தேசத்தை நலம்பெற வைப்பது ஒரு தலைமைத்துவப் பணி
கலாநிதி நிகால் ஜயவிக்கிரமா
அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக ஓர் அரசியல் தலைவர் தனது தொகுதிக்குத் திரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். குடியாட்சி ஓங்கிய சமூகத்தில் அத்தகைய அரசியல் தலைவரிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன? தனது தொகுதிவாழ் வாக்காளர்களின் எண்ணங்களையும், அச்சங்களையும், பக்கச்சாய்வுகளையும் அவர் பிரதிபலிக்க வேண்டுமா? அல்லது தனது சொந்தக் கண்ணோட்டத்துக்கும், விழுமியங்களுக்கும், கணிப்புக்கும் அமைய ஒரு பாதையை வகுத்து, அப்பாதையில் தனது வாக்காளர்களை வழிநடத்த முயல வேண்டுமா?
அதிபர் ஜெயவர்த்தனா பதவிநீங்கிய பின்னர் இது குறித்து ஆழ்ந்து சிந்தித்தார். தனது வாக்காளர்களின் விருப்பங்களுடன் ஒருவர் எவ்வளவு தூரம் ஒத்துப்போகலாம் என்று எண்ணிப் பார்த்தார். ஒரு படையாட்சித் தலைவரோ, சர்வாதிகாரியோ அதையிட்டுக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் ஒரு குடியாட்சித் தலைவர் கவலைப்பட்டே ஆகவேண்டும். காரணம், அவருக்குப் பெரிதும் தோள் கொடுப்போர் அவரது வாக்காளர்களே. தலைமைப் பதவியில் தன்னை அமர்த்தியோரின் ஆதரவை அவர் தொடர்ந்தும் ஈட்டிக் கொண்டாலொழிய, அவர் மீண்டும் தேர்தலில் வெல்வது மிகவும் கடினம் என்பதை ஜெயவர்த்தனா புரிந்துகொண்டார்.
பொருளாதார விடயங்களில் என்ன செய்யமுடியும், என்ன செய்யமுடியாது என்பதை வெளியுலகக் காரணிகளே தீர்மானிப்பவை; ஆதலால், அது வாக்காளர்களுக்கு எவ்வளவு கசந்தாலும் கூட, பொருளாதார விடயங்களில் அவர் விதிவிலக்களிக்க விரும்பினார். கதையோடு கதையாக, தலைமையை எட்ட ஆசைப்படுவோர்க்கு ஒரு திட்பமான புத்திமதியையும் அவர் உதிர்த்தார்: அரசியல் என்பது "நின்றுபிடிப்பவர்களின் ஓட்டப்பந்தயம்" என்றார். அடுத்த வேட்பாளரை உதைக்கவோ, அவர் தலைக்கு மேலாகப் பாய்ந்து கடக்கவோ முயலாமல், வேட்பாளர்கள் அனைவரும் மங்கி மறையும்வரை நின்றுபிடிப்பவரே வெற்றி ஈட்டுவார். ஆதலால் அரசியல் தலைமையை நாடுவோர்க்கு உடல்நலம் இன்றியமையாதது என்று கூறினார்: "உங்கள் சிறுநீரகத்தைப் பேணி வைத்திருங்கள்; உங்கள் இதயத்தைப் பேணிக்கொள்ளுங்கள்; உணவைக் குறையுங்கள்; அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்யாதீர்கள்; ஈற்றில், நின்றுபிடிக்கும் பந்தயத்தில் வெற்றிபெற்று, தலைவராக உயருங்கள்" என்று கூறினார்.
நான் ஓர் அரசியல்வாதி அல்லன். இந்த வயதில் அரசியல்வாதியாக மாறும் எண்ணமும் எனக்கில்லை. அந்த வகையில் அதிபர் ஜெயவர்த்தனாவுடன் மாறுபடும் சுதந்திரம் படைத்தவன் நான். தலைவருக்கு ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும்; ஞானமும் நேர்மையும் கொண்டு தனது குறிக்கோளை நோக்கி அவர் நகர வேண்டும்; தான் நேரிய பாதையில் நகர்கிறார் என்பதை வாக்காளர்கள் நம்பும் வண்ணம் செயற்படுவது அவர்தம் பொறுப்பு என்றே நான் கருதுகிறேன்.
அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தை எட்டிய வேளையில், அதிபர் ஆபிரகாம் லிங்கனின் தரப்பு தளர்வடைந்த வேளையில், அடிமைத்தளையை ஒழிக்கும் அலுவலில் விட்டுக் கொடுக்கலாமே என்று அவரது கட்சியினர் அவரிடம் புத்திமதி கூறினர். அடிமைத்தளையை ஒழிக்க உறுதிபூண்ட லிங்கன் அவர்களது புத்திமதியைப் பொருட்படுத்தவில்லை.
தென் ஆபிரிக்காவில் வெற்றிவாகை சூடிய நெல்சன் மன்டேலா வெள்ளையருடன் பெருந்தன்மையோடு உறவாடியது கண்டு கருப்பின மக்கள் சீற்றம் கொண்டதுண்டு. முன்னைய வெள்ளையின நிறவெறி ஆட்சியில் மிருகத்தனமாக அடக்கியொடுக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஆபிரிக்க கருப்பின மக்கள் அல்லவா அவர்கள்? எனினும் லிங்கனும் மன்டேலாவும் தத்தம் நாடுகளில் அமைதியை நிலைநாட்டினார்கள். அதன் பயனாக அமெரிக்காவில் வடபுலத்தவரும் தென்புலத்தவரும் கூடிவாழ முடிந்தது. தென் ஆபிரிக்காவில் கருப்பினத்தவரும் வெள்ளையரும் கூடிவாழலாயினர்.
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே அரை நூற்றாண்டுக்கு மேலாக மனக்கசப்பு நீடித்தும் கூட, அமெரிக்க பேரவையும் அமெரிக்க கியூபரும் மும்முரமாக எதிர்த்தும் கூட, கியூபாவுடனும் (ஈரானுடனும்) மறுபடி உறவு பூண்பதில் அதிபர் ஒபாமா அண்மையில் அடைந்த வெற்றி தலைமைத்துவத்துக்கு இன்னோர் எடுத்துக்காட்டு. இவை எல்லாம் தலைமைத்துவத்தின் பலாபலன்கள் என்றே நான் கருதுகிறேன்.
எனது உரைக்கு வரம்பிடும் வண்ணம் "தேசத்தை நலம்பெற வைத்தல்" என்னும் தொடரை இங்கு நான் வரையறுக்க வேண்டியுள்ளது. நலம்பெற வைப்பது என்பது குணப்படுத்துவது, சீர்ப்படுத்துவது, மீளிணக்குவது, மீள்நிலைப்படுத்துவது... என்றெல்லாம் பொருள்படும். தேசம் புண்பட்டுள்ளது, ஊறுபட்டுள்ளது, ஒடிந்துள்ளது... என்பது அதில் தொக்கிநிற்கிறது. இங்கு "தேசம்" என்பது இலங்கை என்று பொருள்படுவது. ஆனாலும் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அனகாரிக தர்மபாலா "சிங்கள தேசம்" பற்றி வன்மையுடன் எழுதத் தொடங்கியதுண்டு. காலப்போக்கில் "சிங்களம்" என்பது "தேசம்" அல்லது "இலங்கைத் தேசம்" ஆனது. 1944ல் பொதுவுடைமைக் கட்சியே முதன்முதல் "தமிழ்த் தேசம்" பற்றிக் குறிப்பிட்டது. 1976ம் ஆண்டில் முழங்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தில் "தமிழ்த் தேசம்" என்னும் பதம் நிலையூன்றியது.
இன்றைய உலகில் தேசிய வேறுபாடு பெரிதும் கரிசனைக்குரிய சங்கதி அல்ல. பல நூற்றாண்டுகளாக "ஆங்கிலேய" என்பதும் "பிரித்தானிய" என்பதும் ஒத்தசொற்களாக விளங்கியமை அதற்கோர் எடுத்துக்காட்டு. இன்று "பெரிய பிரித்தானியா" எனப்படும் தேசத்துள் குறைந்தது மூன்று தேசங்களாவது, அதாவது ஆங்கில தேசம், ஸ்கொட்லாந்திய தேசம், வேல்சிய தேசம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒவ்வொரு தேசத்துக்கும் தனித்துவமான மொழி, சமயம், பெருமைவாய்ந்த பண்பாடு உண்டு. ஸ்கொட்லாந்தும், வேல்சும் தமது சொந்த சட்ட மன்றங்களையும், சொந்த முதலமைச்சர்களையும் கொண்டுள்ளன. அவற்றின் பிரதிநிதிகள் பெரிய பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார்கள். அம்மூன்று தேசங்களும் வட அயர்லாந்துடன் சேர்ந்து ஐக்கிய இராச்சியம் ஆகின்றன. முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுண் ஓர் ஸ்கொட்லாந்தியர், ஓர் ஸ்கொட்லாந்திய தேர்தல்தொகுதியின் பிரதிநிதி.
அது போலவே இலங்கைத் தேசம் சிங்கள தேசத்தையும், தமிழ்த் தேசத்தையும், வேறு பல சமூகங்களையும் கொண்டுள்ளது. அந்த இலங்கைத் தேசம் ஒடிந்த விதத்தை இனி நான் எடுத்துரைக்கப் போகிறேன்.
2. ஒடிந்த தேசம்: இலங்கைத் தேசம் எப்பொழுது ஒடிந்தது? அது ஒரு தனி நிகழ்வல்ல, ஒரு நிகழ்வுத்தொடர்; தேசம் புண்படவும், ஊறுபடவும், ஒடியவும் வழிவகுத்த நிகழ்வுத்தொடர். 20ம் நூற்றாண்டின் முன்கால்வாசியில் இனத்துவ சமூகங்கள் அனைத்தும் ஒரே இலங்கைச் சமூகமாக இணைந்து அரசியல்யாப்புச் சீர்திருத்தம் நாடிக் கிளர்ந்தெழுந்தன. 1931ல் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. அரச மன்றமும், அமைச்சரவையும் அமைக்கப்பட்டன.
தன்னரசு கிடைக்கும் தறுவாயில் சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மை ஆட்சி குறித்து அஞ்சுவது இயற்கை. அதற்குக் காரணம் இருந்தது. 1937ல் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவினால் அமைக்கப்பட்ட சிங்கள மகா சபை சிங்கள மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டி வந்தது. கண்டிய தேசிய அவை ஓர் இணைப்பாட்சிக் கட்டமைப்பை நாடிக் கிளர்ந்தெழுந்தது; கண்டி அரசு அந்த இணைப்பாட்சிக் கட்டமைப்பில் இணையவிருந்த ஒரு கூறாகும். 1936ல் அரச மன்றத்துக்கு நடந்த தேர்தலை அடுத்து கரையோரச் சிங்கள உறுப்பினர்களும், மலையகச் சிங்கள உறுப்பினர்களும் ஐரோப்பிய உறுப்பினர்களின் ஆதரவுடன் முற்றிலும் சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை - முழுச்சிங்கள அமைச்சரவையை - தேர்ந்தெடுப்பதில் வெற்றிகண்டார்கள் ("ஐரோப்பியருக்கு இரு அமைச்சர்கள்" என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. நோக்கம் கைகூடியதும் வாக்குறுதி மீறப்பட்டது!)
3. 1946ம் ஆண்டின் அரசியல்யாப்பு: சிறுபான்மைச் சமூகங்களின் அச்சத்தை தணிக்கும் வண்ணம் அரசியல்யாப்பில் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை சோல்பரி ஆணையம் (Soulbury Commission) பரிந்துரைத்தது:
(அ) சிறுபான்மை இனத்தவரோ, சமயத்தவரோ கணிசமானளவு வாழும் பகுதிகளில் பல்லங்கத்தவர் தொகுதிகள்;
(ஆ) பிரதிநித்துவம் போதாத தரப்புகளுக்கு பிரதிநிதிகள் அவையில் 6 நியமன உறுப்பினர்கள்;
(இ) திடுதிப்பென்று சட்டம் இயற்றாவாறு தடுப்பதிலும், பொறிபறக்கும் சர்ச்சைகளை நிதானமாகக் கையாள்வதிலும் சிறுபான்மையோருக்கு கைகொடுக்கும் மூதவை;
(ஈ) அரசாங்க நியமனங்களில் அறவே நடுநிலை வகிக்க உத்தரவாதம் அளிக்கும் சுதந்திர அரசாங்க சேவை ஆணையம்;
(உ) நாடாளுமன்றம் பிற சமூகத்தவர்மீது அல்லது சமயத்தவர்மீது விதிக்காத இக்கட்டுகளை அல்லது கட்டுப்பாடுகளை ஒரு சமூகத்தவர்மீது அல்லது சமயத்தவர்மீது விதிப்பதைத் தடுக்கும் ஏற்பாடு; பிற சமூகத்தவர்க்கு அல்லது சமயத்தவர்க்கு ஈயாத சலுகையை அல்லது அனுகூலத்தை ஒரு சமூகத்தவர்க்கு அல்லது சமயத்தவர்க்கு ஈவதைத் தடுக்கும் ஏற்பாடு (இது பின்னர் 29ம் பிரிவு எனப்பட்டது).
1946ம் ஆண்டின் அரசியல்யாப்பில் மேற்படி பாதுகாப்புகள் இடம்பெற்றிருந்தன. அதை "சிறுபான்மையோரைப் பாதுகாக்கும் நோக்குடன் சமயோசிதம் கொண்ட மானுடர் வகுக்கக்கூடிய ஏற்பாடுகள் அனைத்தும் பொதியப்பெற்ற அரசியல்யாப்பு" என்று ஒரு கருத்துரையாளர் வர்ணித்தார். "இப்பாதுகாப்புகள் இலங்கை மக்களிடையே உரிமைச் சமநிலையைப் பற்றுறுதியுடன் பேணும்; இவற்றை அடிப்படை நிபந்தனைகளாகக் கொண்டே இந்த அரசியல்யாப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்; ஆதலால் இவை மாற்றமுடியாதவை" என்று கோமறை மன்றமும் (Privy Council) பின்னர் கருத்துரைத்தது. நியாயமான காலப்பகுதிக்குள் சிங்களமும், தமிழும் இலங்கையில் ஆட்சிமொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அதற்கு முன்னரே (1944 வைகாசி மாதம்) அரச மன்றம் தீர்மானித்திருந்தது.
4. 1947ல் பொதுத்தேர்தலும் சுதந்திரமும்: புதிதாக அமைக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் டி. எஸ். சேனநாயக்கா 1947ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 95 இருக்கைகளுள் 42 இருக்கைகளை வென்று 14 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவையை அமைத்தார். வட மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சைத் தமிழர்கள் இருவருக்கும், முஸ்லீம் ஒருவருக்கும் அமைச்சரவையில் அவர் இடங்கொடுத்தார்: (1) மன்னாரைச் சேர்ந்த முன்னாள் குடியியற் சேவையாளர் சி. சிற்றம்பலம்; (2) வவுனியாவைச் சேர்ந்த கணிதவியல் பேராசிரியர் சி. சுந்தரலிங்கம்; (3) கொழும்பைச் சேர்ந்த டி. பி. ஜயா.
1936ல் முழுச்சிங்கள அமைச்சரவையை அமைக்கும் விதத்தை வகுப்பதில் சேனநாயக்காவுக்கு சுந்தரலிங்கம் உதவியதாகக் கூறப்படுகிறது. டொனமூர் அரசியல்யாப்பின்படி அமைக்கப்படும் நிறைவேற்றுக்குழு முறைமையினால் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது; ஆகவே அதற்குப் பதிலாக அமைச்சரவையுடன் கூடிய அரசாங்கத்தையே அமைக்க வேண்டும் என்பதைப் பிரித்தானிய அரசுக்கு எண்பித்துக்காட்டுவதே அப்பொழுது அவ்விருவரதும் நோக்கம் என்று தெரிகிறது.
பல இனங்களும், சமயங்களும், மொழிகளும் கொண்ட இலங்கைத் தேசத்தை ஒருங்குதிரட்டும் நோக்குடன் டி. எஸ். சேனநாயக்கா பல்லின அமைச்சரவையைத் தோற்றுவித்தமை அவரது தலைமைத்துவ நடவடிக்கை ஆகுமா? அல்லது, பெரும்பான்மையோரின் ஆட்சியைக் குறித்து சிறுபான்மையோர் இனிமேல் அஞ்சத் தேவையில்லை என்றும், சுதந்திரத்துக்கு இலங்கை தயாராக இருக்கிறது என்றும், இங்கு சுதந்திரத்துக்கு வேண்டிய வாய்ப்புவளங்கள் இருக்கின்றன என்றும் பிரித்தானிய அரசை நம்பவைப்பதற்குத் தேவைப்படுவதாகக் கருதப்பட்ட ஓர் அரசியல் உபாயம் ஆகுமா? சேனநாயாக்கவின் பதவிக் காலத்திலேயே எங்கள் தெசியக் கொடி வடிவமைக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. அவர் மொழிவாரி, சமயவாரிச் சர்ச்சைகளைத் தவிர்த்தே காய்நகர்த்தினார். அந்த வகையில் ஒரு பல்லின அரசின் சமநிலையைப் பேணிக்கொள்ள அவர் உண்மையிலேயே விரும்பினார் என்றே நான் கருதுகிறேன்.
1948 பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர நாளன்று சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தை திறந்துவைத்த குளவ்செஸ்டர் கோமகனுக்கு (Duke of Gloucester) இலங்கை மூதவையின் சார்பில் நன்றியுரை நல்கிய ஸ்ரீமான் ஒலிவர் குணத்திலகா, "நாங்கள் ஐரோப்பியர், இந்தியர், பறங்கியர், மலாயர், முஸ்லீங்கள், தமிழர், சிங்களவர் ஆகிய பற்பல இனத்தவர்கள்; நாங்கள் இஸ்லாமியர், கிறீஸ்தவர், இந்துக்கள், பெளத்தர்கள் ஆகிய பற்பல சமயத்தவர்கள்; எங்களுள் சிறுபான்மையோரும், பெரும்பான்மையோரும் இருக்கிறார்கள்; எனினும் எங்கள் தேசம் கடந்தகாலத்தில் விளங்கியது போலவே வருங்காலத்திலும் ஒரே தேசமாகவே விளங்கும்" என்று முழங்கினார்.
இலங்கையில் சுதந்திரத்தை அடுத்து இடம்பெற்ற நிகழ்வுகள் பெரிதும் அரசியல் உபாயத்தால் விளைந்தவை. அது சிங்கப்பூரில் லீ குவான் யூ கடைப்பிடித்த அரசியல் உபாயத்திலிருந்து அறவே மாறுபடுவது. அவரது மொழியில் கூறுவதாயின், "சீனா, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, ஆசியாவின் மற்றும் பிற பாகங்கள் பலவற்றிலுமிருந்தும் குடிபெயர்ந்து வந்து இங்கு ஒருங்குதிரண்டவர்களின் பன்மொழித் தேசமே சிங்கப்பூர்." அதை ஆசியாவிலேயே அமைதியும் செழிப்பும் மிகுந்த தேசமாக மாற்றினார் லீ குவான் யூ.
இலங்கை சுதந்திரம் பெற்றபொழுது இலங்கையரே ஆசியாவில் ஆகக்கூடிய சராசரி வருமானம் படைத்தவராக விளங்கினார்கள். படைத்துறைக்கு ஆகக்குறைந்த நிதி ஒதுக்கும் நாடுகளுள் ஒன்றாக, மிகவும் பரந்துபட்ட சமூகநலத் திட்டங்கள் கொண்ட நாடாக, நெடுங்காலமாக அரசியல்யாப்பு நெறிநின்று ஒழுகிவந்த நாடாக, அரசியல் ஒழுங்கமைப்பு - சமூக ஒழுங்கமைப்பு - அரசியல் வாதாட்டம் - ஆட்சி அலுவல் என்பவற்றில் பட்டறிவு கொண்ட நாடாக இலங்கை விளங்கியது. எழுத்தறிவு மேலோங்கியிருந்தது. துடினம் மிகுந்த நடுவகுப்பினர், தேசிய ஊடகத்துறை, மனிதரின் கண்ணியத்திலும் பெறுமதியிலும் உளமார்ந்த பற்றுறுதி... அதாவது பிரித்தானியர் கட்டியாண்ட வேறு தேசம் எதையும் விட சுதந்திரத்துக்கு வேண்டிய அடித்தளம் மிகவும் உறுதிபட வாய்க்கப்பெற்ற தேசமாக புதிய சுதந்திர இலங்கைத் தேசம் விளங்கியது எனலாம். அத்தகைய நாட்டை ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குள் எங்கள் அரசியல் தலைவர்கள் உருக்குலைத்துவிட்டார்கள்.
5. குடியுரிமையும் வாக்குரிமையும்: பதிவுபெற்ற 2,11,915 இந்திய தமிழ் வாக்காளர்கள் மீதே புதிய தேசம் முதன்முதல் இலக்கு வைத்தது. ஆகக்குறைந்தது 5 ஆண்டுகளாக இலங்கையில் தொடர்ச்சியாக வசித்துவந்த பிரித்தானியக் குடிமக்கள் என்ற வகையில் அவர்களுக்கு வாக்குரிமை இருந்தது. 1947ம் ஆண்டு நிகழ்ந்த பொதுத்தேர்தலில் இலங்கை இந்தியக் காங்கிரசின் 7 வேட்பாளர்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அத்துடன் 15க்கு மேற்பட்ட இடதுசாரி எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றி ஈட்டுவதற்கும் அவர்கள் துணைநின்றார்கள்.
அவர்களின் வாக்குரிமையை ஒழிப்பதற்கு அரசாங்கம் முதன்மை கொடுத்தது. அதற்குத் துணிந்த அரசாங்கத்துக்கு இலங்கைத் தமிழ் காங்கிரசின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் மறைமுக ஆதரவு கிடைத்தது. அப்புறம் நாடாளுமன்றம் ஒரு சட்டப்பொதியை இயற்றி, இந்தியத் தமிழ் மக்களின் வலுவை அறவே ஒழித்துக்கட்டியது. 1948ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம், 1949ம் ஆண்டின் இந்திய–பாகிஸ்தானிய வாசிகள் (குடியுரிமைச்) சட்டம், 1949ம் ஆண்டின் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் (திருத்தச்) சட்டம் மூன்றும் சேர்ந்து, அடுத்த பொதுத்தேர்தல் 1952ல் நிகழுந் தறுவாயில், 7 பெருந்தோட்டத் தேர்தல்தொகுதிகளிலும் 1,62,212ஆக இருந்த இந்தியத் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை வெறுமனே 3,191 ஆகக் குறைய வழிவகுத்தன; நாடாளுமன்றத்தில் ஓர் இருக்கையைத் தன்னிலும் ஈட்டமுடியாத நிலைக்கு அவர்களைத் தள்ளிவைத்தன.
நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட முதலாவது சட்டம், ஒருவரின் தந்தை அல்லது தந்தைவழிப் பாட்டனும் பூட்டனும் இலங்கையில் பிறந்தவர் என்பதற்குச் சான்று கோரியதன் மூலம் பிறப்பு வழிவந்த குடியுரிமை என்ற நெறியை விடுத்து, பரம்பரை வழிவந்த குடியுரிமை என்ற நெறியை நிலைநிறுத்தி, பெருந்தோட்டத் தமிழ் மக்களின் குடியுரிமையை, இலங்கை மக்களுள் 12 விழுக்காட்டினரின் (அரைக்கால்வாசியின்) குடியுரிமையை ஒழித்துக்கட்டியது. இரண்டாவது சட்டம், முந்திய 13 ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இடைவிடாது வசித்த சான்று கோரியதன் மூலம் பதிவுவாரியாகவும் கூட அவர்களுக்கு இலங்கைக் குடியுரிமை கைகூடாவாறு தடுத்தது. மூன்றாவது சட்டம் இலங்கைக் குடிமக்களாக விளங்காதவர்களின் வாக்குரிமையை அறவே ஒழித்துக்கட்டியது.
