கவிஞர் நெருடாவும் பணிப்பெண் தங்கம்மாவும்

 Pablo Neruda

பாப்லோ நெருடா

1904-1973

JW_PLG_SIG_CLICK_TO_ENLARGE_IMAGE SouthAfrica02.jpg

ரொபினா பி. மார்க்ஸ்

தென் அபிரிக்க தூதர், இலங்கை

___________________________________________________________________________________

சிலிய நாட்டுக் கவிஞரும், இராசதந்திரியுமாகிய பாப்லோ நெருடா அந்த நாட்டின் தூதராக இலங்கையில் கடமையாற்றியவர். அப்பொழுது தங்கம்மா என்ற பெண் அவருடைய இல்லத்துக்கு பணிசெய்ய வந்து சென்றாள்.

தற்பொழுது தென் ஆபிரிக்க தூதராக இலங்கையில் கடமையாற்றும் ரொபினா மார்க்ஸ் (Robina P. Marks) 1973ல் இறந்த கவிஞர் நெருடாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டுஅவரை விளித்து எழுதிய மடலில் தங்கம்மாவுக்கு நேர்ந்த கதியை விவரித்துள்ளார்.  அதன் சுருக்கம் இது:

அன்பின் பாப்லோ

சிலிய நாட்டில் தொல்குடிமக்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக வெகுண்டெழுந்து நீங்கள் யாத்த கவிதைகளில் பொங்கும் அறச்சீற்றத்தை நான் நயந்து வியந்தேன். ஈற்றில் நீங்கள் சிலியத் தூதராக கடமையாற்றிய நாடுகளில் “கருமேனி, பொன்மேனி அழகிகளுடனும் மற்றும் இடச்சு, ஆங்கிலேய, திராவிடக் குருதி கொண்ட பெண்களுடனும்” ஊடாடியதை உங்கள் வாயிலாகவே அறிந்து குழப்பம் அடைந்துள்ளேன். “கைமாறு கருதாமல் அவர்கள் விளையாட்டாக என்னுடன் படுத்தெழும்பினர்” என்று நீங்கள் எழுதிச் சென்றிருக்கிறீர்கள். 

உங்கள் கவிதைமீது நான் கொண்ட காதல், தங்கம்மா என்ற பெண்ணைப் பற்றிய  நினைவில் சிக்கிகொண்டுள்ளது. உங்கள் பணியின்மீது அச்சமும், ஆபத்தும் கலந்த ஒரு கருநிழலை அது படரச் செய்துள்ளது. உங்கள் கவிதை வரிகளிடையே  அவள் ஓயாது சீறியெழுகின்றாள். 

கடலை அண்டி அமைந்த உங்கள் இல்லத்துக்கு உங்கள் உடற்கழிவு வாளிகளையும், உங்கள் தெருவில் வசித்த மற்றவர்களின் கழிவுவாளிகளையும் கொண்டுசெல்ல ஒவ்வொரு நாளும் காலையில் தங்கம்மா வந்து சென்றாள். நீங்கள் அடையக் கனவுகண்ட தங்கம்மா, நீங்கள் அள்ளி வழங்கிய பழங்களையும், பட்டுக்களையும் புறக்கணித்த தங்கம்மா வந்து சென்றாள். நீங்கள் எழுதியது போல் அவள் கையை இறுகப் பற்றி இழுத்த அந்த நாள் வரை அவள் வந்து சென்றாள். அதை நீங்கள் இப்படி வர்ணித்திருக்கிறீர்கள்: 

அவள் புன்னகை புரியவில்லை. எனது படுக்கை அறைக்கு தன்னை இட்டுச்செல்ல அவள் இடங்கொடுத்தாள். கையோடு எனது கட்டிலில் அவள் பிறந்த மேனியைக் கண்டேன்; அவள் இடையின் மெதுமையும், இடுப்பின் முதிர்ச்சியும், மார்பகங்களின் திரட்சியும் அவளை ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த தென்னிந்தியச் சிலை ஆக்கின. முழு நேரமும் தன்  விழிகளை அவள் திறந்து வைத்திருத்தாள். இம்மியும் அவள் பதில்வினை ஆற்றவில்லை. அவள் என்மீது விசனப்பட்டது நியாயமே. அத்துடன் அந்த அனுபவத்துக்கு முடிவுகட்டப்பட்டது.”

அவள் என்மீது விசனப்பட்டது நியாயமே” என்ற சொன்னவுடன் அந்தப் பழியிலிருந்து விடுபடலாம் என்று எண்ணினீர்களா? அது ஒரு வன்புணர்ச்சி அல்லவா? அது இருவர் ஒருவர்மீது ஒருவர் அன்புகொண்டு, ஆசைப்பட்டு மேற்கொண்ட இசைவுப்புணர்ச்சி அல்லவே! அதை எவரும் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பது போலவும், அதை ஒரு கணநேர வருத்தத்துக்குரிய சங்கதி போலவும் உங்கள் நினைவுத்திரட்டில் பூசி மெழுகியிருக்கிறீர்கள். 

தாழ்ந்த சாதியையும், பால்மையையும் சேர்ந்த ஒரு வறிய பெண்ணை, உங்கள் இல்லத்தைப் போன்ற வீடுகளுக்குச் சென்று உடற்கழிவு வாளிகளை அப்புறப்படுத்துவதை மட்டுமே தனது பிழைப்பாகக் கொண்டு, தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றிய ஒரு  பெண்ணை, வேறு கதியற்ற ஓர் அபலையை வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய குற்றம் அது. 

உங்களை ஒடுக்கப்பட்டவர்களின் தோழனாகக் காட்டி நீங்கள் பெருமைப்பட்டாலும் கூட, தங்கம்மாவைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு வெள்ளை இனத்தவர், ஆண் என்ற வலியவர். அவளோ எழுதப்பேசத் தெரியாதவள். தான் வலுவற்றவள், துணையற்றவள், குரலற்றவள் என்று எண்ணிக்கொண்டவள். தான் பிழைக்க வேண்டுமே என்பதற்காக உங்கள் படுக்கையில் அமைதிகாத்து, நீங்கள் புரிந்த வன்செயலை அவள் தாங்கிக்கொண்டாள். தனக்கு முன்னரும் பின்னரும் எத்தனையோ பெண்கள் தாங்கிக்கொண்டது போல் அவள் தாங்கிக்கொண்டாள்!

உங்களுடன் உறவாடும் ஐரோப்பியர்கள் தங்களை மேலானவர்கள் என்று எண்ணி, உங்களுக்கு தயவுகாட்டுவது எல்லாம் உங்களுக்கு அருவருப்பு ஊட்டுவதாக நீங்களே எழுதியிருக்கிறீர்கள். அப்படி என்றால் உங்களுக்கும் தங்கம்மாவுக்கும் இடையே அதே ஏற்றத்தாழ்வு நிலவியது உங்களுக்குப் புரிந்திருக்குமே!  

அத்துடன் அந்த அனுபவத்துக்கு முடிவுகட்டப்பட்டது” என்பது எனக்குப் புரியவில்லை. அதற்குப் பின்னரும் தங்கம்மா உங்கள் கழிவுவாளியை அகற்றும் பணியைத் தொடர்ந்தாளா? அல்லது அதற்குப் பின்னர் உங்கள் வாழ்நாளில் உங்கள் சரசத்துக்கு இடங்கொடுக்க மறுத்த வேறு பெண்களுடன் உங்களுக்கு அப்படி ஓர் “அனுபவம்”  கிடையாதா என்பது எனக்குப் புரியவில்லை. 

தங்கம்மா வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டாள். நீங்கள் “அனுபவம்” என்று சொல்வதை அடுத்து அவள் எவ்வாறு செயலாற்றினாள் என்பது எமக்குத் தெரியாது. அவளையும் அவளது வாழ்வையும் அந்த வன்புணர்ச்சி எவ்வாறு தாக்கியது? அதைப் பற்றி வேறு எவரிடமும் அவள் சொல்லியிருக்கக் கூடுமா? “உனக்கு உது வேணும்!” என்று பிறர் சொல்லுவார்கள் என்று அஞ்சியபடியால், அவள் வாய் திறக்கவில்லையா? எமக்குத் தெரியாது.  

அந்த அமைதி அவள் தொண்டையில் ஒரு கல்லைப் போல் சிக்கியிருக்கும். அதன் பிறகு தன்னுடனும், ஆண்களுடனும் அவள் பூண்ட உறவை அது எப்படி வடிவமைத்திருக்கும்? அந்த வன்புணர்ச்சியைத் தொடர்ந்து நீங்கள் இலங்கையை விட்டு வெளியேறி விட்டீர்கள். உங்கள் கவித்துவப் புகழ் உலகம் முழுவதும் பரவியது. மாண்பும், விருதுகளும் பரிசுகளும் உங்களுக்கு வந்து குவிந்தன. நோபல் பரிசு வேறு கிடைத்தது. 

வன்புணர்ச்சியை அடுத்து தங்கம்மாவின் அகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் என்ன நேர்ந்தது? இற்றைவரை வரலாற்றிலிருந்து அவள் அழிக்கப்பட்டிருக்கிறாள்; இலங்கையில் ஒருநாள் காலைவெயில் ஒளிர்ந்த வேளையில் நீங்கள் ஈட்டிய ஓர் “அனுபவம்” என்பதுள் அவள் ஒடுக்கப்பட்டிருக்கிறாள்.   

சாந்தி அடையாத தங்கம்மாவின் ஆவி உங்கள் கவிதை வரிகளிடையே என்னுடன் கண்ணாம்பூச்சி விளையாடுகிறது. தனது பெயரை எவரோ உதிர்த்தார் என்பதை அது அறியவேண்டும், அவளுக்கு நடந்ததை நாங்கள் அனைவரும் பொருட்படுத்தும் வண்ணம் உங்கள் கவிதையின் எதுகை மோனைகளிடையே அது நிலைத்திருக்க வேண்டும், அங்கு இச்சைப்படியும் தங்குதடையின்றியும் அது சுற்றித்திரிய வேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன். 

நீங்கள் வசித்த இல்லத்துக்கு எதிரே உள்ள கடற்கரைக்கு  இன்று நான் சென்றேன். “ஒவ்வொரு நாளும் காலையில் தூய்மை அடையும் இயற்கையின் அற்புதம் என்னை ஆட்கொண்டது” என்று எந்தக் கடற்கரையைப் பற்றி நீங்கள் எழுதினீர்களோ அந்தக் கடற்கரைக்குச் சென்றேன். கரையைத் தொட்டுத் திரும்பும் அலைகளை அவதானித்தபொழுது எனக்கும் அதே உணர்வு ஏற்பட்டது. எனினும் தங்கம்மாவின் உடலிலும் உள்ளத்திலும் நீங்கள் ஏற்படுத்திய கறை நிலைத்திருந்தது. அன்றாடம் தனது தலையில் வைத்து பத்திரமாய் சுமந்துசென்ற உங்கள் வாளிக்கழிவைப் போலவே  அவளது கறையும் களையப்படவில்லை. 

கடற்கரையில் சில கற்களை நான் பொறுக்கினேன். அவற்றில் “தங்கம்ம்மா” என்று கருநிறத்தில் எழுதினேன். அவற்றை நீங்கள் வசித்த வீட்டுக்கு எடுத்துச் சென்றேன். நீங்கள் வெளியேறிய பிறகு அங்கு வசித்துவரும் முஸ்லீம் குடும்பம் என்னை வரவேற்றது. தாயும் இரண்டு புதல்வருமான அம்மூவருடனும் அளவளாவியபடியே, தங்கம்மா நடமாடிய இடத்தில் திருட்டுத்தனமாக அந்தக் கற்களைப் போட்டேன். அவர்கள் தேநீர் தர முன்வந்தார்கள். கல்லுச் சிக்கிய என் தொண்டையால் அதைப் பருக முடியாது என்று சொல்லிவிட்டு நான் கடற்கரைக்குத் திரும்பி “தங்கம்மா” என்று பொறித்த கற்களை மேலும் இட்டுச்சென்றேன்.  வரலாற்றினால் அழிக்கப்பட்ட அவள் பெயரை உச்சரித்தேன்: “தங்கம்மா! தங்கம்மா! தங்கம்மா!” 

பாப்லோ, அந்த வீட்டருகில் அல்லது கடற்கரையில் ஒரு குழந்தையோ, அல்லது கடற்கரையில் வேறெவருமோ நான் இட்டுச்சென்ற கல்லை மிருதுவாய் எடுத்து, கையில் ஏந்தி, அதன் கதையை அறிய ஆவல் கொள்ளக்கூடும். அத்தகைய ஒரு கல்லை நீங்கள் கண்டெடுத்தால், அதைப்பற்றி ஒரு கவிதை எழுத உங்கள் உள்ளம் துடித்திராதா? அது என்ன கதையை உணர்த்துகிறது என்று நீங்கள் சிந்தித்திருக்க மாட்டீர்களா?

அத்தகைய கல் ஒன்றை நீங்கள் ஏந்தி வைத்திருந்து, முதல் தடவையாக அவள் பெயரை உச்சரித்து, அந்த விதிவசப்பட்ட நாளில் எது உங்கள் உடைமை இல்லையோ அதை நீங்கள் கவர்ந்த நாளில் எந்தப் பெயரை நீங்கள் உச்சரிக்கவில்லையோ அந்தப் பெயரை உச்சரிக்கும்பொழுது உங்களுக்கு எழும் எண்ணங்களாலும் சொற்களாலும் உந்தப்பட்டு நீங்கள் ஒரு கவிதை எழுதுவதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.  

____________________________________________________________________________________

Robina P Marks, South African High Commissioner to Sri Lanka and The Maldives, Sri Lnka Guardian. 

தமிழ்: மணி வேலுப்பிள்ளை

 






No comments:

Post a Comment