்தில் பாடினார் என்பதில் ஐமிச்சம் இல்லை. ஆனால் வேறு நோக்கங்களுக்கு மாடம் தேவைப்பட்டது. விருந்து வழங்க ஏற்பாடாகி இருந்தது. சேட்டும், தோளில் சால்லையுமாக வந்த விருந்தினர்கள் பசியோடு காத்திருந்தார்கள். நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டவர்கள் அத்தனை பேரும் விருந்தினர் பட்டியலில் இடம் பெறவில்லை. இருந்தாலும் பாடலை நிறுத்தி, மாடத்திலிருந்து ஆட்களை அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அத்துடன் தம்பதிகள் ஏதோ ஒரு சமயச் சடங்கும் செய்ய வேண்டியிருந்தது. ஐயர்மார் மனக்கேட்டுடன் அங்குமிங்கும் நின்றார்கள். பாடலில் மெய்மறந்த ஆட்களால் மாடம் நிறைந்திருந்தது. எங்கிருக்கிறோம், ஏதிருக்கிறோம் என்ற நினைப்பே இல்லைப் போலும். சமையல்காரர்கள் பத்துப் பன்னிரண்டு பேரும் பையப் பைய சமையல்கூடத்தை விட்டு வெளியே வந்து, சனத்தை அண்டி, கடுகடுத்த முகத்துடன் சிடுசிடுத்தபடி நின்றார்கள். வீட்டு எசமான் என்னை ஓர் ஓரமாகக் கூப்பிட்டு, 'இந்தப் பாட்டை நிற்பாட்ட வேண்டும் கண்டியோ... விருந்து பிந்தினால் வெளிக்கிட்டுப் போய்விடுவதாக சமையல்காரர்கள் வெருட்டுகிறார்கள். உடனடியாக மாடத்திலிருந்து ஆட்களை அப்புறப்படுத்த வேண்டும்' என்று சொன்னான். நான் சுற்றிவரப் பார்த்தேன். சமையல்காரர்கள் கடுகடுப்பதும் சிடுசிடுப்பதும் அப்பட்டமாகத் தெரிந்தது. விருந்தினர்கள் பட்டினி கிடக்கத் தொடங்குவதும் தெரிந்தது. பெண்களும் பிள்ளைகளும் அரைத் தூக்கத்தில் வாடினார்கள். எசமானும் எடுபிடிகளும் பல்லை இறுக்கிக் கடித்துக்கொண்டு ஓடுப்பட்டுத் திரி;ந்தார்கள். பாகவதரோ பரவசத்துடன் பாடிக் கொண்டிருந்தார். சனம் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தது.       
படுசாமம் நெருங்கிக் கொண்டிருந்தது. எசமானின் கடுகடுப்பு கூடிவிட்டது. இருந்தாலும் அவன் பரபரப்பை உண்டாக்கத் தயங்கினான். நான் தருணம் பார்த்து, அரங்கின் மேலே தவழ்ந்து போய், பாகவதரின் பின்னால் இருந்து, அவர் மூச்செடுக்க நின்ற போது, 'இப்போ நீங்கள் மங்களம் பாடலாம் என்று நினைக்கிறேன்' என்று குசுகுசுத்தேன். அவரோ என்னைக் கண்களால் சுட்டெரித்துவிட்டு, ஒரு தடவை தொண்டையைச் செருமிவிட்டு, கல்யாணி இராகத்தில் சற்றுப் பெருத்ததோர் ஆலாபனையை ஆரம்பித்துவிட்டார்.
நான் பீதி அடைந்தேன். அது வித்துவானுக்குப் பிடித்த இராகம். அதை அவர் ஒரு கிழமை முழுவதும் பாடக்கூடும். அதற்கிடையில் சாப்பிட வந்தவர்கள் எல்லோரும் சாகக்கூடும். போதாக் குறைக்கு மாப்பிள்ளையோ ஓர் அசாதாரண இசைப் பிரியர். இசை முடியும்வரை அவர் அசையப் போவதில்லை. மாப்பிள்ளை அப்படிப்பட்டவராக இல்லாவிட்டால், பாகவதரை ஏன் நாயே என்றும் கேட்காமல், ஐயர்மாரைக் கொண்டு மந்திரத்தை உரத்து உச்சரிப்பித்து, பந்தி வைப்பவர்களைக் கொண்டு கிடைத்த இடங்களில் எல்லாம் இலையைப் போடுவித்து, பாட்டை நிற்பாட்டுவது வெகு சுலபம். ஆனால் இந்த விஷயத்தில் வெகு கவனமாக அலுவல் பார்த்து, பாட்டு தன்பாட்டில் நின்றதாகக் காட்ட வேண்டியிருந்தது. பக்கவாத்திய காரர்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது. வயலின்காரர் வலுவிழந்த நிலையில் நரம்புகளை வெறுமனே வருடிக் கொண்டிருந்தார். மத்தளகாரரின் விரல்களிலிருந்து இரத்தம் பீறிடத் தொடங்கியது. அவர்களுடைய தோள்மூட்டுகள் துஞ்சிவிட்டன. முகங்கள் வதங்கிவிட்டன.     
நிலைவரம் நம்பிக்கை தருவதாகத் தெரியவில்லை. எசமான் மாப்பிள்ளையின் இருக்கைக்குப் பின்னாலிருந்து (அவரை எழுப்பும் சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கிறானோ என்று நினைக்கத்தக்க நிலையில் நின்றுகொண்டு) எனக்குச் சாடை காட்டினான். தனது விரல்களினால் ஒன்றும் இரண்டு சுழிகளும் காட்டிக் கையை உயர்த்தினான். எனக்கு விளங்கிவிட்டது.  பாகவதர் கல்யாணியில் அரைவாசி பாடி முடித்து, மூச்செடுக்க நின்ற சமயம் பார்த்து, 'நீங்கள் இப்போ பாட்டை நிற்பாட்டினால், அவன் உங்களுக்கு மேலதிகமாக ஐம்பது ரூபா தருவானாம்' என்று குசுகுசுத்தேன். பாகவதர் சற்று இடைநிறுத்தி, என்னைப் பார்த்து முறுவலித்தார். வென்றுவிட்டேன் என்று நினைத்தேன்.
ஆனால் சீமான் கல்யாணியைத் தொடர்ந்த இழுத்த கையோடு, சகானாவில் பாடத் தொடங்கிவிட்டார். பக்கவாத்தியகாரர்கள் வித்துவானோடு ஒத்து வாசிப்பதாகப் பாசாங்கு பண்ணுவதையே நிறுத்திவிட்டு, வாத்தியங்களை அரவணைத்தபடி, எங்கெங்கோ பார்த்து வெறித்துக் கொண்டிருந்;தார்கள்.
பால்ராம் வெந்நீர் ஊற்றுண்ட நாயைப் போல மாடம் எங்கும் ஓடித் தரிந்தான். மருமகனுடைய இசை ஆர்வம் பால்ராமைத் தடுத்திராவிட்டால், அவன் வித்துவானுக்கு வாய்ப்பூட்டுப் போட்டு, அவரை வெளியே தூக்கி எறிந்திருப்பான். இதற்கிடையே பாகவதரின் பின்னாடி குந்தியிருந்த என்னை அவன் தவிப்போடு பார்த்து இன்னொரு சைகை காட்டினான். சகானா முடிய முன்னதாகவே பெரியவரின் கட்டணம் ஐநூறு ரூபாவாக உயர்த்தப்பட்டுவிட்டது.  பெரியவர் உதட்டைக் கடித்து முறுவலித்து, என்மீது ஒரு நரிப் பார்வையை வீசினார். அவர் ஒரு கூலிப் பாடகர் என்பது எனக்கு முன்னரே தெரியாது. எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறப்பதற்காக அவர் பாடுபடுவது அப்பட்டமாகவே தெரிந்தது. அவர் இடைவிடாது பாடினார் - ஒன்று முடித்த கையோடு இன்னொன்றாக - இடையே குறுக்கிட்டு ஒரு சொல்லும் சொல்ல இடம் கொடாது பாடினார். அவருக்குப் பின்னால் இருந்த என்னை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
ஆனால் என்னை எவரும் எளிதில் தோற்கடிக்கப் போவதில்லை: 'ஐநூறு...ஐநூற்றி ஐம்பது...ஐநூற்றி எழுபத்தைந்து...அறுநூறு...' என்று அடிக்கடி பாகவதரின் பின்னாடி குசுகுசுத்தபடி இருந்தேன்.
'அந்த ஈட்டுச் சங்கதி பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப்படத் தேவையில்லை. அதை யோசித்துப் பாருங்கள்! அதை எண்ணிப் பாருங்கள்! அதிலிருந்து நீங்கள் முழுக்க முழுக்க விடுபடலாம்' என்று இடைக்கிடை அருட்டினேன். அது அவருடைய பாட்டோடு
பாட்டாகத் தணிந்த குரலில் நான் செய்த சமகால வர்ணனை. கட்டணம் எண்ணூற்றி ஐம்பது ரூபாவாக உயர்ந்ததும் அவர் இடைமறித்து 'அந்த ஈட்டுத் தொகை திட்டவட்டமாக எவ்வளவு-உனக்கு நினைவிருக்கிறதா?' என்று தணிந்த குரலில் என்னைக் கேட்டார்.
         'ஆயிரத்தி இருநூறு.'
         'அதைக் கடடினால் என்னை என் பாட்டில் இருக்க விட்டுவிடுவார்களா?'
        'ஆமாம், கன காலத்துக்கு...'
        'அதையிட்டு என்னைக் கட்டியவள் மேற்கொண்டு என்னைத் தொந்தரவு செய்யமாட்டாள் என்பதற்கு நீ உத்தரவாதம் தருவாயா?'
        'ஆமாம்.'
        'அப்படி என்றால் இதை ஆயிரத்தி இருநூறு ஆக்கு. இந்தக் கணமே மங்களம் பாடுகிறேன்.'
        'ஓ! உது எக்கச்சக்கமான தொகை, மும்மடங்கு தொகை...'  
        'எக்கச்சக்கமோ? நான் அப்படி நினைக்கவில்லை. சங்கீதம் என்ன கடைச் சரக்கா? கடையில் விலைக்கு வாங்கும் புளியா? நீ அப்படித்தான் நினைக்கிறாய். அப்படி என்றால் நான் ஏன் என்னால் முடிந்தவரை உன்னுடன் பேரம் பேசக் கூடாது?'
சீமான் அப்படி முழங்கிவிட்டு, தொண்டையைச் செருமிப்போட்டு, யெதுகுல காம்போதியில் சின்னதோர் ஆலாபனையை ஆரம்பித்துவிட்டார். மாப்பிள்ளை உட்படப் பாகவதரின் இரசிகர்கள் எல்லோரும் தங்களை மறந்து சாய்ந்தாடத் தொடங்கி விட்டார்கள். நடப்பதைப் பால்ராமுக்கு அறிவிப்பதற்காக அரங்கிலிருந்து குதித்து உள்ளுக்கு ஓடினேன். 'அவர் சாகும்வரை பாடட்டும். மேற்கொண்டு ஒரு தம்பிடி கூடத் தரமாட்டேன்' என்று பற்கள் நறநறக்கக் கத்தினான்.
        'நெருப்புப் பிடித்துவிட்டது! நெருப்புப் பிடித்துவிட்டது! என்று கத்தட்டா, அல்லது அப்படி ஏதாவது செய்யட்டா?' என்று கேட்டேன்.
        அதை யோசித்துப் பார்த்துவிட்டு, 'வேண்டாம். அது அபசகுனமாகிவிடும்' என்று சொன்னான்.
  அதிகாலை இரண்டு மணி அளவில் பாகவதரின் கட்டணம் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டுவிட்டது.
        'ஆயிரத்தி இருநூறு ரூபாவுக்குக் குறையக்கூடாது. இந்தக் கணமே நிறுத்துகிறேன்' என்று பாகவதர் அழுங்குப் பிடியாக நின்றார். கிட்டத்தட்ட அரை மணித்தியாலம் கழித்து, பாகவதர் காபி இராகத்தில் வெகு நேர்த்தியாகப் பாடிக் கொண்டிருந்தபோது, நான் பால்ராமுடன் பேசித் தீர்த்து, அவர் கேட்ட தொகையைக் கொடுக்கச் சம்மதித்தேன்.
        'இனி நீங்கள் நிற்பாட்டலாம்' என்றேன்.
        'எங்கே காசு?' என்றுகேட்டார்.
        'சரி, சரி, அதெல்லாம் கடைசியாக உரிய மரியாதையோடு தாம்பாளத்தில் வைத்துத் தருவான்' என்று  தொடங்கினேன்.
        'தேவையில்லை' என்றார். இந்தக் கதை எல்லாம் பாட்டோடு பாட்டாகவே தணிந்த குரலில் பேசப்பட்டது. அது மட்டுமா? அவ்வளவு கண்களும் பார்த்திருக்க, அவர்களுக்குப் புரியாமல், தான் பாடிய இராகத்திலேயே அவர் பல வார்த்தைகளை உதிர்த்தார். எனக்கோ அவர் பின்னாடி இருந்து உரிய மரியாதையோடு அவர் கழுத்தைப் பிடித்துத் திருக வேண்டும் போல் இருந்தது. காசு கட்டத் தாமதித்தால் கட்டணம் மேலும் உயர்ந்துவிடலாம், பக்கவாத்தியகாரர்களும் குறிப்பறிந்து காசு கூடக் கேட்டு அடம் பிடிக்கலாம் என்று அஞ்சி, ஒரே ஓட்டமாக ஓடிப் போய்க் காசை வாங்கிக் கொண்டு வந்தேன். பாகவதர் அஷ்டபதியில் கண்ணன் வாழ்வின் மகிமையைப் பாடிக்கொண்டிருக்க, பன்னிரண்டு நூறு ரூபா தாள்களை எண்ணி அவர் மடியில் வைத்தேன்.     
அதற்குப் பிறகு பால்ராம் சங்கீதத்தை அண்டியதே கிடையாது. 'உண்மைதான். அதெல்லாம் எங்களைப் போலத் தொழில் துறையாட்களுக்குச் சரிவராது. எங்களுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. சங்கீதத்தோடு நாங்கள் சருவக்கூடாது. சங்கீத சபைக் காரியதரிசிகள் இந்த அலுவலை எப்படித்தான் சமாளிக்கிறார்களோ! நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. அது கடினமான அலுவலாகத்தான் இருக்க வேண்டும்' என்று எப்போ பார்த்தாலும் சொல்லிக் கொண்டிருப்பான்.
R. K. Narayan, Musical Commerce, தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment