சி. வி.
விவேகானந்தன்
2013 அக்டோபர் 11ம் திகதி நடைபெற்ற வட மாகாண மன்றத் தேர்தலை
முன்னிட்டு தமிழர் தேசியக் கூட்டமைப்பு ஒரு கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டது.
இணைப்பாட்சி முறைமை (federalism) பற்றிய அதன் ஆவணத்திரட்டையே மேற்படி கொள்கைப் பிரகடனமாக அது
வெளியிட்டது. அதை வாக்காளர்கள் முற்றிலும் ஆதரித்தார்கள்; மன்ற
இருக்கைகள் 38ல் 30ஐ அவர்கள் கூட்டமைப்புக்கு வழங்கினார்கள்.
சிங்களத் தலைவர்கள் இணைப்பாட்சி முறைமையை முன்னின்று
ஆதரித்த காலத்தில் தமிழர்கள் அதை மும்முரமாய் எதிர்த்து, ஒற்றை
ஆட்சிக்குள் இன நலன்களை அடிப்படையாகக் கொண்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை
வலியுறுத்தினார்கள்.
இன்று எதிர்மாறான நிலை காணப்படுகிறது. தமிழர்கள்
இணைப்பாட்சி கோரிக் கிளர்ந்தெழுகிறார்கள். சிங்களவர்கள் அதை ஐயுறவுக் கண்கொண்டு
பார்க்கிறார்கள். இணைப்பாட்சி என்பது பிரிவினைக்கான மாறுவேடம் என்று சிங்களவர்கள்
கருதுகிறார்கள். ஆதலால், இணைப்பாட்சி
முறைமையின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு கைகூடாத நிலை இன்று தோன்றியுள்ளது.
மகா முதலியார் ஸ்ரீ சொலமன் டயஸ் பண்டாரநாயக்காவின் ஒரே
மகனாகிய எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆக்ஸ்போர்ட் கிறீஸ்தவ தேவாலயக்
கல்லூரியில் கற்றுத்தேர்ந்த மாணவர். 1925ல் இலங்கையின் மைய அரசியல் ஓடையில்
இணைப்பாட்சிக் கருத்து உள்வாங்கப்பட்ட வேளையில் அவர் நாடு திரும்பினார். அதே
ஆண்டில், தேசிய
விடுதலையை ஈட்டும் நோக்குடன், "முற்போக்குத் தேசியக்
கட்சி"யை அவர் அமைத்தார்.
இணைப்பாட்சி முறைமையின் தன்மையும் பரப்பளவும் முற்போக்குத்
தேசியக் கட்சியின் யாப்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. உத்தேச
இணைப்பாட்சி முறைமைக்கு இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் அடிப்படையாகக் கொள்வது,
ஒவ்வொரு மாகாணத்துக்கும் முழுமையான தன்னாட்சி அளிப்பது,
"மூதவை", "மக்களவை"
எனப்படும் இரு அவைகளும் கூடி நடுவண் அரசை நிர்வகிப்பது... என்றெல்லாம் அதில்
குறிப்பிடப்பட்டன.
"எமது நாட்டு மக்களிடையே வேறுபாடுகள் நிலவுகின்றன. ஆதலால்
இணைப்பாட்சி முறைமை மட்டுமே அப்பிரச்சனைக்குத் தீர்வாகும்" என்று
முற்போக்குத் தேசியக் கட்சியின் யாப்பில் பண்டாரநாயக்கா வலியுறுத்தினார்.
"நாட்டு நிலைமைகளை, குறிப்பாக இன வேறுபாடுகளைத் தணித்து,
படிப்படியாக அவற்றை நீக்குவதற்கு மிகவும் திருப்திகரமான முறைமை
இணைப்பாட்சி முறைமையே என்று எங்களுள் பெரும்பாலானோர் கருதுகிறோம். பிற நாடுகளில்,
குறிப்பாக சுவிற்சலாந்தில் அத்தகைய இணைப்பாட்சி முறைமையே தேசிய
ஒற்றுமையைக் கட்டிக்காத்துள்ளது. தற்போது இலங்கையில் அமைந்துள்ள ஒன்பது
மாகாணங்களும் நிலைத்திருக்க வேண்டும், அவையே இணைப்பாட்சி
முறைமைக்கு அடிப்படையாக அமைய வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்" என்றார்
பண்டாரநாயக்கா.
இலங்கையில் ஒற்றையாட்சி யாப்பு தோன்றுவதை அவர் எதிர்த்தார்.
இந்நாட்டு நிலைமைகளுக்கு இணைப்பாட்சி முறைமையே மிகவும் உகந்தது என்பதால், இணைப்பாட்சி
யாப்பை அவர் வலியுறுத்தினார்.
இணைப்பாட்சி ஒவ்வொரு கூறுக்கும் அதனை நிர்வகிப்பதற்கான முழு
அதிகாரமும் உண்டு; எனினும்
அவை ஒருங்கிணைந்து செயற்படவும், ஓர் அவையைக் கொண்டு அல்லது
இரு அவைகளைக் கொண்டு முழு நாட்டுடனும் தொடர்புடைய அலுவல்களை ஆராயவும் முடியும்;
அத்தகைய அரசமைப்பே ஐக்கிய அமெரிக்காவில் காணப்படுகிறது"
என்றார் பண்டாரநாயக்கா.
பிரித்தானியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா,
கனடா ஆகிய தன்னாட்சித் தேசங்கள் அனைத்திலும் இணைப்பாட்சி முறைமையே
நிலவி வந்துள்ளது. இலங்கைக்கு சுவிற்சலாந்து சிறந்த எடுத்துக்காட்டாக
விளங்குகிறது. சுவிற்சலாந்து ஒரு சிறிய நாடு. பிரஞ்சுக்காரர், ஜேர்மனியர், இத்தாலியர் என்னும் மூவினத்தாரும் அங்கு
கூடி வாழ்கிறார்கள். இணைப்பாட்சி முறைமை கொண்டு மிகவும் வெற்றிபெற்ற நாடாகத் திகழ்கிறது
சுவிற்சலாந்து. அங்கு ஒவ்வொரு புலமும் அதன் சொந்த அலுவல்களை நிர்வகித்து வருகிறது.
வெளியுறவு, நிதி, பாதுகாப்பு குறித்து
வினாக்கள் எழுவது அரிது. அத்தகைய அலுவல்களை அங்கு நடுவண் அரசே கவனித்து வருகிறது.
அன்று ஏ. கொடமுனே (A.Godamune) தலைமையில் இயங்கிய கண்டி தேசிய அவையினரும் (Kandyan National
Assembly), மற்றும் பிற நாட்டுப்பற்றாளர்களும்
இணைப்பாட்சி முறைமை கோரி வாதாடினார்கள்; தொனமூர் ஆணைய (Donoughmore
Commission) காலப்பகுதி தொட்டு சோல்பரி ஆணைய (Soulbury Commission) காலப்பகுதி வரை அவர்கள் இணைப்பாட்சி முறைமை கோரி வாதாடினார்கள்.
பண்டாரநாயக்கா நாடுமுழுவதும் சென்று இணைப்பாட்சி
பொதிந்துள்ள உயரிய நெறிகளைப் பரப்பினார். தேசிய செய்தித்தாள்களில் இணைப்பாட்சிக்
கருத்தை விதந்துரைத்து கட்டுரைகளை வெளியிட்டார். கண்டி தேசிய அவை இணைப்பாட்சி
முறைமையை வலியுறுத்தியது. அதேவேளை தமிழர்கள் இணைப்பாட்சிக் கருத்தை மும்முரமாய்
எதிர்த்தார்கள்!
பிரித்தானியாவிடமிருந்து இந்தியாவை விடுவிப்பதற்கு காந்தி
அடிகள் மேற்கொண்ட அகிம்சைப் போராட்டம், யாழ்ப்பாணத்து இளைஞரின் அரசியல்
நாட்டத்தைக் கொழுந்துவிட்டு எரியச்செய்து, இந்திய சுதந்திர
இயக்கத்தை உன்னிப்பாக அவதானிக்க வைத்தது.
நாட்டுக்காகத் தம்மால் இயன்றவரை இம்மியளவேனும் பாடுபடும்
நோக்குடன் எல்லா இனங்களையும், சமயங்களையும், சாதிகளையும்
சேர்ந்த இளைஞரைக் கொண்ட இயக்கம் ஒன்றை அவர்கள் தோற்றுவித்தார்கள். பின்னாளில்
கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபராக விளங்கிய ஹன்டி பேரின்பநாயகத்தின் தலைமையில்
யாழ் மாணவர் பேரவையை (Jaffna Students' Congress)
அமைத்தார்கள். யாழ் மாணவர் பேரவைக்கு யாழ் இளைஞர் பேரவை (Jaffna Youth Congress) என்று மறுபெயரிட்டார்கள்.
அவர்கள் இணைப்பாட்சி முறைமையை எதிர்த்து, ஒற்றையாட்சி
முறைமையை ஆதரித்துக் கிளர்ந்தெழுந்தார்கள்.
இதற்கிடையே ஜி. ஜி. பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐம்பது
கோரிக்கையை முன்வைத்தார். ஒற்றையாட்சி யாப்பினுள் சரிநிகர்
பிரதிநிதித்துவ கோரிக்கையை அவர் முன்மொழிந்தார். 1937ல் யாப்புச் சீர்திருத்தங்கள்
ஆராயப்பட்ட வேளையில் ஆளுநர் அன்றூ கல்டிகொட்டிடம் (Sir Andrew Caldecott) அக்கோரிக்கையை அவர் முன்வைத்தார். ஆனால் ஆளுநர்
அக்கோரிக்கையை நிராகரித்தார். அப்புறம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை கொஞ்சக் காலம்
பின்னடைந்தது. எனினும் 1944ல் சோல்பரி ஆணையத்தின் முன்னிலையில் அக்கோரிக்கை
மீண்டும் முன்வைக்கப்பட்டது. அப்பொழுது செல்வநாயகம் தமிழ் காங்கிரசின் பிரதித்
தலைவராக விளங்கினார். பொன்னம்பலம் என்றுமே இணைப்பாட்சி முறைமையை ஆதரித்ததில்லை.
ஒற்றையாட்சி முறைமைக்குள் நின்று "ஈடுபாட்டுடன் ஒத்துழைக்கும் கொள்கை"யை
அவர் பற்றிக்கொண்டார்.
"சுதந்திரன்" எனப்படும் அரசியல் இதழ் ஒன்றை
கிழமைதோறும் வெளியிட தமிழ் காங்கிரஸ் முடிவுசெய்தது. எழுதுநர் பதவி ஒன்றை அது
விளம்பரப்படுத்தியது. அதற்கு விண்ணப்பங்களை ஈர்க்கும் வண்ணம் அறுபது ரூபா மாதச்
சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கைப்
பத்திரத்தை வரைந்து சோல்பரி ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் பணியில் தமிழ் காங்கிரஸ்
தலைவர் பொன்னம்பலம், பிரதித்
தலைவர் செல்வநாயகம் இருவருக்கும் உதவுவதே எழுதுநரின் கடமை. அப்பதவிக்கு
மயில்வாகனம் நாகரத்தினம் என்னும் இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒற்றையாட்சி முறைமைக்குள் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை
சிறுபன்மையோருக்கு உதவாது என்று இளம் நாகரத்தினம் கருதினார். சுவிற்சலாந்தில்
நிலவும் இணைப்பாட்சி முறைமையை அவர் எண்ணிப் பார்த்தார். அதன் அடிப்படையில் தமிழ்
காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெரியாமல் இலங்கைக்கு ஓர் இணைப்பாட்சி முறைமையை
விதந்துரைத்து ஒரு பத்திரத்தை அவர் அனுப்பிவைத்தார். அவருடைய பத்திரத்துக்கு
செய்தித்தாள்கள் மிகுந்த பிரசித்தம் கொடுத்தன. தமிழ் காங்கிரஸ் தலைவர் பொன்னம்பலம், பிரதித் தலைவர்
செல்வநாயகம், செயலாளர் எஸ். சிவசுப்பிரமணியம் முன்னிலையில் தோன்றும்படி
நாகரத்தினத்துக்கு உத்தரவிடப்பட்டது. பொன்னம்பலம் அவரைக் கண்டித்து, உரிய விசாரணை எதுவுமின்றியே வேலைநீக்கினார்.
1945 ஜனவரி 30ம் திகதி நாகரத்தினம் ஆணையத்தின்முன் தோன்றி, தனது முறைமையை
முன்வைத்தார்.
1949 திசம்பர் 18ம் திகதி செல்வநாயகம் தமிழ் காங்கிரசிலிருந்து
விலகி தமிழரசுக் கட்சியை (Federal
Party) அமைத்தார். "இலங்கை இணைப்பாட்சி ஒன்றியம் என்னும்
கட்டுக்கோப்பினுள் மொழிவாரி அடிப்படையில் தன்னாட்சி அலகு ஒன்றை அமைத்து இலங்கையில்
தமிழ் பேசும் மக்களின் சுதந்திரத்தை ஈட்டும் நோக்குடன்" அவர் அதனை அமைத்தார்.
செல்வநாயகம் இணைப்பாட்சி முறைமைக்காக வாதாடினார். எனினும் அவருடைய இணைப்பாட்சி
ஓலத்தை தமிழர்கள் ஆதரிக்கவில்லை.
தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து, அதாவது 1952ல்
ஒரு பொதுத்தேர்தல் நடந்தது. காங்கேசந்துறையில் செல்வநாயகம் தோற்கடிக்கப்பட்டார்.
தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் எவரும் அவரைத் தோற்கடிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி
வேட்பாளரும், ஸ்ரீ பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனுமாகிய
எஸ். நடேசனே அவரைத் தோற்கடித்தார்.
தமிழரசுக் கட்சி ஏழு வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.
கோப்பாய், திருகோணமலை
தொகுதிகள் இரண்டையும் மட்டுமே அது ஈட்டிக்கொண்டது.
1956ல் மொழிப் பிரச்சனை சூடு பிடித்தது. பண்டாரநாயக்கா 24
மணித்தியாலத்துள் தனிச் சிங்களத்தை நாடினார். களனியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்
கட்சி மாநாட்டில் அந்தக் கட்சியும் தனிச் சிங்களத்தைப் பற்றிக்கொண்டது. ஈற்றில்
இலங்கை மக்கள் என்றுமிலாவாறு "வலுவும், ஒற்றுமையும், மெய்யான
முற்போக்கும் மிகுந்த" மக்களாக ஓங்க தனிச் சிங்களம் உதவும் என்று
பண்டாரநாயக்கா முழங்கினார்.
உண்மையில் இலங்கை "வலுவும், ஒற்றுமையும்,
மெய்யான முற்போக்கும் மிகுந்த" நாடாக ஓங்க தனிச் சிங்களம்
வழிவகுக்கவில்லை. பகையாலும், விரக்தியாலும் பாழ்பட்டு
வலுதளர்ந்த நாடாக மாறவே அது வழிவகுத்துள்ளது. இலங்கை வலுமிகுந்த நாடாக ஓங்க
வேண்டுமாயின், சிங்களவரே இலங்கையின் ஒரே இனத்தவர் என்னும்
கருத்து ஒழிய வேண்டும்.
இலங்கையில் சிறப்பியல்பும், தனித்துவமும், மிகுந்த
இன உணர்வும் கொண்டு வாழும் சிங்களவர், தமிழர், முஸ்லீங்கள் ஆகிய முப்பெரும் இனத்தவர்களையும் திருப்திப்படுத்தும்
தீர்வொன்றை உருவாக்கத் தவறினால், "ஒரே நாடு, ஒரே இனம்" என்னும் கொள்கை வீண் சோலியாக மாறுவது திண்ணம்.
ஒற்றைக் கணித பாணியில் அமைந்த மக்களாட்சி முறைமை, பலவந்தம்,
மக்களாட்சிப் பாணியில் அமைந்த வேலைப்பாடுகள், நாடாளுமன்றப்
பொறிமுறைகள் கொண்டு எந்த ஓர் இனத்தின் வேட்கைகளையும் ஒடுக்கிவிட முடியாது.
நாட்டரசு எனத்தக்க ஒன்று அமைய வேண்டுமாயின் எல்லா
அரசியல்வாதிகளும் கைகோத்து, அரசியல்
அதிகாரத்தைப் பகிரும் அலுவலில் சிங்கள-தமிழ்-முஸ்லீம்
பங்களிப்பை திருப்திகரமாக மேம்படுத்துவதற்கு உகந்த நலமான
அரசியல் சூழ்நிலையைத் தோற்றுவிக்க வேண்டும்.
இணைப்பாட்சி முறைமையால் இலங்கை பிளவுண்டு போய்விடும் என்று
மறுபடியும் கிளம்பும் பழம்பெரும் மறுப்புகளை 1926 யூலை 17ம் திகதி யாழ்ப்பாணத்தில்
கலாநிதி ஐசாக் தம்பையா தலைமையில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் வைத்து
பண்டாரநாயக்காவே சிதறடித்தார்:
"இணைப்பாட்சி முறைமைக்கு ஆயிரக் கணக்கான மறுப்புகளை முன்வைக்க முடியும்.
எனினும் அம்மறுப்புகள் சிதறிடிக்கப்படுகையில் ஏதோ ஒரு வகையான இணைப்பாட்சி முறைமை
மட்டுமே தீர்வாக எஞ்சும் என்று நான் திடமாக நம்புகிறேன்" என்று
அக்கூட்டத்தில் முழங்கினார் பண்டாரநாயக்கா. இன்று இணைப்பாட்சி முறைமையை
அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை எதிர்க்கும் தென்னிலங்கையரின் காதில்
பண்டாரநாயக்காவின் தீர்க்கதரிசன வாக்கினை உச்சரித்தல் தகும்.
என்றாவது இலங்கை இணைப்பாட்சித் தீர்வை நோக்கி நகருமா? காலம் தான்
அதற்கு விடை கூற வேண்டும்.
______________________________________________________________________________
C. V. Vivekananthan, Daily Mirror, Colombo, 2013-11-28, தமிழ்: மணி வேலுப்பிள்ளை
No comments:
Post a Comment