விசைப்பலகை நாய்களும்
எண்மக் கட்டாரிகளும்
ராணி விக்கிரமதுங்கா
அனுராவின் சீர்திருத்த அரசாங்கத்துக்கு எதிரான
பொய்-புரளிகளின் தோற்றுவாய்
ஜனாதிபதி அனுர குமர திசாநாயக்காவினதும், அவரது கூட்டரசாங்கத்தினதும் எழுச்சி, இலங்கை அரசியலில் ஏற்பட்ட ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனை ஆகும்.
எனினும், இலங்கை அரசியலை மாற்றியமைக்க அவரது அரசாங்கம் அளித்த வாக்குறுதியை அனைவரும் வரவேற்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியையும், இலங்கை பொதுசன முன்னணியையும் சேர்ந்தவர்கள் உட்பட, எஞ்சிமிஞ்சிய மூத்த கடும்பிடிவாதிகளாலும், அவர்களது ஊடகத் தரப்புகளாலும் செவ்வனே ஒருங்கிணைக்கப்பட்டு, மிகுந்த நிதியுதவியுடன், இடைவிடாது மேற்கொள்ளப்பட்டுவரும் நச்சுத்தனமான பொய்-புரளிகளின் முனைப்பு, புதிய அரசாங்கத்தின் ஒவ்வொரு முன்னெடுப்பையும் களங்கப்படுத்தும் நோக்கம் கொண்டதாகவே தென்படுகிறது.
பெரிதும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படும் இப்புரளிகளில், பொய்களும் பிழைகளும் நிரம்பி வழிகின்றன. அனைவரும் அறிந்த தந்திரம் ஒன்றில், இப்புரளிச் சூறாவளி மையம் கொண்டுள்ளது: அதாவது அரசாங்கத்தை எள்ளிநைகையாடுவது, மானங்கெடுத்துவது, உறுதிகுலைய வைப்பது…
இதில் ஈடுபடும் ஊடகங்கள் பெரிதும் சுயநல அரசியல் தரப்புகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை. ஆதலால், ஆதாரத்தை விடுத்து, சொந்த நிகழ்ச்சித் திட்டத்தின்படியே அவை கதையளக்கின்றன. இழந்த மானத்தை மீட்கத் துடிக்கும் அரசியல்வாதிகளே இவ்வூடகக் கூட்டுத்தாபனங்களை நடத்தி வருகிறார்கள்.
Facebook, TikTok, WhatsApp போன்ற எதிரொலிக் கூடங்களை அவை பயன்படுத்தி வருகின்றன. உண்மையை விடுத்து, உணர்ச்சியைத் தூண்டி, துணுக்குளைக் கொட்டி, சீற்றத்தை ஊட்டி விடுக்கப்படும் அஞ்சல்கள் இணைய வாயிலாக விளாசிப் பரவுகின்றன.
.
இந்த விசைப்பலகை நாய்கள் ஆற்றும் பணி தெட்டத்தெளிவாகத் தெரிகிறது: அதாவது அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் அனைத்தையும் எள்ளிநகையாடுவது; அதன் தலைவர்களது காலை வாரிவிடுவது; மக்களிடையே குழப்பத்தை விதைப்பது; மிகைப்படுத்தி, இட்டுக்கட்டி, உருட்டிப்புரட்டுவது…
அரசாங்கத்தின்மீது தொடுக்கப்படும் பரந்துபட்ட, பல்முனைத் தாக்குதல்களுள் ஒன்று, அதன்மீது இடைவிடாது சேற்றை வாரி இறைப்பது. குறிப்பாக ஜே. வி. பி. க்கும் அதன் கூட்டுக் கட்சிகளுக்கும் இடையே நிலவும் உறவைக் குறிகுவைத்து, ஆளும் கூட்டமைப்பின் உள்ளே பிணக்கைத் தோற்றுவிப்பது இன்னொரு தந்திரம்.
ஜே. வி. பி. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சாகல ரத்நாயக்காவுக்கும் இடையே இரகசிய சந்திப்புகள் இடம்பெறுவதாகக் கதையளக்கப்படுகின்றது. ஐயுறவை விதைக்கும் நோக்குடன் அத்தகைய கதைகள் தந்திரோபாயமான முறையில் இட்டுக்கட்டப்படுகின்றன.
ரோகித ராஜபக்சாவின் செய்மதித் தொடர்புத் திட்டம் பற்றி பிரதமர் ஹரிணி அமரசூரியா ஓர் அறிக்கையை விடுத்தார். பிறகு அமைச்சர் வசந்த சமரசிங்கா அதற்கு விளக்கமளித்தார். அரசாங்கம் உள்ளுக்குள் தடுமாறுகின்றது என்று பொருள்படும் வண்ணம், அத்தகைய விளக்கங்கள் கூடத் திரித்து வெளியிடப்பட்டன.
அத்துடன், மூடநம்பிக்கை மீண்டும் ஓர் அரசியற் கருவியாக மேலோங்குவதும் எம்மைத் துணுக்குற வைக்கிறது. முந்திய ராஜபக்ச ஆட்சிபீடங்களைச் சூழ்ந்த கள்ளத் தேர்தல் களத்தை நினைவுறுத்தும் வண்ணம் செய்வினை பற்றிய முணுமுணுப்புகள் திரும்பவும் காதில் விழுகின்றன.
எதிராளர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்படுகின்றன. யானையின் அங்கங்களை வைத்து மாய்மாலச் சடங்குகள் நடத்தப்படுவதாகவும் கதைகள் அடிபடுகின்றன. பலிக்கும் எனும் நம்பிக்கையில் இத்தகைய விழல்கள் புரியப்படுகின்றன.
தமது செல்வாக்கு குன்றிவிடும் என அஞ்சுவோரின் ஆற்றாமையை இது அம்பலப்படுத்துகிறது. மேற்படி விழல்கள் இன்னமும் ஆட்களைக் கவருகின்றன. மிரட்டி அரசியல் புரிந்த காலகட்டத்தின் எச்சமிச்சத்தை அவை புலப்படுத்துகின்றன.
செயலளவில் முற்றிலும் சரியான திசையில் செல்லும் அரசாங்கத்துக்கு அத்துணை எதிர்ப்புக் காட்டப்படுவது எதற்காக? ஆள்வதாகக் கூறி மக்களுக்கு இழைக்கப்பட்ட பற்பல பழிபாவங்களும், அவர்களின் மனக்குறைகளும் கொண்ட பல்லவியே எமது கடந்தகாலம். அரசின் ஆதரவுடன் இழைக்கப்படும் குற்றங்களையும், ஊழலையும், நண்பர்க்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதையும் இன்று நாம் காணவில்லை.
பொருளாதாரத்தை நொடிக்கவைத்த உண்டியல் மோசடிகள், அரசாங்கத்தை 160 கோடி ரூபா நட்டப்படவைத்த சீனிவரி மோசடிகள், ஒழுங்குமீறி வழங்கப்படும் கேள்விப் பத்திரங்கள், பின்கதவுப் பேரங்கள் எதுவும் இடம்பெவில்லை. முதலீட்டாளர்களிடம் அதியுச்ச தரகுத்தொகைகள் நாடப்படுவதுமில்லை, கேட்கப்படுவதுமில்லை.
கேடுசூழும் வெள்ளை வான்கள் தெருவழியே திரிந்து மாற்றுக்குரல் எழுப்புவோரைக் கடத்திச் செல்வதில்லை; ஊடகர்கள் காணாமல் போக்கடிக்கப்படுவதில்லை; அவர்கள் நடுத்தெருவில் வைத்துக் கொல்லப்படுவதுமில்லை; அரசின் ஆதரவுடன் இன, சமய பதற்றங்களுக்கு தூபம் இடப்படுவதில்லை; அரசியல் “எதிரிகள்” சிறையில் அடைக்கப்படுவதில்லை; சுயாதீனமும் தன்மானமும் கொண்ட காவல்துறை அதிகாரிகள் இடமாற்றப்படுவதில்லை.
காவல்துறையிலும், நீதித்துறையிலும் தலையீடு இல்லை; அரசியல்வாதிகள் காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரியின் கதிரையில் அமர்ந்திருந்து உத்தரவு பிறப்பிப்பதில்லை; சிறந்துவிளங்கும் தலைமை நீதியரசர்கள் மீது குற்றம் சுமத்தப்படுவதில்லை; உச்ச நீதிமன்ற முடிபுகள் இழித்துரைக்கப் படுவதில்லை.
ஆட்சியாளரும், குடும்பத்தவர்களும், நண்பர்களும் மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்காகச் செலவழித்து உலகவலம் புரிவதை இப்பொழுது நாம் கேள்விப்டுவதில்லை; சொந்தக் கிளுகிளுப்புக்காக அல்லது செல்லப் பிராணிகளை ஏற்றியிறக்குவதற்காக விமானங்கள் திசைதிருப்பப் படுவதில்லை;
அகந்தைக்கு உட்பட்டு, கோடிக்கணக்கான செலவில், வீண் உருப்படிகளை உண்டாக்கி, திறைசேரி வற்றும்படி, மீண்டும் மீண்டும், எதுவித முடிவுமின்றி, கட்டுப்பணம் செலுத்தப்படுவதில்லை.
தறுதலைப் புதல்வர்கள் கள்ளத்தனமாக ஈட்டிய ஆதாயத்தைக் கொண்டு வாங்கிய பந்தயக் கார்களில், மக்கள் திரளையும், மற்றவர்களின் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல், வீதித்தடைகளை மீறி, தறிகெட்ட முறையில் சவாரிசெய்வதை இப்பொழுது நாங்கள் காண்பதில்லை.
ஜனாதிபதியின் அல்லது அமைச்சர்களின் தறுதலைகள் இரவுவிடுதிகளில் துவக்குமுனையில் முகாமிட்டுக் கொட்டமடிப்பதில்லை. நாடாளுமன்றத்தின் 159 உறுப்பினர்களுள் சங்கிலித் திருடர்களோ, போதைமருந்து முதலாளிகளோ, கொலைகாரர்களோ கிடையாது.
எமது முதற் பார்வைக்கு அப்பழுக்கற்ற நிலைமையே இப்பொழுது தென்படுகிறது. எமது வாழ்நாளில் இத்தகைய நிலைமை தோன்றும் என நாம் எண்ணத் துணிந்ததில்லை. எனினும் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு நீடிக்கவே செய்கிறது.
மக்களின் மனக்குறைகள் சில புரிந்துகொள்ளத் தக்கவையே. வாழ்க்கைச் செலவும், வன்முறைக் குற்றங்களும் பெருகியிருப்பது கவலை அளிக்கிறது. ஆனாலும் மேற்படி தரப்புகள் அரசங்கத்தைக் கண்டிப்பதற்கு இவை காரணமல்ல என்பதைப் புரிந்துகொள்ள எவரும் ஒரு விற்பன்னராய் இருக்கத் தேவையில்லை.
தற்பொழுது கிளம்பியிருக்கும் எதிரலைக்கு அச்சமே தலையாய காரணம் என்பதை உணரக்கூடியதாக உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் முதல் மூத்த அதிகாரிகள் வரை கடந்தகாலக் குற்றங்களுக்கு உடந்தையாய் இருந்தவர்களின் நடவடிக்கைகள் தற்பொழுது சல்லடை போடப்பட்டு வருகின்றன. அவர்களுள் பலர் தலைமறைவாகி உள்ளதாக அறியப்படுகிறது. சிலர் பத்திரமாக வெளிநாடு செல்ல முண்டியடிப்பதாகத் தெரிகிறது.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி மீண்டும் களைகட்டியுள்ளது. ஊழல்-தடுப்பு புலன்விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பல தசாப்தங்களுக்குப் பின்னர் முதல் தடவையாகத் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, நீதிபாலிக்கப் பாடுபடும் ஓர் அரசாங்கத்தை உறுதிகுலைய வைப்பதிலேயே அவர்களின் அரசியல் எதிர்காலம் தங்கியிருக்கிறது.
பல தசாப்தகால வரலாற்றில் முதல் தடவையாக சொந்த ஆதாயத்துக்கு அரச யந்திரம் பயன்படுத்தப்படவில்லை. அதுவே ஒரு புரட்சிகரமான மாற்றம் அல்லவா! முன்னைய ஆட்சியில் அரசாங்கப் பதவி சொந்த ஆதாயத்துக்கு வழிவகுத்தது. இன்றைய ஆட்சியில் அரசாங்கப் பதவி சொந்த ஆதாயத்துக்கு வழிவகுக்கவில்லை. இன்றைய ஆட்சியில் தங்களுக்கு இடமில்லை என்றபடியால், முன்னையவர்கள் இன்றைய ஆட்சியை எதிர்க்கிறார்கள்.
ஒருகாலத்தில் ஊழல் மிகுந்த ஆட்சியில் வளங்கொழித்த அரசியற் கூட்டாளிகள், சந்தர்ப்பவாதிகள், பேரம்பேசுவோர் உள்ளடங்கிய இன்னொரு தனித்துவமான அணியும் இன்றைய ஆட்சிக்கு எதிரான இயக்கத்துக்கு முண்டு கொடுத்து வருகிறது.
தம்மை உபசரித்தவர்களால் கொழுக்க வைக்கப்பட்ட ஒட்டுண்ணிகள் போன்ற இந்த அணியினர் இன்று அரசியலதிகாரமும், அரசியலாதரவும் கிடைக்கப்பெறாத அரசியல் அநாதைகளாய் அலைந்து திரிகிறார்கள். முன்பு தாம் துய்த்த சலுகைகளை மீட்கும் வகை தெரியாமல், இவர்களும் அரசாங்கத்தைக் குறைகூறும் கும்பலுடன் சேர்ந்திருக்கிறார்கள்.
பழம்பெரும் கட்சிகளின் கடும்பிடிவாத விசுவாசிகளை உள்ளடக்கிய மூன்றாவது அணி ஒன்றும் அரசாங்கத்தை எதிர்த்து வருகிறது. இது பித்துப்பிடித்த ஓர் அடியார் குழாம். இவர்களுட் சிலர் கடந்த தேர்தலில் ஜனாதிபதி அனுர குமர திசாநாயக்காவையும் அவரது கூட்டணியையும் ஆதரித்தது உண்மையே.
பலர் ஆதாரத்துக்கோ நியாயத்துக்கோ நெகிழாதவர்கள். பல தசாப்தங்களாக “தீமையைக் கண்டுகொள்ளாதவர்களாகவும், தீமையைச் செவிமடுக்காதவர் களாகவும்” இருக்கும்படி பயிற்றப்பட்டவர்கள். தாம் விரும்பும் தலைவர்கள் தவறிழைத்தமைக்கு மேலதிகமான ஆதாரம் இருந்தும் கூட, தமது குருட்டுத்தனமான விசுவாசத்தை அவர்கள் நிலைநிறுத்தி வருகிறார்கள்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், அமெரிக்காவை மீண்டும் பெருமைவாய்ந்த நாடாக மாற்றும் இயக்கத்தின் அணிகள் கூட கசப்பான உண்மைகளை எதிர்கொள்ளத் துவங்கியிருக்கின்றன. இலங்கை விசுவாசிகளோ ஆளும்பேருமாக அறிதிறனின்றி, இயங்கும் வலுவற்ற, பொறி ஒன்றில் அகப்பட்டுள்ளார்கள். ஆட்கவர்ச்சிக்கு உட்பட்டு, திறனாய்வுச் சிந்தனையை விடுத்து, நெறிமுறையின் அடிப்படையில் தலைமையைக் கணிக்கும் ஆற்றலோ விருப்பமோ அற்றவர்களாய், குலவிசுவாசத்துள் மூழ்கியுள்ளார்கள்.
ஆளும் கூட்டணிக்குள் ஆதிக்கம் மிகுந்த ஜே. வி. பி. மீது நெடுங்காலமாகக் கடும்பகை பாராட்டுவோரும் இருக்கிறார்கள். 1971ம், 88ம், 89ம், 90ம் ஆண்டுகளில் நிகழ்ந்த வன்முறைக் கிளர்ச்சிகளின் விளைவாக நேர்ந்த பாதிப்பிலேயே அவர்களது ஐயுறவு பெரிதும் வேர்கொண்டுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் கிளர்ச்சியாளர்களால் நேரடியாகவோ, பரந்துபட்ட களேவரத்தினாலோ தாக்குண்டு பேரிழப்புகளுக்கு உள்ளாகி வருந்துவோர் பலர் இருக்கிறார்கள். இவை நியாயமான, வேதனை மிகுந்த நினைவுகள். அதே விதமாக அரச ஆதரவுடன் கூடிய கரும்பூனைகள், புரட்சிகர மக்கள் செஞ்சேனை போன்ற துணைப்படைக் குழுமங்கள் புரிந்த கொடுமையை ஒப்புக்கொள்ளாமல், இந்நிகழ்வுகள் பெரிதும் நினைகூரப்படுகின்றன.
அப்போதைய அரசியற் சூழ்நிலை இப்போது மறக்கப்படுகிறது அல்லது திட்டமிட்டுத் தவிர்க்கப்படுகிறது: ஓர் அரசியல் உபாயமாகவே ஜே. வி. பி. தலைமறைவாக இயங்க நேர்ந்தது. அவர்கள் அமைதிவழியில் கருத்துமுரண்பாட்டை முன்வைக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த குற்றங்களுக்கு ஆட்சியாளர் மற்றும் ஆட்சியாளரை எதிர்த்தவர்கள் ஆகிய இரு தரப்பினருமே பொறுப்பு.
ஆங்கிலம் பேசும் மேட்டிமைக் குழாம் ஒன்று பல தசாப்தங்களாக இலங்கையை ஆண்டு வந்துள்ளது. கட்டியாண்டோருடன் கொண்ட நெருக்கம் ஒரு பண்பாட்டு மூலதனத்தை அவர்களுக்கு வழங்கியது. அந்த நெடுங்கால வர்க்க, பண்பாட்டுப் படிநிலை இப்பொழுது தலைகீழாக மாறியமை மற்றும் சிலரை மிகவும் விசனப்படுத்தியுள்ளது.
பழம்பெரும் தலைநகரமாகிய அனுராதபுரத்தின் எல்லைக்குள், ஓர் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள தம்புத்தேகமை எனும் கிராமத்தில், கலப்பற்ற சிங்களம் பேசி, பாமர மக்களின் வேட்கைகளை அறுத்துரைக்கும் தலைவர் ஒருவர் தோன்றியமை, தமது அரசியலதிகாரத்துக்கு மட்டுமல்ல, ஆழ வேரூன்றிய சமூக ஒழுங்கிற்கும் ஆபத்து என்று சிலர் கருதுகிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை சிங்களத்தில் கத்தி, பாமரமக்களுக்கு உசுப்பேற்றும் பொடித்தரவழிகளைக் கொண்ட கும்பல் ஒன்று, தேசிய வாழ்வின் செல்நெறியைத் தீர்மானிப்பது ஓர் அபசாரம். தமது தந்தையரைப் பணிந்து, அவர்களைப் பின்தொடர்ந்து வயலுக்குக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நாட்டுப்புற அனுராக்கள் இன்று உலகத் தலைவர்களுடன் தோளோடு தோள்நிற்பது, அவர்களை சீற்றங்கொள்ள வைத்துள்ளது. இத்தகைய புதிய நிலைவரத்தை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
புதிய நிலைவரத்தில் ஏதோ ஒரு பிசகு உறுதியாகத் தெரிகிறது: செல்வச் சீமான்களின் வழித்தோன்றல்கள் அல்லவோ சாள்ஸ் மன்னரிடம் பாசாங்குடன் கூடிய பராமுகத்துடன் பேச்சுக்கொடுக்க வேண்டும்? அல்லது கோடாதிபதி ஈலோன் மஸ்க்குடன் இலங்கைத் தேநீர் அருந்தியபடி, கதையளந்து, முசுப்பாத்தி பண்ண வேண்டும்? அட, அட, உயர்பதவியில் அமரவும், உலகத் தலைவர்களுடன் கைகுலுக்கவும், போக்கிரிகளும் குற்றவாளிகளும் ஊர்வலமாகச் சிறைசெல்வதைக் கண்காணிக்கவும் ஒரு குழைக்காட்டானுக்கு என்ன துடுக்கு?
பிழையான கழுத்துமுடிச்சு, சாதாரண புறவுடை, தவறான ஆங்கிலச் சொற்றொடர், ஜனாதிபதியின் உயரம் கூட அற்பத்தனமாக விமர்சிக்கப்படுகின்றன. மறைந்துறையும் வர்க்கப் பாகுபாடு பெரிதும் அற்பத்தனமான விமர்சனங்களின் ஊடாக வெளிப்படுகிறது.
உருப்படியான விமர்சனங்கள் இல்லை என்பதை மட்டுமல்ல, விமர்சகர்களின் உள்ளார்ந்த பலவீனங்களையும் இத்தகைய அற்பத்தனமான கண்டனங்கள் அம்பலப்படுத்துகின்றன. உண்மையாகவே தவறிழைக்கப்படாவிடத்து, குறைகூறுவோர் அற்பத்தனமாக ஏளனம் செய்யவே நேரும். தவறிழைக்கப்பட்டதை மெய்ப்பிக்க முடியாவிடத்து, முக்கிய விடயங்களை விடுத்து, குணவியல்புகள் மீதும், அற்பவிடயங்கள் மீதும் இலக்கு வைக்க நேர்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஒரு வினோதமான ஒலியொளி நறுக்கு நினைவுக்கு வருகிறது. அதில் ஓர் ஓய்வுபெற்ற முதிய பாடசாலை ஆசிரியர் தோன்றுகிறார். அவர் கணிதவியலின் அடிப்படையில் தனது ஆரூடங்களை முன்வைப்பவர். ஜனாதிபதியாகுவார் என்று நம்பமுடியாத ஒரு சட்டவாளர் அனுராதபுரத்தில் உதிப்பது பற்றியும், முந்திய பிறவிகளில் அவர் பராக்கிரம்பாகு, வலகம்பா மன்னர்களாக அரசாண்டது பற்றியும், அத்தலைவர் 2024ல் ஆட்சி ஏற்பது பற்றியும், அவர் பல ஆண்டுகளாக இலங்கையை ஆள்வது பற்றியும், அவர் உலகத்தால் மெச்சப்படுது பற்றியும் அந்த ஒலியொளி நறுக்கில் ஆசிரியர் ஆரூடம் கூறுகிறார்.
2024 தேர்தலில் அனுரா வென்றபொழுது மேற்படி ஆரூடத்தை என்னால் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. ஆசிரியர் கூறிய ஆருடம் முழுவதும் உண்மையில்லை. எனினும் அனுரா பதவியில் நீடித்து நிலமையைச் சீரமைப்பார் என்று நான் நம்புகிறேன்.
தன்னலம் நாடாத, பேராசை கொள்ளாத, தெளிந்த நோக்குடைய தலைவர் ஒருவராலேயே, பாரிய ஊறுபாடுகளுக்கு உள்ளான இலங்கையைக் குணப்படுத்தி, வளமும் நீதியும் பண்பும் மிகுந்த ஓர் எதிர்காலத்தை நோக்கி எமது தாயகத்தை வழிநடத்த முடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
அரசாங்கம் அதன் பணியைத் தொடரும் இவ்வேளையில், ஒருசில நியாமான வினாக்கள் எழவே செய்கின்றன: அனுராவால் முடியாவிட்டால், வேறு யாரால் முடியும்? இந்த அரசாங்கத்தால் முடியாவிட்டால், மாற்றுவழி என்ன? எமது அரசியல்-வர்க்கத்துள் மோசடியால் கறைபடியாது மீந்திருப்போர் யார்? நீதி, நியாயம், நாட்டுநலம் பேணத் தளராது உறுதிபூண்டவர் யார்?
தற்போதைக்காவது விடை தெளிவாகத் தெரிகிறது. புறவுடை, சொற்றொடர், உயரம் பற்றி எல்லாம் தொடர்ந்தும் முட்டையில் முடி பிடுங்குவோரை விளித்து நாம் ஒன்று கூறுவோம்: தலைமை என்பது அங்குலத்தால் அல்லது ஆடைத் தெரிவுகளால் அளக்கப்படுவதல்ல; துணிவு, நேர்மை, பெறுபேறுகள் கொண்டு அளக்கப்படுவதே தலைமை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
அந்த வகைகளில் எல்லாம் வேறு பலரையும் விட ஓங்கி உயர்ந்து சிறந்து விளங்குகின்றார்: ஜனாதிபதி அனுர குமர திசநாயக்கா.
Raine Wickrematunge,
Colombo Telegraph, 2025-08-13,
translated by Mani Velupillai, 2025-09-09.
https://www.colombotelegraph.com/index.php/keyboard-canines-digital-daggers-inside-the-disinformation-war-on-akds-reformist-government/
No comments:
Post a Comment