எம்.ஏ. சுமந்திரன்

Image result for m.a.sumanthiran
இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை
2013-12-06
(தமிழாக்கம்)
நெல்சன் மன்டேலா என்னும் பெருந்தகையை உலகம் இழந்து வருந்தும் இந்த நாளில் இங்கு நாம் கூடியிருக்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது 95வது வயதில் அவர் இயற்கை எய்தினார். அதனைக் குறித்து அவருடைய குடும்பத்துக்கும், தென் ஆபிரிக்க குடியரசின் மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். மன்டேலா வெறுமனே ஓர் ஆபிரிக்க மைந்தர் அல்லர். முழு உலக மைந்தர் அவர். அவரை நாங்கள் இழந்து வருந்தும் இந்த வேளையில் அவர் வாழ்ந்த வாழ்வை நாம் கொண்டாடி வருகிறோம். தனது சொந்த மக்களின் உரிமைகளுக்காக, தனது வாழ்வின் ஒரு கட்டத்தில் ஆயுதமும் ஏந்தி, அதேவேளை தமது எதிரியின்மீது காழ்ப்புணர்ச்சி ஏதுமின்றி, அனைத்துக்கும் மேலாகத் தமது போராட்டத்தில் வெற்றிபெற்ற பின்னர் நெஞ்சத்தில் வஞ்சமின்றி, பெருந்தன்மையுடன் அவர்களை நல்வழிப்படுத்தியவாறு போராடுவோருக்கு எடுத்துக்காட்டாக மன்டேலாவை எமக்களித்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். உண்மையான மக்களாட்சி, நீதி, பெருந்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மை என்பவற்றின் எழுச்சியே அங்கு சிதறுண்ட நாட்டை ஒருங்கிணைக்க உதவியது.
இலங்கையின் வெளியுறவுகள் என்றுமிலாவாறு தாழ்ந்துபோயுள்ள இந்த வேளையில் வெளிநாட்டு அமைச்சின் நிதியொதுக்கு பற்றி நான் உரையாற்ற முற்படுகிறேன். நாங்கள் சுதந்திரம் பெற்ற பின்னர் வெளியுலகில் எங்கள் மானம் இவ்வளவு தூரம் தாழ்ந்ததில்லை என்றால் மிகையாகாது. கொழும்பில் பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் மாநாடு நடந்து முடிந்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா அடுத்த ஈராண்டுகளுக்கு மாநாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்ட கையோடு இந்த நிதியொதுக்கு பற்றி நாங்கள் விவாதிக்கிறோம். ஜனாதிபதி ராஜபக்சாவே பொதுநலவாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சிலர் நினைப்பதாகத் தெரிகிறது. அப்படியல்ல. எலிசபெத் அரசியே தொடர்ந்தும் பொதுநலவாயத்தின் தலைவராக விளங்குவார்.
இந்த மாநாடு ஒரு கசப்பு மாத்திரையாகவே அமைந்திருக்கிறது. "கொழும்பு மாநாட்டுக்கு நான் வரப்போவதில்லை" என்று அரசியார் அறிவித்ததோடு வாய் கசக்கத் தொடங்கியது. இலங்கையின் மனித உரிமை வரலாற்றைக் கருத்தில் கொண்டு, மாநாடு கூடுவதற்கு இந்த நாடு ஏற்ற இடமல்ல என்ற அடிப்படையில், இடத்தை மாற்றுவதற்குப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டதுண்டு. எனினும் அந்த முயற்சிகள் அனைத்தையும் எதிர்கொண்டு, கொழும்பிலேயே மாநாட்டை நடத்தும் முயற்சியில் இந்த நாடு வெற்றிபெற்றது. கொழும்பில் மாநாட்டை நடத்துவதில் எதிர்கொண்ட சவால்களை முறியடிப்பதிலேயே தனது வெற்றி தங்கியுள்ளது என்று இலங்கை என்ணிக்கொண்டது. இப்பொழுது மாநாடு நடந்து முடிந்துவிட்டது. அது எங்கள் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று எம்மவர்கள் எண்ணுவதாகத் தெரிகிறது! ஐ. நா. மனித உரிமை மாநாட்டில் ஏற்கெனவே இரண்டு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டுள்ளன. இன்னும் ஆறு மாதங்களுக்குள் இன்னொரு தீர்மானத்தை நாம் எதிர்நோக்கியுள்ளோம். அப்படி இருந்தும் கூட, இது எங்கள் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று எம்மவர்கள் எண்ணுவதாகத் தெரிகிறது!
மாண்புமிகு அமைச்சர் அவர்களே, இந்த நாட்டில் பொதுநலவாய மாநாடு நடத்திய இலாபநட்டக் கணக்கை கவனத்தில் கொள்ளும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்: அது உண்மையிலேயே ஒரு வெற்றியா? அரசியார் மட்டுமன்றி வேறு அரசுத் தலைவர்கள் பலரும் வருகை தரவில்லை. இலங்கையில் மனித உரிமை நிலைவரம் படுமோசமாக இருப்பதாக வெளிப்படையாகவே சில தலைவர்கள் காரணம் காட்டியுள்ளார்கள். பொதுநலவாயத்துள் மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட கனடாவின் பிரதம மந்திரியும், மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவின் பிரதம மந்திரியும் கலந்துகொள்ளவில்லை. மொத்தத்தில் 23 அரசுத் தலைவர்களே, அரைவாசியிலும் குறைந்தவர்களே, கலந்துகொண்டார்கள். பொதுநலவாய நெறிமுறைகளைக் கருத்தில்கொண்டு அடுத்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பையே மொறிசியஸ் தாரைவார்த்துக் கொடுத்துள்ளது. மனித உரிமைகள் குறித்து தமது கரிசனைகளை எடுத்துரைக்கும் நோக்குடன்தான் வருகிறோம் என்று சமாதானம் கூறியபடியே பலரும் மாநாட்டில் வந்து கலந்துகொண்டார்கள். இதனை எமது நிலைப்பாட்டுக்கு கிடைத்த வரவேற்பு என்று கொள்வது எங்ஙனம்?
இந்த மாநாட்டை நடத்தி, இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட வழிவகுத்ததைத் தவிர வேறென்ன பலாபலனை நாம் ஈட்டிக்கொண்டோம்? 2014 பங்குனி மாதத்துக்கு முன்னர் நம்பகமான, சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்படாவிட்டால், 2009 வைகாசி மாதம் முடிவுற்ற போரில் ஈடுபட்ட இரு தரப்புகளும் சர்வதேய மனித உரிமைச் சட்டங்களையும், சர்வதேய மனிதாபிமானச சட்டங்களையும் மீறியது குறித்து சர்வதேய விசாரணை இடம்பெறுவதைத் தவிர்க்கமுடியாது. உள்நாட்டு விசாரணைக்கு முழுமையாக 6 மாதங்கள் கூடத் தரப்படவில்லை என்றும் கூற முடியாது. 2012 பங்குனி, 2013 பங்குனி மாதங்களில் ஐ. நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், நாம் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது தெட்டத்தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு வழமையான வீம்புடன் நாம் பதிலடி கொடுத்துள்ளோம். மேற்படி குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நாம் நிராகரித்துள்ளோம். எங்களை ஒழுக்கசீலர்கள் என்றும், எஞ்சிய உலகத்தவர்களை எங்கள்மீது பொறாமைகொண்டு செயற்படுவோர் என்றும்  வற்புறுத்தியுள்ளோம்!
இந்த நாட்டிடமும் நாடாளுமன்றத்திடமும் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்: இங்கு சர்வதேய சட்டங்கள் பாரதூரமான முறையில் மீறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்யும்படி வெளியுலகம் எம்மிடம் கேட்கும்பொழுது நாம் ஏன் இப்படி எல்லாம் பதிலிறுக்கிறோம்? இதை வேறொன்றுடன் ஒப்பிட்டுப் பர்ப்போம்: தனது மனைவி காணாமல் போய்விட்டார் என்று கணவன் கூறுகிறார்; அவரே மனைவியைக் கொன்று, தன் வீட்டுக் கோடிக்குள் புதைத்துவிட்டார் என்று அயலவர்கள் வற்புறுத்துகிறார்கள். அவர் அப்பாவி என்றால், அயலவர்கள் வந்து தேடிப்பார்க்க அனுமதிப்பார். மாறாக, அவர்களின் குற்றச்சாட்டு உண்மை என்றால், அவர்களை அவர் உள்ளே அனுமதிக்க மாட்டார்; உலகில் நேரிய முறையில் போர் எதுவும் புரியப்படுவதில்லை. போர்கள் அனைத்துமே கேவலமானவை. ஒவ்வொரு போரிலும் இரு தரப்புகளுமே போர்விதிகளை மீறத் தவறுவதில்லை. மறுதரப்பே போர்விதிகளை மீறியதாக வற்புறுத்தி எவரையும் நாம் நம்பவைக்கப் போவதில்லை. இந்த உண்மை தமிழர் தரப்புக்கும் பொருந்தும்.
இச்சகதியிலிருந்து கடைத்தேறி எங்கள் எதிர்கால வாழ்வை மேற்கொள்வது எங்ஙனம்? நான் ஒரு யோசனை கூறுகிறேன்: முதற்கண் நாங்கள் ஒருவருடன் ஒருவர் நேர்மையாக ஒழுகத் தொடங்குவோம்; போரின் இறுதிக் கட்டத்தில் மட்டுமல்ல, 30 ஆண்டுகளாக வன்முறைப்  போராட்டம் நிகழ்ந்தபொழுது மட்டுமல்ல, அதற்கு முன்னரும் கூட நாங்கள் ஒருவருக்கொருவர் கொடுமைகள் புரிந்துள்ளோம் என்பதை எங்கள் தரப்புகள் இரண்டுமே ஒப்புக்கொள்ள வேண்டும்; கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணையம் (LLRC) அக்கொடுமைகள் சிலவற்றை மீள்நோக்கியது உண்மையே. எனினும் அரசாங்கம் போர்புரிந்த விதத்தைப் பூசிமெழுகும் அவாவினால் அந்த ஆணையம் வழிதவறிவிட்டது. போகட்டும்! அதே ஆணையத்தின் விதப்புரைகளையே அரசாங்கம் உதட்டளவில் தான்  ஏற்றுக்கொண்டது. அந்த ஆணையம் கருத்தூன்றி விடுத்த விதப்புரைகளைத் தனது அரசியற் கொள்கையாக ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கான திடசித்தத்தை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. வெறும் உள்நாட்டுப் பொறிமுறையால் என்ன பயன் விளையும் என்பதை இது அறவே புலப்படுத்துகிறது. முதற்கண், நாட்டில் நெடுங்காலமாக நீடித்துவரும் பிரச்சனையைத் தீர்க்கும் கட்டத்துக்கு நாங்கள் வரலாம். அதற்குப் பிறகு தென் ஆபிரிக்கா போன்று இங்கும் நீதிநியாயச் சர்ச்சைகளை நாங்களே பேசித் தீர்க்கலாம். எங்கள் சமூகங்களிடையே பாரிய அவநம்பிக்கை குடிகொண்டுள்ளது. வெறும் உள்நாட்டுப் பொறிமுறை இங்கு பயனளிக்கப் போவதில்லை. ஆதலால் தான் சர்வதேய தரப்புகள் மேற்படி படிமுறைகளில் ஈடுபட வேண்டியுள்ளது.
சுதந்திரமான சர்வதேய விசாரணையை நாங்கள் ஏன் வெறுக்கிறோம்? எங்கள் மீது குற்றப்பொறுப்பு விழும் என்ற அச்சமா அதற்கான காரணம்? உண்மையில் இரு தரப்புகளுமே விதிகளை மீறியுள்ளன. ஆகவே அப்படி எல்லாம் நாங்கள் அஞ்ச வேண்டியதில்லை. உண்மையிலேயே சுதந்திரமான விசாரணையின் ஊடாக உண்மை வெளிவரும்பொழுது இரு சமூகங்களும் – ஏன் மூன்று சமூகங்களும் - அந்த உண்மையை எதிர்கொள்ள நேரும். அப்பொழுது பழிதீர்க்க வாய்ப்புக் கிடைக்காது. மாறாக, பாதிக்கப்பட்டவர்களுக்கே நீதியும், இழப்பீடும், மீண்டும் பாதகம் நிகழாது என்ற உத்தரவாதமும்  கிடைக்கும். அதனூடாக நீடித்த அரசியல் தீர்வும் வரையறுக்கப்படும். அரசியற் பெரும்பான்மையை அடக்கியொடுக்கும் கருவியாகப் பயன்படுத்துவதை விடுத்து, வெவ்வேறு சமூகங்களின் தனித்துவத்தை வலியுறுத்தி, உண்மையான ஒற்றுமையை உறுதிபட மேம்படுத்தும் வண்ணம் ஆட்சிக் கட்டமைப்புகளை நாம் மறுசீரமைக்க வேண்டும்.    
தமிழ் மக்கள் பல்லாண்டுகளுக்கு முன்னரே ஓர் அகவிசாரணயில் ஈடுபட்டிருக்க வேண்டியவர்கள். அந்த அகவிசாரணைக்கு இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளும்படி அவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் எங்கே வழிதவறினோம்? 1931ல் யாழ் இளைஞர் பேரவை (Jaffna Youth Congress) முழுச் சுதந்திரத்தை (poorna swaraj ) வலியுறுத்தி, தேர்தலைப் புறக்கணித்தது தவறா?  கண்டிக் கழகம் (Kandyan League) இரு பேரரச ஆணையங்களிடம் விடுத்த கூட்டரசுக் கோரிக்கையை எமது தலைவர்கள் நிராகரித்தது தவறா? ஜி. ஜி. பொன்னமபலம் 50க்கு 50 கேட்டது தவறா? இந்திய-பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அவர் அரசாங்கத்தை ஆதரித்தது தவறா? 1951ல் எஸ். ஜே. வி. செல்வநாயகம் கூட்டரசு கோரியது தவறா? 1976ல் அவர் தனியரசு கோரியது தவறா?  1981ல் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மாவட்ட அபிவிருத்தி மன்றத்தை  ஏற்றது தவறா? 1987ல் அவர்கள் மாகாண மன்ற முறைமையை ஏற்றது தவறா? ஆயுதப் போராட்டம் ஓங்குவதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் உடந்தையாய் இருந்தார்களா? தமிழ் இளைஞர்களைப் பற்றி என்ன சொல்வது? அரசுக்கெதிராக அவர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கியது தவறா?
1961ல் ஆபிரிக்க தேசியப் பேரவை (ANC) வன்முறையில் ஈடுபட முடிவெடுத்தபொழுது நெல்சன் மன்டேலா கூறியதை இங்கு எடுத்துரைப்பது தகும் என்று நினைக்கிறேன்:
"இந்த நீதிமன்றத்துக்கு இதனைப் புரிந்துகொள்வது கடினமாய் இருக்கலாம்: இந்த மக்கள் நீண்ட காலமாக வன்முறை பற்றி வெள்ளையுருடன் போரிட்டு, தமது நாட்டை மீட்கும் நாளைப் பற்றி - கதைத்து வந்தது உண்மையே. எனினும் வன்முறையைத் தவிர்த்து, அமைதிவழியை நாடும்படி அவர்களை நாங்கள் - ஆபிரிக்க தேசிய பேரவையின் தலைவர்கள் – என்றென்றும் தூண்டி வந்துள்ளோம். 1961 ஆனிமாதம் எங்களுள் சிலர் ஒன்றுகூடி நிலைமையை ஆராய்ந்தபொழுது, இனவாத அடிப்படையில் அமையாத அரசொன்றை எய்தும் எமது கொள்கையால் எதையுமே சாதிக்க முடியவில்லை என்பதை எங்களால் மறுக்க  முடியவில்லை. எங்களை ஆதரிக்கும் மக்கள் அக்கொள்கையில் கொண்ட நம்பிக்கையை இழக்கத் தொடங்கினார்கள். நாங்கள் அதிர்ச்சி அடையும் வண்ணம் அவர்களின் உள்ளத்தில் பயங்கரவாத எண்ணங்கள் உருவாகி வந்தன….
"1961 ஆனிமாதத் தொடக்கத்தில் நானும் சில சகபாடிகளும் தென் ஆபிரிக்க நிலைவரத்தை நெடுநேரமாக ஏக்கத்துடன் ஆராய்ந்த பிறகு, (இந்த நாட்டில்) வன்முறையைத் தவிர்க்கவியலாது என்ற முடிவுக்கு வந்தோம்; அமைதிவழிநின்று நாம் விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் பலவந்தமாக எதிர்கொள்ளும் வேளையில் ஆபிரிக்க தேசிய பேரவைத் தலைவர்கள் தொடர்ந்தும் அமைதி போதிப்பது, இன்முறை போதிப்பது தவறு, அது நடைமுறைக்கொவ்வாது என்ற முடிவுக்கு வந்தோம்.
"கனம் நீதிபதி அவர்களே, அது எளிதில் எடுத்த முடிபல்ல. எஞ்சிய வழிகள் எல்லாம் தோல்வியடைந்த பின்னரே, அமைதிப் போராட்ட வழிகள் எல்லாம் அடைக்கப்பட்ட பின்னரே, வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடும் முடிபும், "தேசத்தின் ஈட்டி" (Spear of the Nation) இயக்கத்தை அமைக்கும் முடிபும் எடுக்கப்பட்டன. அத்தகைய வழியை நாங்கள் உளமுவந்து நாடவில்லை. எமக்கு வேறு வழி எதையும் அரசாங்கம் விட்டுவைக்கவில்லை. ஆதலால் தான் நாங்கள் அந்த வழியை நாடினோம். 1961 திசம்பர் 16ம் திகதி வெளியிடப்பட்ட "தேசத்தின் ஈட்டி" என்னும் விளம்பரம் (தடயம் AD என்று பொறிக்கப்பட்டு) இந்த  நீதினறத்தின்முன் வைக்கப்பட்டுள்ளது. அதில் நாம் கூறியதை இங்கு நான் மேற்கோள்காட்டுகிறேன்:
"எத்தேசத்தின் வாழ்விலும் இரண்டே இரண்டு தெரிவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும் கட்டம் ஒன்று வந்தே தீரும் - மண்டியிடுவதா, போரிடுவதா என்று முடிவெடுக்க வேண்டிய கட்டம் ஒன்று வந்தே தீரும். தென் ஆபிரிக்கா அந்தக் கட்டத்தை அடைந்துள்ளது. நாங்கள் மண்டியிட மாட்டோம். எமது மக்களையும், வருங்காலத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக எங்களால் இயன்றவரை திருப்பித் தாக்குவதைத் தவிர எமக்கு வேறு வழி கிடையாது" என்று அந்த விளம்பனத்தில் நாங்கள் கூறியிருந்தோம்.
"1961 ஆனிமாதம் தேசிய விடுதலை இயக்கத்தின் கொள்கையில் ஒரு மாற்றத்தை நாங்கள் வலியுறுத்த முடிவெடுத்தபொழுது எங்கள் உணர்வு அப்படித்தான் இருந்தது. நான் என்ன செய்தேனோ அதைச் செய்யவேண்டிய அறநெறிக் கடப்பாட்டை நான் உணர்ந்துகொண்டேன் என்று மட்டுமே என்னால் கூறமுடியும்."
அதே போன்று போராட்டத்தின் ஓர் அங்கமாக வன்முறையைப் பயன்படுத்தும் முடிபை பொறுப்புவாய்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள் எப்பொழுதாவது எடுத்தார்களா? வன்முறையில் இம்மியும் நம்பிக்கையற்றவன் என்ற வகையில் இந்த வினாவை நான் எழுப்புகிறேன். வன்முறையைப் பயன்படுத்தியது நியாயமே என்று நினைப்பவர்களும் இந்த வினாவுக்கு விடையளிக்க வேண்டும்: சமத்துவத்துக்கும், ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைக்குமான எமது போராட்டத்தை வன்முறை முன்னகர்த்தியதா?
தமிழரின் ஒற்றுமையைப் பற்றி என்ன சொல்வது? எங்கள் வேற்றுமையைப் பெரும்பான்மையோர் பயன்படுத்தினார்களா? பிரபாகரன் சகோதர ஆயுத இயக்கத்தவர்களைக் கொன்றது தவறா? அவர் தமிழ் அரசியல் தலைவர்களையும், சிங்கள அரசியல் தலைவர்களையும், வெளிநாட்டு அரசியல் தலைவர்களையும் கொல்லும்படி பணித்தது தவறா? குடியிலக்குகளைத் தாக்கியதும், குடிமக்களைக் கொன்றதும் நியாயமா? பெளத்த விகாரைகள் மீதும், பள்ளிவாசல்களின் உள்ளேயும் தாக்குதல் தொடுத்தது தவறா? தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் படைபலம் ஓங்கியிருந்த வேளையில் அரசியல் பிரச்சனையைத் தீர்க்கும் வாய்ப்புகளை அவர்கள் வீணடித்ததைப் பற்றி என்ன சொல்வது? அவர்கள் 2005ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் இரகசிய சூழ்ச்சியில் ஈடுபட்டு தேர்தலைப் புறக்கணிக்கும்படி கோரியது தவறா? தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் உட்பட தமிழர் ஆயுத இயக்கத்தவர்கள் அனைவரும் பலவந்தமாகப் படைதிரட்டிய குற்றவாளிகளா? குறிப்பாகச் சிறுவர்களைப் படைதிரட்டிய குற்றவாளிகளா? காக்கைவன்னியர்களைப் பற்றி என்ன சொல்வது? இன்று ஆட்சியாளரின் அரவணைப்பில் திளைக்கும் பெரும்புலித் தலைவர்களைப் பற்றி என்ன சொல்வது?
இது ஒரு நீண்ட வினாக்கொத்து என்பது உண்மையே. எனினும் இவ்வினாக்களுக்கு விடையளிப்பதைத் தவிர்த்துவிட்டு, எங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று நாங்கள் நம்பமுடியுமா?   
கசக்கும் உண்மைகள் பலவற்றை நேருக்குநேர் எதிர்கொள்வதில் உண்மையிலேயே சுதந்திரமான சர்வதேய விசாரணை எதுவும் எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் உதவுதல் திண்ணம். தனது சொந்த ஆபிரிக்க தேசிய பேரவை பற்றிய உண்மைகள் என்னும் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதை விடுத்து, மிகவும் கசப்பான உண்மைகளைக் கூட வெளிக்கொணர்ந்த நெல்சன் மன்டேலாவின் வாழ்வை - மீளிணக்கத்தின் சின்னமாக விளங்கிய  நெல்சன் மண்டேலாவின் வாழ்வை - நாம் கொண்டாடிவரும் இந்த வேளையில், அவர் காட்டிய திசையில் நகரும்படி எம்மிடையே மனம்கசந்து முரண்படும் தரப்புகள் அனைத்திடமும் கேட்டுக்கொள்வதற்கு இன்றைய நாளைவிட வேறு சிறந்த நாள் கிடையாது. இதில் தென் ஆபிரிக்க குடியரசு எங்களுக்கு உதவ முன்வந்துள்ளதை வெறுமனே ஓர் உடனிகழ்வாக நான் கருதவில்லை. தென் ஆபிரிக்க ஜனாதிபதி யக்கோப் சூமாவிடம் ஜனாதிபதி ராஜபக்சா விடுத்த வேண்டுகோளின்படியே இந்த விடயத்தில் தங்கள் பட்டறிவை எம்முடன் பகிர்ந்துகொள்ள அவர்கள் முன்வந்துள்ளார்கள். இந்த நாட்டின் சமூகங்கள் பலவும் இப்படிமுறையில் கொண்டுள்ள ஐயுறவைத் தணிக்கும் வண்ணம் சர்வதேய பங்களிப்புக்கு அழைப்பு விடுத்தமைக்காக ஜனாதிபதி ராஜபக்சாவை நாம் பாராட்ட வேண்டும். 2014 பங்குனி மாதம் ஜெனீவாவில் அரசாங்கம் எதிர்நோக்கும் சவாலை எதிர்கொண்டு வெல்வதற்காகவே மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழர் தரப்பு பெரிதும் ஐயப்படுவதில் நியாயம் உண்டு. அத்தகைய சூழ்ச்சியால், தான் வைத்த பொறியில் தானே அகப்பட நேரும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் நேரிய முறையில் உண்மையைத் துலக்க முயன்றால், திறந்த மனதுடன் இப்படிமுறையை அணுக முனைந்தால், தென் ஆபிரிக்கரிடம் பாடம் கற்கவும் கற்ற பாடங்களைப் பயன்படுத்தவும் விரும்பினால், எங்கள் அயல்நாடாகிய இந்தியாவின் பேருதவியுடன், ஐ. நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளுடன், அத்தகைய பொறுப்பேற்பு - மீளிணக்கப் படிமுறைக்கு எங்கள் பேராதரவும் பங்களிப்பும் கிடைக்கும். அதற்கு மாறாக எங்களை அடக்கி ஒடுக்கும் உங்கள் நடப்புத் திட்டத்தை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளுந்தோறும் எங்கள் முழுப்பலத்தையும் கொண்டு அதனை நாம் எதிர்த்து நிற்போம். மானம் பெரிதென்று வாழும் பழம்பெரும் குடிமக்கள் நாங்கள். எத்தகைய அடக்குமுறைக்கும் நாங்கள் மண்டியிட மாட்டோம். ஆனால், இன்று நீங்கள் செல்லும் திசையை உளமார மாற்றிக்கொண்டால், எங்களை உங்களுடன் சரிநிகராக நடத்தி உறவாட விரும்பினால், நாங்களும் உங்களுடன் கூடியமர்ந்து இத்தேசியப் பிரச்சனையை ஒப்புரவான முறையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்புடைய முறையில் தீர்க்கத் துணைநிற்போம்.  
எங்கள் முரண்பாடுகளைத் தீர்ப்பதில் ஒரு சர்வதேய விசாரணைக்கு, அல்லது சர்வதேய பங்களிப்புக்காவது அரசாங்கம் இணங்குவது கூட இந்த நாடு நெடுந்தூரம் எகிப் பாய்வற்கு ஏதுவாகும். பொறுப்பேற்கும் கடப்பாடு தொடர்பான வினாக்களை நாம் நேரடியாகவும் நேரிய முறையிலும் எதிர்கொள்ளும்வரை அவை ஒழியப்போவதில்லை. 2014 பங்குனி மாதம் ஐ. நா.வின் ஆதரவுடன் ஒரு படிமுறைக்கு நாங்கள் இணங்கும் வண்ணம்  உலகம் ஈயும் நல்லெண்ணம் முழுவதையும் பயன்படுத்த எமக்கு மகத்தான வாய்ப்புக் கிட்டியுள்ளது. வெளியுறவு அமைச்சர் இதைக் கருத்தூன்றிக் கவனித்து, தற்போதைய போக்கை மாற்றி, அதன்படி நாட்டுக்குப் புத்திமதி கூறி, வரலாறு படைப்பார் என்று நம்புகிறோம். நாங்களோ உளமாரப் பொறுப்புணர்ந்து செயற்பட்டு, பல தசாப்தங்களாக எமது மக்களை வருத்தும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் அத்தகைய படிமுறையில் பங்குபற்றும்படி எமது மக்களுக்குப் புத்திமதி கூறுவோம். 2014 பங்குனி மாதம் பிறக்க இன்னும் 6 மாதங்களுக்கும் குறைவாகவே இருக்கின்றன. எனினும் சரியான பாதையில் இன்று நாம் அடியெடுத்து வைத்தாலே போதும். நெல்சன் மன்டேலாவின் பெயரில் இந்த நாட்டு மக்கள் அனவரிடமும், குறிப்பாக இலங்கை ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் நான் இந்த விண்ணப்பத்தை முன்வைக்கிறேன். 1963ல் நெல்சன் மன்டேலா மீது அரசத்துரோக குற்றஞ்சுமத்தி நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறியதை இங்கு நான் மேற்கோள்காட்டுகிறேன்:
"நான் வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியுள்ளேன்; கருப்பரின் ஆதிக்கத்தை எதிர்த்துப்  போராடியுள்ளேன்; அனைத்து மக்களும் சரிநிகர் வாய்ப்புகளுடன் கூடி இசைபட வாழும் சுதந்திர மக்களாட்சி நிலவும் சமூகத்தை எய்தும் குறிக்கோளை நான் நெஞ்சார நேசித்து வந்துள்ளேன்; அக்குறிக்கோளுக்காகவே, அக்குறிக்கோளை எய்துவதற்காகவே நான் வாழ விழைகிறேன்; அதேவேளை, கனம் நீதிபதி அவர்களே, தேவைப்பட்டால் அக்குறிக்கோளுக்காக மாளவும் நான் சித்தமாய் இருக்கிறேன்."
நன்றி.
M. A. Sumanthiran, M. P., Speech to Parliament, Colombo, Sri Lanka, 2013-12-06.
தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment