வழக்குரை (3)

 

சாக்கிரத்தீஸ் 

(பொ. ஊ. மு. 469-399)

 

 


பிளேட்டோ

(பொ. ஊ. மு. 427-347)


சாக்கிரத்தீசின் வழக்குரை (3)

(பிளேட்டோவின் பதிவு)


பெரியோர்களே, எனது புலனாய்வுகளின் விளைவாக என்மீது  பெரும்பகை கிளம்பியது. கடுங்கசப்புடன் கூடிய பகை நிலைகொண்டது. அதன் பெறுபேறாக வன்மம் கொண்ட கதைகள் பலவும் எழுந்தன. நான் ஒரு ஞானப் பேராசிரியர் என்ற கதை அவற்றுள் ஒன்று.

 

ஒருவர் ஒரு துறையில் ஞானவான் எனப்படுவதைப் பொய்ப்பிப்பதில் நான் வெற்றிபெறுந்தோறும், அத்துறையில் நான் அனைத்தும் அறிந்தவன் என்று உடனிருப்பவர்கள் கருதுவதால் அப்படி நேர்கிறது. ஆனால், பெரியோர்களே, மிகவும் உறுதிபடப் புலப்படும் உண்மை இதுவே:  அதாவது மெய்ஞானமோ இறைவனின் சொத்து; மனித ஞானமோ பெறுமதி குன்றியது அல்லது பெறுமதி அற்றது; இதை அந்த இறைவாக்கின் ஊடாக எங்களிடம் தெரிவிப்பது இறைவனின் பாணி; அவர் சாக்கிரத்தீஸ் என்று கூறியது ஆனானப்பட்ட என்னை அல்ல; வெறுமனே என்னை ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டு எங்கள் அனைவரிடமும் அவர் கூறியதாகவே எனக்குத் தென்படுகிறது: "மனிதர்களே, உங்களுள் மிகுந்த ஞானவான் என்பவன், சாக்கிரத்தீசைப் போல், உண்மையில் அற்ப ஞானவானே" என்று அவர் கூறியதாகவே எனக்குத் தென்படுகிறது. 

 

ஆதலால்தான் அந்த இறையாணைக்குப் பணிந்து இன்னமும் நான் ஞானவான்களைத் தேடித்திரிகிறேன்; ஞானவானாகத் தென்படும் குடிமகன், அந்நியர் எவரதும் ஞானத்தை நான் ஆராய்ந்து பார்க்கிறேன்; அவர் ஞானமற்றவர் என்றால், இறைவாக்கை மெய்ப்பிக்கும் வண்ணம், அவர் ஞானமற்றவர் என்பதை அவரிடம் சுட்டிக்காட்டுகிறேன். நான் அரசியலிலோ எனது சொந்த அலுவல்களிலோ ஈடுபட முடியாவாறு இப்பணி என்னை ஈர்த்து வைத்துள்ளது. உண்மையில் என் தெய்வப்பணி என்னை மிகுந்த ஏழ்மைக்குள் ஆழ்த்தியுள்ளது.

 

எனக்கு இகழ்ச்சி ஏற்பட்டதற்கு இன்னொரு காரணம் உண்டு. செல்வந்த தந்தையரின் இளம் புதல்வர்கள் திளைப்புவேளை மிகுந்தவர்கள். மற்றவர்களிடம் குறுக்குவினாத் தொடுக்கப்படுவதை அவர்கள் கேட்டுத் திளைத்தார்கள். ஆதலால் அவர்கள் வேண்டுமென்றே என்னுடன் ஒட்டிக்கொண்டார்கள். என்னைத் தமது முன்மாதிரியாகக் கொண்டு மற்றவர்களிடம் அடிக்கடி வினாத்தொடுக்க முயன்றார்கள். தாம் எதையோ அறிந்தவர்கள் என்று எண்ணிறந்தோர் நினைக்கிறார்கள்; ஆனால் உண்மையில் அவர்கள் அறிவுகுன்றியவர்கள் அல்லது அறிவிலிகள் என்பதை இளைஞர்கள் கண்டுகொள்கிறார்கள்.

 

அதனால் பாதிப்புக்கு உள்ளானோர், இளைஞர்கள் மீதல்ல, என்மீது எரிச்சல்கொண்டு, "சாக்கிரத்தீஸ் என்றோர் அதிகப்பிரசங்கி இருக்கிறான்; அவன் ஒரு பீடை; இளையோரின் தலைக்குள் அவன் தவறான எண்ணங்களை இட்டு நிரப்புகிறான்" என்று முறையிடுகிறார்கள். "சாக்கிரத்தீஸ் என்ன பண்ணுகிறான்? அப்படி நீங்கள் முறையிடும்படி என்ன போதிக்கிறான்?" என்று நீங்கள் திருப்பிக் கேட்டால், பதில் கூறத் தெரியாமல், வாயை மூடிக்கொள்வார்கள்; தமது மனக்குழப்பத்தை ஒப்புக்கொள்ள முன்வரமாட்டார்கள்; மெய்யியலாளர் எனப்படும் எவர்மீதும் சுமத்தப்படும் வாடிக்கையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள்; விண்ணுலகத்துக்கு மேற்பட்ட சங்கதிகளையும்,  மண்ணுலகத்துக்கு கீழ்ப்பட்ட சங்கதிகளையும் தனது மாணவர்களுக்கு அவர் புகட்டுவதாகக் கூறுவார்கள்; கடவுளரை நம்பவேண்டாம் என்று அவர் போதிப்பதாகக் கூறுவார்கள்; வலுவற்ற வாதம் கொண்டு வலுவுற்ற வாதத்தை அவர் முறியடிப்பதாகக் கூறுவார்கள்.

