நித்தியானந்தனின் 'கூலித்தமிழ்'





19ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து “மரண யாத்திரை” மேற்கொண்டு மலைநாட்டுக்கு குடிபெயர்ந்த இலட்சக் கணக்கான பாமரமக்களைப் பிரித்தானிய ஆட்சியாளரும், பெரியதுரைமாரும், சின்னத்துரைமாரும் இரைகொண்ட வரலாற்றின் இலக்கியத் தடம் “கூலித்தமிழ்.” அதே காலத்தில், அதே களத்தில், அதே மக்களால் ஆக்கப்பட்ட முன்னோடிப் படைப்புகள் வாயிலாக அந்த இலக்கியத் தடத்தை வியக்கத்தக்க விதத்தில் வெளிக்கொணர்ந்துள்ளார் மு. நித்தியானந்தன். 

 

“க்ரியா” வினால் மறுபிரசுரம் செய்யப்படவுள்ள இந்நூலில் காணப்படும் எண்ணிறந்த மேற்கோள்களுள் எமது உடனடிக் கவனத்தை ஈர்ப்பவை மூன்று: “மேற்கிந்தியத் தீவுகளின் அடிமைகளைப் போலவே இலங்கையில் கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் நடத்தப்பட்டதாக” பிரிட்டிஷ் அதிகாரிகளே ஒப்புக்கொண்டமை (பக்கம் 33). “இந்தத் தொழிலாளர்களைத் திரட்டி அனுப்பியது அநேகமாக நீக்கிரோ அடிமைகளைச் சந்தையில் விலை கொடுத்து வாங்கியதற்கு ஒப்பானதாகும்” என்று ஸி. வி. வேலுப்பிள்ளை “நாடற்றவர் கதை”யில் தெரிவித்தமை (35). மலையக மக்களின் அவலங்கள் “பெரிதும் மாற்றமின்றி இன்றும் தொடர்வது பெரும் கொடுமை” (11) என்று இந்நூலின் அணிந்துரையில் மழவரையன் விஜயபாலன் கூறியமை. மேற்படி  மேற்கோள்கள் மூன்றையும் உறுதிப்படுத்தும் வண்ணம் அண்மையில் வெளிவந்த ஓர் ஊடகச் செய்தி:
“சென்ற ஞாயிறு மாத்தளையில் பெருந்தோட்டத் தொழிலாளர் அணி ஒன்று தெருவில் இறங்கி தமது அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தது. காலனித்துவ காலகட்டம் தொட்டு தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்களுள் ஒருவர் கூறினார். அவரது கூற்றுடன் நாம் உடன்பட்டே ஆகவேண்டும்” (Editorial, The Island, Colombo, 2015-03-04). “புரளப் போராடும் புழு” (Worm struggling to turn) என்னும் தலைப்புடன் கூடிய பதிப்புரை அது!
மலையக மக்களுக்கு பிரிட்டிஷ் காலனித்துவம் “கூலி” முத்திரை குத்தியது. தமிழிலிருந்து ஆங்கிலம் இரவல்பெற்ற சொல் “கூலி”! ஏற்கெனவே பல்லாயிரம் ஆண்டுகளாக வழங்கிவந்த இச்சொல் சூழ்நிலையைப் பொறுத்து நன்மொழியாகவும் துன்மொழியாகவும் அமைய வல்லது. தொழிலாளிக்குச் செலுத்தப்படும் கூலி (wage) என்று பொருள்படும் இடங்களில் அது நன்மொழியாக அமைகிறது. “மெய்வருந்தக் கூலி தரும்” என்றார் வள்ளுவர் (619). அன்றுதொட்டு இன்றுவரை பேச்சு வழக்கிற்கு மட்டுமல்ல, எழுத்து வழக்கிற்கும் இது பொருந்தும். இலங்கை அரசின் அதிகாரபூர்வமான சொற்கோவைகளிலும், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்திலும் “கூலி”, wage இரண்டும் நேரொத்த பதங்களாக இடம்பெற்றுள்ளன. அதேவேளை ஆளைக் குறிக்கும் வேளைகளில் தமிழிலும், ஆங்கிலத்திலும் “கூலி” (coolie) ஒரு துன்மொழி என்பதில் ஐயமில்லை. Oxford Advanced Learner's Dictionary அதை an offensive word என்றே குறிப்பிட்டுள்ளது.
1899ல் ஆங்கில எழுத்தாளர் கிப்ளிங் (Rudyard Kipling) அமெரிக்கரை விளித்து வரைந்த கவிதையில் ஏகாதிபத்தியத்தை இடக்கரடக்கலாக “வெள்ளையரின் சுமை” (The White Man’s Burden) என்று குறிப்பிட்டார். “காட்டுமிராண்டிகளை” நாகரிகமயப்படுத்தும் பளுவை அமெரிக்கா சுமக்க வேண்டும் என்று பொருள்படும் வண்ணம்! கிப்பிளிங்கின் கவிதை அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டை (Theodore Roosevelt) ஆட்கொண்டதாகத் தெரிகிறது.   
“தாங்கள் ஆளப்பிறந்தவர்கள் என்ற திமிரான மனோபாவமும், காலனித்துவச் சனங்கள் ஆளப்பட வேண்டிய காட்டுமிராண்டிகள் என்ற கருத்தும் ஏகாதிபத்தியவாதிகளால் கடைப்பிடிக்கப்பட்டவை” (29). “காட்டுமிராண்டி” என்ற பதத்தின் தோற்றுவாய் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு முற்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுச்சியுற்ற கிரேக்கத்தை (உரோமப் பேரரசு போன்ற) ஓர் ஏகாதிபத்தியப் பேரரசு என்று கொள்வதற்கில்லை. மாறாக, குடியாட்சியின் தொட்டில் என்று போற்றப்படுவது கிரேக்கம். அத்தகைய கிரேக்கத்திலும் (உரோமாபுரியிலும்) உயர்குடி மக்களுக்கு அடிமைகள் சேவகம் புரிந்து காலந் தள்ளினார்கள். கிரேக்கத்தில் எழுந்த பேரிலக்கியப் படைப்புகள் அனைத்தும் ஆசியக் கண்டத்தவர்களை ஒட்டுமொத்தமாக “காட்டுமிராண்டிகள்” என்று குறிப்பிடுகின்றன. கிரேக்கரின் தலையாய வரலாற்றறிஞர் எரடொட்டஸ் (Herodotus) கூட கிரேக்கருடன் மோதிய பாரசீகர்களை “காட்டுமிராண்டிகள்” என்று குறிப்பிடுகிறார். அமெரிக்க கண்டத்து மண்ணின் மைந்தர்களாகிய செங்குடிமக்களை ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் “காட்டுமிரண்டிகள்” என்று குறிப்பிட்டார்கள். கீழ்நாட்டவர் களுக்கு “காட்டுமிராண்டி” முத்திரை குத்துவது மேல்நாட்டவரின் பன்னெடுங்கால வாடிக்கை.
ஆசிரியரின் வாய்மொழியில் மலையகத்து மெய்ந்நிலை பீறிடும் விதம் எமது வாசிப்பை வீறுகொள்ள வைக்கிறது: “பஞ்சமும் வறுமையும் சொந்த மண்ணிலிருந்தே அவனைத் துரத்தியடிக்க, துரைமார்களும் கங்காணியும் அதிகாரபீடமும் வந்து சேர்ந்த இடத்திலே கோப்பித் தோட்ட உழைப்பு அவனை அசக்தனாக்கியது; மெளடீகத்தில் (அறியாமையில்) சிறையிட்டது; அவனுடைய மனிதத் தன்மையையே உறிஞ்சியது. அவனின் உழைப்பு அவனுடைய மனித ஆளுமையின் விகசிப்பாய் அல்ல; அவனுடைய ஆளுமையை,  மனிதத்துவத்தை,  மனித  ஜீவநிலையையே  அழித்தெறியும் நாசகார நடவடிக்கையாகவே அமைந்தது. அவன் சிருஷ்டித்த எதுவுமே அவனுக்கு உவப்பானதாக அமையவில்லை; அனைத்துமே அந்தப் படைப்பாளிக்கு எதிர் முனையில் உக்கிர முகம் காட்டி நின்றது” (49).
அந்த மெய்ந்நிலையை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான்? “இந்தச் சூழலில் அவன் மனிதத்துவத்தின் சாரத்தை நோக்கித் துவந்த யுத்தம் நடத்துகிறான். இந்தப் புறவயச் சூழ்நிலையின் போராட்டத்தின் கீறல்களில்தான் மனித இயக்கம் என்ற நாதம் பிறக்கிறது. ஒவ்வொரு கீறலும் குறியீடுகளாகி, மனிதன் என்ற உயிர் ஜீவியைச் சிருஷ்டிக்கிறது. உலக நிஜம் அவன் முன்னால் பிரமாண்டமாக  விரிந்துகிடக்கிறது. இந்த நிஜத்துடன் கொள்ளும் ஒருவகைக் குறியீட்டுத் தொடர்புகளின் உன்னதமே மனிதனைப் பூரணன் ஆக்குகிறது. மனிதனுக்கும் இந்த நிஜத்திற்கும் இடையில் காணப்படுவதுதான் இந்தக் குறியீட்டு உறவு” (49).
அத்தகைய உறவுக்கு ஏதுவான இலக்கிய வடிகால் தோன்றுகிறது. “இந்த உறவுகளும் தொடர்புகளும்தான் ஒரு சமூகத்தின் சிருஷ்டிக்கான வாசல்களைத் திறந்து வைக்கின்றன. சமூக வாழ்வின் தளத்தையும் சன்னல்பின்னலான அமைப்பையும் இதுவே நிர்ணயம்செய்கிறது. ஆதாரத் தூண்களும் தப்பித்துக்கொள்ள உதவும் புறக்கதவு வாசல்களும் இவையே. பொது விழுமியங்களையும் பாரம்பரியங்களையும் இணைந்து அனுபவிக்கவும், உணர்வுபூர்வமான மனித பந்தத்தையும் இவையே வழங்குகின்றன. சமூகத்தில் தங்களது அந்தஸ்தையும் செயற்பாட்டையும் நிர்ணயித்துக்கொள்ளும் வலுவை இக்குறியீட்டு நடவடிக்கைகளே வழங்குகின்றன” (49).  
 “கப்பலில் பயணம் செய்த 120 கூலிகளில் 7 பேர் மாத்திரமே கடலில் மிதந்துகொண்டிருந்த மரத் துண்டங்களைப் பற்றிப் பிடித்துக்கொண்டு உயிர்தப்ப முடிந்தது… நெஞ்சை உலுக்கும் இக்குரூர நிகழ்வு நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பின் இலங்கையின் மத்திய மலைநாட்டிலிருந்து ‘கோப்பிக் கிருஷிக் கும்மி’ என்ற ஆங்கிலத் துரைத்தனத்திற்கான புதிய கும்மி எழுந்தது. பெருந்துரதிஷ்டம்தான் எனினும், மலையகத்தின் எழுத்து இலக்கியத்திற்கு இதுவே ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால சரித்திரத்தைத் தேடிக் கொடுத்திருக்கிறது” (19-20) என்று அமைதி காண்கிறார் நித்தியானந்தன்.
கொடுங்கடலிலிருந்து கடைத்தேறிய தொழிலாளிகள் பயங்கரக் காட்டினுள் பலியான விதம் கல்நெஞ்சையும் உருக வைக்கும்: “வாழ்க்கையின் பந்தய ஓட்டம்–அந்த ஒருவனைப் பலி கொடுத்தாக வேண்டும் அல்லது எல்லோருமே அழிந்துபோகும் அபாயம். எனவே (அவனை) இருண்ட வனாந்தரங்களின் உள்ளே, கொடிய மிருகங்களுக்கும் மலைப்பாம்புகளுக்கும் மத்தியில் கைவிட்டுத் தாங்கள் பயணம் போவதைத் தவிர அவர்களுக்கு ஒரு வழியுமில்லை. ஒரு இலையில் கொஞ்சம் சாதத்தையும் ஒரு சிரட்டையில் தண்ணீரையும் அந்தத் துர்ப்பாக்கியசாலியின் பக்கத்தில் வைத்து, அவனை அப்படியே தனிய விட்டுவிட்டுப் புறப்பட்டுவிடுவார்கள்” (W. Knighton) ... “நினைத்தும் பார்க்கமுடியாத கொடூரம்! இதைவிடப் பயங்கரச் சித்திரத்தை யார் தீட்ட முடியும்?” (45) என்று வினவி விம்முகிறார் நூலாசிரியர்.
“1843-1867க்கும் இடைப்பட்ட 24 ஆண்டுகாலப் பகுதியில் தோட்டக் கூலிகள் மூன்றரை இலட்சம் பேர் காணவில்லை அல்லது இறந்து போயிருக்கிறார்கள்!” (45). “ஜோசப் ‘கோப்பிக் கிருஷிக் கும்மி’ எழுதிய காலப்பகுதியில் கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் மாண்டுமடிந்த புள்ளிவிபரங்கள் இரத்தம் சொரிவன”. அவற்றை ஜோசப் சித்தரிக்கவில்லையே என்ற குமுறல் முதல் 95 பக்கங்களிலும் இழையோடுகிறது. ஈற்றில் ஜோசப்புக்கு இடித்துரைக்கும் வண்ணம் நித்தியானந்தன் மீட்டும் நாட்டார் பாடல்:
பழமும் எடுக்கவில்லே
பழைய சோறும் திங்கவில்லே
வீட்டுக்குப் போகவில்லே
வேகுதையா என் மனசு.

கதையோடு கதையாக, ஜோசப்பின் சமயப் பரப்புரைக்கு ஓர் எடுத்துக்காட்டு:
ஆதலால் நல்வழி தேடி டுங்கள் கிறி   ஸ்
தண்ணலை வந்து அடைந்திடுங்க       ள்
காதலாய் வேதம் வாசியுங்கள              து
காட்டிடும் போதனை கேட்டிடுங்க      ள்

என்று முனியாண்டியிலிருந்து கிறிஸ்தண்ணலுக்கு ஜோசப் பாதை காட்டுகிறார்” (43). எனினும் மலையக மாந்தரின் ஊழிய வகைகளைப் புலப்படுத்தும் வண்ணம் ஜோசப்பின் “தமிழ் வழிகாட்டி”யில் பதிவாகியுள்ள “கூலித்தமிழ்”ச் சொற்கள் மிகவும் சுவையானவை என்பதை அவர் ஏற்றுக் கொள்கிறார்: காவல்காரன், குசினிக்காரன், குதிரைக்காரன், தோட்டக்காரன், புல்லுக்காரன், பெட்டிக்காரன், மாட்டுக்காரன்...
ஜோசப் தன்னை “நான்” என்று தன்மையில் குறிப்பிடாது, “அவன்” என்றும், “சேவகன்” என்றும் படர்க்கையில் குறிப்பிடுகிறார் (28). பெரிதும் எழுத்தில் அவ்வப்பொழுது மின்னிமறையும் அவையடக்கம் அது. “நான்” என்பதற்குப் பதிலாக “நாம்” என்று எழுதப்படுவதுண்டு. சாதிமான்கள் முன்னிலையில் பஞ்சமர்கள் கைகட்டி, வாய்புதைத்து நின்றது போலவே வெள்ளையர் முன்னிலையில் ஜோசப் “சர்வாங்கமும் நடுங்கியவராய்” ஒடுங்கி நிற்கின்றார். அறிவார்ந்தவர்களை அதிகாரபீடத்துக்குப் பணிவிடை புரிவோர் (“Intellectuals serve power”) என்று சொம்ஸ்கி (Noam Chomsky) சாடியது இங்கு நினைவுக்கு வருகிறது.
மலையக மக்கள் “விட்டு வந்த மண்ணை நினைத்து விம்மியழுவதை நினைக்கையில் எந்த நெஞ்சுதான் பதறாது?” (78) என்று வினவி ஏங்கும் நூலாசிரியர் பின்வரும் பாடலைக் கொண்டு அவர்களின் தாயக வேட்கையை உணர்த்துகிறார்:

அடி அளந்து வீடு கட்டும் நம்ம
ஆண்ட மனை அங்கிருக்க
பஞ்சம் பொழைப்பதற்கு
பாற்கடலைத் தாண்டி வந்தோம்
பஞ்சம் பொழைச்சு நம்ம
பட்டணம் போய் சேரலியே
கப்பல் கடந்து
கடல் தாண்டி இங்க வந்தோம்
காலம் செழிச்சு நம்ம
காணி போய் சேரலியே (சி. வே. ராமையா, வீரகேசரி, 1963).

கைநூல்களுக்கு Inge Va, Cooly Tamil என்றெல்லாம் சூட்டிய பெயர்களிலும், அவற்றில் கையாளப்பட்ட எடுத்துக்காட்டுகளிலும் மக்களைக் கட்டியாளும் போக்கு புலப்படுவதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.  A. M. Ferguson எழுதிய “இங்கே வா” கைநூலில் பெரிதும் ஏவல் வினை அல்லது வினா உருவில் அமைந்த எடுத்துக்காட்டுகள் சில: 
லயத்துக்குப் போகச் சொல்லு, பேசாமல் இரு, வாயை மூடு, வாய் பொத்து, தப்பு அடி, சங்கு ஊது, கூப்பிட்டதுக்கு கேக்கலையா?, ஒழுங்கா இருங்க, சிரிக்கிறது ஆர்?, உம் மம்பட்டி எங்கே?, பேசாதே, முத்துசாமி கங்காணி எங்கே?, ஏன் இவ்வளவு நேரம் செண்டு பெரட்டுக்கு (தலைக்கணக்கு எடுக்கும் இடத்துக்கு) வந்தாய்?, சாராயம் குடிச்சியா? தண்ணி மிச்சம் குடிச்சியா?, பேசாமல் வேலைக்கி போ, சீ! வாய் பொத்து, நீ எவ்வளவு நேரம் அங்கே இருந்தாய்?, நேத்து சாயந்தரம் முத்துசாமி லயத்திலே நடந்த சண்டை என்ன?, பழனியாண்டி ஏன் லயத்துலே இருக்கிறான்? ரெங்கன், நாகசேனைக்கு போயிட்டு ஆறு கோடாலி, பன்னண்டு மம்பட்டி கொண்டா!
(“ஒரு ஆள் ஆறு கோடரிகளையும் பன்னிரண்டு மண்வெட்டிகளையும் தனியே தூக்கிக்கொண்டு வந்துவிடலாம் என்று அவ்வளவு துல்லியமாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது!” ப. 86).
இவற்றுக்கு நிகராக W. G. B. Wells எழுதிய Cooly Tamil-ல் காணப்படும் கூறுகள் சில: 
அதெ சுருக்கா கொண்டு போ; அங்கே மேலே ஆள் ஒன்னும் செய்யறதில்லே; இது யாருட்டு கொந்தரப்பு?; அப்போ அவன் அரிசி நிப்பாட்டு, அவன் பில்லு வெட்டுறதில்லே; இந்த பொம்புளை நல்லா வேலை செய்யமாட்டுது, அவளே லயத்துக்கு அனுப்பு; அந்த குழிமூடல் ரெம்ப செய்றதில்லே; என்னத்துக்கு எனக்கிட்டே ஓடி வர்றது? இதென்ன? கத்தி வெயிலிலே வைக்க வாண்டா; கைப்புடி கெட்டுப்போவும்; நெழலிலே வை!
(வெயிலில் காயும் தொழிலாளியை விட கத்தியின் கைப்பிடியில் துரைக்கு அதிக அக்கறை!);
மக்களைக் கட்டியாளும் மேற்படி மொழிவழக்கை ஊடறுத்து நடேச ஐயர் வெளியிட்ட "தொழிலாளர் சட்ட புஸ்தகம் தொழிலாளர் சமூக வரலாற்றில் ஒரு யுக மாற்றத்தைக் குறித்து நிற்கிறதெனலாம்” (94). விண்ணப்பங்களை ஆங்கிலத்தில் எழுத வேண்டியதில்லை, தமிழிலேயே எழுதலாம் என்று மக்களுக்கு இடித்துரைத்து, எழுதும் விதத்தை அவர்களுக்கு காட்டிக் கொடுத்தவர் ஐயர்.  
“இந்தியத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பிய முதல் பத்திரிகையாளர் என்று இந்நூலில் இனங்காட்டப்படுபவர்: கருமுத்து தியாகராச செட்டியார்” (97). பெரிதும் ஆங்கிலத்தில் எழுத்தூழியம் புரிந்த செட்டியாரின் கட்டுரை ஒன்றில் இடம்பெறும் வினாவிடை இதயத்தை அதிரவைக்கிறது: 

ஆணையாளர்: உனக்கு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிப் போக விருப்பமா?
ஆசனா: அனுப்பி வைத்தால் போகிறேன். அல்லது இங்கேயே இருந்து சாக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நான் இங்கேயே சாகிறேன்.

வேறோர் உரையாடல்:

“கங்காணி உன்னை அடிப்பது பற்றித் தோட்டத் துரையிடம் புகார் செய்தாயா?
“இல்லை.”
“ஏன் புகார் செய்யவில்லை?”
“துரை பங்களாவுக்குப் போக எனக்கு அனுமதி இல்லை.”
“யார் உன்னைத் தடுப்பது?”
“தமிழ்க் காவல்காரன்!”

ஆ. பால் எழுதிய “சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி” மலையகத்தின் முதல் நாவல் என்றும், அது ஒரு கற்பனை நவிற்சி என்றும், அதன் மொழிநடை செயற்கை நடை என்றும், அந்த வகையில் அது மிகப்பெரிய நஷ்டம் என்றும் கூறுகிறார் நித்தியானந்தன் (127). எனினும் அதில் “இழிசினர்” மொழியில் அமையும் கூறுகளில் உயிர்க்களை ததும்புவதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். எடுத்துக்காட்டாக, கள்வர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவனின் பேச்சு: “இவுங்களே உடோனுமா, அம்மாடி நன்றாயிருக்கே கதை. இவுங்களே கொண்டார என்னா பாடுபட்டோம். ராத்திரியெல்லாம் தூக்கமிங்கிரதே இல்லே. கள்ளுத்தண்ணி கூடச் செரியா குடிக்கலே. எனக்கு உடம்பே செரியில்லை. இன்னைக்கு நன்றா குடிச்சிட்டு உறங்கனுமடா. என்னாம்மா ஒன்னே உடச்சொல்லி கணக்கு உடாமல் பேசாதே வா” (135). 
அதேவேளை தாசி கோமளாங்கியின் கூற்று இலக்கணத் தமிழில் அமைந்துள்ளது: “தாங்களே சதா தெய்வமென பூஜித்துக்கொண்டிருக்கும் எனக்கு நீங்கள் செய்த நன்மை என்ன? நான் தங்களை அண்டின தினத்திலிருந்து இங்கு வருவார் போவார் ஒருவருமிலர். நான் இவ்வித நிலையில் இருப்பேனாகில் என் கதி யாது? என் ஜீவனாம்சத்திற்கோ யாதும் வழியில்லை. எத்தனையோ பிரபுக்களையும் கோடீஸ்வரர்களையும் தங்களை நம்பி விடுத்தேன். தாங்களோ என்னை மருவிச் சுகிக்கிறதல்லால் மற்றோர் நன்மையும் நான் தங்களிடம் பெற்றிலேன்” (136).
“புதுமைப்பித்தன் ‘துன்பக்கேணி’ (1935) எழுதி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் ‘சுந்தரமீனாள்’ வெளியாகிறது.  மலையகத்திற்கே வராத புதுமைப்பித்தனின் நெஞ்சிலேயும் மலையக மக்கள் படும் துயரவாழ்வு கீறல்களை ஏற்படுத்தியிருக்கிறது (141). புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’க்கோ, 1936ல் ‘சதிலீலாவதி’ படத்துக்காக டி. கே. சுந்தர வாத்தியார் எழுதிய, 

‘தேயிலத் தோட்டத்திலே – பாரத
சேய்கள் சென்று மாய்குறார், ஐயையோ’

என்று தொடங்கும் பாடலுக்கோ “சுந்தரமீனாள்” ஈடாகாது என்று வலியுறுத்துகிறார் நூலாசிரியர். அதேவேளை “இரத்தினபுரி சாமுவேல் எழுதிய ‘கண்ணனின் காதலி’ மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்கையின் யதார்த்தமான சில கூறுகளையாவது சித்தரித்ததில் முன்னைய நாவலைவிட இலக்கிய, அரசியல் அக்கறைக்குரியதாகிறது” (146). அதில் வரும் காதலர்களின் உரையாடல் ஒன்று:

கண்ணன்: நீங்கள் போகிற இடத்திற்கு நாங்கள் வரக்கூடாதே! வழிமறித்தான் கட்டி யிருப்பார்களே! நாங்கள்தான் தாழ்த்தப்பட்டவர்களாச்சுதே!      
கண்ணம்மாள்: தேரோடும் வீதிக்கு நீ வந்தால், உன்னை யடித்துக் கொன்றுவிடுவார்களே!
கண்ணன்: நான் எப்படியுஞ்சரி தப்பி வந்துவிடுவேன். இன்னும் ஏதோ காந்தியம், சத்தியாக்கிரமமாம்! அவர் சகல இந்துக் கோயில்களையும் எல்லா ஜாதியார்க்கும் திறந்துவிட வேண்டுமென தீவிர ஏற்பாடுகள் செய்துவருகிறாராம். அவருடைய பேச்சை பெரும்பாலானோர் தட்டுவதில்லை; ஒரு சமயம் அவர் சொற்படியே கோவில்களைத் திறந்துவிட்டாலும் விடுவார்கள்; அப்படித் திறந்து விட்டார்களானால், நமக்குக் கொண்டாட்டம்தான்.

அடுத்த நாள் “பள்ளுப்பறைகள் பதினெட்டுச் சாதியினரும் இதற்கப்பால் போகக் கூடாது” என்ற அறிவிப்பைக் கண்டு கண்ணனின் மனம் ‘திக்’கென்றது (147).    
“கூலித்தமிழ்” நூலின் இறுதி அத்தியாயத்தில் “அஞ்சுகம், மலையக இலக்கியத்தின் முதல் பெண் ஆளுமை” (170) என்றும், “மலையக இலக்கியப் பாரம்பரியத்தின் மூத்த தலைமகள் அன்னை அஞ்சுகம்” என்றும், “இம்மாதரசி மகத்தான இலக்கிய ஆளுமை” என்றும், இவர் இயற்றிய “உருத்திர கணிகையர் கதாசாரத்திரட்டு” ஓர் அரிய வரலாற்று இலக்கியம் என்றும் ஏற்றிப்போற்றுகிறார் நித்தியானந்தன். சனாதன தருமத்தில் கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கையுடனும், வணக்கவொடுக்கத்துடனும் ஆக்கப்பட்ட நூல் அது. புறவய நியாயநெறி கொண்டு அதனை எடைபோடுவதில் பயனில்லை என்று நித்தியானந்தன் கருதுகிறார் போலும்.  
“இத்தாலிய மார்க்ஸிய அறிஞர் கிராம்ஷி” யை (Antonio Gramsci) மேற்கோள்காட்டி, “பொது ஆய்வறிவு” என்பதன் அடிப்படையைப் புரியவைக்கிறார் நித்தியானந்தன் (48).  அறிவார்ந்ததவர்களை உள்ளார்ந்த அறிவார்ந்தவர்கள், மரபார்ந்த அறிவார்ந்தவர்கள் என்று வகைப்படுத்தும் கிராம்ஷி, உழைக்கும் வர்க்கத்துக்குரிய அறிவார்ந்தவர்களை உழைக்கும் வர்க்கமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று அடித்துக் கூறியிருக்கிறார். அத்தகைய உள்ளார்ந்த அறிவார்ந்தவர்களுக்கு இந்நூலில் பேசப்படும் நடேச ஐயர், தியாகராச செட்டியார் மட்டுமல்ல நித்தியானந்தன் கூட ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு.
மக்களுக்கும், மொழிக்கும், இலக்கியத்துக்கும் பயன்படும் வண்ணம் அரும்பாடுபட்டுத் திரட்டிய தரவுகளுடன் கூடிய “கூலித்தமிழ்” நூலில் நித்தியானந்தனின் ஓங்கிய புலமையும், பரந்த கண்ணோட்டமும் மிளிர்கின்றன. அவரது புறவய நோக்கும், தெளிந்த நடையும், இரத்தினச் சுருக்கமும் இந்நூலை அணிசெய்பவை. ஒரே மூச்சில் வாசித்து முடிக்கக்கூடிய குறுநாவல் போல் சுவைக்கும் “கூலித்தமிழ்” நூல் மறுபிரசுரம் காண்பதில் வியப்புக்கிடமில்லை.   
______________________________________________________________________

மணி வேலுப்பிள்ளை                                                                          2015-03-06


No comments:

Post a Comment