தமிழ் நடை மீட்சி


         பொருள்: “...தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையை விட்டு, இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது…” (பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1997, ப.207). இன்று ஒரு நூற்றாண்டு கழிந்த நிலையில், அந்த நிலைவரம் இன்னும் மோசமடைந்துள்ளது. தமிழ் எழுத்து, சொல், தொடர், வசனம் அனைத்தையும் ஆங்கிலம் ஆட்கொண்டுள்ளது. ஆங்கிலமயம் என்பது தமிழ் எழுத்திலிருந்து சொல்லுக்கும், சொல்லிலிருந்து தொடருக்கும், தொடரிலிருந்து வசனத்துக்கும்… தாவியுள்ளது.  ஒவ்வோர் எடுத்துக்காட்டு:

 

       எழுத்து: ‘எனக்கு ஓர் அழைப்பு வந்தது. அழைப்பிதழில் கனகரட்ணம் என்று இருந்தது. இந்த ரட்ணம் என்பது இரத்தினம் என்பதன் திரிபு. கனகரத்தினம் என்ற பெயர் ஆங்கிலத்தில் Kanagaratnam என்று எழுதப்பட்டு, பின்னர் அதன் தமிழ் வடிவத்தைக் கைவிட்டு, ஆங்கில உச்சரிப்பையே கனகரட்ணம் என்று எழுதி வருகிறார்கள். இப்படியே செல்வரட்ணம், தவரட்ணம், நவரட்ணம் போன்ற பெயர்களும் பவனி வருகின்றன. எனது பெயரும் ஆங்கிலத்தில் Kandavanam என்றுதான் இருக்கிறது. ஆனால் நான் காண்டாவனம் என்று எழுதுவதில்லை’ (கவிஞர் கந்தவனம், கனடிய காட்சிகள், தமிழர் தகவல், ரொறன்ரோ, தை 2007, ப.8).

 

       சொல்: புண்படுத்து என்னும் தமிழ்ச் சொல் கண்டுகொள்ளப் படுவதில்லை. Hurt அல்லது offend என்னும் ஆங்கிலச் சொல் கண்டுபிடிக்கப்பட்டு, அது காயப்படுத்து என்று வழங்கப்படுகிறது! ஓர் எடுத்துக்காட்டு: எனது மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் உணர்ச்சிகளைக் காயப்படுத்துவது எனக்கு மகிழ்ச்சி தராது (ஜெயகாந்தன், சபை நடுவே, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1997, ப.126).  I won’t enjoy hurting others’ feelings! ஒருவரை இன்னொருவர் புண்படுத்திவிட்டார் என்றால், முன்னவரைப் பின்னவர் மனம்வருந்தச் செய்துவிட்டார், அடித்து உதைக்கவில்லை என்று துணிந்து கூறலாம். ஆனால், ஒருவரை இன்னொருவர் காயப்படுத்திவிட்டார் என்றால், முன்னவரைப் பின்னவர் மனம்வருந்தச் செய்தாரா, அடித்து உதைத்தாரா என்பதை அறுதியிட்டுரைக்க முடியாது. ஆதலால்தான் உள்ளத்தை அல்லது உணர்ச்சிகளைக் காயப்படுத்து என்று குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

 

  சொல்-தொடர்: தமிழ் மரபில் நிலைத்த சிறுபான்மை இனத்தவர், சிறுபான்மை மதத்தவர், சிறுபான்மை மொழியினர்… போன்ற தொடர்களைப் பலரும் கண்டு கொள்ளவோ செவிமடுக்கவோ தவறுவதுண்டு. ஆதலால் அவர்களின் கண்களில் படும், காதுகளில் விழும் ethnic minorities, religious minorities, linguistic minorities என்னும் ஆங்கிலத் தொடர்கள் முறையே இனச் சிறுபான்மையோர், மதச் சிறுபான்மையோர், மொழிச் சிறுபான்மையோர்… ஆகி வருகின்றன. ஆங்கிலச் சொல்-தொடர் ஒழுங்கு, தமிழ்ச் சொல்-தொடர் ஒழுங்காய் மாறி வருகிறது!

 

     மரபுத்தொடர்: தண்டத் தீனி, வீண் உருப்படி, வீண் வில்லங்கம், வீண் செலவு… போன்ற தொடர்களின் பொருளைப் புரிந்துகொள்வதில் எமக்கு மிகுந்த சிரமம் நேர்கிறது என்பதற்குத் திட்டவட்டமான சான்று வெள்ளை யானை ஆகும். ஆங்கிலக் காட்டினுள் அகப்பட்ட இந்த white elephant என்னும் வெள்ளை யானையின் தோற்றுவாய் ஒரு தாய்லாந்துக் கதை ஆகும். அந்த நாட்டு மன்னன் ஒருவன், தனக்குப் பிடிக்காதவர்க்கு ஒரு வெள்ளை யானையைப் பரிசாகக் கொடுத்துவிடுவான். அந்த அரிய யானையைப் பரிசாகப் பெற்றவர் அதனைப் பராமரிப்பதற்கு தன் வாழ்நாள், வருவாய் முழுவதையும் செலவழிக்க நேரும்! முன்பு அதிக செலவு கொடுத்து ஈட்டிய ஒரு பொருள் பின்பு வீணே கிடந்து தொடர்ந்தும் செலவு விளைவிப்பதுண்டு. ஆங்கிலத்துக்கு இது white elephant ஆகலாம். தமிழுக்கோ வெள்ளை யானை ஒரு வீண் உருப்படி ஆகும்.

 

     தேராதுதெளிதல்: பயண அடுக்கு, பயண ஏற்பாடு, பயண ஆயத்தம்… எல்லாம் மக்கள் வழக்கில் நிலைத்த தொடர்கள். அவை கண்டுகொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் அது preparations for the journey எனப்படுவதுண்டு. அந்த ஆங்கில வழக்கு கண்டறியப்பட்டதன் விளைவாக கடந்த ஒரு தசாப்தத்துத்துள் பயணத்துக்கான தயாரிப்பும், தயாரிப்புகளும், தயார்ப்படுத்தலும், தயார்ப்படுத்தல்களும் உருவாகியுள்ளன. அதனைப் பயண(த்துக்கான) அடுக்கு அல்லது பயண(த்துக்கான) ஏற்பாடு அல்லது பயண(த்துக்கான) ஆயத்தம் என்று குறிப்பிடுவதை விடுத்து, பயணத்துக்கான தயாரிப்பு (அல்லது தயார்ப்படுத்தல்) என்று குறிப்பிடுவதற்கு (1) தமிழ் வழக்கு கண்டுகொள்ளப்படாததும், (2) கண்டுகொள்ளப்படும் ஆங்கில வழக்கு தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதுமே காரணங்கள். தயாரி, தயாராகு இரண்டையும் prepare என்னும் ஆங்கிலச் சொல் குறிக்க வல்லது. தயாரி என்னும் (செயப்படுபொருள் குன்றா) வினையின் பெயர் உருவம் தயாரிப்பு. Food preparation அல்லது preparation of food என்பது உணவு தயாரிப்பு ஆகும். தயாராகு என்னும் (செயப்படுபொருள் குன்றிய) வினையின் தொழிற்பெயர் உருவம் தயாராகுகை அல்லது தயாராகுதல். அந்த வகையில் preparations for the journey என்பது பயணத்துக்குத் தயாரகுவதைக் கருதுமேயொழிய, எதுவித தயாரிப்பையும் கருதாது.

 

     வசனம்: துன்புறுத்தப்படுவதற்கு ஒரு நல்ல-அடிப்படையுள்ள பயத்தினால், அவனுடைய அல்லது அவளுடைய நாட்டை விட்டுத் தப்பி ஓடி, அத்துடன் கனடா அரசாங்கத்தால் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட ஒருவரே அகதி. இது ஒரு கனடிய அரசின் அதிகாரபூர்வமான வெளியீடு ஒன்றில் காணப்படும் வசனம்! ஆதலால் அதன் தோற்றுவாயைக் கண்டறிவதில் எமக்கு அதிகம் சிரமம் ஏற்படவில்லை: A refugee is a person who has had to flee his or her country because of a well-founded fear of persecution and has been given protection by the Government of Canada. ஈ அடித்த பிரதிக்காரரைப் போன்று his or her என்பது அவனுடைய அல்லது அவளுடைய என்று பெயர்க்கப்படடுள்ளது. ஆண்பால், பெண்பால் இரண்டையும் மாத்திரமன்றி, ஒருமை, பன்மை இரண்டையும் உணர்த்தும் அவருடைய என்னும் அருந்தமிழ்ச் சொல் இங்கு பயன்படுத்தப்படவில்லை. Persecution என்பது கொடுமை, வெறும் துன்புறுத்தல் அல்ல. A well-founded fear என்பதை ஒரு நல்ல-அடிப்படையுள்ள பயம் என்பது ஒரு நிறைவான தமிழாக்கம் ஆகாது. தகுந்த காரணங்களுடன் கூடிய பயம் என்பதே இதன் பொருள். A well-founded fear of persecution என்பது தகுந்த காரணங்களுடன் கொடுமைக்கு அஞ்சுதல் ஆகும். அந்த வகையில் மேற்படி தமிழாக்கத்தை நாம் பின்வருமாறு செம்மைப்படுத்தலாம்: தகுந்த காரணங்களுடன் கொடுமைக்கு அஞ்சி, தனது நாட்டை விட்டுத் தப்பி ஓடி, கனடிய அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ள ஒருவரே அகதி.

 

    வேற்றுமை: தமிழில் வேற்றுமை உருபுடன் அமையும் சில கூற்றுகள் ஆங்கிலத்தில் வேற்றுமை உருபின்றியே அமைவதுண்டு. சில எடுத்துக்காட்டுகள்:


    நாங்கள் உங்களைச் சந்திப்போம் (2ம் வேற்றுமை) = We will meet you..

  எம்முடன் தொடர்புகொள்ளவும் (3ம் வேற்றுமை) =  Please contact us.

   மறவருக்கு மதிப்பளிக்கப்பட்டது (4ம் வேற்றுமை) The veterans were honoured.   

 

    தமிழில் எம்முடன் தொடர்புகொள்ள… எனப்படுவதே ஆங்கிலத்தில் To contact us… எனப்படுகிறது. 3ம் வேற்றுமையுடன் கூடிய இத்தமிழ் வழக்கு கண்டுகொள்ளப்படாது, To contact us என்னும் ஆங்கில வழக்கு கண்டுபிடிக்கப்பட்டு, அந்த ஆங்கில வழக்கு தமிழின் 2ம் வேற்றுமையுடன் குழப்பியடிக்கப்பட்டு, எம்மைத் தொடர்புகொள்ள… என்று குறிப்பிடப்படுகிறது! எமது திட்டம் இரண்டு காரணங்களால் தோல்வியடைந்தது என்பது 3ம் வேற்றுமையில் அமைந்த இன்னோர் இயல்பான வசனம். இது, எமது திட்டம் இரண்டு காரணங்களுக்காகத் தோல்வியடைந்தது என்று குறிப்பிடப்படுகிறது. இதன் தோற்றுவாய்: Our plan failed for two reasons. இரண்டு காரணங்களால் என்னும் தமிழ் வழக்கு for two reasons என்னும் ஆங்கில வழக்கினால் இரண்டு காரணங்களுக்காக என்று உரு(பு) மாறியுள்ளது!

  மறவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது, மறவர்களுக்கு கௌரவமளிக்கப் பட்டது, (4ம் வேற்றுமை), மறவர்கள் கௌரவிக்கப் பட்டார்கள், The veterans were honoured. இவை நான்கும் இயல்பான கூற்றுகள். கௌரவி ஒரு வடமொழிச் சொல். ஆதலால் அது மதிப்பளி என்று மாற்றப்படுவதுண்டு. கௌரவிக்கப்பட்டார்கள் என்னும் வடமொழிக் கலப்புச் சொல்லுக்குப் பதிலாக மதிப்பளிக்கப்பட்டார்கள் என்னும் சொல் கையாளப்படுகிறது. மதிப்பளிக்கப்பட்டார்கள் என்பதை மீண்டும் வடமொழிக் கலப்புடன் மாற்றினால், கௌரவமளிக்கப்பட்டார்கள் என்று அமையுமே ஒழிய, கௌரவிக்கப்பட்டார்கள் என்று அமையாது. அதாவது கௌரவிக்கப் பட்டார்கள் என்பது மதிக்கப்பட்டார்கள் என்று மாறுமே ஒழிய, மதிப்பளிக்கப் பட்டார்கள் என்று மாறாது. ஆனால் மதிக்கப்பட்டார்கள் (… were respected) என்பது இங்கு உரிய பொருளை முழுமையாய் உணர்த்தாது. ஆதலால் அது மதிப்பளிக்கப்பட்டார்கள் என்று மாற்றப்படுகிறது. கௌரவி என்னும் ஒரே சொல்லுக்குப் பதிலாக மதிப்பு, அளி என்னும் இரு சொற்களின் சேர்க்கையாகிய மதிப்பளி என்பதை இடும்பொழுது, அதனை 4ம் வேற்றுமையுடன் கூடிய கூற்றாக்கி, மறவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது என்று குறிப்பிடும் பொழுதே இயல்பான தமிழ் கைகூடும்.

 

   அரசு சிறுபான்மை இனத்தவருக்குத் தீங்கிழைத்தது போன்று செய்வினையில் அமையும் வசனங்களும், அரசினால் சிறுபான்மை இனத்தவருக்குத் தீங்கிழைக்கப்பட்டது போன்று செயப்பாட்டு வினையில் அமையும் வசனங்களும் இயல்பான தமிழ் நடையில் அமைந்தவை. அவற்றுக்கு மாறாக, சிறுபான்மை இனத்தவர் அரசால் தீங்கிழைக்கப்பட்டனர் போன்ற செயற்கை நடைகள் மேலோங்கி வருகின்றன. The minorities were abused by the government என்னும் ஆங்கிலக் கூற்றே இவ்வேற்றுமைக் குலைவின் தோற்றுவாய். இவ்வாறே அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது என்பது அகதிகள் மறுவாழ்வு அளிக்கப்படுகிறார்கள் என்றும், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள் என்றும் உருக்குலைந்து (உருபிழந்து) வருகின்றன.

 

          ஆங்கில மொழியும் நடைதளர்ந்து வருகிறது. ஆங்கில எழுத்தாளர்கள் ஓர் இலக்கண நூலை அல்லது கட்டுரை நூலை அரிதாகவே புரட்டிப் பார்ப்பதில் பேர்போனவர்கள் - It is notorious that English writers seldom look into a grammar or composition book - என்று பவுலர் சகோதரர்கள் தமது பெயர்போன நூலுக்கு எழுதிய முன்னுரையில் சாடியுள்ளார்கள்  (H.W.Fowler & F.G.Fowler, The King’s English, Oxford, 1906-1970). 

 

  ஆங்கில மொழியில் வேற்றுமை பெரிதும் பொருளற்றதாகிவிட்டது. வேற்றுமையைப் பொறுத்தவரை சில தவறுகள் அடிக்கடி இழைக்கப்படக்கூடியவையே. அவற்றுள் ஒருசில மேன்மேலும் இழைக்கப்படுகின்றன. ஆதலால் அத்தவறுகள் திருத்தமானவை என்றே வகுக்கப்பட்டுவிட்டன - The sense of case being almost lost, the few mistakes that can be made often–some of them so often that they are now almost right by prescription (அதே நூல், ப.69).

 

       பவுலர் சகோதரர்களின் திறனாய்வுக்கு உட்பட்டவர்களுள் திரும்பத் திரும்ப இடம்பெறுபவர்களின் துறைகளைக் கருத்தில் கொண்டபொழுது, எமக்கு ஏற்கெனவே புலப்பட்ட ஓர் உண்மை வியக்கத்தக்க முறையில் உறுதிப்பட்டது. அதாவது மொழியைக் கையாளப் போய், பவுலர் சகோதரர்களிடம் வகையாக மாட்டுப்பட்டோருள் தலையாய பங்கு வகிப்பவர்கள் மூன்று தரப்பினர் என்பது புலனாகியது: (1) படைப்பாளிகள், (2) ஊடகத் துறைஞர்கள் (3) அரசியலாளர்கள். திரும்பத் திரும்ப பவுலர் சகோதரர்களின் சல்லடைக்கு உட்பட்ட தரப்புகளுள் நாம் கோலியெடுத்த ஒரு கூறு வருமாறு:

 

படைப்பாளிகள் ஊடகங்கள்                                  அரசியலாளர்கள்

 

Carlyle (1795-1881)              Cambridge Univ.Reporter Borrow (1952-)

Dickens (1812-1870)            Daily Telegraph                                Burk (1729-1797)  

Eliot (1888-1965)                 Outlook                                             Choate (1832-1917)       

Huxley (1864-1963)             Spectator                                          Ferrier (1800-1888)

Kipling (1865-1936)              Times                                                 Gladstone (1809-1898)

Macaulay (1876-1962)          Westminister Gazette                       Morley (1838-1923)

Stevenson (1850-1894)        Windsor Magazine                            Sladen (1816-1884)


          பல்லாண்டுகளாக மக்களை ஆட்கொண்ட மாபெரும் எழுத்தாளர்களை உள்ளடக்கிய மேற்படி நிரல் புலப்படுத்தும் சங்கதியை பவுலர் சகோதரர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்: இங்கு படைப்பாளி எவரின் பெயரும் அல்லது செய்தித்தாள் எதன் பெயரும் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருக்கக் கூடும். அப்படைப்பாளியே அல்லது செய்தித்தாளே பிறரை அல்லது பிறவற்றை விட அதிகமாய் இலக்கண விதிகளையும் மொழிநடை விதிகளையும் மீறுவதாக இது பொருள்படாது. எடுத்துக்காட்டுகளைத் திரட்டுவதற்காக மட்டுப்பட்ட அளவில் தேர்ந்தெடுக்க நேர்ந்தவர்களுள் அல்லது நேர்ந்தவற்றுள் அப்பெயர்கள் இடம்பெற்றிருப்பதை மட்டுமே இது புலப்படுத்துகிறது (The frequent appearance in it of any author’s or newspaper’s name does not mean that the author or newspaper offends more often than others against rules of grammar or style; it merely shows that they have been among the necessarily limited number chosen to collect instances from).

       ஒரு கனடியப் பேராசிரியர் எழுதிய கடிதம்: மேற்கு ஒன்ராறியோ பல்கலைக் கழகத்தில் நான் ‘முகாமைத்துவ தொடர்பாடல்’ கற்பித்த வேளையில் ஒரு சங்கதியைக் கண்டறிந்தேன். அறிவுக் கூர்மை மிகுந்த எனது மாணவர்கள் தமக்கு அடிப்படை ஆங்கில இலக்கண அறிவு இல்லை என்பதை அறிந்து குழப்பமும் கொதிப்பும் அடைந்தார்கள். தொடர்பாடல் துறைகள் அனைத்திலும் திட்பமான முறையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வேண்டிய அடிப்படைத் தேர்ச்சிகளைப் பள்ளிக் கல்வி அவர்களுக்கு ஊட்டத் தவறியது குறித்து அவர்கள் சீற்றம் அடைந்தார்கள். தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவே அவர்கள் எண்ணினார்கள். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் எனது மாணவர்களுக்கு ஊட்டப்பட்டிருக்க வேண்டிய தேர்ச்சிகளை இப்பொழுது ஊட்ட முயல்வதற்கு நானே நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. அந்த வகையில் நானும் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவே எண்ணினேன். நாங்கள் பாடம் படிப்பதே இல்லையா? - (Professor Alexandra Hurst, The Globe and Mail, Toronto, 2007/02/14). தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்களும் தமது அடிப்படைத் தமிழ், ஆங்கில இலக்கண அறிவு இரண்டையும் குறித்து குழப்பமும் கொதிப்பும் அடையும் நிலையில் இருக்கக்கூடும்.

 

          ஒரு கனடிய மூதவையாளர் தேசிய நாளேடு ஒன்றுக்கு எழுதிய கடிதம்: இதுவே எனது கடைசி அரசியல் கடிதம். இனிமேல் இலக்கணம், சொல்தொடரியல், பதப்பயன்பாடு என்பவற்றில் நீங்கள் தாராளமாய் இழைக்கும் தவறுகளுக்கு உங்களைக் கடிந்து நான் குறுகிய கடிதங்களை எழுதி அனுப்புவேன் - This is my last political piece. Hereafter, I shall write brief letters chiding you for your far too frequent errors in grammar, syntax and terminology  (Senator Philippe Gigantes, The Globe and Mail, Toronto).  

 

      பதிப்பாளர்கள் பலரும் கையாளும் நடை, பொருள், சந்தர்ப்பம் என்பவற்றை விட்டுவிடுவோம் – வெறும் எழுத்துக்கூட்டல், இலக்கணம், நிறுத்தக்குறியீடு, சொல் தொடரியல் என்பவற்றையே அவர்கள் புரிந்துகொண்டது மிகவும் குறைவு. அதுவே எமக்குத் திகிலூட்டுகிறதுMany editors have a frighteningly minimal grasp of spelling, grammar, punctuation and syntax – to say nothing of style, substance and context… (Ian Alterman, The New York Times, 1998/07/01). 

 

      முதலாவதாக, ஒரு குறுஞ் சொல் பயன்படுமாயின், பெருஞ் சொல்லை என்றுமே பயன்படுத்தக் கூடாது. (இரண்டாவதாக) பற்பல வரையறைகளுடன் கூடிய ஒரு கூற்றினை நீங்கள் முன்வைக்க விரும்பினால், அவ் வரையறைகளுள் சிலவற்றைப் புறம்பான வசனங்களில் இடவும். மூன்றாவதாக உங்கள் வசனத்தின் தொடக்கம் அதன் இறுதிக்கு முரணான ஓர் எதிர்பார்ப்புக்கு வாசகரை இட்டுச்செல்லும் வண்ணம் அமையக்கூடாது - First: never use a long word if a short word will do. So, if you want to make a statement with a great many qualifications, put some of the qualifications in separate sentences. Third: do not let the beginning of your sentence lead the reader to an expectation which is contradicted by the end (Robert E.Egner, Bertrand Russell’s Best, Routeledge, 1981, p.213).

