உலக சமய மாநாடு

சிக்காக்கோ 


Swami Vivekananda Chicago Speech 1893: Iconic quotes at the Parliament of World Religions

Black-and-white photograph of a group of men, some with headdresses, seated on a stage. Among them is Swami Vivekananda, a young, medium-skinned man with wide eyes.

சுவாமி விவேகானந்தர்

சிக்காக்கோ, 1893-09-11 

அமெரிக்க சகோதர, சகோதரிகளே!

நீங்கள் உளங்கனிந்து எமக்களித்த இதயபூர்வமான வரவேற்புக்குப் பதிலளிக்க எழுகையில் என் இதயம் சொல்லொணா மகிழ்ச்சியில் திளைக்கின்றது. உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த ஆதீனத்தின் பெயரால் உங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன்; சமயங்களது தாயின் பெயரால் உங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன்; எல்லா வகுப்பினரையும், பிரிவினரையும் சேர்ந்த கோடானு கோடி இந்துமக்களின் பெயரால் உங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன்.

சகிப்புணர்வுச் சிந்தனையை பல்வேறு நாடுகளுக்கும் எடுத்துவந்த பெருமை தூரத்து நாடுகளிலிருந்து வந்தவர்களையே சாரக்கூடும் என்று கீழைத்தேயப் பேராளர்களைக் குறித்து இந்த மேடையில் உரையாற்றிய சில பேச்சாளர்களுக்கும் நான் நன்றி கூறுகின்றேன்.

சகிப்புத் தன்மை மற்றும் அனைத்து நெறிகளையும் அரவணைக்கும் தன்மை இரண்டையும் உலகிற்குப் போதித்த சமயத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் நான் பெருமைப்படுகின்றேன். எல்லா நெறிகளையும் சகிக்கும் தன்மையில் மாத்திரம் நாங்கள் நம்பிக்கை உடையவர்கள் அல்லர். எல்லாச் சமயங்களையும் மெய்யானவை என்றே நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். உலகளாவிய சமயங்கள் மற்றும் நாடுகள் அனைத்தையும் சேர்ந்த அகதிகளுக்கும், கொடுமைகளுக்கு உள்ளானவர்களுக்கும் அடைக்கலம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் என்ற வகையில் நான் பெருமைப்படுகின்றேன். எந்த ஆண்டில் தமது புனிதக்கோயிலை உரோமக் கொடுங்கோலர்கள் தவிடுபொடியாக்கினார்களோ, அந்த ஆண்டில் எஞ்சிமிஞ்சி தென் இந்தியாவுக்கு வந்து தஞ்சம்புகுந்த யூதப்புனிதர்களை நாங்கள் அரவணைத்தோம் என்பதை உங்களிடம் கூறுவதில் நான் பெருமைப்படுகின்றேன். மகத்தான பார்சிய சமயத்தவருள் எஞ்சிமிஞ்சி வந்தவர்களுக்கு அடைக்கலம் அளித்து, இற்றைவரை ஊட்டிவளர்க்கும் சமயத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் நான் பெருமைப்படுகின்றேன். 

உடன்பிறப்புகளே, எனது பாலப்பருவத்திலிருந்து நான் திரும்பத் திரும்ப ஒப்புவித்து, என் நினைவில் நிலைத்த ஒரு பாசுரத்திலிருந்து, கோடானு கோடி மக்கள் அன்றாடம் மீட்டும் பாசுரத்திலிருந்து ஒருசில வரிகளை உங்களுக்காக இப்பொழுது நான் மீட்டப்போகின்றேன்:

"வெவ்வேறு இடங்களில் ஊற்றெடுக்கும் ஆறுகள் அனைத்தும் தமது நீரைக் கடலொடு கலக்கும் வண்ணம் பாய்ச்சுவது போலவே, பல்வேறு நெறிகளாகவோ கோணிய நெறிகளாகவோ நேரிய நெறிகளாகவோ தென்படும் வெவ்வேறு நெறிகள் அனைத்தும் உன்னிடமே இட்டுவருகின்றன."    

என்றென்றும் நடத்தப்பட்ட மிகவும் மகத்தான மாநாடுகளுள் ஒன்றாக விளங்கும் இந்த மாநாடு கூடியிருப்பதே கீதையில் போதிக்கப்பட்ட வியத்தகு நெறியை மெய்ப்பிக்கின்றது; அதை உலகிற்குப் பறைசாற்றுகின்றது: "எந்த உருவிலும் என்னை நோக்கிப் புறப்படும் எவரையும் நான் வந்தடைகின்றேன். ஈற்றில் என்னை வந்தடையும் வழிகளில்தான் எல்லோரும் அரும்பாடு படுகின்றார்கள்."

சமயப்பிரிவினை, சமயவீம்பு, அதன் வழிவந்த வெறித்தனம் என்பன நெடுங்காலமாக இந்த அழகிய உலகைப் பீடித்துள்ளன; உலகை வன்முறையில் மூழ்கடித்துள்ளன; உலகை மனிதரின் குருதியில் அடிக்கடி தோய்த்துள்ளன; நாகரிகத்தை அழித்துள்ளன; முழு நாடுகளையும் கதிகலங்க வைத்துள்ளன. இப்பயங்கரப் பிசாசுகள் இல்லையேல், மானுடசமூகம் இன்றைய நிலையை விடவும் மிகுந்த முன்னேற்றம் கண்டிருக்கும்.

எனினும் அவற்றுக்கு முடிவுகாலம் வந்துவிட்டது. இன்று காலை இந்த மாநாட்டைக் கொண்டாடி ஒலித்த மணி, வெறித்தனம் முழுவதற்கும், ஆயுதம் மற்றும் எழுத்தாணி கொண்டு புரியப்படும் கொடுமைகள் முழுவதற்கும், ஒரே இலக்கை நோக்கி நகரும் வழியில் ஆட்களுக்கிடையே எழும் மனக்கடுப்புகள் முழுவதற்கும் அடித்த சாவுமணி ஆகக்கூடும் என்று நான் உளமார நம்புகின்றேன் (1893-09-11).

சுவாமி விவேகானந்தர்

உலக சமய மாநாட்டில் ஆற்றிய இறுதியுரை

சிக்காக்கோ, 1893-09-27

உலக சமய மாநாடு நிறைவுக்கு வந்துள்ளது. இந்த மாநாட்டை நிகழ்த்தப் பாடுபட்டவர்களுக்கு கருணைமிகுந்த கடவுள் உதவி புரிந்துள்ளார். மிகுந்த பொதுநல உணர்வுடன் அவர்கள் மேற்கொண்ட முயற்சியைக் கடவுள் வெற்றிபெற வைத்துள்ளார். முதலில் இந்த வியத்தகு கனவினைக் கண்டு, பிறகு அதனை நனவாக்கிய  அந்த விழுமிய உள்ளங்களுக்கு, பரந்த இதயமும் உண்மையின் மீது நேயமும் கொண்ட அந்த  விழுமிய உள்ளங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன். இந்த மேடையில் தாராண்மை பொழிந்து உரையாற்றியவர்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன். உள்ளொளி படைத்த இந்த அவையோர்க்கு, என்மீது ஒருமித்துக் கனிவுகாட்டி, சமயப் பூசலைத் தணிக்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு சிந்தனையையும் மெச்சிய அவையோர்க்கு நான் நன்றி கூறுகின்றேன். ஒத்திசைவு மிகவும் ஓங்கிய இந்த வேளையில் இடையிடையே கசக்கும் கூற்றுகளும் காதில் விழுந்தன. அவற்றை உதிர்த்தவர்களுக்கு நான் தனிப்பட நன்றி கூறுகின்றேன். முனைந்து மாறுபடுவதன் மூலம் பரந்துபட்ட ஒத்திசைவை அவர்கள் மேலும் இனிக்க வைத்துள்ளார்கள்.

 

சமய ஒற்றுமை என்னும் பொது அடிப்படை குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளது. எனது சொந்தக் கோட்பாட்டை இத்தருணம் இங்கு நான் முன்வைக்கப் போவதில்லை.  எனினும், ஏதோ ஒரு சமயம் வெல்வதன் மூலமே, மறுசமயம் அழிவதன் மூலமே, இந்த ஒற்றுமை கைகூடும் என்று இங்கிருக்கும் எவரும் நம்பினால், அவர்களுக்கு நான் கூறுவது இதுவே: "நண்பர்களே, உங்கள் நம்பிக்கை அசாத்தியமானது." கிறீஸ்தவர் இந்துவாக மாறவேண்டும் என்று நான் விரும்புகின்றேனா? கடவுள் தடுத்தாட்கொள்வாராக! இந்துவோ பெளத்தரோ கிறீஸ்தவராக மாறவேண்டும் என்று நான் விரும்புகின்றேனா? கடவுள் தடுத்தாட்கொள்வாராக!  


நிலத்தில் விதை ஊன்றப்படுகிறது. அதைச் சுற்றி மண்ணும் காற்றும் நீரும் இடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ மாறுகின்றதா? இல்லை. அது ஒரு பயிராக வளர்ச்சி அடைகின்றது; அதன் சொந்த வளர்ச்சி விதிப்படி அது வளர்கின்றது; காற்றையும் மண்ணையும் நீரையும் உள்வாங்குகின்றது; அவற்றைப் பயிரின் உருப்பொருளாக மாற்றுகின்றது; ஒரு பயிராக வளர்ச்சி அடைகின்றது. அது போலவே சமய விடயமும். கிறீஸ்தவர் இந்துவாகவோ, பெளத்தராகவோ மாற வேண்டியதில்லை; இந்துவோ பெளத்தரோ கிறீஸ்தவராக மாற வேண்டியதில்லை. எனினும் ஒவ்வொருவரும் மற்றவரின் ஆன்ம உணர்வை உள்வாங்க வேண்டும்; அதேவேளை தத்தம் தனித்துவத்தை ஒவ்வொருவரும் பேணிக்கொள்ள வேண்டும்; தத்தம் சொந்த விருத்தி விதிப்படி ஒவ்வொருவரும் விருத்தி அடையவேண்டும்.

 

இச்சமய மாநாடு உலகிற்கு எதையாவது சுட்டிக்காட்டியுள்ளது என்றால், அது இதுவே: புனிதமும், தூய்மையும், கனிவும் உலகின் எந்த ஒரு சமய பீடத்தினதும் தனியுடைமைகள் ஆகா என்பதையும், ஒழுக்கசீலம் மிகுந்த ஆடவர்களையும் பெண்களையும் எல்லாச் சமயங்களும் உருவாக்கியுள்ளன என்பதையும் இந்த மாநாடு மெய்ப்பித்துள்ளது. இதற்குரிய சான்று இருந்தும் கூட, ஏனைய சமயங்கள் எல்லாம் அழிந்தொழியும், தமது சமயம் மட்டுமே எஞ்சிநிலைக்கும் என்று இன்னமும் சிலர் கனவுகண்டால், அவர்களுக்காக நான் உளமார இரங்குகின்றேன்; எத்தகைய எதிர்ப்புக் கிளம்பினாலும், ஒவ்வொரு சமயத்தின் பதாகையிலும் "உதவுங்கள், மோதாதீர்கள்! அரவணையுங்கள், அழிக்காதீர்கள்! இசைவுபடுங்கள், அமைதி பேணுங்கள், பிணக்குப்படாதீர்கள்" என்றெல்லாம் விரைவில் பொறிக்கப்படும் என்பதை அவர்களுக்கு நான் சுட்டிக்காட்டுகின்றேன் (1893-09-27).

        ________________________________________________________________

Swami Vivekananda, Speeches at the World's Parliament of Religions, Chicago,

1893-09-11-27

தமிழ்: மணி வேலுப்பிள்ளை

 




No comments:

Post a Comment