பிறகு என்னை தேடி வந்தார்கள்
லசந்த விக்கிரமதுங்கா
1958-04-05 2009-01-08
படைத்துறையைத் தவிர – இலங்கையைப் பொறுத்தவரை படைத்துறையையும் ஊடகத் துறையையும் தவிர – வேறெந்தத் துறையிலும், தமது துறைக்காக, தமது உயிரைத் துறக்கும்படி துறைஞர்கள் கேட்கப்படுவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக இங்கு சுதந்திர ஊடகங்கள் எதிர்நோக்கும் நெருக்குதல் அதிகரித்து வந்துள்ளது. ஊடக நிறுவனங்கள் எரிக்கப்பட்டுள்ளன, பலவந்தப்படுத்தப்பட்டுள்ளன, குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன, இழுத்துப் பூட்டப்பட்டுள்ளன. எண்ணிறந்த ஊடகர்கள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு, மிரட்டப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்கள். அத்தகைய அச்சுறுத்தல்கள் அனைத்தையும், குறிப்பாக அந்த இறுதி அச்சுறுத்தலை, எதிர்கொள்ளும் பெருமை படைத்தவன் நான்.
நான் ஊடகத் துறையில் நெடுங் காலமாக ஈடுபட்டுள்ளேன். உண்மையில், 2009ம் ஆண்டு, சண்டே லீடரின் 17வது ஆண்டாகும். இலங்கையில், இந்தக் காலப்பகுதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களுள் பெரும்பாலானவை மோசமானவை என்பதை நான் உங்களிடம் தெரிவிக்க வேண்டியதில்லை. கட்டுக்கடங்காத குருதிவெறி கொண்ட நாயகர்களால் ஈவிரக்கமின்றி நடத்தப்படும் ஓர் உள்நாட்டுப் போரினுள் நாங்கள் அகப்பட்டுள்ளோம். பயங்கரவாதிகளாலோ, அரசினாலோ புரியப்படும் பயங்கரம் அன்றாட நிகழ்வாகிவிட்டது. உண்மையில், சுதந்திர ஊடகங்களைக் கட்டப்படுத்துவதற்கு அரசு கையாள முயலும் முழுமுதற் கருவி கொலையே. இன்று ஊடகர்கள், நாளை நீதிபதிகள்... எந்தக் குழுமமும் இதைவிட மோசமான ஆபத்தை எதிர்கொண்டதில்லை. எந்தக் குழுமத்தின் பெறுமதியும் இதைவிட மோசமாகக் குன்றியதில்லை.
அப்படி என்றால், நாங்கள் ஏன் ஊடகத்தொழில் புரிகின்றோம்? அடிக்கடி என்னையே நான் அப்படி வினவுவதுண்டு. எவ்வாறாயினும், நானும் ஒரு கணவன், மூன்று அருந்தவப் பிள்ளைகளின் தந்தை. எனது சட்டத் துறைக்கு அல்லது ஊடகத் துறைக்கு அப்பாற்பட்ட பொறுப்புகள், கடப்பாடுகள் எனக்கும் உண்டு. அவை அனைத்தையும் புறக்கணித்து, நான் ஆபத்தை எதிர்கொள்வது தகுமா? தகாது என்றுதான் பலரும் என்னிடம் கூறுகிறார்கள். சட்டத் துறைக்குத் திரும்பும்படி நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள். சிறந்த, பத்திரமான பிழைப்பை அது அளிக்கும் என்பது எவர்க்கும் தெரியும். இருதரப்பு அரசியல் தலைவர்களும், பிற தரப்பினரும் பல்வேறு தருணங்களில் என்னை அரசியலில் இறங்கும்படி தூண்டியதுண்டு. நான் விரும்பிய அமைச்சுப் பதவிகளைத் தருவதற்கும் கூட அவர்கள் முன்வந்ததுண்டு. இலங்கையில் ஊடகர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தைப் புரிந்துகொண்ட வெளிநாட்டுச் சாணக்கியர்கள், என்னைப் பத்திரமாகக் கூட்டிச்சென்று தத்தம் நாடுகளில் வதிவுரிமை வழங்க முன்வந்ததுண்டு. வேறெதுவும் இல்லாமல் நான் தவித்திருக்கலாம். ஆனால் வாய்ப்புகள் இல்லாமல் நான் தவிக்கவில்லை.
எனினும் உயர்ந்த பதவி, புகழ், பணம், பாதுகாப்பு அனைத்தையும் விஞ்சிய அறைகூவல் ஒன்று காதில் விழுகிறது: அதுவே மனச்சாட்சியின் அறைகூவல்.
சண்டே லீடர் ஒரு சர்ச்சைக்குரிய செய்தித்தாளாகவே விளங்கி வந்துள்ளது. காரணம்: நாங்கள் காண்பதையே கூறுகிறோம். உள்ளத்தில் பட்டதை உரைக்கிறோம். திருடரைத் திருடர் என்றும், கொலைஞரைக் கொலைஞர் என்றும் கூறுகிறோம். ஒவ்வொன்றுக்கும் உரிய பெயரைக் கொண்டே அதனை நாங்கள் குறிப்பிடுகிறோம். இடக்கரடக்கலின் பின்னே நாங்கள் ஒளிந்துகொள்ளவில்லை. நாங்கள் அச்சிடும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு ஆவணச் சான்றுகள் உள்ளன. பொது உணர்வு மிகுந்த குடிமக்கள், தமக்கு ஆபத்து நேரக்கூடும் என்று அறிந்திருந்தும் கூட, அத்தகைய ஆவணங்களை எங்களிடம் சேர்ப்பிக்கிறார்கள். மோசடிகளை நாங்கள் அடுத்தடுத்து அம்பலப்படுத்தியுள்ளோம். கடந்த 15 ஆண்டுகளில் ஒரு தடவையேனும் நாங்கள் தவறிழைத்ததாக எவருமே நிரூபிக்கவுமில்லை, எங்கள்மீது வழக்குத் தொடுத்து வெல்லவுமில்லை.
சுதந்திர ஊடகம் ஒரு கண்ணாடி போன்றது. அதில் மக்கள் தங்களைத் தாங்களே கண்டுகொள்ளலாம் - இமைக்கு நிறம் தீட்டாமலேயே, முடிக்கு இழுது பூசாமலேயே கண்டுகொள்ளலாம். உங்கள் நாட்டின் நிலைவரத்தைப் பற்றி, குறிப்பாக உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை அளிப்பதற்கென உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நடத்தும் நிர்வாகத்தைப் பற்றி, எங்களிடமிருந்தே நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். சில வேளைகளில் அந்தக் கண்ணாடியில் நீங்கள் காணும் சாயை, இன்பம் பயப்பதில்லை. உங்கள் நாற்காலியில் அமர்ந்து நீங்கள் அந்தரங்கமாக முணுமுணுக்கக் கூடும். அதேவேளை, உங்கள் கண்ணெதிரே அந்தக் கண்ணாடியை ஏந்தி வைத்திருக்கும் ஊடகர்கள் பகிரங்கமாகவே அப்படிச் செய்கிறார்கள். தமக்கு ஆபத்து நேரக்கூடும் என்பதை அறிந்திருந்தும் கூட, அவர்கள் அப்படிச் செய்கிறார்கள். அந்தக் கடமையுணர்வே எங்களை அறைகூவி அழைக்கிறது. எங்கள் கடமையிலிருந்து நாங்கள் வழுவப்போவதில்லை.
ஒவ்வொரு செய்தித்தாளுக்கும் ஒரு கண்ணோட்டம் உண்டு. எங்களுக்கும் ஒரு கண்ணோட்டம் உண்டு என்பதை நாங்கள் மறைக்கவில்லை. இலங்கையை ஒரு தெள்ளத்தெளிவான, மதச்சார்பற்ற, தாராண்மை மிகுந்த, மக்களாட்சி நாடாகக் காண்பதற்கே நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இச்சொற்களை எண்ணிப் பாருங்கள். ஒவ்வொன்றும் ஆழ்ந்த பொருள் வாய்ந்தது: தெள்ளத்தெளிவானது என்றோம். ஏனெனில், அரசாங்கம் வெளிப்படையாகவே மக்களுக்கு மறுமொழி கூறவேண்டும். அரசுமீது மக்கள் கொண்ட நம்பிக்கைக்கு என்றுமே அது துரோகம் இழைக்கக் கூடாது. மதச்சார்பற்றது என்றோம். நாங்கள் பல இனங்களும், பல பண்பாடுகளும் கொண்ட சமூகத்தவர்கள். அத்தகைய சமூகத்தில் நாங்கள் அனைவரும் ஒற்றுமைப்படக்கூடிய ஒரேயொரு பொதுக் களம் மதச்சார்பின்மையே. தாராண்மை என்றோம். மனிதர்கள் எல்லோரும் வேறுபட்டவர்களாகவே படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மற்றவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து, நாங்கள் விரும்பியபடிதான் அவர்கள் இருக்கவேண்டும் என்று நாங்கள் கொள்ள முடியாது. மக்களாட்சி என்றோம். அது ஏன் முக்கியம் என்பதை நான் விளக்கத்தான் வேண்டும் என்றால், இந்தச் செய்தித்தாளை வாங்கும் வேலையை நீங்கள் நிறுத்திக்கொள்வதே மிகவும் நல்லது!
ஒரு சங்கதியை நாங்கள் பச்சையாகவே சொல்லிக்காட்டலாம்: பெரும்பான்மையோரின் கருத்தை கேட்டுக்கேள்வியின்றி எடுத்துரைத்து செய்தித்தாள்களை எவருமே விலைப்படுத்தலாம். ஆனால் அப்படிச் செய்து பாதுகாப்புத் தேடிக்கொள்ள சண்டே லீடர் என்றுமே முயன்றதில்லை. மாறாக, பலருக்கும் கசக்கும் கருத்துக்களை அடிக்கடி நாங்கள் எடுத்துரைக்கிறோம். பல ஆண்டுகளாக வெளிவந்த எங்கள் கருத்துரைகள் அதனைத் தாராளமாக வெளிப்படுத்தி நிற்கின்றன. எடுத்துக்காட்டாக, பிரிவினை கோரும் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும், அதேவேளை பயங்கரவாதத்தின் மூலகாரணங்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது அதைவிட முக்கியம் என்று இடைவிடாது நாங்கள் வாதாடி வந்துள்ளோம். இலங்கையின் இனப் பிரச்சனையை பயங்கரவாதக் கண்ணாடி கொண்டு நோக்குவதை விடுத்து, வரலாற்றுச் சூழ்நிலையை வைத்து நோக்கும்படி அரசாங்கத்தை நாங்கள் தூண்டியதுண்டு. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனப்படுவதில் உள்ள அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும் நாங்கள் வாதாடி வந்துள்ளோம். உலகில் தனது சொந்த மக்கள் மீதே குண்டுவீசும் வழமை கொண்ட ஒரேயொரு நாடு இலங்கையே என்பது குறித்து எங்களுக்கு ஏற்படும் அதிர்ச்சியை நாங்கள் மூடிமறைக்கவில்லை. இத்தகைய கருத்துக்களால், எங்களுக்கு துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. இது துரோகம் என்றால், அந்த முத்திரையை நாங்கள் பெருமையுடன் அணிந்து கொள்வோம்.
சண்டே லீடருக்கு ஓர் அரசியல் உள்நோக்கம் உண்டு என்று பலரும் சந்தேகிக்கிறார்கள்: சண்டே லீடருக்கு ஓர் அரசியல் உள்நோக்கம் கிடையாது. ஏதிர்க்கட்சிகளைவிட அரசாங்கத்தையே நாங்கள் அதிகம் விமர்சிப்பதாகத் தென்படுகிறது என்றால், அதற்கான காரணம், ஏந்தும் அணியை நோக்கி நாங்கள் பந்தை வீசுவதில் அர்த்தமில்லை என்பதே – இங்கு துடுப்பாட்டப் பதத்தை எடுத்தாண்டதற்கு மன்னிக்கவும். சில ஆண்டுகளாகவே நாங்கள் சண்டே லீடரை வெளியிட்டு வருகிறோம். எங்கள் குறுகிய வெளியீட்டுக் காலப்பகுதியில் ஆட்சி புரிந்த ஐக்கிய தேசியக் கட்சியை நாங்களே பெரிதும் குத்திக் குதறினோம். எங்கெல்லாம் ஊழலும், வரம்புமீறலும் இடம்பெற்றனவோ அங்கெல்லாம் அவற்றை நாங்கள் அம்பலப்படுத்தினோம். உண்மையில், அந்த அரசாங்கத்தை நாங்கள் இடைவிடாது அம்பலப்படுத்தி, தர்மசங்கடப்படுத்தி வெளியிட்ட சங்கதிகளே அதன் வீழ்ச்சியை விரைவுபடுத்தியிருக்கவும் கூடும்.
போர்மீது நாங்கள் கொண்ட வெறுப்பை, புலிகளுக்கு நாங்கள் தெரிவிக்கும் ஆதரவாகக் கொள்ளக்கூடாது. உலகைப் பீடித்த அறக்கொடிய, குருதிவிடாய் கொண்ட அமைப்புக்களுள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் இடம்பெற்றுள்ளது. அந்த இயக்கம் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை. அதற்காக, தமிழ் மக்களின் உரிமைகளை மீறுவதும், ஈவிரக்கமின்றி அவர்கள்மீது குண்டுகளை வீசி, சுட்டுத்தள்ளுவதும் தவறு. அது மட்டுமல்ல, தாங்கள் பௌத்த தருமத்தின் பாதுகாவலர்கள் என்று வலியுறுத்தும் சிங்களவரை அது வெட்கப்பட வைக்கும் செயலுமாகும். அவ்வாறு அவர்கள் வலியுறுத்துவதை, அந்தக் காட்டுமிராண்டித்தனம் என்றென்றும் கேள்விக்கிடமாக்குகின்றது. செய்தித் தணிக்கையால் அந்தக் காட்டுமிராண்டித்தனம் பெரிதும் வெளியே தெரிவதில்லை
அதைவிட முக்கியமான விடயம்: இந்த நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் படையினர் நிலைகொண்டிருந்தால், அப்பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள், தன்மானம் முழுவதும் களையப்பட்டவர்களாய், என்றென்றும் இரண்டாந்தரக் குடிமக்களாகவே வாழ நேரும். போரை அடுத்த ஊழியில் அவர்கள்மீது "அபிவிருத்தி" – "புனரமைப்பு" சொரிந்து அவர்களை ஆற்றித்தேற்றலாம் என்று மட்டும் கற்பனைசெய்ய வேண்டாம். போரில் தாக்குண்ட காயங்கள் அவர்களை என்றென்றும் வடுப்படுத்தும். இன்னும் கசப்பும், வெறுப்பும் மிகுந்த புலம்பெயர்ந்தோரையும் நீங்கள் எதிர்கொள்ள நேரும். அரசியல் தீர்வுக்கு நெகிழக்கூடிய ஒரு பிரச்சனை இவ்வாறு புரையோடும் புண்ணாகி, என்றென்றும் பூசலைக் கிளப்பிக்கொண்டிருக்கும். வீழ்ச்சியின் அறிகுறிகள் மிகவும் வெளிப்படையாகவே புலப்படுகின்றன. நான் சீற்றமும், விரக்தியும் கொள்வதாகத் தென்பட்டால், அதற்கு, எனது நாட்டு மக்களுள் அநேகர் – அரசாங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் – வெளிப்படையாகப் புலப்படும் அந்த வீழ்ச்சியின் அறிகுறிகளைக் காணமுடியாதவர்களாக விளங்குவதே காரணம்.
இரண்டு தடவைகள் நான் மிருகத்தனமான முறையில் தாக்கப்பட்டது பலருக்கும் தெரியும். இன்னொரு தடவை எனது வீட்டின்மீது எந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடப்பட்டது. அரசாங்கம் உருத்திராட்ச உறுதிமொழிகள் வழங்கியும், தாக்குதல் நடத்தியவர்கள் என்றுமே காவல்துறையினரால் கைதுசெய்யப் படவுமில்லை, கருத்தூன்றி விசாரிக்கப் படவுமில்லை. மேற்படி தாக்குதல்கள் எல்லாம் அரசாங்கத்தால் தூண்டி விடப்பட்டவையே என்று நான் நம்புவதற்கு நியாயம் உண்டு. ஈற்றில் நான் கொல்லப்படும்பொழுது, என்னைக் கொன்றது அரசாங்கமாகவே இருக்கும்.
இதில் ஒரு வேடிக்கையான முரண்பாடும் உண்டு. பெரும்பாலான பொதுமக்களுக்கு அது தெரியாது: மகிந்தாவும் நானும் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நண்பர்களாக இருந்துள்ளோம். உண்மையில், அவரை முதற்பெயர் கொண்டு விளிக்கும் வழமையைக் கைக்கொள்ளும் எஞ்சிய ஒருசிலருள் நானும் ஒருவன் என்றே நம்புகிறேன். சிங்களத்தில் அவரை ஒயா (நீ) என்று விளித்து, கதைத்துப் பழகியவன் நான். காலத்துக்குக் காலம் அவர் ஊடகப் பதிப்பாளர்களுக்காக நடத்தும் கூட்டங்களில் நான் கலந்துகொள்வதில்லை. எனினும் நாங்கள் தனிப்பட்ட முறையில் அல்லது ஒருசில நெருங்கிய நண்பர்களுடன், நள்ளிரவில், ஜனாதிபதி மாளிகையில் சந்திக்காமல் ஒரு மாதமேனும் கழிவது அரிது. அங்கே நாங்கள் வம்புதும்பு பரிமாறுவதும், அரசியல் பற்றி உரையாடுவதும், பழைய நன்னாட்களை எண்ணி நகையாடுவதும் உண்டு. ஆகவே, இங்கே அவரிடம் ஒருசில கருத்துரைகளை முன்வைத்தல் தகும்:
மகிந்தா, ஈற்றில் – 2005ல் – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீ வெற்றிபெற்றபொழுது, (சண்டே லீடரின்) இந்தப் பத்தியைவிட வேறெந்த இடத்திலும் மிகவும் உளமார நீ வரவேற்கப்படவில்லை. உண்மையில், ஒரு தசாப்தகால மரபை உடைத்து, உனது முதற் பெயரைக் கொண்டே உன்னை எப்பொழுதும் நாங்கள் குறிப்பிட்டு வந்தோம். மனித உரிமைகளையும், தாராண்மை விழுமியங்களையும் காப்பதற்கு நீ பூண்ட உறுதி பலரும் அறிந்தவை. ஆதலால் உன்னை ஒரு புத்தம் புதிய உயிர்-மூச்சாகவே நாங்கள் உள்வாங்கினோம். பின்னர் அம்பாந்தோட்டைக்கு உதவும் மோசடியில் முட்டாள்தனமாக நீ சிக்கிக்கொண்டாய். அப்புறம் தீர ஆராய்ந்த பின்னரே அந்த மோசடியை நாங்கள் அம்பலப்படுத்தினோம். பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி உன்னை நாங்கள் தூண்டினோம். பல கிழமைகள் கழித்து நீ அப்படிச் செய்வதற்குள், உனது பெயருக்குப் பெரிய களங்கம் கற்பிக்கப்பட்டுவிட்டது. மக்கள் அதனை மறக்கும்படி செய்வதற்கு இன்னமும் நீ பாடுபட்டு வருகிறாய்.
நீ ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்படவில்லை, அதற்கு நீ ஆசைப்பட வேண்டிய தேவை இருக்கவில்லை, அது உன் மடியில் வந்து விழுந்தது என்று நீயே என்னிடம் சொல்லியிருக்கிறாய். உன் புதல்வர்களே உனக்குப் பேரின்பம் தருபவர்கள் என்றும், அரச யந்திரத்தை இயக்கும் பணியை உன் சகோதரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, உன் புதல்வர்களுடன் பொழுதைக் கழிக்கவே நீ ஆசைப்படுவதாகவும் என்னிடம் நீ சொல்லியிருக்கிறாய். இன்று, என் புதல்வர்களும் மகளும் தகப்பனற்றவர்களாக விளங்கும் வண்ணம் அரச யந்திரம் செவ்வனே செயற்பட்டுள்ளது என்பதைக் கண்டுகொள்ள விரும்புவோர் அனைவரும் தெளிவாகக் கண்டுகொள்வார்கள்.
நான் இறந்த பிற்பாடு, வழக்கமான உருத்திராட்ச ஓசைகள் அனைத்தையும் நீ எழுப்புவாய் என்பதும், ஒரு துரிதமான, முழுமையான விசாரணை நடத்தும்படி காவல்துறையிடம் நீ கேட்டுக்கொள்வாய் என்பதும் எனக்குத் தெரியும். எனினும், நீ கடந்த காலத்தில் ஆணையிட்ட விசாரணைகள் அனைத்தையும் போலவே, இதுவும் ஒரு வீண் விசாரணையாகவே முடிவடையும். எனது இறப்புக்கு யார் காரணமாகப் போகிறார் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். அவருடைய பெயரை உச்சரிக்க எங்கள் இருவருக்கும் துணிவில்லை. எனது வாழ்வு மட்டுமல்ல, உனது வாழ்வும் அதில்தான் தங்கியிருக்கிறது என்னும் உண்மையை இங்கு நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.
உன் இளமைக் காலத்தில் எங்கள் நாட்டுக்காக நீ கண்ட கனவுகள் அனைத்துக்கும் மாறாக, மூன்றே மூன்று ஆண்டுகளில் அதே நாட்டை நீ இடித்துத் தகர்த்தமை வருந்தத்தக்கது. நாட்டுப்பற்றின் பெயரால் மனித உரிமைகளை நீ எட்டி உதைத்துள்ளாய். மட்டுமீறிய ஊழலை நீ ஊட்டி வளர்த்துள்ளாய். உனக்கு முந்திய ஜனாதிபதி எவருமே செய்யாத அளவுக்கு அரசாங்கப் பணத்தை நீ வீணடித்துள்ளாய். உண்மையில், ஒரு பொம்மைக் கடையில் கட்டுப்பாடின்றி விடப்பட்ட ஒரு சின்னப் பிள்ளையைப் போலவே நீ நடந்து கொண்டுள்ளாய். ஒருவேளை இந்த ஒப்பீடு உனக்குப் பொருந்தாது போகலாம். ஏனெனில், உன்னால் இந்த நாட்டில் பாய்ச்சப்பட்டளவு குருதியை எந்தப் பிள்ளையாலும் பாய்ச்ச முடியாது. உன்னைப் போல் மக்களின் உரிமைகளை அவர்களால் எட்டி உதைக்க முடியாது. உன்னால் கண்டுகொள்ள முடியாவாறு, இன்று நீ அதிகார வெறி கொண்டுள்ளாய். எனினும், குருதிப் பரம்பரைச் சொத்து மிகுந்தவர்களாய் உன் புதல்வர்கள் விளங்குவதை எண்ணி நீ வருந்தப் போகிறாய். அது பெருந்துன்பத்தை மட்டுமே விளைவிக்க வல்லது. என்னைப் படைத்தவனை தெளிந்த மனச்சாட்சியுடன்தான் நான் எதிர்கொள்ளப் போகிறேன். ஈற்றில் உனது முறை வரும்பொழுது, நீயும் அப்படியே செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. எனது நப்பாசை!
எவருக்கும் மண்டியிடாது, மிடுக்குடன் நடமாடிய நிறைவுடன் பயணித்தவன் நான். இந்தப் பயணத்தை நான் தனித்து மேற்கொண்டவன் அல்லன். பிற ஊடகத் துறைஞர்களும் என்னுடன் பயணித்ததுண்டு. அவர்களுள் அநேகர் இன்று இறந்துவிட்டார்கள், அல்லது விசாரணையின்றிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் அல்லது தூரத்து நாடுகளுக்கு விரட்டப்பட்டுள்ளார்கள். அன்று எத்தனையோ சுதந்திரங்களுக்காக நீ கடுமையாகப் போராடினாய். இன்று உன் ஜனாதிபதி-ஆட்சியின் விளைவாக அத்தகைய சுதந்திரங்கள் அனைத்தின் மீதும் கவிந்துள்ள மரணத்தின் சாயலில் மற்றவர்கள் பயணித்து வருகிறார்கள். உன் கண்ணெதிரே என் உயிர் பிரிவதை நீ மறப்பதாவது! அதற்கு நீ என்றுமே அனுமதிக்கப்பட மாட்டாய். நீ வேதனைப்படுவாய் என்பது எனக்குத் தெரியும். எனினும் என்னைக் கொல்பவர்களைப் பாதுகாப்பதைத் தவிர உனக்கு வேறு வழி கிடைக்காது என்பதும், அந்தக் குற்றத்தைப் புரிந்தவர் என்றென்றும் குற்றத் தீர்ப்புக்கு உள்ளாகாவாறு நீ பார்த்துக்கொள்வாய் என்பதும், அதைவிட உனக்கு வேறு வழி கிடைக்காது என்பதும் எனக்குத் தெரியும். உனக்காக நான் இரங்குகிறேன். (உன் மனைவி) சிராந்தி அடுத்த முறை பாவமன்னிப்புக் கேட்கப் போகும்பொழுது, நெடுநேரம் முழந்தாளில் நிற்க நேரும். தான் புரிந்த பாவங்களுக்காக மட்டுமன்றி, உன்னைப் பதவியில் வைத்திருக்கும் தனது கணவரின் குடும்பத்தவர்கள் புரிந்த பாவங்களுக்காகவும் உன் மனைவி மன்னிப்புக் கேட்க நேரும்.
நாங்கள் சிரமேற்கொண்ட பணிக்குத் துணைநிற்கும் சண்டே லீடர் வாசகர்களுக்கு நான் நன்றி கூறுவதைத் தவிர வேறென்ன கூறமுடியும்? மற்றவர்களால் நயக்கப்படாத குறிக்கோள்களுக்கு நாங்கள் துணை நின்றுள்ளோம். தமக்காக வாதாட முடியாத நலிந்தோர்க்காக நாங்கள் வாதாடியுள்ளோம். தமது தோற்றுவாயை மறந்துவிடும் அளவுக்கு அதிகாரத்திமிர் மிகுந்த அகங்காரிகளுடன் நாங்கள் மோதியுள்ளோம். நீங்கள் பாடுபட்டு, சம்பாதித்து, செலுத்தும் வரிப்பணத்துக்கு நேரும் விரயத்தையும், ஊழலையும் நாங்கள் அம்பலப் படுத்தியுள்ளோம். அன்றாடப் பிரச்சாரம் எவ்வாறு அமைந்தாலும் கூட, ஒரு மாற்றுக் கருத்தை அறியும் வாய்ப்பை நாங்கள் உங்களுக்கு வழங்கினோம். அதற்கான விலையை நானும் எனது குடும்பமும் இப்பொழுது செலுத்தியுள்ளோம். என்றோ ஒருநாள் அந்த விலையை நான் செலுத்த நேரும் என்பதை நீண்ட காலமாகவே நான் அறிந்து வைத்துள்ளேன். அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன் – என்றென்றும் தயாராகவே இருந்துள்ளேன். இந்த விளைவைத் தடுப்பதற்கு நான் எதுவுமே செய்யவில்லை. நான் பாதுகாப்பும் தேடவில்லை, முன்னேற்பாடும் செய்யவில்லை. என்னைக் கொல்லப்போகும் ஆளுக்கு நான் ஒன்று சொல்வேன்: நான் ஆயிரக் கணக்கான அப்பாவிகளைச் சாகடித்துக்கொண்டு, மனிதக் கேடயங்களுக்குப் பின்னே மறைந்து திரியும் கோழை அல்லன் என்பதை, என்னைக் கொல்லப்போகும் ஆளுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அந்த ஆயிரக் கணக்கானோருள் நான் எம்மாத்திரம்? என் உயிர் பறிக்கப்படும், அது யாரால் பறிக்கப்படும் என்று எப்பொழுதோ எழுதப்பட்டுவிட்டது. அது எப்பொழுது பறிக்கப்படும் என்பது மட்டும்தான் இன்னும் எழுதப்பட வேண்டியுள்ளது.
இந்த நற்போராட்டத்தை சண்டே லீடர் தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதும் எழுதப்பட்டுவிட்டது. ஏனெனில், இந்தப் போராட்டத்தை நான் தனித்து மேற்கொள்ளவில்லை. சண்டே லீடர் அடக்கம் செய்யப்படும் வரை, எங்களுள் இன்னும் பலர் கொல்லப்பட வேண்டியுள்ளது – கொல்லப்படுவார்கள். எஞ்சியோர் தமது முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதற்கு எனது படுகொலை ஓர் உந்துவிசையாக நோக்கப்படுமேயன்றி, சுதந்திரத்தின் தோல்வியாக நோக்கப்பட மாட்டாது என்று நான் நம்புகிறேன். நாங்கள் நேசிக்கும் தாயகத்தில் மானுட சுதந்திரம் மிகுந்த புதிய ஊழி ஒன்றைப் படைக்கும் தீரர்களுக்கு எழுச்சியூட்ட எனது கொலை உதவும் என்று உண்மையில் நான் நம்புகிறேன். நாட்டுப்பற்றின் பெயரால் எத்தனை பேர் கொன்று குதறப்பட்டாலும், மானுட உணர்வு நிலைத்து வளம்கொழிக்கும் என்பதை உங்கள் ஜனாதிபதியும் கண்டறிவார் என்று நான் நம்புகிறேன். இராஜபக்சாமார் எல்லாரும் சேர்ந்தாலும் மானுட உணர்வை மாய்க்க முடியாது.
அத்தகைய ஆபத்துகளை அறிந்துகொண்டும் நான் ஏன் அவ்வாறு செயற்படுகிறேன் என்று பலரும் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். நான் கொல்லப்படுவதற்கு நாள் மட்டும்தான் குறிக்கப்பட வேண்டியுள்ளது என்று அவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். ஆம்! உறுதியாகக் கூறுகிறேன்: அது எனக்குத் தெரியும். அது தவிர்க்கமுடியாதது. எனினும், குரல் எழுப்ப முடியாதவர்களுக்காக, சிறுபான்மை இனத்தவர்களுக்காக, வளம் குன்றியவர்களுக்காக, கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவோருக்காக இப்பொழுதே நாங்கள் குரல் எழுப்பாவிட்டால், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்கு எவருமே எஞ்சப் போவதில்லை. நான் ஊடகப் பணி ஆற்றிய காலம் முழுவதும் மார்ட்டின் நியெமோலர் (Martin Niemoller) என்னும் ஜேர்மானிய இறையியலாளரின் முன்னுதாரணம் ஒன்று எனக்கு உந்துதல் அளித்து வந்துள்ளது. இளமையில் அவர் யூதர்களை வெறுத்தவர். ஹிட்லரை நயந்தவர். எனினும் ஜேர்மனியில் நாசிசம் நிலையூன்றவே, அது எத்தகையது என்பதை அவர் கண்டுகொண்டார்: ஹிட்லர் வேரறுக்க முனைந்தது வெறுமனே யூதரை மட்டுமல்ல, மாற்றுக் கருத்துக் கொண்ட எவரையுமே என்பதை அவர் கண்டுகொண்டார். நியெமோலர் குரல் கொடுத்தார். அது வில்லங்கமாய்ப் போய்விட்டது. 1937 முதல் 1945 வரை Sachsenhausen மற்றும் Dachau வதை-முகாங்களில் அவர் அடைக்கப்பட்டார். மரண தண்டனையின் விளிம்புவரை அவர் கொண்டுசெல்லப்பட்டார். அவர் சிறையிருந்த காலத்தில் ஒரு கவிதை எழுதினார். என் பதின்ம வயதில் அதை முதன்முதல் நான் வாசித்த நாள்தொட்டு இற்றைவரை அது என் உள்ளத்தைப் பீடித்து, உறுத்தி வந்தள்ளது:
முதலில் யூதரைத் தேடி வந்தார்கள்
நான் ஒரு யூதன் அல்ல.
ஆதலால் நான் ஏன் என்று கேட்கவில்லை.
பிறகு பொதுவுடைமையாளரைத் தேடி வந்தார்கள்.
நான் ஒரு பொதுவுடைமையாளன் அல்ல.
ஆதலால் நான் ஏன் என்று கேட்கவில்லை.
பிறகு தொழிற்சங்கவாளரைத் தேடி வந்தார்கள்.
நான் ஒரு தொழிற்சங்கவாளன் அல்ல.
ஆதலால் நான் ஏன் என்று கேட்கவில்லை.
பிறகு என்னைத் தேடி வந்தார்கள்.
ஏன் என்று கேட்க எவருமே எஞ்சவில்லை.
உங்கள் நினைவில் வேறெதுவும் பதியவில்லை என்றால், இதனைப் பதித்து வைத்திருங்கள்: நீங்கள் சிங்களவராகலாம், தமிழராகலாம், முஸ்லீங்களாகலாம், தாழ்ந்த சாதியினராகலாம், ஒரேபாலுறவினராகலாம், கருத்து முரண்பாடு கொண்டவராகலாம், வலு தளர்ந்தவராகலாம்… சண்டே லீடர் உங்களுக்கானது. அதன் பணியாளர்கள் மண்டியிடாது, அஞ்சாது, துணிந்து, தொடர்ந்து போராடுவார்கள். அது நீங்கள் அறிந்த சங்கதியே. எனினும், அவர்கள் பூண்ட உறுதியை நீங்கள் ஒப்புக்கு ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஊடகர்களின் தியாகத்தை நாடும் அருகதை உங்களுக்கு உண்டா இல்லையா என்பது வேறு கதை. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. இதில் ஐயுறவுக்கு இடமில்லை: ஊடகர்களாகிய நாங்கள் எத்தகைய தியாகங்களைப் புரிந்தாலும், அவை எங்கள் சொந்தப் புகழுக்காகவோ, பணத்துக்காகவோ புரியப்படுபவை ஆகா. அவை உங்களுக்காகவே புரியப்படுபவை. என்னைப் பொறுத்தவரை... நான் பட்ட பாடு கடவுளுக்குத் தெரியும்.
_________________________________________________________________
Lasantha Wickrematunge, The Sunday Leader, Colombo, 2009-01-10,
தமிழ்: மணி வேலுப்பிள்ளை
Lasantha Wickrematunge, The Sunday Leader, Colombo, 2009-01-10,
தமிழ்: மணி வேலுப்பிள்ளை
No comments:
Post a Comment