 

         எப்படி எழுதக்கூடாது என்பதற்கு றசலின் எடுத்துக்காட்டு: Human beings are completely exempt from undesirable behavior patterns only when certain prerequisites, not satisfied except in a small percentage of actual cases, have, through some fortuitous concourse of favorable circumstances, whether congenital or environmental, chanced to combine in producing an individual in whom many factors deviate from the norm in a socially advantageous manner. இதனைப் பின்வருமாறு “ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கலாம்” என்று றசல் ஓர் எள்ளலுடன் கூறுகிறார்: All men are scoundrels, or at any rate almost all. The men who are not must have had unusual luck, both in their birth and in their upbringing (மனிதர்கள் எல்லோரும் கயவர்கள், அல்லது போனால் அநேகமாக மனிதர்கள் எல்லோரும் கயவர்கள். கயவர்கள் அல்லாத மனிதர்கள் தமது பிறப்பையும் வளர்ப்பையும் பொறுத்தவரை அரிய பேறு படைத்தவர்களாய் இருந்திருக்க வேண்டும்). தொடர்ந்து றசல் கூறுகிறார்: This is shorter and more intelligible, and says just the same thing (இக்கூற்று மிகவும் குறுகியது, புரியக்கூடியது, அதே பொருளையே உணர்த்துவது).

 

          றசல் முன்வைக்கும் வேறோர் எடுத்துக்காட்டு: Some people marry their deceased wives' sisters (சிலர் தமது இறந்த மனைவியரின் சகோதரிகளை மணம் முடிக்கிறார்கள்). I can express this in a  language which only becomes intelligible after years of study, and this gives me freedom (இதனைப் பல ஆண்டுகாளக ஆய்விட்ட பின்னரே புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் என்னால் எடுத்துரைக்க முடியும். அப்படிச் செய்வது எனக்குச் சுதந்திரமும் அளிக்கும்).

 

          இளம் பேராசிரியர்களுக்கு றசல் கூறும் புத்திமதியில் ஒரு வேடிக்கை வேறு சேர்கிறது: I suggest to young professors that their first work should be written in a jargon only to be understood by the erudite few. With that behind them, they can ever after say what they have to say in a language 'understand of the people' (இளம் பேராசிரியர்களுக்கு நான் கூறும் யோசனை இதுவே: அவர்களின் முதற் படைப்பு, புலமை வாய்ந்த சிலருக்கு மாத்திரம் புரியக்கூடிய துறைமொழியில் எழுதப்பட வேண்டும்; அதற்கடுத்த படைப்புகளில் அவர்கள் கூறவேண்டியதை மக்களுக்கு விளங்கும் மொழியில் கூறவேண்டும்).

 

          மீண்டும் ஓர் எள்ளலுடன் றசல் விடைபெறுகிறார்: In these days, when our very lives are at the mercy of the professors, I cannot but think that they would deserve our gratitude if they adopted my advice (எங்கள் வாழ்வே பேராசிரியர்களின் தயவில் தங்கியுள்ள இக்காலகட்டத்தில், அவர்கள் எனது புத்திமதியைக் கைக்கொண்டால் எமது நன்றியறிதலையாவது ஈட்டும் அருகதை அவர்களுக்குக் கிட்டும் என்று நான் நினைக்கிறேன்).

 

    இத்தகைய பிரச்சனைகள் மொழியினால் விளைபவை ஆகா. அவை மொழியைக் கையாள்பவர்களால் விளைபவை. அவ்வாறே மொழிபெயர்ப்பில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மொழிபெயர்ப்பாளர்களால் விளைபவையே ஒழிய, மொழிகளால் விளைபவை ஆகா. நீதிமன்றின்முன் தோன்றுவோர் இரண்டு வகையானோர் என்பதை நன்னடத்தைச் சேவைத் துறை கண்டறிந்துள்ளது. ஒரு வகையினரைப் பொறுத்தவரை, அவர்களுக்குப் பிரச்சனை உண்டு. மறு வகையினரைப் பொறுத்தவரை, பிரச்சனையே அவர்கள்தான்! (The probation service have found out that there are two types of person appearing before the courts – those who have problems and those who are problems, Simon Cohen, Magistrate, June 1983, The Globe and Mail, Toronto, 2007/02/27). அது போலவே மொழிபெயர்;ப்பாளர்களுள் ஒரு வகையினர் தமிழாக்கத்தில் பிரச்சனைகளை எதிர் நோக்குவோர். மறு வகையினரைப் பொறுத்தவரை, பிரச்சனையே அவர்கள்தான்!

 

        மருத்துவர் சிகிச்சையளிப்பது நோயாளிக்கே ஒழிய, நோய்க்கல்ல (The doctor treats a patient, not a disease) என்றார் ஒரு மருத்துவரின் மகனாகிய அரிஸ்டோட்டில். ஓர் ஆளை எத்தகைய நோய் பீடித்துள்ளது என்பதை விட, எத்தகைய ஆளை அந்த நோய் பீடித்துள்ளது என்பதை அறிவதே மிகவும் முக்கியம் - It is much more important to know what sort of a patient has a disease than what sort of disease a patient has (Dr. Sir William Osler, 1849-1919). அது போலவே, எத்தகைய கூற்று மொழிபெயர்க்கப்படுகிறது என்பதை விட, அதனை எத்தகைய ஒருவர் மொழிபெயர்க்கிறார் என்பதே மிகவும் முக்கியம்.