குடியுரிமைச் சட்டம் இந்தியத் தமிழ்ச் சமூகத்துக்கு எதிராகப் பாகுபாடு காட்டியதா? பாகுபாடு காட்டியதாகவே நான் கருதுகிறேன். பாகுபாடு காட்டுவது அரசியல்யாப்பின் 29ம் பிரிவை மீறிய செயல் என்னும் வாதத்தை உச்ச நீதிமன்றமோ, கோமறை மன்றமோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளாமல், அச்சொட்டான அரசியல் தீர்ப்பு என்று எவரும் முத்திரை குத்தும் வண்ணம், அவை தீர்ப்பளித்தன. "ஒரு சட்டமன்றம் அதன் குடிமக்களது கட்டுக்கோப்பினை நிர்ணயிப்பது முற்றிலும் இயல்பான, நியாயமான நடவடிக்கையே" என்று காரணம் கூறி, நாடாளுமன்றத்தின் நடவடிக்கையை அவை ஏற்றுக்கொண்டன. அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கையில் ஏற்கெனவே இந்த நாட்டில் வசித்துவரும் குறிப்பிட்ட சமூகம் எதற்கும் எதிராக இந்த நாடாளுமன்றம் பாகுபாடு காட்டக் கூடாது என்று எமது அரசியல்யாப்பில் உள்ள ஏற்பாட்டை அவ்விரு மன்றங்களும் கண்டு கொள்ளவில்லை. அப்புறம் 10 இலட்சம் மக்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள்.
இந்தியத் தமிழர்கள் இலங்கையில் வசிப்பதால் ஏற்பட்ட பிரச்சனைகள் பலரை உணர்ச்சிவசப்படுத்தும் விதமாகவும், உணர்ச்சியைக் கிளர்த்தும் விதமாகவும் அமைந்தன. எடுத்துக்காட்டாக, 1947ல் நடந்த பொதுத்தேர்தலைக் குறித்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழித்து, 1977ல், (கமத்தொழில் அமைச்சர்) எக்டர் கொப்பெக்கடுவை இட்ட ஓலத்தைக் கேளுங்கள்: "தமது கருத்தை அறுத்துரைக்க முடியாத தோட்டத் தொழிலாளர்கள் சர்வசன வாக்குரிமை ஊடாகத் தமது சொந்தப் பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசியல்யாப்பை வரைந்தோர் எண்ணினார்கள். எனினும் அதனால் விளைந்த அவப்பேறு எனும்படியாக, நாங்கள் சட்டிக்குள்ளிருந்து அடுப்புக்குள் விழுந்தோம். எங்கள் தொகுதிகளில் இந்திய வாக்குகள் மூலம் பெரி சுந்தரங்களும், வைத்திலிங்கங்களும், நடேச ஐயர்களும், பிறகு தொண்டமான்களும் யேசுதாசன்களும், துணிச்சல் மிகுந்த மற்றும் பிற அரசியல்வாதிகளும் அதிகாரத்தை அபகரித்துக் கொண்டார்கள். நாங்கள் படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டோம். நீதிகோரி ஓலமிட்டோம்."
6. தமிழர் சமூகத்தை ஓரங்கட்டல்: அடுத்தடுத்து ஆட்சிபுரிந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஓரங்கட்டும் நோக்குடன் தொடர்ச்சியாக மேற்கொண்ட அரசியல் உபாயங்களின் பெறுபேறாகவே இந்த நாடு பெரிதும் உருக்குலைந்தது (அல்லது அத்தகைய உபாயங்களின் விளைவாக அவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள்). மகாவம்சம் வலியுறுத்துவது போல் புத்தரின் மறைவும் சிங்கள இனத்தின் தோற்றமும் சமகால நிகழ்வுகள் என்றும், இலங்கை ஒரு பெளத்த தீவு என்றும், புத்தரின் போதனையைக் கட்டிக்காக்கும் நோக்குடன் படைக்கப்பட்ட தேசம் என்றும் நம்பி, இப்பெளத்த தீவின் ஒரு பாகத்தில் குடியமர்ந்த தமிழர்மீது பல நூற்றாண்டுகளாக, வரலாற்றுவாரியாக, பெரிதும் நீறுபூத்த நெருப்பாக மனத்தாங்கல் கொண்ட சிங்கள வாக்காளர்களுள் பெரும்பான்மையோரை மேற்படி அரசியல் உபாயங்கள் ஈர்த்திழுக்கும் என்று எண்ணிச் செயற்பட்ட அரசாங்கங்கள் அவை.
அத்தகைய (ஆகமுந்திய) அரசியல் நடவடிக்கைகளுள் அரசாங்கம் அதன் சொந்தச் செலவில் மேற்கொண்ட குடியேற்றத் திட்டங்கள் உள்ளடங்கும். அவை காலத்தின் தேவையாகவும், உவக்கத் தக்கவையாகவும் அப்பொழுது தென்பட்டதுண்டு. அதன் விளைவாக தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களக் குடும்பங்கள் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மக்கள் ஐதாக வாழும் வறண்ட வலயத்தில் குடியமர்த்தப்பட்டன. அம்மாகாணங்களில் வாழும் தமிழரோ தமது தொகையை நீர்த்துப்போக வைப்பதற்கும், அங்கு தமது இனக்கட்டுக்கோப்பினைப் பாரதூரமான முறையில் மாற்றியமைப்பதற்கும் எடுக்கப்பட்ட கேடுகெட்ட முயற்சியாகவே அதை நோக்கினர்.
அரசாங்கம் எந்தெந்த மாகாணங்களில் காணிகளை வழங்குகிறதோ அந்தந்த மாகாணங்களில் வாழும் மக்களையே முதலில் அழைத்து அவற்றைப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டிருக்க வேண்டும்; அதன் பிறகும் வழங்குவதற்குப் போதியளவு காணி எஞ்சியிருந்தால், வேறு பகுதிகளைச் சேர்ந்தோருக்கு உரிய பங்கு கிடைக்க வாய்ப்பிருக்கும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வாதிட்டார்கள். சுதந்திரம் கிடைத்தபொழுது காணப்பட்ட குடியடர்த்தியை மாற்றியமைக்கும் உள்நோக்கத்துடன் வகுக்கப்பட்டதாகத் தென்படும் இக்குடியேற்றக் கொள்கை பிற்காலத்தில் (குடியேற்றப் பகுதிகளில்) வன்முறையுடன் கூடிய இனமோதல்களுக்கு வழிவகுத்தது.
பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தை விடுத்து தமிழையும் சிங்களத்தையும் பாடமொழிகளாகப் புகுத்தும் கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர் தமிழரும் சிங்களவரும் மிகவும் இளவயதிலிருந்தே பிரிவுண்டனர். எனது நற்பேறு எனும்படியாக, மேற்படி கொள்கை புகுத்தப்பட முன்னரே நான் தொடக்கப் பள்ளி சென்றேன்; எல்லாச் சமூகங்களையும் சேர்ந்த சகமாணவர்களுடன் கூடி எனது பள்ளிவாழ்வை மேற்கொள்ளவும், அவர்களின் பண்பாடுகளையும், பலம் பலவீனங்களையும், தனிப்போக்குகளையும் புரிந்துணர்ந்து மதித்து நடக்கவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. பிள்ளைகளை இளவயதிலேயே மொழிவாரியாகப் பிரித்து வைப்பது, இரு சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று உறவாடாமல், ஒன்றை ஒன்று புரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்காமல் அல்லது வாய்ப்பு அருகி அவை நிரந்தரமாகவே, வாழ்நாள் முழுவதும் பிரிந்திருப்பதற்கே வழிவகுக்கும்.
1946ல் பெரும்பான்மை ஆட்சிக்கு அமைந்தொழுக சிறுபான்மையோர் எந்த அடிப்படையில் இணக்கம் தெரிவித்தார்களோ அந்த அடிப்படியில் எட்டப்பட்ட அரசியல்யாப்புவாரியான இணக்கத்தை இலங்கைச் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் மறுதலித்து, தமது மொழிக் கொள்கையைத் தனிச் சிங்கள ஆட்சிமொழிக் கொள்கையாக மாற்றியமை மேற்படி இனத்துவப் பிரிவினையைப் படுமோசமாக்கியது. அரசாங்க எழுதுநர் சேவை, தலைமுறை தலைமுறையாக, கல்விகற்ற இளந்தமிழருக்கு உவப்பான துறையாக விளங்கியது. பல்கலைக்கழகக் கல்வியை நாடாதவர்க்கு அவர்களது வடபுலத் தாயகத்தின் வறண்ட நிலத்துக்கு அப்பால் ஒரு வாழ்வையும், வருமானத்தையும் ஈயும் துறையாக அது விளங்கியது. இனிமேல் அரசாங்க சேவையில் சேர்வதற்கும், உயர்வதற்கும் அவர்கள் சிங்களத்தில் தகைமை ஈட்ட வேண்டியிருந்தது. 1977 முதல் 1981 வரை அரசாங்க எழுதுநர் சேவையில் எழுந்த வெற்றிடங்களுள் 4.9 விழுக்காட்டையே தமிழர் பெற்றுக்கொண்டனர். சிங்களவரோ 93.6 விழுக்காட்டைப் பெற்றுக்கொண்டனர்!
அப்பொழுது தமிழர் எதிர்நோக்கிய அவலம் கோடீசுவரன் வழக்கில் புலனாகியது. கோடீசுவரன் 1952ல் பொது எழுதுநர் சேவைக்கு நியமிக்கப்பட்ட தமிழர். தமிழ்த் தேர்ச்சித் தேர்வுகளில் ஒழுங்காகத் தேறிய கோடீசுவரன் ஆண்டுக்கு 1600 ரூபா முதல் 3780 ரூபா வரை சம்பளம் ஈட்டும் நிலையை எட்டினார். 1962ல் சிங்களத்தில் நடத்தப்பட்ட தேர்ச்சித் தேர்வுக்கு அவர் தோற்றாதபடியால் அவருக்கு சம்பள அதிகரிப்பு மறுக்கப்பட்டது. கோடீசுவரனுக்கு நேர்ந்த கதி பல்லாயிரக் கணக்கான தமிழ் அரசாங்க ஊழியர்களுக்கும் நேர்ந்திருத்தல் திண்ணம். கோடீசுவரன் ஆட்சிமொழிச் சட்டத்தை எதிர்த்து கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார். மாவட்ட நீதிபதி ஓ. எல். டி கிரெஸ்டர் கவனமாக நிதானித்து தீர்ப்பளிக்கையில் பின்வரும் கருத்தை உதிர்த்தார்:
"ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் மொழியை மறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பேச, எழுத, வாசிக்கும் நிலைமை காணப்படுமிடத்து ஒரு சமூகத்தின் மொழியை ஆட்சிமொழியாகத் தெரிவுசெய்வதால், எந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் மொழி ஆட்சிமொழியாகத் தெரிவுசெய்யப்படவில்லையோ அந்தச் சமூகங்ளைச் சேர்ந்தவர்கள் தமது மொழிக்கு மேன்மை அளிக்கப்படவில்லை என்பது குறித்து எவ்வளவு விசனப்பட்டாலும் கூட, அவர்களுக்கு எவ்வித இக்கட்டும் நிகழ முடியாது என்பது வெளிப்படை. ஆனால் இலங்கையில் வாழும் ஒவ்வொரு சமூகத்தவரும் மறு சமூகத்தவரின் மொழியில் தேர்ச்சி உடையவர் அல்லர். ஆதலால் ஒரு சமூகத்தவரின் மொழியை ஆட்சிமொழியாகத் தெரிவுசெய்வதால், அந்த மொழியில் தேர்ச்சியற்ற சமூகத்தவர் இயலாமைக்கு உள்ளாக்கப்படாவிட்டாலும் கூட, ஆகக்குறைந்தது வசதியீனத்துக்காவது உள்ளாக்கப்பட்டே தீருவர்."
ஆட்சி அலுவலை எந்த மொழியில் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பது நாடாளுமன்றத்தின் நியாயபூர்வமான பணியே; அதைத் தீர்மானிக்கும் வேளையில் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி தெரிவுசெய்யப்படல் வழமையே; எனினும் ஒரு சட்டத்தின் நோக்கத்தை அதன் நடைமுறையிலும் விளைவிலுமே இனங்காண வேண்டும்; ஆட்சிமொழிச் சட்டம் ஒரு சமூகத்துக்கு அளிக்காத அனுகூலத்தை மறு சமூகத்துக்கு அளிக்கிறது; அந்த வகையில் அச்சட்டம் அரசியல்யாப்பின் 29வது பிரிவை மீறுவதாய் அமைகிறது; ஆதலால் அது செல்லுபடியாகாது என்று அவர் தீர்ப்பளித்தார்.
அத்தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது. திரும்பவும் உச்ச நீதிமன்று பின்வாங்கியது. தலைமை நீதியரசர் எச். என். ஜி. பர்னாந்து மெய்யான பிரச்சனையைத் தவிர்த்துவிட்டு, இலங்கையில் அரசாங்க உழியர் எவரும் தனது சம்பளத்தை மீட்பதற்கு அரசுமீது வழக்குத் தொடுக்க உரிமை அற்றவர் என்று தீர்ப்பளித்தார்.
அத்தீர்ப்புக்கு எதிராக கோமறை மன்றுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதியரசர் அளித்த தீர்ப்பு தவறானது என்று அறிவித்த கோமறை மன்று, மெய்யான பிரச்சனையைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்கும்படி தெரிவித்து, அந்த வழக்கை உச்ச நீதிமன்றுக்கே திருப்பி அனுப்பியது. 1972ல் இயற்றப்பட்ட அரசியல்யாப்பில் ஆட்சிமொழிச் சட்டம் சேர்க்கப்படும் வரை மேற்படி மேன்முறையீடு விசாரணைப் பட்டியலில் இடம்பெறாத காரணம் புரியவில்லை. புதிய இலங்கைக் குடியரசு கோடீசுவரனுக்கு இழப்பீடு செலுத்தவே, அரசுமீது தொடுத்த வழக்கை அவர் விலக்கிக் கொண்டார்.
1972ல் வரையப்பட்ட அரசியல்யாப்பு, தேசத்தின் உருக்குலைவில் ஒரு தீர்க்கமான கட்டத்தைக் குறிக்கிறது. 1946ல் எட்டப்பட்ட அரசியல்யாப்புவாரியான இணக்கத்தை அது ஒருதலைப்பட்சமாக உதறித்தள்ளியது. மூதவைக்கும், பிரதிநிதிகள் அவைக்கும் நியமன உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படல், அரசாங்க சேவை ஆணையம், பாகுபாடுகாட்டும் சட்டம் இயற்றப்படுவதைத் தடுக்கும் 29வது பிரிவு, சட்டவாக்கத்தை நீதித்துறை மீள்நோக்கல் ஆகிய அனைத்தும் புதிய அரசியல்யாப்பில் தவிர்க்கப்பட்டன. சிங்கள மொழிக்கு அரசியல்யாப்புவாரியான தகுநிலை அளிக்கப்பட்டது. தமிழோ மொழிபெயர்ப்பு மொழி எனப்பட்டது. 1972ல் உருவாக்கப்பட்ட அரசியல்யாப்பினால் விளைந்த பேரிடி யாதெனில், அதன் உருவாக்கத்தை யார் கொண்டாடினார்களோ அவர்களின் குரலுக்கே அது செவிசாய்த்துச் செயற்பட்டது! இணைப்பாட்சி பற்றிய பேச்சை எடுப்பதற்கே அனுமதி அளிக்கப்படவில்லை.
அரசியல்யாப்பு மன்றத்தின் நடவடிக்கைகளில் எந்த விதத்திலும் பயன்விளையும் வண்ணம் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி கருதியபடியால், அது அரசியல்யாப்பு மன்றத்திலிருந்து வெளியேறியது. உண்மை என்னவெனில், வட மாகாண அரசியற் சொல்லாட்சியில் "இணைப்பாட்சி" என்பதே வழக்கொழிந்த சொல்லாகிவிட்டது! தமிழரசுக் கட்சி தனித்தமிழ்த் தேசியக் கொள்கைக்கு அடிக்கோளிட்டு, அதை மேம்படுத்த அரும்பாடுபட்டது என்பதே உண்மை. தமிழ் மக்களின் வேட்கையைத் தமிழரசுக் கட்சி தனது கைக்கெட்டாத மட்டத்துக்கு உயர்த்தியது; இலங்கை இணப்பாட்சி ஒன்றியம் எனத்தக்க ஒன்றினுள் அடங்கிய பிராந்திய சுயாட்சி ஊடாக நிறைவேற்ற முடியாத மட்டத்துக்கு உயர்த்தியது.
1971ல் அறவே காலங்கெட்ட நடவடிக்கை எனும்படியாக, கடைசி அடி எனும்படியாக பல்கலைகழக அனுமதி விடயத்தில் தரப்படுத்தல் முறை புகுத்தப்பட்டது. பல்கலைக்கழகங்களில் மட்டுப்பட்ட அளவில் எழும் வெற்றிடங்களுக்கு மொழிவாரியாகவும், மாவட்டவாரியாகவும் மிக ஒப்புரவான முறையில் மாணவர்களை அனுமதிக்கலாம் என்ற நம்பிக்கையில் புகுத்தப்பட்ட தரப்படுத்தல் முறையின் பெறுபேறாக பெருந்தொகையான தமிழ் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமது மறுக்கப்பட்டது. அக்கொள்கையின் விளைவாக, தமிழருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியின் விளைவாக, நாட்டுப் பிரச்சனை பாரிய மனித உரிமைப் பிரச்சனையாக மாறியது. எடுத்துக்காட்டாக 1975ல் மாவட்டவாரியாக காலியிலிருந்து 29 மாணவர்களும், யாழ்ப்பாணத்திலிருந்து 29 மாணவர்களும் மருத்துவ பீடத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் தகுதி அடிப்படையில் காலியிலிருந்து 18 மாணவர்களும், யாழ்ப்பாணத்திலிருந்து 61 மாணவர்களும் தகைமை பெற்றிருந்தனர்! அதே போலவே மாவட்ட அடிப்படையில் காலியிலிருந்து 20 மாணவர்களும், யாழ்ப்பாணத்திலிருந்து 20 மாணவர்களும் அறிவியல், எந்திரவியல் பீடங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் தகுதி அடிப்படையில் காலியிலிருந்து 24 மாணவர்களும், யாழ்ப்பாணத்திலிருந்து 56 மாணவர்களும் பல்கலைக்கழகம் சென்றிருக்க வேண்டும்!
கல்விகற்ற இளந்தமிழர் தரப்படுத்தலின் விளைவாக உயர்கல்வி ஓடைக்குள் இறங்க முடியவில்லை. அதைவிட வேறெதுவும் அவர்களது உள்ளத்தை அதிகம் ஒடித்திருக்க முடியாது; நாட்டின் மைய வாழ்வெனும் ஓடையிலிருந்து அவர்களைத் திசைதிருப்பியிருக்க முடியாது. அவர்களது உள்ளம் நிறைவேறாது வறட்சி அடைந்தது. இளையோரின் வன்முறை இயக்கம் எழுவதற்கு அது பெருமளவில் உறுதுணை புரிந்தது. பிரிவினை நோக்கிய நகர்வு, வேகமும் முனைப்பும் கண்டது. வன்முறை ஓங்கியது. 1975 யூலை 27ம் திகதி யாழ் மநகராதிபதியும், இலங்கை சுதந்திரக் கட்சியினரும், 48 வயதானவருமாகிய அல்பிரட் துரையப்பாவை முகமூடி அணிந்தோர் சுட்டுக் கொன்றனர்.
7. வட்டுக்கோட்டை பிரகடனம்: ஓராண்டு கழித்து, 1976 மே 14ம் திகதி வட்டுக்கோட்டையில் வைத்து தமிழர் ஐக்கிய முன்னணியும், முஸ்லீம் ஐக்கிய முன்னணியும் விடுத்த பிரகடனம்:
"இலங்கைத் தமிழர் தமது பெருமைவாய்ந்த மொழி, சமயம், தனித்துவமான பண்பாடு, மரபு என்பவற்றின் அடிப்படையிலும், படையெடுத்து வந்த ஐரோப்பியரின் படைபலத்தினால் கைப்பற்றப்படும் வரை பல்லாண்டுகளாகத் தனி ஆள்புலம் கொண்டு சுதந்திர தனியரசாக விளங்கிய வரலாற்றின் அடிப்படையிலும், எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்த ஆள்புலத்தில் தம்மைத் தாமே ஆளும் தனி அமைப்பாக விளங்கும் திடசித்தத்தின் அடிப்படையிலும் சிங்களவரிலிருந்து வேறுபட்ட, புறம்பான தேசத்தவராவர்."
1947ல் வரையப்பட்ட அரசியல்யாப்பை உதறித்தள்ளி 1972ல் புதிய அரசியல்யாப்பைச் செதுக்கிய சிற்பி என்ற வகையில் கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா மேற்படி பிரகடனம் விடுக்கப்படும் என்பதை உண்மையில் எதிர்பார்த்திருக்க வேண்டும். இதில் ஒரு முரண்சுவை ததும்புகிறது: 20 ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இப்படி நடக்கும் என்று அவரே ஆரூடம் கூறியிருக்கிறார்:
"நாங்கள், இந்த அவை, எங்கள் மக்கள் நாடுவது இரண்டு தேசங்களா? நாங்கள் நாடுவது ஒரே தேசமா, இரண்டு தேசங்களா? நாங்கள் நாடும் இலங்கை ஒன்றா, இரண்டா? எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் நாடுவது ஒரே இலங்கையாய் ஒருங்கிணைந்து ஓங்க வேண்டிய ஒரு சுதந்திர இலங்கையா, அல்லது இந்து சமுத்திரம் எங்கும் திரிந்து சூறையாடும் எகாதிபத்தியப் பூதங்கள் அனைத்தும் விழுங்கும் வண்ணம் குருதிசிந்தும் இலங்கையின் இரு அரைவாசிகளா? சமத்துவத்தை விடுத்து, தேவையின்றி, உள்ளம் குறுகி, தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் கட்டத்துக்கு, தமிழ் மக்களின் இணைப்பாட்சிக் கோரிக்கைக்கு இணங்காமல் அவர்களை அடக்கி ஒடுக்கும் கட்டத்துக்கு நாங்கள் நகர்வோமானால் – தேர்தல் முடிவுகளை வைத்து நிதானித்துக் கூறுவதாயின் – இங்கு பிரிவினை ஓங்கக்கூடும்."
8. தேசத்தை நலம்பெற வைத்தல்: தேசத்தின் நன்னிலை பாரதூரமான முறையில் ஊறுபட்டுள்ளது என்றால், அதற்கு அரசியல் தலைமையின் தவறே தலையாய காரணம். சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் பெரிதும் சிங்களத் தேர்தல்தொகுகளின் பிரதிநிதிகளாக விளங்குகிறார்கள் அல்லது விளங்கியுள்ளார்கள். அவை சிங்கள இனத்தையும், பெளத்த சமயத்தையும், மகாவம்ச மனப்பான்மையையும் அடிப்படையாகக் கொண்ட தேர்தல்தொகுதிகள். தமிழ் அரசியல் தலைமையின் நிர்ப்பந்ததுக்கு உட்பட்டபடியால்; அல்லது சத்தியாக்கிரகத்தையோ, குடிமக்களின் அடிபணியாமை இயக்கத்தையோ எதிர்கொள்ள நேரும் என்று அஞ்சியபடியால்; அல்லது அவ்வப்பொழுது ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாட நேர்ந்தபடியால் சிங்கள அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் முறைசார்ந்தும் முறைசாராமலும் உடன்படிக்கைகள் செய்ததுண்டு. அத்தகைய உடன்படிக்கைகள் மதிக்கப்பட்டதரிது. வெறும் அரசியல் உபாயமாகவே உடன்படிக்கைகள் செய்யப்பட்டன.
எடுத்துக்காட்டாக 1957ல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தமிழ்த் தலைவர்களுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார்; அதன்படி வட, கீழ் மாகாணங்களில் பிரதேச மன்றம் அமைக்கவும், தமிழ் மொழியைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யவும் அவர் வாக்குறுதி அளித்தார். ஒன்பது மாதங்கள் கழித்து (பிரதம மந்திரி என்ற வகையில் தாம் இட்ட கையொப்பத்துடன் கூடிய) அந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவர் அறிவித்தார். ஐக்கிய பிக்கு முன்னணியும், ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் தலைமையில் இயங்கிய ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதம மந்திரிக்கு நிர்ப்பந்தம் கொடுத்தன. "சிங்கள இனத்தைக் காப்பதற்காக" கொழும்பிலிருந்து 72 மைல் தூரத்தில் (கண்டியில்) அமைந்திருக்கும் புத்தரின் புனித தந்தக் கோயிலுக்கு (தலதா மாளிகைக்கு) ஐக்கிய தேசியக் கட்சி யாத்திரை மேற்கொண்டது. அந்த யாத்திரையின் உள்நோக்கத்தை அக்கட்சியின் ஊடகம் ஒன்று வெளிப்படுத்தியது: "நாடளாவிய முறையில் மக்களின் சிந்தையை ஈர்க்கும் வண்ணம் ஆர்ப்பாட்டம்" நடத்துவதே அக்கட்சியின் உள்நோக்கம்.
1958ல் பிரதமர் பண்டாரநாயக்கா தமிழ் மொழி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தை இயற்றினார். எனினும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய ஒழுங்குவிதிகளை தனது வாழ்நாளில் அவர் வகுக்கத் தவறினார். 1966ல் பிரதமர் டட்லி சேனநாயக்கா அத்தகைய ஒழுங்குவிதிகளை வகுக்க முயன்றபொழுது திருமதி பண்டாரநாயக்காவின் தலைமையில் இயங்கிய எதிர்க்கட்சிகள் அதற்கெதிராக விகாரமாதேவி பூங்காவிலும், கொழும்புத் தெருக்களிலும் ஆர்ப்பாட்டம் செய்தன; விகாரமாதேவியின் சிலையடியில் நாடு பிரிவதை எதிர்த்துநிற்கச் சூள்கொட்டின. பிரதமர் டட்லி அவசரகால நிலையின் உறுதுணையுடன் அத்தகைய ஒழுங்குவிதிகளை வகுக்கத் தலைப்பட்டார். எனினும் தனது அரசாங்கத்தின் எஞ்சிய நான்காண்டு ஆட்சிக்காலதில் அவற்றை அவர் நடைமுறைப்படுத்தவில்லை.
1965ல் டட்லி சேனநாயக்கா, செல்வநாயகத்துடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். அதன்படி மாவட்ட மன்றன்கள் அமைக்க அவர் வாக்குறுதி அளித்தார். அதன் பொருட்டு ஒரு சட்டமுலம் தயாரிக்கப்பட்டது. எனினும் நாடாளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படவில்லை. 1957ல் பிரதமர் பண்டாரநாயக்கா அளித்த வாக்குறுதியை விடவும் குறைந்த வாக்குறுதி கொண்ட வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றக் கட்டிடத்தின் படிக்கட்டில் வைத்து இலங்கைச் சுதந்திரக் கட்சியினரும், மற்றும் பிற எதிர்க்கட்சியினரும் வெளியரங்கமாகவும், சடங்குவினைகளுடனும் எரித்தார்கள்.
1970ல் தமிழரசுக் கட்சியினரை அரசியல்யாப்பு மன்றத்தில் பங்குபற்றும்படி பிரதமர் திருமதி பண்டாரநாயக்கா அழைத்தார்; "வரலாறு திணித்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேட்கையுடன் கூடிய தேசம் ஒன்றைக் கட்டியெழுப்பத் துணைநிற்கும் புதிய அரசியல்யாப்பு" ஒன்றை வரைய உதவும்படி அழைத்தார். அதற்கு உடன்பட்டு அவர்கள் பதிலளித்தார்கள்; அந்த இலக்கை இணைப்பாட்சி ஊடாக எய்தலாம் என்ற யோசனையை அவர்கள் முன்வைத்தபொழுது, அது ஓர் ஒழுங்குமீறல் என்று கூறி நிராகரிக்கப்பட்டது. ஆதலால், 1977ல், மாற்றுவழியின்றி அவர்கள் வெளியேறினர்கள்.
1977ல், சிங்களம் பேசாத மக்களின் பிரச்சனைகளை ஆராய்வதற்கு ஓர் அனைத்துக் கட்சி மாநாடு கூட்டுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வாக்குறுதி அளித்தது. எனினும் தேர்தலில் வென்ற கையோடு அந்த வாக்குறுதியை அது வள்ளிசாக மறந்துவிட்டது.
பல்லாண்டுகளாக இடம்பெற்ற பயங்கரவாதச் செயல்கள், படைவலுவுடன் கூடிய பதிலடிகள், நூற்றுக் கணக்கான இறப்புகள், யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டமை, 1983 ஆடி நிகழ்வுகளை அடுத்தே அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் உணர்ந்துகொண்டது. ஈற்றில் அனைத்துக் கட்சி மாநாடு கூடியது. இலங்கைச் சுதந்திரக் கட்சித் தலைவரின் (திருமதி பண்டாரநாயக்காவின்) குடிசார் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டபடியால், அவர் அதில் கலந்துகொள்ளவில்லை.
எந்த நிகழ்ச்சிநிரல் குறித்துக் கலந்துரையாடுவதற்கு தம்மை அழைத்தார்களோ அந்த நிகழ்ச்சிநிரலைக் கொண்டதே பின்னிணைப்பு-இ (Annexure-C) என்று தமிழ்த் தலைவர்கள் வாதித்தார்கள். ஏனைய தரப்பினரோ அப்பின்னிணைப்பைச் சாடினார்கள். பெற்ற தாயினால் கைவிடப்பட்ட புறமணப் பிறவியைப் போல் அது மாநாட்டு மேசையில் அநாதரவாகக் கிடந்தது.
இதற்கிடையே அரசியல்யாப்புக்கான 6வது திருத்தத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரியவொண்ணாத இலங்கை ஒன்றுக்கு விசுவாசம் தெரிவித்து சத்தியம்செய்ய வேண்டியிருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சத்தியம்செய்ய மறுத்தது. அதன் பெறுபேறாக அந்த மிதவாத தமிழ் அரசியல் தரப்பு அதன் அரசியல் செல்வாக்கை இழந்து, எத்தகைய பேச்சுவார்த்தைகளிலும் வேண்டப்படாத தரப்பாக மாறியது.
அரசியல் தலைமை தவறிழைத்த விடயம் பற்றிய ஆய்வுச் சுருக்கம் அது.
9. மாறுகால நீதி: தேசத்தை நலம்பெற வைக்கும் பிரச்சனைக்கு இரு புறங்கள் உண்டு: (1) எங்கள் அரசியல் தலைவர்கள் இந்த நாட்டை ஆளும் சர்ச்சையை 60 ஆண்டுகளாகத் தீர்க்கத் தவறியது ஒருபுறம்; (2) நீதி, இழப்பீடு, மீளிணக்க சர்ச்சை மறுபுறம்.
அடுத்தடுத்து ஆட்சிபுரிந்த ஜனாதிபதிகள் ஓர் அரசியல்–மனித உரிமைப் பிரச்சனைக்கு "பயங்கரவாதப் பிரச்சன" என்று முத்திரை குத்தி, அதனை ஆயுதப் படைபலம் கொண்டு தீர்ப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளினால் தோற்றுவிக்கப்பட்ட சர்ச்சை அது. 1979 அக்டோபர் மாதம் ஜனாதிபதி ஜெயவர்த்தனா தமது தானைத்தலைவரை வடபுலம் சென்று, அங்கு எதிர்ப்படக்கூடிய பயங்கரவாதச் செயல்கள் அனைத்தையும் அழித்தொழிக்க ஆணையிட்டார்; அதற்கான அதிகாரம் முழுவதும் தானைத்தலைவருக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டு நத்தாருக்கு முன்னர் பயங்கரவாதத்துக்கு இறுதிமுடிவு கட்டப்படவிருந்தது.
அதன் பிறகு பல தசாப்தங்களாக இலட்சிய வேட்கை மிகுந்த ஆயிரக்கணக்கான இளஞ் சிங்களவர்கள் அன்றாடம் பலியிடப்பட்டார்கள். தமது வாழ்வின் வசந்தத்தில் தங்கள் உயிரை மாய்க்க முன்னர் தங்களைப் போலவே இலட்சிய வேட்கை மிகுந்த ஒருசில இளந்தமிழ்க் காளைகளையும், வாலைகளையும் கொன்று, மட்டற்ற திருவருள் படைத்த எங்கள் தீவை நாங்கள் அனைவரும் வாழ்வதற்கு மிகவும் பத்திரமான நாடாக, இனிய நாடாக, நேரிய நாடாக மாற்றும் நம்பிக்கையுடன் அவர்கள் வடபுலம் சென்றார்கள்; கீழ்ப்புலம் சென்றார்கள். கவிஞர் ஜோன் டண் (John Donne) எழுதிய வரிகள் இங்கு நினைவுக்கு வருகின்றன:
ஒருவரும் தனியொரு மரம் அல்லர்
அனைவரும் ஒரே மரத்தின் கிளைகள்
அனைவரும் ஒரே ஆற்றின் கிளைகள்.
தற்காலத்தில் ஒரு தேசம் அத்தேசத்தவரை நடத்தும் விதம் அதன் சொந்த அலுவல் அல்ல; அதற்கு மட்டுமே உரிய அலுவல் அல்ல. இன்று சர்வதேய சட்டம் விருத்தி அடைந்து வருகிறது. அதன் அங்கமாய் புதிய வழமைகளும், நியமங்களும் ஓங்கி வருகின்றன. ஓர் அரசாங்கம் அதன் குடிமக்களுடன் நடந்துகொள்ளும் விதத்தை சர்வதேய உடன்பாடுகள் நெறிப்படுத்தி வருகின்றன. தனது குடிமக்களை நடத்தும் விதத்தில் மேற்படி வழமைகளையும் நியமங்களையும் ஏற்றிப்போற்றி அமைந்தொழுகுவதாக 1981ல் இலங்கை ஆட்சியாளர் உளமுவந்து சர்வதேய சமூகத்துக்கு அறிவித்தனர். அதாவது, இலங்கை அரசாங்கம் சர்வதேய மனித உரிமைகள் தொடர்பான உடன்பாடுகள் இரண்டையும் ஏற்று, உறுதிப்படுத்திய அன்றே இலங்கையை சர்வதேய மனித உரிமைச் சட்டத்தின் நியாயாதிக்கத்துக்கு உட்படுத்திவிட்டது!
பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி, நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநர் நாயகம், பாகிஸ்தானிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் அதிபர் ஆகிய தலைசிறந்த சட்ட நிபுணர்கள் மூவரும் இலங்கை குறித்து ஆராய்ந்து கண்டறிந்த விபரங்கள் உள்ளடங்கிய மனித உரிமை மன்றத்தின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் சர்வதேய கடப்பாடுகளுக்கு அமையவே ஏற்றுக்கொண்டது. பாதுகாப்புப் படைகளும், துணைப்படைக் குழுமங்களும் சட்டவிரோதமான முறையில் குடிமக்களைக் கொன்றமை; போரின் இறுதிக் கட்டத்தில் புலிகளாக இனங்காணப்பட்டவர்களும், இனங்காணப்படாதவர்களும், இலங்கைப் படையினரிடம் சரணடைந்ததாக அறியப்பட்டவர்களும் நீதிமுறைக்குப் புறம்பான முறையில் கொல்லப்பட்டமை; சட்டதிட்டத்துக்கு உட்படாத கைதுகள், ஆட்கடத்துகள்; காணாமல் போக்கடிப்புகள்; சித்திரவதை மற்றும் பிற கொடிய, கொடூரமான, இழிவுபடுத்தும் செயல்கள்; பாலியல் வன்செயல், பால்மை வன்செயல்; சிறாரை வலுக்கட்டாயமாகத் திரட்டிப் போருக்குப் பயன்படுத்தல்; மனிதாபிமான உதவி மறுத்தல்; உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களின் சுதந்திரத்தைப் பறித்தல் பற்றியெல்லாம் அந்த ஆணையம் தகவல் திரட்டி அறிக்கையிட்டது.
தற்பொழுது உண்மை ஆணையம் ஒன்றை அமைக்கும் எண்ணத்தை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. தேசத்தை நலம்பெற வைக்கும் படிமுறை அது; பாதகம் புரிந்தோரும் பாதிக்கப்பட்டோரும் கடந்தகாலக் குற்றங்களைக் கோடிட்டுக் காட்டுவதற்கு வாய்ப்பளிக்கும் படிமுறை அது. தென் ஆபிரிக்காவிலும், ஆர்ஜென்டைனா, சிலி, எல் சல்வடோர், குவாத்தமாலா போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் ஓரளவு வெற்றியுடன் மேற்கொள்ளப்பட்ட பொறிமுறை அது. நைஜீரியாவில் இயங்கிய உண்மை ஆணையத்தின் நடவடிக்கையை நான் ஒரு தடவை அவதானித்தேன். குருவிடம் பாவத்தை ஒப்புக்கொள்ளும் கிறீஸ்தவக் கருத்தீட்டை அடிப்படையாகக் கொண்ட அந்த நடவடிக்கை இலங்கைக்கு உகந்ததா என்னும் வினா கருத்தில் கொள்ளத்தக்கது. மீளளிப்பு, இழப்பீடு, மறுவாழ்வு வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பேற்பு என்பது மீளிணக்கத்துக்கு இன்றியமையாத முதற்படி ஆகும். எந்தச் சமூகத்திலும் பொறுப்பேற்பு இல்லாமல் மீளிணக்கம் ஏற்பட முடியாது. ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விதந்துரைத்த கலப்பு நீதிமன்று எனப்படுவது, போருக்குப் பிற்பட்ட சூழ்நிலையில் மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு மாறுகால நீதி பேணும் அணுகுமுறையில் ஒரு தனித்துவமான கூறாகும். போர்க் குற்றங்கள் அல்லது பாலியல் குற்றங்கள், சிறாருக்கு எதிரான குற்றங்கள் உட்பட மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரதூரமான போர்க்காலக் குற்றங்களுக்கு மிகவும் பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவென சர்வதேய நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத்தொடுநர்கள், புலன்விசாரணையாளர்கள் கொண்டு உருவாக்கப்பட்டதே கலப்பு நீதிமன்று. இலங்கையின் பொறுப்பேற்பு படிமுறையில் வெளிநாட்டவர்கள் பங்குபற்றுவதற்கு எத்தகைய சூழ்நிலையிலும் தாம் உடன்படப் போவதில்லை என்று ஜனாதிபதி சிறிசேனா திரும்பத் திரும்ப வற்புறுத்தி வருகிறார். வெளிநாட்டு உதவி எதுவுமின்றி பொறுப்பேற்புச் சர்ச்சைகளைக் கையாளும் வல்லமை மிகுந்த சுதந்திர நீதித்துறை இலங்கையில் இருப்பதாக அவர் வலியுறுத்தி வருகிறார். ஜனாதிபதியின் மதியுரைஞர்கள் அவருக்கு உண்மை நிலையை உணர்த்த வேண்டிய தருணம் இது.
கடந்த ஒருசில தசாப்தங்களாக இலங்கையின் சட்ட-நீதிக் கட்டுக்கோப்பு அதன் பல்லின, பல்சமய மக்களுக்கு பல வழிகளிலும் நீதிவழங்கத் தவறியுள்ளது. அத்தகைய பாரதூரமான குற்றங்களைக் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு வேண்டிய திடசித்தமோ திறமையோ அற்ற கட்டுக்கோப்பு என்பதை அது வெளிக்காட்டியுள்ளது.
போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், வலிந்து காணாமல் போக்கடிப்புகள் முதலியவற்றைக் குற்றங்களே என்று கடிந்து இன்னும் இலங்கையில் சட்டம் இயற்றப்படவில்லை; (ஜெயவர்த்தனா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட) குடியியல்-அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேய உடன்பாடோ, (சந்திரிகா அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்ட) அதற்கான விருப்பதெரிவு வரைமுறையோ, பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் தொடர்பான சர்வதேய உடன்பாடோ எங்கள் சட்டக்கோவையுள் இன்னும் சேர்க்கப்படவில்லை. குற்றத்தின் சாட்சிகளையும், குற்றத்தால் பாதிக்கப்பட்டோரையும் பாதுகாக்கும் திட்பமான பொறிமுறை இன்னும் வகுக்கப்படவில்லை.
சர்வதேய மனித உரிமைப் பொருத்தனைகளை ஏற்று உறுதிப்படுத்துவது அரசியல்யாப்பை மீறுவதாய் அமையும் என்று கூறி, இலங்கைக்கு அவை ஏற்புடையதாவதை தலைமை நீதியரசர் சரத் சில்வா 2006ல் இடைநிறுத்தி வைத்தார். அவருடைய தீர்ப்பை "நீதித்துறையின் தான்தோன்றித்தனத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு" அல்லது "நீதித்துறையின் விசித்திரம்" என்று வர்ணித்தார் உலகப் புகழ்பெற்ற சட்டவல்லுநர் ஒருவர். "அபத்தமான நியாயம்" என்றார் இன்னொருவர். அத்தகைய குற்றங்களுக்குப் பொறுப்பேற்பை நிலைநிறுத்தக்கூடிய சட்டத்துறைக் கட்டுக்கோப்பு எங்களிடம் இல்லை. அக்குறைபாட்டைப் போக்கும் படிமுறைக்கு சர்வதேய நிபுணத்துவமோ வேறு நிபுணத்துவமோ பயன்படக் கூடும்.
உலகத்திலேயே வலிந்து காணாமல் போக்கடிப்புகள் உச்சத்தில் இருக்கும் நாடுகளுள் இலங்கையும் உள்ளடங்குவதாக நம்பப்படுகிறது. எனினும் அவற்றைக் குறித்து ஆண்டுக் கணக்காக உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. (ஊடகர்) எகெனெலிகொடை காணாமல் போனதுக்கு அதிக பிரசித்தம் கிடைத்துள்ளது. அந்த விடயத்திலும் கூட உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2005ல் 300க்கு மேற்பட்ட அரசியற் கொலைகளும், அடுத்த ஈராண்டுகளிலும் 700க்கு மேற்பட்ட நீதிமுறைக்குப் புறம்பான மரண தண்டனைகளும் பதியப்பட்டுள்ளன. அவற்றைப் புலன்விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
2005 ஆவணி மாதம் லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டார். அது மிகவும் பிரசித்தமான கொலை. அது நிகழ்ந்த விவரம் இன்னமும் மூடுமந்திரமாகப் பொத்தி வைக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு மட்டக்களப்பு தேவாலயத்தில் நத்தார் மலருந் தறுவாயில் இடம்பெற்ற வழிபாட்டில் யோசப் பரராசசிங்கம் கொல்லப்பட்டமை, 2006 தை மாதம் திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் கொல்லப்பட்டமை, 2006 ஆவணி மாதம் மூதூரில் சர்வதேய பட்டினி ஒழிப்பு (ACF) அமைப்பின் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை, 2009 தை மாதம் மிகு பாதுகாப்பு வலயம் ஒன்றினுள் லசந்த விக்கிரமதுங்கா கொல்லப்பட்டமை எல்லாம் மிகுந்த பிரசித்தம் பெற்றவை.
இவை இன்னமும் புலன்விசாரணை செய்யப்படவில்லை அல்லது திட்பமான முறையில் புலன்விசாரணை செய்யப்படவில்லை. 2006 கார்த்திகை மாதம் கொழும்பில் நடராசா ரவிராஜ் கொல்லப்பட்டமை தொடர்பாக சில படையாட்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்தக் குற்றத்தை அவர்கள் புரிந்த காரணம் என்ன என்பது நிச்சயிக்கப்பட்டுள்ளதா? அத்தகைய குற்றங்கள் புரிந்தோரை அவர்களது செயல்களுக்குப் பொறுப்பேற்க வைப்பதற்கு வேண்டிய திடசித்தமோ விருப்பமோ தமக்கு கிடையாது என்பதை ராஜபக்சா அரசாங்கம் தெளிவாக வெளிப்படுத்தியது. தண்டனைக்கு உள்ளாகாமை என்னும் இத்தகைய போக்கைத் தடுத்துநிறுத்த தற்போதைய அரசாங்கம் விரும்பினாலும் கூட, பல்லாயிரக் கணக்கான வலிந்து காணாமல் போக்கடிப்புகளையும், நீதிமுறைக்குப் புறம்பான மரண தண்டனைகளையும் வெற்றிகரமாகப் புலன்விசாரணை செய்வதற்கு வேண்டிய நிபுணத்துவம் அதன்வசம் உண்டா என்னும் வினா எழவே செய்கிறது.
ஒரு பேர்போன குற்றம் எனும்படியாக, புலிகள் தமது அணிக்கு சிறாரைத் திரட்டுவதற்குப் பயன்படுத்திய தரப்புகளுள் கருணா அம்மான் தலைமையில் இயங்கிய குழுமமும் ஒன்று. 15 வயதுக்கு உட்பட்ட மேற்படி சிறார் போரில் மும்முரமாகப் பங்குபற்ற வைக்கப்பட்டார்கள். அது ஒரு போர்க் குற்றம் மட்டுமல்ல, சிறார் உரிமை ஒப்பந்த மீறலும் கூட. இலங்கை அந்த ஒப்பந்தத்தை ஏற்று உறுதிப்படுத்தியிருந்தது. 2007ல் கருணா அம்மான் பிரிந்து சென்று அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்ட பின்னரும் கூட அரச பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சிறார் தொடர்ந்தும் திரட்டப்படுவதை அவை அறிந்திருந்தன என்று நம்புவதற்கு நியாயமான ஆதாரங்கள் உண்டு என்று ஐ. நா. வலியுறுத்திக் கூறுகிறது. எனினும் கருணா அம்மானையும், அவரது பிரதியாளராகிய பிள்ளையானையும் ராஜபக்சா அரசாங்கம் அமைச்சுப் பதவிக்கு உயர்த்தியது. சிறாரைத் திரட்டுவதும், போருக்குப் பயன்படுத்துவதும் குற்றமே என்று 2006ம் ஆண்டிலேயே சட்டம் இயற்றப்பட்டுவிட்டது என்பதை இன்றைய அரசாங்கமும் புறக்கணித்துவிட்டது.
2011 முதல் 2015 வரை சட்டத்துறை அதிபதியின் திணைக்களம் ஜனாதிபதியின் செயலகத்துடன் பிணைக்கப்பட்டிருந்தது. அப்போதைய அரசாங்கத்தின் உச்சத்தில் நிலைகொண்டோருக்குத் தெரியும்படியாக அல்லது அவர்களின் மறைமுக ஆதரவுடன் புரியப்பட்டதாகக் கொள்ளப்படும் குற்றங்களை சுயேச்சையாகவும் பக்கஞ்சாராமலும் நோக்குந் திறனோ எண்ணமோ அத்திணைக்களத்திடம் காணப்படவில்லை. மாறாக, அதன் மேலதிகாரிகள் ஆண்டுதோறும் ஜெனீவா சென்று, சர்வதேய சமூகத்தின் முன்னிலையில், அத்தகைய குற்றங்களை மறுத்து வந்தார்கள்; அவை என்றுமே புரியப்படவில்லை என்று வலியுறுத்தி வந்தார்கள். ஊடகர் ஒருவரைப் பற்றி சட்டத்துறை அதிபதியே பொய்யுரைத்த விபரம் பின்னர் உறுதிப்பட்டது.
மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் அலுவலகம் தன்வசம் வைத்திருப்பதாக வலியுறுத்தும் குற்றச் சான்றுகளை, பல தசாப்தங்களாக இவ்வதிகாரிகள் அயராது மறுத்துவந்த குற்றச் சான்றுகளை, மீளவும் முன்வைக்கும் பொறுப்பை இதே அதிகாரிகளுக்கே கொடுக்க வேண்டும் என்று கருத்தூன்றித்தான் கூறுகிறார்களா? அரசாங்கம் மாறிய பின்னர் ஆரம்பித்த புலனாய்வுகளை அத்திணைக்களத்தின் உச்சநிலை அதிகாரிகள் வேண்டாவெறுப்புடன் கையாள்வதாகத் தெரிகிறது. அத்திணைக்களத்தின் ஒழுகுமுறை மாறவில்லை என்பதையே அது உணர்த்துகிறது.
நீதித்துறை போன்ற அமைப்புகள் ஊடாக நம்பகமான புலன்விசாரணைகளை மேற்கொள்ளும் வல்லமை இலங்கைக்கு கிடையாது என்பதை ஓய்வுபெற்ற நீதித்துறைஞர்களின் தலைமையில் அடுத்தடுத்து இயங்கிய விசாரணை ஆணையங்களின் செயற்பாடு புலப்படுத்தியுள்ளது. உடலகமை ஆணையம் (Udalagama Commission) அதன் விசாரணையைத் துவக்கிய கையோடு நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. பரணகமை ஆணையம் (Paranagama Commission) மாதத்துக்கு மாதம், ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து நீடித்து வருகிறது. வலிந்து காணாமல் போக்கடிப்புகளில் அது காட்டும் அவசரம் அது! முந்திய மனித உரிமை ஆணையம், அடிப்படை உரிமை மீறல்களை விசாரணை செய்யக் கடமைப்பட்டிருந்தது. அதன் செயற்பாடு சமநிலையும் புறவயமும் இழந்து தாழ்ச்சி அடையவே அதன் தகுநிலையை ஐ. நா. கீழிறக்கிவிட்டது.
புதிய தலைமை நீதியரசரின் நியமனத்தை அடுத்து "எமது நீதித்துறை இன்று சுதந்திரமாக இயங்கி வருகிறது" என்று ஜனாதிபதி சிறிசேனாவும், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும் முழங்கியுள்ளார்கள். நிறைவேற்று ஜனாதிபதி பீடத்துக்கு உச்ச நீதிமன்று மிகவும் பணிந்திணங்கி வந்துள்ளதைக் கண்டுகொள்ளாத மலினத்தனமான முழக்கம் அது. கடந்த தசாப்தத்தில் அது அப்பட்டமாகப் புலப்பட்டது. அப்பொழுது அடிப்படை உரிமைகளை ஆதாரமாகக்கொண்டு நியாயம் கோரப்பட்ட போதெல்லாம், ஜனாதிபதி ராஜபக்சாவினால் பெரும்பாலும் அவரது சட்டக் கல்லூரித் தோழர் குழாத்திலிருந்து நியமிக்கப்பட்ட நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்று, "அரச பாதுகாப்பு" சார்ந்த வாதங்களின் முன் பெரிதும் அடிபணிந்து நின்றது. முந்திய அரசங்கத்தை எதிர்த்த அரசியல்வாதிகளோ, சிறுபான்மை இனத்தவர்களோ, குடிசார் சமூகமோ கூட நீதிமன்றில் நிவாரணம் பெற்றதரிது.
குறிப்பாக, தனியாள் உரிமை வழக்குகளில் உச்ச நீதிமன்று அளித்த தீர்ப்புகள் ஒரு திகைப்பூட்டும் உண்மையைப் புலப்படுத்துகின்றன: அதாவது, வெளியுலக நீதித்துறைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை உச்ச நீதிமன்று அறிந்தோ தெரிந்தோ வைத்திருக்கவில்லை. கெனியாவில் அரசியல்யாப்புக்கமைய "செவ்வைபார்க்கும்" படிமுறை ஒன்று வெற்றிகரமாகக் கையாளப்பட்டது. அத்தகைய படிமுறையை தற்போதைய அரசாங்கம் கடைப்பிடிக்கத் தவறியுள்ளது. போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் தகுதியோ நெறிமுறையோ எங்கள் நீதித்துறைக்கு கிடையாது என்ற எண்ணம் சர்வதேய அரங்கில் வலுப்பதற்கே அது வழிவகுக்கும்.
அரசாங்கம் தனக்குக் கிடைக்கக்கூடிய வசதிவாய்ப்புகளைக் கொண்டு மேற்படி போர்க் குற்றங்கள் பற்றியும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் அலுவலகம் இலங்கையை ஆய்விட்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்த பாரதூரமான குற்றச்சாட்டுகள் பற்றியும் திட்பமான முறையில் புலன்விசாரித்து, வழக்குத்தொடுத்து, விசாரணைசெய்யும் திறன் படைத்ததா என்னும் வினாவுக்கு விடைகாண வேண்டியுள்ளது. அப்பணிகளை எம்மால் தனித்து மேற்கொள்ள முடியாது என்று ஒப்புக்கொள்வது எமது பலவீனத்தை ஒப்புக்கொள்வதாக அமையாது. மாறாக, தமது வாழ்வைத் தியாகம்செய்தோர் சார்பாகவும், தொடர்ந்து வாழ்ந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தோர் சார்பாகவும் கடந்தகால நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்கும் குறிக்கோளை எய்துவதற்கு உண்மையில் நாம் உறுதிபூண்பதாகவே அமையும்.
போர்க் குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் பொறுத்தவரை, அத்தகைய குற்றங்களைக் கையாளும் திறமைபடைத்த சட்டவாளர்களின் நிபுணத்துவம் இன்றியமையாதது; அத்துடன் படைத்துறை ஆய்வாளர்கள், குற்ற நிகழ்விடப் புலனாய்வாளர்கள், ஊறுபாட்டு நிபுணர்கள், உளவள மதியுரைஞர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் தேவைகள், உரிமைகள், சாட்சிகளை ஆயத்தப்படுத்தல், பாதுகாத்தல் போன்ற விடயங்களைக் கையாளும் தகுதிவாய்ந்த துறைஞர்கள் முதலியோர் இன்றியமையாதவர்கள். அவற்றுக்கு சர்வதேய உதவி வரவேற்கப்பட வேண்டும்.
10. மத்தியில் அதிகாரப் பகிர்வு: சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கை வரலாற்றில் சிங்கள அரசியல் தலைமை, தமிழ் அரசியல் தலைமையுடன் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பாதிருப்பதை எவரும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. தமிழரசுக் கட்சி தோன்றி 50 ஆண்டுகளாக சிங்கள, தமிழ் அரசியல் தலைவர்களிடையே அதிகாரப் பரவல் அலகு குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. மாவட்டமா, மாகாணமா, பிராந்தியமா அலகாக வேண்டும்? அத்தகைய அதிகாரப் பரவல் அலகு எதுவும் ஈற்றில் ஒரு புறம்பான அரசுக்கே இட்டுச்செல்லும் என்ற அச்சம் சிங்களவரின் உள்ளத்துள் ஊட்டப்பட்டுள்ளது. இங்கு சர்வதேய மனித உரிமைச் சட்டத்தின் இரண்டு நெறிகளை நான் குறிப்பிட விரும்புகிறேன். தற்பொழுது இலங்கை அரசாங்கத்துக்கும், இங்கு வாழும் வெவ்வேறு இனக்குழுமங்களுக்கும் இடைப்பட்ட உறவை ஒழுங்குறுத்தும் நெறிகள் அவை:
(1) பாகுபாடுகாட்டா நெறி
(2) சுயநிர்ணய நெறி
பாகுபாடுகாட்டா நெறி இவ்வாறு பொருள்படும்: இலங்கை மக்களிடையே இன, சமய, மொழி, பால், அரசியல் அபிப்பிராயம் அல்லது வேறு அபிப்பிராயம், தேசிய அல்லது சமூகத் தோற்றுவாய், பிறப்பு அல்லது வேறு தகுநிலை வாரியாக சட்டமோ, நிறைவேற்று நடவடிக்கையோ பாகுபாடு காட்டலாகாது. சுயநிர்ணய நெறி என்பது மனித உரிமை உடன்பாடுகளுள் பொதிந்துள்ளது; இலங்கை அரசாங்கம் அவ்வுடன்பாடுகளுக்கு அமைந்தொழுக வாக்களித்துள்ளது. அது இவ்வாறு பொருள்படும்: ஒருங்கிணைந்த இனக்குழுமம் எதுவும் தனக்கென ஓர் அரசியல் அமைப்பைத் தெரிவுசெய்து, அத்தகைய அமைப்பின் ஊடாகத் தனது பொருளாதார, சமூக, பண்பாட்டு விருத்தியை ஈட்டிக்கொள்ளும் உரிமை படைத்தது. பல அமைப்புகளுள் ஒன்றை அது தெரிவுசெய்யலாம்:
(அ) ஒரு சுதந்திர தனியரசை அது தெரிவுசெய்யலாம்;
(ஆ) ஓர் இணைப்பாட்சி அரசின் ஊடாகப் பிற இனக்குழுமங்களுடன் இணையலாம்;
(இ) தன்னாட்சியுடன் அல்லது ஒருங்கிணைவுடன் கூடிய ஓர் ஒற்றையாட்சி அரசுடன் இணையலாம்
1. இறைமைவாய்ந்த ஒரு சுதந்திர அரசினுள் சம்பந்தப்பட்ட இனக்குழுமத்துக்கு ஆள்புல எல்லைகளுடன் கூடிய தாயகம் ஒன்று இருக்குமானால், தமிழினத்துக்கு உள்ளது போல் இருக்குமானால்;
2. அந்த அரசின் அரசாங்கம் இனப்பாகுபாடின்றி மக்கள் அனைவரதும் பிரதிநிதியாக விளங்கினால்;
3. அந்த அரசாங்கம் பாகுபாடுகாட்டா நெறி, சுயநிர்ணய நெறி இரண்டையும் மதித்து நடந்தால்,
சம்பந்தப்பட்ட இனக்குழுமத்துக்கு தனியரசு அமைக்கும் தெரிவு கிட்டாது.
(1) சுதந்திர இலங்கை அரசினுள் தமிழினக் குழுமத்துக்கு ஆள்புல எல்லைகளுடன் கூடிய தாயகம் உண்டு;
(2) ஆனால் இலங்கை அரசாங்கம் இனப்பாகுபாடின்றி மக்கள் அனைவரதும் பிரதிநிதியாக விளங்கவில்லை; பாகுபாடுகாட்டா நெறி, சுயநிர்ணய நெறி இரண்டையும் அது மதித்து நடக்கவில்லை.
ஆதலால், பிராந்திய ஆட்சி குறித்து எத்தகைய இணக்கத்தையும் எட்டினாலும் கூட, மத்தியில் அதிகாரப் பகிர்வு இடம்பெற்றே ஆகவேண்டும், இடம்பெறுவது இன்றியமையாதது, அடிப்படையானது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஒரு பொதுத்தேர்தல் நடந்துமுடிந்த பின்னர் இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சேர்க்கப்படும் சங்கதி அல்ல இது. வேறெவர்க்கும் பிரதிநிதிகளாக விளங்காமல் தமக்குத் தாமே பிரதிநிதிகளாக விளங்கிய கொழும்புவாழ் அடையாளத் தமிழர்களாகிய சி. குமாரசூரியர், லக்ஷ்மன் கதிர்காமர் போன்றோர் அன்று அமைச்சரவையில் இடம்பெற்றதுண்டு. அத்தகைய சங்கதி அல்ல இது.
மத்தியில் அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும் என்னும் விதி அரசியல்யாப்பில் சேர்க்கப்பட வேண்டும். எந்தக் கட்சி அரசாங்கம் அமைத்தாலும், ஆகக்குறைந்தது நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கைவாரியாக, எல்லா இனக்குழுமங்களின் பிரதிநிதிகளும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று விதிக்கப்பட வேண்டும். அதன்மூலம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு நாடாளுமன்றத்திலும், அரசாங்கத்திலும் அரசியல்யாப்புவாரியான உத்தரவாதத்துடன் கூடிய மெய்யான பிரதிநிதித்துவம் கிடைக்கும்; அடையாளப் பிரதிநிதித்துவம் அல்ல, மெய்யான பிரதிநிதித்துவம் கிடைக்கும். அதன்பிறகு இனக்குழுமங்கள் எல்லாவற்றினதும் கருத்தொருமையுடன் கொள்கைகளை வகுக்க வழிபிறக்கும். இலங்கை போன்ற பல்லின, பல்சமய, பல்மொழி நாட்டில் அப்படித்தான் நடக்க வேண்டும்.
11. உலக சமூகத்துடன் இணைதல்: ஏறத்தாழ 60 ஆண்டுகளாகக் கடைபிடித்த கொள்கையின்படி தனிமைப்பட்டுப்போன நிலையை விடுத்து, உலக சமூகத்துள் நாம் உட்புகும் காலம் வந்துவிட்டது. வெளியுலகத்தவருடன் எம்மால் தொடர்புகொள்ள முடியாவிட்டால், உலக சமூகத்துள் நாம் உட்புக முடியாது. சிங்கப்பூரில் ஆங்கில மொழிப் பாவனையைப் பேணிக்கொள்ளும் தொலைநோக்கு லீ குவான் யூவிடம் காணப்பட்டது. ஆபிரிக்க தேசியத் தலைவர்கள் பலரும் அவ்வாறே செய்தார்கள். தாய்லாந்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் ஆங்கிலத்தைப் பாடமொழியாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக கடந்த ஆண்டு அங்கே நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அந்த நாட்டின் கல்விச் செயலாளர் என்னிடம் தெரிவித்தார். அதைக்கேட்டு நான் சற்று வியந்தபொழுது, தாய்லாந்து அதன் குடிமக்களைக் குற்றேவலர்களாக வெளிநாட்டுக்கு அனுப்ப விரும்பவில்லை என்று அவர் விளக்கமளித்தார்.
இன்று சர்வதேய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆங்கிலத்தைப் பேணுவதன் மூலம் அல்லது கைக்கொள்வதன் மூலம் இந்நாடுகள் தத்தம் குடிமக்களை வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு, பழைய அறிவு கழியும் அதே விரைவில் எழும் புதிய அறிவு பெற்று, வீட்டுப் பணியாட்களாகவோ அரைகுறைத் திறன் கொண்ட பணியாட்களாகவோ அல்லாமல் அதற்கு மேம்பட்ட தகைமையுடன் உலக சமூகத்துக்குப் பணியாற்ற வகைசெய்து கொடுத்துள்ளன. எமது அரசியல்வாதிகள் இந்த நாட்டின் இளையோரிடம், நீங்கள் எந்த மொழியில் கல்விகற்க விரும்புகிறீர்கள் என்று வினவினால், அவர்களுக்கு மெய்நிலை புரியும் என்று நினைக்கிறேன்.
அரசியல்யாப்பில் "இணைப்பு மொழி" என்று குறிப்பிடப்பட்ட மொழியின் பயன்பாட்டை வலுப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது; வேறு பொதுநலவாய நாடுகளின் உதவியுடன் அதை நாம் வலுப்படுத்தலாம். மொழி ஒரு தொடர்பூடகம் மட்டுமல்ல, அறிவூடகமும் கூட. எமது அவப்பேறு எனும்படியாக, இரண்டில் எதையும் சிங்களம் போதியளவு நிறைவேற்றவில்லை; அது உண்மை. எமது மக்களுக்கு ஆங்கிலத்தில் அறிவு பெறும் வசதிகள் அளிக்கப்பட்டால், தமது பாதுகாப்புக்காக வகுக்கப்பட்ட எண்ணிறந்த உடன்பாடுகளை இலங்கை ஏற்று உறுதிப்படுத்தியதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்; ஆனாலும் அவற்றை அது நடைமுறைப்படுத்தாததை அறிந்துகொள்வார்கள்; 2006ல் பங்களூர் நீதிநடத்தை நெறிகளை ஐ. நா. ஏற்றுக்கொண்டதை அறிந்துகொள்வார்கள்; இலங்கையில் நீதிபதிகளின் நடத்தையை ஒழுங்குறுத்தும் விதிக்கோவையை ஐ. நா. ஆவணத்தின் அடிப்படையில் வகுக்குமாறு இலங்கையின் நீதித்துறையிடம் கேட்கும்படி இலங்கை அரசாங்கத்திடம் ஐ. நா. வேண்டிக்கொண்டதை அறிந்துகொள்வார்கள்; ஆனாலும் இலங்கை அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறியதை அறிந்துகொள்வார்கள். முதன்முதல் ஐ. நா. ஊழல் தடுப்பு ஒப்பந்தத்தை ஏற்று உறுதிப்படுத்திய நாடுகளுள் இலங்கை ஒன்று; எனினும் அதன் தீர்க்கமான ஏற்பாடுகள் பலவற்றை இலங்கை இன்னும் நடைமுறைத்த வேண்டியுள்ளது; அதேவேளை அரச, தனியார் துறைகளில் அனைத்து நிலைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
12. முடிவுரை: இலங்கை, தலைமைத்துவம் ஓங்காத நாடு என்னும் எண்ணம் உங்கள் உள்ளத்துள் பதியும் வண்ணம் எனது உரையை நான் நிறைவுசெய்ய விரும்பவில்லை; உண்மையில் நான் விரும்பவில்லை.
1920களில் தொழிலாளிகள் ஓர் அமைப்பாக ஓங்குவதற்கும், இளையோர் தமது சமூகப் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வுநாடிக் கிளர்ந்தெழுவதற்கும் ஏ. ஈ. குணசிங்கா தலைமைத்துவம் ஈந்தார்.
1930களில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயின்று, காழ் மார்க்சின் கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு இலங்கை திரும்பிய கலாநிதி எஸ். ஏ. விக்கிரமசிங்கா, கலாநிதி என். எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா, லெஸ்லி குணவர்த்தனா, பிலிப் குணவர்த்தனா உள்ளடங்கிய இளம் அறிஞர்குழாம் இலங்கையில் இடதுசாரி இயக்கம் உருவாகுவதற்கு தலைமைத்துவம் ஈந்தது.
1940களில் இலங்கை ஒரு துளி குருதியும் சிந்தாமல் தன்னரசு ஈட்டும் வண்ணம் பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு டி. எஸ். சேனநாயக்காவும், ஸ்ரீமான் ஒலிவர் குணத்திலகாவும் தலைமைத்துவம் ஈந்தனர்.
இந்த நாட்டில் சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட அரசாங்கதைக் கவிழ்ப்பதற்கு முதன்முதல் (1962 சனவரி 27ம் திகதி) எடுக்கப்பட்ட முயற்சியை, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா பெரிதும் தன்னந்தனியாக, இரவு முழுவதும் விழித்திருந்து, முறியடித்து, பெருந்தொகையான உயிர்களை மாத்திரமன்றி, எமது நாட்டின் சமூக, அரசியற் கட்டுக்கோப்பினையும் காப்பாற்றினார்.
1971 சித்திரை மாதம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி.) கிளர்ந்தெழுந்து 2 கிழமைகளுக்குள், அதன்மீது படையினர் தாக்குதல் தொடுக்கத் தயாராகியபொழுது, பிரதமர் திருமதி பண்டாரநாயக்கா அப்போராளிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளித்து, அவர்களை அரசாங்க அலுவலர்கள் நடத்திய சோதனைச் சாவடிகளில் சரணடையும்படி வேண்டிக்கொண்டார். அவரது வேண்டுகோளுக்கு ஏறத்தாழ 10,000 இளையோர் உடன்பட்டார்கள்.
1978ல் ஜனாதிபதி ஜெயவர்த்தனா எமது பொருளாதாரத்தை நாட்பட்ட சமூகவுடைமைவாதத் தளையிலிருந்து விடுவித்து, முற்றிலும் புதிய திசையில் செலுத்தினார்.
2002ல் ஓர் அனுகூலமான சூழ்நிலையைத் தோற்றுவித்து, பேச்சுவார்த்தை நடத்தி, நீடித்த தீர்வு கண்டு, போருக்கு முடிவுகட்டும் நோக்குடன் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கை செய்யும் துணிவும் தொலைநோக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடம் காணப்பட்டது.
அவை எல்லாம் தலைமைத்துவத்துக்கு எடுத்துக்காட்டுகள். சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் தனியாட்கள் என்ற வகையில் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆற்றவேண்டிய கடப்பாடுகளை ஆற்றவேண்டும் என்பதை உள்ளத்துள் பதிக்கும் வண்ணம் கெனியாவின் தற்போதைய தலைமை நீதியரசரது வாய்மொழியை ஏற்று, அவர் வாய்மொழியைத் தழுவி, பின்வரும் கூற்றுடன் எனது உரையை நிறைவுய்செய்ய விழைகிறேன்:
எமது கடப்பாடுகள் அடிப்படை நியதிகளின் வழிவந்தவை: தனியாட்கள் என்ற வகையில் நாங்கள் ஒருவரை ஒருவர் மதித்து நடத்தல் கடன்; அத்துடன் சமூகங்களையும், மற்றும் பிற தனித்துவமான குழுமங்களையும் மதித்து நடத்தல் கடன். மாறாக, இந்த நாட்டில் வாழும் ஒரு சமூகத்தை தாழ்த்தி மலினப்படுத்துவது சமூகவாரியாக அருவருக்கத்தக்க செயலாகும்; அரசியல்வாரியாக மூர்க்கத்தனமான செயலாகும்; பொருளாதாரவாரியாக மடைத்தனமான செயலாகும். தற்கால அரசின் தோற்றுவாயை, அதன் கோட்பாட்டை, அதன் வழிமுறைகளை, அதன் ஆணைகளைப் புரிந்துகொள்ளும் வல்லமையற்ற சோணங்கிகளே கருத்துமுரண்பாடுகள் எடுத்துரைக்கப்படும்பொழுது அவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.
ஒரு தடாகத்தில் வளரும் மீனை ஒருவர் கடலில் இடும்வரை அது தன்னைக் கடல்வேந்தன் என்றே கணித்து வைத்திருக்கும். எஞ்சிய உலகத்துடன் நாங்கள் தொடர்பறுந்து நின்றால் மாத்திரமே எங்கள் இன, சமய, நலன்கள் ஒருபொருட்டாகும் என்ற மெய்ந்நிலையை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் அனைவரும் பண்பாடுகளின், மொழிகளின், நலன்களின் கூட்டிணைப்பாக விளங்குகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்; புரிந்துகொண்டாலொழிய ஒருவரை ஒருவர் கூர்ந்துணர்ந்து மதித்து நடக்கும் பண்பை வளர்த்தெடுக்க வல்லவர்களாக நாங்கள் என்றுமே விளங்கப் போவதில்லை. அதுவே எங்களை ஒருங்கிணைக்கத் தேவையான பண்பு.
கடல் எங்களை அழைத்த வேளையில் எங்கள் தடாகத்தில் நாங்கள் நிலைமண்டியிருந்தோம். ஆதலால் சர்வதேய சமூகத்தில் ஓர் அங்கம் என்ற வகையில் நாங்கள் உண்மையான பெருமை ஈட்டும் வண்ணம் என்றுமே செயற்படாது போகக்கூடும். இனம், சமயம், குலம், வர்க்கம், பிராந்தியம், தொழில், பால்மை, தலைமுறை, மாற்றுத்திறன் ஆகியவை எங்களைப் பிரித்து வைப்பதாகத் தென்படக் கூடும். எனினும், ஒரு பல்வண்மைத் தேசத்தை உருவாக்கத் தேவைப்படும் மூலவளங்களும் அவையே!
Nihal Jayawickrama, Deshamanya Dr P.R. Anthonisz Memorial Oration, Lanka–Japan Friendship Society, Sasakawa Hall Auditorium, Colombo 3, Wednesday 11th May 2016,
தமிழ்: மணி வேலுப்பிள்ளை
No comments:
Post a Comment