 

முற்றிலும் அறிவிலிகளான அவர்களுக்கு உண்மையை ஒப்புக்கொள்வது, அதாவது தாங்கள் அறிவாளிகளாகப் பாசாங்குசெய்த குற்றத்தை ஒப்புக்கொள்வது, மிகுந்த அருவருப்பைக் கொடுப்பதாக எண்ணுகிறேன். தமது சொந்த மானம் காக்க அவர்கள் என்மீது பொறாமை கொண்டதாக எண்ணுகிறேன். அவர்கள் ஆற்றல் வாய்ந்தவர்கள். ஆட்பலம் மிகுந்தவர்கள். நெடுங்காலமாக உங்கள் காதுகளில் என்னை வன்மையாகக் கடிந்துரைத்து வந்தவர்கள். இப்பொழுது எனக்கெதிராகப் போலி வழக்கொன்றை அவதானமாக இட்டுக்கட்டி வைத்துள்ளார்கள்.


 

    மெலிட்டஸ்   அனைட்டஸ்   இலைக்கன்    


மெலிட்டஸ், அனைட்டஸ், இலைக்கன் மூவரும் என்மீது வழக்குத் தொடுத்த காரணங்கள் இவையே. என்னால் இடருற்ற கவிஞர்கள் சார்பாக மெலிட்டசும், துறைஞர்கள்-அரசியல்வாதிகள் சார்பாக அனைட்டசும், நாவலர்கள் சார்பாக இலைக்கனும் என்மீது வழக்குத் தொடுத்துள்ளார்கள். எனவே துவக்கத்தில் நான் கூறியது போல், உங்கள் உள்ளத்துள் ஆழமாக ஊன்றப்பட்டுள்ள தப்பெண்ணங்களை, எனக்குக் கிடைத்துள்ள குறுகிய நேரத்துள், என்னால் களையமுடிந்தால், நான் வியப்படைந்தே ஆகவேண்டும்.    

 

இவையே உண்மையான விபரங்கள், பெரியோர்களே! சிறிதோ, பெரிதோ எதையுமே ஒளிவுமறைவின்றி உங்கள்முன் வைத்துள்ளேன். இப்படி நான் வெளிப்படையாகப் பேசுவதே எனக்கு இகழ்ச்சி ஏற்படக் காரணம் என்று சற்று உறுதியாகவே நான் நம்புகிறேன். எனது கூற்றுகள் உண்மையானவை என்பதை இது மெய்ப்பிக்கிறது. என்மீது சுமத்தப்பட்ட பழியின் தன்மையையும், அடிப்படைகளையும் நான் சரிவர எடுத்துரைத்துள்ளேன் என்பதை இது மெய்ப்பிக்கிறது. அவற்றை இப்பொழுதோ இனிமேலோ நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், நான் எடுத்துரைத்தவாறே அவை அமைந்திருக்கக் காண்பீர்கள். முதலாவது தரப்பினர் என்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு எனது பதில்வாதம் இது. தன்னை ஓர் உயர்நெறியாளர் என்றும் நாட்டுப்பற்றாளர் என்றும் வலியுறுத்தும் மெலிட்டசின் குற்றச்சாட்டுக்கும், அதன் பிறகு ஏனையோரின் குற்றச்சாட்டுக்கும் எனது பதில்வாதத்தை முன்வைக்கும் முயற்சியில் இனி நான் இறங்கப் போகிறேன்.

 

முதலில் அவர்களது சத்திய வாக்குமூலத்தை ஒரு புதிய வழக்குத்தொடுப்பாக எண்ணி ஆராய்ந்து பார்ப்போம். அது இந்த மாதிரி அமைந்திருக்கிறது: சாக்கிரத்தீஸ் இளைஞர்களின் உள்ளத்தைக் கெடுத்த குற்றவாளி;  அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுளரை விடுத்து, தானே சொந்தமாகக் கண்டுபிடித்த தேவர்களில் நம்பிக்கை கொண்ட குற்றவாளி. அத்தகைய குற்றச்சாட்டே என்மீது சுமத்தப்பட்டுள்ளது. அதன் கூறுகளை இனி ஒவ்வொன்றாக ஆராய்வோம்:

 

நான் இளைஞர்களின் உள்ளத்தைக் கெடுத்த குற்றச்சாட்டு முதலாவது. மெலிட்டஸ் இங்கே அற்ப ஆதாரங்களைக் கொண்டு, ஆட்களை ஆணையிட்டழைத்து, விசாரணைக்கு உட்படுத்துகிறார். தான் என்றுமே சற்றும் நாட்டம் கொள்ளாத சங்கதிகளில் தனக்கு கரிசனையும் வேட்கையும்  இருப்பதாக அவர் மார்தட்டுகிறார். ஆதலால், பெரியோர்களே, இத்தகைய பாரதூரமான சங்கதியை ஒரு விளையாட்டாக எடுத்த குற்றத்தை மெலிட்டஸ் புரிந்திருப்பதாக நான் கூறுகிறேன். உங்கள் உள்ளம் நிறைவுறும் வண்ணம் அதை நான் மெய்ப்பித்துக் காட்டுகிறேன்

_________________________________________

தொடர்ச்சி: சாக்கிரத்தீசின் வழக்குரை (4)

தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment