கலாநிதி லக்சிறி பர்னாந்து
பகைமைக்குத் தீர்வுகாண்பது எப்படி? அதை அசாத்தியமாக்கி! – மார்க்ஸ்
இனத்துவத்தில் எதுவித மறைபொருளும் இல்லை. இனத்துவம் என்றென்றும் நீடிப்பதும் இல்லை. இனத்துவம் என்பது சமுதாய வரலாற்றின் விளைபொருள் மட்டுமே. ஒரு மொழியோ, சமயமோ, சமய நம்பிக்கைகளோ விருத்தி அடைவதால், ஒரு புலத்தில் அருகருகே கூடிவாழ்வதால், அல்லது தனி வழமைகள், மரபுகள், அரசியல் முறைமைகள் ஓங்குவதால் இனத்துவம் அல்லது இனத்துவ சமூகங்கள் தோன்றும். உலகில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட இனத்துவ சமூகங்கள் தோன்றியுள்ளன. எனினும் அவை அனைத்துமே ஒன்றுடன் ஒன்று முரண்படுபவை அல்ல.
இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லீங்கள் தோன்றியதில் மேற்படி அம்சங்கள் பெரிதும் சம்பந்தப்பட்டுள்ளன. சிங்கள இனத்துவம் இலங்கைத் தீவின் எல்லைகளுக்கு உள்ளேயே தோன்றியது. தமிழ் இனத்துவமோ இந்திய உபகண்ட அயலையும் உள்ளடக்கியதாக மேலோங்கியது. உபகண்ட அயலினால் விளைந்த தாக்கங்களை சிங்கள இனத்துவத்தால் கூட மறுக்க முடியாது. முஸ்லீம் இனத்துவத்தின் அச்சாணி சமயமே என்பதில் ஐயமில்லை.
சமூகங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை; ஒன்றை ஒன்று உள்ளடக்கியவை; ஒன்றுடன் ஒன்று ஊடாடுபவை; ஒருங்கிணைந்து மேலோங்கியவை; வெவ்வேறாக விருத்தி அடைந்தவை; தாம் முற்றிலும் தனியினத்துவம் படைத்தவை என்று சமூகங்கள் எவையுமே மார்தட்ட முடியாது.
ஒருமைப்பாடுகளும் வேறுபாடுகளும்: சிங்கள இனத்துவத்திலிருந்து தமிழ் இனத்துவம் உள்வாங்கியதை அல்லது அணைத்துக்கொண்டதை விட தமிழ் இனத்துவத்திலிருந்து சிங்கள இனத்துவம் உள்வாங்கியது அல்லது அணைத்துக்கொண்டது அதிகம் எனலாம். அதற்கு (1) வரலாற்றுக் காலம் தொட்டே உபகண்ட அயலில் மேலோங்கிய தமிழ்ப் பண்பாடு இத்தீவினுள் ஆதிக்கம் செலுத்தியமையும் (2) துவக்கத்திலோ பிற்காலத்திலோ பெரிதும் ஆதி ஆரிய, ஆதி திராவிடக் குழுமங்களின் கலப்பினமாகச் சிங்கள இனத்துவம் ஓங்கியமையும் காரணமாகலாம். அதேவேளை உபகண்டத்தில் பாரிய தமிழ் இனத்துவம் / இனத்துவங்கள் ஓங்கிய படிமுறையில் (குறிப்பாக சமய, பண்பாட்டுத் துறைகளில்) ஆரியச் செல்வாக்கையும் மறுக்க முடியாது. பெரிதும் மொழிவாரியாகவே ஆரிய, திராவிட வேறுபாடுகள் பற்றி இங்கு நான் பேசுகிறேன். இன இயல்புகளின் அடிப்படையிலோ, வேறு அம்சங்களின் அடிப்படையிலோ அல்ல.
தற்காலத்தில் சமயமும், மொழியும், (அவற்றை அடிப்படையாகக் கொண்டு பெரிதும் அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட) தேசியவாதங்களும் ஆரிய, திராவிட வேறுபாடுகளை ஆணியடித்து இறுக்கியுள்ளன. தேசியவாதங்கள் இயல்பாக எழுபவை என்பதற்கில்லை. தேசியவாதங்கள் தோற்றுவிக்கப்படுபவை அல்லது உருவாக்கப்படுபவை. பாமர மக்களை விட மேல்வர்க்கத்தவரிடையே தேசியவாதம் மேலோங்கியிருப்பதற்கு அது ஒரு காரணம். மற்றும்படி, அதாவது தருக்க நியாயப்படி, (ஆங்கிலம்) கற்றோரிடையே, (மதச்சார்பற்ற) உலகியல் தரப்பினரிடையே தேசியவாதம் என்பது தாழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? இங்கு நாம் குறிப்பிடும் தேசியவாதம் பெரிதும் இனத்துவ தேசியவாதம்; குடிமைத் தேசியவாதமோ, அரசியல் தேசியவாதமோ அல்ல.
