மாயக்கோவஸ்கி

Image result for mayakovsky

அம்மாவின் காதலன் மாயக்கோவஸ்கி 
பிரன்சின் தூ பிளெசி கிரே 

எனது தாயார் தாத்தியானாவின் (Tatiana Yakovleva) காதலர்களுள் மாயக்கோவஸ்கி (Vladimir Vladimirovich Mayakovsky 1893-1930) தலையாயவர். அவ்வாறே மாயக்கோவஸ்கியின் காதலர்களுள் எனது தாயார் தலையாயவர். நான் மாயக்கோவஸ்கியின் மகள் அல்ல. அம்மாவும் அவரும் பிரிந்து 16 மாதங்களுக்குப் பின்னரே நான் பிறந்தேன்.
   ஜோர்ஜியாவில் பிறந்த மாயக்கோவஸ்கி தனது 14ம் வயதிலேயே போல்சிவிக் கட்சியில் சேர்ந்துவிட்டார். 1912ல் தனது தோழர்களுடன் சேர்ந்து "பொதுமக்களின் ரசனைக் கன்னத்தில் ஓர் அறைஎன்ற தலைப்பில் அவர் கலைஞர்களுக்கு விடுத்த ஓர் அறிக்கையில் புஷ்கின்டாஸ்டாவஸ்கிடால்ஸ்டாய் முதலியோரின் படைப்புகளைத் தூக்கி வீசும்படி அறைகூவினார்.
  "நான் யானைத்தோல் படைத்தவன்" என்று மாயக்கோவஸ்கி பெருமைப்பட்டதுண்டு. ஆறு அடி உயரமான மாயக்கோவஸ்கி ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தால்ஒரு மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருப்பது போலவே தென்படும் என்று போறிஸ் பஸ்டனாக் (Boris Pasternak) குறிப்பிட்டுள்ளார். எரியும் விடுதியிலிருந்து உடுக்கை எதுவுமின்றி வெளியே பாயும் தாசியைப் போலவே அவருடைய இதயத்திலிருந்து சொற்கள் வெளியே பாய்ந்தன என்று விமர்சகர்கள் விளம்பியதுண்டு. 1915ல் அவர் எழுதிய "The Cloud in Trousers" என்ற ஆக்கத்தை வாசித்து மனம் உருகிய மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) அவரை ஆரத்தழுவி அழுது புலம்பியதாகச் சொல்லப்படுகிறது.
      "வரி வசூலிப்பவனுடன் கவிதையைப் பற்றிய ஓர் உரையாடல்" என்ற அவருடைய கவிதையில் சில வரிகள்:

             இந்த வரி தீ பற்றும் திரி
  இறுதி வரை எரிந்து வெடி தீரும் வரி
  நகரத்தை  வானுயரத் தகர்க்கும் வரி...
  பாட்டாளியர் படைக்கும் வரி
             எழுத்தாண்மை தெறிக்கும் வரி   
             உழைக்கும் வர்க்கம் இறுக்கும் வரி
             இது என் கவிதை வரி.

   மாயக்கோவஸ்கியும் ஏற்கெனவே மணமான லிலியா என்ற பெண்மணியும் ஒருவருடன் ஒருவர் உறவாடி வந்தார்கள். ஒரு தடவை கவிஞர் அவளை ஏசி எழுதிய வரிகள்: 

             நான் ஒரு கந்தை என்றால்
             உனது படிக்கட்டின் தூசு துடைக்க
             என்னைப் பாவியடி பாவி!

      இன்னொரு வரியில் அவளுடைய சாயம் பூசிய உதடுகளை "பாறையில் குடைந்த துறவிமடம்" என்று விபரிக்கிறார்.
     1917ல் சோவியத் புரட்சி ஏற்பட்டபொழுது எழுதுகிறார்: புரட்சியை ஏற்பதாஏற்காது விடுவதாஅப்படி ஒரு கேள்வி என்னுள் எழவே இல்லை. அது எனது பரட்சி அல்லவா!” 1924ல் லெனின் மறைந்த பொழுது 3,000 வரிகளில் அவர் எழுதிய கவிதையில் ஒரு கூறு:

           என் மூச்சு மாண்டு
உன் மூச்சாய் மீண்டால்
மெய் மறந்து மாள்வேன்
உயிர் துறந்து வீழ்வேன்.

    “மாயக்கோவஸ்கி ஒரு முதலாளித்துவ தனிமனிதவாதி என்று கண்டிக்கப்பட்ட பொழுது, “இனிமேல் ஓர் உண்மையானமகத்தான காதலே எனக்கு வாழ்வளிக்கும் என்று தெரிவித்தார். அத்தகைய சூழ்நிலையில்தான் (1928ல்) அவர் பாரிஸ் மாநகர் சென்றார். அங்கேதான் எனது தாயார் தாத்தியானா வாழ்ந்து வந்தார். 1906ம் ஆண்டு செ.பீற்றேஸ்பேர்க் நகரத்தில் பிறந்த எனது தாயார் பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த இரசியர்களுள் ஒருவர். அம்மாவுக்கு மாயக்கோவஸ்கியை விட 13 வயது குறைவு. அவரைச் சந்திப்பதற்கு முன்னரே அவருடைய கவிதைகள் அம்மாவுக்கு மனப்பாடம். அவர் அம்மாவைக் கண்டதும் காதல் கொண்டதாகவும்முழந்தாள் பணிந்து காதலை வெளிப்படுத்தியதாகவும் அம்மா பிற்பாடு என்னிடம் தெரிவித்தார். அம்மாவின் இரசியக் கவிதையறிவு கவிஞரை வியக்க வைத்தது. அவர் அம்மாவில் கொண்ட காதலை அது மேலும் வீறுகொள்ளச் செய்தது. அம்மா மணித்தியாலக் கணக்காகக் கவிதைகளை மீட்டுவார். மாயக்கோவஸ்கி எழுதிய 700 வரிகள் கொண்ட ("The Cloud in Trousers") கவிதையை அம்மா மீட்டும்பொழுதுஅவர் அம்மாவையே அள்ளிப் பருகியிருப்பார். அந்தக் காலத்தில் அவர் அம்மாவுக்கு எழுதிய சில வரிகள்: 

காதல் என்றால்:
காணியின் அந்தலைக்கு விரைந்து
பளிச்சிடும் கோடரியைக் கைகளில் ஏந்தி
மரங்களைக் கொத்திப் பிளந்து
கும்மிருட்டு சூழும் வரை வருந்தி உழைத்து...
காதல் எமது காதில் பாட
குற்றுயிராய்க் கிடந்த இதயம் 
புத்துயிருடன் வீறுகொள்ள...

     அம்மம்மாவுக்கு அம்மா எழுதிய ஒரு கடிதம்: அவர் ஓர் அதிசய மனிதர். நான் நினைத்ததற்கு முற்றிலும் மாறுபட்டவர். அவர் பேர்லினிலிருந்து தொலைபேசியில் அழைத்தார். தனது பிரிவுத் துயரத்தை வெளிப்படுத்தினார். அவரிடமிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு தந்தி வருகிறது. ஒவ்வொரு கிழமையும் ஒரு பூச்செண்டு வருகிறது. எங்கள் வீடு முழுவதும் பூக்கள் சொரிகின்றன. நான் அவரைப் பிரிந்து வாடுகிறேன். நான் சந்தித்த ஆட்களுள் அவரே ஆற்றல் மிகுந்தவர். அவர் என்னருகில் இருக்கையில் நான் இரசியாவில் இருப்பது போல் உணர்கிறேன். அவர் புறப்பட்ட பிற்பாடு நான் இரசியாவை மேன்மேலும் நினைந்து உருகுகிறேன்...
   அம்மம்மாவுக்கு அம்மா எழுதிய இன்னொரு கடிதம்: அவர் எனக்குப் புத்துயிரூட்டியுள்ளார். என் உள்ளத்தை விரிவுபடுத்தியுள்ளார். முதன்முதல் என் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவரே. பாரிசில் வாழும் பாமர மக்களை அவர் தனது சந்தம் மிகுந்த கவிதைகளாலும், அவற்றை வாசிக்கும் திறனாலும் கொள்ளை கொண்டுள்ளார். எனக்கோ அவர் இல்லாத வாழ்வு வெறும் அற்ப வாழ்வாகவே தெரிகிறது. அவர் உருவத்தாலும் ஒழுக்கத்தாலும் உயர்ந்த மேதை. அவர் இல்லாத வெறுமையுள் நான் மூழ்கியிருக்கிறேன்...    
கவிஞர் மாஸ்கோவிலிருந்து அம்மாவுக்கு அனுப்பிய முதல் கடிதம்:

என் அன்பின் தாத்தியானா,
          நீ எழுதிய ஒரு கடிதம் சற்று முன்னர் கிடைத்தது. எனக்குத் தெவிட்டும் வரை அதனைத் திரும்பத் திரும்ப வாசித்தேன்... மூட்டைப் பூச்சி (The Bedbug) என்ற புதிய நாடகத்தை நான் எழுதியிருக்கிறேன். உண்ணாமல் குடிக்காமல் அன்றாடம் 20 மணித்தியாலங்கள் எழுதித் தள்ளினேன். அதனால் எனது தலை பெருத்துதொப்பி சிறுத்துவிட்டது. கண் சிவந்துமூஞ்சி கவிழ்ந்து மாடு மாதிரி உழுது தள்ளினேன். எனது கண்களே என்னைக் கைவிட்டன. அவற்றுக்கு குளிரொத்தடம் கொடுத்து பணியைத் தொடரந்தேன்....போகட்டும். என் கண் என்னடி கண்ணேநான் உன்னை மீண்டும் காணும்வரை அது எனக்குத் தேவையில்லை. பார்ப்பதற்கு உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை...

             1928ல் கவிஞர் அம்மாவைக் குறித்து எழுதிய தோழர் கொஸ்றோவுக்கு ஒரு கடிதம் என்ற கவிதை இளங்காவலர் (Young Guard) என்ற இரசிய இதழில் வெளிவந்துபலத்த கண்டனத்துக்கு உள்ளானது. புலம்பெயர்ந்த அழகியைக் கொண்டாடும் நிலைக்கு கவிஞர் தாழ்ந்து விட்டதாக விமர்சகர்கள் அவரைச் சாடினார்கள்.
        அம்மம்மாவுக்கு அனுப்பிய பிறிதொரு கடிதத்தில் அம்மாவின் வரிகள்: பல்வேறு தரப்பினர் என்னை நாடி வருகின்றார்கள். அவர்களுள் எவருமே மாயக்கோவஸ்கிக்கு ஈடாக மாட்டார்கள். அவர்கள் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு அவரையே நான் தேர்ந்தெடுப்பேன் என்பது ஏறத்தாழ உறுதி. அவருடைய பேராற்றல் வியக்கத்தக்கது....
          கவிஞர் பாரிஸ் திரும்பியபொழுது அவரில் ஒரு மாற்றத்தை அம்மா கண்டுகொண்டார். அதனை 50 ஆண்டுகளுக்குப் பிற்பாடு அம்மா நினைவு கூர்ந்தார்: அவர் இரசியாவைக் குறித்து ஏமாற்றம் அடைந்திருந்தார். ஆனால் அவர் சியாவை நேரடியாகக் கண்டிக்கவில்லை... கவிஞரே தனது சிய நண்பர் ஒருவரிடம், “நான் இப்பொழுது வெறும் பணியாளன்கவிஞன் அல்லன்...என்று சொல்லி விம்மியிருக்கிறார்.
             1929 யூலை 12ம் திகதி எழுதிய கடிதத்தில் கவிஞர் அம்மாவைத் தனது குடும்பத்தவர் என்றும்தாம் இருவரும் ஒருவருக்கொருவர் இன்றியமையாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிறிதொரு கடிதத்தில் அம்மாவை இரசியாவுக்குத் திரும்பிஓர் எந்திரவியலராய் மாறிசமூகவுடைமையை கட்டியெழுப்புவதில் ஒத்துழைக்கும்படி வேண்டுகிறார். (எனது கைக்கு எட்டிய கடிதங்களைப் பொறுத்தவரை) கவிஞர் கடைசியாக அம்மாவுக்கு எழுதிய கடிதம் என்னைக் கண்ணீர் சிந்த வைக்கிறது: நான் ஏற்கெனவே துயரத்தில் மூழ்கி அமைதியில் ஆழ்ந்திருக்கிறேன். உனது கடிதம் வராதபடியால் எனது துயரமும் அமைதியும் மேலும் கூடுகின்றன. நான் ஒரு சொற்கஞ்சன் அல்லன். எனது துயரத்தையும் அமைதியையும் என்னால் எடுத்துரைக்க முடியாது. ஒருவேளை ஒரு பிரஞ்சுக் கவிஞர் அல்லது உத்தியோகத்தர் உன்னை ஈர்த்துவிட்டாரோ என்றும் ஏங்குகிறேன். ஆனால் நீ என்னைவிட்டு விலகிவிட்டாய் என்று எவர் சொன்னாலும் நான்  நம்பமாட்டேன். நான் உனக்கு அனுப்பிய தந்திநீ அந்த முகவரியில் இல்லை என்ற காரணத்துடன்திரும்பி வந்திருக்கிறது. நீ என்னைப் புறக்கணிக்கிறாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எழுதுஎழுதுஎழுதுகண்ணேஎழுது! இன்றைக்கே எழுது!...
   1929ல் ஸ்டாலின் ஆட்சியதிகாரத்தின் உச்சியில் அமர்ந்திருந்தார். துரொஸ்கி நாடுகடத்தப்பட்டார். இரசிய பாட்டாளிவர்க்க எழுத்தாளர் சங்கம் படைப்பாளிகளுக்குக் கடிவாளம் பூட்டியது. முதலாளித்துவ தனிமனிதவாதப் படைப்புகளை ஒழித்துக்கட்டும்படி பிராவ்டா அறைகூவியது. அத்தகைய சூழ்நிலையில் மாயக்கோவஸ்கி பாரிஸ் திரும்புவதற்கு வீசா மறுக்கப்பட்டிருக்கலாம் அல்லது வீசாவுக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருக்கலாம். ஒருபுறம் புதிய இரசியாவில் உழைத்துக்கொண்டு அம்மாவை நினைந்துருகும் கவிஞர். மறுபுறம் பாரிசில் திளைத்துக்கொண்டு பழைய இரசியாவை நினைந்துருகும் அம்மா. கவிஞரும் காதலியும் இரசியாவிலோ பிரான்சிலோ ஒருங்கிணைய முடியவில்லை.
    1929 அக்டோபர் மாதம் கவிஞரின் கடைசிக் கடிதம் அம்மாவுக்குக் கிடைத்தது. நான் ஏற்கெனவே துயரத்தில் மூழ்கி அமைதியில் ஆழ்ந்திருக்கிறேன் என்ற கவிஞரின் வரி அரசியல் கெடுபிடிகளைக் கருத்தில் கொண்டே எழுதப்பட்டது என்று அம்மா விளங்கிக் கொண்டார். அந்தக் கட்டத்திலேயே கவிஞரும் தானும் ஒருங்கிணைய முடியாது என்று அம்மா மிகுந்த வேதனையுடன் முடிவுகட்டினார். அப்புறம் 1929 அக்டோபர் மாதமே அம்மா பிளெசி (Vicomte Bertrand du Plessix) என்ற பிரஞ்சு இராசதந்திரியை மணந்துகொண்டார். அம்மா மணம் முடித்த சேதி காதில் விழுந்தபோது தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்துநின்ற கவிஞர் போவதற்கு நேரமாகிவிட்டது என்று முணுமுணுத்ததாகத் தெரிகிறது.
   சிமாக்கோவ் (Genady Smakov) என்ற இரசிய அறிஞரிடம் அம்மா தெரிவித்தார்: நான் மாயக்கோவஸ்கியைக் காதலித்தேன். அது அவருக்குத் தெரியும். அவருடன் இரசியா திரும்பும் அளவுக்கு நான் அவரைக் காதலிக்கவில்லைப் போலும். அவர் மூன்றாவது தடவை திரும்பி வந்திருந்தால்நான் அவருடன் புறப்பட்டிருக்கக்கூடும். நான் அவரை நினைந்துருகினேன். அவர் திரும்பி வராதபடியால்அவர் ஓர் இளம் பெண்ணாகிய என்னை மணந்து வாழ்க்கைப் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை அல்லது துணியவில்லை என்று நினைத்தேன். அப்பொழுதுதான் பிளெசி எங்கள் வீடு தேடி வந்து என்னைத் திருமணம் புரிய விருப்பம் தெரிவித்தார். பிளெசி ஒரு பிரஞ்சுக்காரர்திருமணமாகாதவர். நான் அவரைக் காதலிக்கவில்லை. ஆனால் வேறு பெண்களைப் போல் நானும் திருமணம் புரிந்துபிள்ளை குட்டிகளுடன் வாழ விரும்பினேன். நானும் பிளெசியும் திருமணம் புரிந்து (1929-12-23) 9 மாதங்களில் பிரான்சின் பிறந்தாள் (நான் பிறந்தேன்)...
   திருமணம் புரிந்து 3 ஆண்டுகளுள் அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட்டார்கள்! இதற்கிடையே மாயக்கோவஸ்கி எழுதிய குளியலகம் (The Bathhouse) என்ற நாடகம் வெளிவந்தது. சோவியத் அதிகாரிகள் சோவியத் புரட்சிக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக அந்த நாடகத்தில் கவிஞர் சாடியிருக்கிறார்.
      தன்னை ஒரு புரட்சிக் கழிவறைத் தொழிலாளியாகப் பாவித்து எழுதிய "எனது அறைகூவல்" (At the Top of My Voice) என்ற கவிதையில்"எனது கவிதையின் தொண்டையில் ஏறிநின்று எனது குதியினால் நானே அதனை மிதித்து நெரிக்கிறேன்" என்று எழுதினார். 
  1930 ஏப்பிறில் 14ம் திகதி மாயக்கோவஸ்கி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் திடீரெனத் தற்கொலை செய்யவில்லை. தனது தற்கொலையை ஏற்கெனவே அவர் ஒத்திகை பார்த்துவிட்டார்: "ஒரு சன்னத்தின் மூலமே எனது முடிவுக்குத் துளையிடுவது நல்லது" என்று 1915ம் ஆண்டிலேயே அவர் எழுதியிருக்கிறார்! இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மூன்று கடதாசித் துண்டுகளில் ஒரு பென்சில் குறிப்பை எழுதி வைத்திருக்கிறார்: "எல்லோரும் அறிவதுஎனது இறப்புக்கு எவர்மீதும் குற்றஞ்சுமத்த வேண்டாம். தயவுசெய்து வாய்க்கு வந்தவாறு பேச வேண்டாம். இறந்தவர்களுக்கு அது பிடிக்காது. அம்மாஅக்கா தங்கையர்நண்பர்காள்என்னை மன்னித்துவிடுங்கள். இது வழி அல்ல. ஆனால் எனக்கு வேறு வழி இல்லை..."
  கவிஞரின் தற்கொலையைக் குறித்து கருத்துத் தெரிவித்த போறிஸ் பஸ்டனாக், “மாயக்கோவஸ்கி தன்மானம் கொண்டே தற்கொலை செய்துள்ளார். அதன் மூலம் தன்னில் உள்ள ஏதோ ஒன்றையே அவர் தண்டித்துள்ளார். அவருடைய தன்மானம் காரணமாகவே அவரால் அந்த ஒன்றுடன் ஒத்துப்போக முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
         அவருடைய குறிப்பேட்டில் அம்மாவைக் குறித்து எழுதிய சில வரிகள் தற்கொலைக் குறிப்பில் இடம்பிடித்துள்ளன. அந்த வரிகளின் அடியில் நான் கோடிட்டுள்ளேன்:

விண் மீன்கள் இருள் கிழிய
ஒளி காலும் வேளை;
நீ உறங்க, நான் வதங்க...
மின்னலெனும் தந்தி மூலம்
உன்னுறக்கம் கெடுக்கேன்,
தொந்தரவு தரமாட்டேன். 
கதை முடிந்தது;
எமது காதல் படகு
அன்றாட ஊழியத்துடன்
மோதி நொருங்கியது.
நீயும் நானும் பேரம் பேசிக்
கணக்குத் தீர்ந்தது.
துக்கம்துயரம்துன்பம்
இனிமேல்,
பகிரத் தேவை இல்லை.
இனி,
வானில் இருள் கவிய
உலகை அமைதி சூழ
காலமும்வரலாறும்படைப்பும்
சீண்டட்டும் என் சிந்தையை.

             நீயும் நானும் பேரம் பேசிக் கணக்குத் தீர்ந்தது என்ற வரியில் (நீயும் என்ற) ஒரேயொரு சொல்லை மட்டும் (வாழ்வும் என்று) மாற்றி (வாழ்வும் நானும் பேரம் பேசிக் கணக்குத் தீர்ந்தது என்று) தனது தற்கொலைக் குறிப்பை எழுதியிருக்கிறார் கவிஞர்.
           கவிஞர் மாண்ட சேதி அம்மாவுக்கு எட்டியபொழுது அவர் நான்கு மாதக் கர்ப்பிணி. அம்மாவின் வயிற்றில் இருந்தவள் நான்தான். அப்பொழுது அம்மா  அப்பாவுடன் தேனிலவு முடித்து வாசோவில் தங்கியிருந்தார்.
       கவிஞரின் தற்கொலை சமூகவுடைமை இயல்புக்கு மாறான செயல் என்று கண்டிக்கப்பட்டது. ஆதலால் அவருடைய படைப்புகள் அரிதாகவே வெளிவந்தன. 1935ல் லிலியா தன்னுடன் உறவாடிய ஒரு தளபதி மூலமாக ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினாள். "மாயக்கோவஸ்கியின் கவிதைகள் வன்மையான புரட்சிகர ஆயுதங்கள். அவற்றை மீண்டும் வெளியிட வேண்டுகிறோம்" என்று அவள் எழுதி அனுப்பினாள். ஸ்டாலின் கையோடு பதில் அனுப்பினார். லிலியா அனுப்பிய கடிதத்தின் இடது பக்க மேல் மூலையில் சிவப்புப் பென்சில் கொண்டு பெரிய சரிந்த கொட்டை எழுத்துகளில் ஸ்டாலின் தன் கைப்பட மறுமொழி எழுதியிருந்தார்: "தோழர் லிலியா பிறிக் சொல்வது சரி. எங்கள் சோவியத் ஊழியைப் பொறுத்தவரை மாயக்கோவஸ்கியே பேராற்றல் வாய்ந்த கவிஞர். அவரையும் அவருடைய எழுத்துக்களையும் புறக்கணிப்பது ஒரு மாபெரும் குற்றம்."
       அதனைத் தொடர்ந்து கவிஞரின் படைப்புகள் மீண்டும் பெருவாரியாக வெளிவரலாயின. மாயக்கோவஸ்கி அரும்பொருளகம் அமைக்கப்பட்டது. கவிஞர் திரும்பவும் போற்றிப் புகழப்பட்டார். 1979ல் நான் இரசியாவுக்குப் போயிருந்தபொழுது என்னைச் சந்தித்த சோவியத் தோழர்கள்நான் மாயக்கோவஸ்கியின் மகள்தான் என்று அடித்துச் சொன்னார்கள். நான் மாயக்கோவஸ்கியின் மகள் அல்லஅம்மாவும் அவரும் பிரிந்து 16 மாதங்களுக்குப் பின்னரே நான் பிறந்தேன் என்று சொல்லி எனது கடவுச் சீட்டில் பொறிக்கப்பட்ட எனது பிறந்த திகதியை அவர்களுக்குக் காட்டினேன். அது கள்ளக் கடவுச்சீட்டு என்று அவர்கள் இடித்துரைத்தார்கள்!
      கவிஞர் இறந்து 50 ஆண்டுகள் கழிந்த பின்னர் அம்மா தெரிவித்த விபரம்: அவர் இறந்த பின்னர் அவருடைய கடிதங்களை என்னால் திரும்பவும் வாசித்துப் பார்க்க முடியவில்லை. இன்றும் வாசித்துப் பார்க்க முடியவில்லை.
    அம்மா எனக்கு ஈந்த கொடைஅவர் கவிஞரை இழந்த துயரமே. கவிஞரை என் உறவினராகவே நான் ஏற்றுப் போற்றுகிறேன். அம்மாவின் துயரத்துள் நான் கவிஞரைக் கண்டு களிக்கிறேன். 
__________________________________________________________________________________________________
Francine Du Plessix Gray, Mayakovsky's Last Loves, The New Yorker, January 7, 2002, p.38-55.
தமிழில் சுருக்கம்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment