சுவிற்சர்லாந்து நாட்டு தாவோஸ் நகரில் நடைபெற்ற
உலக பொருளாததார அரங்கில்
கனடிய பிரதமர் மார்க் கார்னி
ஆற்றிய உரை
கனடாவும் முழு உலகமும் ஒரு திருப்புமுனையை அடைந்துள்ள இத்தருணத்தில், உங்களுடன் கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - இது ஒரு கடமையும் ஆகும்.
இன்று, உலக ஒழுங்கில் ஏற்பட்டுள்ள தெறிப்பு பற்றி, ஓர் இனிய கதையின் முடிவு பற்றி, ஒரு கொடிய மெய்ம்மையின் துவக்கம் பற்றி நான் உரையாற்றப் போகின்றேன். பெரிய வல்லரசுகளுக்கு இடையே நிலவும் கட்டுப்பாடுகள் எவையுமற்ற புவியரசியலில் காணப்படும் கொடிய மெய்ம்மையின் துவக்கம் பற்றி நான் உரையாற்றப் போகின்றேன்.
அதேவேளை, வேறு நாடுகள், குறிப்பாக கனடா போன்ற நடுத்தர வல்லரசுகள் வலிமை அற்றவை அல்ல என்பதை நான் உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். மனித உரிமைகளுக்கு மதிப்பு, வளம்பேணும் விருத்தி, தோழமை, இறைமை, அரசுகளின் ஆள்புலத் திண்மை போன்ற எமது விழுமியங்கள் பொதிந்த புதியதோர் ஒழுங்கினைக் கட்டியெழுப்பும் வல்லமை அவற்றுக்கு உண்டு.
வலிமை குறைந்தவர்களது வலிமையின் துவக்கம் நேர்மையே.
பெரிய வல்லரசுகள் போட்டியிடும் ஊழியில் நாம் வாழ்கிறோம். விதிவழி ஒழுங்கு என்பது மங்கிவருகிறது. வலிமை மிகுந்தவை தம்மால் இயன்றதைச் செய்கின்றன. வலிமை குறைந்தவை தாம் பட்டறிய வேண்டியதைப் பட்டறிந்து வருகின்றன. இவை எல்லாம் அன்றாடம் எமக்கு நினைவூட்டப்படுகின்றன.
அனைத்துநாட்டு உறவுசார்ந்த இயற்கை நியதி, அதனை மீளவும் நிலைநிறுத்தும் என தூசிடைட்ஸ் (Thucydides) உதிர்த்த வாக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. இந்த நியதியை எதிர்கொள்ளும் நாடுகள் தமது உறவைப் பேணிக்கொள்வதற்காக, அந்த உறவைத் தொடர்வதற்காக, அதற்கு இடங்கொடுப்பதற்காக, தொந்தரவைத் தவிர்ப்பதற்காக அமைந்தொழுகுவதன் மூலம் தம்மைப் பத்திரப்படுத்திக் கொள்ளலாம் என்று நம்பத் தலைப்படுகின்றன.
அது நடக்காது.
அப்படி என்றால், நாம் என்ன செய்யலாம்?
செக்கொசிலோவேக்கிய நாட்டு அரசியலரங்கில் ஒரு மாற்றுக்கருத்தாளராக விளங்கிய வக்லாவ் ஹேவல் (Václav Havel) 1978ல் வலிமை அற்றவர்களின் வலிமை என்று தலைப்பிட்டு எழுதிய கட்டுரையில், ஓர் எளிய வினாவை எழுப்பினார்: பொதுவுடைமை முறைமை தன்னை எவ்வாறு பேணிக்கொள்கிறது?
ஒரு மரக்கறி வியாபாரியை வைத்து அவர் அதற்கு விடையளிக்கிறார். அவர் ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து, தனது சாளரத்தில் ஓர் அட்டையை இடுவார். அதில், “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுவீர்!” என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதை அவர் நம்பவில்லை. ஆனாலும், தொந்தரவை தவிர்ப்பதற்காகவும், அமைந்தொழுகுவதாகக் காட்டிக்கொள்வதற்காகவும், எல்லாத் தெருக்களிலும் எல்லா மரக்கறி வியாபாரிகளும் அப்படியே செய்வதனாலும், அந்த அடையை அவர் இடுகின்றார். இப்படித்தான் பொதுவுடைமை முறைமை நிலைநிற்கிறது.
வன்முறையால் மாத்திரமல்ல, தமக்குப் பொய்யெனத் தெரிந்த சடங்குகளில் பொதுமக்கள் பங்குபற்றுவதாலும் அம்முறைமை நிலைநிற்கிறது.
இதை “பொய்க்குள் வாழ்தல்” என்றார் ஹேவல். அந்த முறைமையின் மெய்ம்மையிலிருந்து அதன் வலிமை பிறக்கவில்லை. அது மெய் என்பது போல் செயற்படுவதற்கு அனைவரும் விரும்புவதிலிருந்தே அதன் வலிமை பிறக்கிறது. அதன் வலுவீனத்துக்கும் அதுவே தோற்றுவாய். ஒருவர் அப்படிச் செய்வதை நிறுத்தும்பொழுது-அந்த மரக்கறி வியாபாரி அந்த அட்டையை அகற்றும்பொழுது - அந்த மாயை அகலத் துவங்குகிறது.
வணிக நிறுவனங்களும் நாடுகளும் தமது அட்டைகளை அகற்றவேண்டிய தருணம் இது.
பல தசாப்தங்களாக கனடா போன்ற நாடுகள் விதிவழி உலக ஒழுங்கு என்று நாம் பாடமாக்கிய ஒழுங்கின்படி செழித்தோங்கின. அதன் நிறுவனங்களில் நாம் இணைந்துகொண்டோம். அதன் நெறிகளைப் போற்றினோம். எதிர்பார்த்தபடி நிகழும் வாய்ப்பினால் நன்மை அடைந்தோம். அதன் பாதுகாப்பில், விழுமிய வழியில் எமது வெளிநாட்டுக் கொள்கைகளை எம்மால் வகுக்க முடிந்தது.
விதிவழி உலக ஒழுங்கின் கதை ஓரளவு பொய் என்பதையும், வலிமைமிகுந்த நாடுகள் வசதிப்படி தமக்கு விதிவிலக்களிக்கும் என்பதையும், வணிக விதிகள் ஏறுமாறாக நடைமுறைப்படுத்தப்பட்டதையும், குற்றஞ்சாட்டும் அல்லது பாதிப்புக்கு உள்ளாகும் நாட்டைப் பொறுத்து அனைத்துநாட்டுச் சட்டம் வேறுபட்ட விறலுடன் செல்லுபடியாகிய விதத்தையும் நாம் அறிந்திருந்தோம்.
இப்புனைகதை எமக்குப் பயன்பட்டது. திறந்த கடல் வழிகள், நிலைத்த நிதிக் கட்டமைப்பு, கூட்டுப் பாதுகாப்பு, பிணக்குத் தீர்வுக் கட்டுக்கோப்புக்கான ஆதரவு தொடர்பான பணிகளை ஆற்றுவதற்கு குறிப்பாக அமெரிக்க மேலாதிக்கம் துணைநின்றது.
ஆதலால், சாளரத்தில் நாம் அட்டையை இட்டு வைத்தோம். சடங்குகளில் பங்குபற்றினோம். சொற்சிலம்பத்துக்கும் மெய்ம்மைக்கும் இடையே காணப்பட்ட வெளிகள் பற்றிக் குறைகூறுவதைப் பெரிதும் தவிர்த்து வந்தோம்.
இந்தப் பேரம் இனிச் சரிவராது.
இதோ, நேரடியாகக் கூறுகின்றேன்: மாறும் காலத்தின் நடுவில் அல்ல, ஒரு தெறிப்பின் நடுவில் நாம் நிற்கின்றோம்.
நிதி, நலவாழ்வு, எரிபொருள், புவியரசியல் துறைகளில் கடந்த இரு தசாப்தங்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட நெருக்கடிகள், உலகம் பின்னிப் பிணைவதால் விளையும் ஆபத்துகளைப் புலப்படுத்தின.
மிக அண்மையில் பெரிய வல்லரசுகள் பொருளாதார ஒருங்கிணைவை ஓர் ஆயுதமாகவும், தருவிப்பு வரிகளை (tariffs) ஒரு நெம்புகோலாகவும், நிதிக் கீழ்க்கட்டமைப்பை ஒரு பலவந்தமாகவும், வழங்கல் கட்டுக்கோப்பை சிதைவுறும் நடைமுறையாகவும் பயன்படுத்தத் துவங்கின.
ஒருங்கிணைவின் மூலம் நீங்கள் மண்டியிட நேருமாயின், ஒருங்கிணைவு என்பது அனைவருக்கும் நன்மை பயக்கும் எனும் “பொய்யுக்குள் நீங்கள் வாழ்வது” எங்ஙனம்?
உலக சுகாதார அமைப்பு, ஐ. நா., தரப்புகளின் மாநாடு (COP) போன்ற பல்தரப்பு நிறுவனங்கள் மீது நடுத்தர வல்லரசுகள் தங்கியிருக்கின்றன. கூட்டுச்சேர்ந்து பிரச்சனையைத் தீர்த்தல் என்பது பெரிதும் குன்றிவிட்டது.
ஆதலால், பல நாடுகள் ஒரே முடிபுகளை எடுக்கின்றன: எரிபொருள், உணவு, அதிமுக்கிய கனியங்கள், நிதி, வழங்கல் கட்டுக்கோப்புத் துறைகளில் தந்திரோபாயமான முறையில் தன்னாட்சியை அவை பெருக்கிக்கொள்ள வேண்டும்.
இது புரிந்துகொள்ளக்கூடிய வேட்கையே. தனக்கு உணவூட்டவோ, தனக்கு வேண்டிய எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவோ, தன்னைப் பாதுகாக்கவோ முடியாத ஒரு நாடு தான் விரும்பிய வண்ணம் செயற்படல் அரிது. இனிமேல் விதிகள் உங்களைக் காக்காதபொழுது, நீங்களே உங்களைக் காக்க வேண்டும் அல்லவா?
அதேவேளை, எங்களை இது எங்கே இட்டுச்செல்கிறது என்பதை நாங்கள் கண்ணைத் திறந்து பார்க்க வேண்டும். கோட்டைகளால் ஆன உலகம் மிகவும் ஏழ்மைப்பட்டு, நலிபட்டு, வளம் பேணவியலாது குன்றிவிடும்.
இன்னோர் உண்மையும் உண்டு: பெரிய வல்லரசுகள் தமது வலிமையையும் நலன்களையும் தங்குதடையின்றி முன்னெடுப்பதற்காக, விதிகளையும் விழுமியங்களையும் கடைப்பிடிப்பதாகப் பாசாங்கு செய்வதையே கைவிட்டால், பேரமுறைமையால் ஆதாயம் ஈட்டுவது மிகவும் கடினமாகும்.
பொருளாதாரம் உறுதிகுன்றாவாறு காப்பதற்காக நட்புநாடுகள் தமது பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்தும், காப்புறுதியை நாடும், தெரிவுகளைப் பெருக்கும். இது நாட்டின் இறைமையை - முன்னொரு காலத்தில் விதிவழி ஓங்கிய இறைமையைக் கட்டியெழுப்பும்; நெருக்குதலை எதிர்த்துநிற்கும் ஆற்றலில் நாட்டிறைமை மேன்மேலும் நிலைகொண்டிருக்கும்.
நான் கூறியது போல் வழமையான முறையில் ஆபத்தை எதிர்கொள்வதற்கு ஒரு விலை செலுத்த வேண்டியுள்ளது. அதேவேளை, தந்திரோபாய தன்னாட்சி, இறைமை என்பவற்றைப் பகிரவும் முடியும். ஒவ்வொருவரும் தத்தம் கோட்டையைக் கட்டுவதை விடுத்து, கூட்டுச்சேர்ந்து மீள்திறனில் முதலிடுவது மிகவும் மலிவானது. நியமங்களைப் பகிர்ந்தால், சின்னாபின்னப்படுவது குறையும். ஒருவரை ஒருவர் இட்டுநிரப்பினால், கூட்டுத்தொகை நலம் பயக்கும்.
கனடா போன்ற நடுத்தர வல்லரசுகள் எதிர்கொள்ளும் வினா, இப்புதிய மெய்ம்மைக்கு நெகிழ்ந்து கொடுப்பதா என்பதல்ல; நாங்கள் நெகிழ்ந்து கொடுத்தே ஆகவேண்டும். வெறுமனே மதில்களை உயர்த்திக் கட்டுவதன் மூலம் நெகிழ்ந்து கொடுப்பதா, அல்லது இன்னும் மிகுந்த வேட்கையுடன் ஏதாவது செய்வதா? இதுவே நாம் விடை காணவேண்டிய வினா.
சம்பந்தப்பட்ட அறைகூவலை முதன்முதலில் செவிமடுத்த நாடுகளுள் கனடாவும் ஒன்று. உடனே எமது தந்திரோபாய நிலைப்பாட்டை நாங்கள் அடியோடு மாற்றிக்கொண்டோம்.
எங்கள் புவியமைவும், நட்புறவும் தம்பாட்டில் எம்மைப் பாதுகாத்து வளங்கொழிக்க வைக்கும் எனும் பழைய, இதமான எண்ணம் இனிமேல் செல்லாது என்பது கனடிய மக்களுக்குத் தெரியும்.
அலெக்சாந்தர் ஸ்டப் (Alexander Stubb) “விழுமிய வழியில் மெய்ம்மை” என்று எதனைக் குறிப்பிட்டாரோ, அதன்படியே எமது புதிய அணுகுமுறை அமையும். அதாவது, செயல்நோக்குடன் நாம் நெறிநிற்போம்.
இறைமை, ஆள்புலத் திண்மை, ஐ. நா. சாசனத்துக்கு அமைவாக அன்றிப் பலவந்தம் பயன்படுத்துவதைத் தவிர்த்தல், மனித உரிமைகளை மதித்தல் போன்ற அடிப்படை விழுமியங்களைப் பேணுவதற்கு உறுதிபூண்டு நாம் நெறிநிற்போம்.
முன்னேற்றம் என்பது பெரிதும் படிப்படியாகவே ஏற்படும்; ஒவ்வொருவரின் நலன்களும் வேறுபடும்; பங்காளர் ஒவ்வொருவரும் எமது விழுமியங்களைப் பகிர்வதில்லை என்பவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்பவர்கள் என்ற வகையில் நாம் செயல்நோக்குடையவர்கள். நாங்கள் விழிதிறந்து, பரந்துபட்டு, தந்திரோபாயமாகச் செயற்படுகின்றோம். நாம் விரும்பும் உலகம் தோன்றும் வரை காத்திருக்காமல், உள்ளது உள்ளபடியே உலகத்தை நாம் முன்னின்று எதிர்கொள்கின்றோம்.
கனடா வெளிநாடுகளுடன் பூணும் உறவுகளின் ஆழத்தில் எமது விழுமியங்கள் புலப்படும் வண்ணம் எமது உறவுகளை நாம் வரையறுத்து வருகின்றோம். உலக ஒழுங்கு தளம்பி வருவதையும், அது தோற்றுவிக்கும் ஆபத்துகளையும், அடுத்து நேர்வதில் எமக்குள்ள கரிசனையையும் கருத்தில் கொண்டு, பரந்துபட்ட முறையில் எமது செல்வாக்கைப் பெருக்கும் அலுவல்களில் ஈடுபடுவதற்கு நாம் முதன்மை அளிக்கின்றோம்.
வெறுமனே எமது விழுமியங்களின் வலிமையில் மட்டும் இப்பொழுது நாம் தங்கியிருக்கவில்லை. எமது வலிமையின் பெறுமதியிலும் நாம் தங்கியிருக்கின்றோம்.
அந்த வலிமையை எமது நாட்டுக்குள் நாம் பெருக்கி வருகின்றோம்.
எனது அரசாங்கம் பதவியேற்ற பிறகு வருமானம், முதலீட்டு ஆதாயம், வணிக முதலீடு மீதான வரிகளை நாம் குறைத்துள்ளோம். மாகாணங்களுக்கு இடையேயான வணிகத்துக்கு நடுவண் அரசு இட்ட தடங்கல்கள் அனைத்தையும் அகற்றியுள்ளோம். எரிபொருள், செயற்கை நுண்மதி, அதிமுக்கிய கனியங்கள், புதிய வணிக வழிகள், மற்றும் பல துறைகளில் 1 இலட்சம் கோடி (a trillion) டாலர் முதலீட்டை துரிதப்படுத்தியுள்ளோம்.
2030ம் ஆண்டு வாக்கில் எமது பாதுகாப்புச் செலவினத்தை இரட்டி மடங்காக்க நடவடிக்கை எடுக்கின்றோம். எமது உள்நாட்டுக் கைத்தொழில்களை விருத்திசெய்யும் விதமாக அப்படிச் செய்கின்றோம்.
வெளிநாடுகளில் எமது நடவடிக்கைகளை நாம் கடுகதியில் பன்முகப்படுத்தி வருகின்றோம். ஐரோப்பிய பாதுகாப்பு நடவடிக்கை (SAFE), ஐரோப்பிய பாதுகாப்புக்கான பொருள்வகைகளைத் தருவிக்கும் ஏற்பாடுகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு முற்றுமுழுதான தந்திரோபாய கூட்டுமுயற்சிக்கு நாம் உடன்பட்டுள்ளோம்.
கடந்த ஆறு மாதங்களில் நான்கு கண்டங்களில் வேறு வணிக, பாதுகாப்புப் பேரங்கள் பன்னிரண்டில் நாம் ஒப்பமிட்டுள்ளோம்.
கடந்த சில நாட்களில் சீனாவுடனும், கட்டாருடனும் சேர்ந்து புதிய தந்திரோபாய கூட்டுமுயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
இந்தியா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் (ASEAN), தாய்லாந்து, பிலிப்பைன்சு, தெற்குப் பொதுச் சந்தை (Mercosur) என்பவற்றுடன் சுதந்திர வணிக ஒப்பந்தம் செய்ய நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
விழுமியங்களையும், நலன்களையும் அடிப்படையாகக் கொண்டு, புவியரசியற் பிரச்சனைகளத் தீர்க்க உதவும்பொருட்டு, வெவ்வேறு பிரச்சனைகளுக்கு வெவ்வேறு கூட்டணிகளில் சேர்ந்து, வெவ்வேறு கோணங்களில் நாம் செயற்பட்டு வருகின்றோம்.
உக்ரேனுக்கு உதவ விழையும் நாடுகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மைய நாடுகளுள் கனடாவும் ஒன்று. தேசிய வருமான விகிதாசாரப்படி உக்ரேன் பாதுகாப்புக்கு மிகவும் பெருந்தொகைப் பணம் வழங்கி உதவும் நாடுகளுள் கனடாவும் ஒன்று.
ஆக்டிக் புலத்தின் இறைமையைப் பொறுத்தவரை, நாம் கிறீன்லாந்துடனும் தென்மார்க்குடனும் உறுதியாக இணைந்து நின்று, கிறீன்லாந்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அவற்றுக்குள்ள தனித்துவமான உரிமையை முற்றிலும் ஆதரிக்கின்றோம். (நேட்டோவின்) 5ம் உறுப்புரையின்படி செயற்பட நாம் பூண்ட உறுதி குலையப் போவதில்லை.
நேட்டோவின் வடக்கு, மேற்குப் புலங்களை மேலும் பத்திரப்படுத்துவதற்காக ஐரோப்பிய, பால்டிக் நாடுகள் உட்பட எமது நேட்டோ நேயநாடுகளுடன் நாம் ஒத்துழைத்து வருகின்றோம். தொடுவானுக்கு மேலாகப் படம்பிடிக்கும் கதிர்மானி, நீர்மூழ்கிக் கப்பல்கள், வான்கலங்கள், தரைப்படைகள் உட்பட்ட துறைகளில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு கனடா முதலீடு செய்துள்ளது. கிறீன்லாந்து குறித்து தருவிப்பு வரி விதிப்பதை கனடா வன்மையாக எதிர்க்கிறது. ஆர்க்டிக் புலத்தைப் பாதுகாத்து, வளங்கொழிக்க வைக்கும் பொதுக் குறிக்கோளை எய்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தும்படி கனடா கேட்டுக்கொள்கின்றது.
பல்தரப்பு வணிகத்தைப் பொறுத்தவரை, பசுபிக் நாடுகளின் கூட்டமைப்புக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே பாலம் அமைத்து, 150 கோடி மக்களை உள்ளடக்கிய புதிய வணிகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை நாம் ஆதரிக்கின்றோம்.
அதிமுக்கிய கனியங்களைப் பொறுத்தவரை, 7 நாடுகளின் குழுமத்தை (G7) அடிப்படையாகக் கொண்டு, கனிய வழங்கலை ஒருமுகப்படுத்தாமல், பன்முகப்படுத்துவதற்கு ஏதுவாக, கொள்வனவுக் கழகங்களை நாம் உருவாக்கி வருகின்றோம்.
செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, மேலாதிக்க அரசுகளுக்கும், வீக்கம் மிகுந்த இணைய வணிக தாபனங்களுக்கும் இடையே ஒன்றைத் தெரிவுசெய்யும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாவதைத் தவிர்ப்பதற்காக எம்மைப் போன்ற குடியாட்சி நாடுகளுடன் நாம் ஒத்துழைத்து வருகின்றோம்.
இது வெகுளித்தனமான பல்தரப்பு நிலைப்பாடுமல்ல, குறுநிறுவனங்கள் மீது தங்கியிருக்கும் கொள்கையுமல்ல. போதியளவு பொது நிலைப்பாட்டினைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகள் ஒவ்வொன்றுடனும், ஒவ்வொரு விடயத்திலும் ஒருங்கிணைந்து செயற்படும் கூட்டணிகளைக் கட்டியெழுப்பும் திட்டமே இது. சில விடயங்களில் மிகப் பெரும்பான்மையான நாடுகளை உள்ளடக்கும் திட்டம் இது.
இது வணிகம், முதலீடு, பண்பாடு என்பவற்றை ஊடறுத்து, பின்னிப்பிணைந்த கட்டுக்கோப்பு ஒன்றினைத் தோற்றுவிக்கும் திட்டமாகும். வருங்காலச் சவால்களையும் வாய்ப்புகளையும் எதிர்கொள்ள அவற்றை நாம் பயன்படுத்தவும் முடியும்.
நடுத்தர வல்லரசுகள் கூடிச்செயற்பட வேண்டும். அவை பந்தியில் அமராவிட்டால், இரையாக நேரும்.
பெரிய வல்லரசுகள் தனித்தியங்க வல்லவை. சந்தையில் செல்வாக்கு மிகுந்தவை. படைபலம் படைத்தவை. நிபந்தனை விதிக்க வல்லவை. நடுத்தர வல்லரசுகள் அப்படிப்பட்டவை அல்ல. ஒரு மேலாதிக்க வல்லரசுடன் நாம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்றால், நாம் வலுவற்ற நிலையில் இருந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்பது கருத்து. மேலாதிக்க வல்லரசு முன்வைப்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டியுள்ளது. மேலாதிக்க வல்லரசுக்கு அதிக இடங்கொடுப்பதில் எம்மிடையே நாம் போட்டியிட நேர்கிறது.
இது இறைமை அல்ல. இது அடிபணிவை ஏற்கும் இறைமையின் செயல். Calendar
பெரிய வல்லரசுகள் போட்டியிடும் ஓருலகில், இடைப்பட்ட நாடுகளுக்கு ஒரு தெரிவுண்டு: பெரிய வல்லரசுகளின் தயவை ஈட்டிக்கொள்வதற்காக இடைப்பட்ட நாடுகள் தம்மிடையே போட்டியிடுவது ஒன்று; அல்லது இடைப்பட்ட நாடுகள் ஒருங்கிணைந்து மூஞ்சையில் அடித்தால் போல் ஒரு மூன்றாவது பாதையை உண்டாக்குவது மற்றது.
நியாயம், நேர்மை, விதிகள் பொதிந்த வலிமையை நாம் கூட்டுச்சேர்ந்து கையாள முன்வந்தால், அந்த வலிமை நின்றுபிடிக்கும் என்ற உண்மையை எமக்கு மறைக்கும் விதமாக, பெரிய வல்லரசுகளின் படைபலமும் பலவந்தமும் மேலோங்குவதற்கு நாம் இடங்கொடுக்கக் கூடாது.
இது திரும்பவும் என்னை ஹேவலிடம் கொண்டுசெல்கிறது.
நடுத்தர வல்லரசுகளைப் பொறுத்தவரை, “மெய்க்குள் வாழ்தல்” என்பது எவ்வாறு பொருள்படும்? உள்ளபடியே மெய்ம்மையை வரையறுப்பது என்று பொருள்படும்; “விதிவழி உலக ஒழுங்கு” என்பது விளம்பரப்படுத்தப்பட்டபடியே இன்னமும் செயற்படுவதாக எண்ணி அதைக் கூவியழைப்பதை நிறுத்துவது என்று பொறுள்படும்; சம்பந்தப்பட்ட முறைமையை அதன் பெயரைச் சொல்லி அழைப்பது என்று பொருள்படும்: பெரிய வல்லரசுகளுக்கு இடையே போட்டி மும்முரமடைந்த காலகட்டத்தில், மிகவலிமை படைத்த வல்லரசு, பொருளாதார ஒருங்கிணைவை ஒரு பலவந்த ஆயுதமாகப் பயன்படுத்தி, அதன் சொந்த நலன்களை ஈட்டிக்கொண்டது என்று பொருள்படும்.
நெறிநிற்றல் என்று பொருள்படும்; நேய நாடுகளுக்கும் போட்டி நாடுகளுக்கும் ஒரே நியமங்களைப் பயன்படுத்தல் என்று பொருள்படும். ஒரு திசையிலிருந்து வரும் பொருளாதார மிரட்டலைக் கண்டிக்கும் அதே நடுத்தர வல்லரசுகள், மறு திசையிலிருந்து மிரட்டல் வரும்பொழுது வாய் பொத்திக்கொள்வது, சாளரத்தில் அட்டை இடுவதற்கு நிகராகும்.
நாம் எதை நம்புவதாக மார்தட்டிக்கொள்கிறோமோ, அதை விருத்திசெய்தல் என்று பொருள்படும். பழைய ஒழுங்கு மறுபடி நிலைநிறுத்தப்படுவதற்குக் காத்திராமல், விபரிக்கப்பட்டவாறு செயற்படும் நிறுவனங்களையும், உடன்படிக்கைகளையும் உருவாக்கல் என்று பொறுள்படும்.
பலவந்தத்தை கைகூடச்செய்யும் நெம்புகோலைக் குறுக்குவது என்று பொருள்படும். ஒவ்வோர் அரசாங்கமும் வலிமைவாய்ந்த உள்நாட்டுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு என்றென்றும் முதன்மை அளிக்க வேண்டும். அதை உலகளாவிய முறையில் பன்முகப்படுத்துவது வெறுமனே பொருளாதார மதிநுட்பம் மாத்திரமல்ல; நேரிய வெளிநாடுக் கொள்கைக்கு இடும் அத்திவாரமும் ஆகும். பதிலடியால் பாதிக்கப்படும் நிலையைக் குறைப்பதன் மூலமே நெறிநிற்கும் உரிமையை நாடுகள் ஈட்டிக்கொள்கின்றன.
உலகத்துக்கு வேண்டியது கனடாவில் உண்டு. கனடா ஓர் எரிபொருட் பேரரசு. அதிமுக்கிய கனியவகைகள் இங்கு பரந்து படிந்துள்ளன. உலகத்திலேயே கல்வியறிவு மிகுந்தவர்கள் இங்கு வாழ்கிறார்கள். உலகின் மிகப்பெரிய, செப்பநுட்பம் மிகுந்த ஓய்வூதிய முதலீடுகள் கொண்ட நாடுகளுள் கனடாவும் ஒன்று. மூலதனமும், திறமையும், தீர்க்கமாகச் செயற்படுவதற்கான பாரிய அரசிறை வருமதியும் எம்மிடம் உண்டு.
பலரும் ஆசைப்படும் விழுமியங்களும் எம்மிடம் உண்டு. கனடிய சமூகம் ஒரு பன்மைச் சமூகம். செவ்வனே செயற்படும் சமூகம். எமது பொது சதுக்கம் கலகலப்பானது, பல்வகைப்பட்டது, சுதந்திரமானது. கனடிய மக்கள் வளம்பேணி வாழ உறுதி பூண்டவர்கள்.
கனடா ஓர் உறுதிவாய்ந்த, நம்பத்தகுந்த பங்காளி நாடு - நீடித்த காலத்துக்கு நெடுங்கால உறுவுகளைப் பேணிவரும் பங்காளி நாடு. கனடாவில் வேறொன்றும் உண்டு: நடப்பதை அறிந்துபுரிந்து, அதற்கிணங்கச் செயற்படும் திடசித்தம் உண்டு.
மேற்படி பொருளாதாரத் தெறிப்புக்கு நெகிழ்ந்துகொடுப்பது மட்டும் போதாது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். உலகம் எப்படி இருக்கிறதோ, அப்படியான உலகத்துடன் நாம் நேர்மையாக ஒழுகவும் வேண்டும்.
சாளரத்திலிருந்து அட்டையை நாம் அகற்றுகின்றோம்.
பழைய ஒழுங்கு திரும்பிவரப் போவதில்லை. அதையிட்டு நாம் துயரங் கொண்டாடக் கூடாது. நினைந்துருகுவது ஒரு தந்திரோபாயம் ஆகாது.
எவ்வாறாயினும், இந்த முறிவிலிருந்து, நலமும் பலமும் நியாயமும் மிகுந்த ஒன்றை எம்மால் கடியெழுப்ப முடியும்.
கோட்டைகளால் அமைந்த உலகத்தில் மிகவும் அதிக இழப்புக்கு உள்ளாகக்கூடிய நடுத்தர வல்லரசுகளுக்கு இட்ட பணி அது; நேரிய ஒத்துழைப்பினால் அமைந்த உலகத்தில் அதிக ஆதாயம் ஈட்டக்கூடிய நடுத்தர வல்லரசுகளுக்கு இட்ட பணி அது.
வலிய நாடுகளிடம் அவற்றின் வலிமை உண்டு. ஆனால், எம்மிடமும் ஒன்றுண்டு - பாசாங்கு பண்ணுவதை நிறுத்தி, மெய்ம்மையை வரையறுத்து, உள்நாட்டில் எமது வலிமையைப் பெருக்கி, கூட்டுச்சேர்ந்து செயற்படும் வல்லமை எம்மிடம் உண்டு.
அதுவே கனடாவின் பாதை. அதை வெளிப்படையாகவும், நம்பிக்கையோடும் நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். எம்முடன் கூடி நடைபயில விரும்பும் நாடு எதற்கும் விரிந்து கிடக்கும் பாதை இது (Mark Carney, World Economic Forum, Davos, 2026, translated by Mani Velupillai, 2028-01-23).
No comments:
Post a Comment