வெறுமனே பெரும்பான்மை-சிறுபான்மைப் பரிமாணங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இனத்துவ முரண்பாட்டை ஆராய முடியாது. சிங்களத் தேசியவாதம் பெரிதும் (பெளத்த) சமயத்தை அடிப்படையாகக் கொண்டது; (பெளத்த) சமயத்தின் மேன்மையை மார்தட்டுவது. தமிழ்த் தேசியவாதம் பெரிதும் மொழியையும், பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டது; தமிழ்ப் பண்பாட்டின் மேன்மையை மார்தட்டுவது. தத்தம் பாரம்பரியத்தை, பரம்பரையை, குருதியை அடிப்படையாக வைத்து தமது இனத்துவத் தொனியை அவை இரண்டும் அவ்வப்பொழுது அறுத்துரைத்து வந்துள்ளன. ஒருபுறம் பெரும்பான்மை, மறுபுறம் மனக்குறைகளுடன் கூடிய சிறுபான்மை என்ற ஏற்றத்தாழ்விலிருந்து அது பிறந்திருக்கக் கூடும்.
(1948ல்) சுதந்திரம் கிடைத்த பின்னர் எழுந்த நிலைவரத்தையே இங்கு நான் கருத்தில் கொள்கிறேன். இக்காலகட்டத்தில் மனக்குறைகளுடன் கூடிய சிறுபான்மை என்ற நிலையிலிருந்து, அரசியல் நோக்கங்களுக்கான கருத்தியல் வேட்கைகள் என்ற நிலைக்கு தமிழ்த் தேசியவாதம் நகர்ந்திருக்கக் கூடும். அதேவேளை சிங்களப் பெரும்பான்மையோ மிதவாத நிலைக்கு நகர்ந்தது கிடையாது; இனி நகர்ந்தாலும் கூட மீளிணக்கம் கைகூடுவது கடினம்.
முஸ்லீம் அரசியலை முஸ்லீம் தேசியவாதம் என்று கொள்ளலாமோ என்பது தெளிவாகத் தெரியவில்லை; கொள்வது சாத்தியம் என்றால், அது சமயத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்களத் தேசியவாதம் போல் அமையும். அண்மைக் காலத்தில் அவற்றிடையே ஏற்பட்ட பிணக்குகளுக்கு அது ஒரு காரணமாகலாம். சிங்கள பெளத்த தரப்பே வன்முறையில் இறங்கியது. அதேவேளை முஸ்லீம் சமூகத்தை ஓர் இனத்துவ சமூகம் என்று கொள்ளலாம் என்பதில் ஐயமில்லை. அதன் சமயப் பிணைப்பும், தனித்துவமும், வெளியுலகச் செல்வாக்கும் மேலோங்கவே, அண்மைக்கால நிகழ்வுகளுக்கு அது அடிகோலியது.
இனத்துவத்தை ஏற்றிப்போற்றுதல்: ஒரு மக்கள்திரள் எதற்காக அதன் சொந்தக் குழுமத்தை அல்லது இனத்துவத்தை ஏற்றிப்போற்ற முயல்கிறது? மெய்யாகவோ, கற்பிதமாகவோ முரண்படும் வாதங்களையும், எதிர்வாதங்களையும் முன்வைக்கிறது? இது சிக்குப்பிக்கு மிகுந்த ஓர் உளவியற் புதிர் அல்லது சமூகவியற் புதிர். இத்தகைய சர்ச்சைகள் பெரிதும் முற்காலத்தை, பண்டைக்காலத்தைப் பற்றியவை. இலங்கைத் தீவில் முதன்முதல் கால்வைத்தவர் யார்? யார் உயர்ந்தோர்? யார் தாழ்ந்தோர்? இவற்றுட் சில அபத்தமான சிந்தனை ஓட்டங்கள். இவை நேர்முகமாக முன்வைக்கப்படுவதில்லை; மறைமுகமாக முன்வைக்கப் படுபவை.
இப்பொழுது நாங்கள் 21ம் நூற்றாண்டில் வாழ்கிறோம். சுதந்திர உலகில் வாழ்கிறோம். இவ்வுலகிலே, இப்பொழுதே மானுடத்தின் தேவைகளும், கண்ணியமும், உரிமைகளுமே பொருட்படுத்தப்பட வேண்டியவை. பெரும்பான்மையோரின் அல்லது சிறுபான்மையோரின் வெறும் இனத்துவ, சமய வாதங்களும் பிணக்குகளும் எங்களை மெய்யான மானுடப் பிரச்சனைகளிலிருந்தும், சர்ச்சைகளிலிருந்தும் அறவே திசைதிருப்பி விடுகின்றன; ஏழ்மை, சமூக ஏற்றத்தாழ்வுகள், நீதி, சூழல் சார்ந்த நெருக்கடிகளிலிருந்து எங்களைத் திசைதிருப்பி விடுகின்றன.
எவரும், எந்தக் குழுமமும் தமது சமயத்தை, மொழியை, பண்பாட்டை, மரபை மெச்சுவதில் தப்பில்லை. பிற தரப்பினரின் உரிமைகளை மீறாமல் அவ்வாறு செய்யும் உரிமை அனைவருக்கும் உண்டு. மேல்நாட்டவரால் கட்டியாளப்பட்ட காலத்தில் மக்கள் தமது பெருமையை நிலைநாட்டும் வண்ணம், தமது விடுதலையைக் கருத்தில் கொண்டு தமது பழமையைத் தேர்ந்துதெளிந்து, அதை ஏற்றிப்போற்றியதற்கு நியாமுண்டு. கட்டியாளுகைக்கு எதிரான அத்தகைய போராட்டத்தைக் கூட எமக்கான தேவைகள், கண்ணியம், உரிமைகள் என்பவற்றின் அடிப்படையில் மேற்கொண்டிருக்கலாம்.
சுதந்திரம் கிடைத்த பின்னர் இனத்துவ சமூகங்கள், குறிப்பாக அருகருகே பின்னிப் பிணைந்து வாழும் குழுமங்கள் நாகரிக முரண்பாடு பற்றி வாதித்தோ, பழமையை ஏற்றிப்போற்றியோ தமது அரசியலை நடத்துவது முழு அழிவுக்கே இட்டுச்செல்லும். கூட்டிக் கழித்துப் பார்த்தால், இத்தீவில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லீம் தரப்புகள் மூன்றும் தென்னாசியாவின் இன்றியமையாத கூறாக விளங்கும் ஒரே நாகரிகத்தின் அங்கங்களே. ஏன், மானுடர் அனைவரையும் கூட ஒரே நாகரிகத்தின் அங்கங்களாக ஏற்றுக்கொள்வதே இன்னும் பொருத்தம். அதேவேளை கிழக்கு, மேற்கு வாரியாகவோ, வேறு வகையிலோ விரிந்து பரந்த (சமய வேறுபாடுகள் போன்று) மறைந்திடாத வேறுபாடுகளை, ஒருங்கிசையா வேறுபாடுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மக்கள் அன்றாடம் முரண்படுகிறார்கள்; அக்கிரமம் புரிகிறார்கள். எனவே அவர்கள் சரிவர நாகரிகம் எய்திவிட்டார்களா என்று வினவுவதே இன்னும் பொருத்தம். எந்த மொழியிலும் நாகரிகம் என்பது மானுட, சமூக விருத்தியில் முன்னகர்ந்த கட்டம் என்றே பொருள்படும்.
இனத்துவத்தின் வேர்கள் சில: ஒருவர் சிங்களவரா, தமிழரா, முஸ்லீமா என்று வினவுவதில் தப்பில்லை. இனத்துவம் என்பது வெறுமனே ஒருவரின் இனத்துவச் சார்பு அல்லது ஒருவரின் இனத்துவப் பண்பாடு மீது கொண்ட நேயம் என்ற பொருளில் இங்கு பேசப்படவில்லை. இனத்துவ தோற்றுவாயின் அடிப்படையில் ஒருவர் பக்கஞ்சாய்வதையும், காழ்ப்புக் கொள்வதையுமே இங்கு நாம் கருத்தில் கொள்கிறோம். அதாவது இனத்துவ நேயத்தை அல்ல, இனத்துவக் காழ்ப்பையே இங்கு நாம் கருத்தில் கொள்கிறோம்.
