நெல்சன் மன்டேலா
இங்கே குற்றஞ்சாட்டப்பட்ட முதலாவது ஆள் நானே. நான் ஓர் இளங்கலைப் பட்டதாரி. பல ஆண்டுகளாக யொகனஸ்பேர்க்கில் ஒலிவர் தம்போவுடன் கூடி சட்டவாளராக நான் தொழில்புரிந்தேன். அனுமதிச்சீட்டின்றி வெளிநாடு சென்றதற்காகவும், 1961 வைகாசி மாத இறுதியில் வேலைநிறுத்தம் செய்ய மக்களைத் தூண்டியதற்காகவும் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாகி, ஐந்தாண்டுச் சிறைவாசம் அனுபவிக்கும் கைதி நான்.
வெளிநாட்டவர்களின் அல்லது பொதுவுடைமைவாதிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டே தென் ஆபிரிக்காவில் போராட்டம் நடக்கிறது என்ற ஊகம் முற்றிலும் தவறு என்பதை முதலில் நான் கூறிவைக்க விரும்புகிறேன். தென் ஆபிரிக்காவில் நான் ஈட்டிய பட்டறிவின் காரணமாகவும், நான் உணர்ந்து பெருமைப்படும் வண்ணம் அமைந்த எனது சொந்த ஆபிரிக்க பின்னணியின் காரணமாகவுமே, நான் எதைச் செய்தேனோ அதைச் செய்தேன். வெளிநாட்டவர் எவரும் கூறியிருக்கக்கூடிய எதற்காகவும் நான் அதைச் செய்யவில்லை.
திரான்ஸ்கேய் புலத்தில், என் இளமைப் பராயத்தில், எனது குலத்து மூப்பர்கள் சொல்லிய பழங்கதைகளை நான் செவிமடுத்தேன். எமது முன்னோர் எமது தாயகம் காக்கப் போர்புரிந்த கதைகளையும் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். தினகேன், பம்படா, இன்சா, மகானா, சுகுந்தி, தலசைல், மெசெசோ, செக்குக்குனி ஆகிய பெயர்கள் முழு ஆபிரிக்க தேசத்தின் புகழையும் பறைசாற்றும் பெயர்களாக ஏற்றிப்போற்றப்பட்டன. எனது மக்களுக்குப் பணியாற்றவும், அவர்களுடைய சுதந்திரப் போராட்டத்துக்குப் பணிவுடன் தொண்டாற்றவும் அத்தகைய வாழ்வு எனக்கு வாய்ப்பளிக்கும் என்று நான் நம்பினேன்.
இதுவரை இந்த நீதிமன்றிடம் தெரிவிக்கப்பட்ட சங்கதிகள் சில உண்மையானவை, சில உண்மையானவை அல்ல. எனினும் நாசவேலைக்கு நான் திட்டமிட்டேன் என்பதை நான் மறுக்கவில்லை. தறிகெட்ட தனமாகவோ, வன்முறையை மோகித்தோ நான் அதைத் திட்டமிடவில்லை. பல ஆண்டுகளாக எனது மக்கள் வெள்ளையரின் கொடுங்கோன்மைக்கும், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்ட பின்னர் எழுந்த அரசியல் நிலைவரத்தை அமைதியாகவும் நிதானமாகவும் கணிப்பிட்ட பின்னரே அதை நான் திட்டமிட்டேன்.
"தேசத்தின் ஈட்டி" இயக்கத்தை அமைக்க உழைத்தோருள் நானும் ஒருவன் என்பதை உடனடியாகவே ஒப்புக்கொள்கிறேன். அந்த இயக்கத்தின் கொள்கைக்கு அப்பாற்பட்ட செயல்கள் பலவும் இடம்பெற்றமை தெளிவு. எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் அவையும் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அந்த இயக்கமே பொறுப்பு என்பதை நான் மறுக்கிறேன். வெள்ளையரின் மேலாதிக்க நெறிக்கு எதிரான தமது போராட்டத்தில் ஆபிரிக்க மக்கள் வன்முறையின்றி வெல்லவழியில்லை என்பதை மேற்படி இயக்கத்தை அமைத்த நானும் பிறரும் உணர்ந்து கொண்டோம். வெள்ளையரின் மேலாதிக்க நெறிக்கு சட்டபூர்வமாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வழிகள் அனைத்தும் சட்டங்களைக் கொண்டே அடைக்கப்பட்டன. ஒன்றில் நிரந்தர தாழ்ச்சியை ஏற்கவேண்டிய அல்லது அரசாங்கத்தை எதிர்க்கவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். ஆகவே சட்டத்தை மீற நாம் முடிவெடுத்தோம்.
முதலில் நாம் வன்முறையில் இறங்கும் வழியைத் தவிர்த்தே சட்டத்தை மீறினோம். அந்த வழியை அடைத்து சட்டம் இயற்றப்பட்ட பின்னரே, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு கிளம்பிய எதிர்ப்பை அது பலவந்தமாக அடக்குவதற்கு முற்பட்ட பின்னரே, வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ள நாம் முடிவெடுத்தோம்.
ஆபிரிக்க மக்களின் உரிமைகள் பாரதூரமான முறையில் மீறப்பட்டு வந்தன. அவற்றைக் கட்டிக்காப்பதற்காக 1912ல் ஆபிரிக்க தேசிய பேரவை (ANC) அமைக்கப்பட்டது. 1949 வரை 37 ஆண்டுகளாக அரசியல்யாப்பு வாரியான போராட்டத்தை மிகவும் கண்டிப்பான முறையில் அது மேற்கொண்டது. ஆனால் வெள்ளையரின் அரசாங்கங்கள் நெகிழ்ந்து கொடுக்கவில்லை. ஆபிரிக்க மக்களின் உரிமைகள் பெருகுவதற்குப் பதிலாக அருகி வந்தன. 1949ம் ஆண்டின் பின்னரும் கூட ஆபிரிக்க தேசிய பேரவை வன்முறையைத் தவிர்க்கவே உறுதிபூண்டது. அதேவேளை இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக அமைதியான முறையில் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவும் முடிவெடுக்கப்பட்டது. 8,500க்கு மேற்பட்டோர் சிறை சென்றார்கள். எனினும் ஒரு வன்செயல் கூட இடம்பெறவில்லை. ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடுசெய்ததற்காக நானும் 19 சகபாடிகளும் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டோம். ஆனால் நாங்கள் என்றென்றும் கட்டுப்பாட்டையும் அகிம்சையையும் வலியுறுத்தி வந்தோம் என்று நீதிபதி கருதியபடியால், எமது தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
எமது எதிர்ப்பியக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டமும், குற்றவியல் திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டன. அவை சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களைக் குறித்து கடூரமான தண்டனை விதிக்க வகைசெய்தன. அதையும் மீறி எமது ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. அதேவேளை ஆபிரிக்க தேசிய பேரவை அதன் அகிம்சைக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது. எனினும் 1956ல் நான் உட்பட பேரவைக் கூட்டமைப்பின் தலைமை உறுப்பினர்கள் 156 பேர் கைதுசெய்யப்பட்டோம். ஆபிரிக்க தேசிய பேரவையின் அகிம்சைக் கொள்கையை அரசாங்கம் சர்ச்சைக்கு உள்ளாக்கியது. ஆனால் எமது பேரவையிடம் வன்முறைக் கொள்கை கிடையாது என்று ஆறு ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1960ம் ஆண்டு சார்ப்வில் நகரில் நிகழ்ந்த துவக்குச்சூட்டை அடுத்து எமது பேரவை ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டது. நானும் எனது சகபாடிகளும் நிலைமையைக் கவனமாக ஆராய்ந்த பின்னர் மேற்படி ஆணைக்குப் பணிவதில்லை என்று முடிவெடுத்தோம். ஆபிரிக்க மக்கள் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை. தம்மைக் கட்டியாளும் சட்டங்களை அவர்கள் இயற்றவில்லை. "மக்களின் விருப்பே ஆட்சியதிகாரத்தின் அடிப்படையாக வேண்டும்" என்ற உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின் கூற்றில் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. மேற்படி தடையாணையை நாம் ஏற்றுக்கொள்வது, ஆபிரிக்க மக்களுக்கு என்றென்றும் வாய்ப்பூட்டுப் போடுவதை நாம் ஏற்றுக்கொள்வதற்கு நிகராகும். ஆதலால் ஆபிரிக்க தேசிய பேரவை குலைய மறுத்து, தலைமறைவாகியது.
1960ல் அரசாங்கம் ஓர் ஒப்பங்கோடலை நடத்தியது. இங்கு குடியரசு அமைக்கப்பட அது வழிவகுத்தது. மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினராகிய ஆபிரிக்க மக்களுக்கு அதில் வாக்களிக்கும் உரித்து இருக்கவில்லை. அவர்களுடன் கலந்துசாவப்படவே இல்லை. குடியரசுப் பிரகடனம் நிகழும் அதேவேளயில் நாடளாவிய முறையில் "வீட்டில் முடங்கல்" போராட்டத்தை ஒழுங்குசெய்யும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். ஆபிரிக்க மக்களின் வேலைநிறுத்தங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்பதால், மேற்படி வேலைநிறுத்தத்தை ஒழுங்குசெய்பவர் கைதுசெய்யப்படுவதை தவிர்க்க வேண்டியிருந்தது. கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்காக எனது வீட்டையும், குடும்பத்தையும், தொழிலையும் துறந்து நான் தலைமறைவாக நேர்ந்தது. "வீட்டில் முடங்கல்" போராட்டம் ஓர் அமைதி ஆர்ப்பாட்டமாகவே ஒழுங்குசெய்யப்பட்டது. வன்முறை எதிலும் இறங்குவதை தவிர்க்கும் பொருட்டு அவதானமாக அறிவுறுத்துரைகள் விடுக்கப்பட்டன.
அரசாங்கத்தின் பதில்நடவடிக்கை எனும்படியாக மேலும் கடூரமான புதிய சட்டங்கள் புகுத்தப்பட்டு, அரசின் ஆயுதப் படைகள் அணிதிரட்டப்பட்டு, மக்களை அச்சுறுத்தும் நோக்குடன் "சரசன்" கவசப்படை ஊர்திகளும், படைகளும் எமது நகர்ப்புறங்களுக்கு அனுப்பப்பட்டு, பாரிய படைபலம் காட்டப்பட்டது. படைபலத்தை மட்டும் கொண்டே எங்களைக் கட்டியாள அரசாங்கம் முடிவெடுத்தது. "தேசத்தின் ஈட்டி" இயக்கத்துக்கு எங்களை இட்டுச்சென்ற பாதையில் அரசாங்கத்தின் மேற்படி படைபல முடிபு ஒரு தீர்க்கமான கட்டத்தைக் குறிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் எங்கள் மக்களின் தலைவர்களாகிய நாங்கள் செய்யக்கூடியது என்ன? போராட்டத்தை தொடரவேண்டும் என்பதில் எங்களுக்கு ஐயம் ஏற்படவில்லை. வேறென்ன செய்தாலும், அறவே மண்டியிடுவதற்கு நிகராகும். போராடுவதா இல்லையா என்பதல்ல எங்கள் பிரச்சனை. போராட்டத்தை எவ்வாறு தொடர்வது என்பதே எங்கள் பிரச்சனை.
இனத்துவம் சாராத குடியாட்சி முறைமை ஒன்றையே ஆபிரிக்க தேசிய பேரவையினராகிய நாங்கள் நாடினோம். இனத்துவ இடைவெளியை மேலும் அகட்டக்கூடிய நடவடிக்கை எதையும் நாங்கள் தவிர்த்து வந்தோம். எனினும் ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் கடைப்பிடித்த அகிம்சைக் கொள்கையால் ஆபிரிக்க மக்களுக்கு எதுவித பயனும் கிடைக்கவில்லை. அவர்களை அடக்கி ஒடுக்கும் சட்டங்கள் பல்கிப் பெருகின. அவர்களின் உரிமைகள் குன்றிக் குறுகின. இவை திட்டவட்டமான உண்மைகள். தென் ஆபிரிக்க அரசியல் வானில் வன்முறை ஓங்கிய காலம் அது. அதுவே உண்மை.
