இந்திய விடுதலைப் போராட்டம் இந்திய மொழிகளை விட அதிகமாக ஆங்கில மொழியில் நடத்தப்பட்டது. இந்தியாவைக் கட்டியாண்ட பிரித்தானியரின் ஏகாதிபத்திய மொழியான ஆங்கிலம் இந்திய தேசிய பிதாக்களின் போராட்ட மொழிகளுள் தலையாயது! தேசிய பிதாக்களின் நாடளாவிய நோக்கையும், உலகளாவிய கண்ணோட்டத்தையும் ஆங்கிலம் ஒருங்கிணைத்தது.
காந்தியின் முதன்மையான தொடர்புமொழி ஆங்கிலம். காந்திக்கும் தால்ஸ்தோய்க்கும் இடையே இடம்பெற்ற கடிதத் தொடர்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டும்படி போதித்த யேசுவின் அகிம்சை நெறியை, தால்ஸ்தோயுடன் வைத்துக்கொண்ட கடிதத்தொடர்பு மூலமாக அவர் தெரிந்துகொண்டார்.
காந்தி இலண்டனில் வைத்து எட்வின் ஆர்னோல்டின் (Edwin Arnold) ஆங்கில மொழிபெயர்ப்பு மூலமாக பகவத் கீதையை அறிந்துகொண்டார். குஜராத்தி மொழியில் காந்தி எழுதிய “சத்திய சோதனை”யை தேசாய் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்னர் அதை எஞ்சிய இந்தியாவும் வெளியுலகமும் கண்டுகொண்டது.
கொதாபய ராஜபக்சா இலங்கை அதிபராகப் பதவியேற்க முன்னர், அவர் ஒரு ஹிட்லர் என்று சாடப்பட்டார். அவரை ஆதரித்த ஒரு பிக்கு அவரிடம், உண்மையான ஹிட்லராக மாறி, அவ்வாறு சாடுவோர் கூறுவதை மெய்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார்! ஹிட்லரையும் முசோலினியையும் ஏற்றிப்போற்றிய ஆர். எஸ். எஸ்., ஜனசங் தரப்பினர் ஜின்னாவின் நிலைப்பாடு நியாயமே என்பதை மெய்ப்பித்தது போல! இந்த ஒப்பீட்டை வேறேந்த நாட்டுத் தலைவரும் கண்டித்தல் திண்ணம். ஆனால் இலங்கையில் இதுவரை இது கண்டிக்கப்படவில்லை. இலங்கையில் இது நயக்கப்படவும், உவக்கப்படவும் கூடும்! அதனால் தானோ, என்னவோ, எந்த ஆட்சியாளரும் பின்பற்ற முடியாத கொடியவரே ஹிட்லர் என்பதை இலங்கையில் உள்ள ஜேர்மன் தூதரே இடித்துரைக்க நேர்ந்துள்ளது!
இலங்கையிலும், இந்தியாவிலும் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்று முழங்குவோர் ஒரு தனிப்பட்ட தரப்பின் தலைவர்களாகத் தம்மைத் தாமே வரித்துக்கொண்டவர்கள். ஆகவே முழு நாட்டுக்கும் பிரதிநிதிகளாக விளங்குவதற்கு அவர்கள் இம்மியும் அருகதை அற்றவர்கள். காந்தியின் மொழியில் மேற்படி “கிணற்றுத் தவளைகள்” தமது சிற்றறிவினைக் கொண்டு நாட்டு வளப்பத்துக்கு விளக்கமளிக்கத் தலைப்பட்டவர்கள்.
பி. ஜே. பி. அரசு இந்திய அரசியல்யாப்பையும், குடியாட்சி விழுமியங்களையும், நீதித்துறையின் நியாயாதிக்கத்தையும் மீறுவது கண்டு “நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுகிறார் அமர்த்தியா சென் (London Guardian, 2020-10-26). “இந்து தேசியவாத அரசு சமயப் பகையை மேம்படுத்தியுள்ளது; இந்தியாவின் சமயச்சார்பற்ற மரபுகளை கருவறுத்துள்ளது” என்று அவர் சாடுகிறார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இந்தி பேசாத நாடாளுமன்ற உறுப்பினராகிய கனிமொழியிடம் “நீர் இந்தியரா?” என்று மத்திய கைத்தொழில் பாதுகாப்பு படை (CISF) அதிகாரி ஒருவர் கேட்டிருக்கிறார். அதாவது, இந்தி பேசாத இந்தியர்கள், இந்தியர்கள் அல்லர்! இந்திய முஸ்லீங்கள் மட்டுமல்ல, இந்தி பேசாத இந்தியர்களும் இந்தியர்கள் அல்லர்!
இதே பேரினவாதப் போக்கு இலங்கையிலும் உச்சத்தை தொட்டுள்ளது. அதற்கோர் எடுத்துக்காட்டு: சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படைமுகாங்களுக்குச் சென்று கொரனா தடுப்பூசி ஏற்ற மறுப்புத் தெரிவித்தார்கள். “அவர்கள் இந்த நாட்டவர்கள் அல்லர்” என்று சாடியிருக்கிறார் படைத்தளபதி சர்வேந்திர சில்வா!
எத்தனையோ சாபங்களையும், ஆரூடங்களையும் மீறி, ஒருங்கிணைந்து நீடித்து நிலைத்துள்ள இந்தியக் குடியரசை, இந்திய அரசியல்யாப்பின் சிறப்பியல்புகளை, குடியாட்சி விழுமியங்களை, சுதந்திர நீதித்துறையை, ஆங்கிலக் கல்வியின் கொடையை தேர்ந்து தெளிவதற்கு வேண்டிய ஞானமும் முதிர்ச்சியும் மதிநுட்பமும் அற்றவர்கள் இந்துத்துவத்தையும் இந்தியையும் கொண்டு இந்தியாவை ஒருங்கிணைக்க முனையும் பைத்தியக்காரத்தனத்தில் பொதிந்துள்ள ஒழுங்குமுறை வியக்கத்தக்கது (Though this be madness, yet there is method in't - Shakespeare).
1948ல் மத்திய நிதி அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி இந்தி திணிப்பை “இந்தி ஏகாதிபத்தியம்” (Hindi Imperialism) என்று சாடியதையும், “இந்திபேசும் இந்தியாவா, முழு இந்தியாவா வேண்டும் என்பதை வடமாநில நண்பர்களே தெரிவுசெய்யட்டும்!” என்று முழங்கியதையும் அதே நிலைப்பாடு நியாயப்படுத்துகிறது.
1947ல் என்றென்றும் செல்லுபடியாகும் வண்ணம் நேரு ஆங்கிலத்தில் ஆற்றிய சுதந்திர தின உரையில் ஒரு கூறு:
“பற்றுறுதி கமழும் இத்தருணத்தில் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும், இன்னும் பாரிய மானுட குறிக்கோளுக்கும் தொண்டாற்ற எங்களை நாங்கள் அர்ப்பணிக்க உறுதிபூணல் தகும்.
“சுதந்திர தீபத்தை ஏந்தி, எங்களைச் சூழ்ந்த இருள்மீது ஒளிபாய்ச்சிய சுதந்திர சிற்பியை, எங்கள் நாட்டின் பிதாவை, இந்தியாவின் பழம்பெரும் ஆத்மாவின் திருவுருவை இன்றைய நாளில் முதன்முதல் நாங்கள் எண்ணிப் பார்க்கின்றோம்.
“நாங்கள் பெரிதும் அருகதையின்றியே அன்னாரைப் பின்தொடர்ந்து வந்துள்ளோம். அவரது வழியிலிருந்து நாங்கள் விலகிச் சென்றுள்ளோம். ஆனாலும் நாங்கள் மட்டுமல்ல, அடுத்த தலைமுறையினரும் அந்த வழியை நினைவில் வைத்திருப்பார்கள்; வீறார்ந்த விசுவாசமும், வலிமையும், தீரமும், பணிவும் கொண்ட மகத்தான இந்திய மகனை தமது இதயங்களில் பதித்து வைத்திருப்பார்கள்; காற்று எவ்வளவு தூரம் கிளம்பி வீசினாலும், புயல் எவ்வளவு தூரம் எழுந்து சூறையாடினாலும், அந்த சுதந்திர தீபத்தை என்றுமே நாங்கள் அணையவிடப் போவதில்லை” (நேரு, 1947-08-14).
புனே மாநகரில் ஒரு கோட்சே அறிவகத்தை (Godse Gyan Shala) இந்து மகா சபை, அமைத்துள்ளது. காந்தியை இந்தியாவின் துரோகி என்றும், அவரை கோட்சே கொன்றது நியாயமே என்றும், இந்தியா இந்துக்களுக்குரிய நாடு என்றும், 20 கோடி இந்திய முஸ்லீங்களும் பாகிஸ்தானுக்குப் பெயரவேண்டும் என்றும்... இந்து மகா சபையின் செயலாளர் தேவேந்திர பாண்டே முழங்கியுள்ளார்!
“உங்கள் சமயம் எது?” என்ற வினாவுக்கு, “நான் ஒரு முஸ்லீம், இந்து, கிறீஸ்தவன், யூதன்” என்று விடையளித்தார் காந்தி. “ஓர் இந்துவால் மட்டுமே அப்படிக் கூற முடியும்” என்றார் ஜின்னா. ஆதலால்தான் “எல்லாச் சமயங்களையும் மெய்யானவை என்றே நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்” என்று முழங்கினார் சுவாமி விவேகானந்தர் (உலக சமய மாநாடு, சிக்காகோ, 1893-09-11).
“இறைவன் உண்டு என்பவருக்கும், இறைவன் இல்லை என்பவருக்கும் இந்துசமயத்தில் சரிநிகர் இடம் உண்டு” என்பதை தரூர் தமது நூலில் (Why I am a Hindu, 2018) விளக்கியுரைத்துள்ளார். இந்து பண்பாட்டு மரபு வேறு, இந்துத்துவம் வேறு என்பதைப் புரிந்துகொண்டவர்கள் காந்தியும், நேருவும். காந்தி கோயிலுக்கே போனதில்லை என்கிறார் குகா. ஒரேயொரு தடவை (மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தலித்து மக்களை அனுமதிக்கும் நிகழ்வுக்கு மட்டும்) அவர் போனதுண்டு.
“எனது வழித்தோன்றல் ராஜாஜியுமல்ல, சர்தார் வல்லபாயுமல்ல, ஜவகர்லாலே! நான் போன பிறகு, அவரே எனது மொழியைப் பேசுவார்” என்று அறிவித்தார் காந்தி. “எனது மொழி” என்று காந்தி கூறியது அவரது தாய்மொழியாகிய குஜராத்தியை அல்ல. தமது நாடளாவிய நோக்கையும், உலகளாவிய கண்ணோட்டத்தையுமே “எனது மொழி” என்று அவர் குறிப்பிட்டார்.
நேருவின் அமைச்சரவையில் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், மாநில அமைச்சர் பதவிகளை பட்டேல் உளமுவந்து ஏற்றுக்கொண்டார். எனினும் காந்தியும், நேருவும் பட்டேலுக்கு அநீதி இழைத்துவிட்டது போலவும், அதற்காக அவர்களைத் தண்டிப்பது போலவும் பி. ஜே. பி. நடந்துகொள்கிறது. பட்டேலுக்கு நர்மதா ஆற்றங்கரையில் 2,989 கோடி ரூபா செலவில், 597 அடி உயரமான சிலையெழுப்பி அம்மூவரதும் பெருந்தன்மையை சிறுமைப்படுத்தியுள்ளது; அவர்களது தோழமையை கீழ்மைப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி திரைநீக்கம் செய்துவைத்த அச்சிலைக்கு “ஒற்றுமைச் சிலை” என்று பெயர் சூட்டப்பட்டமை ஒரு முரண் அணி போல் சுவைக்கிறது. பட்டேல் தம் வாழ்நாள் முழுவதும் ஒரு காங்கிரஸ்காரராகத் திகழ்ந்தவர். வேண்டுமானால், காந்தியின் இடதுபுறம் நேருவும், வலதுபுறம் பட்டேலும் நிலைகொண்டதாக வைத்துக் கொள்ளலாம். அத்தகைய தோழமையைப் பொருட்படுத்தாமல், காந்தியையும், அவர் தேர்ந்தெடுத்த நேருவையும் பி. ஜே. பி. திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கிறது.
இந்தியா ஒரு பாகிஸ்தானாக மாறக்கூடாது என்று எச்சரித்தார் காந்தி. பாகிஸ்தானிய புலமையாளர் அக்கானி (Husain Haqqani) “இந்தியா ஒரு பாகிஸ்தானாக மாறக்கூடாது, பாகிஸ்தானே ஒர் இந்தியாவாக மாறவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார் (Reimagining Pakistan, 2018). காந்தியின் எச்சரிக்கையையும், அக்கானியின் வேண்டுகோளையும் புறக்கணித்து, வேற்றுமைக்குத் தூபமிட்டு வருகிறது பி. ஜே. பி.
ஏற்கெனவே பெரிதும் செயலளவில் (இந்தியுடன்) ஆங்கிலம் மத்திய ஆட்சிமொழி போலவே வழங்கி வருகிறது. பெயரளவிலும் அது யாப்பில் இடம்பெறுவதை இந்தி வழங்காத மாநிலங்கள் வரவேற்றல் திண்ணம். இந்தியாவின் ஒருமைப்பாட்டினைக் கருத்தில் கொண்டு, (இந்தியுடன்) ஆங்கிலத்தையும் மத்திய ஆட்சிமொழி ஆக்கும் வாய்ப்பினை மத்திய அரசும், மாநில அரசுகளும் சீர்தூக்கிப் பார்த்தல் நன்று. _________________________________ மணி வேலுப்பிள்ளை, 2020-12-25.
No comments:
Post a Comment