ஒருவரின் வலிமையான இனத்துவ உணர்வுகள் அல்லது வசியப்பட்ட இனத்துவ உணர்வுகள், அவர் தனியாளாகவோ சமூகவாரியாகவோ புறங்கட்டப்பட்டதன் வெளிப்பாடாகலாம். அத்தகைய ஆட்களே தீவிர, பாமர இயக்கங்கள் பலவற்றில் மெய் விசுவாசிகளாக விளங்குவது வழக்கம். இதை Eric Hoffer என்பவர் "The True Believer: Thoughts on the Nature of Mass Movements" (1951) என்ற நூலில் விளக்கியுள்ளார். குழுமங்களைப் பொறுத்தவரை அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.
இனத்துவ முரண்பாடுகளுக்கான தலையாய காரணங்கள் பெரிதும் அரசியல் சார்ந்தவை. ஆதலால் அவற்றை வெறுமனே இனத்துவ முரண்பாடுகள் என்று கொள்வதை விடுத்து, இனத்துவ அரசியல் முரண்பாடுகள் என்று கொள்வதே மிகவும் பொருத்தம். இலங்கையிலோ, வேறெந்த நாட்டிலோ அவற்றுக்கான காரணங்களை சம்பந்தப்பட்ட அரசியற் கட்டுக்கோப்பினுள் அல்லது அரசியற் பண்பாட்டினுள் கண்டறியலாம். சிலவேளைகளில் பொருளாதார நிலைவரங்கள் அவற்றுக்கு முண்டு கொடுப்பதுண்டு. அதிகாரப் போராட்டங்களுக்காக இனத்துவ வேறுபாடுகள் அல்லது மனக்குறைகள் ஒருங்குதிரட்டப்பட்டு, அரசியல்மயமாக்கப்பட்டு, கையாளப்படுகின்றன; அப்பாவி மக்களிடையே "நாங்கள்", "அவர்கள்" என்னும் மனப்பான்மை தோற்றுவிக்கப்படுகிறது.
ருவாண்டாவை எடுத்துக்கொள்வோம். அங்கு ஹுற்று இனத்தவரும், துற்சி இனத்தவரும் ஒரே மொழி, ஒரே பாண்பாடு, ஒரே ஆள்புலம், ஒரே சமயம் கொண்டவர்கள். அவர்களிடையே தொழில்சார்ந்த வேறுபாடுகளும், அறிவியல் அடிப்படையின்றி உணரப்பட்ட சரீர வேறுபாடுகளும் காணப்பட்டன. எனினும் அவ்வேறுபாடுகள் அல்லது அடையாளங்கள் அரசியல்மயமாக்கப்பட்டு, 1994ல் ஒரு மாபெரும் படுகொலையே நிகழ்த்தப்பட்டது. "மரண முரண்பாடுகளைத் தடுப்பது" (Preventing Deadly Conflicts) பற்றி 1997ல் காணெஜி ஆணையம் (Carnegie Commission) விடுத்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: "ஒரு முரண்பாட்டுக்கு வெறுமனே இனத்துவப் போர் என்று முத்திரை குத்துவதன் மூலம் இனத்துவ, பண்பாட்டு, சமய வேறுபாடுகளினால் வன்முரண்பாடு தவறாது நிகழும் என்ற தவறான எண்ணம் ஊட்டப்படும்; அதனால் தவறான விளக்கத்துடன் கூடிய கொள்கைகள் தேர்ந்தெடுக்கப்படக் கூடும். ஆதலால் அவ்வேறுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும்"
முடிவுரை: வெறும் இனத்துவ வேறுபாடுகளால் வன்முரண்பாடுகள் நிகழ்வதில்லை (அவை இனத்துவ அரசியல் முரண்பாடுகளால் விளைபவை). இனி, அரசியல்வாதிகள் மட்டுமே இனத்துவத்தை ஒருங்குதிரட்டிக் கையாள்வதில்லை. இடைநிலைக் குழுமங்கள் பலவும் இதில் ஈடுபட்டுள்ளன. மக்களும் தவறான விளக்கம் கொண்டு (மார்க்ஸ் கூறுவது போல் பொய்யுணர்வு கொண்டு) பெரிதும் முரண்படுவதுண்டு. இங்குதான் எமக்கு அறிவுத்தெளிவு தேவைப்படுகிறது. 1843ல் யூத-கிறீஸ்தவ முரண்பாட்டைக் கருத்தில் கொண்டு மார்க்ஸ் தொடுத்த வினாவும், இறுத்த விடையும் கவனிக்கத்தக்கவை:
"பகைமைக்குத் தீர்வுகாண்பது எப்படி? அதை அசாத்தியமாக்கி!"
முரணியல் தருக்கத்தை மட்டுமீறிக் கையாண்டு, "சமயத்தை ஒழித்து சமயப் பகைமையை ஒழிக்க வேண்டும்" என்று மார்க்ஸ் முழங்கியிருக்கலாம். எனினும் அரசினை உலகியல்மயமாக்குவது என்ற கருத்துப்படவே அவர் அப்படிக் கூறியதாக நான் எண்ணுகிறேன். சில பொதுவுடைமை நாடுகள் புரிந்தது போல, சமயத்தை அடக்கியொடுக்குவது என்ற கருத்துப்பட அல்ல. மார்க்சின் கூற்று இனத்துவ முரண்பாடுகளைப் பொறுத்தவரையிலும் (இனத்துவத்துக்கும் அல்லது இனத்துவக்களைவுக்கும்) ஓரளவு பொருந்துகிறது. அந்த வகையில் "ஒரு முரண்பாட்டை அசாத்தியமாக்குவது" குடியாட்சிக்கும், குடியாட்சி அரசுக்கும் இட்ட பணியாகிறது. அது உலக சமூகத்துக்கும் இட்ட பணியாகிறது.
(யூதரையும் கிறீஸ்தவரையும் குறித்து மார்க்ஸ் கருத்துரைத்தது போல) சிங்களவர், தமிழர், முஸ்லீங்கள் ஆகிய மூன்று தரப்பினரும் தத்தம் இனத்துவத்தை தமது விருத்தியில் ஒரு கட்டமாகப் புரிந்துகொண்டால், அவர்கள் திறனாய்வுக்கும், அறிதிறத்துக்கும், மனிதாபிமானத்துக்கும் இடங்கொடுத்து உறவாட முடியும். "பாம்பு ஒரு கட்டத்தில் செட்டை கழற்றுவது போன்ற பணியே இது" என்று மார்க்ஸ் அதை உருவகப்படுத்தினார். "அவ்வப்பொழுது செட்டை கழற்றும் பாம்பாக மானுடரைப் புரிந்துகொள்க; புரிந்துகொண்டால், நீங்கள் மேற்கொண்டு முரண்பட மாட்டீர்கள்" என்றார் மார்க்ஸ். அவர் கூற்றை நான் அவர் மொழியில் கூறவில்லை. என் மொழியில் எமது நிலைவரத்துக்கு ஏற்றமுறையில் கூறுகிறேன். யூத, கிறீஸ்தவ சமயங்களை ஒரே படிமுறையின் அல்லது ஒரே பாம்பின் இரு கட்டங்களாகப் புரிந்துகொண்டே மார்க்ஸ் அவ்வாறு கருத்துரைத்தார். இலங்கையைப் பொறுத்தவரை, நாங்கள் ஒரே இனத்தைச் சேர்ந்த, ஒரே வகையான தோல் எனும் இனத்துவம் பூண்ட ஒரு சோடி பாம்புகள் எனலாம்!
இளமையில், நன்னம்பிக்கை மிகுந்த நிலைமையில், மார்க்ஸ் அவ்வாறு கூறியிருக்கலாம். இனத்துவத்தை விஞ்சுவது அத்துணை எளிதல்ல. எனினும் அவர் கூற்றில் ஓர் அரிய உண்மை பொதிந்துள்ளது; மெய்ந்நிலையை, மானுட விருத்தியை - புரிந்துகொள்ளத் தயாராக இருப்பவர்கள் கவனிக்கவேண்டிய அரிய உண்மை பொதிந்துள்ளது: இனத்துவம் என்பது மானுட விருத்தியில் ஒரு கட்டம் மட்டுமே. இனத்துவ முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு எமது புரிகையிலாவது, எமது கண்ணோட்டத்திலாவது நாம் இனத்துவத்திலிருந்து மானுடத்துக்கு நகரலாமே!
Dr. Laksiri Fernando, Transforming from Ethnicity to Common Humanity: The Long March Necessary, Colombo Telegraph, 2016-04-25, தமிழ்: மணி வேலுப்பிள்ளை
No comments:
Post a Comment