1957ம் ஆண்டு சீரஸ்ட் நகர்வாழ் பெண்கள் அனுமதிசீட்டு வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டபொழுது வன்முறை மூண்டது. 1958ம் ஆண்டு செக்குகுனலந்தில் மந்தைக் களைவு நடைமுறைப்படுத்தப்பட்ட பொழுது வன்முறை மூண்டது. 1959ம் ஆண்டு கேற்றோ பண்ணை வாசிகள் திடீர் அனுமதிச்சீட்டுப் பரிசோதனையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தபொழுது வன்முறை மூண்டது. 1960ல் அரசாங்கம் பொந்தோலந்து மீது சுதேச அதிகாரச் சட்டத்தை திணிக்க முயன்றபொழுது வன்முறை மூண்டது. வன்முறை மட்டுமே கைகொடுக்கும் என்ற எண்ணம் ஆபிரிக்க மக்களிடையே தவிர்க்கவியலாவாறு வலுப்பெற்றதை ஒவ்வொரு குழப்பமும் உணர்த்தியது. தனது ஆட்சியை நிலைநிறுத்தப் பலவந்தம் கையாளும் அரசாங்கம், தன்னால் அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் தன்னை எதிர்க்கப் பலவந்தம் கையாளக் கற்பிக்கும் அரசாங்கமே.
இந்த நாட்டில் வன்முறையைத் தவிர்க்கவியலாது; ஆகவே அமைதிகாத்து அகிம்சை பேணும் போதனையைத் தொடர்வது மெய்நிலைக்கு ஒவ்வாது என்ற முடிபுக்கு நான் வந்தேன். அது எளிதில் எடுத்த முடிபல்ல. ஏனைய முறைகள் எல்லாம் தோல்வியடைந்த பின்னரே, எமது அமைதி ஆர்ப்பாட்ட வழிகள் எல்லாம் அடைக்கப்பட்ட பின்னரே வன்முறை அரசியற் போராட்டத்தில் இறங்கும் முடிபு எடுக்கப்பட்டது. நான் என்ன செய்தேனோ அதைச் செய்யவேண்டிய அறக்கடப்பாட்டை நான் உணர்ந்து செயற்பட்டேன் என்று மட்டுமே என்னால் கூறமுடியும்.
நால்வகை வன்முறைக்கு வாய்ப்பிருந்தது: நாசவேலை, கரந்தடிப் போரியல், பயங்கரவாதம், வெளிப்படையான புரட்சி. நாங்கள் நாசவேலையைத் தேர்ந்தெடுத்தோம். நாசவேலையில் உயிரிழப்பு நேராது. எதிர்கால இன உறவுக்கு அது ஆகக்கூடிய நம்பிக்கை அளிப்பதாய் அமைந்தது. நாசவேலையால் ஆகக்குறைந்த மனக்கசப்பே ஏற்படும். இந்தக் கொள்கை பயனளித்தால், குடியாட்சி அரசாங்கம் அமைவது மெய்யாகக் கூடும். எமது நாட்டின் அரசியல், பொருளாதார நிலைவரத்தை கருத்தூன்றி ஆராய்ந்த பின்னரே எமது தொடக்கத் திட்டத்தை தீட்டினோம். தென் ஆபிரிக்கா வெளிநாட்டு மூலதனத்தில் பெரிதும் தங்கியிருந்ததாக நாங்கள் நம்பினோம். மின் உலைகளைத் திட்டமிட்டு அழிப்பதன் மூலமும், தொடருந்துப் போக்குவரத்து, தொலைத்தொடர்புகளைக் குழப்புவதன் மூலமும் வெளிநாட்டு மூலதனத்தை விரட்டியடிக்கலாம் என்றும், அதன் மூலம் இந்த நாட்டின் வாக்காளர்களுக்கு தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனைசெய்ய நிர்ப்பந்தம் கொடுக்கலாம் என்றும் எண்ணினோம். 1961 திசம்பர் 16ம் திகதி "தேசத்தின் ஈட்டி" இயக்கம் அதன் முதல் நடவடிக்கையாக யொகனஸ்பேர்க், போர்ட் எலிசபெத், தர்பன் நகரங்களில் அரசாங்க கட்டிடங்களைத் தாக்கியது. தெரிவுசெய்யப்பட்ட இலக்குகள் எமது கொள்கைக்குச் சான்று பகர்கின்றன. நாங்கள் ஆட்களைத் தாக்க எண்ணியிருந்தால், வெறும் கட்டிடங்களையும் மின் உலைகளையும் விடுத்து மக்கள் திரளும் இடங்களுக்கே இலக்கு வைத்திருப்போம்.
ஆபிரிக்க மக்களோ மாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்குடனேயே பதில்நடவடிக்கை எடுத்தார்கள். மாற்றம் ஏற்படும் என்பதில் மீண்டும் எமக்கு திடீர் நம்பிக்கை ஏற்பட்டது. சுதந்திரம் வந்தடையும் வேகத்தை மக்கள் ஊகிக்கத் தொடங்கினார்கள். வெள்ளையரோ எமது கோரிக்கையைக் கருத்தில் கொண்டு மாற்றத்தை நாடிப் பதில்நடவடிக்கை எடுக்கத் தவறினர். விடாப்பிடியை நாடியே அவர்கள் பதில்நடவடிக்கை எடுத்தார்கள்.
வெள்ளையரின் பதில்நடவடிக்கையை "தேசத்தின் ஈட்டி" இயக்கத்தவர்களாகிய நாங்கள் உள்ளப்பதைப்புடன் எடைபோட்டுப் பார்த்தோம். வெள்ளையருக்கும் கருப்பருக்கும் இடையே வரம்புகள் இடப்பட்டு வந்தன. இரு தரப்புகளும் வெவ்வேறு முகாங்களுக்கு நகர்ந்தன. ஓர் உள்நாட்டுப் போரைத் தவிர்க்கும் வாய்ப்புகள் குன்றிக்குறுகின. நாசவேலைக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்ற அறிக்கைகள் வெள்ளையரின் செய்தித்தாள்களில் வெளிவந்தன. அப்படி என்றால், ஆபிரிக்க மக்களை பயங்கரவாதத்தில் ஈடுபடாவாறு எப்படி எங்களால் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்க முடியும்?
படைபலத்துக்கு ஈடுகொடுத்து எங்களைப் பாதுகாக்க நாங்களும் படைபலம் பயன்படுத்த ஆயத்தம் செய்வது எங்கள் கடமை என்று நாங்கள் உணர்ந்து கொண்டோம். ஆதலால் கரந்தடிப் போராட்ட வாய்ப்புக்கு ஏற்பாடுசெய்ய முடிவெடுத்தோம். வெள்ளையர் அனைவருக்கும் கட்டாய படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் அத்தகைய பயிற்சி ஆபிரிக்கருக்கு அளிக்கப்படவில்லை. கரந்தடிப் போராட்டம் தொடங்கினால், அதற்குத் தலைமை தாங்குவதற்கு வேண்டிய பயிற்சிபெற்ற ஆட்களைக் கொண்ட அணி ஒன்றை உருவாக்குவது அத்தியாவசியம் என்று நாங்கள் கருதினோம்.
அந்தக் கட்டத்தில் 1962ம் ஆண்டு அடிஸ் அபாபாவில் நடக்கவிருந்த அகில ஆபிரிக்க சுதந்திர இயக்க மாநாட்டில் நான் கலந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அந்த மாநாட்டின் பின்னர், போர்வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் ஆபிரிக்க நாடுகளைச் சுற்றிவந்தேன். எனது சுற்றுப்பயணம் வெற்றிபெற்றது. நான் சென்ற இடமெல்லாம் எமது குறிக்கோளுக்குப் பரிவும், உதவி குறித்த வாக்குறுதிகளும் கிடைத்தன. தென் ஆபிரிக்க வெள்ளையரின் நிலைப்பாட்டுக்கு எதிராக ஆபிரிக்க கண்டம் முழுவதும் ஒன்றுபட்டிருந்தது. இலண்டனில் கூட திரு. கெயிற்ஸ்கெல், திரு. கிரிமந் போன்ற அரசியல் தலைவர்கள் மிகுந்த பரிவுடன் என்னை வரவேற்றார்கள்.
போர்ர்கலை பற்றியும், புரட்சி பற்றியும் நான் ஆய்விடத் தொடங்கினேன். வெளிநாட்டுப் பயணத்தின்பொழுது ஒரு படைப்பயிற்சி நெறிக்கும் உள்ளானேன். கரந்தடிப் போராட்டம் இடம்பெற்றால், நானும் எனது மக்களுடன் சேர்ந்து போராடி, போரின் இடர்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.
நான் இங்கு திரும்பி வந்தபொழுது, நாசவேலைக்கு மரணதண்டனை விதிக்கப்படும் ஆபத்து மெய்யாகியது. மற்றும்படி அரசியல் வானில் மாற்றம் தென்படவில்லை.
ஆபிரிக்க தேசிய பேரவை, பொதுவுடைமைக் கட்சி இரண்டினதும் நோக்கங்களும், குறிக்கோள்களும் ஒன்றே என்ற குற்றச்சாட்டையும் அரசாங்கம் சுமத்தியுள்ளது. ஆபிரிக்க தேசிய பேரவையின் நெறி என்பது என்றென்றும் ஆபிரிக்க தேசிய நெறியாகவே இருக்கின்றது, இருந்து வந்துள்ளது. "வெள்ளையனைக் கடலுக்குள் விரட்டியடியுங்கள்!" என்ற முழக்கத்தில் எடுத்துரைக்கப்படுவது ஆபிரிக்க தேசியக் கருத்தீடு அல்ல. ஆபிரிக்க தேசிய பேரவை ஆதரிக்கும் ஆபிரிக்க தேசியம் என்பது ஆபிரிக்க மக்கள் தமது சொந்த நாட்டில் சுதந்திரமும், மனநிறைவும் துய்ப்பதுடன் கூடிய கருத்தீடாகும். ஆபிரிக்க தேசிய பேரவை ஏற்றுக்கொண்ட மிகமுக்கிய அரசியல் ஆவணம் "சுதந்திர சாசனம்" எனப்படும். ஒரு சமூகவுடைமை அரசுக்கு அடிகோலும் திட்டம் அதில் எள்ள்ளவும் இல்லை. காணியின் மீள்விநியோகத்தையே அது நாடுகிறது; காணியின் தேசியமயமாக்கத்தை அது நாடவில்லை. சுரங்கங்களும், வங்கிகளும், ஏகபோக கைத்தொழில் துறையும் தேசியமயமாக்கப்படுவதற்கு அது வகைசெய்கிறது. ஏனெனில் பெரிய ஏகபோக தொழில்துறைகள் ஓர் இனத்துக்கு மட்டுமே சொந்தமானவையாக விளங்குகின்றன. அரசியலதிகாரம் பரவலாக்கப்பட்டாலும், அத்தகைய தேசியமயமாக்கம் இடம்பெறாவிட்டால், இனத்துவ ஆதிக்கம் என்றென்றும் நிலைபெற்றுவிடும்.
பொதுவுடைமைக் கட்சியின் கொள்கையை நான் சரிவரப் புரிந்துகொண்டுள்ளேன் என்று வைத்துக்கொண்டால், அது மார்க்சிய நெறிகளை அடிப்படையாகக் கொண்ட அரசொன்றை அமைக்க முற்பட்டது என்பேன். பொதுவுடைமைக் கட்சி வர்க்க வேறுபாடுகளை வலியுறுத்த முற்பட்டது. ஆபிரிக்க தேசிய பேரவை வர்க்க வேறுபாடுகளை இயைபுபடுத்த முற்படுகிறது. இது ஒரு முக்கிய வேறுபாடு.
ஆபிரிக்க தேசிய பேரவையும், பொதுவுடைமைக் கட்சியும் அடிக்கடி நெருங்கி ஒத்துழைத்து வந்துள்ளன என்பது உண்மையே. அவை பொது இலக்குடையவை, அதாவது வெள்ளையரின் மேலாதிக்கத்தை அகற்றும் நோக்குடையவை என்பதற்கு மாத்திரமே அந்த ஒத்துழைப்பு சான்றாகும். எனினும் இரண்டின் நலன்களும் முற்றிலும் பொதுவானவை அல்ல. உலக வரலாறு அத்தகைய எடுத்துக்காட்டுகள் நிறைந்தது. பிரித்தானியா, அமெரிக்கா, சோவியத் நாடு மூன்றும் ஹிட்லருக்கு எதிராக ஒத்துழைத்தமை உள்ளத்தை மிகவும் கவர்ந்திழுக்கும் எடுத்துக்காட்டு எனலாம். அத்தகைய ஒத்துழைப்பு சேர்ச்சிலையோ, றூஸ்வெல்டையோ பொதுவுடைமைவாதிகளாக மாற்றிவிட்டது என்ற கருத்தை முன்வைக்கும் துணிச்சல் ஹிட்லரைத் தவிர வேறு யாருக்குக் கைகூடும்? இந்தக் கட்டத்தில் கோட்பாட்டு வேறுபாடு எனும் ஆடம்பரத்தில் திளைப்பது, ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவோருக்கு கட்டுபடியாகாது.
இன்னும் நான் என்ன சொல்ல வேண்டும்? தென் ஆபிரிக்காவில் பல தசாப்தங்களாக பொதுவுடைமைவாதிகளே ஆபிரிக்க மக்களை மனிதப் பிறவிகளாகவும், தமக்கு சரிநிகரானவர்களாகவும் நடத்த முன்வந்த ஒரேயொரு அரசியற் குழுமமாக விளங்கி வந்துள்ளனர்; எம்முடன் உண்ணவும், கதைக்கவும், வசிக்கவும் முன்வந்த ஒரேயொரு அரசியற் குழுமமாக விளங்கி வந்துள்ளனர். அரசியல் உரிமைகளையும், சமுதாயத்தில் ஒரு பங்கினையும் ஈட்டிக்கொள்வதில் ஆபிரிக்க மக்களுடன் சேர்ந்து பாடுபட முன்வந்த ஒரேயொரு அரசியற் குழுமமாக விளங்கி வந்துள்ளனர். ஆதலால் இன்று ஆபிரிக்க மக்கள் பலரும் சுதந்திரம் என்பது பொதுவுடைமைக்கு நிகரானது என்று நம்ப முற்பட்டுள்ளனர். குடியாட்சி அரசுக்காகவும், ஆபிரிக்க சுதந்திரத்துக்காகவும் வாதாடுவோர் அனைவருக்கும் பொதுவுடைமைவாதிகள் என்று குறிசுட்டு, பொதுவுடைமை ஒழிப்புச் சட்டத்துக்கமைய அவர்களுள் பலருக்கு (பொதுவுடைமைவாதிகள் அல்லாத பலருக்கு) தடையுத்தரவு பிறப்பிக்கும் ஒரு சட்டமன்றம் அந்த நம்பிக்கைக்கு துணைநிற்கின்றது அல்லவா! நான் என்றுமே பொதுவுடைமைக் கட்சியில் அங்கம் வகித்ததில்லை. எனினும் அதே சட்டத்துக்கமைய நான் சிறைவைக்கப்பட்டதுண்டு.
முதலாவதாக என்னை ஓர் ஆபிரிக்கப் பற்றாளனாகவே என்றென்றும் நான் கருதி வந்துள்ளேன். வர்க்கமற்ற சமுதாயக் கருத்து இன்று என்னை ஈர்த்துள்ளது. மார்க்சிய வாசிப்பால் ஓங்கிய ஈர்ப்பு அது. ஆதி ஆபிரிக்க சமுதாயங்களின் கட்டமைப்பை நான் நயந்துவப்பதும் அந்த ஈர்ப்புடன் ஓரளவு தொடர்புடையது. குலத்துக்குச் சொந்தமாகவே நிலம் இருந்தது. செல்வந்தரோ, வறியோரோ இல்லை. சுரண்டல் இல்லை. உலகின் முன்னேறிய நாடுகளில் வாழும் மக்களின் நிலையை எட்டி, தமது கடும் வறுமையை வெற்றிகொள்வதில் எங்கள் மக்களுக்குத் துணைநிற்கும் சமூகவுடைமை முறை ஒன்று தேவை என்பதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால் அதன் கருத்து, நாங்கள் மார்க்சியவாதிகள் என்பதல்ல.
மேலைத்தேய நாடாளுமன்ற முறைமை பிற்போக்கானது என்று பொதுவுடைமைவாதிகள் கருதுவதாக எனக்குப் படுகிறது. நானோ அதை நயந்துவப்பவன். மகா பட்டயம், உரிமை மனு, உரிமைச் சாசனம் என்பவற்றை உலகளாவிய குடியாட்சிவாதிகள் ஏற்றிப்போற்றுகிறார்கள். பிரித்தானிய கட்டமைப்புகளிலும், நீதி முறைமையிலும் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. பிரித்தானிய நாடாளுமன்றத்தை உலகிலேயே மிகவும் குடியாட்சிப்பண்பு வாய்ந்த கட்டமைப்பாக நான் கருதுகிறேன். பிரித்தானிய நீதித்துறையின் நடுநெறியை என்றென்றும் நான் நயந்துவக்கத் தவறவில்லை. அமெரிக்கப் பேரவை, அந்த நாட்டின் அதிகாரப் பிரிவீடு, நீதித்துறையின் சுதந்திரம் என்பனவும் என் உள்ளத்துள் அத்தகைய உணர்வுகளை எழுப்புகின்றன.
கிழக்கும் மேற்கும் எனது சிந்தனையில் தாக்கத்தை விளைவித்துள்ளன. சமூகவுடைமை முறையை விடுத்து வேறு சமுதாய முறை எதையும் நான் பற்றிக்கொள்ளக் கூடாது. கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் சிறந்தவற்றை இரவல்பெறும் சுதந்திரத்தை எனக்கு நான் விட்டுவைக்க வேண்டும்.
நாங்கள் இன்னல்களைக் கற்பனைசெய்து போராடவில்லை. அரச வழக்குத்தொடுநரின் மொழியில் கூறுவதாயின், "இன்னல்கள் எனப்படுவனவற்றுக்கு" எதிராக நாங்கள் போராடவில்லை. உண்மையான இன்னல்களுக்கு எதிராகவே நாங்கள் போராடி வருகிறோம். அடிப்படை நிலையில் வைத்து அதை இப்படிக் கூறலாம்: தென் ஆபிரிக்காவில் ஆபிரிக்க மக்களது வாழ்வின் குறியீடுகளாக விளங்கும் இரண்டு அம்சங்களுக்கு எதிராக, சட்டப்படி நிலைநிறுத்தப்பட்ட இரண்டு அம்சங்களுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம்: (1) வறுமை, (2) மனித மதிப்பின்மை. பொதுவுடைமவாதிகளோ, "கிளர்ச்சியாளர்கள்" எனபடுவோரோ அவற்றை எமக்கு கற்பிக்க வேண்டியதில்லை. ஆபிரிக்காவில் மிகவும் செல்வங்கொழிக்கும் நாடு தென் ஆபிரிக்காவே. உலகில் மிகவும் செல்வங்கொழிக்கும் நாடுகளுள் அது ஒன்றாகவும் விளங்கக் கூடும். ஆனால் பெரிதும் ஏற்றதாழ்வுகள் மிகுந்த நாடாக அது விளங்குகிறது. உலகிலேயே வாழ்க்கைத் தரத்தின் உச்சத்தை தென் ஆபிரிக்க வெள்ளையரே துய்ப்பதாகவும் கொள்ளலாம். மாறாக ஆபிரிக்க மக்களோ வறுமையிலும் அவலத்திலும் வாடுகிறார்கள். வறுமையும், ஊட்டக்கேடும், நோயும் இணைபிரிவதில்லை. காசநோய், ஊட்டமின்மை, ஊட்டக்குறை என்பவற்றால் உடனலம் கெடுகிறது; இறக்க நேர்கிறது.
எனினும் ஆபிரிக்க மக்கள் தங்கள் வறுமையையும், வெள்ளையரின் செல்வத்தையும் மாத்திரம் குறித்து முறையிடவில்லை. அந்த நிலைவரத்தைப் பேணிக்கொள்ளும் நோக்குடனேயே வெள்ளையரால் சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்றும் அவர்கள் முறையிடுகிறார்கள். வறுமையிலிருந்து மீள்வதற்கு இரு வழிகள் உண்டு: முறைசார் கல்வி கற்பது ஒரு வழி; தொழிலாளி தான் புரியும் தொழிலில் மிகுந்த தேர்ச்சி ஈட்டி, அதன் மூலம் அதிக சம்பளம் பெறுவது இன்னொரு வழி. ஆபிரிக்க மக்களைப் பொறுத்தவரை இவ்விரு முன்னேற்றப் பாதைகளும் திட்டமிட்டு, சட்டம் போட்டு, குறுக்கப்பட்டுள்ளன.
ஆபிரிக்க மக்களின் கல்விக்கு அரசாங்கம் என்றென்றும் இடையூறு விளைவிக்க முற்பட்டு வந்துள்ளது. வெள்ளையர் செல்வந்தரோ, வறியோரோ என்ற பாகுபாடின்றி, அவர்களுக்குப் பெரிதும் செலவின்றி அவர்களின் பிள்ளைகள் அனைவருக்கும் கட்டாயக் கல்வி போதிக்கப்படுகிறது. எனினும் ஆபிரிக்கப் பிள்ளைகளோ தமது கல்விக்கு வெள்ளையரை விட பொதுவாக அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
7 முதல் 14 வரையான வயதுடைய ஆபிரிக்கப் பிள்ளைகளுள் ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் பாடசாலை செல்வதில்லை. பாடசாலை செல்லும் ஆபிரிக்கப் பிள்ளைகளின் கல்வித் தராதரங்கள் வெள்ளைப் பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் கல்வித் தராதரங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டவை. 1962ல் தென் ஆபிரிக்கா முழுவதும் 5,660 ஆபிரிக்கப் பிள்ளைகள் மாத்திரமே இடைநிலைத் தேர்வில் சித்தியடைந்தார்கள். 362 பிள்ளைகள் மாத்திரமே இறுதித் தேர்வில் சித்தியடைந்தார்கள்.
இது அரசாங்கத்தின் சுதேசிய கல்விக் கொள்கைக்கு அமைவானதே என்பதை ஊகிக்க முடிகிறது. "சுதேசிய கல்வித் துறை எனது கட்டுப்பாட்டில் வரும்பொழுது, சுதேசிகளுக்கு ஐரோப்பியருடன் சமத்துவம் இல்லை என்பதை அவர்களுக்கு இளமையிலிருந்தே போதிக்கும் வண்ணம் நான் அதைச் சீர்திருத்தி அமைப்பேன். சமத்துவத்தில் நம்பிக்கை உடையவர்கள் சுதேசிகளின் ஆசிரியர்களாக விளங்குவது விரும்பத்தக்கதல்ல. சுதேசியக் கல்வி எனது திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்பொழுது, ஒரு சுதேசி எத்தகைய உயர்கல்விக்குப் பொருத்தமானவன், தனது அறிவைப் பயன்படுத்தும் வாய்ப்பு அவனுக்கு வாழ்நாளில் கிடைக்குமா என்பவற்றை அது அறிந்துகொள்ளும்" என்று தற்போதைய பிரதம மந்திரி தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க மக்களின் முன்னேற்றத்துக்குத் தடங்கல் விளைவிக்கும் இன்னொரு முக்கிய விடயம்: கைத்தொழில் துறையில் காணப்படும் நிறத்தடை. அதன்படி கைத்தொழில் துறையில் மேல்மட்ட வேலைகள் வெள்ளையருக்கு மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. மேலும், தேர்ச்சி தேவைப்படாத துறைகளிலும், பாதித்தேர்ச்சி தேவைப்படும் துறைகளிலும் தமக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் ஆபிரிக்கர்கள் அங்கீகாரம் கொண்ட தொழிற்சங்கங்களை அமைக்க அனுமதி இல்லை. அதாவது கூட்டுப்பேரம் பேசும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அதிக சம்பளம் பெறும் வெள்ளைத் தொழிலாளிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவாழ் ஆபிரிக்கர்களுக்கு ஏனைய ஆபிரிக்க நாடுகளில் வாழும் மக்களை விட அதிக வருமானம் கிடைப்பதாக அரசாங்கம் தன்னைக் குறைகூறுவோருக்குப் பதில் கூறுகிறது. அரசாங்கம் கூறும் பதில் உண்மையோ என்பதை நான் அறியேன். ஆனால், அது உண்மை என்றாலும் கூட, ஆபிரிக்கருக்கு அது பொருந்தாது.
பிறநாட்டு மக்களை விட நாங்கள் வறுமைப்பட்டுள்ளோம் என்பதல்ல எங்கள் முறைப்பாடு. எங்கள் சொந்த நாட்டிலேயே வெள்ளையரை விட நாங்கள் வறுமைப்பட்டுள்ளோம்; இந்த ஏற்றத்தாழ்வை நாங்கள் மாற்றாவாறு சட்டம் போட்டுத் தடுக்கப்பட்டுள்ளோம் என்பதே எமது முறைப்பாடு.
வெள்ளை மேலாதிக்க கொள்கையின் நேரடி விளைவாக ஆபிரிக்க மக்கள் மனித மதிப்பின்றி வாழ்கிறார்கள். வெள்ளையரின் மேலாதிக்கம், கருப்பினத்தவரின் தாழ்ச்சியை உணர்த்துகிறது. வெள்ளையரின் மேலாதிக்கத்தைக் கட்டிக்காக்கும் சட்டம் அந்த எண்ணத்தை நிலைநிறுத்தி வருகிறது. தென் ஆபிரிக்காவில் தாழ்ந்த வேலைகள் புரிவோர் என்றென்றும் ஆபிரிக்கரே.
தான் எதையாவது தூக்கவோ, துடைக்கவோ வேண்டியிருந்தால், அதைச் செய்வதற்கு ஓர் ஆபிரிக்கனைச் சுழன்று தேடுவான் வெள்ளையன். அந்த ஆபிரிக்கன் அந்த வெள்ளையனின் பணியாளாக இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன! அத்தகைய மனப்பான்மையால், ஆபிரிக்கரை ஒரு புறம்பான பிறவியாக நோக்க முற்படுகின்றனர் வெள்ளையர். ஆபிரிக்கரை சொந்தக் குடும்பங்கள் கொண்ட மக்களாக வெள்ளையர் நோக்குவதில்லை. ஆபிரிக்கருக்கும் உணர்ச்சிகள் உண்டு, வெள்ளையரைப் போலவே ஆபிரிக்கரும் காதல்வயப்படுகிறார்கள், வெள்ளையரைப் போலவே ஆபிரிக்கரும் தமது மனைவி மக்களுடன் வாழ விரும்புகிறார்கள், தமது குடும்பங்களை உரியமுறையில் பராமரிக்கப் போதியளவு பணம் உழைக்க விரும்புகிறார்கள், தமது பிள்ளைகளுக்கு உணவும் உடையும் அளித்து பாடசாலைக்கு அனுப்ப விரும்புகிறார்கள் என்பதை வெள்ளையர் உணர்ந்துகொள்வதில்லை. அவற்றை எல்லாம் எந்த "வீட்டுவேலைப் பையன்," அல்லது "தோட்டவேலைப் பையன்" அல்லது சாதாரண தொழிலாளி என்றாவது செய்யலாம் என்று நம்ப முடியும்?
தென் ஆபிரிக்காவில் ஆபிரிக்க மக்களால் மிகவும் வெறுக்கப்படும் சட்டங்களுள் சிலவாகிய அனுமதிச்சீட்டுச் சட்டங்களின்படி காவல்துறையினர் எந்த ஆபிரிக்கனையும் எந்த வேளையிலும் கண்காணிக்க முடியும். அனுமதிச்சீட்டுக் குறித்து காவல்துறையினருடன் சச்சரவுக்கு உள்ளாகாத ஆபிரிக்கன் ஒருவனாவது இருப்பானா என்று நான் ஐயுறுகிறேன். அனுமதிச்சீட்டுச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஆபிரிக்கர்கள், ஆயிரக்கணக்கான ஆபிரிக்கர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
அதைவிட மோசம், அனுமதிச்சீட்டுச் சட்டங்களின் விளைவாக கணவனும் மனைவியும் வெவ்வேறு இடங்களில் வசிக்க நேர்வதால், குடும்ப வாழ்வு குலைந்து போகிறது. வறுமையும், குடும்பம் குலைவதும் அடுத்தகட்ட விளைவுகளுக்கு இட்டுச்செல்கின்றன. பிள்ளைகள் செல்வதற்குப் பாடசாலைகள் இல்லை. அல்லது அவர்கள் பாடசாலை செல்வதற்குப் போதிய பணம் இல்லை. அல்லது அவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதற்குப் பெற்றோர் இல்லை. காரணம், பெற்றோர் இருவரும் (பெற்றோர் இருவரும் இருந்தால்) குடும்பத்தை உயிர்வாழ வைப்பதற்கு இருவரும் உழைக்க வேண்டியுள்ளது. ஆதலால் பிள்ளைகள் தெருவழியே அலைந்து திரிகிறார்கள். இது ஒழுக்கநெறிகளின் குலைவுக்கும், முறைகேடான மகப்பேறுகளின் அதிரடிப் பெருக்கத்துக்கும், வன்முறைக்கும் வழிவகுத்துள்ளன. அரசியல் அரங்கில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் வன்முறை இடம்பெறுகிறது. ஆபிரிக்கர் வசிக்கும் நகர்ப்புறங்களில் வாழ்வது ஆபத்தாகியுள்ளது. எவராவது கத்திக்குத்துக்கோ தாக்குதலுக்கு உள்ளாகாமல் ஒரு நாளேனும் கழிவதில்லை. ஆபிரிக்கரின் நகர்ப்புறங்களிலிருந்து வெள்ளையர் வசிக்கும் இடங்களுக்கு வன்முறை நகர்த்தப்படுகிறது. இருண்ட பின்னர் தெருவில் அடியெடுத்து வைக்க மக்கள் அஞ்சுகிறார்கள். கன்னமிடல், கொள்ளை போன்ற குற்றங்களுக்கு இப்பொழுது மரணதண்டனை விதிக்க முடியும். எனினும் அவை பெருகியே வருகின்றன. மரணதண்டனை கொண்டு புரையோடிய புண்ணைக் குணப்படுத்த முடியாது.
வாழப்போதிய கூலியே ஆபிரிக்கருக்குத் தேவை. ஆபிரிக்கரால் செய்யக்கூடிய வேலை என்று அரசாங்கம் அறிவிக்கும் வேலையை விடுத்து, தம்மால் செய்யக்கூடிய வேலையச் செய்யவே ஆபிரிக்கர் விரும்புகின்றனர். தாம் பிறந்த இடமல்ல என்பதால் அங்கிருந்து வெளியேற்றப்படுவதை விடுத்து, தமக்கு வேலை கிடைக்கும் இடத்தில் வசிக்கவே ஆபிரிக்கர் அனுமதி கோருகின்றனர். என்றுமே தமது சொந்த வீடு என்று கொள்ளமுடியாத வாடகை வீட்டில் வாழும் நிர்ப்பந்தத்தை விடுத்து, தாம் உழைக்கும் இடத்தில் வீட்டுச் சொந்தக்காரராக விளங்கவே ஆபிரிக்கர் அனுமதி கோருகின்றனர். தத்தம் குப்பங்களில் முடங்கி வாழ்வதை விடுத்து, குடிமக்களின் அங்கமாக விளங்குவதற்கே ஆபிரிக்கர் அனுமதி கோருகின்றனர்.
ஆபிரிக்க ஆண்கள் இயற்கைக்கு மாறாக ஆண்களின் விடுதிகளில் வசிக்க நிர்ப்பந்திக்கப்படுவதை விடுத்து, தாம் வேலைசெய்யும் இடத்தில் தமது மனிவி மக்கள் தம்முடன் வாழ்வதையே விரும்புகின்றனர். ஆபிரிக்கப் பெண்கள் நிரந்தரமாகவே கணவரைப் பிரிந்தவர்களாய் ஒதுக்குப்புலங்களில் கைவிடப்படுவதை விடுத்து, தமது ஆண்களுடன் கூடிவாழவே விரும்புகின்றனர். ஆபிரிக்கர் சின்னஞ்சிறு பிள்ளைகள் போல் தமது அறைகளில் முடங்குவதை விடுத்து, இரவு 11 மணிக்குப் பின்னர் வெளியே செல்வதற்கு அனுமதி கோருகின்றனர். தொழில் பணியகம் குறிக்கும் இடத்தில் வேலைசெய்வதை விடுத்து, தமது சொந்த நாட்டில் சுற்றிப் பயணம்செய்து, தாம் விரும்பிய இடத்தில் வேலைசெய்யவே ஆபிரிக்கர் அனுமதி கோருகின்றனர். தென் ஆபிரிக்கா முழுவதிலும் ஆபிரிக்கர் நியாயமான பங்கு கோருகின்றனர். பாதுகாப்பு கோருகின்றனர். சமுதாயத்தில் ஒரு பங்கு கோருகின்றனர்.
எமக்கு அரசியல் சமவுரிமைகள் மிகமிக முக்கியம். அவை இல்லையேல் எமது வலுவீனங்கள் நிலையூன்றிவிடும். அத்தகைய சமத்துவம் கைகூடினால் வாக்காளர்களுள் பெரும்பான்மையோர் ஆபிரிக்கராகவே விளங்குவர். ஆதலால் குடியாட்சிக்கு வெள்ளையர் அஞ்சுகிறார்கள். இந்த நாட்டில் வாழும் வெள்ளையருக்கு அது புரட்சிகரமானதாகத் தென்படுவதை நான் அறிவேன். எனினும் இனத்துவ இசைவு, அனைவருக்கும் சுதந்திரம் ஆகிய இரண்டுக்கும் உத்தரவாதம் அளிக்கும் ஒரேயொரு தீர்வாகிய குடியாட்சி கிடைக்கும் வழியை வெள்ளையரின் அச்சம் அடைக்க விடமுடியாது. அனைவருக்கும் அளிக்கப்படும் வாக்குரிமை இனத்துவ ஆதிக்கத்துக்கு இட்டுச்செல்லும் என்பது உண்மை அல்ல. நிறவாரி அரசியற் பிளவு முற்றிலும் செயற்கையானது. அது மறையும்பொழுது ஒரு நிறக்குழுமம் மறு நிறக்குழுமத்தின் மீது செலுத்தும் ஆதிக்கமும் மறையும். அரை நூற்றாண்டாக ஆபிரிக்க தேசிய பேரவை இனவாதத்துக்கு எதிராகப் போராடி வந்துள்ளது. அது வெற்றிவாகை சூடும்பொழுது, அந்தக் கொள்கையை மாற்றப் போவதில்லை.
இது ஆபிரிக்க தேசிய பேரவையின் போராட்டம். இது ஆபிரிக்க மக்களின் போராட்டம். எமது போராட்டம் ஓர் உண்மையான தேசியப் போராட்டம். நாங்கள் வருந்திப் பட்டறிந்து உயிர்ப்படைந்து புரியும் போராட்டம். வாழும் உரிமைக்கான போராட்டம்.
எனது வாழ்நாளில் ஆபிரிக்க மக்களின் இந்தப் போராட்டத்துக்கு என்னை நான் அர்ப்பணித்துள்ளேன்; நான் வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியுள்ளேன்; கருப்பரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியுள்ளேன்; அனைத்து மக்களும் சரிநிகர் வாய்ப்புகளுடன் கூடி இசைபட வாழும் சுதந்திர குடியாட்சி நிலவும் சமூகத்தை எய்தும் குறிக்கோளை நான் நெஞ்சார நேசித்து வந்துள்ளேன்; அந்தக் குறிக்கோளுக்காகவே, அந்தக் குறிக்கோளை எய்துவதற்காகவே நான் வாழ விழைகிறேன்; தேவைப்பட்டால், அந்தக் குறிக்கோளுக்காக மாளவும் நான் சித்தமாய் இருக்கிறேன்.
Nelson Mandela, I Am Prepared To Die, Supreme court of South Africa, Pretoria, 1964-04-20
தமிழ்: மணி வேலுப்பிள்ளை
No comments:
Post a Comment