 

         நாம் இதுவரை சுட்டிக்காட்டிய பிரச்சனைகளிலிருந்து கடைத்தேறுவதற்கு தமிழாக்கவியல் ஒரு தனித் துறையாக (சிறப்புத் துறையாக) மேலோங்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. ஆங்கில நடையிலிருந்து தமிழ் நடையை மீட்டெடுப்பதே தமிழாக்கத் துறையின் தலையாய குறிக்கோளாய் அமைய வேண்டும்.

 

      தமிழ் நடையில் அமையும் தமிழே தமிழாக்கத்தைச் செம்மைப்படுத்தும். அதற்கு, தமிழிலும் ஆங்கிலத்திலும் கற்றவர்களாய் மட்டுமன்றி, தமிழையும் ஆங்கிலத்தையும் கற்றவர்களாய் விளங்குவோர் மனமுவந்து களமிறங்க வேண்டும். இரு மொழிகளின் பாணியையும் தேர்ந்து, தெளிந்து பெயர்க்கும் பணியை அவர்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும். தமது தமிழாக்கங்களில் செம்மை (accuracy), சீர்மை (uniformity), திண்மை (specificity) என்னும் மூன்று சிறப்புகளையும் அவர்கள் பொறிக்க வேண்டும்.

 

       தமிழாக்கத்தைச் செம்மைப்படுத்துவதில் ஈடுபடக்கூடிய துறைஞர்களுக்கு சொல் தொகுதிகளும் அகராதிகளும் கைகொடுக்க வல்லவை. ஈழநாட்டிலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு சொல்தொகுதிகளும் அகராதிகளும் வெளிவந்துள்ளன. இவ்விரு நாடுகளிலும் வெளிவந்த அகராதிகளை நாம் நால்வகைப்படுத்தலாம்:

 

(1) தமிழ்-தமிழ் அகராதி (எ-கா: யாழ்ப்பாண அகராதி–1842, தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2006).

(2) தமிழ்-ஆங்கில அகராதி (எ-கா: தமிழ் அகராதி–1926, சென்னைப் பல்கலைக்கழகம், 1982).

(3) ஆங்கிலம்-தமிழ் அகராதி (எ-கா: ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்–1963, சென்னைப் பல்கலைக்கழகம், 1992).

(4) ஆங்கில-ஆங்கில அகராதி Oxford, Webster’s…)

 

  தமிழ்-தமிழ் அகராதிகளின் மகிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு: 1842ல் சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை ஆகிய இருவரும் தொகுத்து வெளியிட்ட யாழ்ப்பாண அகராதியில் குடியாட்சி என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. தமிழில் 165 ஆண்டுகளுக்கு மேல் மண்டிக் கிடக்கும் ஓர் அரிய சொல் இது. 1958ல் வெளிவந்த ஓர் ஈழநாட்டுச் சொல்-தொகுதியில் குடியாட்சி, democracy இரண்டும் நேரொத்த சொற்களாய் எடுத்தாளப் பட்டுள்ளன (குடிமையியலும் ஆட்சியியலும், இலங்கை அரசகரும மொழித் திணைக்களம், கொழும்பு, 1958). 1992ல் வெளிவந்த கிரியாவின் தமிழ்-ஆங்கில அகராதியில் குடியாட்சி, மக்களாட்சி, democracy மூன்றும் நேரொத்த சொற்களாய் இடம்பெற்றுள்ளன. இவை மக்கள் வழக்கிற்கும் துறைஞர் வழக்கிற்கும் உகந்த சொற்கள் என்பதில் ஐயமில்லை.

 

   1958ல் (மீள்பதிப்பாக) வெளிவந்த The Concise Oxford English Dictionary-ஐ அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டு, 1963ல் வெளியிடப்பட்ட ஓர் அகராதி: சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம். ஆங்கிலத்தில் ஆண்டுதோறும் 400 சொற்கள் புதுக்கப் புகுவதைக் கருத்தில் கொள்ளும்பொழுது, இந்த ஆங்கிலம்-தமிழ் அகராதியில் 20,000 ஆங்கிலச் சொற்கள் துண்டு விழுவது தெரியும். இவ்வாறு, எமக்குக் கிடைக்கும் ஆங்கிலம்-தமிழ் அகராதிகளின் சொல்வளமும் பொருள்வளமும் பெரிதும் மட்டுப்பட்டவை. தற்பொழுது புதிய பாணியில் எடுத்தாளப்படும் ஓர் ஆங்கிலச் சொல்லைப் பெயர்ப்பதற்கு, எந்த ஆங்கிலம்-தமிழ் அகராதியும் கைகொடுத்தல் அரிது. உலகளாவிய தரவுப் பரிமாற்றத்தின் பெருக்கத்துக்கும், திட்பத்துக்கும், வேகத்துக்கும் எந்த ஆங்கிலம்-தமிழ் அகராதியாலும் ஈடுகொடுக்க முடியாது. பழைய அகராதிகளை நம்பி, பழைய விடயங்களை மொழிபெயர்ப்பதே கடினம். புதிய விடயங்களை மொழிபெயர்ப்பது அதனிலும் கடினம்.

 

          ஆங்கிலத்தில்கூட இதே பிரச்சனை உண்டு. சாக்கிரத்தீசின் தத்துவத்தை மீள்நோக்கத் தலைப்பட்ட ஓர் அமெரிக்க அறிஞர் கூறுகிறார்: மொழிபெயர்ப்புகளைக் கொண்டு ஏற்புடைய முறையில் அரசியல், தத்துவ அனுமானங்களை எவராலும் மேற்கொள்ள முடியாது என்பதை நான் கண்டுகொண்டேன். மொழிபெயர்ப்பாளர்கள் திறமையற்றவர்கள் என்பதல்ல அதற்கான காரணம். கிரேக்க மொழிப் பதங்கள் – கேத்திரகணிதத்தில் கூறப்படுவதுபோல் – அவற்றுக்கு நிகரான ஆங்கிலப் பதங்களுடன் முற்றிலும் ஒத்திசையாமையே அதற்கான காரணம். ஆங்கிலத்தில் பருமட்டாகப் பொருந்தும் பல்வேறு பதங்களுள் ஒன்றைத் தெரிவுசெய்யவேண்டிய நிர்ப்பந்தம் மொழிபெயர்பாளருக்கு ஏற்படும். கிரேக்க மொழியிலுள்ள கருதுபொருட் பதம் ஒன்றை விளங்கிக்கொள்ள முற்படும் ஒருவர், கிரேக்க மொழியிலேயே அந்தப் பதத்துடன் மல்லாடி அதனை விளங்கிக் கொள்வதற்குப் போதிய அளவுக்காவது கிரேக்க மொழியைக் கற்றிருக்க வேண்டும். அந்தப் பதம் உணர்த்தக்கூடிய கருத்துகள், நயம் அனைத்தையும் ஒருவரால் அந்த மொழியிலேயே புரிந்துகொள்ள முடியும்:


I found that one could not make valid political or philosophical inferences from translations, not because the translators were incompetent, but because the Greek terms were not fully congruent – as one would say in geometry- with their English equivalents. The translator was forced to choose one of several English approximations. To understand a Greek conceptual term, one had to learn at least enough Greek to grapple with it in the original, for only in the original could one grasp the full potential implications and color of the term -  I.F.Stone, The Trial of Socrates, Little Brown & Co., Boston-Toronto, 1988, p.x). 

 

  அவ்வாறே ஆங்கிலப் பதங்களை (1) ஆங்கிலத்திலேயே நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். (2) ஓர் ஆங்கிலம்-தமிழ் அகராதியிலோ சொல்தொகுதியிலோ காணப்படும் பொருள், அந்த விளக்கத்துடன் உடன்படுகிறதா என்று பார்க்க வேண்டும். (3) உடன்பட்டால், அதனை நாம் எடுத்தாளலாம். (4) உடன்படாவிட்டால், ஆங்கில விளக்கத்தின்படி அதனை நாம் செம்மைப்படுத்தலாம்.

 

         யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று முழங்கி, உலகளாவிய பண்பாட்டுப் பன்மையை விதந்துரைத்த கணியன் பூங்குன்றனாரின் வழித் தோன்றல்களாகிய தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தமிழ்மொழி போல் நெகிழ்ந்து நிலைகொள்ளக் கடமைப்பட்டவர்கள். எமது சொந்தக் காலில் நாம் நிற்கவும் வேண்டும், பிறர் கைகளை நாம் பற்றவும் வேண்டும். அதேவேளை, ஐயுறவு எம்மைத் தடுக்கவும் வேண்டும், ஆய்வு எம்மை முடுக்கவும் வேண்டும். அதனை விடுத்து, ‘எமது அறியாமையை நாம் தமிழின் வறுமை ஆக்கலாகாது’  ஹன்டி பேரின்பநாயகம், 1899-1977).

___________________________________________________________________________

மணி வேலுப்பிள்ளை                                                                                 2007-03-28

No comments:

Post a Comment